கல்யாணத்துக்குப் பிறகு படிக்க வைப்பதாகச் சொல்லித்தான் கமலாவை திருமணம் செய்து கொண்டான் சுந்தர். இருவருக்கும் ஏழு ஆண்டுகள் வித்தியாசம்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுந்தருக்கு போதுமான வருமானம் கிடைத்தது. கமலா ஆசைப்படி தொழிற்கல்வி டிப்ளமோ படிப்பில் சேர்த்துவிட்டான்.
வயது இருபதை கடந்ய அவளுக்கு படிக்க வேண்டும் என்பதில் அதிக ஆசை இருந்தது.
“ஏய்…கமலா…கல்யாணம் பண்ணிட்டு கல்லூரிக்கு வர்றே…தெனமும் சாய்ந்தரம் உன்ன கூட்டிப்போக வர்றாறே அவர்தானா…” கிண்டலடித்தனர் தோழிகள்.
வழக்கம்போல், வேலை முடிந்து வரும்போது கல்லூரி வாசலில் நின்றான் சுந்தர்.
“கமலா…” அழைப்பதற்குள் காணாதது போல் பேருந்தில் ஏறினாள்.
“எதுக்கு என் கூட…” வீட்டில் பேச்சை இழுத்ததுதான் தாமதம்.
“ப்ளீஸ்…இனிமே காலேஜ் பக்கம் வராதீங்க…கல்யாணம் ஆயிடுச்சானு என் ப்ரண்டுக கேட்கும் போது ரொம்ப கேவலமா இருக்கு…..” கண்கள் கொப்பளிக்க வார்த்தைகளால் கோடு போட்டாள் கமலா.
வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத கமலாவை மேலும் கீழும் பார்த்தான்.
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் பரிசுகள் பல பெற்ற அவனால் கமலா வரைந்த அந்தக் கோட்டைத் தாண்டிட முடியவில்லை. குடும்பம் அவன் குறுக்கே நின்றது. அவள் கண்களில் இருள் சூழ்ந்துகொண்டு இருப்பதை மட்டும் உணர்ந்தான். அந்தக் கோட்டுக்கு வெளியே நின்றபடி…
– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.