விசாலாக்ஷி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2024
பார்வையிட்டோர்: 1,536 
 
 

(1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நல்ல நிலா. சாப்பாடானவுடன் நானும் மணியும் என்ன செய்யலா மென்று யோசித்தோம். காவேரி மணலில் சற்றுக் காற்றோட்டமாகப் படுத்திருக்கலாம் என்று எண்ணி அங்கே போய்ச் சேர்ந்தோம். மணலில் துண்டை விரித்துக் கொண்டு படுத்தோம். தூரத்திலிருந்து காமன் பண்டிகையின் கொட்டு முழக்குக் கேட்டது.

‘என்றைக்கடா பௌர்ணமி?’ என்றான் மணி.

‘ஏன், காமதகனம் இன்றிரவுதான்’ என்றேன்.

‘சிவனின் சினம் உபயோகமில்லை. எரிக்கப்பட்டவனே உலகத்தை இந்த ஆட்டு ஆட்டுகிறான். இதென்னடா நாற்றம்?’ என்று கேட்டுக் கொண்டு மோப்பம் பிடித்துப் பார்த்தான் மணி.

‘அதோ, அக்கரை மயானத்திலிருந்த வருகிறது’ என்றேன்.

‘கீழைத் தெருவில் இன்று ஒரு பெண் கிணற்றில் விழுந்து பிராணனை விட்டாளாம். ‘

‘எதற்காக?’

‘என்னவோ! ஏதாவது குடும்ப ஸம்பவந்தான் காரணமாக இருக்கும். எனக்கு என்னவோ, நமது குடும்ப வாழ்க்கை என்பது பெரிய சிறைச் சாலை என்று தோன்றுகிறது.’

‘ஸமூக வாழ்க்கையைச் சொல்கிறாயா?’

இப்படிப் பேச்சுப் போனதில் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், அதன் நன்மை, கெடுதி இவற்றைப்பற்றியும் பெரிய தர்க்கம் வந்து விட்டது.

நாங்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தாடி மீசை வளர்ந்த ஒரு மனிதர் இங்குமங்கும் எங்களருகில் உலாத்துவதுபோல் நடந்து கொண்டிருந்தார். கடைசியாக எங்களருகில் சற்றுத் தூரத்தில்

வந்து உட்கார்ந்தார். அவருக்குச் சுமார் நாற்பது வயசு இருக்கும் என்று நிலா வெளிச்சத்தில் ஊகித்தேன்.

‘குடும்பவாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறாப்போலிருக்கிறது. அது சம்பந்தமாகச் சில வருஷங்களுக்கு முன் நடந்த ஒரு சமாசாரத்தைச் சொன்னால் கேட்கப் பிரியமுண்டோ?’ என்று கேட்டார்.

‘சொல்லுங்களேன்!’ என்று இருவரும் ஒரே குரலில் சொன்னோம்.

வந்தவர் மணிவில்குந்திக் கொண்டு கால்களைக் கட்டிக்கொண்டார்.

‘அது பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடந்தது. இந்த ஊரில்தா னென்று வைத்துக் கொள்ளுங்களேன். நீங்கள் சிறு பையன்களாக இருந்திருப்பீர்கள். அந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவன் என் நண்பன் விசுவதாதள். அவன் வக்கீல் தொழிலில் ‘சிறு வயசானாலும் துடி’ என்று பேர் வாங்கினான்.

‘அவன் மனைவியின் பெயர் விசாலம் – விசாலாக்ஷி. விசுவநாதனுக்கு விசாலாக்ஷி பொருத்தந்தானே? அவள் சோழதேசத்துப் பெண். அவர் களுக்கென்றே ஏற்பட்ட தடை, உடை, பாவனைகளோடு இயற்கை, செயற்கை அழகோடும் கூடினவள். தளதளவென்று வளர்ந்த தங்க ரேக்குப்போன்ற மேனி. பால் வடியும் முகம். நன்றாய்ப்பாடுவாள். இன்று போலிருக்கிறது; ஊஞ்சலன்று கல்யாணத்தில் அவள் ‘செந்தில்மா நகரந்தனில்’ என்னும் பாட்டைப் பாடியபோது மேனகாரர்கள் முதல் ‘ஆ’வென்று வாயைத் திறந்து கொண்டு மெய்மறந்தார்கள்… புருஷனும் பெண்சாதியும் ஒருவர்க்கொருவர் ஏற்பட்டவர் போல் இருந்தார்கள். குழந்தை குட்டிகள் உண்டோ?’ என்றான் மணி.

‘வருகிறேன். இருங்கள். அவன் தாய் வடமக்கூட்டத்தையே அலசி அந்தப் பெண்ணைப் பொறுக்கியெடுத்துத் தன் பிள்னைக்கேற்ற பதுமை என்று தீர்மானித்துக் கல்யாணம் செய்துவைத்தாள். அவன் தாய் சிறு வயசிலேயே கணவனை இழந்து ஒரே பிள்ளையைப் படிக்க வைத்துக்கொண்டு இவ்வூரில்தான் – தன் தகப்பளாரையும், தாயையும், துணையாக வைத்துக் கொண்டிருந்தாள். புருஷர் டிப்டி கலெக்டர் வேலை செய்து நல்ல சொத்து வைத்திருந்தார்.

‘கல்யாணம் தடபுடலாக நடந்தது. பட்டணத்துப் பிரபல வக்கீல் சுப்ரமண்ய சாஸ்திரிகள் – கேள்விப்பட்டிருக்கிறீர்களா? – அவருடைய பெண் விசாலம். மறு வருஷம் ருதுசாந்தி ஆயிற்று. நீங்கள் சிறுவர்கள் தானே! அந்த யௌவனப் பருவத்திய உணர்ச்சிகளை நீங்கள் நன்றாக ஊகிக்கலாம். ஒருவரை யொருவர் பார்க்க ஏங்குவதிலும், பார்த்து ஏங்கு வதிலும், பார்க்காமல் ஏங்குவதிலும் காலம் சென்றது. விசுவம் கொஞ்சம் ஸம்ஸ்கிருதம் படித்தவன். தன் அகமுடையாள், எப்பொழுதாவது அந்தரங்கமாக, குடும்பக் கட்டற்றுத் தாராளமாகப் பழக வேண்டு மென்ற ஆசையை வெளியிட்டால், குடும்பக் கட்டுப்பாடு தான் அன்பைத் தீப்போல வளர்க்குமென்று சொல்லிக் காளிதாஸனின் ‘விரஹே ப்ரேம ராசீபவதி* என்னும் சுலோகத்தை எடுத்து அர்த்தம் சொல்லுவான்; என்ன பழங்கதையை உளறுகிறேன் என்று பதற வேண்டாம். இதோ ஆயிற்று.

‘முகம் பார்த்துக்கொண்ட வேளை’ என்று தமது நாட்டிற்கென்றே ஏற்பட்ட பழமொழிகளில் ஒன்று உண்டல்லவா? மாமியாரும் நாட்டுப் பெண்ணும் நல்ல வேளையில் சந்திக்கவில்லை என்று தெரிகிறது. நமது நாட்டினுடைய வேதாந்தத்தின் விசேஷம் என்ன தெரியுமா? என்றார் சாமியார்.

‘சுற்றிச் சுற்றி வரும் சக்கரம் போன்ற தர்க்க முறைதான்’ என்றேன் நான்.

‘அது சரி!’ என்று சிரித்துவிட்டு அவர், ‘நான் எண்ணிக் கொண்டிருப்பது துவத்துவ பாவம் – அதாவது இரட்டைத்தன்மை: உலகத்தில் எதை ஆராய்ந்தாலும் அத்தன்மை யுடையதாகத்தான் இருக்கும். ஜனன மரணம், சுக துக்கம், இரவு பகல், ஆண் பெண் – அவற்றில் இது ஒரு துவந்துவம் – மாமியார் – நாட்டுப்பெண் – தென்னிந்திய மண்ணில் உதித்த இரண்டு தத்துவங்கள்.

‘அரச மரத்தடிகளில் இருக்கும் ‘நாகர்’ களைப் பார்த்திருக்கிறீர்களா? இரண்டு பாம்புகள் ஒன்றில் ஒன்று சுற்றிக்கொண்டு தலையெடுத்து ஒன்றை ஒன்று சீறி நிற்பது போன்ற சிலையைக் கவனித்திருக்கிறீர்களா?’

‘அவை’-

‘இருக்கட்டும். ஓர் உபமானத்திற்காகத்தான் எடுத்துக்கொண்டேன்… குடும்ப புருஷனாகிய கல்…. அவனைச் சுற்றி அவனை விடாது நெருக்கிக்கொண்டிருக்கும் இரண்டு பாம்புகள் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டே இருக்கின்றன. உபமானம் பொருந்தினமட்டில் போதும்; என்ன? விஷயத்தைச் சொல்லாமல் எதற்கோ பீடிகை போடுகிறேன் என்று நினைக்கிறீர்களா?’

‘இயற்கையில் விசாலமாவது அவளுடைய மாமியாராவது கெட்டவர்’ கனல்ல. பாம்புகளல்ல. குடும்பம் ஏற்பட்ட அன்றைக்கிருந்தே கட்சி யெண்ணம் தலையெடுத்து விடுகிறது’.

‘பரஸ்பர நோக்கங்களின் வேற்றுமை’

தோக்கமாவது தூக்கம்! அது வேறா இருக்கிறது? பரஸ்பர அசூயை. அதுதான் சந்தித்த நிமிஷம் முதல் ஆரம்பம் என்றேனே. தெருப்புப் புகைந்துகொண்டே இருந்தது. ஊதி விசிறிவிடப்பட்டுப் பெரிய ஜ்வாலையாயிற்று. முதலில் அவர்களுக்குள் அந்தரங்கமான விரோதம் -அது படிப்படியாக விருத்தியடைந்ததை வர்ணிக்க இப்பொழுது சாவகாசம் இல்லை. அடுத்த காட்சியில் விசுவத்தின் முன்பே தீ ஒளி வீசுகிறது.விசுவம் அதைக் கவனிக்காததுபோல் பாசாங்கு செய்கிறான். அடுத்த காட்சி, அவனெதிரில் யுத்தம். மாமியார் வாய்பேசும் எதிரி; நாட்டுப்பெண் மௌனமான எதிரி. விசுவம் இரு கட்சியையும் ஆதரிக்காமல் கொண்டு செலுத்திவிடலாமென்று எண்ணி, தாயின் பேச்சையும், மனைவி பேச்சையும் இடங்கொடாமல் அலட்சியம் செய்தான். ஒரு சிறு விஷயத்தைச் சொல்லிவிட்டு மேலே போகிறேன். விசாலம் ஒரு நாள் எண்ணெய்ப் பாத்திரத்தை உறியிலிருந்து எடுக்கும் போது கை வழுக்கிக் கீழே போட்டுவிட்டாள். மாமியார் தூங்கிக் கொண்டிருந்தாள். விசாலம் உடனே தன் கோட்டைக்குள் புகுந்து கொண்டு முற்றுகையைத் தாங்கவேண்டிய தந்திரங்களைப்பற்றி யோசிக்கலானாள், தானே முந்திக் கொண்டு மாமியார் எழுந்தவுடன், ‘உறியில் பூனை ஏறி எண்ணெய்ச் செம்பைக் கீழே தள்ளிவிட்டது. அம்மா’ என்றாள்.

‘பரஸ்பர மனப்போக்கை ஊகிக்கும் அப்பியாசத்தால் நாட்டுப்பெண் தன் கண்ணில் மண்ணைப்போடப் பார்க்கிறாள் என்று மாமியாருக்குப் பட்டவுடன் யுத்தப் புலன் சீறிக்கொண்டு கிளம்பிற்று அவளுக்கு. ஆகையால் அவள் விஷயத்தை அத்துடன் நிறுத்தவில்லை – நிறுத்தி விட்டால் தான் குடும்பத்தில் ஒன்றுமே இருக்காதே’.

‘பூனை உறிக்குத் தாவ முடியாதே? உயர்ந்தல்லவா இருக்கிறது?’ என்றாள்.

‘தாவிற்று, தான் பார்த்தேன்’ என்று பதில் வந்தது.

‘பார்த்துக்கொண்டா சும்மா இருந்தாய்?’ அதற்கு மேல்.

“நான் விரட்டுவதற்குள் தள்ளிவிட்டது’. இத்துடன் நிற்குமா? ‘உறிதான் நெருங்கியிருக்கிறதே, எப்படித் தள்ளும்? அதற்குக் கையா இருக்கிறது? ஐம்பது வயசைக் கொட்டை பரப்பி இருக்கிறேன். நீ நேற்று முளைத்த முளை! என்னைப் பைத்தியமாக்கப் பார்க்கிறாயே? என்று மாமியார் அடுக்கினாள்.

‘போதாதா, ஒருவர்மேல் ஒருவர் தொடுக்கும் பாணங்கள்?’

‘இது யாருடைய பிசகென்கிறீர்கள்?’ என்றான் மணி.

‘நீங்கள் தான் சொல்லுங்களேன்’

‘நாட்டுப் பெண் ஏன் அநாவசியமாக நம்ப முடியாத பொய்யைச் சொல்ல வேண்டும்? அதுதானே மாமியாருக்குக் கோபம் வந்துவிட்டது?’

‘மாமியார் தான் ஏன் இவ்வளவு சொல்ல வேண்டும்? இதை எதிர் பார்த்துத்தானே அவள் பொய்யாவது சொல்லித் தப்பிக்கலாமென்று பார்த்தாள்?… ஆகையால் பிசகு இரண்டு பக்கத்திலும் இருக்கிறது. விசுவம் என்ன செய்வான்! தாயாரைப் பார்த்தால் ‘உம்’ என்றிருக்கிறாள். மனைவியைப் பார்த்தால் ‘உம்’ என்றிருக்கிறான். தன் சௌக்கியம் குலைந்தாலும் குலையட்டும். இருவரும் ஒத்திருந்தால் போதும் என்று, யார் எது சொன்னாலும் பொறுத்துக் கொண்டிருந்தான். ஏதாவது ஒரு பக்கம் மட்டும் பிசகு இருந்தால் கூட அவனுக்கு லகுவாகப் போயிருக்கும். உடனே அக்காரணத்தை மேலிட்டு அதைக் களைத் தெறிந்துவிட்டுக் கவலையற்று இருப்பான். இரண்டு பக்கங்களிலும் பிசகு இருந்ததால் அகாரணமாக ஒருவரை மட்டும் கண்டிக்க அவனுக்கு மனம் வரவில்லை.

‘இருவரில் ஒருவர் சளைத்தாலும் சரியாய்ப் போகும். அதுவும் இல்லை. தன்பிள்ளையிடம் ஓர் இணையற்ற பெருக்கமுடையவள் என்ற காரணத்திற்காக மாமியார் நாட்டுப் பெண்ணுக்கு விட்டுக் கொடுக்கலாம். அல்லது. தன் கணவனைப் பெற்றவள் என்ற காரணத் திற்காக நாட்டுப் பெண்ணாவது விட்டுக்கொடுக்கலாம். கொடுக்கிற தில்லை. அவனுக்கும் இருவர்களிடத்திலும் இரண்டு விதமான அற்புதப் பற்றுகள். ஒரு பக்கமும் திரும்ப முடியாமல் தவித்தான். மேற்சொன்ன காரணத்தால் சில சமயங்களில் இருவரிடம் இருந்த அன்பும் களங்க மடைந்தது. அதன் பிரதிபலிப்பு நிச்சயமாக ஏற்பட வேண்டியதுதானே? பெற்றெடுத்த பிள்ளை தன்னை அலட்சியம் செய்கிறானே என்று தாயின் வாஞ்சை குன்றிற்று. அகமுடையானுடன் அமிர்தபானம் செய்து வாழ்வோமென்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு புக்ககம் புகுந்தவள் கோட்டை இடிந்து விழுவதைக் கண்டு உத்ஸாகம் குறைந்து ஏக்கங் கொண்டு உட்கார்ந்து போனாள்.

‘இருவருடைய அதிருப்தியையும் விசுவம் கவனிக்காமலில்லை. கவனித்து என்ன செய்யக்கூடும்? இருவருக்கும் கடினமான ஒரு பிரிவினையை மனப்பூர்வமாக இயற்ற அவனுக்கு இருதயம் இடம் கொடுக்கவில்லை. அப்படிப்பட்ட இளகிய மனமுடையவர்கள் நிச்சயம் உலகத்தில் பட்டுத் தீரவேண்டிய கஷ்டத்தை அவன் பட்டான். தாயுடன் தாராளமாகப் பேசுவதையே விட்டுவிட்டான். இருவர்களுடைய இருதயங்களையும் ஒன்று சேர்க்கும் இரவு வருமா என்று ஏங்கிய காலம் போய் நரக வேதனையைப் போக்கும் பகல் போகிறதே என்ற காலம் வந்தது. ‘ஒரு வார்த்தை சொல்ல மாட்டாயா’ என்ற காலம் போய், ‘பேசாமலிரு’ என்ற காலம் வந்தது. தன் மனைவி தனக்காக என் சிறு தியாகம் செய்து தன் தாயிள் போக்கைப் பொறுத்துக் கொள்ளக்கூடாது ? வாஸ்தவமாகத் தன்னை அவன் பரிபூர்ணமாக நேசித்தால் அதைப் பொறுத்துக் கொண்டு வாழ்வது அவளுக்கு அவ்வளவு சிரமமாக இருக்குமா என்ன? தான் கிளிப்பிள்ளைக்குச் சொல்லுவது போன்ற இந்தச் சொற்களை மனங்குழையச் சொல்லியும், அவற்றை ஏன் அவள் கடைப்பிடிக்க மாட்டேன் என்கிறாள் என்று விசுவத்திற்கு மனைவியிடம் நாளடைவில் அருவருப்புக்கூடத் தலைகாட்ட ஆரம்பித்தது. தான் படும் பாட்டில் அவளும் ஒரு பெண்தானே என்பதையும் சொல்லம்புகளைத் தாங்க இப் பூலோகத்தில் யாராலும் முடியாது என்பதையும் மறந்தான். இந்த மனப்போக்கு இருந்த சமயத்தில் தான் விசுவத்தின் வாழ்க்கையில் முடிவான சம்பவம் நடந்தது.

‘நாழிகையாகிவிட்டது போல் இருக்கிறதே. கதையைச் சுருக்கிச் சொல்லிவிடுகிறேன். ஒருநாள் சாயந்தரம் விசுவம் சலித்த மனத்துடன் வீடு திரும்பினான். அன்று கேஸ் தோற்று ‘ஜட்ஜ்’ கூட ஏதோ அவனுடைய அஜாக்கிரதையைப்பற்றிக் கடினமாகச் சொல்லிவிட்டார். என்றுமில்லாமல் தாய் வாசல் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைத் தூரத்திலேயே பார்த்துவிட்டான். ஏதோ புயலென்று ஊகித்துவிட்டான். தாய் வாயெடுப்பதற்குமுன் உள்ளே போய்விடலாமென்று வேகமாகப் படியேறினான்.

‘இந்தாடா விசு! இனிமே இந்த வீட்டிலே தான் இருக்க முடியாது’ என்றாள் தாயார்.

‘என்னம்மா செய்யச் சொல்லுகிறாய்?’ என்று தாக்கப்பட்ட நாய்போல் விழுந்தான் அவன்.

‘உம், எனக்குத் தெரியுமே இது வருமென்று! இல்லாட்டா அவொ அவ்வளவு தைரியமா என்னைப் பேசுவளா?’ என்று சொல்லி, அவள் தாய் மலமலவென்று கண்ணீர் உதிர்த்து விம்ம ஆரம்பித்தான். விசுவத் திற்குக் கோபம் ரௌத்திராகாரமாகப் பொங்கிற்று. விர்ரென்று உள்ளே பாய்ந்தான். சமையலறையில் விசாலம் அடுப்பை ஊதிக் கொண்டிருந்தாள். அதனாலோ என்னவோ முகம் சிவந்து கண்களில் ஜலம் இருந்தது.

‘அம்மாவை என்னடி சொன்னாய்? ஒன்றும் – சொல்லாதேன்னு எவ்வளவு தரம் சொல்றது?’ என்று சொல்லிக் கொண்டே – எனக்கு இப்பொழுது சொல்லக்கூடக் கூச்சமாக இருக்கிறது. அவளை அடித்தான் முதுகில். அடிக்க ஓங்கின கை, அவள் குபீரென்று எழுந்து நின்றதால், விலாவில் வந்து வேகமாகத் தாக்கிற்று.

‘ஐயோ என்று துடித்துக்கொண்டு கீழே உட்கார்ந்துவிட்டான் விசாலம்.

‘விசுவத்தின் கோபம் பறந்துவிட்டது. தான் செய்ததைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.

‘விசாலத்துக்கு அப்பொழுது எட்டு மாதம்-சொல்லவில்லையோ? சப்தத்தைக் கேட்டு விட்டு மாமியார் உள்ளே ஓடிவந்தான். அவள் இதை எதிர்பார்க்கவில்லை. ‘அட சண்டாளா, பிள்ளத்தாச்சியே என்னடா பண்ணினே பாவி?’ என்று தாட்டுப்பெண்ணிடம் சென்று பார்த்தாள்.

‘ஜாஸ்தி விஸ்தாரமாக இங்கே சொல்லத் தேவை இல்லை. அவர்கள் பயந்தவாறே மறுதாள் ஜூரம் கண்டது. டாக்டரும் நர்ஸூம் வந்து பார்த்து, அன்றே செத்த சிசுவை வயிற்றில் ஆபரேஷன் செய்து எடுத் தார்கள். அன்றிரவே ரணஜன்னி பிறந்துவிட்டது. கல்யாணத்துக்குப் பிறகு அன்றுதான் முதல் முதலாக, பகிரங்கமாக விசுவம் விசாலத்தின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான்.

‘டாக்டர் என்ன சொன்னார் சொல்லுங்களேன்; நான் பிழைப்பேனா?’ என்று விசாலம் சோர்ந்து கேட்டாள்.

‘விசாலம்!’ என்று சொல்லிவிட்டு விசுவம் கண்ணீர் சொரிந்தான். ‘அழவேண்டாம்! நீங்கள் என்ன பண்ணுவீர்கள்?’ என்று அவன் கையை எடுத்து ஆற்றுவது போலத் தடவினாள். சற்று நேரத்திற் கெல்லாம் ஜன்னியின் சின்னங்கள் ஏற்பட்டன.

‘நான் பாலைக் கொட்டல்லேம்மா! அவாகிட்ட சொல்ல வேண்டாம். அவா முகத்தெ நான் எப்படிப் பார்பேன்?…’

‘என்னோட பேசப்படாதா! நாள் ஒண்ணும் பண்ணல்லியே… இனிமே சொன்னபடி கேட்கிறேன்…’ இப்படி இரண்டு மணிநேரம் பிதற்றினாள்.

‘வேங்கடரமண ஸ்வாமி! துள்ளி எழுந்திருக்கச் செய். உன் சந்திதிக்குக் கூட்டிக்கிண்டு வரேன்’ என்று வேண்டிக் கொண்டாள் மாமியார்.

‘விடியற்காலையில் விசாலத்திற்குத் திரும்பவும் பிரக்ஞை வந்தது’.

‘ஐயோ! இடுப்பில் என்னவோ செய்கிறதே! செத்தெ பிடியுங்களேன். இன்னங்கூடவா வெட்கம்?’ என்றாள்.

அந்தச் சமயம் கதை சொன்னவரின் குரல் தழுதழுத்ததுபோல என் காதில்பட்டது. முகத்தைப் பார்க்கலாமென்றால் ஒரு கையகலம் மேகம் வந்து சந்திரனை மூடிவிட்டது.

விசுவம் இடுப்பை மெல்லத் தடவிக் கொடுத்தான். விசாலம் குடும்ப வாழ்க்கையைத் தன் சம்பந்தப்பட்ட மட்டில் பேச்சற்ற மற்றொரு மூச்சுடன் நிறுத்திக்கொண்டாள்.

‘அடாடா!’ என்று நாங்கள் ஏககாலத்தில் அநுதாபப்பட்டோம்.

‘என்ன அடாடா என்கிறீர்கள்?’ என்று அவர் கேட்டார்.

‘ஆனாலும் அவ்வளவு முரட்டுத்தனமாக அவர் அடித்திருக்கக் கூடாது’.

‘அது உங்கள் அபிப்பிராயம் அல்லவா? அவனும் ஒருவேளை சாவகாசமாகச் சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்து யோசனை செய்தால், நீங்கள் சொல்வது சரியென்று ஒப்புக்கொள்வான். சந்தேகமில்லை. இருக்கட்டும்; அவன் குற்றவாளிதான். ஆனால் அந்த உத்தமி விசாலத்தின் பொறுமையால் ஒரு மனிதக் கோர்ட்டும் அவன்மேல் தீர்ப்புச் செய்ய வில்லை. நீங்கள் அவனை எப்படிச் சிதிப்பீர்கள்?!

நாங்கள் மௌனமாக இருந்தோம்.

‘அவன் தனக்குத் தீவாந்தர சிக்ஷை கொடுத்துக் கொண்டிருக்கிறான். பரதேசியாகப் பிழைக்கிறான்’.

‘அவரைப் பற்றி இவ்வளவு விஸ்தாரமாக’

‘அது தெரிந்து உங்களுக்கு என்ன ஆக வேண்டும்? நான் தான் அவன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்?’

னால் வாஸ்தவமாக-?’

‘இல்லை இல்லை’ என்று சொல்லிவிட்டு எழுத்து அவர் வேகமாக மேற்கே போய்விட்டார்.

ஐந்து நிமிஷம் நானும் மணியும் பேச்சற்றிருந்தோம். காமன் பண்டிகையின் தம்பட்டக் கொட்டு எங்கள் காதில் பட்டது.

‘காம தகனம் ஆகிவிட்டதுபோல் இருக்கிறதே? மணி என்ன இருக்கும்?’ என்றேன்.

‘ஆந்தை குமுறுகிறது, மூன்று ஜாமமாயிருக்கலாம்…குடும்ப சுகமென்பதுதான் என்ன?’

‘அதோ! மயானக்கரையைப் பார்! சுடர்விட்டு எரிகிறது’.

– சுதந்திரச் சங்கு, 23.03.1934

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *