(இதற்கு முந்தைய ‘இரண்டாம் கல்யாணம்’ படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)
ராஜலக்ஷ்மியை நடுத்தர வயதான ஆண்களோ அல்லது வயசான ஆண்களோ உற்றுப் பார்த்ததில் சபரிநாதனின் மனசில் பெருமைதான் ஏற்பட்டதே தவிர வேற பாதிப்பு எதுவும் இல்லை.
அதே சமயம் சின்ன வயசுப் பையன்கள் ராஜலக்ஷ்மியை கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலும்கூட அந்தப் பார்வைகள் அவரை நெளிய வைத்தது! மகள்கள் சென்ற ரயில் கிளம்பிப் போனபிறகு ஸ்டேஷனில் இருந்த புத்தகக் கடையில் ராஜலக்ஷ்மி சில வாரப் பத்திரிகைகளும் கதைப் புத்தகங்களும் வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டாள்.
அதற்காக சில நிமிடங்கள் புத்தகக் கடையில் நின்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் புத்தகம் வாங்கும் சாக்கில் ராஜலக்ஷ்மியை ஜாலியாக சைட் அடித்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய கவனத்தைப் பெற வேண்டும் என்றே உரத்த குரலில் ஜோக் அடித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். கடுப்பாகி விட்டார் சபரிநாதன். புத்தகக் கடையில் அவர் நின்றதே ராஜலக்ஷ்மிக்காக… இதற்குமுன் மழைக்காகக்கூட அவர் புத்தகக் கடையில் ஒதுங்கியவர் இல்லை. இன்று மனைவிக்காக ஒதுங்கினார். ஒதுங்கியவரின் மனைவியையே பயல்கள் நோட்டம் விடுகிறார்கள். “போங்கலே” என்று பயல்களை விரட்டவா முடியும்? “சீக்கிரம் வாங்கி முடி, நேரமாகுது” என்று அவளை அவசரப் படுத்தினார்.
இருவரும் ஸ்டேஷனை விட்டு வெளியேறினார்கள். அவளை நல்ல ஹோட்டலுக்கு அழைத்துப்போய் ஆற அமர உட்கார்ந்து சாப்பிடவேண்டும் என்றுதான் சபரிநாதன் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதே இளைஞர்கள் ஸ்டேஷனுக்கு வெளியிலும் பின் தொடர்ந்து வந்ததைப் பார்த்ததும் எரிச்சலாகி விட்டது அவருக்கு.
ஹோட்டலுக்குப் போகிற எண்ணத்தை உடனே மாற்றிவிட்டார். “வா வா ஊருக்கே போயிரலாம்” என்று சொல்லி பேருந்து நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். ஹோட்டலுக்குப் போகலாம் என்று தன்னிடம் ரகசியமாகச் சொல்லி வைத்திருந்தாரே! இப்ப என்ன ஆயிற்று இவருக்கு என்று ராஜலக்ஷ்மிக்குப் புரியவில்லை.
“உம்… சீக்கிரமா நட ராஜி, ஆமை வேகத்ல நடந்தா எப்படி?” என்று மேலும் அவளை அவசரப் படுத்தியதும்தான் ஏதோ காரணம் இருப்பது அவளுக்கு உறைத்தது. முதல் தடவையாக பணம் கொடுத்து புத்தகங்கள் வாங்கியிருக்கும் சந்தோஷத்தை சற்று கலைத்துவிட்டு பார்வையை சுற்றிலும் சுழல விட்டபோது இரண்டு இளைஞர்கள் பின் தொடர்வதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவளுடைய கவனத்தைப் பெற்றுவிட்ட உற்சாகம் இளைஞர்களின் முகங்களில் பளிச்சிட்டதை சபரிநாதன் பார்த்தார்.
“பராக்குப் பாக்காம பாதையைப் பார்த்து நட தாயி! வண்டியும் காருமா வருது!” கொஞ்சம் கடுமையுடன் சொல்லி அவளின் கவனத்தை திருப்பப் பார்த்ததில், சபரிநாதனின் உள்மனம் புரிந்து நேர்பார்வை பார்த்தபடி அவருடன் வேகமாக நடந்தாள்.
பேருந்து நிலையத்தை அடைந்து பதினைந்தாம் நம்பர் பஸ்ஸுக்காக காத்திருந்தபோது யதேச்சையாக திரும்பிப் பார்ப்பதுபோல பார்த்தார். இளைஞர்கள் இல்லை. அப்பாடா என்று பெருமூச்சு விட்டார்.
அவருடைய புது மனநிலை என்னவென்றால் – இளைஞன் எவனும் ராஜலக்ஷ்மியை உற்றுப் பார்க்கக் கூடாது! அதே மாதிரி இவளும் எந்த இளைஞனையும் நமிர்ந்து பார்க்கக்கூடாது…! இதில் இரண்டாவது நடக்கிற கதையோ இல்லையோ; ஆனால் முதலாவது நடக்கிற கதையா? அவர் கையில் அது இல்லையே!
ஆச்சு கல்யாணம் முடிஞ்சாச்சி. இனி மனைவியை கூட்டிக்கொண்டு ஊர் ஊராகப் போய் சுற்றுப்பயணம் செய்யவேண்டும் என்பதுதான் சபரிநாதனின் ஆசை. ராஜலக்ஷ்மிக்கோ கேட்கவே வேண்டாம். எங்கேயாவது சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கும். முதலில் எங்கே போகலாம் என்று அவர் கேட்டதும் அவள் குற்றாலம் என்றாள். குற்றாலம் பொங்குமாங் கடலில் பெரிய அருவி அகலமான வெண்மையில் விழுந்து கொண்டிருப்பதைப் பார்க்கையில், அவளுக்கு அதை ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொள்ளவேண்டும் போல இருக்கும். ஆனால் அவள் பரபரத்த அளவிற்கு சபரிநாதன் குற்றாலத்திற்காக பரபரக்கவில்லை. குற்றாலத்தில் அத்தனை ஆர்வம் அவருக்கு கிடையாது என்பது காரணமல்ல. அவர் பார்க்காத அனுபவிக்காத குற்றாலமா என்ற செருக்கும் இறுமாப்பும்தான் காரணம்.
சபரிநாதன், மரகதம் இருந்தவரை வருடா வருடம் ஜூன் மாதம் குற்றாலம் போகாமல் இருந்ததில்லை. கண் இரண்டும் சிவந்துபோகிற வரை அருவியில் நின்றுவிட்டு, மரகதம் சமைத்துப் போடுகிற அறுசுவை சாப்பாட்டை நிமிர நிமிர சாப்பிட்டுவிட்டு உறங்க குற்றாலத்தைப் போல் இந்தியாவிலேயே ஒரு இடம் கிடையாது என்பது அவரின் அபிப்பிராயம். ஆனால் என்ன… சமையல் கடையை மரகதம் அங்கும் விரித்தாக வேண்டும். ஏதோ போன இடத்தில் எளிமையாக வாங்கிச் சாப்பிடுவோம் என்று இருக்கமாட்டார் சபரிநாதன்.
புளிசேரி, பிரதமன், அவியல், மசியல் என எந்த அயிட்டத்தையும் குறைக்காமல் வக்கணையாக சாப்பிட்டு ஏப்பம் விடவேண்டும் அவருக்கு. இதெல்லாம் தெரியாத ராஜலக்ஷ்மி அவள் பாட்டுக்கு குற்றாலம் போகலாம் என்று சொல்லிவிட்டாள். ஆனால் குற்றாலம் கிளம்புவதற்கு முன்பே சமையல் விஷயத்தில் அவள் ஒரு பெரிய சைபர் என்பது தெரிந்து சபரிநாதன் திகைத்துப் போனார் திகைத்து!
அவளிடம் ஒருநாள் “பீர்க்கங்காய் கூட்டு செய்யேன்” என்றார்.
“அதெல்லாம் எனக்கு சமைக்கத் தெரியாதே…” என்றாள் பரிதாபமாக. உடனே சபரிநாதனின் மேட்டு விழிகள் கோழிமுட்டை போல் விரிந்தன.
“எப்டி எப்டி சமைக்கத் தெரியாதா?”
“அப்டி இல்லீங்க, வித விதமா சமைக்கத் தெரியாது.”
“அப்ப என்னதான் சமைப்பே?”
“ஒரு சாம்பாரோ ரசமோ வச்சி சோறு வடிச்சிடுவேன்.”
“கறி எதுவும் செய்யத் தெரியாதா?”
“உருளைக்கிழங்கு கறி; தக்காளிச் சட்னி தெரியும்”
“கருணைக் கிழங்கு மசியல், பருப்பு உருண்டைக் கொழம்பு, கொத்தவரங்கா பருப்பு உசிலி?”
“இதெல்லாம் கேள்விப் பட்டதுகூட இல்லை”
“அப்ப, கண்டந்திப்பிலி ரசம்?”
இதற்குப் பதிலாக ராஜலக்ஷ்மி வெகுளியாகப் புன்னகைத்தாள்…
ராஜலக்ஷ்மியை அருகில் உட்கார வைத்து என்ன ஏதுவென்று விசாரித்துப் பார்த்தபோதுதான் அவருக்கு எல்லாம் புரிந்தது.
அவள் பிறந்த வீட்டில் சமையல் என்பது மத்யானம் ஒரே ஒருவேளை சோறு வடிப்பதுதான். சாம்பாரோ அல்லது குழம்போ ஆடிக்கோ அமாவாசைக்கோ ஒரு தடவைதான். ரசம்கூட என்றைக்காவதுதான். மோர் கூட எதிர் வீட்டு ஆச்சியிடம் துட்டு கொடுத்து வாங்கி பிசைஞ்சி சோற்றை வாயில் உருட்டிப் போட்டுக்கொள்வதோடு சரி. தொட்டுக்கொள்ள காணப் பருப்புத் துவையல் சில சமயம் இருக்கும். அல்லது பச்சை வெங்காயம். ராத்திரிக்கும் மத்யானம் வடித்த அதே சோறுதான். அதில் தண்ணீர் கொட்டி வைத்துவிட்டால் மறுநாள் காலையில் சாப்பிட அதுவே ‘பழையதாகி’ விடும்.
இதெல்லாம் கேட்கவே சபரிநாதனுக்கு வெட்கக் கேடாக இருந்தது. சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட ஒரு குடும்பத்தில் பெண் எடுத்திருக்கிறார். கோவில்பட்டி மாமியார் வீட்டில் எப்போதும் பாலும் பாதாம் பருப்பும் தாமிரபரணி போல ஓடும். ஹூம்… சாப்பாட்டு விஷயத்தில் ‘கர்த்தர் இல்லத்தை’ அடிச்சுக்க முடியாது…
ராஜலக்ஷ்மிக்கு தெரிந்த சாம்பாரை ஒருநாள் வைத்துக் காட்டச் சொன்னார். பாவம் அவளும் சிரத்தையுடன் கத்தரிக்காய் சாம்பார் வைத்தாள். வலது கை ஆட்காட்டி விரலை சாம்பாருக்குள் முக்கிப் பார்த்த சபரிநாதன், “இது சாம்பாரா, ரசமா?” என்றார்.
“சாம்பார்தான்” ஈனமான குரலில் பதில் வந்தது.
“விரல்ல கொஞ்சங்கூட ஒட்டவே மாட்டேங்கு! அதனால் ரசம்னு நெனைச்சேன்…”
ராஜலக்ஷ்மி விசித்திரமான உணர்வில் அப்படியே நின்றாள்.
“சாம்பார்னா திக்கா கரைச்ச சந்தனம் கணக்கா கையெல்லாம் ஓட்டணும்! இதே சாம்பாரை மரகதம் வச்சா, அது கொதிக்கிற போதே நம்ம வீட்ல சாம்பார்ன்னு எட்டாவது வீட்ல சொல்லிடுவாஹ.”
ராஜலக்ஷ்மி மெளனமாக நின்றாள்.
“நீ இப்படியெல்லாம் சமையல் செஞ்சா தோதுப்படாது தாயி! போனா போகுதுன்னு ரெண்டு மூணு மாசத்துக்கு நல்ல சமையல்காரனா பாத்து ஏற்பாடு பண்றேன். அவன்கிட்டயே நீ எல்லா சமையலையும் கத்துக்க.”
ராஜலக்ஷ்மி தலையை ஆட்டினாள்.
“சமையல்காரனை ஏற்பாடு செய்யறதுக்கு முந்தி ஒன் ஆசைப்படி நாம குற்றாலம் போயிட்டு வந்திரலாம். இந்தத் தடவை மட்டும் ஹோட்டலில் சாப்பிடுவோம். குற்றாலத்ல அடுத்த வருஷம் ஒன் சமையல்தான்.”
ராஜலக்ஷ்மி அதற்கும் தலையை ஆட்டி வைத்தாள்.
மறுநாள் காலை அவர்கள் குற்றாலத்தில் இருந்தார்கள். சபரிநாதனுக்கு குற்றாலத்தில் இருக்கும்போது ஒரு புது கம்பீரம் வந்துவிடும். சீசனுக்கு அவர் குடும்பத்தோடு வந்திருக்கிறாராம்…! ஆனால் ஐந்தருவியில் ஒரு குளியல் போட்டு தலையைத் துவட்டியபோது அவரின் கம்பீரம் தலை கீழாக குடை சாய்ந்தது.
அரைமணி நேரத்திற்கும் மேலாக அருவியில் திளைத்துவிட்டு வெளியே வந்தபோது ராஜலக்ஷ்மி ஒரு அழகான செதுக்கிய ஈரச் சித்திரம்போலத் தெரிந்தாள். மூன்று நான்கு இளைஞர்கள் பிரமிப்புடன் அவளை உற்றுப் பார்த்தனர். உடனே சபரிநாதன் உஷாராகிவிட்டார். நகர்ந்து நின்று இளைஞர்கள் ராஜலக்ஷ்மியைப் பார்க்க இயலாதபடி மறைத்துக்கொண்டார். இளைஞர்களும் அதற்கு ஏற்ற மாதிரி நகர்ந்துகொண்டு அவளைக் கண்டு களிப்பதைத் தொடர்ந்தார்கள். சபரிநாதன் மறுபடியும் ஒரு நகர்வு கொடுத்து மறைத்து நின்றார். அவர்களும் அதற்கு ஏற்ற மாதிரி நகர்வு கொடுத்தார்கள்.
இப்படியே ஒரு ‘செஸ்’ ஆட்டம்போல இருந்ததில், ஒருத்தன் கடுப்பாகி “இந்த பெரிசைப் பாரு, நந்தியாட்டம்” என்று கொஞ்சம் சப்தமாகவே சொன்னான். கொதித்துப் போய்விட்டார் சபரிநாதன். உடம்பெல்லாம் படபடத்தது அவருக்கு. விரைந்து சென்று அந்த இளைஞனை கன்னத்தில் ஓங்கி பளாரென்று ஒரு அறை விட்டார். உடனே அங்கு கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தினர் அந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டியடித்தனர்.
ராஜலக்ஷ்மி தலைகுனிந்து சபரிநாதனின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். அவரால் நீண்ட நேரத்திற்கு இயல்பாக பேச முடியாமல் தவிப்புடனேயே இருந்தார். எந்தப் பனாதியோ ‘பெரிசு’ என்று அவரை சொன்னது ஆயிரம் காக்கைகள் அவருடைய தலைமேல் எச்சமிட்டு விட்டாற்போல் இருந்தது! அந்த அவமான எச்சத்தை அவரால் மறக்க முடியவில்லை.
ஆனால் ஐந்தருவியிலோ, பெரிய அருவியிலோ, புலி அருவியிலோ ராஜலக்ஷ்மியை ஏதாவது ஒரு இளைஞர் கூட்டம் பின் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருந்தது. இதில் சபரிநாதன் ஒருமாதிரி சிதறுண்டுதான் போனார். ராஜலக்ஷ்மியின் கணவராக எந்த இளைஞர் கும்பலுக்கும் அவர் தெரியவே இல்லை. இங்குதான் அழகான ராஜலக்ஷ்மியின் கணவன் என்ற அவருடைய பெருமைகள் உடைந்து சிதறின! அவருடைய கோபம் பூராவும் இளைஞர் வர்க்கத்தின் மீது ஈட்டி முனையாகப் பாய திரண்டு நின்றது.
ஆனால் அவருக்கு நன்கு தெரிந்த கல்யாணமான ஒரு இளைஞன் அவருக்கு வில்லனாக வரப்போகிறான் என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான்…!