வயது வந்துவிட்டது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 1,411 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

களத்து மேட்டில் ஏறினதுமே எதிரே கண்ட காட்சியால் பிரமித்து நின்றுவிட்டேன். நான் அவ்வளவு நெருங்கி வந்துவிட்டதை அவளும் கவனிக்கவில்லை; குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

என்னைக் கண்டதும் அவள் சடக்கென்று குழந்தையை மார்பிலிருந்து எடுத்து மேலாக்கைச் சரி செய்துகொண்டு எழுந்து, ‘வாங்க? எப்ப வந்தீங்க?’ என்றாள்.

‘வள்ளியம்மையா!” என்று நான் வாய்விட்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டு அவளைப் பார்த்தேன்.

அவள் புன்னகையுடன் சற்று தலைகுனிந்து கொண்டு ஆமாங்க. அடையாளம் தெரியலையா? என்றாள்.

‘எவ்வளவு வருஷமாச்சு! சிற்றாடை கட்டித் திரிந்த வள்ளியம்மையைத் தானே நான் பார்த்திருக்கிறேன்!’

‘ஆமாங்க!” என்று அவள் தலையெடுத்து நகைத்து என்னை அன்புடன் பார்த்தாள்.

‘கங்காணி எங்கே?’

‘ஊட்டுக்கு போயிருக்காரு. உக்காருங்க” என்று களத்துமேட்டில் மாமரத்தடியில் போட்டிருந்த பழைய கயிற்றுக் கட்டிலைக் காட்டினாள்.

‘குடிக்கத் தண்ணி இருக்காம்மா?’

‘அப்பாரு வந்தா எளனி-‘

‘தண்ணி வேணும்!”

‘பானைலே இருக்குதே!’

‘தேவலாம் குடு,மின்னே எல்லாம் குடுக்கலையா?’

அவள் சற்று தயங்கிப் பிறகு பானையிலிருந்த ஒரு குவளை தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து அருகில் வைக்கப் போனாள். நான் கையில் வாங்கிக்கொண்டேன்.

தான் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேலையிலிருந்து தடுக்கப்பட்ட குழந்தை வெகு கோபமடைந்து உரக்க அழ ஆரம்பித்தான். அவனை அவள் அருகில் தொங்கிக்கொண்டிருந்த தூளியில் போட்டு ஆட்ட ஆரம்பித்தாள்.

‘நீ எந்த ஊரிலே இருக்கிறாய்?’

‘சேலத்துலே-அவரு-முனிசிபாலிடிலே சேவகரு-‘

‘சேவகரய்யா பொஞ்சாதியா நீ!’ என்று நாள் சிரித்தேன். அவளும் மௌனமாகச் சிரித்தாள்.

வள்ளியம்மை பத்து வயதுப் பெண்ணாக இருந்த பொழுது எனக்கும் பத்து வயது. அவள் தகப்பன் கங்காணி என்று பெயர் பெற்ற ஆரான் எங்கள் நிலத்து குத்தகைக்காரன். அப்பொழுது ஒவ்வொரு விடுமுறைக்கும் நான் கிராமத்துக்குப் போவேன், என் தகப்பனாருடன்.

அப்பொழுதெல்லாம் வள்ளி முரட்டுப் பெண். நல்ல கட்டுமஸ்தான தேகம். மரம் ஏறுவாள். பெரிய கிணறுகளில் குதித்து நீந்துவாள். எதுவும் அவளுக்கு லட்சிய மில்லை. சிக்குப் பிடித்த தலை மயிரை அள்ளிச் சொருகி இருப்பாள். காதுகளில் பூச்சிக்கூடு, மூக்கில் பொன் மூக்குத்தி. கையில் வெள்ளி வளையல்கள். கையில் கம்புடன் மாடுகள் மேய்ப்பது அவள் வேலை.

கன்னங்கரேலென்றிருந்த அவளுடைய முகத்தில் கருவிழிகளுக்கு வெளியே தென்படும் கண்களின் வெள்ளை பாகங்களும் பற்களும்தான் பளிச்சென்று இருக்கும். எந்தக் காலத்தில் எது விளைகிறதோ அதை வயலிலிருந்து எடுத்துத் தின்றுகொண்டேயிருப்பான். சோளம் விளைகிற காலத்தில் சோளக் கொண்டையும் கையுமாகத்தான் இருப்பாள்; கம்பு வினைகிற காலத்தில் கம்பங்கதிர்; வேர்க்கடலை காலத்தில் பச்சை வேர்க்கடலை; கரும்பு காலத்தில் கரும்புத்துண்டு. பருவ தேவதையின் உருப்போல அந்தந்த சின்னத்துடன் தான் இருப்பாள் எப்பொழுதும்.

என்னை எட்ட நின்று பார்ப்பது முதலில் அவளுக்கு ஒரு வேடிக்கை. பிறகு கொஞ்சங் கொஞ்சமாகப் பழக்கம் ஏற்பட்டது.

ஒரு தடவை சோளப் பயிரிலிருந்து ஒருகொண்டையை ஒடிக்க முயன்றேன். என்னால் முடியவில்லை. தண்டு என் கையைக் கீறி விட்டது. அவள் உடனே தன் அருகிலிருந்த ஒரு கொண்டையை வெகு லாவகமாக ஒடித்து என்னிடம் கொண்டு வந்து கொடுத்தாள். மணிகளை உதிர்க்கத் தெரியவில்லை எனக்கு. அவள் உடனே அதை வாங்கி வெகு சீக்கிரத்தில் உதிர்த்து பிடி மணிகளை என்னிடம் கொடுத்தான்-ஊதிப் பொட்டை அகற்றி.

அதிலிருந்து இருவரும் சிநேகிதர்கள். நான் கொண்டு போயிருந்த பொம்மைப் புஸ்தகங்களையெல்லாம் அவளுக்குக் காட்டினேன். அம்மா கொடுத்த பெப்பர் மென்ட்களைக் கொடுத்தேன்.

உடனே பண்டமாற்றம் ஆரம்பித்தது. நான் அவளுக்கு ஒரு சின்னக் கத்தி கொடுத்தேன். அவள் எனக்கொரு சின்ன நறுக்கரிவான் கொடுத்தான். நான் ஒரு பாக்கெட் பிஸ்கெட் கொடுத்தேன். அவள் பனைவெல்ல அச்சு ஒன்று கொடுத்தாள்.

தன் பிரதாபங்களை எல்லாம் அவள் என்முன் காட்ட ஆரம்பித்தாள், மாடுகளையெல்லாம் வெகு அருகில் சென்று அடித்து கொம்புகளைப் பிடித்து இழுப்பாள். எனக்குத் திகிலாக இருக்கும். மாமரத்திலேறிக் கொத்தோடு மாவடு பிடுங்குவான்; கீழே விழுந்துவிடுவாளோ என்று நான் கீழே நின்று தவிப்பேன். வழுக்கும் கிணற்றுப்படிகளில் வெகு சுலபமாக இறங்கி எனக்குக் குடிக்க ஜலம் கொண்டு வத்து கொடுப்பாள். அதில் குதித்து நீந்தி விளையாடுவாள். ஈரத்துணி ஒட்டின அவள் உடல் கருங்கல் சிலைபோல இருக்கும். இனம் தொங்கை பளங்காயில் துருவிவிட்டுக் குடிக்கச் சொல்லுவாள். நான் குடிக்கத் தெரியாமல் மேல் எல்லாம் கொட்டிக் கொள்ளுவேன். வள்ளியம்மை அழகாகச் சிரிப்பாள். பிறகு, தான் சாப்பிட்டுக் காட்டுவாள். விக்கிரகமே உயிர் பெற்று உலவுவதுபோல இருக்கும்.

காட்டுக் கொடிபோன்ற அவள் முரட்டு வளர்ச்சியில் மென்மையும் தென்பட்டது. சிரித்தால் அவள் முகம் வடிவழகு கொள்ளும். அவள் குரல் மெல்லியதாயும் இனிமையாகவும் இருக்கும். உரக்கக் கத்தவே மாட்டாள். சிற்றாடை சூழ்த்து மறைந்த அவள் அங்கங்களில் பருவம் பொங்க ஆரம்பித்துக்கொண்டிருந்தது.

நாங்கள் இருவரும் ஒரு நாள் களத்துமேட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தான் விளையாட்டாக அவள் மேலாக்கைப் பிடித்து இழுத்துவிட்டேன். உடனே அவள் என்னை மல்லாக்கக் கீழே தள்ளிவிட்டாள். நான் உருண்டுருண்டு களத்து மேட்டிலிருந்து வயல் சேற்றில் வந்து விழுந்தேன். நான் அவ்வளவு லேசாக விழுந்து விடுவேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. திடுக்கிட்டு ஓடிவந்து என்னைப் பிடித்துத் தூக்கி என்மேலிருந்த சேற்றையெல்லாம் தன் முந்தானையால் துடைத்து, ‘என்னாத்துக்கு மணி, அத்த மாதிரி இளுத்தே!” என்று மன்னிப்புக் கேட்பதுபோலக் கெஞ்சினாள்.

எனக்குக் கோபம், அவமானம். மௌனமாக மாமரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டேன். வள்ளியம்மை சற்றுநேரம் சும்மா இருந்தாள். அங்கு போனாள், இங்கு போனாள். பிறகு என்னிடம் வந்து உட்கார்ந்து கொண்டு கண்ணீருடன் ஒருகையை என் கழுத்தில் போட்டுக் கொண்டு, ‘என் மேல் கோவமா?’ என்று கேட்டாள்.

‘போடி, உன்னைத்தெரியும்!’ என்று நான் ஒதுங்க முயன்றேன்.

வள்ளி என்னை இறுகக்கட்டிக்கொண்டு முகத்தோடு முகம் வைத்து, ‘இனிமே இல்லே, மணி, என்னோடே பேசமாட்டியா இனிமேல்’ என்று கெஞ்சினான்.

பத்துவயதுதான் எனக்கு. அந்த இனிமை இசைத்த குரலும், மென்மை ஓடிய உடலும் சேர்த்து என்னை நானே இன்னதென்று அப்பொழுது அறிய முடியாத ஒரு இன்பத்தில் ஈடுபடச் செய்தன.

அந்தப் புனிதமான பரவச நிலையில் நான் அவள் அணைப்பில் ஒடுங்கி, ‘பேசவே மாட்டேன், போ!’ என்று சொல்லிச் சிரித்தேன்.

அவ்வளவுதான். சடக்கென்று என்னை விட்டு விட்டு எழுந்து ஓடி ‘பேசாட்டி போயேன்’ என்று சொல்லிக் கொண்டு மாமரத்தில் ஏறிப் போனாள்.

‘இந்தா வள்ளி, இங்கே வா, பேசறேன்!’ என்று நான் கத்தினேன்.

‘மாட்டேன் போ! மரத்துலே ஏறி கீழே உளுந்து செத்துப்போறேன்!’ என்று பயமுறுத்தினாள்.

நான் எழுத்தோடிப்போய் அவள் மேலாக்கைப் பற்றி இழுத்தேன், கலகலவென்று நகைத்துக்கொண்டு ‘உடு, உடு, மணி” என்று கீழே குதித்தாள்.

நான் விடவில்லை.

வெகு நேரம் கட்டிலில் மெய்மறந்து உட்கார்ந்திருந்தேன். என்முன் நின்ற வள்ளி பழைய சூக்ஷ்ம ரூபத்துடன் என்னுடன் விளையாடுவது போன்ற பிரமை கொண்டேன்.

‘என்னைச் சேற்றில் தள்ளினாயே ஒருநாள், நினைவு வருகிறதா?’ என்றேன் வெகு நேரம் கழித்து நினைவு வந்து.

அவளும் அவ்வளவு நேரம் மெய்மறந்திருந்தாள் போலிருக்கிறது. உலுக்கிவிழுந்து ‘என்ன மணி?’ என்றவன் சட்டென்று திருத்திக்கொண்டு ‘என்னங்க?’ என்று கேட்டாள்.

‘சேற்றில் தள்ளிவிட்டு…’ என்று ஆரம்பித்தேன். அவள் வெட்கத்துடன் மூகத்தைத் திருப்பிக்கொண்டாள்; ஆனால் அதில் தோன்றியிருந்த உணர்ச்சிச் சாயலை அவளால் மறைக்கமுடியவில்லை.

‘உன் முரட்டுத் தனமும் விளையாட்டும் எங்கோ போய் விட்டனவே!’

அவள் சிரித்துக் கொண்டே ‘வயதாவல்லிங்களா? என்றாள்.

‘எங்கே அந்த மாங்கிளையில் இருக்கிற கொத்து மாவடுவை. அப்படியே பறி, பார்ப்போம்!’

‘இப்ப நீங்கதான் பறிக்கணும்!’

‘சோளக் கொண்டைதான் ஓடியேன்!’

வள்ளியம்மை யௌவனத்தின் நிறைவு ஒவ்வொரு அங்கத்தின் அசைவிலும் தென்பட வனப்பே நடந்து போவதுபோலப் போய் சோளக் கொண்டை ஒன்றைப் பறித்து உதிர்த்துக் கொண்டே வந்தாள்.

‘அப்படியே ஒருவாய் சாப்பிடு, பார்க்கிறேன்!’

அவள் சாப்பிடவில்லை. உதிர்த்த மணிகளை என் கையில் கொட்டினாள்.

என் மனதிலிருந்ததை சொன்னேன்.

‘முன்போல நாம் விளையாடுவதற்கு இடைஞ்சலாக…’ என்று ஆரம்பித்தேன்.

‘வயது வந்திருச்சில்லியா!” என்று சொல்லி அவள் அருகிலிருந்த கொல்லி மலைத் தொடர்ப் பக்கம் பார்த்தாள்.

அந்தப் பார்வையின் குறுக்கே சற்று தூரத்தில் அவள் தந்தையின் உருவம் தென்பட்டது.

‘வள்ளி!’ என்று தான் ஏதோ பேச ஆரம்பித்தேன்.

‘அதோ அப்பாரு வர்ராரே!” என்றான் அவள் குறுக்கிட்டு.

– கிராம ஊழியஸ் 01.01.1944

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *