மித்திரவேல் மணியைப் பார்த்தான்,காலை நான்கு மணி,பக்கத்தில் அமுதினி தூங்கிகொண்டிருந்தாள் மெதுவாக அறையை விட்டு வெளியில் வந்து சோபாவில் உட்கார்ந்தான்,மகன் உதேஷ் ஞாபகம் வந்தது,படிப்பதற்காக ஹாஸ்டல் அனுப்பி ஒரு வாரம் தான் ஆகிறது,இரண்டு முறை போன் பன்னி நான் சந்தோஷமாக இருக்கிறேன்,கவலை பட வேண்டாம் என்று சொன்னான்.என்ன தான் அவன் அப்படி சொன்னாலும்,மித்திரவேலுக்கு கவலையாக இருந்தது பிள்ளை தற்போது என்ன செய்கிறானோ?தெரியவில்லை,தூங்குவான் என்று மனதை ஆறுதல் படுத்திக்கொண்டான் அவன்.அமுதினி பிரண்டுப் படுக்கும் போது பக்கத்தில் மித்திரவேல் இல்லாததை உணர்ந்தாள்,உடனே எழுந்துவிட்டாள்,அறையைப் பார்த்தாள் அவன் இல்லை,மணியைப் பார்த்தாள் ஐந்து மணி,இந்த நேரம் எங்குச் சென்றான்,யோசனையோடு நடந்தாள் ஹாலுக்கு,அவன் சோபாவில் உட்கார்ந்து இருந்தான்.
இங்கு என்ன செய்றீங்கள்?தூக்கம் வரவில்லையா?என்றாள் அமுதினி,இல்லை உதேஷ் நினைவாக இருக்கு என்றான் மித்திரவேல்,அவன் என்ன இன்னும் சின்ன குழந்தையா?காலேஜ் போறான் என்று சிரித்தாள் அமுதினி.உனக்கு கவலை இல்லையா?என்றான் மித்திரவேல்,கவலைப் பட்டால்,அவனை படிக்க அனுப்பியிருக்க முடியுமா? நம் ஊரில் ஒழுங்கான காலேஜ் இல்லாததால் தானே,அவனை அவ்வளவு தூரம் அனப்பியிருக்கோம்,ஐந்து வருடம் ஓடிவிடும் என்றாள் சாதாரணமாக,இல்லை அவன் நம் கைக்குள் இருந்துவிட்டான்,அது தான் கஷ்டமாக இருக்கு என்றான் மித்திரவேல்.நீங்கள் என்ன குழந்தைப் போல்,அவன் அங்கு சந்தோஷமாக இருப்பான் என்றாள் அமுதினி்.அவன் இங்குள்ள காலேஜில் படித்திருக்களாம்,நீ தான் அவன் அந்த கலேஜில் படித்தால் தான்,மதிப்பு என்று அவன் மனதை மாற்றி அனுப்பிவைத்தாய் என்றான்,என்னை குறை சொல்லாதீங்கள்,அவனுக்கும் அங்கு படிக்க தான் விருப்பம் என்றாள் அமுதினி,இதற்கு மேல் இவளிடம் கதைத்தால்,ஏதாவது பிரச்சினையில் முடியும் என்று நினைத்து,வாயை மூடிக் கொண்டான் மித்திரவேல்.
அமுதினி மறுப்படியும் போய் படுத்துவிட்டாள்,மித்திரவேல் அமைதியாக கண்ணை மூடி சோபாவில் சாய்ந்தான்.அமுதினி அவன் வீட்டுக்கு காலடி எடுத்து வைத்த நாள் முதல் ஏற்பட்ட மாற்றங்களை எண்ணிப் பார்த்தான்.மித்திரவேல் கூட்டு குடும்பமாக இருந்தவன் அப்பா,அம்மா,அண்ணா,அண்ணி, தங்கை இவர்களுடன் சந்தோஷமாக வாழ்ந்த நாட்கள் எத்தனையோ,என்று அமுதினி வந்தாளோ,அன்றிலிருந்து தனிக்குடித்தனம் போய்விடுவோம் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தவள் தான்,அதை சாதித்தும் கொண்டாள்.இவனும் எவ்வளவோ எடுத்துக் கூறினான்,அதை அவள் காதில் வாங்கியப் பாடு இல்லை,எனக்கு இங்கு இருந்து வேலைக்குப் போவதற்குப் முடியாது என்றாள்.இவன் வேலையை விடு என்றான்,அதற்கு அவள் ஒத்துக்கொள்ளவில்லை,சரி நான் என்னுடைய பைக்கில் கொண்டு விடுறேன் என்றதுக்கும்,என்னை ஆபிஸில் யாரும் மதிக்க மாட்டார்கள்,கார் என்றால் பரவாயில்லை என்றாள் அமுதினி.
சீதனமாக நீ கொண்டு வந்திருக்கனும்,என்று வாய் மட்டும் வரும் வார்த்தைகளை அடக்கி கொள்வான்,மித்திரவேல் பெண்களிடம் சீதனம் கேட்பதையே வெறுக்கிறவன் அமுதினி வீட்டில் எதையும் கேட்க்கவில்லை மித்திரவேலின் குடும்பம்.மித்திரவேலின் அப்பா அடிக்கடி கூறுவது,கையாலாகாத்தனம் பெண் வீட்டில் சீதனம் கேட்பது,உழைத்து குடும்பத்தை காப்பாத்தனும் என்பார்.மித்திரவேலும் அதில் உறுதியாக இருந்துவிட்டான்.அமுதினி வேலைக்குப் போவதைக் கூட அவன் அவ்வளவாக விரும்பவில்லை,நான் உழைத்து தருகிறேன்,நீ வீட்டில் இருந்து சாப்பிடு என்றான்,அதற்கு அவள் வாக்குவாதமே பன்னிமுடித்தாள்.ஆணாதிக்கம் பெண்களை அடிமைப் படுத்த பார்க்குறீங்கள்,உங்கள் வர்க்கமே அப்படிதான்,நாங்கள் முன்னேறுவது பிடிப்பது இல்லை,அடக்கி ஆளும் புத்தி,என்று இன்னும் ஏதோவெல்லாம் சொன்னாள்.நல்லதுக்கு காலம் இல்லை என்றான் மித்திரவேல்.எப்படியோ அவள் வேலை செய்யும் ஆபிஸ் பக்கமாகவே,வீடு தேடி சென்றுவிட்டார்கள் இருவரும்.இரண்டு பேருக்கு ஏன் இவ்வளவு பெரிய வீடு,வாடகையும் அதிகம் தானே,என்று மித்திரவேல் குடும்பம் மனதில் நினைத்துக் கொண்டது,யாரும் எதுவும் சொல்லவில்லை.
அதன் பிறகு உத்தேஷ் பிறந்தான்,பிள்ளையை பார்த்துக் கொள்வதற்கு வேலைக்கு ஆள் வைத்தப் போதும்,அது மித்திரவேலுக்கு விருப்பம் இல்லை,பிள்ளையை அம்மா பார்த்துக் கொள்வதுப் போல்,வேறு யாரும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள்,உன்னுடைய அரவணைப்பும்,அன்பும் தற்போது அவனுக்கு கட்டாயம் தேவை,வீட்டில் இருந்து நீ பார்த்துக்கொள் என்றதுக்கும் முடியாது என்று மறுத்துவிட்டாள் அமுதினி.அப்படி ஒவ்வொரு அம்மாக்களும் நினைத்தால்,வேலைக்கு போகாமல் வீட்டில் உட்கார்ந்து இருக்க வேண்டியது தான்,பிள்ளைகளை பார்த்துக் கொண்டு, கடைசி காலத்தில்,எங்களை தூக்கி எரிந்து விட்டு போய்விடுவார்கள் என்றாள் அமுதினி.பிள்ளையை சரியாக வளர்க்க வேண்டியது உனது கடமை,எந்த எதிர் பார்ப்புகளும் பிள்ளைகளிடம் இருக்க கூடாது,கடைசி காலத்தில் உன்னை பார்க்க மாட்டார்கள் என்பதற்காக,தற்போது அவர்களுக்கு எதுவும் செய்ய மாட்டியா? இப்படி நினைப்பவர்கள்,பிள்ளை பெத்திருக்க கூடாது,என்று சண்டைப் போடுவான் மித்திரவேல்,அதற்கு நான் மட்டும் காரணம் இல்லை என்று பதில் வரும் அமுதினியிடம்.
நாட்கள் வேகமாக ஓடியது,உத்தேஷ் வளர்ந்தான்,எப்போதும் அவன் அப்பா செல்லம்,ஆண்பிள்ளைகள் அம்மா செல்லம் என்பார்கள்,இங்கு முற்றிலும் வேறுப்பட்டிருந்தது.மித்திரவேல் முடிந்தளவு உத்தேஷை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நினைப்பவன்,வெளியில் அழைத்துப் போவான்,மகன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்வான்,அவனுக்குப் புரியவில்லை என்றால்,உதாரணங்கள் காட்டிபுரியவைப்பான்,எப்போதும் அப்பாவுடன் வெளியில் போவதற்கு ஆசைப்படுவான் உத்தேஷ்,வெளியில் அழைத்துப் போவதை விட,வீட்டில் அவனுக்கு நாலு கணக்கைப் போட்டுக் கொடுத்து செய்ய சொன்னால் பிற்காலத்தில் உதவும் என்பாள் அமுதினி.
அவனைப் புத்தகபுழுவாக மாத்திவிடாதே,எவ்வளவு தான் படித்திருந்தாலும்,அதை செயல் படுத்த முதலில் தெரிந்திருக்க வேண்டும்,அதற்கு வெளியுலகம் தெரியவேண்டும,எந்த நேரமும் படி,படி என்று அவனை தொல்லைப் படுத்தாதே,அவன் நிறைய விடயங்களை தெரிந்து படிக்கட்டும் என்பான் மித்திரவேல்.ஆமா…அவன் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் எனக்கு தான் வெட்கம் என்பாள் அமுதினி.இதில் என்ன வெட்கம்,ஐந்து விரல்களும் ஒரே மாதிரியா இருக்கு,ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு விதம்,உத்தேஷ் எதில் திறமையாக இருக்கின்றானோ,அதில் அவன் முன்னேறி போகட்டும் என்று மித்திரவேல் கூறினால் அதை ஒத்துக்கொள்ள மாட்டாள் அமுதினி.அவனுடைய படிப்பு விடயத்தில் நீங்கள் தலையிடாதீங்கள்,நான் பார்த்துக் கொள்கிறேன் என்று முடிவாக கூறிவிட்டாள் அமுதினி.
நானும் நீங்களும் நன்றாகப் படித்ததால் தானே,இன்று நல்ல வேலையில் இருக்கோம்.நாளை உத்தேஷ் படிக்காமல் கஷ்டப்பட்டால்,அவன் வாழ்க்கை வீணாகிப்போய்விடும்,இந்த காலத்தில் வேலை கிடைப்பதுவே குதிரைகொம்பு,போட்டி போட்டு படித்தால் மட்டுமே முன்னுக்கு வரலாம்,அதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள் என்பாள் அமுதினி.நான் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே,எல்லாம் புரிந்து படிக்கட்டும் என்று தான் சொன்னேன் என்பான் மித்திரவேல்.உத்தேஷ் வளரந்து அடித்தடுத்து வகுப்புகளுக்குப் போவதற்கு,பரிட்சை வைக்கும் போது,அவனை உட்காரவைத்து,அமுதினி பாடம் நடத்தும் விதமே மித்திரவேலுக்குப் பிடிக்காது.ஒருதரம் விளங்கப்படுத்தி விட்டு,நீ தற்போது கணக்கை போடு என்றால் அவன் பாவமாக உட்கார்ந்து இருப்பான்,முட்டாள் என்று திட்டி தீர்ப்பாள்.இந்த உலகத்தில் யாரும் முட்டாள்கள் இல்லை,அவர்களின் திறமைகளை யாரும் சரியாக புரிந்து கொள்வது இல்லை,இப்படி திட்டும் நீ தான் முட்டாள்,என்று மனதில் மித்திரவேல் நினைத்துக் கொள்வான்.
உத்தேஷ் பரிட்சை எழுதி விட்டு வீட்டுக்கு வந்தப் பிறகு,அமுதினி கேள்வி கேட்டு அவனைப் பாடாய் படுத்திவைப்பாள்,முடிந்ததைப் பற்றி இனி கேட்காதே,நாளை உள்ள பரிட்சைக்கு தயாராகட்டும் என்று மித்திரவேல் சொன்னாலும்,அமுதினி விடமாட்டாள்,இதைவிட அவனுடைய மதிப்பெண்கள் தெரிந்தப் பிறகு,நீ ஏன் இவ்வளவு எடுத்தாய்?உன் நண்பர்கள் எப்படி எடுத்திருக்கார்கள்,என்று மற்றவர்களுடன் அவனை ஒப்பிட்டு,குத்திக் காட்டும் போது,மித்திரவேலுக்கு அமுதினையை,அறையும் அளவிற்கு ஆத்திரம் வரும்,அடக்கிகொள்வான்.
பெண்களை கைநீட்டி அறையும் அளவிற்கு,அவனை அவனுடைய பெற்றோர்கள் வளர்க்கவில்லை.அதனால் அமுதினி தப்பிப்பாள்.உத்தேஷ் பரிட்சை என்றாலே பயப்பிட ஆரம்பித்தான்,ஏதோ பெரிய யுத்தத்திற்கு போகும் மாதிரி தான் பரிட்சைக்கு போவான்,அதனால் என்னவோ தெரிந்த கேள்விகளையும் செய்யாமல் வந்திருப்பான்,அதை புரிந்து கொள்ளாத அமுதினி ஆடிதீர்ப்பாள்.எத்தனையோ தடவை மித்திரவேல் படிக்கும் காலத்தில்,மதிப்பெண் குறைத்து எடுத்திருக்கிறான்,அவன் அம்மா அதை பெரிது படுத்தியதே இல்லை,அடுத்த முறை ஒழுங்காக செய்,என்று சாதாரணமாக சொல்வார்கள்.
அமுதினி பிடிவாதத்தில் தான் உத்தேஷை அந்த காலேஜில் சேர்த்ததும்,மித்திரவேல் வேண்டாம் என்று தான் சொன்னான்.அமுதினி காப்பியோடு வந்து எழுப்பினாள் மித்திரவேலை,ஏன் சோபாவில் உட்கார்ந்து தூங்குறீங்கள்?இன்று வேலை இல்லை தானே?உள்ளே வந்து படுத்திருக்கலாமே என்றாள் அமுதினி.இன்று உனக்கும் வேலை இல்லை தானே,உத்தேஷை போய் பார்த்துவிட்டு வருவோமா என்றான் மித்திரவேல்,என்ன விளையாடுறீங்களா?அவன் போய் மூன்று வாரம் தான் ஆகிறது,அதற்கிடையில் அவசரப்பட்டு பார்க்கப்போனால்,அவனை மற்றவர்கள் கிண்டல் பன்னுவார்கள்,அவன் வளர்ந்த பிள்ளை,அவனை நிம்மதியாக இருக்க விடமாட்டீங்களா?என்றாள் அமுதினி,அதன் பிறகு மித்திரவேல் எதுவும் கூறவில்லை,அமைதியாக நாட்கள் ஓடியது.
திடிரென்று ஒரு நாள் உத்தேஷ் காலேஜில் இருந்து பேராசிரியர் மித்திரவேலுக்குப் போன் பன்னினார்,அவன் பயந்துப் போய்விட்டான்,என்ன விடயம் என்று பயந்துப் போய் கேட்டான் மித்திரவேல்.உத்தேஷ் நன்றாகப் படிக்கும் பையன்,பரீட்சை என்றால் மட்டும் அதிகளவு பதட்டமாக காணப்படுகிறான்,வேர்த்து கொட்டி,முகம் சிவந்து,மயக்கம் வரும் அளவிற்கு போய் விடுகிறான்.இப்படியே தொடர்ந்தால்,அது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை,அவன் முன்பு இருந்தே இப்படி தானா?என்றார் பேராசிரியர்.ஆமாம் அவன் பரீட்சை என்றால் கொஞ்சம் பயப்பிடுவான் என்றான் மித்திரவேல்,நான் மூன்று முறை பரிட்சை வைத்து விட்டேன்,அவன் ஒவ்வொரு முறையும் பயந்து நடுங்கியதால் தான் உங்களுக்கு போன் பன்னினேன்,இதை இப்படியே விடமுடியாது,நீங்கள் உத்தேஷை ஒரு டாக்டரிடம் அழைத்துப் போவது நல்லது அதற்காக தான் போன் பன்னினேன் என்றார் அவர்.
இது ஒரு பெரிய பிரச்சினையில்லை,கவலைப் படாதீங்கள்,கௌன்சிலிங் கொடுத்தால் சரியாகிவிடும்.நிறைய மாணவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கு,சிறுவயதிலிருந்தே மதிப்பெண்னை மட்டும் கருத்தில் கொண்டு வளர்க்கப்படும் பிள்ளைகள்,இந்த மாதிரி சிக்கலில் மாட்டிக்கொள்கின்றார்கள்.பரீட்சைக்கு பயம் காட்டாமல் தயார்படுத்த வேண்டும்,நீங்கள் இருவரும் படித்து வேலைக்குப் போவதால்,அந்த பிழையைசெய்திருக்க மாட்டீங்கள் என்று நினைக்கின்றேன் என்றதும்,அவனுக்கு சுருக்கென்றது,தற்போது உத்தேஷ் எப்படி இருகிறான் என்று கவலையுடன் கேட்டான் மித்திரவேல்,அவனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை,நன்றாகவே இருக்கிறான்,என்று கூறி விட்டு போனை வைத்துவிட்டார் பேராசிரியர்.
மித்திரவேலுக்கு அமுதினி மீது கோபமாக வந்தது,எத்தனையோ தடவை,படிப்பு விடயமாக இருவருக்கும் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கு,அமுதினி பிடிவாதமாக அவன் கூறுவதை மறுத்துவிடுவாள், இன்று பாதிக்கப்பட்டிருப்பவன் உத்தேஷ்,படித்த முட்டாள் அமுதினி,எங்களின் ஆசைகளையும்,ஏக்கங்களையும் பிள்ளைகளின் மீது திணிக்க கூடாது என்பதை கூட தெரிந்துக் கொள்ளாத ஒரு பட்டதாரி அம்மா,இதைவிட படிக்காத அம்மாக்கள்,பெருந்தன்னையாகவும்,பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்தும் நடந்துகொள்கின்றார்கள்.நாங்கள் பட்டதாரிகள் என்பதால்,பிள்ளைகள் பட்டதாரிகள் தான் ஆகவேண்டும் என்பது அவசியமும் இல்லை,படிக்காத பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டதாரிகள் ஆககூடாது என்று எந்த சட்டமும் இல்லை,எந்த பிள்ளைகள் சரியாக வளர்க்கப் படுகிறார்களோ,அவர்கள் ஒவ்வொருவரும் நாளை பட்டதாரிகள் தான்.அமுதினி மாதிரி படித்த பல அம்மாக்களுக்கு இது புரிவது இல்லை,பெருமூச்சிவிட்டான் மித்திரவேல்.