வாழப் பிறந்தவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 5,513 
 

நடுச்சாமம்.

இரவு ஊர்ந்து கொண்டிருந்தது.

ஒளி உமிழ்ந்து பரப்பி நின்ற மேஜை விளக்கின் பாதத்தில் விரிந்து கிடந்த வைத்திய சஞ்சிகை ஒன்றில் கருத்தை மையமிட்டுப் படித்துக்கொண்டிருந்தார் டாக்டர் சேகரன்.

“டாக்டர் ஐயா.”

“….”

“டாக்டர் எசமான்”

ஒன்றியிருந்த உள்ளத்தைத் திருப்பிவிட்டுக் குரல் குறுக்கிட்ட திசைக்குத் திருஷ்டியைத் திருப்பினார். வாசல் கதவு படீர் படீ ரென்று ஓசை ஓலமிடத் தட்டும் சப்தம் காதைத் துளைத்தது; ஓடிப்போய்த் திறந்தார்.

மூச்சுப்பிடிக்க ஓடிவந்து அறையில் விழுந்த கண்ணுச்சாமியைக் கண்டதும் டாக்டருக்குத் திகைப்பு வளர்ந்தது.

“கண்ணுச்சாமி.”

“எசமான், காஞ்சனை எங்கேயோ மறைஞ்சுப் போயிட்டாளே.”

“காஞ்சனை!”

சேகரனுக்குப் பகீரென்றது. மனத்திரையில் புனையா ஓவியமெனத் தீட்டப்பட்டிருந்த அவள் எழில் பிம்பம் இமைப்பொழுதில் அவர் கண்முன் நிழல் வடிவிட்டது. விழிகள் கண்ணீர் கூட்டின.

“என்ன, காஞ்சனை மறைந்துவிட்டாளா? அதுவும் இந்த அகாலவேளையில் குமையும் இருள் வீச்சிலே?”

“ஐயையோ, என் அருமை மகள் எங்கே போனாளோ தெரியலையே. எப்பவும் போலத்தான் தூங்கிக்கிட்டிருந்துச்சு. என்னமோ லேசாச் சத்தம் கேட்டது. விழிச்சுக்கிட்ட நான், “யார் அது” என்று குரல் கொடுத்துப் பார்த்தேன். பதிலே வல்லை. மனசு சந்தேகப்பட்டது. விளக்கைத் தூண்டிக் காஞ்சனை படுத்திருந்த இடத்தைப் பார்த்தேன். அந்த இடம் சும்மா காலியாயிருந்துச்சு. என் உயிரே போயிடுச்சு எசமான்.”

துயரம் சுருதி சேர்க்க விக்கலுடன் நடந்ததைச் சொன்னான் கண்ணுச்சாமி.

“காஞ்சானை இப்படித் திடுதிப்பென்னு மறைய என்னதான் காரணம்? பெண் இதயம் பேதலிக்கப் பிழைபட ஏதாகிலும் சொன்னாயா?”

மனம் கற்பித்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு கேள்வியை உதிர்த்துவிட்டார் டாக்டர், கண்ணுச்சாமியிடம்.

ஆனால் கேட்ட கேள்வி அவனைச் சுட்டுவிட்டதோ என்னவோ, பாவம்! பச்சைக் குழந்தை போல அவன் விசித்து அழ ஆரம்பித்தான்.

“எசமான், ‘அது’ பிறந்த நாளிலிருந்து முகம் கண்ட இதுவரை ஒரு வார்த்தைக் கூடச் சொன்னதில்லிங்க.”

“ஒரு வேளை ரயிலடிப்பக்கம் போயிருக்கலாம்; ஏனென்றால், இன்னும் அரைமணி நேரத்தில் வடக்கே ஒரு ரயில் இருக்கிறது. எதற்கும் பதட்டப்படாமல் வா, போய்ப் பார்க்கலாம்.”

எங்கும் மோனம்!

ரயிலடிக்குச் சென்று கொண்டிருந்த அவர்கள் இருவரும் வழியில் குறுக்கிட்ட ஆற்றுப் பாலத்தை அணுகும் போது, இருளில் ஒரு புள்ளியென வெள்ளை உருவமொன்று முன் செல்வது புலனாயிற்று. மறுவினாடி, ‘தொபேலெ’ன்று பெருத்த ஓசை ஓலம் எழுப்பி அமைதியைக் கலைத்தது, அதே தருணத்தில் பாலத்தில் போய்க்கொண்டிருந்த உருவமும் மறைந்தது.

“என்ன அந்தச் சப்தம்?”

“நீங்களும் கவனிச்சிங்களா எசமான்?”

அடுத்த கணம் சேகரன் தண்ணீ ரில் குதித்தார். நல்ல வேளையாகத் தண்ணீர் கழுத்தளவே இருந்தது. நீரில் மூழ்கி எழுந்த அவர் கையில் மனித உடல் ஒன்று தட்டுப்பட்டதை உணர, பலத்தை ஒன்று சேர்த்து அவ்வுருவத்தைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.

வழியில் கிடத்தப்பட்டிருந்த உடலை அருகிலிருந்த விளக்குக் கம்பத்தின் மங்கிய ஒளியில் உற்றுக் கவனித்தான் கண்ணுச்சாமி. உள்ளம் அதிர, “ஐயோ, கடைசியிலே அது என் காஞ்சனைதானா?’ என்று அலறினான்.

“காஞ்சனை!”

முத்துப் பதிந்த மென்முறுவல்; அதிலே மயங்கச் செய்யும் காந்த இழைவு, வேல் விழிகள்; அதிலே மனங்கவர் மானின் மருட்சி தளிர் மேனி; அதிலே பருவ வளர்ச்சியின் பூரித்த அங்கங்கள். ஆமாம்; அனைத்தும் காஞ்சனை!

இருந்தும்….!

வாழ்க்கைப் பூங்காவில் புதுமணம் பரப்ப வேண்டிய புதுமலர் பேயும் அஞ்சும் மையிருட்டில் ஆற்றைச் சரணடையக் காரணம்? இளமையின் தொடக்கத்திலேயே வாழ்வு வெறுக்கும்படி என்னதான் சம்பவித்தது?

வீட்டிற்குக் கொண்டுவந்து படுக்கவைத்தான் கண்ணுச்சாமி. அவள் விரக்திக்குக் காரணம் பிடிபடாமல் மனம் குழம்பிக் கிடந்த சேகரன் ஸ்டெத்தாஸ்கோப் கொண்டு சோதனை செய்து பார்த்தார். உயிருக்குப் பயமில்லை என்பதை உணர்ந்தும் அவருக்கு மிக ஆறுதுல் உண்டானது.

நிமிஷங்கள் சில தேய்ந்தன.

இணைந்திருந்த இமை வட்டங்களிடையே விழி விரிப்பு. மெல்ல மெல்லக் கண்களைத் திறந்து சுற்றிப் பார்த்தாள் காஞ்சனை.

டாக்டர் முகத்தில் வியப்பு; கண்ணுச்சாமிக்கு அப்போதுதான் போன உயிர் மீண்டது போன்ற அமைதி.

காஞ்சனையின் புருவங்கள் மேலேறி நின்றன. சேகரன் திரும்பினார், அவள் பக்கமாக பார்வைகள் பரிமாறன.

“காஞ்சனை, இருந்திருந்தாற்போல ஆற்றில் விழ நேரிட்டதின் மர்மம்தான் என்ன?’ டாக்டர் அன்புடன் வினவினார்.

அவள் பதில் கூறாமல் கண்ணீர் பெருக்க ஆரம்பித்தாள்; உடல் நடுங்க மார்பகம் ஓர் முறை விம்மித் தாழ்ந்தது.

“காஞ்சனை, ஏன் இப்படித் தேம்புகிறாய்? உன் மௌனமும் மனக் கலக்கமும் உன் தந்தைக்கு எவ்வித சஞ்சலத்தை உண்டாக்கும் என்பதை யோசித்தாயா? சொல். என்னவானாலும் வாயைத் திறந்தது பதில் கூறு.”

இவ்விதம் சொல்லிய டாக்டர் திரும்பவும் அவளை நோக்கினார். விழிவெள்ளம் அடங்கவில்லை. தன் தந்தையையும் சேகரனையும் மாறி மாறிப் பார்த்த அவள் பார்வையில் அடியுண்ட மானின் வேதனை தடம் பரப்பியது.

“டாக்டர் ஸார், தயவு செய்து என்னைத் தடுக்காதீர்கள். நான் சாகப் பிறந்தவள். உலகம் சிரிக்க, மனசுக்கு என் இதய அந்தரங்கத்தை வளைத்து முத்தமிட்டுச் செல்லும் நரக வேதனையைச் சகிக்க எப்படி என் மனம் தாழும்?”

“காஞ்சனை, விபரமாகச் சொல்.”

“நான் கர்ப்ப வதி.”

“என்ன ?”

இரண்டு குரல்கள் ஒரே சமயத்தில் எதிரொலித்தன.

“சில வாரங்களுக்கு முன் நடந்த விஷயம். பணத்தின் மமதையில் இடப்பட்ட விஷவித்து . மிட்டாதார் மகள் என்வகுப்புத் தோழி. ஒருநாள் அவளிடம் புத்தகமென்று வாங்கப் போனேன். அவள் இல்லை, அவள் தமையன் மட்டுமே இருந்தான். நான் புறப்படுவதைக் கண்ட அவன், தன் தங்கை வரும் நேரமாகிவிட்டதாகத் தங்கச் செய்தான். தான் தங்கினேன், தோழியைக் காண. ஆனால் மறுநிமிஷம் அந்தப் பாவி என்னை பலவந்தப்படுத்தி… ஐயோ…. இந்த இழிவு நிலையிலா மீண்டும் இவ்வுலகைத் திரும்பக் காண என்னை காப்பாற்றியிருக்கிறீர்கள். ஊஹும் சாத்திமில்லை. திரும்பவும் தந்தையின் முன்னிலையில்.. உங்கள் முன்னிலையில்… அந்தோ !”

வார்த்தைகள் குழம்பின.

இளகிய நெஞ்சம் படைத்தவனல்லவா தமிழன்?

சேகரன் கண்கலங்கினார். கண்ணுச்சாமி செயலிழந்தான்.

டாக்டர் சிந்தித்தார். சிந்தனையின் தொடுவாயில் எண்ணங்கள் அலைபாய்ந்தன.

“காஞ்சனை கபடமற்றவள். பச்சைப் பசுங்குழந்தை போன்றது அவள் மனப்பண்பாடு, தகதகக்கும் செந்தணல் பிழம்புகளில் அவளைத் தள்ளி அவளுடைய மலரவேண்டியவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியிடத்தான் திட்டமிட்டிருப்பான் அந்த வஞ்சகன். அதன் நிமித்தம் அவள் வெந்து சாம்பலாக வேண்டியதுதானா? எத்துணை கோரமான நியதி! நினைக்கவும் மயிர் சிலிர்க்கும் ஆணையல்லவா? உலகில் பிறக்கத் தவங்கிடந்து, பின் இப்படிச் சாவை அரவணைக்க அதற்கு வரவேற்பும் அளிக்க வேண்டுமா? கூடவே கூடாது. பெண் பாவம் பொல்லாதது. தூண்டிற் புழுவாகத் துடிக்கும் அவளுக்கு அபயமளிப்பதே புண்ணியம் கடமை. ஆம்; அவள் காப்பாற்றப்பட வேணும். இனி கொஞ்சனை என் உயிர்த்துணைவி… ஆகா!”

தன்னிடம் வேலை செய்யும் காவற்காரனின் மகளைக் கரம்பற்ற முடிவு செய்தார் டாக்டர். வாழ்க்கைப் புத்தகத்தின் ஆரம்ப அத்தியாயம் அவளாலேயே துவக்கப்பட வேண்டும். அவருக்கு அனைத்தும் கனவு மாதிரி தோன்றிற்று.

நீர்த்திரையிட்டிருந்த கண்களுடன் காஞ்சனையை நோக்கி “காஞ்சனை, நீ என்னை மணம் செய்து கொள்ள….” என்றார்.

இக்கேள்வியைக் கண்ணுச்சாமி எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அவன் முகத்தில் ஆச்சரிய ரேகை தாரை ஓடியது.

“டாக்டர், குற்றம் படைத்த என்னை ஏற்றுக் கொண்டீர்களானால் அப்புறம் சமூகம் உங்களைத் தூற்ற ஆரம்பிக்குமே.”

சமூகம் அது கிடக்கட்டும். அதே சமூகம் உன்னுடைய மாசு மருவற்ற புனிதத் தன்மையை ஏன் ஊகித்துணர முடியாதென நினைக்கிறாய்.

“அப்படியென்றால் நான் வாழப் பிறந்தவள்தானா?”

நன்றியின் மிகுதியில் அவள் கண்ணீர் உகுத்தாள். டாக்டரின் கால்களைப்பற்றிப் பணிய ஓடினான் கண்ணுச்சாமி.

ஆனால்….?

மறுவினாடி அண்டம் கலங்க எழும்பிய ‘ஐயையோ’ என்ற வேதனை கலந்த அபயக் குரல் கேட்டுத் திரும்பினார் சேகரன்.

காஞ்சனையின் மார்பில் பதிந்திருந்த வாளைப் பிளந்து பிரவகித்துக்கொண்டிருந்தது குருதி வெள்ளம். தற்கொலை!…

ஒன்றும் தோன்றாமல் நின்ற டாக்டருக்கு உலகமே சுழன்றது. கண்ணுச்சாமி பேய்ச் சிரிப்பு உமிழ்ந்தான்.

என்ன தோன்றிற்றோ, அடுத்த கணம் மிட்டாதார் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் கண்ணுச்சாமி.

– பூவையின் சிறுகதைகள் – முதல் பதிப்பு – டிசம்பர் 2003 – பூவை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *