(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘மனுஷாளெல்லாம் குரங்கின் வம்சம் என்று மேல்நாட்டு புஸ்தகங்களில் படிக்கிறோமே, அது பொய் என்று சில சமயம் தோணுகிறது. நிஜமாக இருந்தால் நல்லதென்று சில சமயம் தோணுகிறது.
‘குரங்கு என்று என்னை இப்பொழுது வைவதற்காகவா?’
‘அடி அசடு! அதெல்லாம் இல்லை. அந்த மாதிரி இருந்தால் சிவனே என்று ஏதாவது ஒரு புளியமரத்தையோ ஆலமரத்தையோ பிடித்துக் கொண்டுவிடலாம். வாடகையும் கிடையாது. மரங்களுக்கும் பஞ்சமில்லை.’
‘மனுஷாளாகி விட்ட பிறகு அந்தப் பேச்சேது? இனிமேல் ஆகவும் முடியாது.’
‘இல்லாவிட்டால் நரிக்குறவனாயிருந்தால் கூட போதும். சம்மந்தட்டி கூடாரத்தை எங்கேயாவது ஒரு பொட்டலில் போட்டுவிட்டு ஹாய்யாகப் பொழுதை ஓட்டலாம்’.
‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான். அதிலேயும் புருஷர்களே இப்படித் தான். முடவச்சி என்று சொன்னார்களா,பாருங்களேன்… இந்த யோசனை எல்லாம் ஜாகை கிடைக்காததினால்தானே?
‘ஆமாம். வந்து பதினைந்து நாள் ஆகிவிட்டது. எங்கள் ஆபீஸ் சினேகிதனிடம் சொன்னேன். அவன் சலித்துச் சலித்துப் பார்த்துவிட்டு ஜாகை கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டான்’.
‘ஒன்றுமே கிடைக்கவில்லையா?’
‘இந்தக் காலத்திலே ஊசி குத்துகிற இடதிலே ஒன்பது பேர் குடியேறி விடுகிறார்கள்.’
‘ஒரு ரூம்,தாழ்வாரம் இருந்தால் கூட போதுமே. முப்பத்தி எட்டுக் கோடியாக இருந்த ஜனத் தொகை இன்றைக்கு நாற்பத்தி மூன்று கோடியாகிவிட்டது. அதுக்குத் தகுந்தாற்போல் வீடுகள் அதிகமாயிருந்தால் கஷ்டமிருக்காது. வீடுகள் அதிகமும் ஆகவில்லை. ராஜாங்கமும் இந்த முக்கிய விஷயத்தைக் கவனிக்கவில்லை.’
‘இது தான் உங்களிடத்திலே உள்ள பிசகு. சின்னவிஷயத்தைப் பத்திப் பேசினால் பெரிய பேச் செல்லாம் ஆரம்பிப்பீர்கள், நம் வீட்டுத் திட் டத்தை விட்டு விட்டு தேசீய திட்டத்துக்குப் போய் விடுவீர்கள். இதே புருஷர்கள் வழக்கம். ஒரு ரூம் தாழ்வாரம் கூடக் கிடைக்கவில்லையா என்றால்?’
‘பங்களாக்கள் வேணுமானால் கிடைக்கும். ஒரு மாத சம்பளம் எண்பது ரூபாயைக்கொடுத்தால் ஒண்ணரை மைலில் உள்ள ஒரு பங்களா கிடைக்குமாம்.’
‘ஜாகை போக வேண்டியது தானே?’
‘சர்க்காரில் செலவுக்குப் பணம் போதவில்லை யென்றால் புது வரி போட்டு வரவைச் சரிக்கட்டு வார்கள். நாம் யார் தலையிலே கை வைக்கலாம்?’
‘விக்ரமாதித்தன் வேதாளம் மாதிரி முருங்கை மரத்துக்குப்போரேளே. ராஜாங்க சமாச்சாரமே வேண்டாம், சொல்லுங்கோ. இந்திர சபை கொலு பொம்மைகளுக்குத் தகும். ஏனென்றால் அவைகளுக்குப் பசிக்காது.நாம் என்ன கொலு பொம்மையா சம்பளத்தை வாங்கி பங்களாக்காரனுக்குக் கொடுத்துவிட்டு சாப்பிடாமல் இருக்க! உங்கள் ஆபீஸ்காரர்களுக்கு என்ன தெரியும் ? அடுத்த வீட்டு வாத்தியாரை கேளுங்களேன்.’
மனைவி கடைசியாகச் சொன்னதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் இருந்தது. ஆபீஸ்காரர் களுக்கு உள்ளூர் விஷயங்களில் அவ்வளவு தேர்ச்சி யும், அனுபவமும் ஏற்படுவதில்லை. உத்தியோக உறவு நாய்க் குடை மாதிரி. அழகாக, கும்பலாக உண்டாகுமே ஒழிய, வேர் விடுவதில்லை. உள்ளூர்க் காரர்கள் மரஞ்செடியைப் போல. அல்லது அருகம் புல்லைப் போல வாசஸ்தலத்தில் ஆழ்ந்த பற்று இருக்கும்.
மரஞ்செடியைப் போன்ற அடுத்த வீட்டு வாத்தியாருடன் இது விஷயமாகப் பேசுவதெப்படி? அவரை நெருங்குவதெப்படி? அதுதான் புரிய வில்லை.
அந்த ஊருக்குவந்து ஒருவாரமாயிற்று. தினம் காலையில் அவர் வீட்டைக் கடந்து தான் ஆபீசுக்கு போக வேண்டும். அவரும் அந்த சமயத்தில் திண்ணையில் தான் உட்கார்ந்திருப்பார். தினசரி பேப் பரைப்பிரித்து வைத்தபடி கிடக்கும். தெருவில் போவேர்வருவோரைக்கவனித்துக் கொண்டிருப்பார். அல்லது நாலு பையன்களை மறித்துப் போட்டு, கைநகத்தைக் கத்தரித்துக்கொண்டோ அல்லது காதைக் குடைந்துக்கொண்டோ தான் உட்கார்ந் திருப்பார். அறிமுகமாகி இருந்தாலல்லவா அவருடன் மேலே பேசலாம்? நானாக திடீரென்று போய் பேச முடியாது. பக்கத்து வீட்டுக்காரர் தானே என்று அவரும் தன் கௌரவத்தை மறந்து விட்டுப் பேசுவதாகக் கணோம். பின் மரஞ் செடி யுடன் எப்படிப் பேசுவது? அதுதான் எனக்குப் புரியவில்லை. வழக்கம்போல் ஆபீசுக்குப் போய்த் திரும்பினேன். வீட்டிற்குள் நுழையக்கூட இல்லை.
‘கேட்டீர்களா’ என்றாள் மனைவி.
‘திண்ணையில் இன்று காணோம்’ என்று பொய் சொன்னேன்,
மறுநாளும் கேட்டாள்,
‘ஊரில் இல்லைபோலிருக்கிறதே. காணவில்லை’ என்று பொய்யை அலங்கரித்துச் சொன்னேன். ‘பள்ளிக்கூடத்திற்கு இன்று விடுமுறையா என்ன?’ என்று கேட்டதும் விழித்தேன்.
மூன்றாவது நாளும் ஒரே பாடத்தைப் படிக்கலாமா?
‘இன்றைக்குப் பார்த்தேன். கேட்க முடியவில்லை.பையன்களுக்கு ஏதோ கவனமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்’ என்று முந்திக்கொண்டேன்.
இப்படியே ஏழு நாட்கள் ஓடிவிட்டன.
எட்டாவது நாள் காலை.ஆபீசுக்குக் கிளம்பும் சமயம்.
‘இன்னும் எத்தனை நாள் இந்த மாதிரி ஒருத்தர் தயவிலே வீட்டிலிருக்க உத்தேசம். இன்றைக் கேனும் -‘
பேச்சை முடிக்கும்படி மனைவியை விடவில்லை. ‘கட்டாயமாக அடுத்த வீட்டுக்காரரை விசாரித்து முடித்துவிடுகிறேன்.’
வழக்கம் போல் ஆபீசுக்கு கிளம்பினேன். அவரும் திண்ணையில்தான் உட்கார்ந்துகொண்டிருந் தார். காது குரும்பியும் அவர் கையில் இருந்தது. அவரைக் கண்டதும் என் கால்கள் தயங்கினவே ஒழிய மனது மட்டும் இச்சாணிக் கிளையிலிருந்து இறங்க மறுத்தது. இந்த சின்ன விஷயத்துக்காக வலியச் சென்று தன் மதிப்பை இழப்பதா? என்னைத் தெரியும் என்பதற் கறிகுறியான அரை புன்சிரிப்பேனும் அவர் முகத்தில் கண்டிருந்தால் இவ்வளவு சங்கடம் இருந்திருக்காது இந்த நிலையில் நான் வேறு என்ன செய்யமுடியும்?
ஆபீசுக்குப் போய்விட்டு வீடு திரும்பினேன். ‘கேட்டீர்களா?’ என்ற கேள்வியுடன் என் மனைவி வரவேற்றாள்.
‘அவர் முகத்தை மறைத்துக்கொண்டு பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார். பிறகு கேட்கலாம் என்று போய்விட்டேன்.’
மனைவி இடி இடி என்று சிரித்தாள்.
‘புருஷாளுக்கெல்லாம் கூடப்பிறந்தது வறட்டு ஐம்பம். அதுக்கு பழுது வரக்கூடாதென்று அவர்கள் படும்பாடும், சொல்லுகிற பொய்யும் செய்கிற தந்திரங்களும்-‘
நான் வாய் திறக்கவில்லை.
‘உங்கள் சுபாவம் எனக்குத் தெரியாதா? புரு ஷா ளை நம்பியா நாங்கள் குடும்ப காரியத்தைக் கவ னித்து வருகிறோம்? இங்கே வந்த மறுநாளே ஜாகை அமர்த்திவிட்டேன்.’
‘அமர்த்திவிட்டாயா? என்னிடம் சொல்லவில்லையே. போதாக் குறைக்கு அலைய வேறு வைத்து விட்டாயே? நான் என்ன பள்ளிக்கூடத்துப் பிள்ளையா — பரீக்ஷை செய்வதற்கு? போகட்டும். யார் அமர்த்திக் கொடுத்தது?’
‘அடுத்த வீட்டு வாத்தியார் சம்சாரம்தான்.’
‘அந்த அம்மாவை முந்தியே தெரியுமா என்ன?’
‘தெரியாது.தெரிந்துகொள்வது என்று இருக்கிறதா என்ன? இங்கு வந்த மறுநாள் மத்தியானம் நானும் சாப்பிட்டுவிட்டு சீவலை வாயில் போட்டுக் டுக் கொண்டு வெற்றிலை சுண்ணாம்புடன் திண்ணைக்கு வந்தேன். அடுத்த வீட்டுத் திண்ணையில் வாத்தியார் வீட்டு அம்மாள் உட்கார்ந்திருந்தாள். அந்த திண்ணைக்குப் போய் பேசிக்கொண்டிருந்தேன். சௌகரியமாக ஒரு இடத்தைச் சொன்னாள். ஒப்புக் கொண்டுவிட்டேன்.’
புருஷர்களை பழித்துக்காட்டுவதற்காக என் மனைவி செய்த கற்பனை என்றும் நான் முதலில் நினைத்தேன்.
‘அப்படி என்றால் மறுநாளே குடி போயிருக்கலாமே?’
‘புருஷர்களைப் போல சில்லரைப் பொய் சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா? இது மார்கழி மாதம். தை மாதத்தில்தான் குடி போகலாம். அந்த சம்பிரதாயங்கள் எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது?’
எனக்குப் பேச வாயில்லை. என் மனப்போக்கை ஊகித்து அதன் ஓட்டத்திற்கு விலங்கிட்ட என் பதிலுக்கு வணங்காமல் இருக்கமுடியுமா?
புருஷர்கள் தன்மை ஆம்! அதுதான் அகங்கார மென்னும் கோபுரத்தின் உச்சியில் உட்கார்ந்திருக்கும் தன் மதிப்பென்னும் மயில்! உலகத்துடன் கலக்கவேண்டும் மென்றால் கோபுரத்தை விட்டு இறங்கிப் பறக்க வேண்டியிருக்கிறது! ஆனால் அப்படி செய்யத்தான் அதிகமாக விரும்புவதில்லையே! இருந்தாலும் அந்த மயில்கூட இரை தேடுவதென்றால் இறகை விரிக்கவில்லையா?
இந்தமாதிரி சிந்தனையில் அன்றை பொழுது ஓடிவிட்டது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆபீஸ் இல்லை. இருந்தாலும் கிளம்பினேன். உத்யோகஸ்தனுக்கு மோக்ஷலோகம் ஆபீஸ்தானே!
அடுத்த வீட்டுத் திண்ணையில் வாத்யார் உள்பட யார் யாரோ உட்கார்ந்திருந்தார்கள். நடுவிலே ஒரு ஆங்கில தினசரி விரித்துக் கிடந்தது. ஆளுக்கொரு புறமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அணுவைப் பற்றிய சர்ச்சை!
நான் தெருவில் போன நேரத்தில் வாத்யார் ‘உலகத்துக்கே ஆயுள் நெருங்கிவிட்டதென்று எச்.ஜி.வெல்ஸ் சொல்லுகிறாரே. என்ன சொல்லுகிறீர்?’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
என் கால்கள் தாமாகத் தயங்கின. நான் யோசித்து முடிவுசெய்வதற்குள் கால்கள் என்னை அந்தத் திண்ணைக்கு இழுத்துச் சென்றுவிட்டன.
‘உலகத்தின் முடிவைப்பற்றி பல ஜோஸ்யங்கள் வெளிவந்துவிட்டன. உலகம் இதற்கு முந்தி பத்தாயிரம் தரம் செத்திருக்கிறது, வெல்ஸ் சொன்னது பாத்தாயிரத்தி ஒன்றாம் தடவை அவ்வளவு தான். உயிருக்கு சாவேது?’ என்று சொல்லிக் கொண்டு உட்கார்ந்தேன்.
‘இவர்களுக்குப் புரியவில்லை. உலகம் சாகும், உயிர் சாகாது என்ற தத்வத்தை வற்புறுத்துகிறேன்’ என்று மூலையிலிருந்தவர் சொல்லி முடிப்பதற்குள் ஒரு சிறு பையன் வந்து ‘அம்மா உங்களை கூப்பிடறாங்க’ என்றான். எழுந்து, வீட்டு வாசலுக்கு வந்தேன். மனைவி திண்ணையில் நின்று கொண்டிருந்தாள்.
‘அணுகுண்டைப் பற்றியும் அண்டத்தைப்பற்றியும் பேசப்போய் விட்டீர்களே அறிமுகம் ஆகி விட்டதோ?’ என்றாள்.
பேச்சு சுருக்கென்று தைத்தது.
‘இதற்குப் பெயர்தாள் புருஷர்கள் தன்மை’ என்றாள்.
உண்மைதானே!
– ஜம்பரும் வேஷ்டியும் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு: 1947