அதுதான் பரிசு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 11,572 
 

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் சிறுகதை

அந்தப் பெரிய தூங்குமூஞ்சி மரத்திற்குப் பின்னே மறைந்து நின்று பார்த்தாள் தமயந்தி. பிரசிடெண்ட் தமயந்தி. ஆம்; அவள்தான் அந்தக் கிராம ஊராட்சி மன்றத்தின் தலைவி. “பொதுத்திட்ட வேலை’ நடக்கும் “அழகு’ அங்கிருந்து நன்றாகத் தெரிந்தது. பெண்கள் ஒருவருக்கொருவர் பேன் பார்த்து விட்டுக் கொண்டிருந்தனர். இன்னொரு குழு முதல் நாள் நெடுந்தொடர் கதையை ஆர்வமுடன் பேசிக் கொண்டிருந்தது. வயதான கிழங்கட்டைகள் கூட்டமாக ஏழெட்டு பேர் வெற்றிலை பாக்கு மடித்துப் போட்டுக் கொண்டிருந்தனர். நான்கைந்து பெண்கள் பக்கத்து வேலியில் காய்ந்த சுப்பிகளாக விறகு ஒடித்துக் கொண்டிருந்தனர். இரண்டு பெண்கள் முருங்கைக் கீரை உருவிக் கொண்டிருந்தனர். மீதி பெண்கள் கையெழுத்திட்டு விட்டு தலையைக் காட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டனர். வீட்டில் போய் சமைத்து, ஏனம் பானம் கழுவி, புல் அறுத்து வைத்துவிட்டு, மாடு கறந்து பால்காரருக்கு அளந்து விட்டு சாவகாசமாய் மாலை நான்கு மணிபோல் கரையேறும் நேரத்திற்கு வருவர். அட்டையை வாங்கிக் கொண்டு இன்று முழுவதும் இங்கேயே வேலை செய்ததாய்க் கணக்கு கொடுத்துவிட்டுச் சென்று விடுவர்.

அதுதான் பரிசுஅடுத்து ஆண்கள் பக்கம் திரும்பினாள் தமயந்தி. வயதான ஆண்கள் மரநிழலில் அமர்ந்து மண்வெட்டியில் ஒட்டி இருந்த மண்ணையும், அழுக்கையும் சிறு குச்சியால் தள்ளிவிட்டு, மண்வெட்டி வாயைக் கல்லால் தட்டி நெளிவெடுத்துக் கொண்டிருந்தனர். பீடியும், சுருட்டும் புகைத்துக் கொண்டிருந்தனர் சிலர். இளவட்டப் பையன்கள் செல்லைக் கையில் வைத்து நோண்டிக் கொண்டிருந்தனர். சிலர் இரண்டு காதுகளிலும் தக்கையை செருகிக்கொண்டு ஐபேடில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் உள்ளங்கையில் எதையோ வைத்து வலது கை கட்டை விரலால் அழுந்த கசக்கி, மறுபுறம் திரும்பி கீழ் உதட்டை விலக்கி உள்ளே வைத்து திணித்துக் கொண்டனர். அதற்கும் அப்பால் ஒரு கும்பல் அரச மர நிழலில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது. சிலர் ஒவ்வொரு வளையாக மண்வெட்டியால் வெட்டி எலி பிடித்துக் கொண்டிருந்தனர். மீதி ஆட்கள் கடைக்கு புகையிலை வாங்கவும், வேறு இடங்களுக்கு வேலைக்கும், அங்காடிக்கு அரிசி வாங்கவும் சென்று விட்டனர். ஆனால் அத்தனை பேரும் காலையில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்தோ, கை நாட்டோ வைத்திருப்பார்கள். அவர்கள் பொதுத்திட்ட வேலை அட்டையும் சரியாக இங்கு மேசையில் இருக்கும் – வந்ததற்கு அடையாளமாக. இவர்கள்தான் இப்படி என்றால், ஓவர்ச்சேரும், எழுத்தரும், மேல்மணியம் பார்ப்பவரும் பிளாஸ்டிக் நாற்காலியை மரநிழலில் போட்டு டீயும், வடையும் சாப்பிட்டு விட்டு, பேப்பர் படித்துக் கொண்டோ, செல்போனில் யாருடனாவது பேசிக் கொண்டோ இருந்தனர். ஆக அரசாங்கம் எளிய மக்களுக்கு உணவளிக்க வேலை வாய்ப்பை உண்டு பண்ணி கொடுத்துள்ளது. நல்ல நோக்கத்துடன் இன்றைய வேலை ஆற்றின் கரையை வெட்டி கொட்டி பலப்படுத்துவது. இதற்காக இன்று வேலை செய்யும் தொள்ளாயிரத்து சொச்சம் ஆண், பெண் தொழிலாளர்களுக்கும், அவர்களுக்கு மேல் வேலை வாங்கும் உயரதிகாரிகளுக்கும், எழுத்தருக்கும் சேர்த்து அரசாங்கம் ஒதுக்கி உள்ள பணம் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம். இது ஒருநாள் ஊதியம் மட்டுமே. இதை ஆண்டுக்கணக்கில் பார்த்தால் கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய். ஆனால் உண்மையில் ஐந்து லட்சத்திற்கு உண்டான வேலைகூட முறையாய் நடப்பதில்லை. சோம்பலாய் உட்கார்ந்து, அரட்டையும், ஊர்வம்பும் பேசிவிட்டு, ஏமாற்றிப் பொழுதைப் போக்கிவிட்டு வாராவாரம் மொத்தமாய் பணத்தை வாங்குவது, உழைக்காததற்கு ஊதியத்தை மனதார வாங்குவது, அதில் ஐந்து, பத்து குறைந்தால் ஏதாவது ஒரு தொலைக்காட்சி சேனலை சாட்சிக்கு வரவழைத்துக் கொண்டு கோஷம் போடுவது; பேட்டி கொடுப்பது; மறியல் செய்வது; என்ன அநியாயம் இது? என்ன நடக்கிறது இங்கே? எங்கே போய்க் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம்?

இது புரட்டாசி மாதம். குறுவை அறுப்பு அறுக்க வேண்டியது, அப்படி அப்படியே கிடக்கிறது. அறுத்துவிட்டு அடுத்து உழுது தாளடி நட வேண்டும். ஏற்கெனவே நட்ட சம்பா பயிர், களை மண்டி நிறங்கி இருக்கிறது. இந்நேரம் இரண்டு களை மிதித்து, இல்லாத இடங்களில் நட்டு களப்பித்து, உரம் கொடுத்திருந்தால் பயிர் தூர் கட்டி அடைப்பாய், பசுமையாய் காட்சி அளிக்கும். அதுவும் இல்லை. பாதிப் பங்கு புரட்டாசி காய்ச்சல் காய்கிறது. மழையும் இன்னும் ஆரம்பிக்கவில்லை. முறை வைத்து விடும் தண்ணீரும் கடைமடைக்கு எட்டிக்கூட பார்ப்பதில்லை. அதற்குள் வெண்ணாற்று முறை முடிந்து, கோரையாற்றில் திறந்து விட்டுவிடுவார்கள். விவசாயம் கேலிக்கூத்தாய்ப் போய் விட்டது. பெரிய மிராசுதார்கள் என்று யாரும் கிடையாது. ஊருக்குள் எல்லாரும் எப்பொழுதோ விற்றுவிட்டு சென்னைக்கு மூட்டை கட்டிச் சென்று விட்டனர். இருக்கும் வெகு சிலரும், நிலத்தை மாவிற்கு மூவாயிரம் என்று முன்பணம் வாங்கிக் கொண்டு அடமானத்திற்கும், சாகுபடிக்கும் விட்டுவிட்டனர். எஞ்சிய சிலர் இருக்கின்றனர். அவர்களுக்கு விவசாயம், வயல், சாகுபடி இதெல்லாம் உயிர் நாடி. அவர்களுக்கு வேறு தொழிலும் தெரியாது. சொந்த நிலங்களை வைத்து சாகுபடி செய்து வீட்டிற்கு வருடத்திற்கு நெல்லும், உளுந்து பயறும், மாட்டிற்கு வைக்கோலும், உளுந்து, பயறு சக்கையும் கொண்டு சென்று சீராய் குடும்பம் நடத்தி சிக்கனமாய் வாழ்க்கை நடத்தும் கூட்டம். அது அதற்குத் தான் பெரிய அளவு பாதிப்பு இந்தப் பொதுத்திட்ட வேலையால். தமயந்தியைக் கண்டுவிட்டால் பினு பினு வென்று பிடித்துக் கொள்ளும் அக்கூட்டம்.

“”என்னா தமயந்தி இது. அறுக்க வேண்டிய குறுவை அறுப்பு அப்புடி அப்புடியே கெடக்கு. ஒரு ஆள் வரமாட்டேங்குது. ரொம்ப திரிசகெட்டு போயிரும் கிராமம்!”

“”களை எடுக்க, அண்டகழிக்க ஒரு ஜெனம் வரமாட்டேங்குது. களை மண்டி பயிரையே அம்மி புடிச்சு, அனக்காடு, பொணக் காடா வளந்துருச்சு. காலத்தோட எடுத்திருந்தா நூற்றுக்கு அஞ்சு நடவாளோட முடிஞ்சிருக்கும். இப்ப அம்பது பேரு ஆவும் போலருக்கு. இருந்த நகையெல்லாம் ஏற்கெனவே படிக்கப் போயிருக்கு. காதுல, கழுத்துல இருந்ததெல்லாம் கழட்டி கொடுத்துட்டு மொட்ட மரமாட்டம் நிக்கிறா பொண்டாட்டி. சொசேட்டி கடன் வேற ரெண்டு வருசமா கட்டாத வட்டி மேல வட்டி ஏறிக் கெடக்கு. புதுசா லோன் போடவும் வழி இல்ல. எங்க போறது பணத்துக்கு? இதுல இந்த ஜனங்க படுத்தர பாட்ட நெனச்சா பத்திகிட்டுதான் வருது. நெளுவா நெழல்ல ஒக்காந்து பேர் பண்ணிட்டு காசு வாங்கிறதுக்காகவே பொதுத்திட்ட வேலைக்கு ஓடிடுது எல்லாம். வயல் வேலைக்கு ஒரு ஈ காக்கா வரமாட்டேங்குது. பொதுத்திட்ட வேலைன்னா வயத்துல உள்ள புள்ள கூட குதித்து ஓடுது. வேலி கட்ட, மராமத்து வேல பாக்க ஒரு ஆள் வர மாட்டேங்குது. இதுல சாகுபடி பண்றதாவுது, சந்தீல போறதாவுது?

“”ஊர் “பெரசண்டுன்னு’ ஒன்ன கொண்டுட்டு வந்தோம்ல. நீ என்னா செஞ்சிருக்க எங்களுக்கு? முன்னல்லாம் அததும் முறையா நடந்துட்டு இருந்துச்சு. எந்த வேலையும் தாமதப்படலை. ஒரு ஒழுங்கும், கட்டுப்பாடும் இருந்துச்சு. இப்ப எல்லாம் ஒண்ணடி மண்ணடியாக் கொழம்பிக் கெடக்கு. அடுத்த தலைமுறைக்கு விவசாய வேலை சுத்தமா தெரியாது. அதக் கத்துக்கணும்ங்கற ஊக்கமும் கெடையாது. சாகுபடி வேலைன்னா கஷ்டம். மெலுக்கா இருக்கணும். உடல் நோகாம, வேர்க்காம, வெள்ள சட்ட கசங்காம வேல பார்க்கணும்னு முடிவுக்கு வந்துருச்சு.

படிக்கற புள்ளைங்க படிக்குது. மீதி வண்டி கத்துகிட்டு டிரைவரா ஆயிடுது. மீதி கேரளாவுக்கும், சென்னைக்கும், திருப்பூருக்கும் வேலைக்குப் போய் தீபாவளி, பொங்கல்ன்னா கைல கலர் செல்லும், காதுலா ஒயருமா ஊருக்கு வருது. சரி ஆள் கெடைக்கலன்னு அசலூர்லேர்ந்து கொண்டாந்தா அதுக்கு மறியல். மெசின எறக்கி அனுப்பம்னா அதுக்கு போராட்டம். பின்ன போனா ஒதைக்கறது; முன்ன போன கடிக்கறதுன்னா நாங்க என்னதான் பண்றது? எப்படி சாகுபடி செய்யறது சொல்லு? நீதான் இதுக்கொரு வழி சொல்லணும், சொல்லு!”

ஆளாளுக்கு அவளைச் சூழ்ந்து கொண்டு ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர். அவர்கள் சொல்வதில் உள்ள நியாயத்தை தமயந்தியால் நூற்றுக்கு நூறு சரியாய்ப் புரிந்துகொள்ள முடிந்தது. அவளுக்கே சொந்தமாய் ஆறுமா அதாவது இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் குறுவை நட்டிருக்கிறாள். விளைந்து அறுக்கும் பக்குவத்தில் இருக்கிறது. இப்பொழுது அறுத்தால் தப்பித்துக் கொள்ளலாம். மழை பிடித்துக் கொண்டால் அவ்வளவுதான். அவளது பங்கு பள்ளக்கை; ஊர்வாரிப்பங்கு. ஒரு மழை பெய்தால் ஊர்த் தண்ணீரெல்லாம் அவள் பங்கைச் சூழ்ந்து கொள்ளும். பயிர் மூழ்கிவிடும். நீரில் எத்தனை நாள் பயிர் தாங்கும்? அழுகி கொடி கொழுத்து எதுவும் தேறாது. நெல்லும் முளைத்து சேற்றில் படிந்துவிடும். என்ன செய்யலாம் என்று யோசித்தாள். பக்கத்து ஊர் பஞ்சாயத்து தலைவர்களுடன் கலந்து பேசினாள். அங்கங்கும் இதே பிரச்னைதான். அவர்களுக்கும் என்ன செய்வதென்று ஒன்றும் விளங்காமல் குழம்பினர். இவள் தனக்குத் தோன்றிய யோசனையைக் கூறினாள். அது சரி என்று அவர்களுக்கும் பட்டது. ஆனால் நடைமுறைப்படுத்தும் தைரியம் அவர்களில் எவருக்கும் இல்லை. தனக்கு ஆதரவாக அவர்களும் வருவார்கள்.

தோளோடு தோள் கொடுப்பார்கள் என்று நம்பிய தமயந்திக்கு பெரிய ஏமாற்றம்தான். ஆனாலும் தன் புதுமுயற்சியிலிருந்து சற்றும் பின்வாங்குவதில்லை என்று உறுதி கொண்டாள் தமயந்தி. மறுநாள் வேலை நிறுத்தம் செய்து ஊர் கூட்டத்தைக் கூட்டினாள். வீட்டிற்கு ஒருவர் கட்டாயம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு போட்டாள். ஆண், பெண் அத்தனை பேரும் திரளாகத் திரண்டு வந்தனர். “”நாளைலேர்ந்து எல்லாரும் வயலுக்கு வந்துடணும்; ரொம்ப வயசானவங்க, உடம்பு முடியாதவங்க, வயல் வேல செய்யத் தெரியாதவங்க, வர வேண்டாம். அவங்க பொதுத்திட்ட வேலைக்கு போகட்டும். போயி கையெழுத்துப் போட்டுட்டு வீட்டுக்குப் போயி உங்களால் ஆன வேலைகளைச் செய்யுங்க. இல்ல ஓய்வு எடுத்துக்கங்க. உங்களுக்கு உண்டான சம்பளம் வீடு தேடி வரும். ஆனால் பாதிச் சம்பளம்தான். இப்ப நூற்றி நாப்பது வாங்கினவங்களுக்கு சரிபாதி எழுபது. மீதிச் சம்பளம் வயல் வேல செய்யறவங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். அதேபோல சாகுபடி செய்யறவங்க ரொம்ப கொறைஞ்சு போச்சு. ஏன்னா விவசாயம் செய்யறவங்களுக்கு லாபமே வர்றதில்லை. அந்தக் காலத்துலயே சொல்லி இருக்காங்க. உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாதுன்னு. பத்து ஏக்கர் வச்சிருக்காங்கன்னா அவங்களை பெரிய மிராசுன்னு பெருமையாப் பார்த்தது அந்தக் காலம். இப்ப பத்துமா நிலம் சொந்தமா சாகுபடி பண்றான்னா அவனுக்கு கூட்டுறவு வங்கியில் ரெண்டு லட்சத்துக்கு மேல கடன் இருக்கும்ங்கறது ஊரறிஞ்ச உண்மையா இருக்கு. அஞ்சு ரூவா சம்பளம் வாங்கினாலும் அரசாங்க மாப்பிள்ளைதான் வேணும்னு சொல்றாங்க. எத்தனை நிலமிருந்தாலும் விவசாயம் பண்றவனுக்கு பொண்ணு குடுக்க மாட்டேங்கறாங்க. அதுனால நாளைலேர்ந்து நாம வயல்ல இறங்கி விளைஞ்சிருக்கற குறுவைப் பயிர் அத்தனையையும் அறுத்து கரையேத்தறோம். சாகுபடி பண்ற முதலாளிமாருக்கு ஒரு பைசா செலவு கெடையாது. பொதுத்திட்ட வேலை சம்பளத்தோட, அந்த வேல செய்யாதவங்க தர்ற பாதி சம்பளத்தையும் சேர்த்து வாங்கிப்போம். நமக்கும் கட்டுப்படியாகுற சம்பளம் கெடைக்கும். என்னா சொல்றீங்க?’

“”அப்ப மொதல் போட்டவங்களுக்கு இந்த வருசம் சாகுபடி எனாம்ங்குறீங்க?” அது எப்படி? தரிசு உழுது, தரிசுகளை எடுத்து, நாற்று பரிச்சு, நடவு நட்டு, களை எடுத்து, வரப்பு கழிச்சு, ஓரம் கொடுத்து எல்லாம் அவங்க பணம் போட்டுதான் செய்திருக்காங்க. இப்ப அறுவடை மட்டும் நாம செய்து தர்றோம். அதுவும் நாம சும்மா செய்யலை. நமக்குண்டான சம்பளத்துக்கு கூடுதலாகவே வாங்கிக்கறோம். என்ன ஒண்ணு, நம்ம சம்பளம் வேற இடத்துலேர்ந்து நமக்குக் கெடைக்குது. இதன் மூலமா இவங்களோட பாரத்துல கொஞ்சத்தை நாம இறக்கி வைக்கிறோம். புரியுதாடி””

“”புரியுது; டீ செலவு, வடை செலவெல்லாம்?”

“”அத மொதலாளிங்க பாத்துப்பாங்க. ரெண்டு வேள டீயும், வடையும் சந்தோஷமா வாங்கித் தருவாங்க. அத்தோட நிப்பாட்டிக்கணும். நாளைலேர்ந்து முக்கியமா, எவனும் ஊருக்குள்ள சரக்கு வாங்கியாந்து அடிக்கப்புடாது. ஊருக்கு வெளில வச்சு குடிச்சுக்க. அசலூர்காரனோட குடிச்சுபுட்டு சண்டைக்கு நின்னு, போலீஸ் கேசா ஆச்சுன்னா, ஜாமீன் அது, இதுக்கு பஞ்சாயத்து வராது சொல்லிட்டேன். நல்ல விஷயத்துக்கு நாம உட்டுக் குடுத்துக்காம முன்னாடி நிப்போம். குடிகாரனுக்கும், சண்டகாரனுக்கும் வக்காலத்து வாங்க இங்க யாரும் தயாரில்லை, சொல்லிட்டேன், சொல்லிட்டேன். அதனால நமக்கு எல்லாத்துக்கும் ஊர் பின்னாடி நிக்கும்னு நெனச்சு வீண் வம்புக்கு போனீங்கன்னா கம்பி எண்ண வேண்டியதுதான்”.

அத்துடன் கூட்டம் கலைந்தது.

மறு நாளிலிருந்து ஒரு ஏக்கருக்கு ஒன்பது ஆண்கள், ஒன்பது பெண்கள் என்ற கணக்கில் ஆட்கள் இறங்கி அறுவடை செய்தனர். மீதமிருந்த பெண்கள் சம்பா களையை எடுக்க ஆரம்பித்தனர். சாகுபடிகாரர்களுக்கு ஏக மகிழ்ச்சி. சுடச்சுட டீயும், வடையும், பஜ்ஜியும், நீர்மோருமாக தாராளமாகச் செய்தனர். வயல்வெளி எங்கும் பரவலாக ஆட்கள் நின்று வேலை பார்த்தனர். பார்க்க அழகாய் இருந்தது. அரி அள்ளிப் போடுவதும், கட்டுவதும், சுமப்பதும், அடிப்பதும், தூற்றுவதும், அளப்பதும், தைப்பதுமாக வேலை நிர்துளிபட்டது. மர நிழலில் வரிசையாய் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டும், தூங்கிக் கொண்டும் இருந்த அதே மக்கள்தான் இன்று சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர். தமயந்தி தானும் இறங்கி அரி அள்ளி வைத்தாள். கட்டுத் தூக்கி விட்டாள். மற்றொரு நாள் நடவுப் பெண்களோடு சேர்ந்து களை எடுத்தாள். பத்து நாள்கள் முன்னரே எடுத்திருக்க வேண்டிய களை – கோரை மண்டி எடுக்க மிகவும் சிரமமாக இருந்தது. களை நிறைய இருந்த இடங்களில் கூடுதலாக ஆள்களை இறக்கிக் கொண்டாள். ஒரே வாரத்தில் அத்தனை அறுப்பும் முடிந்துவிட்டது. களையும் முடிந்துவிட்டது.

“”இதே மாதிரி தமயந்தி, பொதுத்திட்ட காசுலேர்ந்து ஆளுக்குப் பாதிச் சம்பளத்தைப் போட்டு, ஒரு பொக்லின் வச்சு வெட்டி வெண்ணாற்று கரைய திக்கானி மோட்டுகிட்டயும், பெட்டாமுகிட்டயும் நல்லா அழுத்தமா ஒசத்திடனும். வருஷா வருஷம் ஒடப்பு எடுத்துக்குது அந்த வளைவுல – ஒரு தடவை ஒழுங்கா மொரையா செஞ்சிட்டம்னா அப்புறம் காலா காலத்துக்கும் கவல இல்ல. என்ன சொல்ற?” என்றார் பொன்னையன்.

“”செஞ்சுருவம் பெரியப்பா. வாங்குற காசு நமக்கும் ஒட்டணும், செரிக்கணும்; ஒழைக்காம ஏமாத்தி வாங்குனா ஆஸ்பத்திரி செலவுதான். அதேமாதிரி பாருங்க பாசன வாய்க்கால் சரியாவே வெட்டலை. இத்தனைக்கும் பதிமூணு நாள், ஒரு நாளைக்கு எழுநூற்றி சொச்சம் ஜனம் நின்று வேலை பாத்திருக்கு. கிட்டத்தட்ட ஒம்போதாயிரத்து சொச்சம் – ஆள் கூலி; ஆனா வேல சுத்தமா ஆகலை. வெட்ட வேண்டிய இடத்துல விட்டுட்டு, மேலாக வரன்டி கொட்டி பேர் பண்ணிட்டு போயிட்டாங்க; இப்ப யாருக்காச்சும் ஒழுங்கா தண்ணி பாயுதா பாருங்க. இதே மாதிரிதான் தச்சாங்கொளம், பெருமாள் கொளம், பிள்ளையார் குளம், பள்ளாகுளம்னு எதுவுமே ஒழுங்கா தூர் வாரலை. மனுஷங்க குளிக்க, பொழங்க ஒழுங்கா நல்ல தண்ணி இருக்கா? குத்தகை எடுத்தவன், என்னமோ குளமே தனக்கு சொந்தம் மாதிரி நடந்துக்கறான். மீன் வளக்கிறேன்னு கண்டதயும் கொட்டி, பச்சையும் சிவப்புமா தண்ணி நிறமே மாறிப் போச்சு. மாடு கண்ணு இறங்கிக் குடிக்க முடியுதா?

நிலத்தடி நீர் சரசரன்னு கொரைஞ்சுட்டு போகுது. அடி பைப்புல அடிச்சா வெறும் காத்துதான் வருது. வயக்காடு முழுக்க வெறும் கேரிபேகும், பிளாஸ்டிக் டம்ளருமா கெடக்கு. இது அத்தினியும் மக்குமா? மடிக்குமா? அப்புடியே கெடந்தா எதுல நாத்து ஊனுறது? வயல்ல பொழங்க சரியான களம் இருக்கா? போக்குவரத்துக்கு சரியான பாதை இருக்கா? அடிக்க வேண்டிய கட்டு எத்தினி வாக்கா, வரப்பு தாண்டி களத்துக்குப் போக வேண்டி இருக்கு? சேத்துல வழுக்கி தலச்சொமையோட உழுந்தானா கழுத்தெலும்புல்ல முறிஞ்சிடும்? அப்புறம் அய்யான்னா வருமா? அம்மான்னா வருமா? அவங்குடும்பத்த, பொண்டாட்டி புள்ளய யாரு காப்பாத்தறது? சரி, அடிச்சு துரத்தி புடிச்சு வச்சிருக்கர நெல் மூட்டை தலச்சொமயாவே போக வேண்டி இருக்கே, இந்த குறுக்கு ஒத்தயடிப்பாதைய அகலப்படுத்துனா வண்டி வச்சு சுளுவா கொண்டு போயிடலாமே? இன்னும் எத்தனையோ ஆக்கபூர்வமா செய்ய வேண்டியது இருக்கு. நாம மனசு வச்சா, ஒன்னா நின்னு செஞ்சா அத்தனையும் சாதிச்சுக்கலாமே! நாமளே செய்யற வேலை சிலது இருக்கும். அதை நாமே செஞ்சுப்போம். சிலது மிஷின் வச்சாத்தான் செய்ய முடியும். அதுதான் ஒழுங்கா இருக்கும். அதுக்கு மெஷினை இறக்கிப்போம். அரசாங்கம் கொடுக்கற சம்பளத்துல ஆளுக்கு கொஞ்சம் போட்டமனா அத்தினியும் சாதிச்சுக்கலாம். என்ன செய்வமா?”

“”செய்வோம்; செய்வோம்!” என்று ஒருமித்து குரல் கொடுத்தனர். அந்தக் கிராமம் முன்னேற்றப் பாதையில் பயணிப்பது கண்கூடாகத் தெரிந்தது. யாரும் வீண் சம்பளம் வாங்காமல் உழைத்தார்கள். செய்யும் செயலில் நேர்த்தியும், முழுமையும் தெரிந்தது. குற்ற உணர்வு இல்லாமல் சம்பளம் வாங்கினார்கள். முன் மாதிரி கிராமமாக தன்னிறைவு பெற்ற கிராமமாக இதன் பெயரும், புகைப்படமும் பேப்பரில் சீக்கிரம் வரப்போகிறது; சிறந்த கிராமத்தலைவருக்கான மத்திய அரசின் பட்டமும், பதக்கமும், பரிசும் தமயந்திக்குக் கிடைக்கப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த வேளையில் அன்று செய்தித்தாளில் கட்டம் கட்டி ஒரு செய்தி வந்தது. பொதுத்திட்ட வேலைப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய கிராமத் தலைவி மீது நடவடிக்கை என்று; பக்கத்தில் தமயந்தி சிரித்துக் கொண்டிருந்ததுபோல அவளது புகைப்படமும் வெளிவந்திருந்தது.

– ஆகஸ்ட் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *