அவன் பஸ்ஸிலிருந்து இறங்கி வெதுவெதுப்பான தரையில் கால் வைத்ததும், சத்தமில்லாமல் பஸ் வழுக்கிக்கொண்டுபோய் மறைந்து விட்டது.
இரண்டு பர்லாங் தூரம் இருக்கும் ஊர். ஒரு சுடுகுஞ்சியைக்கூட காணோம்!
போதை நிறைந்து வழியும் குடிகாரனதுபோல அவனுடைய பிரக்ஞையின் வட்டம் சுருங்கி இருந்தது. நிலவின் பிரகாசம் தெளிவாக இருந்தது. வழியில் சிதறிக்கிடக்கும் காக்காப்பொன் துகள் களில் நிலவின் பிரகாசம் பட்டு மின்ளின. நிரம்பிய குட்டங்களில் தண்ணீரின் குடு இன்னும் ஆறாததால் அதிலிருந்து அடிக்கும் அவை கனின் சுவாசம் வெப்பமாக இருந்தது. சின்வண்டுகளின் இடைவிடாத இரைச்சல் கேட்டுக்கொண்டே இருந்தது.
அவன் சும்மாய்க் கரையோரம் வந்தபோது அவனைக் கடந்து இரண்டுபேர்கள் போனார்கள். அவர்களை அவன் எங்கோ பார்த்திருத் தானாயிறும் ஜாடை பிடிபடவில்லை. அவர்கள் ஒரு பன்றியை நாலு கால்களையும் சேர்த்துக்கட்டி ஒரு நீளக்கம்பில் காவட்டுபோட்டு தோளில் வைத்துக்கொண்டு நடந்தார்கள். பன்றியின் வாயைப் பனை நாரினால் இறுக்கிக் கட்டியிருந்தார்கள். வாலை அதன் ஒரு தொடை யிடுக்கில் இழுத்துச் சொருகியிருந்தார்கள்.
முன்னால் சென்றவனுக்கு ஒரு கண்ணைக் காணோம். அது இருந்த இடத்தில் ஒரு ஆழமான கிடங்கு மட்டுமேயிருந்தது. மூக்கு, தெற்றியின் நடு மேட்டிலிருந்தே தொடங்கியிருந்தது. ஒரு கறுப்பு நிறத்துண்டை இடைவாருக்குப் பதிலாக இடுப்பில் இறுக்கிக் கட்டியிருந்தான், மாரில் கரும்புல்லாய் மயிர் அடர்ந்திருந்தது. வலதுகால் பெருவிரல் தீண்டு இடதுபக்கம் கோணியும், இடதுகால் பெருவிரல் நீண்டு வளர்த்து வலதுபக்கம் கோணியும் இருந்தது.
பின்னால் சென்றவனுக்கு வலது புறத்திலிருந்து கை வள்ளிசாக இல்லை. பிச்சாங்கையினால் மட்டுமே காவட்டைப் பிடித்திருந்தான். அவனுடைய நடுமுதுகில் கிளிமூக்கு மாம்பழம் அளவு ஒரு கழலை தொங்கிக்கொண்டிருந்தது. அதன் நுனியில் முலைக் காம்பைப்போல ஒரு பாலுண்ணி இருந்தது. வலதுகாலைவிட இடதுகால் கொஞ்சம் குட்டையாக இருந்ததால் கிந்திக்கிந்தி நடந்தான்.
பக்கத்தில் எங்கோ குழந்தை அழும் சத்தம் கேட்டது. அவர்கள் உடனே வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள்.
‘ஆடிக்கு இன்னும் நாட்கள் இருக்கிறதே அதற்குள் என்ன பன்றி வேட்டை!’ என்று நினைத்துக்கொண்டான்.
ஊருக்குள் யாரையுமே காணோம். வீடுகளின் கதவுகள் எல்லாமே விரியத் திறந்தது திறந்தமானைக்கே கிடந்தன.
தெருச் சுவரடிகனில் கொக்கராளிச் செடிகள் வளர்ந்து அடாந்து போயிருந்தது. வீடுகளை இணைக்கும் சந்து குறுக்குச் சுவர்களின் மேல் கரும்பச்சை வெல்வெட்டாய்ப் பாசி படர்ந்து போயிருந்தது. சிலதில் சுவரொட்டிச் செடிகள் காணப்பட்டன.
ஒரு வீட்டின் முன்னால் ஆரத்தி சுற்றி வாங்கிய செந்தீர் கொட்டப் பட்டிருந்தது. இன்னொரு வீட்டில் தெரு முற்றத்தில் ஒரு மண்குடத்தில் நிறை தீர் வைத்து வேப்பங்குழைக் கொத்தால் கும்பம் வைக்கப் பட்டிருந்தது. வீட்டு வாசலிலும் வேப்பங்குழை சொருகப்பட்டிருந்தது. அந்த வீட்டை வேகமாகக் கடந்தான். பக்கத்துத் தெருவில், ராப்பாடியின் கனத்த கீழ் ஸ்தாயியில் நடுங்கிப் பாடுங்குரலும் மணியோசையும் கேட்டு அவனுடைய உடம்பு புல்லரித்தது.
ஊர் பூராவையும் சுற்றிச்சுற்றிப் பார்த்தாகிவிட்டது. அவனுடைய வீட்டைக் காணோம்.
அவருக்கு வடக்கே சற்றுத் தொலைவிலுள்ள பள்ளிக்கூடத்துக்குப் போனாள். ஒருவேளை அங்கே அவனுடைய குழந்தைகள் யாராவது இருக்கலாம். ஆனால் அங்கேயும் ஒருத்தரையும் காணோம். சுவரில் சாத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு கரும்பலகையின் டுெக்கில் ஒரு பெரிய கருப்புப்பூனை மட்டும் நெருப்புக் கண்களை வைத்துக்கொண்டு அவனையே குர் என்று பார்த்துக்கொண்டேயிருந்தது.
ஊரைச் சுற்றி திரும்பவும் கம்மாய்க்கரைக்கு வந்தான். கரை நெடுகிலும், காய்ந்து இற்றுப்போன பனம்பூவின் துணுக்குகளைப் போல உவர்ந்த மனித மலங்கள் அங்கங்கே கிடந்தன.
சும்மாயின் தண்ணீர் வற்றிய தரையில், லாட சன்னியாசிகள் நாலுபேர் அரளைக் கற்களைக்கூட்டி வைத்து சமையல் செய்வதற் காகத் தரையைத் தோண்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் தெற்கே தள்ளி, ஒரு கிழவி; சோப்பு துரையாய் நரைத் திருக்கும் பரட்டைத் தலை, தொங்கிய கீழ் உதடு, ஒரு பல் இடையாது, அரிவாள்மணையில் நறுக்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரேயிருந்த மண்சட்டிக்குள்ளிருந்து குழந்தையின் இரண்டு கைகளும் ஒரு காலும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. கிழவி, குழந்தையின் மற்றொரு காலை அரிவாள்மனையில் வைத்து நறுக்கிக்கொண்டே அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வருவதற்குப் பதிலாக அவளுடைய வாயின் இரு பக்கங்களின் வழி யாகவும் நீர் சொட்டிக்கொண்டேயிருந்தது.
அதுக்கும் கொஞ்சம் தெற்கே தள்ளி, ஒரு நரிக்குறத்தி ஆலமரத்தின் தரையூன்றிய விழுது ஒன்றின் மேல் சாய்த்து கொண்டு, மடியில் ஒரு நரிக்குட்டிக்குத் தன்னுடைய செழிப்பான மாரைத் திறந்து பால் கொடுத்துக்கொண்டிருந்தாள்: அவளுக்கும் பக்கத்தில் ஒரு வனஸ்பதி டப்பா நிரைய கம்மஞ்சோறும் ஊறுகாயும் இருந்தது. மாரிலிருந்து பால் இறங்குகிற சொகத்தில் அவள் லயித்துக் கண்களைச் சொருகி மூடி மூடித் திறந்தாள்.
அவளுக்குப் பக்கத்தில், வேலி அமைத்ததுபோல் பாம்புக் கூட்டங்கள் ஆள் இடுப்பு உசரத்துக்கு வாலைத் தரைகளில் ஊன்றி நின்று கொண்டு பல ஜோடி ஜோடிகள் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு பிணசலாடிக்கொண்டிருந்தன. நல்லபாம்பும் நல்லபாம்பும்; சாரைப் பாம்பும் நல்ல பாம்பும்; இப்படி.
அவன், பையப் பின்வாங்கி தண்ணீரைச் சுற்றி அலவாக் கற்களின் மேல் கால் வைத்து ஏற முயன்றான். ‘கோடித் துண்டு கொண்டு வராமல் போனமே. புதுப் பட்டுத் துண்டு இருந்தால்தான் நல்லது. இப்படியே பிணசலாடிக்கொண்டிருக்கும் பாம்புகளின்மேல் போட்டிருக்கலாம். வீட்டுக்குப்போய் இனி துண்டு எடுத்துக்கொண்டு வருவதற் குள் அவைகள் விடுபட்டுப் போய்விடலாம்.’
தக்கிமுக்கிக் கரையேறி நின்றபொழுது, கரை மரத்தின் வேர்களில் கட்டியிருந்த காய்க்காளை அவனைக் கண்டதும் செறுக்குப் போட்டுக் கொம்புகளால் தரைமண் குத்தி வீசியது. வாலை நிமிர்த்திச் சீத்தடித்துக் கட்டுக்களை அறுக்க முனைந்தது.
ஒரு கட்டு அறுந்துவிட்டது, இன்னொரு கட்டு அறுந்து விடுவதற்கு முன் அங்கிருந்து தப்பித்தாக வேண்டும். திரும்பவும் கம்மாய்க்குள் இறங்கி வேறுவழியாக அவர்களுடைய சாளையை நோக்கிப் போனான். அங்கே அவனுடைய மனைவி குழந்தைகள் எல்லாருமே இருந்தார்கள்.
கம்மங்கதிர் சாணையை இழுத்து வட்டம் போட்டிருந்தார்கள். பிணையலடிக்க மாடுகள் தயாராகி நின்றுகொண்டிருந்தன. வேலைக் காரர்கள் பிணையற்கண்ணிகளால் மாடுகளை ஒரு பிணையலுக்கு நாலு மாடுகள் வீதம் இணைத்துக்கொண்டிருந்தார்கள். ஐந்து பிணையலுக்கான மாடுகளும் தயாராய் நின்றுகொண்டிருந்தன. முழங்கால் உயரத்துக்கு வட்டம் இருந்தது. சக்கைப் பிறட்டிகள், பொலிப் பலகைகள், வாளிப்பு மார்கள், கடகங்கள், சுளகுகள் எல்லாம் களத்தின் ஒரு மூலையில் தயாராய் வைக்கப்பட்டிருந்தன.
அவனுடைய இரண்டு வயசுக் கடைக்குட்டி அவளுடைய அம்மா விடமிருந்து அவனிடம் வரத் தாவிக்கொண்டிருந்தாள். அவன் அதைப் பாராததுபோலப் பிராக்குப் பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டு அவனுடைய மனைவி ரஸித்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்!
பிணையல் மாடுகள் வட்டத்தை நோக்கிக் கதிர் தின்னும் ஆவலில் வேகமாகப் பாய்ந்து வந்தன. வேலைக்காரர்கள் பொலி பொலி பொலி’ என்று உறக்கச் சொல்லிப் பிணையலை அதிவேகமாகச் சுற்றிவிட்டார் கள். அவனும் ஒரு பிணையலைப் பத்தினான். மருண்டு விரண்ட மாடுகளை மடக்கி வட்டத்துக்குள் அடித்துச் சுற்ற விட்டார்கள்.
திடீரென்று அவன் மனைவியின் கூக்குரல் கேட்டுப் பிணையல் நின்றது.
ஐயோ எவ்வளவு கோரம்!
அவர்களுடைய கடைக்குட்டி பிணையலுக்குள் எப்படியோ அகப்பட்டு மாடுகளின் கால்களில் மிதிபட்டு நசுங்கிச் சிதைந்து விட்டது. பிணையல் கயிறையும் சாட்டைக் கம்பையும் போட்டுவிட்டுக் குழந்தையைக் கையில் எடுத்தான். சக்கை பாதியும் பொலி பாதியுமாகியிருந்த வட்டத்தில் மண்டியிட்டு, நசுங்கி இறந்துபோன அவளை மடியில் இருத்திக்கொண்டு துக்கத்தால் குலுங்கினான். இந்தக் கோரமான வேதனையை அவனால் தாள முடியவில்லை. வாய் விட்டுக் கத்தமுடியவில்லையாதலால் அப்படியே வட்டத்தின்மேல் படுத்துக் கண்மூடி அழுது கொண்டிருந்தான். அவனுடைய மனைவி சோகத்தோடு அவன் தோள் மீது கைவைத்தாள். குடான அவளுடைய கையின் ஸ்பரிசம் பட்டதும் அவன் விழித்து அவளுடைய முகத்தைப் பார்த்தான். அவள் புன்னகை செய்தவாறு அவனுடைய முதுகைத் தடவினாள்.
எழுத்து உட்கார்ந்தான். விளக்கு தூண்டிவிடப்பட்டிருந்தது, பக்கத்தில் அவன் மனைவி அவர்களுடைய கடைக்குட்டிக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள் அமைதியாக.
குழந்தைாய அவன் கூர்ந்து பார்த்தான்.
ஆனந்தமாக அது பால் குடித்துக்கொண்டே அவனை கடைக் கண்ணால் பார்த்துக்கொண்டு ஒரு கையால் மற்றொரு முலைக் காம்பை வருடிக்கொண்டிருந்தது.
– கசடதபற மார்ச், 1971