வரவு செலவுக் கணக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,852 
 
 

இப்ப கொஞ்சம் நாட்களாக வரவு செலவையெல்லாம் நோட்டில் எழுதிவைக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். எப்படி எழுதவேண்டும் என்பதை அக்காவிடமிருந்து கற்றுக்கொண்ட படிப்பினை கொஞ்சம் இருக்கிறது.

அக்காவை கடைப்பிடித்து எழுதுவதில்; எதோ ஒருவகை சலனம் எனக்குள் உண்டாவதை உணரமுடிகிறது. ஐம்பது பைசா ஊறுகாய் வாங்குவதைக்கூட தவறாமல் எழுதிவிடும் பழக்கம் உடையவள். அவள், இரகசியப் பொருட்களைக் கூட விலையையும் சேர்த்து எழுதி வைக்கும் பழக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதில் வேறு கடைக்காரர் கொடுக்கும் ரசீதுகளைக் கூட மயிலிறகைப்போல நடுப்பகத்தில் வைத்திடுவாள். நல்ல வேலை கொடுக்கும் வீட்டு வாடகைக்கு வீட்டுக்காரரிடம் ரசீது கேட்டு அடம்பிடிக்கும் பழக்கம் மட்டும் அவளிடம் இல்லை. அப்படியொரு பழக்கம் இருந்திருந்தால் அடிக்கடி வீட்டை காலி செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருப்பாள்.

எனது அக்கா மாதிரி வரவு செலவுக் கணக்கை எழுதுவதாக வைத்துக் கொள்வோம். சிகரெட் , தண்ணிச் செலவையும் நான் எழுதியாக வேண்டுமோ….?. அப்படி எழுதி வைக்க என் ஆழ்மனது இடம் கொடுக்கவில்லை. முதலில் எதையெல்லாம் எழுத வேண்டாம் என்பதில் ஒரு தீர்க்கமான முடிவு செய்தேன். பட்டியல் நீளவில்லை. சிகரெட், தண்ணியோடு நின்று விட்டது.

நான் தினம் வரவு செலவு கணக்கு எழுதுவதை என் அக்காள் கேள்விப்பட்டிருக்கிறாள். மனசுக்குள் ரசித்திருக்கிறாள். வரவு செலவு கணக்கு எழுதும் எல்லோரையும் அவளுக்குப் பிடித்துப் போய்விடுகிறது. அதற்கான காரணத்தை ஒரு முறைக்கு பலமுறை சொல்லி கேட்டிருக்கிறேன். “எவ்ளோ வேண்டுமானாலும் நம்பி கடன் கொடுக்கலாம் கடன் வாங்கலாம். அவங்கக்கிட்ட வரவு செலவு வச்சிக்கிறது கல்லில் எழுதின எழுத்து” நான் திரும்ப கேட்கிறேன். “எங்கள மாதிரி ஆள்களுக்கிட்ட வச்சிக்கிற வரவு செலவு?” பட்டென்று சொன்னாள். “ என்னா தண்ணியில எழுதுற கணக்குதான்.”

முச்சந்தி வரை மட்டுமே வரும் பெண்களைப் போல வாங்கிய சம்பளம் பதினைந்து தேதியோடு சரி. அதற்குப்பிறகு அக்காதான் எல்லாம். சம்பளத்தேதியில் அக்கா கணக்கு போகத்தான் எனக்கு. இதையும் தாண்டி நண்பர்கள் யாரும் ஊருக்கு சென்றால் அம்மாவிற்கு பணம் கொடுத்து அனுப்புவதோடு சரி.

அக்கா என்னைப் பார்க்க பெங்களூர் வரைக்கும் வந்திருக்கிறாள். ஒரு வாரப்பொழுதுகளை பெங்களுரில் கடத்த வேண்டும் என்பதுதான் அவளுடைய அவா. கூடவே ஐந்து வயதாகும் மகனையும் அழைத்து வந்திருந்தாள். ஆறு நாட்கள் நகரத்தை சுற்றிப்பார்ப்பதிலேயே கடந்து விட்டது. ஏழாம் நாள் இன்று.

“ரகு….. நீ வரவு செலவு நோட் போட்டிருக்கேனு கேள்விப்பட்டேன். எங்கே காட்டுப் பார்க்கலாம்”

எனக்குள் குறுகுறுத்தது.

“அதை என்னதுக்கு நீ கேட்கிறேக்கா……?”

“சும்மா பார்க்கலாமுனுதான்”

நோட்டை எடுத்து நீட்டினேன்.

“ரொம்ப சின்ன நோட்டா போட்டிருக்கே…..”

“விரலுக்கேத்த வீக்கம் “

“எழுத்தெல்லாம் கோழி சீக்கிற மாதிரி எழுதிருக்கே”

“எனக்கு மட்டும் புரிஞ்சா போதுமுனுதான்”

“நீ நினைக்கிற மாதிரி இல்ல ரகு, வரவு செலவு கணக்கு. கிட்டத்திட்ட சுய சரிதை மாதிரி அது. ரொம்ப வெளிப்படையாகவே இருக்கணும்”

“வெளிப்படையாக இருக்கணுமுன்னா…?”

“இப்ப நீ சிகரெட்டை புகைச்சிட்டு தூக்கியெறிஞ்சியே. அந்தக்கணக்கெல்லாம் இதுல வரணும்..”

அவளுடைய வாதத்தில் குறுக்கிட்டேன்.

“நீ ஒரு ஆளுக்கா. நேற்றைக்கு ஒரு ரூபா கொடுத்து டாய்லெட்க்குள்; போனேன். அதெல்லாம்மா எழுதணும்.”

“பின்னே எழுதுறதில்லையா…?”

பக்கத்தை முழுவதுமாக புரட்டிவிட்டு உள்ளங்கையில் நோட்டைத் தட்டினாள். நோட்டில் ஒட்டிக் கொண்டிருந்த தூசிகள் துண்டைக் காணாம் துணியைக் காணாம் என பறந்தது.

அடுத்தச்சுற்றாக நோட்டை விரித்து வைத்துக்கொண்டு முனுமுனுத்தாள்.

“என்ன ரகு. சம்பளம் ஐய்யாயிரம் வாங்கிருக்கே அது வரவு. ஆனா…. செலவு வெறும் ரெண்டாயிரத்து எண்ணூற்று தொண்ணூறு மட்டும் தான் வருது.”

“ஆமாம் மீதி எங்கே….. .? ” மனதிற்குள் அலசினேன்.

“ரகு… நான் கொடுத்த ஆயிரத்தில முந்நூறு ரூபாய்க்கு கணக்கை காணாம்..”

நெற்றி தசைகளை ஒரு சேர இழுத்து வந்து துலாவினேன். முந்நூறுக்கான செலவு தென்பட்டது. ஆனால் சம்பளக்கணக்கில் மீதி…?”

அக்கா பெருமூச்சு விட்டப்படி சொன்னாள்.

“ம்…. ரகு. கண்டுப்பிடிச்சிட்டேன். என் பையன் பிறந்த நாளுக்கு மாமன் ட்ரெஸ் முந்நூறு ரூபாய்க்கு எடுத்து அனுப்பிருந்தியே ஞாபகமிருக்கா… ?”

“..ம்.” தலையாட்டினேன்.

“அடுத்து ரகு . அம்மாவிற்கு மூவாயிரம் கொடுத்து அனுப்பினியே. அதை எழுதல.”

பேனாவை திறந்து எழுதத்தொடங்கினாள்.

“அக்கா நிறுத்துக்கா.”

“ஏன்டா…….?”

“தம்பிக்கு ட்ரெஸ் எடுத்ததையும் அம்மாவுக்கு பணம் அனுப்பி வைத்ததையும்மா எழுதி வைக்கணும்!”

“ஆமான்டா. அப்ப தான் வரவு செலவு கணக்கா வரும்”

“என்ன வரவு செலவு கணக்கா வரும்…..?”

“என்னடா சொல்றே…?”

“நீ நினைக்கிற மாதிரி இல்லக்கா. உழுவுறவன் கணக்குப்பார்த்தா உலைக்கு கூட மிஞ்சாது. அப்பா அப்படியெல்லாம் கணக்கு பார்க்காத வரைக்கும் தான் அவரு தொடர்ந்து விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தார். நானும் நீயும் கணக்குப் பார்த்தோம். உழுத நிலத்தையெல்லாம் குத்தகைக்கு விட்டுட்டு நீ சென்னையிலேயும் நான் இங்கேயும் இருக்கிறோம். “

“நான் இப்ப என்ன சொல்லிட்டேன். இப்படி கொதிக்கிற”
“பின்னே என்னக்கா நீ. பெத்தவளுக்கு கொடுக்கிற பணத்தையெல்லாம் செலவுல எழுதுறது எனக்கு நல்லாதா படல. நம்ம அம்மா நமக்கு கொடுத்த பாசம் நேசம் எல்லாத்தையும் கணக்குப்பார்த்தா நாம அம்மாவுக்கு கொடுக்க பூமியே பத்தாதுக்கா.”

அவளுக்குள் கீறல் விழுந்ததை என்னால் உணர முடிந்தது.

“சரிடா ரகு நான் கிளம்புறேன். லீவு கிடைச்சா சென்னைக்கு வா. இந்தா செலவுக்கு பணம். முன்னூறு வச்சிக்கோ.”

வழக்கமாக அக்கா என்னிடமிருந்து பிரியும் போது கொடுக்கும் சம்பிரதாயமாகிப்போன கரன்சி இது .

கையிலேயே நோட்டு வைத்திருந்ததால் வரவில் முந்நூறு வைத்தேன்.

“வாய் கிழிய பேசினே. அக்கா கொடுக்கிறத நோட்டுல எழுதுற”

“அக்கா… உறவுக்காரங்கக்கிட்ட வாங்கியதை எழுதணும். கொடுக்கிறதை எழுதக்கூடாது”

“அய்யோ…. எனக்கு தலை சுத்துதுடா.” எனச் சொல்லிக்கொண்டு அக்கா அவளுடைய நோட்டைத் வேகமாகத் தேடினாள்.
“எப்பா ரகு…. சொல்லு.”

“எனக்கு முந்நூறு கொடுத்திருக்கிற” அக்கா சிடுசிடுத்தாள்.

“அட அது இல்லப்பா. கடைசியா ஒரு வசனம் பேசினியே”

“அதை வீட்ல போய் யோசிச்சு எழுதுக்கிறலாம். இப்ப வருகிற பஸ்ல சீட் பிடிக்கப்பாரு.” முண்டியடித்துக்கொண்டு ஓடினாள் அக்கா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *