வாழ்க்கையைத் தேடி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2023
பார்வையிட்டோர்: 4,105 
 
 

விடிந்தும் விடியாத அந்தப் பொழுதில் வாட்ச்மேன் வந்து வாசலில் நின்று குரல் கொடுத்தபோது சோபாவில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த ரங்கராஜன் எழுந்து வாசல் கதவைத் திறந்தார்.

”என்னய்யா? என்ன விஷயம்? காலம் கார்த்தாலே வந்து குரல்கொடுக்கிறே?”

”ஒரு பொண்ணு வந்து உங்களை பார்க்கணுனு அடம்பிடிக்குதுங்கய்யா! எவ்வளோ சொன்னாலும் போக மாட்டேங்குது!”

“என்ன விஷயமா பார்க்கணுமாம்?”

”அதை உங்கக் கிட்டேதான் சொல்லுமாம்!”

”அய்யா பிஸியா இருக்கார்! பார்க்க முடியாதுன்னு சொல்லி அனுப்ப வேண்டியதுதானே!”

”சொல்லிப் பாத்துட்டேனுங்கய்யா! கிளம்ப மாட்டேங்குது! விடிகாலை மூணு மணி வாக்கில் வந்து கேட் கிட்டே நின்னுது! இப்ப மணி ஆறாகப் போவுது! இன்னும் நகர மாட்டேங்குது!”

”ரொம்பப் பிடிவாதக் காரியா இருப்பாப் போலே!”

”ஆமாங்கய்யா! ஒரு டீக் கூட குடிக்கலை! உங்களை பார்த்துட்டுதான் மத்ததெல்லாம்னு சொல்லுது!”

”சரி போய் வரச்சொல்லு!”

“சரிங்கய்யா!”

வாட்ச் மேன் சென்ற இரண்டாவது நிமிடம் அந்தப் பெண் உள்ளே நுழைந்தாள். நீண்டகூந்தல் நடுவகிடு எடுத்து வாரியிருந்தாள். கூந்தலில் மல்லிகைப் பூ சூடியிருந்தாள். மாநிறம், களையான முகம். நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு. காட்டன் சேலை அணிந்திருந்தாள். வாசல் முன் வந்து தயங்கி தயங்கி நின்றாள்.
சோபாவில் அமர்ந்திருந்த நான் ”உள்ளே வாம்மா!” என்று குரல் கொடுத்தேன்.

நான் இந்த பகுதியில் ஒரு தொழிலதிபர். சின்னதாக ஓர் இரும்பு உருக்காலை நட்த்தி வருகிறேன் கஜா டி.எம்.டி கம்பிகள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்த கம்பிகளை தயாரிக்கும் கம்பெனியின் முதலாளி தான் நான்.. ஒழுங்காக வரி செலுத்தி வருகிறேன். நியாயமான விலைக்கு இரும்புக்கம்பிகளை ஏற்றுமதி செய்கிறேன். இயன்றவரை தான தருமங்களும் செய்து வருகின்றேன். இதுவரை என்மீது எந்த ஒரு தவறும் யாரும் சொல்ல இயலாத அளவிற்கு இருந்து வருகிறேன். அப்படி இருக்கையில்” இவள் யார்?” என்ன சொல்லப் போகிறாள்.

”யாரும்மா நீ? என்ன வேணும் உனக்கு?”

”வணக்கம் சார்! என் பேர் ப்ரியா! நான் உங்க மருமகள். ஐ.மீன் உங்க மகன் கஜேஷோட மனைவி!”

ரங்கராஜன் அதிர்ந்து போனார். ”என்னம்மா சொல்றே? நீ. கஜேஷோட மனைவியா? அவனுக்கு அடுத்தவாரம் மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கு! வாணி பிவிசி பைப்ஸ் ஓனரோட பொண்ணு வாணிதான் பொண்ணு. இப்ப நீ வந்து அவன் பொண்டாட்டின்னு சொல்றே?”

”சார்! நானும் கஜேஷும் ரெண்டு வருஷமா காதலிச்சிட்டிருந்தோம். ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் நகருக்கு வெளியே இருக்கிற ஒரு அம்மன் கோயில்லே வச்சு உங்க பையன் என் கழுத்திலே தாலிக் கட்டினாரு. அது உங்க குலதெய்வ கோயிலாம். அதற்கப்புறம் தனியா ஒரு வீடு பார்த்து வைச்சு என்னை அங்கே தங்க வைச்சாரு. அப்பப்ப வந்து போய்கிட்டிருந்தவர் இப்போ ஒரு மாசமா வருவதே இல்லை. போன் பண்ணாலும் எடுக்கவே இல்லை. உங்களோட ஆபீஸ்லே போய் விசாரிச்சப் பதான் அவருக்கு கல்யாணம் பிஸியா இருக்கார்னு தெரிஞ்சுது! உடனே உங்களை பார்க்க வந்தேன். அங்கிள் என்னை நீங்கதான் உங்க புள்ளையோட சேர்த்து வைக்கணும்.!” சட்டென்று காலில் விழுந்தவள் அவளும் கஜேஷும் மாலையும் கழுத்துமாய் இருக்கும் படத்தை அவரிடம் கொடுத்தாள்.

ரங்கராஜன் அதிர்ந்து போனார். இன்னும் ஒரு வாரத்தில் பையனுக்கு கல்யாணம் நிச்சயித்து இருக்கையில் இதென்ன புது விபரீதம்! நம் பையன் தவறு செய்து இருப்பானோ? அவரைப் பொறுத்தவரையில் காதலுக்கு எல்லாம் எதிரியில்லை! நேரடியாக சொல்லியிருந்தால் அவரே திருமணம் செய்து வைத்திருப்பார். இப்போது என்ன செய்வது? சம்பந்தி வீட்டாருக்கு என்ன பதில் சொல்வது? அந்த அதிகாலைப் பொழுதிலும் அவருக்கும் நெற்றியில் வியர்த்தது.

”அங்கிள்! தயவு செஞ்சு என்னை ஏத்துக்கோங்க! இந்த அபலைக்கு வாழ்வு கொடுங்க!” ப்ரியா சொல்லிக் கொண்டே போக

”என்னம்மா ஏதேதோ சொல்லிக் கிட்டே இருக்கே! உன்னை எப்படி நான் நம்ப முடியும்? என் பையன் தப்பு செய்ய மாட்டான். நான் அவனை அப்படி வளர்க்கலை! அவன் உன்னை காதலிச்சு இருந்தா டைரக்டா என்கிட்டே வந்து சொல்லியிருப்பான். இப்படி திருட்டுக் கல்யாணம் எல்லாம் பண்ணியிருக்கமாட்டான். ஒரு போட்டோவை வைச்சிக்கிட்டு இப்படி பழி போடுற வேலை வேண்டாம். உனக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லு!”

அந்தப் பெண் அழ ஆரம்பித்தாள். ”ஐயோ! அங்கிள்! உங்க வாயாலே அப்படிச் சொல்லாதீங்க! நான் பணத்துக்காக இங்கே வரலை! என் வாழ்க்கையைத் தேடி வந்திருக்கேன்.!”

”நல்லாத் தேடி வந்தே வாழ்க்கையை? பணக்காரப் பையன்னு தெரிஞ்சு வலை விரிச்சு பிடிச்சிருக்கே! இதெல்லாம் நான் நம்பத் தயாரா இல்லை!”

”நீங்க என்னை ஏத்துக்க மறுத்தா நான் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியிருக்கும்!”

”போயேன்! போ!”

“அப்புறம் உங்க மானம் மரியாதை எல்லாம் போயிரும்! இந்த சொசைட்டிலே உங்களுக்கு நல்ல பேர் இருக்கு! அது கெட்டுட வேணாம்னு பார்க்கிறேன்.”

”அட! எவ்வளவு அக்கறை?”

”அக்கறை இருக்கிறதாலேதான் மாமா உங்க கிட்டே நியாயம் கேட்டு இங்கே நின்னுக்கிட்டிருக்கேன். இல்லேன்னா நீங்க சம்பந்தம் பேசி இருக்கிற இட்த்துலே போயி சண்டை போட்டிருப்பேன்.”

”என்னம்மா மிரட்டறியா?”

“மிரட்டலே அங்கிள் நியாயம் கேக்கறேன்!”

“என்னம்மா பெரிசா நியாயம் கேட்கறே? இன்னிக்கு இங்கே வந்து என் கிட்டே நிக்கறியே அன்னிக்கு என் பையன் எனக்குத் தெரியாம கல்யாணம் கட்டிக்க கூப்பிட்டபோது எங்கே போச்சு அந்த நியாயம்? உங்க அப்பனுக்குத் தெரியாமா தாலி கட்டிக்க மாட்டேன்னு சொல்ல வேண்டியதுதானே! அப்ப கட்டிக்கிட்டு இன்னிக்கு என் கிட்டே மல்லுக்கு வந்து நிக்கறே!”

”அன்னிக்கும் நான் மல்லுக் கட்டினேன்! ஆனா உங்க புள்ளைதான் ஒத்துக்கலை! நீ ஏழைப் பொண்ணு! எங்கப்பாவோட ஸ்டேட்டஸ் உன்னை ஏத்துக்காது! கல்யாணம் பண்ணிப்போம்! ஒரு ஆறு மாசத்துலே கன்வின்ஸ் பண்ணி உன்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறேன்னு சொன்னாரு ஆனா..” கண்களில் கண்ணிர் மிதக்க சோகமானாள்

”இதெல்லாம் நம்பற கதையா இருக்கா? சரி இந்தவிஷயம் உன் வீட்டுக்கு தெரியுமா?”

”எனக்கு அப்பா அம்மா கிடையாது! பெரியப்பா வீட்டுலேதான் வளர்ந்தேன். நான் படிச்சு முடிச்சு வேலைக்கு போக ஆரம்பிச்சதும் அவங்களுக்கு பாரமா இருக்க வேண்டாம்னு ஹாஸ்டல்லே தங்கிட்டேன். என் பெரியப்பா வீட்டுக்கு இதெல்லாம் தெரியாது”.

”ஸோ.. இது நீயும் என் மகனும் மட்டும் சேர்ந்து எடுத்துக்கிட்ட முடிவு அப்படித்தானே..”

”ஆமாம் சார்”!

”அப்ப நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லே! என் பையனை கூப்பிடறேன்! அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம்!”.

”என்ன மாமா இது! நீங்க அவரோட அப்பா! அவர் தப்பு செஞ்சா நீங்கதான் புத்தி சொல்லி என்னோட சேர்த்து வைக்கணும்.”

”அதெல்லாம் நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து தப்பு செய்யறதுக்கு முந்தி யோசிச்சிருக்கணும்”

ரங்கராஜன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கஜேஷ் அறையில் இருந்து வெளியே வந்தான். ப்ரியாவை பார்த்து ஒரு கணம் தயங்கினான்.

” நீ… நீ..”

“பேரு கூட மறந்து போச்சா கஜேஷ்! நான் ப்ரியா!”

“ப்ரியாவா? யாரு நீ? உனக்கு என்ன வேணும்?”

”கஜேஷ் அவ உன் பொண்டாட்டின்னு சொல்றா? இதோ போட்டோவைப் பாரு!” ரங்கராஜன் போட்டோவை கஜேஷ் முன் வீசினார்.

”அதை எடுத்துப் பார்த்த கஜேஷ். அப்பா இது பொய்! போட்டோஷாப்! இவ யாருன்னே எனக்குத் தெரியாது…!” என்றான்.

”கஜேஷ் நாம காதலிச்சது! பீச் பார்க்குன்னு சுத்தனது எல்லாம் பொய்யா!”

”நீயே பொய்னு சொல்லிக்கிட்டிருக்கேன்!”

”ஒரு பொண்ணோட வாழ்க்கையை பாழடிக்காதீங்க இரண்டு பேரும்!”

”நான் தான் உன்னைப் பார்த்ததே இல்லைங்கிறேன்! அப்புறம் எங்கே பாழாக்கிறது!”

”பெண்பாவம் சும்மா விடாது கஜேஷ்!”

“ஆண்பாவமும் பொல்லாததுதான்! இந்த சீன் போடற வேலை எல்லாம் வேண்டாம்!”

”அப்ப எனக்கு ஒரு வழியை சொல்ல மாட்டீங்களா?”

“நீ போக வேண்டிய வழி இதுதான்…! கிளம்பு இல்லே போலீஸை நானே கூப்பிடுவேன்!” வாசலைக் காட்டினார் ரங்க ராஜன்.

அந்தப் பெண் சோகமாக வெளியே போக! மறைவில் இருந்து வெளிப்பட்ட ஒருவன் வேகமாக வந்து கை கொடுத்தான்.

”சார்! கை கொடுங்க! ரெண்டுபேரும் கொஞ்சம் கூட அசரலியே நீங்க ரெண்டு பேரும்”. கொஞ்ச நேரம் எதுவும் புரியாமல் விழித்தனர் இருவரும்

”எதுக்கு அசரணும்! மடியிலே கனம் இருந்தாத்தான் வழியிலே பயம் இருக்கணும் ஆமா நீங்க யாரு!”

”நான் தான் சார் மனோஜ்! மனோ யூ டியுப் சானலோட ஓனர். எங்க சேனலோட ஒரு ப்ராங்க் வீடியோதான் இப்போ ஷூட் பண்ணது. வித்தியாசமா ஏதாவது பண்ணனும் லைக்ஸ் அள்ளனும் அதுக்காகத்தான் வித்தியாசமா இப்படி ப்ரோக்ராம் பண்ணிக்கிட்டிருக்கோம். ப்ரியாவா உங்க வீட்டுலே நடிச்சது என்னோட கொலிக் மாயா. எவ்வளவோ அட்டாக் பண்ணாலும் அசராம பதிலடி கொடுத்திருக்கீங்க! எங்க சேனல் சார்பா உங்களுக்கு ஒரு சின்னப் பரிசு!” என்று ஒரு கிப்டை நீட்ட

”அடேய்… உஙக் ரவுசுக்கு ஒரு எல்லையே இல்லையா? ரோட்டுக்குள்ளே ப்ராங்க் வீடியோ எடுத்துட்டிருந்த நீங்க இப்போ வீட்டுக்குள்ளேயும் புகுந்திட்டீங்களா உங்களுக்கு வைக்கறேன் பாரு வேட்டு” என்று டீப்பாய் மேல் இருந்த தடிமனானா புத்தகத்தை எடுத்து கஜேஷ் வீச.

”வேணாம் சார்! ஏதோ நான் “வாழ்க்கையைத் தேடி“ ஒடிக்கிட்டிருக்கேன் விட்டுடுங்க!” என்று ஓட ஆரம்பித்தான் மனோஜ்.

(சங்கப்பலகை முகநூல் குழுவில் கணேஷ்பாலா சார் கொடுத்த படத்திற்கு எழுதிய கதை)

– மே 2021

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவன். படிப்பு இளங்கலை வணிகவியல், பணி நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலய குருக்கள். எழுத்தார்வத்தால் 1993 முதல் எழுதி வருகிறேன். முதல் படைப்பு கோகுலம் சிறுவர் இதழில் வெளியானது. கல்கி, குமுதம், பாக்யா, ஆனந்தவிகடன், குங்குமம், இந்து தமிழ் இதழ்களில் நகைச்சுவை துணுக்குகள், குறுங்கதைகள் எழுதியுள்ளேன். தளிர் என்னும் வலைதளம் நடத்தி வருகிறேன். thalirssb.blogspot.comமேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *