விருந்தாளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2022
பார்வையிட்டோர்: 3,515 
 

சமையல் மணத்தையும் புகையையும் உறிஞ்சி வெளியேற்றும் கடமையில் தோற்றுப் போன கிச்சின் எக்ஸோஸ்ற் ஃபான், நாதஸ்வரக் கச்சேரியின் நட்டநடுவே முக்கி முனகும் ஊமைக் குழலாட்டம் இரைந்துகொண்டிருக்கிறது. அந்த இரச்சலையும் மீறி –

‘காத்து கொஞ்சம் வரட்டுமே…… அந்த யன்னலை முழுசாத் திறந்து விடுங்கோவனப்பா…’ அவசரம் அவசரமாகச் சமையல் பாத்திரங்களைத் தண்ணீரில் நனைத்து, டிஷ் வொஷ்ஷருக்குள் தள்ளிக்கொண்டிருந்த சாரதா சத்தம் போடுகிறாள். வரவேற்பறைக்கு அருகிலிருக்கும் வொஷ் றூமைத் துப்புரவு செய்யப்போன சசிதரன், அடுப்படி யன்னலை வந்து திறக்கிறான்.

ஓ…… ! மெல்லிய குளிர் காற்று முகத்தில் வந்து மோதுகிறது! மூன்று மணித்தியாலச் சமையலில் மூழ்கித் திளைத்து, உடல் வியர்த்துக் களைத்திருந்த அவனுக்கு, பின் புரட்டாசிக் குளிர்காற்று இதமாயிருக்கிறது!

கோடை பூராவும் இலைகளில் பச்சையத்தைத் தேக்கி வைத்திருந்த மேப்பிள் மரங்கள், அதனைப் பரிபூரணமாகப் பறிகொடுத்து, இலையுதிர் காலத்தை வரவேற்கக் காத்திருக்கும் இத்தருணத்திலும், மஞ்சளும் குங்குமமும் பிசைந்துகலந்த வண்ண விநோதங்களை முகத்தில் அள்ளிப்பூசி அழகு காட்டும் வாலைக் குமரிகள் போல, கவலை மறந்து காற்றோடு சரசமாடிக் கொண்டிருக்கின்றன.

இருபத்தைந்து வருடங்களாக அவன் கனடாவில் பார்த்துப் பார்த்து வியந்து வரும் விந்தை! அலுப்புச் சலிப்பற்ற இன்ப அனுபவம்!

‘முன்னாலை நிக்கிற மேப்பிள் மரங்களைப் பாத்தியே சாரதா…நம்பவே முடியேல்லை…இவ்வளவு கெதியா…இப்பிடி வடிவாக நிறம் மாறுமெண்டு…’

‘ஐயா புலவரே, இயற்கையை ரசிக்கிறதுக்கும் புகழுறதுக்கும் இது நேரமில்லை. ஆக்கள் வரப்போகினம். அரை மணித்தியாலந்தானிருக்கு. அந்த வொஷ் றூம் துப்பரவோவெண்டு ஒருக்காப் பாத்திட்டு, நீங்களும் போய் மேலைக் கழுவிக்கொண்டு வந்து றெடியாக நில்லுங்கோ’

வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போதெல்லாம் சாரதாவுக்கு இப்படித்தான் ஒருவித அவசரமும் ஆவலாதியும்!

சசிதரன் 1986ஆம் ஆண்டு கனடாவுக்குள் காலடி எடுத்து வைத்தவன், முதன் முறையாக ஈஸ்வரம்பிள்ளையை மொன்றியால் நகரில் சந்தித்தான். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினெட்டாம் திகதி ‘தமிழர் ஒளி’ நிறுவனம் நடத்திய ஒரு கலைவிழாவின் போதுதான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

சசிதரன் தலைமை தாங்கிய கவியரங்கம் ஒன்றும், ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பாக அவன் தயாரித்து நெறிப்படுத்திய நாடகம் ஒன்றும் அன்றைய விழாவின் விசேட நிகழ்ச்சிகள்.

கலைவிழா முடிந்த கையோடு இரசிகர்கள் சசிதரனைச் சுற்றி மொய்த்துக்கொண்டனர். பாராட்டுக்களினால் திக்குமுக்காடிப் போனான். அன்று அவனைக் கட்டியணைத்துப் பாராட்டித் தன் மகிழச்சியைத் தெரிவித்துக்கொண்டு அறிமுகமானவர்தான், ஈஸ்வரம்பிள்ளை.

அந்தக் கலைவிழாவினால் சசிதரனுக்குப் பல புதிய அறிமுகங்களும் நட்புக்களும் கிடைத்தன. கூடவே பலதரப்பட்ட பயமுறுத்தல்களும் வந்து சேர்ந்தன. ‘உதிரிகளோடும் எதிரிகளோடும் நாம் சமரசம் செய்யவேண்டுமெனச் சொல்கிறீரோ? உம்மைச் சரியான இடத்தில் சந்திப்போம்’ என்றவாறான தொலைபேசி உறுமல்களும் கறுவல்களும் அடிக்கடி வந்துபோயின.

தன்னந் தனியனாக அப்போது அகதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த அவனது இருப்பிடம் தேடிவந்து, உற்சாகமும் தைரியமும் வழங்கிய புதிய நண்பர்களில் ஈஸ்வரம்பிள்ளையும் ஒருவர். ‘தமிழனுக்குள் பிரிவினை வேண்டாம்’ என்ற தமது கோட்பாட்டுடன் உடன்பாடுடையவன் என்ற வகையில் அவன்மீது ஒருவித மதிப்புக் கலந்த மரியாதை அவருக்கு!

வயதில் சற்றே கூடியவராக இருந்தபோதிலும் இலக்கியம், அரசியல், சமூகம், கலை கலாசாரம் போன்ற பலதும் பத்தும் பேசிக் கலந்துறவாட உகந்த நண்பனாக அவர் சசிதரனை வரிந்துக்கொண்டமைக்கு அவனிடம் காணப்பட்ட ஆற்றல்கள் மட்டுமன்றி, அவனது இனிமையான பேச்சும், இங்கிதமான பண்பும், பலரையும் கவரவல்ல பழக்கவழக்கங்களும் காரணமாயின.

சசிதரனும் தன்னைப்போலவே ஒரு யாழ்ப்பாணத்தான் என்பதற்கும் மேலாக, ‘வடித்தெடுத்த ஒரு வடமராட்சியான்’ என்பது அவருக்குத் தலையில் தங்கக் கிரீடம் வைத்தாற் போன்ற ஒருவகைக் கியாதியைக் கிளப்பும் சங்கதி!

இவை போதாதென்று, செயின்ற் லோறன்ற் சந்தையில் வாங்கிய கோழிக் கால்களை எண்ணெயில் பொரித்துக் குளிரான பியருடனும் சுவைத்து மகிழந்த நாட்களும் – ஷோன் ரலோன் தமிழ்க் கடையில் துடிக்கத் துடிக்க வாங்கியெடுத்த அறக்குளா மீனையும் நண்டையும் இறாலையும் கறியாக்கி, ஒரே கோப்பையில் போட்டுச் சுடச்சுடச் சோறு பிரட்டி உண்டு களித்த தருணங்களும் இவர்களது நட்பின் இன்னொரு பக்கத்து எழுதப்படாத இரகசியங்கள்!

எண்பத்தேழின் ஆரம்பத்தில் சசிதரன் தனது படிப்புக்கேற்ற வேலைதேடி ஒன்ராறியோ மாகாணத்தின் ரொறன்ரோ நகர் நோக்கி வந்தான். அதேயாண்டின் இறுதியில் ஈஸ்வரம்பிள்ளை தன் மனைவி மக்கள் கனடா வந்துசேர்ந்த கையோடு அல்பேர்ட்டா மாநிலத்திற்குக் குடிபெயர்ந்து போனார்.

அல்பேர்ட்டாவில் மகளும் மகனும் குடும்பமாகி நிரந்தரமாகத் தங்கிவிட்ட நிலையில், அந்த மாநிலத்தின் குளிர்க் கொடூரம் போதும் போதுமென்றாகிவிடவே, 2005ஆம் ஆண்டு ஈஸ்வரம்பிள்ளை தனது மனைவியுடன் ரொறன்ரோ வந்துசேர்ந்து, ஸ்காபரோக் குட்டி யாழ்ப்பாணத்தில் குடியேறினார்.

ஒருநாள் பல்வைத்திய நிபுணர் சுந்தரவடிவேலின் டென்ரல் கிளினிக்குப் போயிருந்தபோது, அங்கிருந்த சஞ்சிகைகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரம்பிள்ளையின் கையில் தமிழ்ப் பத்திரிகை ஒன்று அகப்பட்டது. அதிலிருந்த கட்டுரைகளைத் தட்டிப் பார்த்துக்கொண்டிருக்கையில் சசிதரனின் படத்துடன்கூடிய கட்டுரை ஒன்று அகஸ்மாத்தாக அவரது கண்ணில் தென்பட்டது.

அன்று மாலையே ஆசிரியருடன் தொடர்புகொண்டு சசிதரனின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்று, அவனுடன் பேசினார். பதினெட்டு வருடகால இடைவெளிச் சம்பவங்கள், சங்கடங்கள், சவால்கள், சாதனைகள் பலவும் அந்த ஒருசில மணித்தியாலத் தொலைபேசிச் சம்பாஷணையின் போது பரிமாறப்பட்டன.

ஆண்டுகள் பல பிரிந்தவர் கூடினால் ஒரே நாளில் பேசித் தீருமா? மறுநாளே சசிதரனை அவனது அலுவலகத்தில் போய்ச் சந்தித்தார். அதன் பின்னர் அவ்வப்போது தனித்தனியாகவும் குடும்பமாகவும் சந்தித்தனர்.

இன்று மாலையும் அப்படியான ஒரு சந்திப்புக்காகவே ஈஸ்வரம்பிள்ளை தம்பதியினர் சசிதரன் வீட்டுக்கு இராப்போசன விருந்தாளிகளாக வருகின்றார்கள். சசிதரனின் சகதர்மினி சாரதா, ஆரவாரத்துடன் அமர்க்களப்படுவதற்கான காரணமும் இதுதான்!

ஏழு மணிக்கு ஐந்து நிமிடம் இருக்கையில், வாசல் அழைப்பு மணி இருமுறை ஒலிக்கிறது. வாசற் கதவின் உட்புறமாக மூடியிருந்த குளோஸெற்றினுள் கிடந்த ஜஸ்மின் வாசம் கலந்த எயர் ஃபிறெஷ்னரை எடுத்து, அவசரமாக விசிறி அடித்துவிட்டு மெதுவாகக் கதவைத் திறக்கிறான், சசிதரன்.

‘ஹல்ல்லோ சசி…ஹவ்வ்வ்வாயூ?’ உயிரெழுத்துக்களை வலிந்து அழுத்தி உச்சரித்து, உரத்த குசல விசாரிப்போடு உள் நுழைந்த ஈஸ்வரம்பிள்ளையைப் பின்தொடர்ந்து அவரது மனைவியும் வருகிறாள்.

‘வாருங்கோ…வாருங்கோ…மிஸ்ரர் அன் மிஸிஸிஸ் பிள்ளைவாள்.’ மலர்ந்த முகத்துடன் வரவேற்ற சசிதரன், ‘ஜைக்கற்றைக் கழட்டித் தாருங்கோ…இதுக்குள்ளையே வைப்பம்’ என வாங்கிக் குளொஸெற்றுக்குள் தொங்கவிட்டு மூடுகிறான்.

‘சாடையாக் குளிர் துவங்கிவிட்டுதைசே…..’ கைகளை உரசிப் பிசைந்துகொண்டு உள்ளே வந்த ஈஸ்வரம்பிள்ளை, ‘அந்தமாதிரி மசாலா போட்டு கறி சமையல் செய்திருக்கிறாப் போலை கிடக்கு! ம்ம்ம் ….. வாசம் மூக்கைப் புடுங்குது சாரதா!’ பொச்சுக் கொட்டிக்கொண்டு முதலில் சாப்பாட்டு மேசை நோக்கிச் செல்கிறார்.

ஜஸ்மின் எயர் ஃபிறெஷ்னரை மனதுக்குள் சபித்தபடி, ‘இங்கை எவ்வளவுதான் கதவுகளையும் யன்னலுகளையும் திறந்து வைச்சுக்கொண்டு சமைச்சாலும் எங்கடை சாப்பாடுகளின்ரை மணம் வெளியாலை போகாதே’ எனக் கூறிய சசிதரன், ‘அப்பிடி இருங்கோ மிஸிஸ் ஈஸ்வரம்பிள்ளை’ என்று வரவேற்பறையிலிருந்த சோஃபாவைக் காட்டுகிறான்.

‘கையிலை வேலையாயிருக்கிறன்… இருங்கோ வாறன், அக்கா.’ சாரதாவுக்கு தன்னைவிட வயதுகூடிய எல்லாருமே ஒன்றில் அக்கா அல்லது அன்ரிதான்!

கறி டிஷஸ் எல்லாவற்றையும் மேசையில் ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த சாரதாவுக்கு அருகில் போய் நின்றுகொண்டு, ஒவ்வொரு கறிக்கும் விளக்கம் கேட்கத் துவங்குகிறார், ஈஸ்வரம்பிள்ளை.

‘அங்கிள், உங்களுக்கு விருப்பமான அறக்குளா மீன் குழம்பு, றால் குழம்பு, சிக்கன் பிரட்டல் குழம்பு இந்த மூண்டும்தான் இண்டைக்கு மெயின் டிஷஸ். எண்ணெயெண்டு பெரிசாக நீங்கள் பயப்பிடத் தேவையில்லை. அதோடை தண்டூரிச் சிக்கனும் எண்ணையில்லாமல் பேக் பண்ணி, றெடியா வைச்சுக்கிடக்கு …. ஜஸ்ற் இன் கேஸ்!’

‘ஏலம், கராம்பு, கறுவா இடிச்சுத் தூளாக்கிப் போட்டுக் கறியாக்கி இருக்கிறியள் போலை கிடக்குது…இப்பவே நாவூறுது!…அதென்ன அந்த வட்டமான டிஷ்ஷூக்குள்ளை…சுறா வறை போலை கிடக்கு?’

‘ஓமோம்…அது நல்ல பால்சுறா வறை. இதென்ன சொல்லுங்கோ பாப்பம்?… சமன் ஃபிஷ்ஷை எடுத்து பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிப்போட்டு, உப்பையும் ஸோஸையும் லேசா மேலாலை தடவி – கொஞ்சம் வெங்காயம், பச்சை மிளகாய் தூவி, அவணுக்குள்ளை வேக வைச்சிட்டு எடுத்தால் போதும்….. இனியில்லையெண்ட ரேஸ்ற்!’

‘அப்ப…இண்டைக்கு றால் கறியைத் தவிர, மற்றக் கறியளிலை கொலஸ்ரரோலைப் பற்றிப் பயப்பிடத் தேவையில்லை எண்டு சொல்லுறீர்……. மரக்கறிக்கு என்ன செய்திருக்கிறீரெண்டு பாப்பம்…’

‘நல்ல ஃபிறெஷ்ஷான சலாட் செய்து வைச்சுக் கிடக்கு. ஒரு பூசணிச் சம்பல். எண்ணெயிலை பொரிக்காமல் க்கிறில்லிலை போட்டுச் சுட்ட பிஞ்சுக் கத்தரிக்காயிலை ஒரு பிரட்டல் குழம்பு. முளைக் கீரையோடை தேங்காய்த் துருவலைக் கலந்து ஒரு வறை. யெலோ பீன்ஸ்ஸை சின்னன் சின்னனாக வெட்டி, பொட்டேற்றோவும் போட்டு ஒரு பிரட்டல். வழமையான பருப்பு…இதைவிட வேறை என்ன வேணும் அங்கிள்?’

‘நீர் சொல்லுறதைப் பாத்தால்….. இண்டைக்கு எங்கள் எல்லாருக்கும் நல்ல இடியப்ப மிக்ஸோடை சேர்த்து ஒரு மணியான – ரேஸ்ரியான ஆனால் ஹெல்த்தியான டின்னர்! ஒரு ஃபுட் சயன்ரிஸ்ற் சமைச்சால் பின்னை எப்பிடி இருக்கும்!’

‘ஐயையோ அங்கிள்….. நான் படிச்சது ஃபுட் சயன்ஸ் தான். ஆனால் சமையல் படிக்கயில்லை. நான் சமைச்சால் அவரும் சாப்பிடார். சுரேனும் சாப்பிடான். அவனுக்கு அப்பாதான் சமைக்க வேணும். அப்பாதான் இதெல்லாம் சமைச்சது. நான் சும்மா எடுத்தேத்தி வேலை செய்ததோடை சரி.’

‘என்ரை வீட்டிலை, அருமை பெருமையாக ஒரு பருப்புக் கறி வையுங்கோ எண்டால், அங்கிள் பருப்புக் கரிதான் வைப்பார்…நீர் லக்கி சாரதா’

‘சமையல் கலையையும் சசி விட்டு வைக்கயில்லைப் போலை கிடக்கு! நளபாகம் அவருக்கு நல்லாக் கைவருகுது!’

‘சரி…சரி…புகழ்ந்தது போதும், இஞ்சாலை வாருங்கோ…இப்பிடி வந்திருங்கோ பிள்ளைவாள்.’

அவரைக் கூட்டிவந்து வரவேற்பறையில் உள்ள சோஃபா ஒன்றில் இருத்துகிறான், சசிதரன்.

ஆறு போத்தல்கள் வைப்பதற்கு வசதியான குழித் தாங்கிகளைக்கொண்ட, சுழல் ஸ்ராண்ட் ஒன்றில் ஆறு விதவிதமான மதுபானப் போத்தல்களை வைத்து, அப்படியே தூக்கிவந்து, ஈஸ்வரம்பிள்ளைக்கு முன்னாலிருந்த கொஃபி ரேபிளில் வைக்கிறான்.

‘என்னப்பா… நீர் இதெல்லாம் இப்ப அடிக்கப் பழகியிட்டீரோ?’ ஆச்சரியத்தோடு சசிதரனைப் பார்த்துக் கேட்கிறார்.
‘யூனிவேர்சிற்றியிலை இருந்த காலத்திலை கொஞ்சம் குடிச்சவர். இப்ப விட்டிட்டார்.’ மெல்லிய நமட்டுச் சிரிப்புடன் ஈரக் கைகளைச் சின்னத் துவாய் ஒன்றினால் துடைத்து விட்டுக்கொண்டு வந்து, மற்றவர்களுடன் இணைந்துகொண்ட சாரதா சொல்கிறாள்.

‘உண்மையைச் சொன்னால் என்ன…நான் இப்ப இதுகளெல்லாம் விட்டிட்டன், பிள்ளைவாள். எப்பவாவது ஒரு பார்ட்டி, ஃபங்ஷன் எண்டு வந்தால் ஒரு சாட்டுக்கு மற்றவையளோடை சேந்து ரெண்டொரு ட்றிங்ஸ். அவ்வளவுதான்.’

‘இஞ்சை பாரும், ஜோனி வாக்கர் விஸ்கி, ஹெனிஸ் விஎஸ் பிராண்டி, அப்ஸலூற் வொட்கா, சேகிறாம்ஸ் ஜின், பக்காடி றம், ஸாக்ஸம் கலிஃபோர்ணியா றெட் வைன். ஒவ்வொரு வகை மதுபானத்திலையும் உலகப் பிரசித்தி பெற்ற ‘பெஸ்ற் பிராண்டு’ தேடிப்பிடிச்சு வாங்கி வைச்சிருக்கிறீர். ஒண்டு மட்டும் மிஸ்ஸிங்…. பியரைக் காணயில்லை’

‘அதையும் நான் விட்டுவைக்கயில்லை. ஒன்ராறியோ, க்குவெல்ஃ சிற்றியிலை ஸ்லீமன் பியர் தயாரிக்கிற ஒரு ஜேர்மன் கொம்பனி இருக்குது. ஸ்லீமன் பியரிலை ஒரு ஸ்பெஷல் ரேஸ்ற்ரும் ஃபிளேவரும் இருக்கு. ஆறு போத்தில்ப் பெட்டி ஒண்டு வாங்கி வைச்சிருக்கிறன். இதிலை வைக்க இடமில்லை எண்டதாலை ஃபிறிட்ஜூக்குள்ளை கிடக்கு.’

‘இதெல்லாத்திலும் பார்க்க, பியர்தான் சக்கரை வியாதிகாரருக்கு ஆகக்கூடின சத்துராதி. அது வேண்டாம்.’ இது மிஸிஸ் ஈஸ்வரம்பிள்ளையின் ஆலோசனை!

‘அது சரி சசி… தெரியாமல்தான் கேக்கிறன்…நீரும் இப்ப பெரிசாக் குடிக்கிறதில்லை. சும்மா வடிவுக்கே இவ்வளவையும் வேண்டி வைச்சிருக்கிறீர்?’

‘தண்ணியடிச்சாத்தான், உண்மை கதைக்கிற சில எழுத்தாள நண்பர்கள் எனக்கிருக்கினம். அவையள் வந்தால் குடுக்கலாம் எண்டுதான் இதெல்லாத்தையும் வாங்கி வைச்சிருக்கிறன்.’ இலேசான புன்னகையுடன் சசிதரன் சொல்கிறான்.

உரத்துச் சிரித்துக்கொண்டே சாரதா எழுந்துபோய், நன்றாகக் கழுவித் துடைத்து, பளிச்சென மினுங்கும் இரண்டு க்கிளாசும், இரண்டு வைன் க்கிளாசும் கொண்டுவந்து வைக்கிறாள்.

‘சரி…நாங்கள் நிகழ்ச்சியைத் துவங்குவம். இதிலை எதை எடுப்பம் இண்டைக்கு?’ வட்டவடிவான போத்தல் தாங்கியைச் சுழற்றிச் சுழற்றிப் பார்த்தபடியே ஈஸ்வரம்பிள்ளை கேட்கிறார்.

‘பணக்கார வருத்தக்காரருக்கு இதிலை இருக்கிற குடிவகைகளிலை வொட்கா தான் திறமானதாம்.’ சசிதரன் சொல்கிறான்.

‘பிறகென்ன? வொட்காவோடையே துவங்குவம்.’ வொட்கா போத்தலை வெளியே எடுத்து மூடியைத் திருகித் திறந்து இரண்டு க்கிளாஸிலும் ஊற்றுகிறார், ஈஸ்வரம்பிள்ளை.

‘ஹவ் எபவுட் லேடீஸ் …. நீங்களும் கொஞ்சம் வைன் எடுங்கோவன்?’ பதிலுக்காகக் காத்திராமல், வைன் போத்தலையும் திறந்து எஞ்சியிருந்த இரண்டு வைன் க்கிளாஸிலும் கொஞ்சம் கொஞ்சம் ஊற்றிவிட்டு தனது க்கிளாஸை மேலே தூக்கிப் பிடித்தவாறு ‘சியேர்ஸ்’ என்கிறார்.

எல்லாரும் தத்தமது க்கிளாஸூகளைத் தூக்கிக் காட்டிச் ‘சியேர்ஸ்’ சொல்லிக்கொண்டு மெதுவாக மதுவை உறிஞ்சிச் சுவைத்துச் சுகிக்கின்றனர்.

‘எங்கை சாரதா உங்கட மகன் சுரேனைக் காணயில்லை? இதுக்கை கொஞ்சம் சொக்ளற் இருக்குது. இதை அவரிட்டைக் குடுங்கோ.’ மிஸிஸ் ஈஸ்வரம்பிள்ளை கொடுத்த பிளாஸ்ரிக் பையை எழுந்து பெற்றுக்கொண்ட சாரதா சொன்கிறாள் –

‘அவர் இங்கையில்லை. வோட்டலூவிலை. இப்ப ஃபைனல் எக்ஸாம் நடக்குது. படிப்போடை ஆள் கொஞ்சம் பிஸி’

‘அதுசரி படிப்போடை எண்டவுடனை ஞாபகம் வருகிது… இப்பவாவது உம்மடை படிப்போடை சம்பந்தப்பட்ட வேலை செய்யிறீரோ… இல்லை…?’ ஈஸ்வரம்பிள்ளை இழுத்தபடியே சசிதரனைப் பார்க்கிறார்.

‘ஊரிலை நல்லாப் படிச்சுப்போட்டு கனடாவுக்கு வந்தவையளுக்கு அவையவையின்ரை துறையிலை வேலை எடுக்கிறது அவ்வளவு ஈஸியில்லை. கொஞ்சக் காலம் நான் நல்லாக் கஷ்டப்பட்டுப்போனன்.’

தமிழ்க் கடையிலிருந்து வாங்கிய மரவள்ளிக் கிழங்குப் பொரியலை ஒரு பிளேட்டில் போட்டுக்கொண்டுவந்து வைக்கிறாள், சாரதா. சசிதரன் தன் கதையைத் தொடர்கிறான் –

‘இப்ப கொஞ்ச நாளாத்தான் என்ரை மனசுக்குத் திருப்தி தரத்தக்க வேலை ஒண்டு செய்துவாறன்’

‘சந்தோசம்…. சந்தோசம்…. ஆனால் சாரதாவுக்கு வந்தவுடனையே பாங்கிலை வேலை கிடைச்சிட்டுது போலை! இப்பவும் அதே றோயல் பாங்கிலை தானே வேலை செய்யிறீர்?’ இரண்டாம் முறையாக தனது க்கிளாசில் வொட்காவை ஊற்றிக்கொண்டு கேட்கிறார், ஈஸ்வரம்பிள்ளை.

‘என்ரை வேலை பரவாயில்லை, அங்கிள். கனடாவிலைதானே வேலையள் வரும் போகும். ஒண்டும் நிரந்தரமில்லை. அதாலை றோயல் பாங்க் வேலையோடை அமெரிக்கன் நெற் வேர்க் மார்க்கட்டிங் ஒண்டும் செய்யிறன்.’

‘நீர் கஸ்ரமெர்சோடை டீல் பண்ணுறதில்லை… அப்பிடித்தானே?’

‘இல்லையில்லை… நான் ஹெட் ஒஃபீசிலை டேற்ரா கலெக்ஷ்ன் பகுதியிலைதான் வேலை செய்யிறன்.’

‘கனடியன் பாங்குகளிலை ஒரு நல்ல சிஸ்ரம் இருக்குது…. உமக்கு ஒரு பிரச்சினையெண்டால் நேராக மனேஜரோடையே போய்ப் பேசித் தீத்துக்கொள்ளலாம்… இஞ்சாரும் சாரதா டீப் ஃபிறீஸரிலை கொஞ்சம் ஐஸ் கியூப்ஸ் இருந்தால் கொண்டுவாரும். வொட்கா கொஞ்சம் ஸ்றோங்காத்தான் கிடக்கு.’ கண்களை மூடி முகத்தைச் சுழித்துப் பொச்சடித்தவாறு ஈஸ்வரம்பிள்ளை தொடர்கிறார் –

‘ஊரிலை மனேஜரோடை போய்க் கதைக்கிறதிலும் பாக்க, கவுனர் ஜெனரலோடை சுகமாக் கதைச்சுப் போடலாம். ஒருக்கால்… இந்தக் கதையைக் கேளுங்கோவன்… 83 கலவரத்துக்குப் பிறகு கொஞ்சக் காலம் கொழும்பிலையிருந்து ஊரிலை – பருத்துறையிலை போய்த் தங்கியிருந்தனாங்கள். அப்ப… கொள்ளுப்பிட்டியிலை இருந்த என்ரை பாங் ஒஃப் சிலோன் கணக்கிலை இருந்து காசு எடுக்கிறதிலை ஒரு பிரச்சினை வந்திட்டுது. பருத்துறை ப்றாஞ்சிலை போய் அசிஸ்ரன் மனேஜரோடை அடிபடாத குறை. இத்தனைக்கும் அந்த ராஸ்கல் என்ரை ஊரவன்… என்ரை அயலவன்… தூரத்துச் சொந்தக்காரன். அசைய மாட்டன் எண்டிட்டான். எனக்குச் சீயெண்டு போவிட்டுது!’

‘ஊரிலை சிலபேர் உப்பிடித்தான்…தங்கடை பவரைக் காட்டுறது…’ என்கிறான் சசிதரன்.

‘கதையைக் கேளுமன்… நான் விசர் பிடிச்சு நிண்டதைப் பாத்த ஒரு கஷியர் பொடியன் ரகசியமாக் காதுக்குள்ளை சொன்னான், ‘அண்ணை நீங்கள் போய் மனேஜரைப் பாருங்கோ’ எண்டு. போனன் மனேஜரிட்டை. மனுசன் கதிரையிலை இருத்திப்போட்டு தானே எழும்பிப் போய், எல்லாத்தையும் விசாரிச்சு என்ரை எக்கவுண்டிலையிருந்து காசும் எடுத்துத் தந்து, ஒரு பிரச்சினையும் இல்லாமல் சிரிச்ச முகத்தோடை என்னை அண்டைக்கு வீட்டை அனுப்பி வைச்சுது’

‘அந்தாள் ஒரு நல்ல மனுசனாக்கும்.’ சாரதா சொல்கிறாள்.

‘கிறிஸ்ரி ஞானரட்ணம் பேர். யாழ்ப்பாணத்து மனுசன். வதிரியிலை சொந்தத்துக்குள்ளை கலியாணம் செய்தவர். தங்கமான மனுசன்!’

‘ஹாட்லியிலை நான் படிக்கிற காலத்திலை இருந்தே அவர் அங்கை வேலை செய்தவர்’ என்கிறான் சசிதரன்.

‘நான் கனகாலம் கொழும்பிலை இருந்தபடியாலை எனக்கு அவரை முன்பின் தெரியாது.’ ஈஸ்வரம்பிள்ளை சொல்கிறார்.

‘அவற்றை பெண்சாதிதான் அந்த நேரம் மெதடிஸ்ற்ரிலை பிறின்ஸிப்பலாக இருந்தவ.’ இது மிஸிஸ் ஈஸ்வரம்பிள்ளை.

‘ஓமோம்…. அவவின்ரை அண்ணன் தம்பிமாரெல்லாம் டொக்ரேர்ஸ் எஞ்சினியேர்ஸ் எண்டு நல்லாப் படிச்சவங்கள்… அதுக்குப் பிறகு நான் எப்ப அந்த பாங்குக்குப் போனாலும் அந்தாளுக்கு ‘ஹாய்’ சொல்லிப்போட்டுத்தான் வருவேன். ஒரு கொஞ்ச நாளுக்கிடையிலை ஸ்றீஸ் கஃபேயிலை சேர்ந்து போய் ரீ குடிக்கிற சிநேகிதமாப்போச்சு. அந்தளவுக்கு ஒரு நல்ல மனுசன். ஒருநாள் தன்ரை வீட்டு கிறிஸ்மஸ் டின்னருக்கு குடும்பமாக வரச்சொல்லி எங்களை இன்வைற் பண்ணினவர். நான் போகயில்லை….’

இன்னொரு மிடறு வொட்காவை விழுக்கிவிட்டு, முகத்தைச் சுழித்து, வலது புறங்கையால் வாயைத் துடைத்தபடி, ஈஸ்வரம்பிள்ளை தொடர்ந்து சொல்கிறார் –

‘அவை ஊரிலை மற்றாக்கள்… அவை வீடுகளுக்கு விருந்துக்கெண்டு போய்ப் புழங்கி, வாய்வைக்க மனம் வரேல்லை… என்னதான் சொன்னாலும் அந்த மன அருவருப்பும் அருக்களிப்பும்… பாரும், இப்பவும் எங்களுக்கு இஞ்சையும்தானே இருக்குது…!’

‘அக்கா இன்னும் கொஞ்சம் வைன் எடுங்கோவன்… ஒரு கொஞ்சத்தோடை நிப்பாட்டிப் போட்டியள்’ மிஸிஸ் ஈஸ்வரம்பிள்ளை வேண்டாம் வேண்டாமென்று மறுத்தும், சாரதா எழுந்து க்கிளாசில் கொஞ்சம் வைன் ஊற்றுகிறாள்.

‘சாரதா அதென்ன… உமக்கு அவ அக்கா நான் அங்கிள்? எனக்கென்ன வயதேறிப் போச்செண்டு நினைக்கிறீரோ?’
பிள்ளைவாள்மீது வொட்கா தன் வேலையைத் துவங்கிவிட்டது!

‘சீ… சீ… ஒரு மரியாதைக்குத்தான் அப்பிடி உங்களை அங்கிள் எண்டு கூப்பிடுறன். உங்களைப் பார்த்தால் வயதேறிப் போனாள் மாதிரியே தெரியுது?’

‘அதுதானே பாத்தன்…அங்காலை, உம்மடை அக்காவுக்கும் அதைச் சாடை மாடையாச் சொல்லிவிடும்…’

தொடர்ந்து, அல்பேர்ட்டா என்றும், அமெரிக்கா என்றும், கனடா என்றும், ஈராக் யுத்தமென்றும் உள்நாட்டு வெளிநாட்டு அரசியலை அலசி ஆயராய்ந்து, பின்னர் இலங்கைப் பிரச்சினை பற்றியும், கனடியத் தமிழ்க் கலை கலாசாரங்கள் பற்றியும் கதை பற்றிப் படர்ந்து செல்கின்றது. மிஸிஸ் ஈஸ்வரம்பிள்ளையும் சாரதாவும் தமக்குள் நிறையக் கதைக்கின்றனர். கதையில் நேரம் பறந்தே போகிறது!

‘றூஜ் வலி சீனியேர்ஸ் சென்ரருக்குப் போய் வாறியள் … ஏதும் பிரயோசனமாக இருக்கோ?’ சசிதரன் விட்டபாடில்லை.

சாரதாவுக்குக் கொட்டாவி வருகிறது!

‘இருக்கப்பா… நிறைய இருக்கு … அனால் இந்தத் தமிழ்க் கிழடு கட்டையளுக்கு அதுகளைச் சரிவரப் பயன்படுத்தத் தெரியேல்லை. அநேகமானதுகளுக்கு ஒண்டில் இங்கிலீசு வராது. அல்லாட்டில் ஆர்வமில்லாமல் வந்திருந்துகொண்டு மக்கள் மருமக்கள் கொடுமையளைச் சொல்லிச் சொல்லி மூக்கைச் சீறுங்கள். சிலதுகள் பெரிசு சின்னன் சொல்லி ஆளுக்காள் கடிபடுங்கள்… சில நேரங்களிலை சீ எண்டு போவிடும்… அதைவிடும்; நீரென்ன ஒரு ட்றிங்கோடை நிப்பாட்டிப் போட்டீர்? இப்ப நீர் திருந்தியிட்டீர் போலை! மொன்றியலிலை ஆடின ஆட்டங்களை இன்னும் நான் மறக்கையில்லை…! இஞ்சாருமப்பா… சசி ஒரு நல்ல திறமான பாட்டுக்காறன்! அந்த… ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’ பாட்டை எனக்காக ஒருக்காப் பாடுமப்பா… பிளீஸ் சசி…’

‘பாட்டுப் பாடிக் கனகாலமாப் போச்சு பிள்ளைவாள். இப்ப குரலும் கரகரத்து, சாடையான நடுக்கமும்…’

‘நீர் பாடாட்டில் நான் என்ரை ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாட்டைத் துவங்கிப்போடுவன் சரியோ…! எங்கை ஒரு கொஞ்சம் இதுக்குள்ளை விடும் பாப்பம் சசி.’ க்கிளாசை எடுத்துக் கெஞ்சாத குறையாக நீட்டிப் பிடிக்கிறார், ஈஸ்வரம்பிள்ளை.

‘போதுமப்பா போதும்… கூடக் குறையக் குடிச்சால் ட்றைவ் பண்ணேலாது… நேரமும் பதினொரு மணியாகப் போகுது. இனிப் பாட்டு வேண்டாமப்பா… நாளைக்கு திங்கக் கிழமை… வேலைநாள்… அடுத்த வீட்டுக்காரனும் ஆள் சரியில்லையாம்… பொலிசுக்கு அடிச்சுச் சொல்லிப் போட்டாலும்…’ கைகளை மேலே உயர்த்தி உடலை நெளித்துச் சொல்லும்போதே மிஸிஸ் ஈஸ்வரம்பிள்ளையின் குரலில் அலுப்பும் சலிப்பும் நிரம்பி வழிகிறது.

‘பறவாயில்லை… திரும்பிப் போகைக்கை நீர் ட்றைவ் பண்ணும் இண்டைக்கு. அது சரி… நான்… கூடக் குடிச்சுப் போட்டனோ?… இஞ்சாரும் சாரதா, இவ என்னை ஆரெண்டு நினைக்கிறா? மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாதெண்டு… இவ… என்ரை மனிசிக்கு… ஒருக்காச் சொல்லும்’

சுருக்கு விழுந்த முகச் சருமத்தில் முத்து முத்தாக அரும்பியிருந்த வியர்வைத் துளிகளை ஒரு கிளீனெக்ஸ் எடுத்துத் துடைத்தபடி இன்னொரு சுற்று வொட்காவுக்குத் தயாராகிறார், ஈஸ்வரம்பிள்ளை. மிஸிஸ் ஈஸ்வரம்பிள்ளையின் முகத்தில் எரிச்சல் தெரிகிறது!

‘இல்லை பிள்ளைவாள், இண்டைக்கு இவ்வளவும் போதும். எனக்கும் சாரதாவுக்கும் நாளைக்கு வேலை. நீங்களும் நாளைக்கு உங்கட சீனியேர்ஸ் சென்ரருக்குப் போகவேணும். நேரம் போட்டுது. இனி வெளிக்கிடுங்கோ’ என அவசரப்படுத்தியபோது –

‘அப்ப சாப்பாடு…’ என்று சாரதா குறுக்கிட்டதையும் காதில் விழுந்ததாகக் காட்டிக்கொள்ளாமல் ‘நீங்கள் போயிட்டு வாருங்கோ. நான் ஆறுதலாகக் கதைக்கிறன்’ என்று விருந்தினர்களை வழியனுப்பும் விதமாக சசிதரன் எழுந்துநின்று சொல்கிறான்.

சட்டென்று எழுந்து, வாசலை நோக்கி நடக்கத் துவங்கிய மனைவியைப் பின்தொடர்ந்து, ஈஸ்வரம்பிள்ளையும் குனிந்த தலை நிமிராமல் தட்டுத் தடுமாறியபடி எழுந்து நடக்கிறார். அவர்களது ஜைக்கற்றுக்களை எடுத்து, கைகளில் திணித்துவிட்டு, வீட்டு வாசல் கதவைத் திறந்து பிடிக்கிறான், சசிதரன்.

வெளியேறிய மிஸிஸ் ஈஸ்வரம்பிள்ளை சாரதி ஆசனத்தில் போயமர்ந்து காரை ஸ்ரார்ட் பண்ண, ஈஸ்வரம்பிள்ளை மூச்சுப் பேச்சேதுமற்றவராய், பயணி ஆசனத்தில் ஏறிப் பட்டியை மாட்டியபடி தனது பக்கத்துக் கண்ணாடியைச் சற்று கீழே இறக்கி, சசிதரனையும் சாரதாவையும் நிமிர்ந்து பார்க்கிறார்.

சசிதரன் அவரது முகத்துக்கு அருகாகக் குனிந்து மெதுவாகச் சொல்கிறான் –

‘கிறிஸ்ரி ஞானரட்ணம் எனக்குத் தூரத்துச் சொந்தக்காரன், பிள்ளைவாள்.’

கார் இரைச்சலுடன் உறுமிக்கொண்டு கிளம்பி வேகமாக ஓடி மறைகிறது.

விண்மீன்களைத் தொலைத்த வானம் இருண்டு கிடக்கிறது!

பாரமேறிய மனதுடன் சாரதாவும் சசிதரனும் சாப்பிடாமல் படுக்கைக்குப் போகிறார்கள்!

‘தரிசனம்’ – வடமராட்சி வடக்குப் பிரதேசச் செயலக வெளியீடு, 2012
‘உரையாடல்’ – நவம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *