வானில் ஒரு மாற்றம்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2022
பார்வையிட்டோர்: 3,805 
 

வானில் ஒரு மாற்றம்..!!!

சிகாகோ நகரின் ‘ஓ ஹேர் ‘ (O’HARE) பன்னாட்டு விமானநிலையம்.

பறவைகள் கூட்டம் போல வினாடிக்கொரு விமானம் டேக்ஆஃப் .லேண்டிங்.

உலகிலேயே மிக அதிக விமானப் போக்குவரத்து உள்ள நகரங்களில் ஒன்று.

வானிலை மாற்றங்கள் காரணமாக அதிக தாமதங்களும், விமான பயணம் ரத்தாவதும் ஏற்பட்டாலும் மிகவும் பரபரப்பான விமான நிலையம்.

இன்றைக்கு அந்த மாதிரியான ஒரு நாள்.

பனிமூட்டம், மழை, புயல் காரணமாக இரண்டு மணி நேர தாமதம் நாலாகி, ஆறாகி, பின்னர் அறிவிப்பும் நின்ற நிலையில் மணி இரவு பன்னிரண்டு ஆகி இருந்தது.

அப்போதுதான் அகிலா அவள் கண்ணில் பட்டாள்.

அகிலா.! அவளது பிரியமான பள்ளித் தோழி. முதல் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை அவளுடன், பள்ளிப் பருவ நாட்களின் சகல சுக துக்கத்தையும் பகிர்ந்து கொண்ட, அவள் வாழ்க்கையையே அரத்தமுள்ளதாக மாற்றிய அவளது அகிலா.!!

“ஹலோ அகிலா.! நீ இங்க எப்பிடி.? என்னத் தெரியுதா.?”

“அபிராமி.! நீயா.? என்ன ஒரு பிளஸன்ட் சர்ப்ரைஸ்.! பாரு.இவ்வளவு நேரம் நாம இங்கேயே இருந்தும் பாக்காம மிஸ் பண்ணிட்டோமே.!!”

இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணில் நீர் ததும்ப எவ்வளவு நேரம் நின்றிருப்பார்களோ தெரியவில்லை.

விமானம் இன்னும் அரைமணி நேரத்தில் புறப்படுவதாக அறிவிப்பு வந்ததும்தான் இருவருக்கும் சுயநினைவு திரும்பியது.

“பாரு.நாம இப்போதானே பாத்துகிட்டோம்.அதுக்குள்ள கிளம்ப வேண்டியிருக்கே.! எவ்வளவு நேரத்த வேஸ்ட் பண்ணிட்டோம்.”

அதற்குள் இன்னொரு அறிவிப்பு.

‘சென்னை செல்லும் பயணிகள் கவனத்திற்கு. இரண்டு விமான டிக்கெட்டுக்கள் அவசரமாக தேவைப்படுகிறது.

கூடுதல் பணம் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள்.கவுன்ட்டருக்கு வரவும்.’

இதுபோன்ற அறிவுப்புகள் அவ்வப்போது வருவது ஒன்றும் அதிசயமில்லை.கடைசி நிமிடம் அவசரத்தேவைக்காக அதிகம் பணம் கொடுத்து விமானம் கிளம்பும் நேரம் சிலர் பயணிகளை வேண்டிக் கேட்டுக்கொள்வது உண்டு.

அத்தகைய பயணிகளுக்கு அருகிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் இலவச அறை மற்றும் உணவு அளிக்கப்பட்டு மறுநாள் கிளம்பும் முதல் விமானத்தில் அனுப்பி வைக்கப் படுவார்கள்.

அகிலாவும் அபிராமியும் ஒருவரையோருவர் பார்த்துக் கொண்டனர்.

“அபி. ஆர் யூ இன் எ ஹரி டு டிராவல் டு நைட்.?”

“நாட் அட் ஆல்.”

இது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே நெனைக்கிறேன். கமான்.நாம நாளைக்கு போகலாம்.”

இருவரும் ஹில்டன் ஹோட்டலை நோக்கி பயணமானார்கள்.

ஐந்து நிமிடத்தில் அறையில் இருந்தார்கள்.

வரும் வழியில் ஒருவரையொருவர் பற்றிக் கொண்ட கைகளின் இறுக்கமும், கண்களின் சந்திப்பும் மௌனமுமே அவர்களின் நெருங்கிய உறவை உறுதிப்படுத்த போதுமானதாக இருந்தது.

நல்ல விசாலமான இரண்டு படுக்கைகள் கொண்ட அறை.

இரவு மிகவும் நேரமாகிவிட்டபடியால் முன்கூட்டியே அறையில் சூப், சாலட், பழங்கள், சாக்லேட் என்று உணவு வகைகள் தயாராக இருந்தது.

“அகிலா.! என்னால நம்பவே முடியல.உன்ன நெனைக்காத நாளில்ல. நீயும் இத்தனை நாள் சிகாகோவில இருக்கிறது தெரியாம போச்சே.!”

“அபிராமி.நீ இன்னுமும் அதே பழைய அபிராமி தான்.!”

அகிலா நெருங்கி வந்து அபிராமியை அணைத்தபடி கூறினாள்.

“நான் இங்க வசிக்கல.இந்தியாலதான், சென்னையில ஒரு பெரிய மருத்துவமனையில் நிர்வாக மேலாளரா இருக்கேன்.இங்கே ஒரு மருத்துவ கான்ஃபிரன்ஸ்ல என்னுடைய பேப்பர் பப்ளிஷ் பண்ண ஒரு வாரம் தங்கியிருந்தேன்..”

“ஓ மை காட்.உன்ன மிஸ் பண்ணிட்டேனே. நான் இங்க இல்லினாய்ஸ் நார்த் வெஸ்டர்ன் மெமோரியல் மருத்துவமனையில புற்றுநோய் பிரிவு பாலியேட்டிவ் கேர் சீஃப் நர்சாக இருபது வருஷமா வேல பாக்குறேன்.

நானும் மூணு நாள் மருத்துவ மாநாட்டில் கலந்துக்க தஞ்சாவூர் போறேன்.

நமக்குள்ள என்ன ஒத்துமை பாரு. இரண்டு பேருமே மருத்துவமனைல வேல பாக்குறோம்.!!”

“அபி.நீ தனியாதான் இருக்கியா.? உன் குடும்பம்.?”

“அகிலா.! நாம பள்ளிய விட்டு பிரியும்போது எடுத்துகிட்டோமே ஒரு பிராமிஸ்.”

“அத நானும் மறக்கல.! “

“அத நான் இன்னைக்கு வர மீறல. அதுக்கான சந்தர்ப்பமும் அமையல.

அகிலா. உன்னப் பத்தி சொல்லு.உங்க வீட்டுல அப்பவே உனக்கு கல்யாணப்பேச்சு அடிபட்டுதே.!! “

“அபி.உன்னை மாதிரி சுதந்திரமா எனக்கு முடிவெடுக்க முடியல.ஆனா இப்போ நான் தனியாத்தான் இருக்கேன்.

எனக்கு ஒரு தம்பி இருக்கான்.சத்யா.!”

“என்ன அகிலா உளர்ற.தம்பியா.? நீயும் என்ன மாதிரி ஒரே பொண்ணு தானே.”

“அது ஒரு பெரிய கதை. இன்னைக்கு உங்கிட்ட சொல்லியே ஆகணும்.”

“பாரு.சாப்பாடு ஆறியே போச்சு.”

இரண்டு பேரும் சூப்பை மட்டும் குடித்து விட்டு படுக்கச் சென்றார்கள்.

“அகிலா.நீ அன்னவாசல விட்டு எப்போ போன.? நம்ப ஸ்கூல பாத்தியா.? உன்னோட அப்பா.அம்மா.?

எனக்கு அன்னவாசல . நம்ப பள்ளிக்கூடத்த மறக்கவே முடியல.!!”

அபிராமி விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.

“அபி.! நீயா அழற.? “

அகிலாவால் நம்ப முடியவில்லை.

அன்னவாசல்..

***

அன்னவாசல் புதுக்கோட்டையில் உள்ள ஒரு அழகிய சிறு கிராமம்.

அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் தான் இருவரும் அறிமுகம்.

“பை.பை.”என்று தன்னை இறக்கிவிட்ட ஆட்டோடிரைவருக்கு கை ஆட்டிவிட்டு விடுவிடுவென்று நடந்தாள் அபிராமி.

“அபி.பாப்பா. பத்திரம். பள்ளிக்கூடம் விட்டதும் வந்து நில்லுங்க.சமத்தா இருங்க.!”

“நீங்க போங்க முரளி அண்ணா.எனக்கொண்ணும் பயமில்ல.!”

திரும்பிப் பார்க்காமல் பள்ளிக்குள் நுழைந்தாள்.

அன்றுதான் பள்ளி திறந்த முதல்நாள்.

குழந்தைகளின் அழுகை சத்தம்.!!

விக்கி விக்கி அழும் குழந்தைகள், கேட்டை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விடும் குழந்தைகள், அம்மாவின் தரதர பிடியிலிருந்து தப்பிக்கப்பார்க்கும் குழந்தைகள், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு ஆசிரியரை முறைத்து பார்க்கும் குழந்தைகள் என்ற பலவித பட்டாம்பூச்சிகளின் நடுவில் தனியாகத் தெரிந்தாள் அபிராமி.

நேராக இந்திரா டீச்சரிடம் போய்..

“குட்மார்னிங் டீச்சர்.என்னோட கிளாஸ் எங்க இருக்கு ?”

என்று கேட்ட அபிராமியை அப்படியே தூக்கிக் கொண்டு இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டாள்.

“என்.செல்லக்குட்டியே.! இரு முதல்ல எல்லாரும் வரட்டும். உன் கிளாசில நானே கொண்டு உக்கார வைக்கிறேன் ..சரியா.?”

“தாங்யூ மிஸ்.””

வகுப்பில் அவள் பக்கத்தில் உட்கார்ந்து பிழியப் பிழிய அழுது கொண்டிருந்தவள் தான் அகிலா.

கண், மூக்கு எல்லாம் சிவந்து கிடந்தது.

“எதுக்கு அழற.இது நம்ம கிளாஸ்.பாரு.எத்தன பேர் இருக்காங்க.?”

அபிராமி அவள் கைகளைப் பற்றியபடி அவள் கண்களை தன் கைக்குட்டையால் துடைத்து விட்டாள்.

“அம்மா.அம்மாகிட்ட போகணும்.”

விசித்தபடி அகிலா சொன்னதைக் கேட்டு கலகலவென்று சிரித்தாள் அபிராமி.

“அம்மாவா.அவுங்கள எல்லாம் ஸ்கூலுக்குள்ள விடமாட்டாங்களே..பெல்லடிச்சதும் வருவாங்க.இங்க டீச்சர்தான் இருப்பாங்க.!!”

“ஏன்.உனக்கு அம்மா வேண்டாமா.? அம்மாவ பிடிக்காதா.?”
மறுபடியும் அவ ஆரம்பித்துவிட்டாள் அகிலா.

“எனக்குத்தான் அம்மாவே இல்லையே.! தாத்தா.பாட்டிதான்.”

ஒரு வினாடி அப்படியே அழுகையை நிறுத்தினாள் அகிலா.

“எல்லோருக்கும் அம்மா இருப்பாங்களே. உனக்கும் அம்மா இருப்பாங்க.நல்லா தேடிப்பாரு.”

இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மைதிலி டீச்சர் ஒரு நிமிடம் திகைத்துப்போய் நின்று விட்டாள்.

அன்று ஆரம்பித்ததுதான் அகிலா. அபிராமி நட்பு.!

***

அபிராமி கூறியது உண்மைதான்.

அவளுடைய அம்மா அவள் பிறந்து சில மணிநேரத்தில் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலில் இறந்து விட்டாள்.

இரண்டு வருடங்கள் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பா அபிராமியை அன்னவாசலிலில் இருந்த தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டார்.

மறுபடியும் டில்லியில் ஒரு பெரிய கம்பெனியின் நிர்வாக மேலாளராய் பொறுப்பேற்றுக்கொண்டார்.

வருடத்துக்கு இரண்டு முறை அபிராமியை வந்து பார்ப்பதோடு சரி.

அபிக்கு அகிலாவின் நட்பு கிடைத்தது அவளுக்கு புதிய உலகத்தை காட்டியது.

“அம்மா.இவதான் நான் சொல்லுவேனில்ல.அபிராமி.என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்.”

அகிலா அவளைப் பற்றி நிறையவே சொல்லியிருந்ததால் அவர்கள் வீட்டில் யாரும் துருவித் துருவி கேட்பதில்லை.

அம்மா என்றால் இப்படித்தான் இருப்பாள் என்ற எண்ணத்தை அகிலாவின் அம்மா கல்யாணி செய்யும் ஒவ்வொரு செயலும் அவளுக்கு உணர்த்தியது.

முதலில் பள்ளி முடிந்து விளையாடப்போனவள் அங்கேயே பாதிப்பொழுது தங்க ஆரம்பித்தாள்.

அபிராமியின் தாத்தா பாட்டிக்கு புரிந்து விட்டது. குழந்தை தாயின் அன்புக்கு ஏங்குகிறது.

“அபிக்கண்ணு. உனக்கு ஒரு அம்மா வரப்போறா.நீ அப்பா அம்மா கூட டெல்லியில நல்ல ஸ்கூல்ல படிக்கலாம்.”

பாட்டி சொன்னது அபிக்கு புரியவில்லை.

“அம்மாவா.? எனக்கே எனக்கா.? ஆனா நான் டெல்லி போகமாட்டேன்.அம்மாவ இங்க வரச்சொல்லு பாட்டி.”

எப்படியோ அகிலாவின் அம்மாவை விட்டு சமாதனப்படுத்தி டெல்லிக்கு அனுப்பி வைத்தாள் பாட்டி.

ஒரே வருடத்தில் திரும்பி வந்துவிட்டாள் அபிராமி.

“அம்மா எனக்கே எனக்கு இல்ல. என்னோட கூட மனுதீதிதான் எப்பவுமே இருக்காங்க.எனக்கு அவுங்க வேண்டாம்.

எனக்கு அகிலா வேணும். கல்யாணியம்மா தான் வேணும்.”

என்று பிடிவாதம் பிடித்து திரும்பவும் அன்னவாசலுக்கே வந்துவிட்டாள்.

டெல்லிக்கு போவதும் குறைந்து விட்டது.ரிஷியும் பத்மினியும் ஒரு முறை அன்னவாசல் வந்ததோடு சரி.

***

“அகிலா. டைம் என்ன பாத்தியா.? மூணு மணி. இன்னும் நாலு மணிநேரத்தில கெளம்பணும். தூக்கம் வரலியா.?”

“போ அபி.படுத்தா தூக்கமா வரும்.?எல்லாம் போகும்போது தூங்கிக்கலாம்.”

“அப்போ .இரு.சூடா இரண்டு காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்.

ஐந்து நிமிடத்தில் சுடச் சுட இரண்டு கோப்பையில் காஃபியும் ஒரு தட்டில் சாக்லேட் குக்கியும் கொண்டு வந்தாள் அபிராமி.

“அகிலா. நீதான் சொல்லணும். நான் நர்சிங் படிக்க தஞ்சாவூர் மெடிக்கல்ஸ் போய்ட்டேன்.

அப்புறம் நீங்களெல்லாம் அன்னவாசல் வீட்ட காலி பண்ணிட்டு சென்னை போனதா கேள்விப்பட்டேன்.

எங்க தாத்தா பாட்டியும் போய்ச் சேந்துட்டாங்க. எங்க அப்பா அம்மா கிட்ட சுத்தமா தொடர்பே இல்ல.

நர்சிங் கோர்ஸ் முடிஞ்சதும் கனடாவுக்கு மேல் படிப்பு படிக்க உதவித்தொகை கெடச்சுது.

அங்க மூணு வருஷம் வேல பாத்துட்டு சிகாகோ மருத்துவ மனையில நர்சாக சேந்து பதினஞ்சு வருஷத்தில இப்போ சீஃப் நர்சா இருக்கேன்..”

மூச்சு விடாமல் பேசிமுடித்தாள் அபிராமி.

அகிலா.! நீ சென்னைக்கு எதுக்காக போன? உன்னப் பத்தி சொல்லு.உனக்கு தம்பி எங்கேந்து வந்தான்.?

“ஸ்கூல் முடிச்சதும் எங்கப்பா இறந்துட்டாங்க.எங்கம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாது.எங்க மாமா சென்னையில நல்ல வேலைல இருந்ததால அங்க கூட்டிகிட்டாரு.

நீ தான் மார்க் ஷீட் கூட வாங்காம டில்லிக்கு போய்ட்டியே.எங்கிட்ட கூட சொல்லல.நான் எப்படி அழுதேன் தெரியுமா.?

நீ நர்சிங் சேந்ததுகூட எனக்கு தெரியாது.உன்னையும் தாத்தா. பாட்டி டில்லிக்கு கூட்டிட்டு போனதாத்தான் சொன்னாங்க.

அபி.நீ சொன்ன பாரு.நாம எடுத்துகிட்ட பிராமிஸ்படி நீ கல்யாணம் செய்துக்கலன்னு .ஆனா எனக்கு அது முடியாம போச்சு.

அம்மா எனக்கு கண்டிப்பா கல்யாணம் பண்ணி வச்சுட்டுதான் கண்ண மூடுவேன்னு பிடிவாதமா இருந்தாங்க.

“ஒ.யூ ஆர் மாரீட்.?

“அண்ட் செப்பரேட்டட் அபி.அவரோட என்னால ஒரு வருடம் கூட சேந்து இருக்க முடியல.ஆபீசில நிறைய தில்லு முல்லு பண்ணி . என் நகையெல்லாம் வித்து.மேல சொல்லாம இருக்கறதுதான் பெட்டர்.

லீகலா பிரிஞ்சிட்டோம்.

மாமாதான் என்னை ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் படிக்க வச்சாரு.!

அபி.நாம ஸ்கூல் டேஸ்ல எவ்வளவு சந்தோஷமா இருந்தோம். அந்தமாதிரி மறுபடியும் வராதான்னு மனசு ஏங்குது அபி.!!

“அகிலா.அம்மாவையே பாக்காத எனக்கு உங்கம்மா மட்டும் இல்லைனா. நான் என்ன ஆயிருப்பேனோ தெரியாது.

ஆமா.உன்னோட தம்பி கதைய சொல்லவேயில்லை . உன் கணவரோட தம்பியா.?

“அபி.இப்ப கண்ண சொழட்டுது. ஒருமணி நேரமாவது தூங்கி எழுந்திரிக்கலைனா நடக்க கூட சக்தி இருக்காது.

போகும்போது பேச ஒண்ணும் இருக்காது.அப்போ சொல்றேன். குட் நைட்.”

“அகிலா.தூங்கறதுக்கு முன்னாடி ஒண்ணு கேக்கணும்.நீயும் உன் அம்மாவும் எனக்கு செஞ்ச உதவிக்கு என்னால ஒண்ணுமே திருப்பிக் கொடுக்க முடியல.

நீ வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கு.ஆனா.எனக்கு எப்பவுமே ஒரு வெறுமை தான் நெலச்சு நிக்குது.சொல்லு அகிலா.என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேணும்.

நீ பாக்குற இந்த வேலையே ஒரு புனிதமானதுதானே.! எத்தனபேருக்கு உயிர் பிரியும் நேரத்துல ஆறுதலா இருக்க.!

“அது என் தொழில் தர்மம்.கடமை..

ஆனா உன்னமாதிரி, உன் அம்மா மாதிரி ஒரு பலனையும் எதிர்பார்க்காம அன்பையும், நேரத்தையும் என்னால குடுக்க முடியலையே.!

“இப்ப படுத்து தூங்கு.நீ விரும்பும் வாழ்க்கை உனக்கு நிச்சயம் கிடைக்கும்.என்னை நம்பு.!!

***

கண்களில் ஒட்டிக்கொண்டிருந்த மிச்ச தூக்கத்தையும் பெட்டிகளுடன் சுமந்து கொண்டு இருவரும் விமானநிலையத்தை அடைந்தனர்.

சரியான சமயத்துக்கு கிளம்பியது விமானம்.

“அகிலா.எத்தன பேர் ஸ்கூல்ல நம்மைப் பாத்து பொறாம பட்டிருக்காங்க.? நினைவிருக்கா.?

ஒரு முறை நம்ம கிளாஸ் டீச்சர் அருணா நம்ப இரண்டு பேரும் சேந்து உட்காரக்கூடாதுன்னு உன்ன கடைசி பெஞ்சுக்கு அனுப்பி வச்சாங்களே.!

ஒரு வாரத்துக்கு டீச்சரோட சண்ட போட்டு நானும் பின்னாடி உன்னோட உக்காந்தத நெனச்சா சிரிப்பா வருது.

“அபி.நீ எப்படி எல்லாத்தையும் நியாபகம் வச்சிருக்க .?

ஏன் அபி.உங்க அப்பா அம்மாவை பார்க்கணும்னு உனக்கு தோணவேயில்லையா.அப்படி என்ன வெறுப்பு.?”

“தெரியல. அகிலா.அப்போ நான் இருந்ந மனநிலையில் என்னால வேற யாரையும் அம்மாவா ஏத்துக்க முடியல.இப்போ அது தப்போன்னு தோணுது.!!

உனக்கு தெரியுமா.? அவுங்க எப்படி இருக்காங்க.?”

அதற்குள் பணிப்பெண் குளிர் பானத்துடன் வந்தாள்.

“வைட் வொய்ன் ஃபார் மீ.அகிலா நீ என்ன குடிக்கிற.? நீயும் ஒரு வைன் எடுத்துக்கோ.!”

“நான் இதுவரைக்கும் சுவைத்துப் பார்த்ததில்லை.இன்னைக்கு உனக்கு டோஸ்ட் பண்ணப்போறேன்.!!”

பணிப்பெண் அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள்.

“எ ரீயூனியன்.?? எஞ்சாய்.!

என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.

“சியர்ஸ் .”என்று இருவரும் அந்த நாளை கொண்டாடுவது போல ஒரே உற்சாகத்தில் வானில் (!) மிதந்தார்கள்.

கூடவே உணவும் வந்துவிட்டது.
ஒன்றுமே சாப்பிடாமல் கிளம்பியதால் இரண்டு பேரும் மௌனமாக சாப்பிட்டவுடனே கண்ணை மூடியதுதான் தெரியும்.

***

அகிலாவும் அபிராமியும் நன்றாகத் தூங்கி எழுந்ததில் உற்சாகமாய் இருந்தார்கள்.

பணிப்பெண் கொண்டுவந்த காஃபி தொண்டையில் இறங்கியதும் மறுபடி சுருசுருப்பு தொற்றிக் கொண்டது.

“அகிலா.உங்கம்மாவ மாதிரி ஒரு தாய் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்.

ஒரு வேளை நான் கொஞ்சம் பிரியம் காட்டியிருந்தா எங்க சித்தியும் ஒரு நல்ல அம்மாவா இருந்திருப்பாங்க இல்ல.?

சரி. உன் தம்பி கதைய சொல்லு.

“அபி. ஒரு பத்து வருஷம் இருக்கும். நான் அப்போதான் வேலையில சேர்ந்த புதிது.
எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.!!

பெங்களூரிலுள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து.!!

“ஹலோ. அகிலா நம்பர் தானே.”

“ஆமா.அகிலாதான் பேசறேன்.”

“உங்களுக்கு ரிஷி. பத்மினி.இவுங்கள தெரியுமா.?”

சட்டுனு நினைவுக்கு வரல.

“ஐய்யோ. அகிலா.அது என் அப்பா.சித்தி பேரு தானே.”

“பொறு அபி..”

“நல்லா யோசிச்சு பாருங்க.டில்லியில அந்த பேரில யாரையாவது.?”

“ஆமா. மேடம்.! டில்லினதும் நியாபகம் வந்திருச்சு.
நல்லாவே தெரியும்.ப்ளீஸ் சொல்லுங்க.”

“நீங்க உடனே கிளம்பி பங்களூரு மணிபால் ஆஸ்பத்திரிக்கு, ஏர்போர்ட் ரோடுல இருக்கே . அதுக்கு வரணும்.”

“என்ன விஷயம்னு சொல்லுங்க.உடனே கிளம்பணும்னா.?”

“மேடம். நீங்களும் மருத்துவமனைலதானே வேல பாக்குறீங்க.இது ஒரு எமர்ஜென்சி.நேர்லதான் சொல்லமுடியும்.ப்ளீஸ்.யோசிக்காதீங்க.வந்ததும் என்னை கான்டாக்ட் பண்ணுங்க.

மேடம்.இது என்னோட தாழ்மையான வேண்டுகோள்.”

அப்புறம் நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கு அபி.

மைசூர்.பெங்களூர் ஹைவேல ஒரு மேஜர் ஆக்சிடென்ட்.

உங்கப்பாவும் சித்தியும் ஐ.சி.யூ.ல. ரொம்பவே கிரிடிகல்.

அவுங்களோட நாலு வயது பையன் சத்யா. மல்ட்டிபில் ஃப்ராக்சர்.”

“அகிலா.சத்யா. என் தம்பி.ஓ.மை.காட்.எனக்கொரு தம்பி.!!!!

அப்பாவும். சித்தியும்.!!?”

“அபி.!யூ வுட் ஹாவ் கெஸ்ஸ்ட் இட் பை நௌ.அவுங்கள பொழைக்க வைக்க முடியல.

அவுங்க கிட்ட இருந்த ஒரே கான்டாக்ட் நான்தான்.”

சதயாவ நான் என்னோட கூட்டிட்டு வந்துட்டேன்.

ஒரு மாசம் பேப்பர்ல விளம்பரம் எல்லாம் குடுத்து பார்த்தோம்.நோ ரெஸ்பான்ஸ்.

இன்ஃபாக்ட் ஐ வாஸ் வெரி ஹாப்பி. உன் தம்பி எனக்கும் தம்பிதானே.!! எங்கிட்டேந்து அவனை யாரும் பிரிக்கக் கூடாதுன்னு எண்ணாத நாளில்லை.

“அகிலா.பாத்தியா. மறுபடியும் மறுபடியும் என்னை கடனாளியாக்கிட்ட.

எனக்கு சத்யாவப் பாக்கணும்.அவன் எனக்கு வேணும். திருப்பித் தருவியா.?”

“அவன முதல்ல வந்து பாரு.அவங்கிட்ட உன்னப் பத்தி நிறைய.நிறைய. சொல்லியிருக்கேன்.”

***

அண்ணா பன்னாட்டு வானூர்தி நிலையம்.

அகிலா.அபிராமியுடன் .

வீல் சேரில் சுமார் பதினாலு வயது மதிக்கத்தக்க ஒரு பையன்.

சத்யா..!

“அபி. எனக்கு இவன விட்டு பிரிஞ்சு இருக்க முடியும்னே தோணல.”

“நீயும் எஎன்னோட வான்னா கேக்க மாட்டேன்னு சொல்லிட்டியே. நாம போன வருடம் வந்தப்பவே நான் சொன்னேன்.சத்யாவோட விசா பேப்பர்ஸ் ரெடி பண்ணும் போதே உனக்கும் சேத்து பண்ணியிருப்பேனில்ல.”

சத்யா அகிலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டே, “ஆமாக்கா.ப்ளீஸ்.திங் அகெய்ன்.”

“சத்யா.நாம அடிக்கடி பாக்காமயா போய்டுவோம்.? என்ன அபிராமி.? “

“இரு உனக்கு இன்னொரு பார்ட்டிங் கிஃப்ட்.”

ஹேண்ட் மேற்கிலிருந்து ஒரு பர்சை எடுத்தாள்.இது உங்கப்பா சட்டையிலிருந்தது.பிரிச்சு பாரு.

அபி உடைந்து போனாள்.

பள்ளி சீருடையில் இரண்டு முன்பற்கள் இல்லாமல் அபிராமி சிரித்துக் கொண்டு..!!

“அப்பா.!!”

சிலர் திரும்பிப் பார்க்கவே “ஷ்”என்று அவளை சமாதானப்படுத்தினாள் அகிலா.

அதற்குள் ஒரு அறிவிப்பு.

“சிகாகோ செல்லும் பயணிகளின் கவனத்துக்கு. வானிலை மாற்றம் காரணமாக விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஆவதற்கு வருந்துகிறோம்.இன்னும் சிறிது நேரத்தில் விமானம் புறப்படும் நேரம் அறிவிக்கப்படும்.”

“அபிராமி. அகிலா.இருவருமே கைதட்டி ஆரவாரித்தனர்.

“என்னக்கா. ஆர் யூ போத் கிரேசி?

லேட்டாகும் சொன்னதுக்கு இப்படி சந்தோஷப்படுவாங்களா.?”

“சத்யா.இதுக்கெல்லாம் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கு.இல்லியா அகிலா.?”

மறுபடியும் அவர்கள் சிரித்ததைப்பார்த்த சத்யா.

“ஓ!! தீஸ் கேர்ல்ஸ் ஆர் ஃபுல் ஆஃப் பீன்ஸ் “என்று தலையில் கையை வைத்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *