“மழையினைப் பார்த்து விதைகளை விதைத்த காலம் போய்.. கடன்களை வாங்கி பொழப்பை நடத்த ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்கிறான் விவசாயி.. உலகிற்கே சோறு போட்டவனின் வீட்டில் இன்று சோறு இல்லை.. உலகிற்கே பசி போக்கியவன் இன்று பசியால் வாடுகிறான்.. அவனது தலைவிதியை மாற்ற வாக்கு கொடுத்தவர்கள், தன் தலைவிதியை மட்டுமே மாற்றும் ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள்.. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் வயலில் செல்வம் விளையும்.. வீட்டில் பொன்னும் பொருளும் கொட்டிக்கிடக்கும்.. என்ன செய்வீர்களா.. என்னை தேர்ந்தெடுப்பீர்களா…?”, என உணர்ச்சி பொங்க நடித்தான்… அரசியல்வாதி வேடத்தில் ஹீரோ லிங்கேஸ்..
சூட்டிங் ஸ்பாட்டில் கைத்தட்டு காதைப் பிளந்தது.. டைரக்டர் இத்தகைய உணர்ச்சிகரமான நடிப்பைப் பார்த்து கண்கலங்கி, லிங்கேஸை கட்டிப்பிடித்துக்கொண்டார்… லிங்கேஸ் வழக்கம் போல, நடித்து முடித்ததும் வேடம் களைந்துவிட்டு கேரவனுக்குள் வந்தான் ரெஸ்ட் எடுக்க… காலையில் சூட்டிங்குக்கு வெகு சீக்கிரமாக வந்துவிட்டான்.. ஆதலால் ஏசிக்குள் அமர்ந்ததும் தானாக கண்ணயறத் தூங்கிப்போனான்..
அது ஒரு கோடை காலம்.. மழையைப் பார்த்து பல நாட்களாகவே.. வறண்டு பாலையாய் காட்சியளித்தது வயக்காடு.. சுந்தரம்.. வழக்கம் போல சோக முகத்துடன் இறுக்கமாக காட்சியளித்தார்.. பல நாட்களாக விவசாயத்தால் எந்த வருமானமும் இல்லை.. கடன் வேறு கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தது..
வீட்டில் மனைவியும், பிள்ளைகளும் படும் பாட்டைப் பார்த்து, பக்கத்து கிராமத்திலிருந்த மலைக்கு, கடந்த ஆறு மாதங்களாகவே கல் உடைக்கச் சென்று வருகிறார்.. கையில் பல இடங்களில் பெரிதும், சிறிதுமாய் தழும்புகள்.. எப்படியோ பொழப்பு ஓடிக் கொண்டிருந்தது.
அப்படியாகப்பட்ட ஒரு மோசமான நாளில்… வெயிலில்.. காலையிலிருந்தே…. கல் உடைத்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.. அப்போது அருகில் பாறையை உடைப்பதற்காக வைக்கப் பட்ட வெடி வெடித்து, தெறித்த கூர்மையான கல்லொன்று அவரது தலையை நன்றாகப் பதம் பார்த்தது… அலறிக்கொண்டு விழுந்தவரை… பட்டணம் சென்று மருத்துவமனையில் சேர்க்கத்தான் முடிந்தது.. காப்பாற்ற முடியவில்லை.. கதறித்துடித்தாள் சுந்தரத்தின் மனைவி வாசுகி..
நான் காப்பாற்றுகிறேன் நம் குடும்பத்தை என்று கூறிய.. சுந்தரத்தின் மகன்.. தட்டுத்தடுமாறி பள்ளிப்படிப்பை முடித்திருந்தான்.. ஆனால் ஆள் பார்க்க கட்டுமஸ்தானவனாக காணப்பட்டான்.. இரண்டு தங்கை, அம்மாவை நான் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி வந்தவன் தான்.. இதோ இன்றோடு பத்து வருடம் ஆகிவிட்டது.. இதுவரை அந்த ஊர் பக்கமே திரும்பி பார்க்கவில்லை…
சட்டென கண்கள் கலங்க விழித்தான் லிங்கேஸ்.. விவசாயி அப்பாவும், அழுது நின்ற அம்மாவும், கண்கள் சிவந்த தங்கைகளும் அவன் கண் முன்னே வந்து போயினர்.. அன்று பட்டணம் ஓடி வந்தவன்.. ஆரம்பத்தில் மிகக்கஷ்டப்பட்டான்.. ஆனால் சினிமாவில் சண்டையில் அடியாளாகச் சேர்ந்தவன்.. சிறிது சிறிதாக முன்னேறி இன்று ஹீரோ அளவுக்கு வந்துவிட்டான்.. இதில் ஒரு முறை கூட ஊரைப்பற்றியோ, உறவுகளைப் பற்றியோ அவன் இன்று வரை நினைக்காததுதான் ஆச்சரியமே.. ஆனால் இன்று அரசியல்வாதியாய், அவன் பேசிய வசனங்களும், அதன் பின் தோன்றிய உணர்ச்சிமயமான நினைவுகளும்.. அவனை அப்போதே அந்த நொடியே.. அவனது கிராமத்தை நோக்கி கிளப்பிக்கொண்டிருந்தது..
நாளை நிச்சயம்.. அவனுக்காய் காத்திருக்கும்… அந்த மூவருடைய வாழ்வில் ஒரு விடிவுகாலம் பிறக்கப்போகிறது என்றால் ஆச்சரியமில்லை..
– 2018 ஆகஸ்டு “அச்சாரம்” இதழில் வெளியான கதை