வருவான் ஒருவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2024
பார்வையிட்டோர்: 206 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நீ சொல்றது உனக்கே நல்லா இருக்காடி மகளே… உனக்காக நான் கோயில் கோயிலா மடியேந்திக்கிட்டு வர்றேன். நீ என்னன்னா எல்லாத்தையும் குட்டிச் சுவராக்கிட்டு வந்து நிக்கிறியே.. இன்னும் எவ்வளவு காலத்துக்கு நான் உயிரோட இருக்கப் போறேன்.. நானும் போய்ட்டா நீ தனியா நின்னு என்னடி பண்ணுவே?”

தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் பாலம்மா சோபாவில் போய்ச் சாய்ந்தார். அவருக்கு எதிரே இரண்டு தொடையும் பிதுங்கி வழிய இறுகிய சிலுவாரும் மேல் சட்டையுமாய் கையில நியூஸ் பேப்பரில் மூழ்கிக் கிடந்த அம்மாவின் பெண் ரேணுகாவுக்கு இதுவரை அழுது புலம்பிய தாயின் குரல் காதில் விழுந்ததோ இல்லையோ?

தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த இந்திப்படத்தில் ஷாருக்கான் ஆடிக் கொண்டிருந்த ஆட்டமும் பாட்டும் நன்றாகவே காதில் விழுந்தது. கையில் இருந்த பத்திரிகையைத் தூரப் போட்டு விட்டு எழுந்தாள். ஷாருக்கானுடன் சேர்ந்து தைய்ய தைய்ய ஆட ஆரம்பித்து விட்டாள்.

அதுவரை பொறுமையாய் உட்கார்ந்திருந்த பாலம்மாவுக்கு ஆத்திரம் தலைக்கேறிக் கொண்டது. ஆவேசமாய் எழுந்த அவள் கையைப் பிடித்து உட்கார வைத்து “அடியே.. நான் பைத்தியக்காரியாட்டம் புலம்பிக்கிட்டு நிக்கறேன்.. நீ கூத்தாடிக்கிட்டு நிக்கறியே.. உன்னோட மனசில என்னதாண்டி நெனச்சிகிட்டு இருக்கே…?” என்று கத்துகிறாள். ரேணுகாவோ எதுவுமே நடக்காதது போல் அம்மாவைப் பார்க்கிறாள்.

“இப்ப என்ன நடந்துடுச்சின்னு இப்படி மாய்ஞ்சு போறே.. எனக்கு அந்த மாப்பிள்ளையைப் பிடிக்கல. அதனாலத்தான் வேண்டாமுன்னு சொல்லிட்டேன். இவன் மட்டுந்தான் ஆண்பிள்ளையா.. இந்த உலகத்திலே வேறே ஆண்பிள்ளைகளே கிடைக்காதா…?”

ரேணுகாவின் பேச்சு பெற்றவளுக்கு மேலும் வேதனையைத் தருகின்றது. அவளது வயதும் படிப்பும். அவளது இன்றைய சூழ்நிலையும் நினைக்க நினைக்க நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது.எதையோ சொல்ல வாய்திறக்கிறாள். அதற்குள் மகள் முந்திக் கொள்கிறாள்.

“இங்கே பாரும்மா… இதுக்கு மேலேயும் உன் பேச்சை கேட்டுக்கிட்டு இருக்க முடியாது. நான் எங்கேயாச்சும் போறேன்..” என்றவளாய்க் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்து காலணியை மாட்டிக் கொண்டு சாலையை நோக்கி நடக்கிறாள். பொது பொதுவென்று வளர்ந்து கிடந்த உடம்பை மெல்ல அசைத்து அவள் நடந்த போது ஒரு சின்ன ரதமே சாலையில் போவது போல் இருந்தது.

ரேணுகாவுக்கு இப்போது வயது முப்பத்தி மூன்றாகப் போகிறது. அவள் ஒரு பட்டதாரி ஆசிரியை. அத்துடன் தான் ஒரு மலையாளப் பெண் என்கின்ற உணர்வும், அத்துடன் தான்தான் பேரழகி என்கின்ற கர்வமும் நிறையவே உண்டு. தன்னுடைய சிகப்பழகைக் காட்டுவதற்காகவே அவள் தன் அங்கங்களை முடிந்தவரை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்வாள். அவளுக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உண்டு. தஞ்சோங்பகார் மலாயன் ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற மறுவருடமே அப்பா அவசரமாய் மேலே போய்விட்டார். புத்திசாலித்தனமாய் அவர் வேலையில் இருக்கும் போதே வாங்கி வைத்த இரட்டை மாடி வீடு அவர் போன பின்னும் அவர்களுக்குப் பாதுகாப்பாய் இருந்தது.

அப்பா போனதுமே அவளது அண்ணன் தன்னோடு வங்கியில் பணிபுரிந்த ஒரு எளிய குடும்பத்துப் பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டான். மருமகள் மலையாளிப் பெண்ணாக இல்லையே என்ற வாதம் அவனிடம் செல்லவில்லை. சில நாட்கள் புயலடித்து ஓய்ந்து போனது. மூன்று வருடத்தில் மணி மணியாய் ஆணொன்று பொண்ணொன்று பெற்றுக் கொண்டு அழகாய் அந்தப் பெண் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தாள்.

ரேணுகாவின் தங்கை மாதுரியோ அவளது உறவுப் பையன் வசதி வாய்ப்புகளோடு இருக்கிறான் என்று தெரிந்து அவனைப் பிடித்துக் கொண்டாள். அவளது தேர்வு வீட்டில் எல்லோருக்கும் பிடித்துப் போனதால் திருமணம் கோலாகலமாய் நடந்தேறியது. தம்பி ஒருவன் தான் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தான்.

மூத்தவள் இருக்க இளையவன் இணைதேடிக் கொள்ளலாமா? என்று ஊரார் பேசுவார்களே என்ற கவலையும் அச்சமும் அவன் மனதில் அரும்பிய காதலை மலர விடாமல் செய்து கொண்டிருந்தது.

ரேணுகாவின் இருபத்தி நான்காம் வயதில் ஆரம்பமான வரன் தேடும் கதை இன்னும் தொடர்ந்து கொண்டே வருகிறது. அவளுக்காக வந்த மாப்பிள்ளைகள் எல்லோரும் அவளுக்கும் கீழ் இருக்கும் பெண்களை மணந்து கொண்டு மகத்தான இல்லறத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ரேணுகாவோ தனக்குப் பிடித்தவன் வரும் வரை வந்தவர்களை எல்லாம் சாக்குப் போக்கு சொல்லி விரட்டிக் கொண்டிருக்கிறாள்.

இன்று இவளின் அம்மா அழுது புலம்பிக்கொண்டிருக்கக் காரணமும் இவளின் பிடிவாதமும் திருவிளையாடலும் தான். சிங்கை விமான நிலையத்தில் பணிபுரியும் அவளது இருபத்தெட்டு வயது தம்பி அவளுக்காக ஏற்பாடு செய்திந்த ஒரு டாக்டர் மாப்பிள்ளையை அவள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வராமல் செய்து விட்டாள். பெண் வீட்டுக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் தாய் மகன் மூலம் செய்தியறிந்து அவளின் அம்மாவைத் திட்டித் தன் ஏமாற்றத்தைத் தீர்த்துக் கொண்டாள்.

இந்த முப்பத்தி மூன்று வயதைக் கடந்தும் இன்னும் இவள் கன்னியாகவே இருக்க எதுதான் காரணமாக இருக்க முடியும்? இது அவளைப் பெற்றவளுக்கும் தெரியவில்லை.. உடன் பிறந்தோருக்கும் புரியவில்லை… உற்றார் உறவினருக்கும் தெரியவில்லை.

ரேணுகா தன் வீட்டிலிருந்து அடுத்த வீதியில் இருக்கும் தன் தோழி கவிதாவின் வீட்டுக்கு வருகிறாள். கவிதா தன் நான்கு வயது மகனுடன் ஊஞ்சலில் அமர்ந்து எதையோ மகனிடம் படித்துக் காட்டிக் கொண்டிருந்தாள். கவிதாவுக்கு மணமாகி அடுத்த இரண்டாவது மாதத்திலேயே கணவனின் நடத்தை சரியில்லை என்று தாய் வீட்டைத் தஞ்சம் புகுந்தவள். நல்ல அழகு.. கூடவே பொருளாதார துறையில் பட்டதாரி என்ற தகுதி. அதற்கேற்ப வியாபாரத் துறையில் நல்ல திறமையும் தன்னம்பிக்கையும் கொண்ட பெண் என்ற பாராட்டு. சுயமாகவே சம்பாதித்து சொந்த வருமானத்தில் கார். இரண்டு மாடி வீடு. வங்கியில் கணிசமான சேமிப்பு என்ற மற்ற தகுதிகளும் உரியவள்.

காதலித்துக் கல்யாணம் செய்தவன் காலை வாரிவிட்டதால் இந்த மண்ணில் பிறந்துவிட்ட எல்லா ஆண்களுமே அயோக்கியர்கள்தான் என்னும் முடிவுக்கே வந்து விட்டாள். தன்னைத் தேடி வந்த அருமைத் தோழியை ஆசையோடு வரவேற்று அருகில் அமர்த்திக் கொள்ள அதுவரை அவள் மடியில் அமர்ந்திருந்த பிள்ளை வீட்டுக்கு ஓடுகிறான்.

“வீட்ல கொஞ்ச நேரம் கூட உட்கார முடியல கவிதா… எப்படி பார்த்தாலும் இதே பேச்சுதான் அம்மாவுக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாமுன்னு சொல்லிட்டேன்கிறதுக்காக என்னைத் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க… இவுங்க சொல்றாங்கன்னு கண்டவனுங்களையும் நான் கட்டிக்க முடியுமா.. டாக்டர் மாப்பிள்ளையாச்சே.. கொஞ்சம் கௌரவம் மரியாதையா இருப்பார்னு நெனச்சு போன்ல பேசினா, அந்த ஆள் என்னை வெளியே போய்ட்டு வரலாமான்னு கேட்கறான்.

நமக்குன்னு நிச்சயம் கூட செய்யாம எப்படி வெளியே வர்றதுன்னு கேட்டா.”என்னோட கொஞ்ச நாள் வெளியே வந்து பழகி என்னோட குணம் உனக்குத் தெரிஞ்சு, உனக்கும் என்னைப் பிடிச்சா தானே நிச்சயம் பண்ண முடியும்னு சொல்றான். இவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு இவன் கூட சுத்தித் திரிஞ்சப்புறம் உன்னை எனக்குப் பிடிக்கலேன்னு” போய்ட்டான்னா யாருக்கு நஷ்டம்? எனக்கா அவனுக்கா? பொம்பளைங்கன்னா இவனுங்க என்னதான் நெனைச்சிக்கிட்டிருக்கானுங்க.

அவளும் ஏமாந்தவள் தானே.. ஒரு மிகப் பெரிய வர்த்தக மாநாட்டில் சிறப்பு சேவையாளருக்கான விருதையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டு மேடையிலிருந்து இறங்கியவளை நிறுத்தி வைத்து அவளைப் பற்றியும் அவளின் அளப்பரிய திறமை பற்றியும் வெகுவாகப் புகழ்ந்து நம் இந்திய சமுதாயத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று விழா குழுத் தலைவர் பாராட்டியபோது அரங்கமே கையொலியால் அதிர அந்த ஆடவனின் மனமும் அதிர்ந்தது.

அன்று மாலையே அவள் தங்கியிருந்த பிரபல தங்கும் விடுதிக்கு தொடர்பு கொண்டு அவளைச் சந்தித்து அளவளாவித் தன்னைப் பற்றியும் தனது தொழில் பற்றியும் அறிமுகம் செய்து கொண்டவன். திருமணமே வேண்டாம் என்று இருந்தவளை அடுத்த சந்திப்புகளிலேயே தன் வயப்படுத்தி விட்டான்.

அவனை முழுமையாக நம்பினாள். ‘நீ என்னை ஏற்றுக் கொள்ளாவிடில் நான் தற்கொலை செய்து கொள்வேன், என்ற அவனது காதல் வார்த்தைகளை நம்பினாள். அவனைச் சுற்றியிருந்த அவனது நண்பர்களும் அவனது அலுவலகப் பின்னணியும் அவனது நட்புக்குரிய முக்கியப் பிரமுகர்களும் அவன்பால் அவளை முழுமையான நம்பிக்கை வைக்க வைத்தது. அவனையே மணந்து கொள்ள விரும்புகிறேன் என்று அவள் சொன்ன பொழுது வீட்டில் யாரும் மறுக்க வில்லை.

திருமணமும் விருந்தும் தடபுடலாய் முடிந்தது. எண்ணற்ற கற்பனைகளைச் சுமந்து கொண்டு புகுந்த வீடு சென்றவள் இரண்டாவது மாதமே தாய் வீடு திரும்பினாள். அவளுக்கு மிஞ்சியது அவள் வயிற்றில் தங்கிய அந்தக் கரு மட்டுமே.

முதலில் “நமக்காக ஒரு வீடு வாங்க வேண்டும். திருமணத்திற்கு முன்பே நான் முன்பணம் கட்டி விட்டேன். இப்போது இன்னும் கொஞ்சம் பணம் கட்ட வேண்டும் வந்து பாரேன்” என்று கனிவான மொழிபேசி அவளை அழைத்துச் சென்று வீட்டையும் காட்டி வீடமைப்பாளரையும் காட்டியபோது அந்த வீடும் அவன் சொன்ன தொகையும் அவளுக்கு முழு திருப்தியைத் தர அவன் வாய்திறக்கு முன்னே தன் வங்கிக் கணக்கிலிருந்து அவனுக்கு பணத்தை எடுத்துக் கொடுத்தாள். இரண்டு நாட்களுக்குப் பின் அவசர வேலையாய் அண்டை நாட்டுக்குப் போய்விட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனவன் ஒருவாரமாய் வீடு திரும்பாதது கண்டு மாமியாரிடம் கேட்டபோது.

“உன்னோடு மட்டும் அவன் இருந்து விட்டால் அவனோட மூத்த தாரத்தையும், பிள்ளைகளையும் யாரு பார்க்கிறதாம் என்று அலட்சியமாய் மாமியார் சொன்ன போதுதான் பொறிகலங்கிப் போனாள் கவிதா. அடுத்த நிமிடமே தனது துணிமணிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்குப் புறப்பட எண்ணி அலமாரியைத் திறந்தவள் அப்படியே நிலை குலைந்து போனாள். அவளது தாய் வீட்டுச் சீதனமாய் கொண்டு வந்த அத்தனை தங்க வைர நகைகளையும் மொத்தமாய் வைத்திருந்த அவளது நகை பெட்டியும், திருமண ஒளிப்பதிவு நாடாவும் போட்டோக்களும் திருமண பதிவு பாரங்களும் எல்லாமே மொத்தமாய் காணாமல் போயிருந்தன.

தன் உயிர் மிஞ்சினால் போதுமென்று யாரிடமும் எதையும் சொல்லாமல் இரவே புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தவள்தான். வயிற்றில் இரண்டு மாதக் கருவாய் இருந்த பிள்ளைக்கும் இப்போது நான்கு வயதாகி விட்டது. அவனோ அவனைச் சார்ந்தவர்களே எட்டியும் பார்க்கவில்லை. பெண்ணைப் பெற்றவர்கள்தான் உருகிக் கொண்டிருக்கிறார்கள்.

உன் பிள்ளைக்கு ஒரு துணை வேண்டும். உன் எதிர்காலத்துக்கு ஒரு ஆண் துணை வேண்டும். உன் இளமையும் வயதும் வீணாகி விடக்கூடாது. நீ மறுமணம் செய்து இன்னும் மக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். என்று எவ்வளவோ வற்புறுத்துகிறார்கள். ஆனால் அவள் மனம்தான் கரைய மறுக்கின்றது. அதுதான் எப்போதோ இறுகிய பாறையாகிவிட்டதே.

தன் கடந்த கால நினைவுகளில் மூழ்கி விட்ட தோழியின் தோளில் கை வைக்கிறாள் ரேணுகா. திரும்பிப் பார்க்கிறாள் கவிதா. இரண்டு பேரின் விழிகளும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. கவிபாடும் அந்த கண்களுக்குள் தான் எத்தனை எத்தனை கேள்விகள்!

வாழ வேண்டிய பருவத்தில் இப்படிக் காட்டில் திரியும் நிலவாய் போய்க் கொண்டிருக்கும் இந்தப் பெண்களின் மனதில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைக்கப் போவதுதான் யார்! எப்போது?

“என்ன கவிதா இப்படி பார்க்கறே. உன்கிட்ட எனக்கு ஆறுதல் கிடைக்குமின்னு தான் வந்தேன். நீயும் இப்படி மௌனமா இருந்தா நான் எங்கே போவேன்?”

தோழியின் தோளில் சாய்ந்து கொள்கிறாள் ரேணுகா. அவளை ஆறுதலாய் கட்டிக் கொள்கிறாள் கவிதா.

“இங்கே பார் ரேணுகா. ஆரம்பம்னு ஒண்ணு இருந்தா முடிவுன்னு ஒண்ணு நிச்சயம் இருக்கவே செய்யும். நம்மேலேயே நமக்கு நம்பிக்கை வரணும் எனக்கு அந்த நம்பிக்கை வந்துடுச்சு ரேணுகா.. நீயும் எனன மாதிரி மனசை மாத்திக்க பாரு.

ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண்ணாலதான் வாழ்க்கையே இருக்கு, ஆனா அதை அவுங்க புரிஞ்சுக்காம நமக்கு அவுங்க வாழ்வு கொடுக்கறதா சொல்லிக்கிட்டுத் திரியறாங்க.. நீயே நெனைச்சிப் பாரேன்.. உன்னை வேணாம்னு சொல்லிட்டுப் போனவனும், என்னை விட்டுட்டு ஓடினவனும் ஒரு ஆணைத் தேடியா ஓடினான். அதனால் இந்த மண்ணுல வாழ்க்கையை தேடி ஓட வேண்டியது கவலைப்பட வேண்டியது பொண்ணுங்க இல்லை. ஆம்பளைங்கதான்.

நிச்சயமா நம்மைத் தேடி நல்லவன் ஒருத்தன் வராமலா போவான்..? எனக்கு அந்த நம்பிக்கை நெறையவே இருக்குது ரேணுகா.. நம்பிக்கை தான் வாழ்க்கை.. உன்னை நீ நம்பு.. நிச்சயம் நல்லது நடக்கும்.

இறுகிக்கிடந்த ரேணுகாவின் முகம் மெல்ல மெல்ல மலர்கின்றது. மலைமுகட்டில் திரண்டிருந்த கரு மேகங்கள் கலைந்து கொண்டிருந்தன. தெளிவான வானத்தில் அழகிய பிறையொன்று வெள்ளிக் கீற்றாய் முகம் காட்டத் தொடங்கியது. பௌர்ணமி நிலவு போன்ற வட்டமுகத்தின் செந்நிற இதழ் விரிய மல்லிகை மொட்டுகளாய்ப் புன்னகை மின்ன ரேணுகா எழுகிறாள்.

தோழியிடம் விடை பெற்று நடந்தபோது அந்த நடையில் புதுத் தெம்பு தெறிகிறது.

– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *