வார்த்தை ஊற்று

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2023
பார்வையிட்டோர்: 3,102 
 

விமானத்தில் திருச்சி வந்திறங்கி, டாக்ஸி புக் செய்து திருவானைக்கால் போய்ச் சேர்வதற்குள், பத்து முறை அலைபேசியில் அழைத்துவிட்டார் அருணகிரி அண்ணன். எப்போதும் அவர் அப்படித்தான். இதயம் எப்போதும் உள்ளிருக்காது. சட்டைக்கு வெளியே சல்லாபித்துக்கொண்டு சிரிக்கும்.

“இன்னும் 10 நிமிஷத்துல வந்திடுவோம்ணா..! நீங்க பதற்றப்படாதீங்க…” சொல்லிவிட்டு அலைபேசியில் வழிந்த அன்பை ஆத்மார்த்த மாக தரிசித்தபடி பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க, திருவானைக்காலை தன்னுடைய கண்களில் குத்தகைக்கு விட்டு இருந்தார் பார்த்திபன்.

மறுமுனையில் நான். நான் பிறந்து வளர்ந்த ஊர், நாகரிகங்களின் உதவியால், மெள்ள மெள்ள செதுக்கப்பட்டு இருக்கின்ற அழகை ரசித்தபடி பயணித்திருந்தேன்.

இம்முறை பார்த்திபனின் அலைபேசி சிணுங்கியது. எந்திரமாய் எடுத்தார், “சொல்லு அமலா… இன்னும் போய்ச் சேரல..! இப்பத் தான் கேப்ல இருக்கோம்…”

“…”

“பக்கத்துலதான் இருக்கா. பேசறியா..?”

“சரி சரி..! நாளைக்கு ஈவினிங் ரிட்டர்ன். இந்த ஒருநாளே கஷ்டம்தான். ஊருக்கு வந்திட்டு கூப்பிடறேன்.”

அலைபேசியைத் தேய்த்துவிட்டு வைத்தார். அவரும் சொல்லவில்லை… நானும் கேட்க வில்லை என்ன பேசினார்கள் என்று,

டெல்லியில் மருத்துவக் கல்லூரியில் இருந்தாள் மகள் அமலா. ஆறு மாசத்துக்கு ஒருமுறை வந்து போனாலே பெரிய விஷயம்.

தெருமுனை திரும்பும்போதே தூரத்தில் அண்ணன் காத்திருப்பது தெரிந்தது. வாசலில் அழகாய் சீரியல் விளக்குகள் கட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு இருந்தன. வெளிச்சத்தின் மகத்துவத்தை எடுத்துச் சொல்ல, இருட்டு இன்னும் வந்திருக்கவில்லை..! இருட்டு மட்டும் இல்லாமல் போனால் வெளிச்சத்துக்கு மதிப்பேது..? காரைப் பார்த்து கையசைத்து, எதிர்கொண்டு அழைக்க வந்த அண்ணனின் உடல்மொழி, இன்னும் மாறாத அன்பின் அடையாளமாக இருந்தது.

ஒரு பார்வைக்கு உலகம் இன்னும் அன்பின் பரிபாஷையை பிரகடனம் செய்வதில் அப்படியேதான் இருக்கிறது. இறங்கிக் கொண்டு நடந்து உள்ளே வரும் வரைக்கும் என்னிடம் விசாரிக்க அவரிடம் நிறைய அன்பின் ஈரம் மிச்சமாய் இருந்தது.

“மாப்பிள்ளைக்கும் சிரமம் குடுத்துட்டோம். ஆனால், இதெல்லாம் ஒரு வாய்ப்பு. தவற விட்டால் திரும்ப கிடைக்காது…” அவரே கேள்வியுமாகி பதிலுமாகி சொல்லிக் கொண்டார்.

பார்த்திபன் சிரித்துக்கொண்டார். இப்போ தெல்லாம் அவரிடம் பல கேள்விகளுக்கு அளிக்க உடல்மொழியாகக்கூட வார்த்தைகள் ஊடாடுவதில்லை. சிரிப்பு, பலநேரம் முறைப்பு.

அலங்காரம் பண்ணி இருந்த சம்மு எழுந்து ஓடோடி வந்தாள் எதிர்கொண்டு. இந்த பிணைப்பு எதில் விளைகிறது என்று இனம் காணத் தெரியவில்லை. எத்தனையோ வருடங்கள் ஆகிறது பார்த்துக்கொண்டு.

“அத்தை…” வயிற்றைக் கட்டிக் கொண்டாள். அறைகளில் இருந்து நாற்காலிகள் கூடத்துக்கு இடம் பெயர்ந்தன. அறைகளுக்கு உள்ளும் புறமும் இருந்தும் உறவுத்தலைகள் எட்டி எட்டி முளைத்தன. ஓடோடி வந்து கட்டிக் கொண்டது ஒரு கூட்டமென்றால், விழுந்து போன இடைவெளியை நிரப்ப உறுதிப்பட்ட வார்த்தைகள் இல்லாமல் நின்றது ஒரு கூட்டம்.

“வா பத்மா… வாங்கண்ணே..! ஊர்ல எல்லாரும் சௌக்கியமா..?” பரிமளா அண்ணி நாங்கள் இருக்கிற ஊரில், இல்லாத உறவுகளை விசாரித்துக்கொண்டு வந்து நின்றாள். வீடியோ காலில் முகம் ஊதி, மூப்பாய் தெரிந்த அண்ணி, நேரில் பாபநாசத்தில் பெண் பார்த்தபோது இருந்ததைப் போலவே இருந்தாள்.

சுவரின் கலரை மாற்றியதைத் தவிர, பெருசாய் எந்த மாற்றமும் இல்லை அங்கே. ஓடியாடிய கூடம், உட்கார்ந்து படித்த திண்ணை, மயில் மேடை போட்டு சடங்கு செய்த முற்றம், அமலா பிறந்தபோது குழந்தை யைக் காலில் கிடத்தி, குளிப்பாட்டி விட்ட ரேழி… நான் குழந்தையாய் இருந்தது முதல், என் குழந்தையைப் பெற்றது வரைக்கும் அத்தனையையும் அங்கே நிழல்படமாய் கண்ணுக்கு புலப்படாமல் நினைவில் மட்டும் நிறைந்து என்னை தட்டியெழுப்பிக்கொண்டு இருந்தது.

காலம் என்ற உளியால், என் நினைவுச் செப்பேட்டில் செதுக்கிய அத்தனையும், மனக் கண்முன் படம் ஓட்டியது. படித்து முடித்ததும் எனக்குத் திருமணமாகி பார்த்திபனுடன் சென்னைக்குக் கிளம்பியாயிற்று. நல்ல வாழ்க்கைக்குச் சொல்லப்பட்ட அத்தனை லௌகீக லட்சணங்களும் உள்ள வாழ்க்கை. எனக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் பணி கிடைத்தது. அடுத்த வருடமே அமலா பிறந்து என் முழு வாழ்க்கையும் ஆசீர்வதித்தாள்.

அருணகிரி அண்ணனுக்கு அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் திருமணம் நடந்தது. தோஷ ஜாதகம்… பெண் குதிர்வது ஒன்றும் அத்தனை லேசான வேலையாக இல்லை. பரிமளா அண்ணியை பாபநாசத்தில் பேசி முடித்து, திருமணம் முடிப்பதற்குள், யானை குதிரையாய் இளைத்து இருந்தது.

திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கழித்துதான் சம்மு பிறந்தாள். இன்று பெரியமனுஷியாய் வளர்ந்து நிற்கும் அவள் இன்னும் கையில் பூத்த செவ்வரளியாய் கணமில்லாமல் புதைந்து கிடந்தது உள்ளங்கையில் கதகதக்கிறது.

வீட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருந்தது மண்டபம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஊருக்குள் முகம் பார்ப்பதால் அத்தனை பேரும், ஓடி வந்து அன்பாடினார்கள். பார்த்திபன் எதிலும் ஒட்டாமல் நின்றார். `பட்டணத்துக்காரர் அப்படித்தான் இருப்பார்’ என்று முணுமுணுத்துக் கொண்டார்கள்.

ஆனால், அவர் இயல்பே அதுதான். அவருண்டு அவர் வேலையுண்டு. இது நல்ல இயல்பா..? தெரியவில்லை..! ஆனால், அமலாவும் டெல்லிக்கு படிக்கப் போன பிறகு, தனிமை கொடியேற்றி திருவிழா கொண்டாடிக் கொண்டு இருந்தது வாழ்க்கையில். பிணக்கு களும் இல்லை, பேதமைகளும் இல்லை. இழுத்த இழுப்புக்கெல்லாம் இணைந்து ஓடிவரும் எலாஸ்டிக் நாள்கள்.

அனுசரித்துப் போவது மட்டும் அன்பின் அடையாளமாகிவிடுமா..? கோபத்தில் விளையும் அந்நியோன்யங்கள் ஒரு வாழ்க்கை யின் நகர்தலுக்குக் காரணமாக அமைகிறதா இல்லையா..?

மாலையில் நல்ல விமரிசையாய் சம்முவின் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இது மாதிரி யான விழாக்கள் தேவையா, இல்லையா என்ற பட்டிமன்றங்கள் நடந்தேறிக்கொண்டு இருந் தாலும், தேவைப்படுபவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

குர்தியும் லெகின்ஸுமாய் பழகிய உடல், சில்க் காட்டனுக்கு சிரிக்க மாட்டேன் என்று சிலிர்த்துக்கொண்டு இருந்தது. அமலாவுக்கு இதுமாதிரி செய்து பார்க்கவில்லை என்ற நினைப்பும் சட்டென்று மின்னல் வெட்டி மறைந்தது.

விமரிசையாக இல்லாவிட்டாலும் பரவா யில்லை, வீடடங்கவாவது செய்து பார்த் திருக்கலாம். பாலகத்துக்கும், பருவத்துக்கும் நடுவில் வாசலில் நிற்கும் அந்தக் குமரி வேஷம் போட்ட குழந்தை முகத்தின் புகைப்பட பதிவின் இயல்பான அழகு, அடுத்தெந்தப் பருவத்திலும் இருக்காது.

என்னுடைய சிந்தனைதான் பார்த்திபனுக்கு ஓடுகிறதா என்று திரும்பிப் பார்த்தேன். அவர் என்ன உறவுமுறையென்றே தெரியாத யாரோ விடம், எதையோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டு அமர்ந்து இருந்தார். சமீபமாய் அவர் பேசிய மிக நீண்டபேச்சு இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

உறவுகள் சூழ்ந்து இருப்பது, பூத்த தோட்டத்துக்கு நடுவே அமர்ந்திருப்பதுபோல் புத்துணர்வாக இருந்தது.

வீடு திரும்ப இரவு பத்தைத் தாண்டிவிட, நெருங்கிய உறவினர்கள் தவிர அத்தனை பேரும் கிளம்பியாகிவிட்டார்கள். உள்ளே இருந்த அறைக்கு பார்த்திபன் உறங்கச் செல்ல, முற்றத்தில் விழுந்த வெண்ணிலவின் வெளிச்சம், காலடியைத் தொட்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தது

மடி தேடி வந்து முகம் புதைத்துக்கொண்டு படுத்த சம்முவின் கன்னத்தை வருடித் தந்தேன். அண்ணன் வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டார். பரிமளா அண்ணியும் இன் னொரு பக்கம் வந்து அமர்ந்துகொள்ள, மெல்லிய சந்தோஷம் சுற்றிலும் வெளிச்சமாக விரவிக் கிடந்தது.

பழைய கதைகளில் ஆரம்பித்து புதுக் கதைக்கு பயணப்பட்டு நின்றோம். கடந்த நினைவுகளைத் தூசிதட்டி எழுப்பி திரும்ப நினைத்தபோது நினைவுகள் புதுசாய் சொகுசாய் இருந்தது.

“வியாபாரம் எல்லாம் எப்படிண்ணே இருக்கு… போதுமானதா இருக்கா..?”

“தேவை போதுமானதா இருக்கோ, இல்லையோ… ஆசை போதுமானதா இருக்கு…” நிறைவாக வாழ்பவனை ஆசைகள் உடைத்ததாய் சரித்திரமில்லை… உண்மையான வார்த்தைகள்.

கொஞ்சமாய் வெளிச்சமும், திணற வைக்காத காற்றும் இதமாக இருந்தது.

உறவுப் பேச்சுகள் தீர்ந்துபோக, பரிமளா அண்ணி திரும்பி அமர்ந்து அண்ணனிடம் பேச ஆரம்பித்தார்.

“சாமிநாதன் வந்திருந்தாரா… நான் பார்க்கலயே..?”

“வந்திருந்தார். அவர் வீட்டிலதான் வரலை.”

“கொஞ்சம் பலகாரம் மீதமிருந்ததே, அதை மண்டபத்து வாட்ச்மேனுக்கு குடுத்திட்டு வந்திருக்கலாம். விட்டுப் போச்சு கவனிக்க…”

“ஆமாம் விட்டுப் போச்சு…”

“தூக்கம் வருதா என்ன… பேச்சுல சுவாரஸ்யமே இல்லையே…” இடையில் விசாரணை வேறு. எனக்கு சின்ன வெட்கப் புன்னகை அரும்பியது. போனை பார்த்துக்கொண்டே கவனிக் காததுபோல் அமர்ந்திருந்தேன்.

“என்ன பரி சுவாரஸ்யம் இதுல..? நீ கேட்குறே நான் பதில் சொல்றேன். உங்க பெரியப்பா பையன் மூர்த்தி வரவே இல்லை பார்த்தியா..? மெனக்கெட்டு நான் போய் சொல்லிட்டு வந்தேன்…” தூணுக்கு அந்தப்புறம் இருந்து ஆதங்கம் வந்தது.

“வருத்தப்பட ஒண்ணும் இல்லை..! அவர் சூழ்நிலை என்னவோ..? நாளைக்கு போன் பண்ணி விசாரிப்பாரு பாருங்க. வந்து போகணும், ஏதாவது மொய் வைக் கணும். இப்போ எல்லார் கையும் தேய்ஞ்சுதான இருக்கு. மனுஷங்க சூழலை புரிஞ்சுக்கணும்.”

“அட..! நான் என்ன மொய்யா கேட்டேன். வந்து நின்னு வாழ்த்தினா ஆகாதா..?”

“உங்களுக்கு அது போதும்… ஆனா, அவருக்கு மனசு என்ன பாடுபட்டுச்சோ… விடுங்க சும்மா குறையா யோசிக்காம..! ஏங்க நாளைக்கு பத்மா வையும் அண்ணனையும் கோயிலுக்கு கூட்டிட்டு போறோம் இல்ல..! நாளைக்கு கறி எடுக்க முடியாது. இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகச் சொல் லுங்களேன்…”

“மாப்பிள்ளை இந்த இரண்டு நாள் வந்ததே பெரிசு..!”

“தோப்புக்காரர்கிட்ட சொல்லி இருக்கேன். தேங்காய் ஊருக்கு அனுப்ப…”

“ஃபிளைட்டுல எடுத்துட்டு போக முடியுமோ என்னவோ..?”

“இருமலா இருக்குன்னு சொன்னீங்களே, பால்ல மஞ்சள்தூள் போட்டு எடுத்துட்டு வரவா…”

பேச்சுக்கள் கரைந்து கரைந்து அவர்கள் பிடி மானத்தை அழகாய் பறைசாற்றிக்கொண்டு இருந்தன. முற்றத்திலேயே தலையணையைப் போட்ட அண்ணன் படுத்துவிட, பரிமளா அண்ணியின் கேள்விகளுக்கு ஒற்றைத் தலை அசைப்புகளும், `ம்’ என்ற முனகலும் மட்டும் பதிலாய் வர, அண்ணி எழுந்து படுக்கையைத் தட்டிப் போட்டார்.

சன்னமாய் திறந்திருந்த கதவின் வழியே தெரிந்தது. பார்த்திபன் மொபைலில் மும்முரமாக இருந்தார். அண்ணி எதிரில் வந்து அணுசரணையாய் அமர்ந்துகொண்டார்.

“அண்ணன் தனியா உட்கார்ந்து இருக்காரே பத்மா..! போய் பேசிட்டு இருக்க வேண்டியது தானே…”

“பேச என்ன அண்ணி இருக்கு..?”

“விசித்திரமா இருக்கு..! விஷயத்தை விலைக்கா வாங்கிட்டு வர முடியும்… அன்றாடத்துக்குள்ள ஆயிரம் இருக்கு… அதுல பேசாம விட்டுப் போறது பாதின்னாலும், பேசற சின்னச் சின்ன விஷயங்கள் ரொம்ப அர்த்தமுள்ள ஆரோக்கியமானது… குடும்ப உறவுக்கு.”

புன்னகையுடன் அண்ணி படுத்துக்கொள்ள, நான் அருகில் படுத்துக்கொண்டேன். உறங்கி இருந்த சம்மு எங்கள் இருவருக்கும் நடுவில் பூவாய் மலர்ந்திருந்தாள். முற்றத்து நிலா அரசியல்வாதி போல வெள்ளை வேட்டியில் சுற்றி வந்தது.

“எங்களுக்குள்ள இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் விட்டுப் போய் பல வருஷங்கள் ஆச்சு. பிணக்குகளும் இல்லை… விவாதிக்கவும் விஷயம் இல்லை. அவசியத்துக்கு பேசிக்கிறது உண்டு. அன்றாடத்துக்கு இல்லை…” மெல்லிய குரலில் சொல்ல, விழுக்கென அண்ணி தன் னுடைய தலையை தலையணையில் இருந்து உயர்த்தி, என்னை விசித்திரமாய்ப் பார்த்தார்.

“சந்தோஷமா இருக்கியா பத்மா..?”

“என்ன அண்ணி இப்படியொரு சந்தேகம்..? வீட்டில ஒண்ணுக்கு ரெண்டு கார் நிற்குது. தனி வில்லா. பொண்ணு டாக்டருக்கு படிக்கிறா. அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை…” நான் அழுத்தமாகச் சொல்ல, அண்ணி உயர்த்திய தலையை கீழே சாய்க்காமல் மீண்டும் அதே பார்வையைத் தொடர்ந்தார்.

“பத்மா, நீ வசதியா இருக்கியான்னு நான் கேட்கல. சந்தோஷமா இருக்கியான்னு கேட்டேன்…”

சாட்டையடி..! அப்போ இரண்டும் வேறு வேறா..?

“என்ன அண்ணி கேள்வி இது..? புரியல…”

“நீ உன் வேலையைப் பார்த்துட்டு இருக்கே… அண்ணன் அவர் வேலையைப் பார்த்துட்டு இருக்கார்… உன் பொண்ணு அவ வேலையில. சேர்ந்து வசிக்கிற வாழ்க்கை எல்லாம் சேர்ந்து வாழ்ற வாழ்க்கை ஆகாது..! இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு இல்ல..? எந்த உறவுக்கும் நடுவில, மெளனங்கள் ஊற ஆரம்பிச்சா, தூர் வாரப்படாத மெளனத்தால், உறவு ஊற்று அடைபட்டுபோயிடும். அந்த மெளனத்துக்கு மேல, தனிமை, கோபம், அழுத்தம், ஈகோ’னு நிறைய பாசி படிய ஆரம்பிச்சிடும்… அப்புறம் அந்த நீர்நிலைக்கு பேரு பாழடைஞ்ச கிணறு…”

அண்ணி மென்மையாய் சொல்லிவிட்டு படுத்துக்கொள்ள, எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து அடங்கியது.

எத்தனை அழுத்தமான வார்த்தைகள்…

இப்போது என் தலை உயர்ந்து அண்ணியின் புறமாய்த் திரும்ப, `என்ன…’ என்றார் அதே புன்னகையுடன்.

“நீங்க சொல்றது புரியலைன்னாலும், பிடிச்சது. விஷயமே இல்லாம என்னத்தை பேசறது..? தேவை இருந்தாலும் கேட்டு நிறை வேத்திக்கலாம். அத்தனையும் நினைக்கும் போதே வந்து நிற்குது. அவசியத்துக்குப் பேச்சு இருக்கு… ஆனால், நீங்க வேறென்னவோ செய்யச் சொல்றீங்க…”

என் கன்னத்தைப் பற்றி மென்மையாகத் தட்டி விட்டார்.

“வார்த்தைகளைக் கொண்டு மெளனத்தை வெட்டி வீசணும். அன்றாடம்ங்கிற பாதாளக் கரண்டி கொண்டு, இடைவெளியில் நிறைஞ்சு கிடக்கிற மெளனத்தை அள்ளி வெளியே கொட்டணும். வயது ஏற ஏற, நெருக்கம்கிறது உடம்பினால வராது… பரஸ்பரம் தேவைகள் தீர்ந்து போய் இருக்கலாம். ஆனால், இருவரும் ஒருத்தொருக்கு ஒருத்தர் தேவைப்படாதவங்க ஆகவே முடியாது. ஆகவும் கூடாது…நெருக்கம் கிற அன்பை வார்த்தைங்கிற நீர் தெளித்து வளர்க்கணும்…”

“அண்ணி…” என் உடம்பு அதிர்ந்து அடங்கியது.

“பெரிய விஷயமில்லை பத்மா இதெல்லாம். நான் உன்னை மாதிரி நிறைய படிச்ச பெண் இல்லை. நீயும் சிந்திச்சுப் பாரு புரியும்…” அண்ணி படுத்துக் கொண்டார்.

எனக்கு வெகு நேரம்மட்டும் உடலின் சிலிர்ப்பு மட்டுப்படவே இல்லை.

எவ்வளவு எளிமையாக, எத்தனை பெரிய விஷயத்தைப் பதித்துவிட்டார். இப்போது யோசித்துப் பார்த்தால் புரிகிறது, இருவரும் அன்றாடத்தில் இருந்து இன்னொருவரை விட்டு எத்தனை விலகி வந்திருக்கிறோம் என்று… மற்றவர்களிடம் பேசுவது கூட இருவரும் பேசிக்கொள்வதில்லை.

`நான் வழியில சாப்பிட்டாச்சு. நீ சாப்பிடு…’’ என்று சொன்ன எந்தக் கணத்திலும் `என்ன சாப்பிட்டீங்க..?’ என்று நான் கேட்டதே இல்லை. `ஷாப்பிங் போறேன்…’ நான் சொல்லிவிட்டுச் சென்ற நாள்களின் முடிவில் எப்போதும் அவர் என்னிடம் விசாரித்ததே இல்லை, என்ன வாங்கி வந்தேன் என்று.

அதிகபட்சம் பண்டிகை நாளில் புதுப் புடவைக்கு ஒரு புன்சிரிப்பு போனஸாகக் கிடைக்கும். `நல்லா இருக்கு, இல்லை’ என்ற கருத்து பதிவுகள்கூட இப்போதெல்லாம் இல்லை. சுதந்திரம் என்ற காரணி, சுகம் என்ற சந்தோஷத்தை அடித்து கரைத்துவிட்டதா..? புரண்டு புரண்டு படுத்தேன்.

புது இடமும் புது உணர்வும் தூக்கத்தைத் தொட்டு விட முடியாமல் என்னை எச்சரித்துக் கொண்டு இருந்தது. இடையில் எழுந்த அண்ணி, பாத்ரூம் சென்று திரும்பி வந்தபோது தட்டை தலையணையை எடுத்து வந்து அண்ணனின் காலுக்கடியில் வைக்க, அவர் விழித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தார்.

“என்ன பண்றே பரிமளா..?”

“ரொம்ப அலைச்சல் உங்களுக்கு. காலெல்லாம் வீக்கமா இருக்கு. ரத்த ஓட்ட மில்லாம, அதான் தலையணை வச்சேன்…” சொல்லிவிட்டு வந்து படுக்கையில் சரிந்து கொண்டார்.

காலையில் எழுந்து ஜம்புகேசுவரர் ஆலயத்துக்கு கிளம்பிக்கொண்டிருந்தோம். அதற்காகத்தான் இன்று ஊர் திரும்புவதை தள்ளிப்போட்டதே. வீடெல்லாம் அண்ணி யின் சத்தமாக இரைந்து கிடந்தது. அது அவ்வளவு சுகமாக காதுகளில் கசிந்தது.

கத்திரி வண்ணத்து சில்க் காட்டன் உடுத்திக் கொண்டேன். ஜாதிமல்லிப் பூ சூடிக்கொண்ட போது 10 வயசு மிஸ்ஸிங்..! எனக்கு முன்னமே தயாராகி பார்த்திபன் கூடத்தில் வந்து காத்திருந்தார்.

அண்ணனிடம் இயல்பாய் பேசிக்கொண்டே இருந்தவரை பார்த்துக்கொண்டே என்னு டைய புறப்பாட்டில் கொஞ்சம் கவனமாய் இருந்தேன். அண்ணன் நகர்ந்ததும், காபியோடு அவர் முன்னே வந்து நிற்க, வழக்கமான சின்ன புன்னகைத் தழுவலுடன் வாங்கிக் கொண்டார்.

“இந்த சாரி ஞாபகம் இருக்கா..? அமலா ப்ளஸ் டூ பாஸ் பண்ணதும், அவளுடைய பாக்கெட் மணியில வாங்கித் தந்தது…”

“ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு ரொம்பவே நல்லா இருக்கும் எப்பவும்…”

நான் வெட்டிய மெளனத்தில் இருந்து நீர் சுரக்கத் தொடங்கி இருந்தது.

“ஊருக்குப் போனதும் இதுக்கு மேட்சிங்கா ஒரு ஆரம் வாங்கணும்.”

“வாங்கலாம். அடிக்கடி இப்படி புடவை கட்டி பூ வை. 10 வயசை காணோம் இப்போ… எப்பவும் குர்தியும் லெகின்ஸும் போடணுமா என்ன..?” 20 வருடங்களுக்கு முன்பு நெருக்கித் தொடுத்திருந்த எங்களுடைய உறவு, என் உள்ளங்கையில் மணக்கத் தொடங்கியிருந்தது.

தலை அசைத்துவிட்டு துள்ளலுடன் திரும்பி நடந்தேன். எங்கள் மீது விரவிக்கிடந்த மெளனத்தின் கசடை, இருவரும் மாறி மாறி வெட்டிக்கொண்டு இருந்தோம், வார்த்தை கோடரிகளால்….

அறைக்குள் அண்ணி அண்ணனின் அன்றாடத்தில் புகுந்து ஏதோ ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருக்க, எனக்கு எல்லா ஒப்பனைகளையும் உடைத்து நொறுக்கி விட்டு வாய்விட்டு சிரிக்க வேண்டும் போல் ஆசையாக இருந்தது.

– அவள் விகடன் (Sep 2022)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *