கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 2,710 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வள்ளிக்கு வயது அறுபதுக்கு மேல் ஆகிவிட்டது!

ஆனாலும், அவளை வள்ளிக் கிழவி என்றோ, வள்ளிப் பாட்டி என்றோ யாருமே அழைப்பதில்லை. அவளுக்கு முன்னால் பல்லுத் தெறிக்க ‘வள்ளி’ என்பார்கள்; அவள் இல்லாத இடத்தில் சாக்காட்டு வள்ளி’ என்பார்கள்.

கூன் விழுந்து, குறுகி, கண்கள் பஞ்சடைந்து, சதை வற்றித் தொங்கலாகி, தோல் சுருங்கி, பற்களற்று, உதடு தடித்து முன் தள்ளி, தலை பஞ்சு நிறமாகிப் போகும் வரையில் அவள் வாழ்ந்துவிட்டாள். இத்தனை வயதாகியும் – கிழடு தட்டியும், அந்தக் குரல் மட்டும் – வெண்கல நாதமாக – தெட்டத் தெளிவாக ஒலிக்கின்றது.

சீமான் வீட்டுக்காரர்களுக்கெல்லாம் வள்ளியிடம் பேரன்பு! வள்ளி செல்லப்பிள்ளை. அரை வேளையாவது பட்டினியே கிடக்க மாட்டாள். அவள் பட்டினி கிடக்க யாருமே விடமாட்டார்கள். அந்தக் கிராமத்திலுள்ள கல்லாலான வீடுகளைக் கணக்கிட்டால், சுமார் ஐம்பது வீடுகளாவது தேறும்! அப்படித் தேறிய கல்வீட்டுப் படிகளை, நாளொன்றுக்கு ஒன்று வீதம் தாண்டிச் சென்றால் அவள் வாழ்வு பக்குவமாகக் கழிந்து விடும்! ஆமாம், வள்ளி அப்படித்தான் வாழ்ந்தாள். அதில் அவளுக்குப் பரம திருப்தி மட்டுமல்ல, பெருமையுங்கூட.

‘பாட்டி, நீ இந்தக் கல் வீட்டுக்காரங்களை நம்பி எத்தனை காலம் தான் வாழப் போறாய்? உன்ரை சாவுக்கு யாருமே வந்திடமாட்டாங்க.’ – இப்படி வள்ளியின் தூரத்து உறவுப் பேரனான கிட்டிணன் அவளை ஆயிரந்தடவை எச்சரித்திருக்கிறான்.

‘போதுமடா, கிட்டிணா போதும்! நீ செல்வச் சீமானாகி இந்த ஊரையே ஆளப்போறாய்! உன் பொஞ்சாதி பிள்ளையளைக் காப்பாத்த முடியாம ஆலாப் பறக்கிற நீ, கல் வீட்டுப்படி இருக்கா இந்த ஊரிலே! கிட்டிணா, நீதான் பாரன், என்னைக் கண்ணாடிப் பெட்டியிலே வைச்சு, பல்லக்கிலே சொமந்து கொண்டுபோக, பணக்காரங்களெல்லாம் நான் நீ யெண்டு சண்டை போடுறதை நீதான் இருந்து பார்க்கப் போறே. ஒரு சல்லிக்காசும் எனக்காகச் செலவழிக்காம நீதான் இருந்து பார்த்துக் கொள்வாய்!’

கிட்டிணனின் எச்சரிக்கைக்கு வள்ளி இப்படித்தான் பதில் சவால் விடுவாள். ஆயிரந்தடவை சொல்லித் தீர்த்துவிட்டாள்.

பொக்கை வாய்க்குள் வெற்றிலையைக் குதப்பி, கடை வாயால் செங்குருதி போன்று வெற்றிலைச்சாறு உமிழ்நீராய் வடிய, நெஞ்சை நிமிர்த்தி – ஆணவமாக வள்ளி இதைக் கூறும்போது அவள் குரலிலே இருக்கும் மிடுக்கும், தெளிவும் நம்பிக்கையும் யாருக்கு வரும்?

வள்ளி –

இந்த வள்ளியென்ற தனிப்பெயர் மாறிச் சுமார் நாற்பதுவருடங் களுக்கு மேலாகிவிட்டது. இப்போது அவளின் பெயர் சாக்காட்டு வள்ளி!

சுமார் ஐநூறுகுடும்பங்கள் உள்ள அந்தப் பிரதேசத்தில் வள்ளி அவதரித்தாள். சுருட்டுக்கார அப்புக்குட்டிக்கும், சீதேவிக்கும் அவள் செல்வமகள்!

பதினாறாவது வயதில் கல்யாணம் செய்து கொண்டு இருபதாவது வயதில் தாலியை அறுத்துவிட்டு, அதைத் தொடர்ந்து பெற்றோரையும் பறிகொடுத்து விட்டு, ஒண்டிக்கட்டையாக வள்ளி வாழ்ந்து வந்த காலம்; பொல்லாத காலம்!

‘வள்ளி, வாழற வயசு. நடந்ததெல்லாம் கனவிலே நடந்ததாக நினைச்சுக்கொண்டு புதிசாக வாழத் தொடங்குவமே!’

‘வள்ளி, ஒண்டிக் கட்டையாக எவ்வளவு காலத்துக்குத்தான் இப்பிடி வாழப் போறாய். உறவு சொந்தமெண்டு ஆயிரமிருந்தாலும், நீ படர்ந்து பிடிக்க கொம்புக்கு ஆத்திரத்துக்கு யாரும் நிக்கமாட்டான். உனக்குப் பிடிச்ச ஒருத்தனை…’

“ஓம்மென்று ஒரு சொல்லச் சொல்லடி பிள்ளை. நான் பேசி முடிவு செய்யிறன்! செல்லன்ரை மோன் அப்பையன் மூத்தவளைப் பறிகுடுத் திட்டு ஒண்டியாத்தான் இருக்கிறான். நான் சொன்னா அவன் தட்டிப் பேசமாட்டான். சொல்லடி வள்ளி!’

‘இந்தா வள்ளி, நீ என் சிநேகிதியாயிருந்தாக் கட்டாயம் கட்டித்தான் ஆகவேணும்! என் அண்ணன் உன்னைக் கட்ட மாட்டனெண்டு சொல்ல மாட்டார்! உன்னைப் பத்தி அவர் வாய் நிறைய அனுதாபப் படுறார்!’

‘ஏன் வள்ளி, நீ இப்படித் தனியா வாழுறாய்? உனக்கு ஒண்டும் அவசியமாகப் படவில்லையே!’

‘வள்ளி, உன் உடம்பெல்லாம் தங்க நகையாய் அலங்கரிக்கிறன். உன் பேருக்கு நிலங்கூட எழுதி வைக்கிறன். பிறக்கும் குழந்தைக்கு என் சொத்து முழுதும் குடுக்கிறன். உன்னை என் ராஜாத்தியாட்டமா வெச்சுக் காப்பாத்துறன், ஊம் எண்டு சொல்லிடு. ‘இவன் என்ன ஒரு பொஞ்சாதி பத்தாதெண்டு இரண்டு பொஞ்சாதி வைக்கப் பார்க்கிறான்’ எண்டு தப்பா நினைச்சுடாதே அவ சும்மா பேருக்கு உலகத்துக்குச் சொல்றதுக்கு. ஆனா, நீ மட்டுந்தான் என் நெஞ்சில் லச்சுமியாயிருப்பாய் நிச்சயமாகச் சொல்றன் வள்ளி; ஊம் எண்டு சொல்லிடு வள்ளி!’

இப்படி எழுந்த ஓராயிரம் கேள்விகளுக்கெல்லாம். வள்ளி ஒரே பதிலைத்தான் சொல்லி வந்தாள்!

‘அவசியம் வாறபோது கட்டாயமாக நான் சொல்லுறன்’

அப்போதைக்கப்போது ஏதோ ஆபாசமான உணர்ச்சிகள் – துடிப்புகள் – எண்ணச் சுழற்சிகள் வந்தும் போயும் கொண்டே இருந்தன. ஆனாலும் வள்ளி ஒழுக்க வரம்புக்கு மீறி வாழத்துணியவில்லை. ஏதோ ஒன்று – மனதோடு ஒட்டிப்போய்விட்ட ஒன்று – அவளை அப்படி வாழ வைத்தது.

இரண்டு பால்மாடுகளை வைத்துக்கொண்டு, பால் போத்தில் களுடன் மாடி வீட்டுப்படிகளில் எல்லாம் ஏறி இறங்கும் வாய்ப்பை அவள் தேடிக்கொண்டாள். அந்தச் சீமான் வீட்டார்களுக்கெல்லாம் அவள் ரொம்பவும் பிடித்துப் போய்விட்டாள்.

காலம் அந்தப் பகுதியில் ஒரு பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டது. கிராமத்தின் மேற்குப் புறத்தில் சுமார் ஐம்பது குடும்பங்கள் ஒதுங்கி வாழும் நிலையை, காலம் தானாகவே காட்டி வைத்தது. ஒரே உறவினர் என்று நீண்ட காலம் வாழ்ந்து விட்ட அவர் களுக்கும் தெரியாமல், ஆனால் பகிரங்கமாகத் தாங்களாகவே ஒதுங்கி வாழ்ந்து வந்தவர்கள், வள்ளியின் காலத்திலேயே மற்றவர்களிட மிருந்து முற்று முழுதாக விடுபட்டு, தனி ஒரு வர்க்கமாகிவிட்டார்கள். அதனால் அந்தப் பகுதி வியாபாரி மூலை’ என்ற பெயர்பெற்று விட்டது.

அத்தனையும் கல் வீடுகள்!

ஒருவருக்கு பட்டணத்திலேயே இரும்புக் கடை. அவரைச் சுற்றி இரும்புக் கடை வைத்திலிங்கம் குடும்பம் என்ற பெயர்.

மற்றவர் ஜவுளிக்கடை, அவரைச் சுற்றி ஐவுளிக் கடைச் செல்லையா குடும்பம் என்ற பெயர்.

அடுத்தவர் பலசரக்குக் கடை, அவரைச் சுற்றிப் பல சரக்குக் கடை வேலுப்பிள்ளை என்ற பெயர்.

அதற்கும் அடுத்தவர் வெளிநாட்டுப் புகையிலை வியாபாரி.

அவரைச் சுற்றிப் புகையிலை ஆறுமுகம் குடும்பம் என்று பெயர்.

இன்னொருவர் சோடாக் கம்பெனி வைத்திருந்தார். அவரைச் சுற்றி சோடாச் சுப்பையா பிள்ளை குடும்பம் என்ற பெயர்.

வேறொருவர் நிலப் பிரபு. அதாவது நிலம் குத்தகைக்கு விடும் முதலாளிக் கமக்காரன். அவரைச் சுற்றி கமக்காரக் கந்தப்பு குடும்பம் என்ற பெயர். இப்படியே குடும்பம் குடும்பமாகப் பிரித்து, பின் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அத்தனை கல்வீட்டுக்காரர்களும் ஒரே பந்தி போசனம், ஒரே வர்க்கம்!

கிராமத்தின், ஏகப்பட்ட உறவு என்பது விட்டுப் போய், கல்யாணம் செய்து கொள்வதிலிருந்து, கட்டையிலே போகும் சம்பவங்கள் வரையிலே அந்த ஐம்பது குடும்பங்களும் ஒரே வட்டத்துள் நின்றன. யாரும் பிடித்து வைக்காமலே ஏனைய குடும்பங்களும் வேறோர் வட்டமாகியே விட்டன. ஆனால் பெரிய வட்டம், எண்ணிக்கையில் அதிகமானோரைக்கொண்ட வட்டம்!

பெரிய வட்டத்துள் நின்று புறப்பட்டு, பால் வியாபாரியாக, தூரத்து உறவுமுறை சொல்லிக்கொண்டு மாடிப் படிகளில் ஏறி இறங்கிய வள்ளியை, புதிதாகச் சந்தித்த ஒரு தொழிலால், அந்தச் சிறிய வட்டம், விநோதமான ஒரு பாத்திரமாக்கித் தன்னுள்ளே இழுத்துக் கொண்டது.

ஜவுளிக்கடைச் செல்லையா பிள்ளையின் தாயார் அன்னம்மாளாச்சி, கூனிக் குறுகிய கிழம்! இரண்டு வருடங்களாக அது பாயோடு ஒட்டிக்கிடந்தது.

சுய உணர்வற்று, என்றோ செத்தப் போய்விட்ட உறவினர்களுடன் சம்பாஷித்துக்கொண்டு அன்னம்மாளாச்சி கடந்த பதினைந்து நாட்களாகக் கிடக்கிறாள். மூச்சுத் திணறி, மார்பு உயர்ந்து, கண்கள் சொருகி, வாய் அகலத் திறந்து கொண்டு சாவு வரும். எல்லோரும் தொண்டையைக் கனைத்துக் கொண்டும், கண், வாய் பொத்துத் தயாராகிக்கொண்டும் பாலை வாயிலே ஊற்றுவார்கள். மறுகணம் மூச்சுத் தெளிவாகி, மார்பு பதிந்து, கண்கள் தணிந்து, வாய்மூடி அன்னம்மாளாச்சி எல்லோருக்கும்’டிமிக்கி’ கொடுத்தாள்.

இப்படி எத்தனையோ தடவைகள்! பதினைந்து நாட்கள்! கூடியிருந்த பெண்களுக்கெல்லாம் சலிப்புத் தட்டிவிட்டது. ‘நூறு வயதாகியும், உலகத்துப் பந்த பாசங்களை விட்டிட்டுப் போக மனமில்லாது கிடக்குதே’ என்ற முணுமுணுப்பும் கேட்டது. குடுகுடு கிழம் இப்படி ஏமாற்றிக் கொண்டேயிருந்தால் சலிப்பு வராமல் வேறென்ன வரும்?

கை ராசிக்காரர் என்று கூறிக்கொண்டு எத்தனைபேர் கிழவியின் வாய்க்குள் பால் வார்த்துப் பார்த்து விட்டனர். அன்னம்மாளாச்சி இலேசுப்பட்ட பேர்வழியல்ல. எல்லோரையும் வென்றுவிட்டு மிடுக் காகவே இருந்தாள்.

அப்போது வள்ளி வந்தாள். அன்னம்மாளாச்சியின் மேல் வள்ளிக்குப் பெருமதிப்பு. கிழத்தின் மார்பிலே கையை வைத்து – நிலைமையை அனுதாபத்தோட நோக்கினாள். அதே வேளை அன்னம்மாளாச்சி யின் மூச்சுத் திணறி, மார்பு உயர்ந்து, கண்கள் சொருகி வாய் அகலத் திறந்து…

‘வள்ளி, கைராசிக்காரி! உன் கையாலேயே பாலை எடுத்து ஆச்சியின் வாயில் ஊற்று!’

எங்கோ இருந்து வந்த இந்தக் குரலுக்கு இயந்திரம் போலாகி, கோப்பைக்குள் இருந்த பாலைக் கரண்டியால் எடுத்து அன்னம்மாளாச்சி யின் வாயில் விட்டாள் வள்ளி.

அன்னம்மாளாச்சியின் மூச்சு… ஆமாம் நின்றுவிட்டது; நின்றே விட்டது.

வள்ளி ‘கோ’வென்று கத்தினாள். உறவெல்லாம் விட்டுப் போய் விட்ட அந்த அன்னம்மாளாச்சியின் மேல் அனுதாபப்பட்டா? அல்லது கொலைகாரி ஆகிவிட்டேனே என்பதற்காகவா?

‘கிழம் சாகுதில்லையே!’ என்று அலுத்துக்கொண்டவர்கள் எல்லாம் விழுந்தடித்துக்கொண்டு, ‘ஐயோ பேத்தி, ஐயோ ஆச்சி எங்களை விட்டுட்டுப்போறியே, எங்க ராசாத்தி போகாதையணை’ என்றெல்லாம் பிலாக்கணம் கொடுத்தார்கள்!

கண்ணீர்;ஒப்பாரி;பிரலாபம்!

முதற்குரல்கள் ஓய்ந்து கொண்டு போயின. ‘வள்ளி கைராசிக்காரிதான்!’

அடுத்து இந்தக் குரல் பல கோணங்களிலுமிருந்து எழுந்தது. இது வள்ளியின் மார்பைக் குத்திக் குத்திக்கிழித்தது. அவள் இன்னும் விம்மிவிம்மி, அழுது கண்ணீர் விட்டுக்கொண்டே இருந்தாள்.

ஒன்று, அதை அடுத்து இன்னொன்று, அதற்குப் பிறகு வேறொன்று, இப்படியே வள்ளியின் கைராசி ஊர்ஜிதமாகியது. ஆரம்ப காலத்தில் பயமாகவும், நமைச்சலாகவும் இருந்த உணர்வுகள் மாறி, மனசு கல்லிப் போய்வந்தது. பாலை எடுத்து வாய்க்குள் வார்க்கும் வேளையைத் தொடர்ந்து, ஆள்காட்டி விரல், மோதிர விரல்களால் இமைகளை மருவி மூடி, உள்ளங்கையின் அடிப்பாகத்தால் நாடியை நெருடி அலகுப் பூட்டை இறுக்கி விடவும், மறுகரத்தால் பிணத்தின் இரு கரங்களையும் தூக்கி மார்புக்கு நேரே பின்னி விடவும் வள்ளி கற்றுக்கொண்டாள்.

அது ஒரு நுட்பமான கலை! எல்லோருக்கும் சுலபத்தில் கைவராத ஒன்று.

புதிய தொழில் வள்ளிக்குக் கிராக்கியை உண்டுபண்ணியது. வள்ளி யைக் கெட்ட நோக்கத்தோடு அணுகியவர்களெல்லாம் இப்போது கௌரவத்துடன் அணுகினார்கள். எதற்குமே இறங்கிவராத கல்வீட்டார் களெல்லாம் சாவு வரும் நேரங்களில் வள்ளியை அணுகியே ஆக வேண்டியிருந்தது. பிரசவ வேதனை கண்டவுடன் எப்படி நாட்டு மருத்துவச்சியிடம் ஓடிச்சென்று அழைத்து வருவார்களோ, அதே போல, வைத்தியர் கைவிட்டு மரண வேதனையானதும் வள்ளியிடம் ஓடிச் சென்று வள்ளியை அழைத்து வருவது அந்தக் கிராமத்துச் சம்பிரதாயமாக விட்டது.

வள்ளியின் கைராசி! அவள் போய், நோயாளியைத் தொட்டு, பாலை வார்த்ததுதான் தாமதம், மூச்சுத் திணறி, மார்பு உயர்ந்து, கண்கள் சொருகி, வாய் அகலத்திறந்து….

பண நோட்டுக்களை அள்ளி வீசிக் கொலைகளைச் செய்விப்பவர்கள் குடும்பத்துள் சாவு வருகிறது என்றவுடன், வள்ளியின் தயவைத்தான் நாடி நிற்கின்றனர், கோழைகள்!

அந்தப் பகுதியின் குடிசை வீட்டார்கள் யாருமே வள்ளியின் உதவியை நாடுவதில்லை. ஏனெனில் சாவைப் பற்றி அவர்களுக்குப் பீதி வருவ தில்லை! வெளியூர்க்காரர்களே வள்ளியின் பெருமையை உணர்ந்துவாகனங்கள் கொண்டுவந்து அவளை ஏற்றிச் செல்லும்போது இந்தக் குடிசையில் வாழ்பவர்கள் எல்லாரும் அவளை அலட்சியம் செய்வ தென்றால் அவளுக்கு ஆத்திரம் வராமல் வேறென்ன வரும்?

சாவிலும் எத்தனையோ வகையறாக்கள்! ஒவ்வொரு சாவும்வரும் போது வள்ளிக்குப் புதிய புதிய அனுபவங்களும் வரும்!

செத்துப்போன உறவினர்களோடு பேசும் மனிதர்கள், வியாபார வீழ்ச்சியைச் சொல்லி ஏங்கும் ஜீவன்கள் பாகப் பிரிவினையைப் பற்றியே பேசிக்கொள்ளும் ஆத்மாக்கள், ஐாதிமரபு சொல்லும் அப்பாவிகள் இப்படி அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போயிற்று. இத்தனை உயிர்களின் கடைசிக்காலப் பேச்சுக்களில்… ஆசா பாச உணர்வுகளில் வள்ளி தன்னை லயிக்கவிட்டதே கிடையாது.

சாக்காட்டுவது மதிப்புக்குரிய ஒரு தொழில் என்ற கண்ணோட்டத் தோடுதான் வள்ளி ஒரு கணிப்பு வைத்திருந்தாள். அந்தக் கண்ணோட் டத்தோடுதான் அவள் உயிர்களைப் பார்த்தும் வந்தாள். ஆனால் யாரிடமிருந்தும் ஒரு சல்லிக்காசேனும் அவள் பெற்றதில்லை.

சாக்காடு முடிந்ததும், முதல் முதலாகக் குரல் வைப்பவள் வள்ளி தான். அதற்குப் பின்புதான் ஏனையோர் குரல் வைப்பார்கள். எப்படியோ இது சம்பிரதாயமாகிவிட்டது.

‘நீங்கள் பாலோ பருகவில்லை… பக்குவங்கள் செய்யவில்லை…. – வள்ளியின் இந்த முதற்குரலைத் தொடர்ந்து, சீமான் வீட்டாரின் நாகரீகப் பிரலாபங்கள் கேட்கும். ஓய்வு நேரங்களில் வள்ளியிடம் அழும் முறையையும், ஒப்பாரி வைக்கும் லயத்தையும் கற்றுக்கொண்ட ஒரு சிலர் வள்ளிக்கு விட்டுக் கொடுக்காமல் லயத்தோடு அழுவார்கள். ஆனால் வள்ளிக்கு நிகர் வள்ளியேதான்! பிரேதம் எடுத்துச் செல்லும் வரையில் பந்தலுக்குள் நின்று, வந்தவர்களுக்கெல்லாம் கைக்கொடுத்து, பம்பரமாகச் சுழன்று மாரடித்து அழுது தீர்ப்பாள் வள்ளி.

‘நீங்கள் கண்ணில் முழிக்கயில்லே… ஐயாவடை கைக்கடனோ தீர்க்கயில்லே…’ என்று வந்தோருக்கெல்லாம் ஒப்பாரியால் குறை படுவாள்.

உறவு – சொந்தம் என்று சொல்லக்கூடிய யாருக்குமே வராத அளவுக்கு. வள்ளி கண்ணீர் விடுவாள் – ஆறாகப் பெருக்குவாள்! எந்த உறவைக்கொண்டுதான் அவள் இப்படியெல்லாம் கண்ணீர் விட்டுத் தீர்க்கிறாளோ! இந்த நாற்பது வருடங்களில் எவ்வளவு கண்ணீர்!

மில் முதலாளி சுப்பையா பிள்ளையின் வீட்டு வாயிற் படியைத் தாண்டும் போது வள்ளிக்கு மயக்கமாக வந்தது.கண்களுக்கு முன்னே ஏதோ ஒரு மஞ்சள் உலகம் தெரிவதைப் போல…

‘வள்ளி!’

முதலாளி வீட்டார் எல்லோரும் ஏககாலத்தில் அழைத்தனர்.

‘என்ன வள்ளி, மயக்கம் வருகிறதா?’

‘தலையைச் சுற்றுகிறதா வள்ளி?’

‘தண்ணீர் தரட்டுமா வள்ளி?’

எல்லோரும் கேள்வி கேட்டு அவளைத் திணறடித்தனர். ‘ஐயா, இந்த வயசான வேளையில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் மயக்கம் வராமல் வேறென்னவரும்?’

நோஞ்சலான சிங்காரி, தனது கிராப்புத் தலையைத் தட்டிவிட்டுக் கொண்டே கூறினாள். குடும்பத்தில் சகலருடைய அனுதாபமும் வள்ளியைக் குளிர வைத்தது.

வள்ளி பக்குவமாகச் சிமெந்து நிலத்தில் கிடத்தப்பட்டாள். அவசர அவசரமாக அடுத்த வீட்டில் விடுமுறைக்கு வந்திருந்த டாக்டர் மாணவன் தருமலிங்கம் அழைக்கப்பட்டான்.

அந்த வீட்டில் காலடி எடுத்துவைக்கச் செய்த வள்ளியைத் தருமலிங்கம் உள்ளுக்குள் வாழ்த்தினான். அந்த வீட்டுக் கிராப்பு மோகினி சரசா விடம் அவனுக்கு மையல்! டாக்டர் கிடைப்பதென்றால் அவளுக்கும் ஆசை இருக்காதா?

‘ஸ்டெதஸ்கோப்’ சகிதமாக தருமலிங்கம் ஓடோடி வந்தான் நெற்றியைச் சுருக்கிக் கண்களைக் கூசி, தோள் மூட்டுக்களை உயர்த்திச் சிலிர்த்து, தளுக்கு மினுக்காக வைத்தியம் பார்த்தான். சரசாவும் பக்கத்திலேதான் நின்றாள்.

பரிசோதனை முடிந்ததும் சரசாவின் அம்மாவை – மாமியை அடுத்த அறைக்கு அழைத்துச் சென்று ஏதோ பேசினான்.

‘கிழவிக்கு நோய் கெட்டது. திரும்பவும் மயக்கம் வந்தால் கிழவி செத்தே போய்விடும். ஒரு மணி நேரத்திற்குள் திரும்பவும் மயக்கம் வரலாம்.’

வள்ளியின் காதுகளுக்கு இந்த வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அவளுக்கு மனம் சுள்ளிட்டது. உட்லெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

‘வள்ளி, இப்போ என்ன செய்யுது?’

‘கொஞ்சம் பரவாயில்லாம இருக்கு…’

‘ச்சோ… ச்சோ… மெதுவாக எழுந்திரு. அங்குமிங்குமாகத் திரிஞ்சு உடம்பை அலட்டிக்காதே! நேராய் வீட்டுக்குப்போய், ஆறுதலாகப் படுத்துத் தூங்கு வள்ளி!’

சீதேவி அம்மாள், வள்ளியை நிமிர்த்தி, அவள் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் துடைத்து விட்டுகொண்டே அவளை ஊக்குவித்தாள்.

முண்டித் தாவிக் கொண்டு வள்ளி எழுந்திருக்க முயற்சித்தாள்; முடியவில்லை. சுயமரியாதை உணர்வு அவளை எழுப்பி வைத்தது.

வாயிற்படி வரையில் வந்து வள்ளியை வழி அனுப்பிவைத்துவிட்டு, வெளிக் கதவை மூடிக்கொண்டாள் சீதேவி அம்மாள்.

வள்ளிக்கு அழுகை வந்து விட்டது. சீதேவி அம்மாளை மட்டும் வைத்துக்கொண்டு, அவள் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை.

‘வள்ளிக்கு நோய்! ஒரு மணி நேரத்தில் செத்துப் போய்விடுவாள்’ என்ற வதந்தி எங்கும் பரவிவிட்டது.

அடுத்து வந்த கல்வீட்டுப் படிகளில் கால் வைத்தான். ‘ஏன் வள்ளி, உனக்குச் சுகமில்லையாமே? இந்தக் காலத்திலே திரியலாமோ? போ வள்ளி. போய் வீட்டிலே பக்குவமாகப் படுத்துக் கொள்ளு! சுவர் இருந்தாத்தான் வள்ளி சித்திரம் வரையலாம். போய் ஓய்வெத்துக் கொள்!’ வாயிற் கதவின் குறுக்கே நின்றுகொண்டு, செல்லையா பிள்ளையின் மனைவி வள்ளிக்கு ஆலோசனை கூறினாள்.

வள்ளியின் உடம்பிலே நெருஞ்சி முள்கற்றையால் அடிப்பது போல இருந்தது அந்த ஆலோசனை. கண்களிலே கண்ணீர் தேங்கத் தலை குனிந்தபடி நடந்தாள் வள்ளி. சிறிது நேரத்திற்குப்பின், அவள் கமக்காரன் வீட்டுப் படிக்கட்டில் நின்றாள்.

‘ஏன் வள்ளி, இப்படி அவதி அவதியா நடந்திட்டு வர்றாய்? கொஞ்சம்கூட யோசனையில்லையே. நோய் வந்திட்டா வீட்டோடு கிடந்து ஓய்வெடுத்து நோயைக் குணப்படுத்தாமல் காத்தாப் பறந்திட்டுத் திரியிறாய். இந்த நிலையிலேகூட, நீ காத்தாப் பறந்தா வேலை செய்ய வேணும்? போ வள்ளி, போய் ஓய்வு எடுத்துக் கொள்.’ கமக்காரன் இலேசான் கண்டிப்பாக வள்ளியிடம் உரிமை வைத்துப் பேசினான்.

வள்ளி மரமாக நின்றாள். கள்ளுக் கந்தன் கள்ளுமுட்டி சகிதம் வந்து கொண்டிருந்தான். ‘கந்தா வள்ளியைக் கூட்டிப்போய் அவ வீடு மட்டும் பக்குவமாய் விட்டிட்டு வா, பாவம், வள்ளி நடக்க முடியாமக் கஷ்டப்படுது. லேசாகப் பிடிச்சிட்டுப் போ!’

‘வள்ளியாச்சி, வாங்காச்சி?’ கந்தன், வள்ளியின் தொங்கு சதைக் கரங்களைப் பரிவோடு பற்றினான்.

வள்ளிக்கு இதுவரை மனசோடு புதைத்து வைத்திருந்த ஒன்றை அப்படியே வைத்திருக்க முடியவில்லை. விம்மிப் பொருமி வெடித்து அழுதாள். முகத்தை மறுபுறம் திருப்பி, முந்தானையால் முகத்தை மூடித்துடைத்துக்கொண்டே –

கண்கள் மின்னியது மறுபடியும் அந்த மஞ்சள் உலகம் தெரிவது போல….

தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. வள்ளி துவண்டு சரிந்து… நல்ல காலம், கள்ளுக் கந்தன் தாங்கிப் பிடித்துக்கொண்டான். கந்தன் மடியிலே வள்ளியின் தலை கிடந்தது.

மூச்சுத்திணறி, மார்பு உயர்ந்து, கண்கள் சொருகி வாய் அகலத் திறந்து ….

வள்ளிக்குப் பால் வார்க்க யாருமில்லை; பாலும் இல்லை.

அவசர அவசரமாகக் கையை நீட்டி, பக்கத்தே இருந்த முட்டிக்குள் துழாவி ஒரு கைக் கள்ளு மண்டியை அள்ளி வள்ளியின்வாயிலே விட்டான் கந்தன்.

வள்ளி முடறு முறிக்கும் ஓசை தெளிவாகக் கேட்டது. அந்த முகத்திலே ஒரு பொலிவும் தென்பட்டது.

அவசரப்படாமல், நிதானமாகக் கண்ணையும் வாயையும் பொத்தி கனகச்சிதமாகக் கந்தன் காரியத்தை முடித்துவிட்டான். வள்ளி, கந்தனின் மடியிலே பிணமாகக் கிடந்தாள். கல்வீட்டுக்காரர்கள் அத்தனைபேர்களும் கூடிநின்றார்கள். கந்தனின் கண்ணீர்ச் சொட்டுக்கள் வள்ளியின் முகத்தை நனைத்தன. மற்றவர்கள் வள்ளிக்காக ஏன் அழவேண்டும்?

சீமான்களும் சீமாட்டிகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நின்றார்கள்.

தொலைவில் எங்கோஜன இரைச்சல் கேட்டது. குழந்தைகள், குட்டிகள், கிழங்கள், குமரர்களாக ஜனக்கூட்டம் வள்ளியைச் சுற்றிச் சுற்றிக் கதறியது.

வள்ளியின் தூரத்துப் பேரன் கிட்டிணன், கால்மாட்டில் இருந்து கண்ணீர் வடித்துவிட்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, வள்ளியை அள்ளித் தூக்கினான்.

‘கிட்டிணா, பொறு! நாமெல்லாம் தலைக்குஒன்றோ இரண்டோ போட்டு வள்ளியின் தகனத்தை முடிச்சிடறோம்!’

‘இங்கே யாரும் பிச்சை எடுக்க வரயில்லை, உங்களை யாரும் பிச்சையும் கேக்கயில்லை!’

கமக்காரனின் நீண்ட அனுதாபத்திற்கு முகத்தில் அறைந்தது போன்று பதில் கொடுத்துவிட்டு, வள்ளியை நிமிர்த்தினான் கிட்டிணன்.

கந்தனும் கால்புறத்தே பிடித்து நிமிர்த்தினான். வெள்ளாடிச்சியை தூக்குகிறோமே என்ற கூச்சம் அப்போது அவனுக்கு இல்லை.

கள்ளுக் கந்தனும், தோட்டக்கார ஏழைக் கிட்டிணனும் வள்ளியை எடுத்துச் செல்ல, அந்த ஜனக்கூட்டம் – அநாகரிகக் கூட்டம்- கந்தல் துணிக்கூட்டம் – அழுக்குப் பிடித்த கூட்டம் வள்ளிக்குப் பின்னால் அழுது கொண்டே சென்றது.

இதைக் காண வள்ளி இல்லை. உலக வியாபகமான இந்த நடை முறைச் சம்பவத்தைக் காணக் கொடுத்து வைக்காமல், அவள் அந்த மனிதக் கூட்டத்தின் ஆத்மாக்களில் ஐக்கியமாகிவிட்டாள்?

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.
– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *