தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 7,900 
 

அன்வர் கண் விழித்த போது தஹஜ்ஜத் தொழுவதற்குரிய நேரமாகியிருந்தது. எழுந்து வுளுச்செய்து தொழுதுவிட்டது அல்லாஹ்விடம் இருகைகளையும் ஏந்தியவனாக

“யா அல்லாஹ், எனக்கு ஏன் இவ்வளவு சோதனைகள். என் நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைத்ததில்லை. அதற்கு மாற்றமாக நன்மைகள்தான் செய்துள்ளேன் என்பதை நீ நன்கு அறிந்தவன். உன் படைப்புக்களில் யாருக்கும் தொடர்ந்து சோதனைகளைக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டாய். எனக்கும் விடியலை ஏற்படுத்தித்தா அல்லாஹ்” என்று கண்ணீர் மல்க பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.

அன்வர் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்தவன். அந்த ஊரில் ஒரு பிரசித்தமான செல்வந்தரின் மகன். நல்ல பண்புகளுடன் வளர்க்கப்பட்டவன். மார்க்க பக்தி மிக்கவன்.

தகப்பனாரின் “பிஸ்னசில்” அவருக்கு உதவி செய்வதற்காகவே படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு அவருடன் சேர்ந்துகொண்டு அவரின் வர்த்தக நிறுவனத்தில் பொறுப்புக்களை மேற்கொண்டு வந்தான். அவனுக்கு கூடப் பிறந்தது ஒரு தம்பியும் ஒரு தங்கையும் தான். தங்கை ஏற்கனவே ஒரு வர்த்தக நிலைய அதிபருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தாள்.

தான் வாப்பாவுக்கு உதவிக்காக படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டதுபோல் தம்பியும் படிப்பை நிறுத்தி விடக்கூடாது அவன் படிக்க வேண்டும் உயர்ந்த ஸ்தானத்திற்கு அவன் வரவேண்டும் என்பதில் அன்வர் பிடிவாதமாக இருந்தான். அதன் காரணமாக தம்பி ஒரு சட்டத்தரணியாக வாழ்க்கையில் உயர்ந்து நின்றான். இப்படி இருக்கும் போது ஒருநாள் வாப்பா அன்வரை அழைத்துச் சொன்னார்.

அன்வர், உனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு வந்திருக்கிறது. இப்போது பல இடங்களிலிருந்தும் உனக்கு திருமணப் பேச்சுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் நல்ல சீதனத்தில் இரண்டு மூன்று இடங்கள் இருக்கின்றன. உனக்கு எந்த இடம் பிடித்திருக்கின்றது என்று சொல்லு பார்ப்பம் எனக் கூறி பல இடங்களைச் சொன்னார்.

அவை எல்லாம் பெரிய இடத்துச் சம்பந்தங்கள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அன்வர், இப்போது எனக்குத் திருமணம் வேண்டாம். என்று உடனே மறுப்புச் சொல்ல அவரும் விட்டபாடில்லாமல் தொடர்ந்தார்.

என்ன காரணத்திற்காக வேண்டாம் என்கின்றாய். இப்படியே சொல்லிக்கொண்டு போனால் அர்த்தமென்ன? என்று கேட்டார். இப்போது நான் இருக்கும் நிலையில் என்னால் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள முடியாது வாப்பா, இன்னும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. எனக்கென்று பொருளாதாரத்தை நான் தேடிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அதைப்பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே நான் உழைத்து வைத்திருப்பதெல்லாம் உங்கள் மூன்று பேருக்கும்தானே.

உன் தம்பிக்கு “ஸ்கொலசிப்” கிடைத்திருப்பது உனக்கும் தெரியும், அவன் போனால் வருவதற்கு இரண்டு வருடங்கள் செல்லும், அதனால் அவனுக்கும் ஒரு திருமணத்தைச் செய்து விட வேண்டுமென்று நானும் உன் உம்மாவும் தீர்மானித்திருக்கின்றோம். அதற்காகத்தான் உன்னை அவசரப் படுத்துகின்றோம். தம்பி முந்தி முடிக்கிறதில எனக்கு ஒரு பிரச்சினையுமில்ல. முதல்ல அவனுக்குத் திருமணத்தைச் செய்து வைப்போம். அதில் எனக்கும் பூரண சம்மதம்.

நீ மூத்த சகோதரன் இருக்கும் போது அது எப்படிச் சாத்தியமாகும்.

நீங்கள் என்ன சொன்னாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது வாப்பா, முதலில் தம்பிக்குத்தான் திருமணம். ஊரில் இருக்கும் என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன்.

இரண்டு பேருக்கும் குறுகிய காலத்திற்குள் திருமணத்தை செய்து வைப்பதும் கஷ்டமான காரியம்தான் என்று யோசித்த அவர் அவன் சொன்னதை ஏற்றுக்கொண்டார்.

இப்போது தனக்குத் திருமணம் வேண்டாமென்று அன்வர் சும்மா சொல்லவில்லை. அவனுக்கும் ஓர் ஆசை இருந்தது. சீதனம் ஒரு சதமும் வாங்காமல் திருமணம்செய்ய வேண்டும் என்று. அதற்காகவென்றே அவனுள்ளத்தில் ஒரு ஏழைப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். ஆனால் அவன் பெற்றோர் அதற்கு ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். அதனால் அந்த விடயத்தை இப்போது சொல்லி அவர்களைக் குழப்பிவிடக் கூடாது என்றும் அவன் எதிர்பார்த்தான்.

பின்னர் தம்பியை அழைத்துத் திருமணம் செய்து கொள்ளுமாறு சொல்லப்பட்டது. அதற்கு அவன், அண்ணன் இருக்கும்போது எனக்கெதற்கு இப்போது. முதலில் அன்வருக்கு முடியட்டும் என்றான்.

நீ வெளிநாடு போகப்போகிறவன் அதனால் நீ முதலில் திருமணத்தைச் செய்து கொண்டுபோவதுதான் நல்லது. அன்வரை பின்னர் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று வாப்பா அவனிடம் கூறியதும் அவன் அதனை ஏற்றுக் கொண்டான். அத்தோடு ஒரு நிபந்தனையையும் விதித்தான்.

அதாவது என்னோடு சட்டக் கல்லூரியில் ஒன்றாகக் கல்வி பயின்ற ஒரு பெண்ணை நான் விரும்புகின்றேன். அவளைத் திருமணம் செய்து வைப்பதாக இருந்தால் நான் அதற்குச் சம்மதிக்கின்றேன் என்றான்.

அவனது பேச்சை அவர்களால் நம்ப முடியவில்லை. ஆனால் அதில் அவன் உறுதியாக நின்றான். வேறு வழியின்றி அவனுக்கு அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது தான் அவன் யோசித்தான், இந்த விடயத்தில் தம்பிக்கு இருக்கும் தைரியம் எனக்கு இல்லாமல் போய்விட்டதே என்று. ஆனால் தம்பியின் நிலைமை வேறு என் நிலைமை வேறு என்பது பின்னர்தான் அவனுக்குப் புரிந்தது.

தந்தை தனது கணிசமான சொத்தில் பெரும் பகுதியை தங்கைக்கு சீதனமாகக் கொடுத்திருந்தார். மிகுதிச் சொத்தை இரண்டாகப் பிரித்து அதில் ஒருபகுதி தம்பிக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது. மிகுதி அன்வருக்கு என்று இருந்தது. ஆனால் அவை அவனுக்கு எழுதிக் கொடுக்கப்படவில்லை. தந்தையும் மகனுமாக அதனை நிருவகித்துக் கொண்டு வந்தனர்.

இந்த நேரத்தில் பல இடங்களிலிருந்தும் அன்வருக்கு திருமணப் பேச்சு வந்து கொண்டிருந்தது. அவனது தந்தையும் தாயுமாக வந்த சம்பந்தங்களிலிருந்து சொத்துக்களின் மதிப்பைத்தான் எடை போட்டுக் கொண்டிருந்தார்களே தவிர, நீ யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகின்றாய் என்று சும்மாதானும் கேட்கவில்லை. ஆரம்பத்தில் தம்பியின் கல்யாண அவசரத்திற்காக கேட்டதோடு அவனிடம் அதுபற்றிக் கேட்பதை நிறுத்திக் கொண்டார்கள்.

இதற்கிடையில் அவன் விரும்பியிருந்த பெண் சாலிஹா மிகவும் அழானவள். படித்தவள். மார்க்க பக்தி மிக்கவள். வறுமைப் பிடியிலே அன்றும் வாழ்ந்தவள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவள். அவளையே மனைவியாக அடையவேண்டும் என்பதுடன் ஓர் ஏழைக்கு வாழ்வளிக்க வேண்டும் என்பதுதான் அன்வரின் ஆசை, அதனால் யாரைக் கல்யாணம் பேசினாலும் சாலிஹாவின் அழகிய அப்பாவித்தமான முகம்தான் அவன் நினைவில் வந்து நிற்கும்.

அவள் சின்ன வயதாய் இருந்த போதே அவளது வாப்பா காலமாகி விட்டார். உம்மாவும் தங்கையுமாக அந்த வீட்டில் மூன்றுபேர் வாழ்ந்து வந்தார்கள். தாயார் மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில்தான் அந்த இருபெண் பிள்ளைகளையும் வளர்த்து வந்தார். பாய், பெட்டி இழைத்து விற்று அவர்கள் தங்களது சீவியத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்கள்.

இப்படிக் கஷ்டத்தில் வாழும் ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகின்றேன் என்றால் வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்களா என்பதுதான் அவனது பிரச்சினை.

இப்போது வரண் பார்க்கும் படலம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது இனிமேலும் தாமதிக்க முடியாது என்பதை அறிந்து கொண்ட அன்வர் தாயாரிடம் தன் முடிவை எடுத்துச் சொன்னான். அவ்வளவுதான் வீட்டில் பெரிய ரகளையே நடந்தது. தாயாரின் குரல் உயர்ந்தது.

எங்கட குடும்பத்துக்கும் அவள்ட குடும்பத்துக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. அப்படி இருக்கும் போது நீ ஒன்றுமில்லாத அவளப் போய் முடிக்கப் போகிறேன் என்கிறாயே உனக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது. இல்லாம்மா, சீதனம் வாங்காது முடிக்க வேண்டும் என்பது என் ஆசை.

நான் உயிரோடு இருக்கும் வரை நீ அவளை எப்படித் திருமணம் செய்யப் போகின்றாய் என்று பார்ப்போம். ஒரு நாளும் அந்தப் பிச்சைக்கார வீட்டுக்கு உன்னை நாங்கள் அனுப்பமாட்டோம் என்பதை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள்.

இந்த முடிவு அவன் எதிர் பார்த்ததுதான். அதனால்தான் இந்த விடயத்தைச் சொல்லாது மறைத்து வந்தான்.

அன்வரின் முடிவில் எந்த வித மாற்றத்தையும் காணாத அவர்கள் அவனை அணுகி நல்ல விதமாக எவ்வளவோ புத்திமதிகளைச் சொல்லிப் பார்த்துவிட்டார்கள். ஆனால் அவன் அவனது முடிவில் உறுதியாக இருந்தான். இதனால் ஆத்திரமடைந்த வாப்பா எங்கள் சொற்படி நீ கேட்காவிட்டால் சொத்திலிருந்து ஒரு சதமும் உனக்குத் தரமாட்டேன் நீ விரும்பியவளைத் திருமணம் செய்துகொண்டு போ என்று கூறிவிட்டார்.

இந்த வார்த்தைகளால் மிகவும் மனவருத்தமடைந்தான் அன்வர். அவனுக்கு சொத்துப் பெரிதில்லை ஆனால் தாய் தந்தையரைப் பகைத்துக் கொண்டு ஒருநாளும் இருக்க முடியாதவன் அவன். அவர்களின் அன்பையே பெரிதென்று நினைப்பவன். வாப்பாவுக்கு உதவி செய்யவேண்டும் என்பதற்காகவே படிப்பையும் இடையில் விட்டுவிட்டு வாப்பாவுடன் சேர்ந்து தொழில் முயற்சியில் இறங்கியவன்.

தற்போது உள்ள சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போனான். இதனிடையே சாலிஹாவின் உம்மாவின் விடாமுயற்சியினால் அவர்கள் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை வைத்து அவர்கள் வாழ்ந்து வந்த களிமண் வீட்டுக்குப் பக்கத்தில் சிறிய வீடொன்றைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அது கதவு நிலை போடும் அவளவுக்குத்தான் உயர்ந்து நின்றது அதற்கு மேல் உயரமுடியவில்லை நாளாந்த உணவுக்கே அவர்கள் கஷ்டப்படும்போது வீடு கட்டுவதென்றால் அவர்கள் எங்கே போவார்கள்.

அன்வரின் முயற்சியினாலும், அவனது இரக்க குணத்தின் காரணமாகவும், அவன் சாலிஹாவைத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்று நினைத்ததன் காரணமாகவும், அவனே கல், மண், சீமெந்து என்றும் மேசன், ஓடாவி கூலி என்றும் தன் வீட்டுக்குத் தெரியாமல் சாலிஹாவின் வீட்டுக்கு அனுப்பி வீட்டை ஒருவாறு கட்டி முடித்தான்.

அவன் அந்தப் பணத்தை அனுப்பும் போதெல்லாம் நான் உழைத்த பணம் எனது வீட்டைக் கட்டுவதற்காகத்தானே அனுப்புகின்றேன் என்ற நம்பிக்கையில் தான் அப்படிச் செய்து கொண்டிருந்தான்.

இந்த விடயம் அவனது பெற்றோருக்குத் தெரிய வரவே, இவ்வளவு செய்தவன் இனியும் தனது நிலையிலிருந்து மாறமாட்டான். இப்படியே வைத்திருந்தால் கடையில் இருக்கிற பணத்தையெல்லாம் சாலிஹாவின் வீட்டுக்கே அனுப்பி விடுவான் என்ற எண்ணம் மேலோங்க, நீ இனிமேல் கடைக்கு வரவேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் வாப்பா.

இவர்கள் எவ்வளவு பொல்லாத மனிதர்கள், ஏழை என்றால் ஒரு நீதி, பணக்காரன் என்றால் ஒரு நீதி, தம்பி விரும்புகிறேன் என்றபோது பேசாமல் முடித்துக் கொடுத்தவர்கள் நான் முடிக்கப்போகின்றேன் என்றபோது தடைவிதிக்கின்றார்கள். காரணம் அவள் ஏழை. வெளியிலே பெரிய மனிதர்களாக உலாவுகிறார்கள். ஹஜ்ஜுக்கு மேல் ஹஜ்ஜும் செய்கின்றார்கள். ஏழை பணக்காரன் என்ற மமதை இன்னும் நீங்கவில்லை.

தகப்பனார் கடையிலிருந்து விலக்கிவிட்டவுடன் வீட்டிலும் பிரச்சினை பூதாகரமாக வெடித்து நின்றது. அவனால் வீட்டிலும் இருக்க முடியவில்லை. வெளியிலும் தலை காட்ட முடியவில்லை. காண்பவர்களெல்லாம் என்ன கடையில காணவில்லை என்று விசாரித்துக் கொண்டேயிருந்தார்கள். அத னால் அவன் ஒரு தர்மசங்கடமான நிலைமைக்குள்ளானான். ஆம் அவனுக்குத் திருமணம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. நண்பர்களிடம் ஆலோசனை கேட்டான் அவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டாருக்குத் தெரியாமல் நண்பர்கள் சிலரின் உதவியுடன் சாலிஹாவைத் திருமணம் செய்து கொண்டான்.

இதனைக் கேள்வியுற்ற பெற்றோர்கள் இனிமேல் இந்த வீட்டுக்கு நீ வரக்கூடாது என்று கூறிவிட்டனர். அத்தோடு நில்லாமல் அவனுக்கென்று இருந்த சொத்துக்களும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அவையும் தம்பிக்கும் தங்கைக்குமாக எழுதிக் கொடுக்கப்பட்டது.

அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பாடுபட்டவன் எதுவுமின்றி நின்றான். இருந்தாலும் அவன் வைத்திருந்த சிறிய கடைமாத்திரம் அவனுக்கு கொடுக்கப்பட்டது. அதற்குக் காரணம் சமூகம் அவர்களைத் தூற்றி விடக் கூடாது என்பதற்காகத்தான். அவர்களுக்கு இருக்கும் சொத்தில் அது ஒரு துரும்பு என்ற போதும் அவற்றை அவன் வாழவேண்டும் என்பதற்காக “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறி ஏற்றுக்கொண்டான்.

அந்தக் கடைமூலம் கிடைத்துக் கொண்டிருந்த சிறிய வருமானத்தைக் கொண்டு வீட்டின் மிகுதி வேலைகளையும் பூர்த்தி செய்தான். இந்த வேளையில் சாலிஹாவின் உம்மாவும் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். இப்போது சாலிஹாவின் தங்கை ஜெமிலாவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு ஏற்பட்டது.

இப்படி பெற்றோர்களின் தொடர்புகள் விடுபட்டுப் போன நிலையில் நாட்களும் நகர்ந்து கொண்டிருந்தது. ஜெமிலாவுக்கும் வயது ஏறிக் கொண்டிருக்க அன்வரினதும் சாலிஹாவினதும்

கவலையும் அதிகரித்து கொண்டிருந்தது. தற்போது அவள் அவர்களிடம் அமானமாக இருந்து கொண்டிருந்தாள். அவளை எப்படிக் கரைசேர்ப்பது அதற்கான வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை.

இந்த நேரத்தில் வெளிநாட்டில் நீண்ட நாட்கள் வேலைசெய்துவிட்டு ஒருவர் வந்திருப்பதாகவும் அவர் திருமணம் செய்துகொள்ளப் பெண் தேடுவதாகவும் அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. அன்வர் சென்று அவரைச் சந்தித்தான். தனக்கும் ஒரு மதினி இருக்கிறாள். அவளுக்கும் திருமணம் செய்ய வேண்டும். என்ற விடயத்தை பேச்சு வாக்கில் அவரிடம் கூறினான்.

அதற்கு அவர், முதலில் பெண்ணை என் சகோதரிகள் வந்து பார்க்கட்டும் அதன் பின்னர் மற்ற விடயங்களைப் பற்றிப் பேசிக் கொள்வோமே என்றார்.

இரு நாட்களின் பின்னர் மாப்பிள்ளையின் சகோதரிகள் வந்து பெண்ணைப் பார்த்தனர்.

அவர்கள் அங்கிருந்து போகும் போது, பெண்ணை எங்களுக்குப் பிடித்திருக்கிறது. எங்கள் தம்பி எதிர்பார்த்ததுபோல் பெண் மிக அழகாகவும் இருக்கின்றாள். நீங்கள் இருக்கும் இந்த நிலையில் உங்களிடம் சீதனமாக நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் தம்பியும் சீதனம் வாங்குவதை விரும்பவில்லை. ஆனால் அவர்கள் இருப்பதற்கு ஒரு வீடு மாத்திரம் தருவதாக இருந்தால் நாங்கள் இந்தத் திருமணத்தைச் செய்வோம். யோசித்து நல்ல முடிவாகச் சொல்லுங்கள். உங்கள் முடிவில்தான் இந்தக் கல்யாணம் தங்கியிருக்கிறது என்று கூறிச் சென்றனர்.

ஒரு வீடு கொடுப்பதென்றால் அவர்கள் எங்கே போவார்கள். ஆனால் இப்படி ஒரு மாப்பிள்ளை இனிமேல் வந்து சேருமா என்பதையும் எதிர்பார்க்க முடியாது. பெண்ணுக்கு வயதும் ஏறிக்கொண்டு போகின்றது என்று அன்றெல்லாம் சிந்தித்தும் அவர்களுக்கு தீர்வு எதுவும் தென்படவில்லை. ஈற்றில் தன் மனதில் பட்ட முடிவொன்றை மனைவியிடம் சொன்னான் அன்வர்.

சாலிஹா, நாம் இருக்கும் இந்த வீட்டை உன் தங்கைக்கு கொடுத்தால் என்ன?

என்ன சொல்கிறீர்கள்? ஆச்சரியத்தோடு கேட்டாள் சாலிஹா,

ஆமாம் சாலிஹா நான் யோசித்துத்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

இது நீங்கள் கஷ்டப்பட்டுக் கட்டியவீடு. இதைக் கொடுத்துவிட்டு நாம் எங்கே போய் இருப்பது. இது சாத்தியப்படுமா?

சாத்தியப்படும் நாங்கள் கொஞ்சம் தியாகம் செய்வோம். அவளை வாழ்விக்க வேறு வழி தெரியவில்லை. ஒரு குமர் காரியத்தை முதலில் நிறைவேற்றி வைப்போம். அதற்கு இங்கில்லா விட்டாலும் மறுமையில் அல்லாஹ் நல்ல கூலி தருவான். நாம் உங்கள் உம்மா இருந்த களிமண் வீட்டில் போய் இருப்போம்.

இந்த வார்த்தையால் உள்ளம் குளிர்ந்தாள் சாலிஹா. யா அல்லாஹ், எனக்கு எவ்வளவு அருமையான கணவனைத் தந்திருக்கின்றாய். என்று இறைவனைப் புகழ்ந்தவளாக, இந்தக் குணம் இந்தக் காலத்தில் யாருக்குத்தான் வரும் என்று அவனை வாழ்த்தி, சந்தோச மிகுதியால் அப்படியே செய்வோம் என்றாள்.

அதன் பிரகாரம் அந்த வீட்டை மதினிக்குக் கொடுத்து திருமணத்தை முடித்துவைத்தான் அன்வர். அவர்களின் தியாகத்தால் ஜெமிலாவுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தது. தன் சகோதரியினதும் மச்சானினதும் பெருந்தன்மை பற்றி ஜெமிலா அடிக்கடி நினைவுபடுத்தி பெருமிதமடைந்து கொள்வாள்.

உண்மைதான்,

இந்த நிலையில் ஒரு வசதியுள்ள வாலிபனான அன்வர் எவற்றையும் எதிர்பார்க்காது, தனது சொந்தங்களை, சொத்துக்களை விட்டு விட்டு வந்து ஏழைப் பெண் ஒருத்தியை திருமணம் செய்தது மாத்திரமல்லாது அவளது தங்கைக்கும் தான் வாழ்ந்த வீட்டைக்கொடுத்துத் திருமணம் செய்த விடயமானது உண்மையில் அவர்கள் மாத்திரமல்ல யாரும் எதிர்பார்க்காத பெருமைப்படக்கூடிய விடயம்தான்.

அந்தத் திருப்தியில் அவர்கள் சந்தோசமாக மிகவும் ஒற்றுமையோடு வாழ்ந்து கொண்டிருந்தபோது புதிய பிரச்சினையாக இப்போது சாலிஹாவின் பிரச்சினை உருவெடுத்துக் கொண்டு வந்தது, அவளுக்கு அடிக்கடி மயக்கம் ஏற்பட ஆரம்பித்தது.

நாட்டு வைத்தியங்களை, கைவைத்தியங்களையெல்லாம் செய்து பார்த்துவிட்ட நிலையில் எதுவும் சரிவராததால் அவளை அழைத்துச் சென்று ஒரு “ஸ்பெசலிஸ்ட் டாக்டரிடம்” காட்டினார்கள். அவர் பரிசோதித்து விட்டுச் சொன்ன வார்த்தை அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

ஆம், அவளுக்கு இருதய நோய் ஏற்பட்டிருக்கிறது. இருதய வால்வுகள் பழுதடையும் நிலைக்கு இப்போது வந்திருக்கின்றது. உடனே சத்திரசிகிச்சை மேற்கொள்ளாது விட்டால் அவளைக் காப்பாற்றுவதே கஷ்டமாகிவிடும் என்று அவர் கூறினார்.

திகைத்து நின்ற அவன். அதற்கு எவ்வளவு பணம் செலவாகும் சேர், என்று கேட்டான். ஆப்பரேசனுக்கு எப்படியும் பதினைந்து இலட்சமாவது தேவைப்படும் என்றார்.

அவன் இந்தத் தொகைப் பணத்திற்கு எங்க போவான். கொஞ்ச நஞ்சமா பதினைந்து இலட்சம். அல்லாஹ்விடம் கையேந்தி யா அல்லாஹ் எனக்கு ஒரு வழியைக் காட்டு என்று பிரார்த்திப்பதைத் தவிர அவனால் என்ன செய்ய முடியும்.

நீண்ட யோசனையின் பின்னர் வெட்கத்தைவிட்டு பெற்றோரிடம் சென்று உதவி கேட்டால் என்ன? என்று சிந்தித்தான். அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட அவனில் மேலோங்கி நின்றது. அத்தோடு அவர்களைக் கண்டு, கதைத்து எத்தனை வருடங்கள் கடந்து விட்டது. இப்போதாவது அவர்கள் மனம் மாறியிருக்க மாட்டார்களா? இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படிப் பிரிந்திருப்பது இனிமேலாவது அவர்களோடு உறவாக வேண்டாமா? என்று பலவாறு சிந்தித்தவன் தன் முடிவை மனைவியிடம் சொன்னான்.

அவள் அதற்கு உடன்படவில்லை, அவள் சொன்னாள், என் வருத்தத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீங்க, ஆண்டவன் எதை விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். இந்தத் தொகையை யாரும் கொடுக்க மாட்டார்கள். எனக்காக நீங்கள் அங்கு சென்று அவர்களிடம் கேட்டால் அவர்கள் என்ன சொல்வார்களோ, ஒருவேளை அவர்கள் உங்களை அவமானப்படுத்தி விட்டால், என்னால் தாங்க முடியாதுங்க அதனால் என்னை இப்படியே விட்டு விடுங்க.

இல்லை சாலிஹா அப்படி எதுவும் நடவாது இந்த நிலைமையை அவர்களுடன் உறவாகும் ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ளப்போகின்றேன் என்னைத் தடுக்காதே, ஒருவேளை அவர்கள் இல்லை என்று சொன்னாலும் பரவாயில்லை உனக்காக இந்த முயற்சியையாவது நான் செய்து பார்க்க வேண்டாமா? ஆனால் இறுதியாக இந்த சந்தர்ப்பத்தை அதற்காகப் பயன்படுத்திக் கொள்வோம், என்று கூறி அன்வர் மனைவியை கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு டாக்டரிடம், ஒப்பரேசனுக்கான ஒழுங்குகளைச் செய்யுங்கள் டாக்டர் நான் எப்படியோ இரண்டொரு தினங்களுக்குள் பணத்தைக் கொண்டு வந்து விடுகின்றேன் என்றான்.

அது பற்றிச் சிந்தித்த டாக்டர் அவளின் நிலைமையைக் கருதி, உடனே ஒப்பரேசனுக்கான முன் ஆயத்த ஒழுங்குகளை இப்போதே ஆரம்பிப்போம். காலம் தாழ்த்துவதும் அவ்வளவு உசிதமல்ல என்று கூறியவராக, இப்போதே ஆஸ்பத்திரியில் “அட்மிட்டாகுங்கள்” என்றார். அதன் படி அவள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள்.

துணைக்காக அவளது தங்கை ஜெமீலாவை அவளுடன் நிறுத்திவிட்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறிய அன்வர், இப்போது பெற்றோரையும் விட்டால் தனக்கு ஏது ஆதரவு என்று நினைத்துக்கொண்டு, நேராக, மிக அவசரமாக தான் பிறந்து வளர்ந்த வீட்டை நோக்கிச் சென்றான்.

அவன் நினைத்ததற்கு மாற்றமான சூழல் அங்கே காணப்பட்டது. அவனை ஏறிட்டும் பார்க்கவில்லை அவர்கள். உள்ளே வா, என்று கூடச் சொல்லவில்லை. இருந்தும் உள்ளே சென்று அமர்ந்த அவன், தனது மனைவியின் நிலைமையை எடுத்துச் சொல்லி அதற்காக உதவி செய்யுங்கள், சும்மா தர வேண்டாம் கடனாக பதினைந்து இலட்சம் ரூபாய் தாருங்கள் என்று கேட்டான்.

பதினைந்து இலட்சமா? அதற்கு எங்கே போவது என்றார் வாப்பா. இத்தனை காலமும் நாங்கள் வேணாம் என்று தானே நீ வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாய், பெண்டாட்டிக்கு ஒரு தேவை என்றதும்தான் எங்கள் நினைவு வந்திருக்கிறது. என்று சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவர்கள்போல் எல்லோரும் அவனை அடியாத குறையாகத் திட்டித்தீர்த்தார்கள்.

இவர் பெரிய கொடைவள்ளல், மதினிக்கு தனது வீட்டைக்கொடுத்து மாப்பிள்ளை எடுத்தாராமே. உனது பலம் அப்போது உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். வீடு இருந்தால் அதை விற்று விட்டாவது செய்திருக்கலாமே. இப்போது அழுது என்ன பயன் என்றாள் சகோதரி. அங்கிருந்த மச்சான் மாத்திரம், நான் வேண்டுமானால் ஐந்து இலட்சம் தருகிறேன் மிகுதியை நீ பார்த்துக்கொள் என்றார். அப்போது இடைமறித்த உம்மா. நீங்கள் ஒன்றும் கொடுக்க வேண்டாம். அந்தப் பிச்சைக்காரியை முடிக்க வேண்டாம் என்று அன்றே சொன்னேன். என் பேச்சைக் கேட்டிருந்தால் இவனுக்கு இப்போது இந்த நிலைமை வந்திருக்குமா? அவள் இப்படியே கிடந்து செத்துப் போகட்டும் அதற்குப் பின்னர் நீ இங்கு வா, உனக்கு பணம் தந்து நாங்கள் சீதனத்துடன் நல்ல இடத்தில் உன்னைத் திருமணம் செய்து வைக்கின்றோம், என்று தாயார் கூற ஆத்திரத்துடன் எழுந்த அன்வர் சீதனம், சீதனம். நீங்கள் திருந்தவே மாட்டீர்களா? எப்படி உம்மா உங்களால் இப்படிக் கதைக்க முடிகின்றது. பாவம் அவள், உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாள். இந்த நேரத்திலா இப்படிப் பேசுவது. இனியாவது அல்லாஹ் உங்களுக்கு நல்ல புத்தியைத் தரக்கூடாதா. என்றவாறு உங்கள் பணம் எதுவும் எனக்கு வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இங்கு வந்தது என் தப்பு என்று கூறி வெளியேறினான் அந்த வீட்டை விட்டு.

உம்மா என்ன சொன்னாலும் வாப்பா அதற்கு மாற்றமாக எதுவும் சொல்ல மாட்டார். அதனால் அவர் சும்மா பார்த்துக் கொண்டிருந்தார். பாசம் என்பது அவர்களிடம் மருந்துக்குக் கூட இருக்கவில்லை.

எப்படியாவது சாலிஹாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவன், நேராகத் தனது கடைக்குச் சென்றான். அங்கு ஒரு பேப்பர் மட்டையை எடுத்து அதில் இந்தக் கடை விற்கப்படும் என்ற வாசகத்தை எழுதி அங்கு நின்றவர்களிடம் நான் இந்தக் கடையை விற்கப் போகின்றேன் என்று கூறி, கடைக் கதவில் அந்த வாசகத்தை கொழுவி வைத்து விட்டு வீட்டுக்கு வந்தான்.

அவனது குடும்பத்தைப் பற்றி, பெற்றோரைப் பற்றி பலரும் பலவிதமாகக் கதைத்துக் கொண்டனர். எவ்வளவு அருமையாக வியாபாரம் நடக்கிற இடம் இது. இதைப்போய் விற்கப்போகிறானே, இதை விற்றுவிட்டு அவனது வாழ்க்கைக்கு என்ன செய்யப் போகின்றான். மனிதனுக்கு கஷ்டம் வந்தால் இப்படித்தான், எதுவும் விளங்காது. இலட்சக் கணக்காக காசைக் கட்டிவைத்திருக்கும் அவனது பெற்றோர், இந்த நிலையில்கூட அவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லையே, என்ன மனிதர்கள் இவர்கள் என்று பலவாறு கதைத்துக்கொண்டனர்.

அதே நேரம், அந்தக் கடைக்கான கேள்விகள் சில அன்றே வர ஆரம்பித்தது. பலரும் பல விலைக்கும் அந்தக் கடையைக் கேட்டனர். ஏனென்றால் அந்தக் கடை வர்த்தகத்துக்குரிய சிறந்த இடம் என்பதனாலாகும்.

அதில் ஒருவரின் விலை பொருந்தி வந்ததால் அவருக்குக் அந்தக் கடையைத் தருவதாக வாக்களித்து, எனக்கு பணம் அவசரமாகத் தேவை, அதனால் இப்போதே முழுப் பணத்தையும் தந்து கடையை எழுதி எடுத்துக்கொள்ளுங்கள் என்றான். அதற்கமைய அன்றிரவு கடைக்குப் பதிலாக காசு பரிமாறப்பட்டது. அவர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு மறுநாள் காலை நேராக ஆஸ்பத்திரிக்கு ஓடினான்.

அங்கு உரிய நேரத்திற்கு பணத்தையும் கட்டினான். அப்போது சாலிஹா கேட்டாள், எப்படி அவசர அவசரமாக இவ்வளவு பெருந்தொகைப் பணத்தை உங்களால் கட்ட முடிந்தது, உங்களது வாப்பா கொடுத்தாரா? உங்களது வீட்டார் உங்களை நன்றாகக் கவனித்தார்களா? என்னைப் பற்றிக் கேட்டார்களா? என்று கேள்விகளை ஆர்வத்தோடு அடுக்கிக்கொண்டு போனாள்.

அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கடையை விற்ற விடயம் தெரிந்தால், பெற்றோர் வீட்டில் என்னை அவனமாப்படுத்தி விட்டார்கள் என்ற விடயம் தெரிந்தால், அவள் மிகவும் கவலைப்படுவாள் என்று நினைத்தவன், ஆமாம் சாலிஹா வாப்பாதான் இந்தப் பணத்தைக் கொடுத்தார் என்றான்.

அவர்களை உங்கள்மீது எத்தனை அன்பை வைத்திருக்கிறார்கள். அது தெரியாமல்தான் நான் அவர்கள் உங்களை அவமானப்படுத்தி விடுவார்களோ என்று பயந்து அங்கு போக வேண்டாம் என்றேன். அதற்கு மாற்றமாக இன்று எமது உறவுகள் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. உம்மா சுகமாக இருக்கிறாவா? தங்கச்சி தம்பியெல்லாம் சுகமா? என்னையும் அவர்கள் பார்க்க வருவார்களா? என்று ஆவலோடு கேட்டிக்கொண்டிருந்தாள். பாவம் அவள், அவளுக்கு நடந்த விடயம் என்ன தெரியும்.

ஆமாம், வருவதாகத்தான் சொன்னார்கள் அதைப் பற்றியெல்லாம் இப்போது எதையும் அலட்டிக்கொள்ளாமல் மனதை “றிலக்ஸாக” வைத்துக்கொள். இது முக்கியமான நேரம் என்றான், அவன் மனதில் அத்தனை பாரத்தை வைத்துக் கொண்டு.

அவன் அந்தப் பணத்தைக் கட்டியதன் பிரகாரம் அவளது ஆப்பரேசனும் உரிய நேரத்தில் நடந்தது. அது வெற்றிகரமாகவும் முடிந்திருந்தது. இப்போது சாலிஹா ஆஸ்பத்திரியில் இருக்கிறாள். அவளுடன் அங்குக் கூட நின்று ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து அவளைக் கவனித்துக் கொண்டிருப்பவள் அவளது தங்கை ஜெமிலா மாத்திரம்தான்.

இப்போது மனைவியின் பிரச்சினை இறைவன் அருளால் ஒருவாறு தீர்ந்துவிட்ட நிலையில், தன் வாழ்க்கைக்கு ஆதாரமாக நின்று வருமானம் தந்து கொண்டிருந்த கடையும் தன்னைவிட்டுப் போய்விட்ட இந்த சந்தர்ப்பத்தில், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்யப்போகின்றேன் என்ற சிந்தனையில், என்னைப் படைத்தவன் என்னைக் கைவிடமாட்டான் என்ற உறுதியான நம்பிக்கையோடு களிமண் சுவரில் விழுந்து கொண்டிருந்த ஒளிக் கீற்றுக்களில் தன்னைப் பறிகொடுத்தவனாக நித்திரையின்றிப் புரண்டு புரண்டு படுத்திருந்த அன்வர் எழுந்து தஹஜ்ஜுத் தொழுதுவிட்டு இறைவனுக்கு நன்றி தெரிவித்தவனாக பெற்றோருக்காகவும், மனைவிக்காகவும் குடும்பத்திற்காகவும் கண்ணீர் மல்க உளமுருகிப் பிரார்த்திக் கொண்டிருக்கிறான்.

சாய்ந்தமருது

– எம்.ஐ.எம். அஷ்ரப் (ஜனவரி 2016 )

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *