மாலை நேரமாதலால் நெரிசல் அதிகமாக இருந்தது. நகரத்தின் நுழைவுப் பகுதியில் இந்தச் சந்தை அமைந்திருந்தது. காயிலிருந்து கறி வரை கிடைக்கும் என்பதால் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கிராமத்துச் சந்தை மாதிரி இல்லை. கார் நிறுத்துவதற்கும் இரண்டு சக்கர வண்டி நிறுத்துவதற்கும் தனித்தனி இடம் இருந்தது. சந்தைக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் இடம் போதாது சாலை வரை கடைகள் நீண்டு சாலையைத் தாண்டியும் பரவியிருந்தன. போக, வரும் பேருந்துகள் சந்தையை இரண்டாகக் கிழித்தபடி மெதுவாகக் கடப்பதும் அவை கடந்து போகையில் எழும் மண் படலமும், காதைக் கிழிக்கும் அவற்றின் ஒலியும்…
கிராமத்துச் சந்தையைவிட இங்கு வருமானம் அதிகம். அதிலும் வாரத்தில் இரண்டு நாள்கள் வருவதால் பொருள் அதிகம் வீணாகாமல் விற்க முடிந்தது. என்னைப்போல் கூலிக்குச் செய்பவர்கள் பாடு இன்னும் நன்றாகவே இருந்தது.
கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக இந்தத் தொழில் பழகிவிட்டிருந்தது. பேசுகிற வார்த்தையிலேயே களவாணியா இல்லை கண்ணியமானவனா என்று கண்டுபிடிக்கும் உத்தி தெரிய வேண்டும். இன்னும் அது பிடிபட்டபாடில்லை.
“”அய்யா… இந்தப் பூட்டுக்கு சாவி போட
முடியுமா…?” வழக்கமான பூட்டாக அது இல்லை. கதவில் வைக்கும் பூட்டு அது. வழக்கத்தைவிடப் பெரிதாக இருந்தது. பூட்டு கொண்டு வந்தவனைப் பார்த்தேன். வழக்கத்தைவிட அவனும் பெரிதாய் இருந்தான். அவன் வந்த வண்டியும் பெரிதாய் இருந்தது.
“”கதவுல இருந்து கழட்டுன பூட்டு மாதிரி இருக்குதே…”
“”ஆமாங்கய்யா… இத வேற எடத்துல மாத்தி வெக்கணும்…”
“”சரி… சாவி என்னாச்சு…?”
“”காணாமப் போயிடுச்சுங்கய்யா…”
“”பூட்டு யாருது… உன்னுதா… இல்ல…”
“”நான் கட்டட வேலை செய்யறேன்… நான் வேலை செய்யற வீட்டுக்கு வெக்கணும்…”
“”கொத்து வேலைக்காரனா நீ…”
“”இல்லீங்கய்யா… முன்ன செஞ்சிகிட்டிருந்தேன்… இப்ப சின்ன சின்னதா வேலை புடிச்சு ஆள் வெச்சு செய்யறேன்…” பேசிக்கொண்டே சாவியை மாற்றி மாற்றிப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு துளி அசையாது பூட்டு கல் போல் இறுகிக் கிடந்தது. ஒரு இடத்தில் சின்னதாய் அசைவு இருந்தால் போதும், அடுத்த அசைவுக்கு சாவியை நகர்த்தலாம்.
பழைய பூட்டாக இருந்தால் மூன்று அல்லது நான்கு அசைவில் சாவி சரியாய் உட்கார்ந்து கொள்ளும். இப்போது வரும் பூட்டுகளில் ஏழு அல்லது எட்டுமுறை அசைத்துப் பின்னர் சின்னதாய் அரம் வைத்துத் தேய்த்தால்தான் சாவி சரியாய் உட்காருகிறது.
இது பழைய பூட்டாக இருந்தாலும், அசைய மறுத்து அடம் பிடிக்கிறது.
“”இன்னிக்கு ஆகாதுப்பா… எண்ணெய்ல ராத்திரி பூரா ஊற வெச்சி அப்பறந்தான் போட முடியும்… நீ அடுத்த சந்தை நாள்ல வந்து வாங்கிக்க…”
அவன் முகத்தில் யோசனை தெரிந்தது. பூட்டை என்னிடம் விட்டுவிட்டுப் போக மனமில்லை என்பது புரிந்தது. அதைக் கொண்டே அவனிடம் களவாணித்தனம் இல்லாததை உணர முடிந்தது.
சிலர் சாவி மட்டும் கொண்டு வந்து அதே மாதிரி இன்னொரு சாவி போட்டுத் தரச் சொல்லிக் கேட்பதுண்டு. அதற்கு நான் பெரும்பாலும் ஒத்துக் கொள்வதில்லை. அதில் களவாணித்தனம் இருக்கும்.
“”உங்ககிட்ட போன் இருக்குதா…? இருந்தா நெம்பர் தாங்கய்யா… நான் கேட்டுகிட்டு வர்றேன்…”
“”இருக்குப்பா… ஆனா என் நெம்பர் எனக்குத் தெரியாது… போன் வந்தா பேசுவேன்… யாரு நமக்குப் பேசறா…? வூட்டுல இருந்து பேசுவாங்க… அவ்ளோதான்…”
சட்டையின் உள் பையில் வைத்திருந்த போனை எடுத்தேன். பூட்டுக் கடையின் பின்னால் கறி போடும் கடை இருந்தது. அவனைக் கூப்பிட்டேன்.
“”என்னாங்கப்பா…”
“”இவருக்கு என் நெம்பரைச் சொல்லேன்…”
“”கறி வெட்டிகிட்டு இருக்கேன்ல…. போனைக் குடுத்தனுப்பு… அதுல இருந்து ஒரு போன் போட்டா அவருக்கு நெம்பர் தன்னால போயிடும்…”
சாவி போட வந்தவன் அவனை நோக்கி நகர… சற்றுத் தள்ளி நின்றபடி வந்து போகும் வாகனங்களையெல்லாம் ஒழுங்காக அனுப்பிக் கொண்டிருந்த போலீஸ்காரர் என்னை நோக்கி வந்து;
“”என்ன ஏதாவது பிரச்னையா?” என்றார் தொப்பியைக் கழற்றித் தலையைத் துடைத்தபடி.
“”ஒண்ணுமில்ல… சாவி சரியா ஒக்கார மாட்டேன்னுது…” போலீûஸப் பார்த்தும் சாவி போட வந்தவன் முகத்தில் சலனம் ஏதுமில்லை.
“”சரிங்கய்யா… நான் நாளன்னிக்கு வந்து வாங்கிக்கிறேன். ரெண்டு சாவியாப் போட்டு வெய்ங்க…”
மணி ஆறுக்குப் பக்கத்தில் இருக்கும். அவனிடம் களவாணித்தனம் ஏதுமில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. வெயில் மசங்கத் தொடங்கியிருந்தது. இனி வேலை செய்ய முடியாது. கண் மசங்கும். அப்படியே வேலை செய்தாலும் எந்தப் பூட்டுக்கும் சரியாய் சாவி உட்கார வைக்க முடியாது.
ரெண்டு நாளாய் இடது கை மணிக்கட்டிலும், மூட்டிலும் தோள்பட்டையிலும் வலி இருக்கிறது. இன்றைக்கு ஏனோ கொஞ்சம் அதிகமிருப்பதுபோல் தொந்தரவு செய்கிறது.
தேர்தல் நேரத்தில் வீட்டுமுன் கட்டப்பட்டிருந்த கலர் பிளாஸ்டிக் துணியைக் கவிழ்த்துப் போட்டு அதன் மேல் பூட்டுக்களைப் பரப்பியிருந்தேன். அவற்றைச் சேகரித்து பெரிதாய் ஒரு பையில் வைத்து… இறுகக் கட்டிய பின்…. கறிக்கடைக்காரனை அழைத்தேன்.
“”அந்த வண்டிய கொஞ்சம் தள்ளிக்கிட்டு வந்து விடறியா…?”
“”ஏங்கப்பா… இன்னிக்கு சீக்கிரம் புறப்பட்டாச்சா…?”
“”ஆமாப்பா… என்னவோ சொகமில்ல…”
டிவிஎஸ் வண்டியைத் தள்ளி அவனே உதைத்துக் கொடுக்க… முன்பக்கம் மூட்டையை வைத்துக்கொண்டு மெல்ல வீடு நோக்கி நகர்ந்தேன்.
கிட்டத்தட்ட எட்டு கிலோ மீட்டர் பயணம் செய்து நகரத்தின் அடையாளங்களையெல்லாம் தாண்டி அதன் பின்னர் வீடு வந்து சேர்ந்தேன். வீடு வந்தும் சுறுசுறுப்பு வரவில்லை. இடது கை முழுக்க வலி பரவிற்று. அசதி கூடிற்று. உட்காரவும் முடியாது படுக்கவும் முடியாது. வயிற்றுக்குள் எதுவோ நகர்ந்தது. வழக்கத்துக்கு மாறான என்னுடைய முனகலும், சோர்வும் மனைவியைப் பயங்கொள்ள வைத்தது.
“”சுடுதண்ணி வெச்சி… ஒத்தடங் கொடுக்கறேன்… கொஞ்ச நேரம் அசையாம படுத்துக்கய்யா…”
அதன் பின்னர் இதமான சுடுநீரும், ஒத்தடமும், கொஞ்ச நேரம் உறங்க வைத்தாலும் சிறிதுநேரம் கழித்து விழிப்பில் வலி கூடிற்று.
அக்கம்பக்கம் வந்து சேர்ந்து ஊரில் மருந்துக்கடை அருகில் இருந்த டாக்டரிடம் கொண்டு போக… இரண்டு தொடையிலும் இரண்டு ஊசி போட்டு, மாத்திரையும் மருந்தும் தந்து அங்கேயே படுக்க வைத்து குளுக்கோஸ் தண்ணீர் இறக்கி, அதன் பின்னரே வலி விட்டது.
ஒருநாள் முழுக்க தூக்கமுமில்லாமல் விழிப்பும் இல்லாமல் கிடந்து பின்னர் ஒருவழியாய் எழுந்து நடமாடுவதற்குள் அதே சந்தையின் அடுத்த நாள் வந்திருந்தது. அந்த நாளில் குளித்து சாப்பிட்டு பதினொரு மணி வாக்கில் பூட்டுக்கள் நிறைந்திருந்த மூட்டையை எடுக்க நகர்ந்தபோது… மனைவியின் குரல் தடுத்தது.
“”இன்னிக்கு இருந்துக்கறது… ஒடம்பு முடியல இல்ல…”
“”இல்ல புள்ள… நாலஞ்சு பூட்டுக்கு சாவி தரேன்னு… சொல்லியிருக்கேன்… இன்னிக்கு தரலேன்னா நாணயம் கெட்டுரும்… போய்ட்டு வந்துர்றேன்…”
“”அப்படீன்னா… செல்வியக் கூட கூட்டிட்டுப் போய்யா…”
செல்வி மூத்த மகளின் மகள். பன்னிரண்டாம் வகுப்பு படிப்பவள். மகளைக் கட்டிக் கொடுத்தவன் அவ்வளவாய்ப் பொருத்தமில்லாமல் போய்விட்டான். குடி, கூத்து என்பது இல்லை என்றாலும் வருமானத்தை வீட்டில் கொண்டுவந்து சேர்க்கத் துப்பு இல்லாதவன். அதனால் என்னால் முடிந்த அளவு பேத்தியை நானே கொண்டு வந்து வைத்துக் கொண்டு…
பேத்தியிடம் ஏற்கெனவே மனைவி சொல்லியிருக்க வேண்டும். மூட்டையாய்க் கட்டப்பட்டிருந்த பூட்டுகளை எடுத்து அவளே டி.வி.எஸ்சின் முன்னே வைத்து ஏறி உதைத்து…
“”உட்காரு தாத்தா… போலாம்…”
செல்வியும், மனைவியும் எப்போதாவது இந்த வண்டியில் போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் இதுவரை பேத்தியின் பின்னமர்ந்து போன நினைவில்லை.
நான் ஓட்டுகையில் “டர்… டர்’ரென்று உருமியபடியும் சில நேரங்களில் முனங்கியபடியும் போகும் வண்டி செல்வியிடம் குழந்தைபோல் முக்கல் முனகல் இன்றி போயிற்று. கரடுமுரடாய்க் கிடக்கும் சாலை என்னவோ முற்றிலும் மாறிப் போனதுபோல் குலுங்காது வண்டி ஓடிற்று.
பதினொன்றரை மணிக்கு மேல் சந்தையில் பிளாஸ்டிக் விரிப்பை விரித்து பூட்டுக்களைப் பரப்பினேன்.
“”தாத்தா… நீ எதுஞ் செய்ய வேணாம்… நான் வெக்கறேன்… நீ இன்னிக்கு சாவி போடற வேலைய மட்டும் பாரு… விக்கறது காசு வாங்கறதெல்லாம் நான் பாத்துக்கறேன்…”
வழக்கமாய் நான் அடுக்குவது போலல்லாது வேறு மாதிரி அடுக்கி பின் ஒரு துணியால் தூசு தட்டினாள். பூட்டுக்கள் எல்லாம் மின்னுவது மாதிரி இருந்தது எனக்கு. எப்போதும் என்னிடம் இருக்கும் பூட்டுக்களா இவை? என்று சந்தேகம் வந்தது.
“”யாரு இந்தக் குட்டி…? மகளா… பேத்தியா?” தலையைத் தேய்த்தபடி வந்து நின்றார் போலீஸ்காரர்.
“”நான் குட்டியில்ல… அங்கிள்… இவரு எங்க தாத்தா…”
“”சரி… பதினெட்டு வயசுக்கு மேல ஆயிடுச்சா… லைசென்சு வாங்காம வண்டி ஓட்டக் கூடாது தெரியுமில்ல…”
போலீஸின் குரல் எனக்கென்னவோ வேறு மாதிரியாய்த் தோன்றிற்று. அதிலும் “குட்டி… குட்டி..’ எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. பன்னிரண்டாவது படிக்கும் பிள்ளையை பதினெட்டு வயசுக்கு மேல் ஆயிடுச்சா… என்று எதை வைத்துச் சொல்கிறாரோ என்று மனம் அலை பாய்ந்தது. கொஞ்ச நேரம் கழித்து செல்வியிடம்,
“”அங்கிள்..னா என்னா கண்ணு…” என்றேன்.
“”மாமா… தாத்தா… புதுசா பாக்கறவங்கள அப்படிதான் கூப்புடனும்” மாமாவா… மனதுக்குள் என்னவோ போலிருந்தது. யோசித்துக் கொண்டிருக்கும்போது செல் ஒலித்தது.
“”குடு… தாத்தா… நான் பேசறேன்…”
“”ம்… ம்…” என்று பேசிய பிறகு,
“”தாத்தா… போன சந்தைல யாராவது பெரிய பூட்டுக்குச் சாவி போடக் குடுத்தாங்களா…?”
“”ஆமா… கண்ணு… கொஞ்ச நேரங் கழிச்சு வரச் சொல்லு…”
“”ஒரு மணிக்கு மேல வாங்க… நானா… அவரு பேத்தி பேசறேன்… ம்… ப்ளஸ் டூ படிக்கறேன்… சார்…”
விட்டு விட்டுப் பேசிய அவளின் குரல் ரொம்பவும் சிரிப்பாய் இருப்பதுபோல் எனக்குத் தோன்றிற்று. முன்பின் தெரியாதவனிடம் படிப்பு பற்றியெல்லாம் சொல்ல வேண்டுமா?
அவன் தந்துவிட்டுப் போன பூட்டுக்குச் சாவி உட்காராமல் ரொம்பவும் இழுத்தது. ஒரு மணி நேரம் கழித்து வரச் சொன்னவன் அரைமணியில் வந்து நின்றது எனக்கு மேலும் எரிச்சலூட்டிற்று. இன்றைக்கு வேறு வண்டியில் வந்திருந்தான். செல்வியிடம் நிறைய பேசினான். ஒரு வழியாய் சாவியை வாங்கிக் கொண்டு…
“”அய்யா… உங்க பேத்திக்கு நல்ல வெவரமிருக்குது… மெக்கானிகல் படிக்க வெய்ங்க…” சொல்லியபடி போய்விட்டான்.
மெக்கானிக்கா… அதுக்குப் படிக்க வைக்க வேண்டுமா? செல்வியின் உருப்படியில்லாத அப்பனுக்கு தறி மெக்கானிக்தானே தொழில்… அதே வேலையையா இவளையும் செய்யச் சொல்கிறான்?
“”கொத்தனார்ப் பயகிட்ட என்னதான் பேசறியோ…”
“”தாத்தா… அவரு கட்டடமெல்லாம் எப்படிக் கட்டணும்ங்கிற படிப்பு படிச்சுட்டு கட்டட வேலை செய்யறாரு… ரொம்ப நல்லவரு தாத்தா…”
நல்லவனா? சாயம் போன மாதிரி நீளமாய்க் குழாய் போல் கீழ்சட்டையும்… பொம்மை பொம்மையாய்ப் போட்ட மேல் சட்டையும், கையில் வளையமும், ஒற்றைக் காதில் கடுக்கனும்… இவன் நல்லவனா? முந்தைய நாள் அவனிடம் தெரியாததெல்லாம் இப்போது தெரிந்தது.
“”பய புள்ள… டவுன் இது… இங்க எல்லாரும் நல்லவங்க மாதிரிதான் தெரியுவாங்க… நாமதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்…”
நேற்று இரவு வரை நல்லவனாய்த் தெரிந்தவன். இன்று களவானிபோல் தெரிந்தான். மாலை ஆறு வரை என்னவோ யோசனையாகவே இருந்தது. போலீஸ் அடிக்கடி வருவதும், “குட்டீ… குட்டீ…’ என்றதும் மனதைச் சாவி போட்டுத் திருகிற்று.
கடைக்கு வழக்கமாய் வருபவர்களைவிட புதிதாய் வந்தவர்கள் அதிகம். யாரும் என்னிடம் அதிகம் பேசவில்லை. செல்வியிடம் அதிகம் பேசினார்கள். நான் அறுபது ரூபாய் சொல்லி நாற்பதுக்கு விற்கும் பூட்டை, அறுபத்திரண்டு ரூபாய் எழுபது காசு என்று சொல்லி… என்னமோ தள்ளுபடி சொல்லி… ஐம்பது ரூபாய்க்கு மேல் செல்வி விற்றாள்.
ஒரு வழியாய் ஆறு மணிக்கு மூட்டை கட்டி முடிக்க… கறி வெட்டுபவன்…
“”அப்பா… புறப்பட்டுட்டியா… வண்டிய தள்ளிட்டு வரவா…” என்றான் வழக்கம்போல்.
“”வேண்டாம்… ஒன் வேலயப் பாரு…” என்ற என்னுடைய கோபம் அவனுக்குப் புரியாத புதிராய் இருந்திருக்க வேண்டும். பூட்டுக்கள் நிறைந்த மூட்டையைக் கட்டி, வண்டியில் வைப்பதற்குள்,
“”பாப்பாவுக்கு சாமர்த்தியம் அதிகம்ப்பா… அடிக்கடி கூட்டிகிட்டு வாங்க…”
அடிக்கடி கூட்டி வருவதா? என்ன சொல்கிறான்? மனம் கோணலாய் இழுத்துப் போயிற்று.
சற்றுத் தள்ளி வண்ணக் கண்ணாடிகள் விற்றுக் கொண்டிருந்தவனிடம் வாங்கிப் போட்டுக் கொண்ட சிறுவனின் உற்சாகக் குரல் காதில் விழுந்தது. அவனின் அப்பாவிடம் அந்தச் சிறுவன்,
“”ஹை… கலர் கலரா தெரியுதுப்பா….”
“”ஆமாடா… எந்தக் கலர்ல கண்ணாடி போட்டுக்கறமோ அந்தக் கலர்லதான எல்லாம் தெரியும்…” என்ற அவரின் குரல் என்னை “சொடேர்’ என்று பின்னந்தலையில் தட்டிற்று.
எப்போதும் போல் சிரிப்புடன் கறிவெட்டுபவனைப் பார்த்துக் கையசைத்தேன். தொலைவிலிருந்த போலீûஸப் பார்த்து செல்வி கையசைக்க, நானும் சிரிப்புடன் கையசைத்தேன்.
நகரத்தை ஊடுருவிச் செல்லும் நேரான சாலையில் புறப்பட்டோம். சற்று முன் கோணலாய்க் கிடந்த மனமும் நேராயிருந்தது. நீண்டு கிடந்த சாலையைப் போலவே.
– ஆகஸ்ட் 2015