விடிவதற்குள் முடிவு வேண்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 5,634 
 

வானம் குமுறிக் கொண்டிருந்தது…… ஜானகியின் மனசைப் போல…. இந்தப் பதினாறு நாட்களாக அழுது அழுது அவள் முகம் வீங்கிப் போயிருந்தது. ஆனால் கண்கள், இன்னும் வற்றி விடவில்லை. ஒரு காலத்தில் வேல்விழி, மீன்விழி, மான்விழி என்றெல்லாம் அவன் கணவனால் வர்ணிக்கப்பட்ட அந்தக் கண்களிலிருந்து புது மரத்தில் கீறல் விழுந்ததும் பிதுங்கிக்கொண்டு வரும் பாலைப் போல வெதுவெதுப்பான நீர் சுரந்தவண்ணமாக இருந்தது.

வீட்டுக்கு முன்பாக தற்காலிகமாக சீனன் போட்டுவிட்டுப் போன தகரக் கூரையின் கீழாக உற்றத்தார் சுற்றத்தார் என்று பலரும் கூடியிருந்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலிகள் ஒரு சீராக இல்லை. அவர்களின் எண்ணங்களைப் போல தாறுமாறாக இருந்தன.

சிலர் வட்டமான மேசையிட்டு ஆறு ஆறு பேராகத் துருப்புச்சீட்டுப் போட்டுக் கொண்டிருந்தனர். உலகமென்னும் வட்ட மேசையில் இறைவன் மனிதர்களைத் துருப்புச் சீட்டாகப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்தே விட்டவர்கள் போல் அவர்களுக்கு அதிலே சுவாரஸ்யம்!

சில பெரியவர்கள் வெற்றிலையைப் போட்டுக் குதப்பிக் கொண்டு ஜெயராமனைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களின் நடுவாக, நட்டுவைக்கப்பட்ட ஒரு கல்லின் அருகில் பலகாரப் படையலும் பூ மனமும் சூழ்ந்த இடத்தில் ஜானகியின் கணவன் ஜெயராமன் விற்றிருந்தார். உயிரோடு அல்ல படமாக!

ஜெயராமன் தெய்வமாகிவிட்டார். இன்றோடு பதினாறு நாட்கள் ஓடிவிட்டன. எப்படிப்பட்ட தவறு செய்தவனாக இருக்கட்டும் செத்த பிறகு உடனே அவன் தெய்வ ஸ்தானத்திற்கு உயர்ந்து விடுகிறானே!

ஜெயராமனின் படத்தையே கூர்ந்து பார்த்து விம்மினாள் ஜானகி. அவரோடு வாழ்ந்த காலத்தில் உண்டான அனுபவங்கள், இடையிலே ஏற்பட்ட கசப்புக்கள், திடீரென்று உண்டான திருப்பங்கள் யாவும் திரும்பத் திரும்ப அவள் நினைவுக் குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்தன.

ஜானகிக்கு ஐம்பத்திரண்டு வயது. ஆனால் இந்தப் பதினாறு நாட்களுக்கு முன்பு அவளைப் பார்த்த எவரும் நாற்பது வயதுக்கு மேல் நிச்சயம் மதிக்க மாட்டர்கள்.

அப்படி ஓர் உடற்கட்டு அவளுக்கு. ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான பின்னரும்கூட அவளுடைய மேனிச் செறிவைக் கலைக்க முடியாமல் இயற்கை அவளிடம் களைத்துப் போயிருந்தது. ஆனால், அந்த இயற்கை இப்போது கர்வம் கொண்டிருந்தது. ஆம். ஜானகி இந்த பதினாறு நாட்களில் மிகவும் நொய்த்துப் போயிருந்தாள். எவ்வளவு பெரிய காற்றாக இருந்தாலும் தாக்குப் பிடித்து நடமாடிக் கொண்டிருக்கும் விளக்குச் சுடர் எண்ணெய் தீர்ந்ததும் தானாகவே அடங்கிவிடுவதில்லையா!

கையில் தேங்காய் எண்ணெயுடன் அங்கே நுழைந்த விமலா, அங்கிருந்த விளக்கிற்குத்தாராளமாக எண்ணெய் ஊற்றினாள். அவள்தான் ஜானகியின் மூத்த பெண். அவளுக்கும் கண்கள் சிவந்து போயிருந்தன. விளக்கில் எண்ணெய் ஊற்றும் போது அந்தச் சிவந்த விழிகள் ஒரு சில கணங்கள் தாயின் முகத்தின் மேல் படிந்து திரும்பின. அம்மாவைப் பார்க்க அவள் விழி மடைகள் மேலும் திறந்தன. விளக்கில் ஊற்றிய எண்ணெயோடு அவள் விழி நீரும் விழுந்து கலந்தது.

விமலாவுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகளாகின்றன. இரண்டு விசுக்கட்டான் குழந்தைகளையும் அவள் கணவன் ராகவன் வெளியில் வைத்துக் கொண்டிருந்தான்.

எண்ணெய் ஊற்றிவிட்டுத் திரும்பிய விமலாவை நிமிர்ந்து பார்த்த ஜானகி துக்கத்தை அடக்க முடியாமல் அவளைக் கட்டிக் கொண்டு “ஓ” வென்று அழுதாள். அந்தக் காட்சியைக் காணப் பொறுக்காமல் அங்கிருந்த பெண்கள் அனைவரும் அழுதனர்.

வெளியில் வெற்றிலை குதப்பிக் கொண்டிருந்த சில கிழடுகள் கண்களில் மல்கிய நீரை ஆள்காட்டி விரலால் வழித்துச் சுண்டியும், கட்டை விரலால் தேய்த்தும் விட்டுக் கொண்டன. தன்னுடைய இறப்புக்காக அழ முடியாத மனிதப் பிறவி, பிறருக்காகவாவது ஒரு சொட்டுக் கண்ணீர் விடவேண்டாமா?

“யாராவது அழுகையை அடக்குங்க” என்று வெளியிலிருந்து ஒருவர் குரல் கொடுத்தார். கூடத்திலிருந்த பெண்கள் சிலர் அந்த முயற்சியில் இறங்கினர். சற்று நேரத்தில்அமைதி நிலவியது.

கொஞ்ச நேரம் அரற்றி அழுததால் சற்றே கலைந்த ஜானகியின் அலங்காரத்தை மீண்டும் சரி செய்வதில் இரண்டொரு பெண்கள் முனைந்தனர்.

தலை நிறைய பூவும், நெற்றி கொள்ளாத குங்குமத் திலகமும், கழுத்து நிறைந்த நகைகளும், இரு கை தொய்ந்து விழும்படியாக வளையலுமாக ஜானகி சர்வஅலங்கார பூஜிதையாக அமர்த்தி வைக்கப்பட்டிருந்தாள்….

கணவனை இழந்த கைம்ப்பெண்ணை இப்படி அலங்காரம் செய்து வைத்து பதினாறாம் நாள் கிரியையின் போது ஆவேசம் வந்தவர்களைப் போல் அவளுடைய அணிகலன்களை ஒவ்வொன்றாகப் பறித்து சுமங்கலியைப் பலபேர் நடுவே அமங்கலியாக்கிப் பார்க்கும் அந்த நமது மரபு வரிசை இன்று ஜானகிக்கும் நடக்கப் போகிறதோ! அதற்காக அவளுக்கு இத்தனை அலங்காரமோ!

ஜானகி மூக்கும் முழியுமாக ஒரு கணம் நிதானித்துப் பார்க்கும் அழகியாக அந்த லாயர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த போது ஜெயராமன் அங்கே டிரைவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

யாருமில்லாத அனாதையாக இனிமேலும் சொந்தக்காரர்களுக்குப் பாரமாக இருக்க வேண்டாம் என்ற முடிவோடு ஜானகி அங்கே வேலைக்கு வந்த சமயம் வாலிப முறுக்கோடு இருந்த ஜெயராமன் சும்மா அவளைச் சீண்டவும் அது அவளுக்கு ஒத்துப் போகவும் வெகு சீக்கிரம் அவர்களுக்குத் திருமணம் நடந்தது! அதைவிட வெகு சீக்கிரம் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன.

விமலாவை அடுத்தடுத்து கோகிலாவும் யசோதாவுமாக இரண்டு பெண்கள். மூன்று பெண்ணாக பிறந்துவிட்ட ஏமாற்றமோ அல்லது டிரைவர் வேலை என்றாலே ஓரிடத்தில் நிலையாக இருக்க முடியாது; ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும் என்ற சித்தாந்தமோ தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் ஜெயராமன் காணாமற் போய்விட்டார்.

அப்போது கடைசிப் பெண் யசோதாவுக்கு ஒரு வயதுதான் ஆகியிருந்தது. ஜானகி, சிறகில் அடிபட்ட பறவைபோல் தவித்தாள். எங்கெல்லாமோ ஓடினாள்… யார் யாரிடமோ விசாரித்தாள்… விசாரிக்கச் சொன்னாள்…. ஆனால், ஜெயராமனின் மறைவு, மெய்வழிச்சாலை சாமியாரின் மறைவு மாதிரி மர்மமாகவே போய்விட்டது.

மூன்று பிள்ளைகளையும் தெரிந்தவர்கள் வீட்டில் விட்டு வேலைக்குப் போவதும், மாலையில் பிள்ளைகளை வீட்டுக்கு இட்டு வந்து சோற்றுக் கஞ்சி ஊற்றுவதுமாக இரண்டு வருடங்களை ஒட்டினாய் ஜானகி.

அந்தச் சிரமமான நேரத்தில்தான், அவளுடைய வாழ்க்கையில் சுந்தரம் வந்து கலந்துகொண்டான். கட்டையில் செய்து கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்ட கனிகள் வேண்டுமானால் அப்படியே இருக்கலாம். செடியில், கொடியில், மரத்தில் இருக்கும் கனிகளால் அப்படியே இருந்துவிட முடியுமா? நொந்து போன ஜானகிக்குச் சுந்தரத்தின் துணை அப்போது இதமாகவும் இன்றியமையாததாகவும் இருந்தது.

சுந்தரமும் அவளிடம் ஒரு பண்புள்ள மனிதனாகவும் பொறுப்புள்ள கணவனாகவும், கடமையுள்ள தந்தையாகவுமே நடந்து கொண்டான். அவனுக்குப் பிறந்த இரண்டும் ஆண் பிள்ளைகள். ஆனால், ஒரு நாள் கூட அவன் தனக்கு இரண்டு பிள்ளைகள் தாம் என்று எண்ணியதே இல்லை. ஏதோ ஒரு விடுபட்ட தொடர்பு மீண்டும் ஒட்டிக் கொண்டதைப் போல் அவர்களுடைய வாழ்க்கை நடந்தது.

என்றாவது ஒரு நாள் ஜெயராமன் வருவானோ என்ற உறுத்தல் ஜானகிக்கு இருந்ததுண்டு. ஆனால் அந்த உறுத்தலே மக்கிப் போகும் அளவுக்குக் காலம் ஜெயராமன் என்ற நினைவையே தேய்த்துவிட்டிருந்தது.

மூத்தவள் விமலா, அடுத்தவள் கோகிலா. இருவரின் திருமணத்தையும் எந்தக் குறையுமில்லாமல் சுந்தரமே செய்து வைத்தான். அடுத்து இருபத்திரண்டு வயதை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் யசோதாவுக்கும் அவன் நிச்சயம் நல்லது செய்து வைக்கத்தான் போகிறான்.

சுந்திரத்திடம் இருக்கும் இந்த நல்ல குணத்தை அவன் தன்னிடம் வந்து சேர்ந்த சில மாதங்களிலேயே தெரிந்துகொண்டுதானோ என்னவோ ஜானகி அன்றொரு நாள் அவனிடம் அப்படிச் செய்யச் சொன்னாள்!

“இந்தாங்க, தன் கையால் கட்டின தாலிக்கு எந்த அர்த்தமும் இல்லாமப் பண்ணிட்டு அவரு போயிட்டாரு. அந்தத் தாலியை நானும் எந்த அர்த்தமும் இல்லாமப் போட்டுக்கிட்டிருக்கேன். இப்பவே இதைக் கழற்றி உங்க கையில தர்றேன். இந்த சாமி படத்துக்கு முன்னாடி நீங்களே இதை எனக்கு மாட்டிவிடுங்க” என்று சொல்லி உடனே அந்தத் தாலியைக் கழற்றவும் போன ஜானகியை சுந்தரம் தடுத்துவிட்டான்.

“ஜானகி புருசன் உயிரோட இருக்கானா இல்லையான்னு தெரிஞ்சுக்காம ஒரு பொண்ணு தன்னுடைய தாலியைக் கழட்டுறது ரொம்பப் பாவம், அதனால என்ன, தாலியைக் கழற்ற வேணாம். நீ இதுல இருக்கிற முடிச்சை என்கிட்ட காட்டு, அதை அவிழ்த்துவிட்டு புதுசா நானே மூணு முடிச்சு போட்டுடுறேன்”. என்று மூன்று முடிச்சையும் அவிழ்த்துப் போட்டுவிட்டான் சுந்தரம்.

இது நடந்து எத்தனையோ ஆண்டுகள்…. யசோதாவுக்கு மூன்று வயதாக இருக்கும் போது நடந்தது இது. அதே யாசோதாவுக்கு இருபத்தொரு வயதாகும்போதும் ஒன்று நடந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. சுந்தரம் வீட்டில் இருந்தான். கதவைத் தட்டியது யாரென்று பார்க்க ஜானகி கதவைத் திறந்த போது அறுபது வயதை எட்டிப்பிடித்தபடி ஒரு கையால் வாசல் தூனைப் பிடித்தபடி நின்ற அந்த உருவத்தைப் பார்த்து ஜானகி கையும் ஓடாமல் காலும் ஓடாமல் கண் பிதுங்கிப் பேதலித்து நின்றபோது நிலைமையை உணர்ந்து கொண்ட சுந்தரம் “வாங்கண்ணே” என்று முகமலர்ச்சியோடு சொல்லியும் அதைத் தாங்கிக்கொள்ளத் திராணியில்லாமல் அந்த வீட்டு அஞ்சடியிலேயே படுத்தவர்தான் ஜெயராமன்.

அதன் பிறகு அங்கே அவர் இருந்த ஒரு வாரத்தில் இல்லறத்தில் ஏற்பட்ட விரக்தியால் ஓடிப்போனதாகவும், தங்கா மலையில் ஒரு சாமியாரிடம் அடைக்கலமாக இருந்ததாகவும் திடீரென்று குடும்பத்தின்பால் நினைவு வந்ததாகவும் அதனால் ஓடி வந்ததாகவும் புலம்பிக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலி வலி என்று கத்த, சுந்தரமும் ஜானகியும் பிள்ளைகளுமாக அவரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால் போகும் வழியிலேயே உயிர் போய்விட்டது. அப்போதே ஜெயராமன் தெய்வமாகிவிட்டார். இன்று பதினாறாம் நாள் கருமக்கிரியை செய்வதற்கு உற்றத்தாரும் சுற்றத்தாரும் வந்திருக்கிறார்கள். சற்று முன்புவரை இவர்களுக்குள் ஒரு பெரிய பிரச்சனை. விவாதித்துத் தீர்ப்புக்காண முடியாத பிரச்சனை.

ஜானகியின் கணவன் ஜெயராமன் இறந்துவிட்டான். அதனால் ஜானகி தாலி அறுத்துத்தான் ஆகவேண்டும்! இப்படிச் சொன்னவர்கள் ஜெயராமனின் சொந்தக்காரர்கள்.

“இத்தனை வருசமா உண்மையான கணவனா இருந்து, கஞ்சி தண்ணி ஊத்தி காப்பாத்துற சுந்தரம் உயிரோடதானே இருக்கான்! ஜானகி ஏன் தாலி அறுக்கணும்?” இப்படிக் கேட்டவர்கள் சுந்தரத்தின் சொந்தக்காரர்கள்.

ஜானகி ஜெயராமனின் படத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள்! சுந்தரம் வந்திருந்தவர்களுக்குத் தேநீர் கொடுத்துக் கொண்டிருந்தான். விடிவதற்குள் முடிவு தெரிய வேண்டுமே! யார் முடிவு சொல்வது?

நன்றி: நவமலர்கள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *