கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 2,072 
 

ஆட்டை கொடுத்து விடுவதென முடிவு செய்த அருணகிரி “இதுவரை என்னோட கண்ணான புள்ளைங்களுக்கு ஒரு நாளாவது, ஒரு நூறு மில்லி பால் வாங்கிக் கொடுத்ததில்ல. ஒரு பொறந்த ஆட்டுக்குட்டியோட மேல இருக்கற ஐயகூட இதோட தாய் ஆடு சரியாக நக்கிறாத நிலையிலதான் இந்த ஆடு என்னோட வீட்டுக்கு வந்து சேர்ந்தது. அது வந்த நாளுல இருந்து அதுக்கு தினமும் பாலு, பச்ச புல்லு, இலை, தழைன்னு போட்டு இவ்வளவு நாளும் கஷ்டப்பட்டு வளர்த்ததுக்கு ஒரு பலனும் இல்லாம போகுதேன்னு நினைக்கும் போதுதான் வாழ்க்கை மேலயே ஒரு கசப்பு ஏற்படுது. கண்டால் எடு, கேட்டால் கொடுன்னு சொல்றது அறத்துக்கான செயல்தான். ஆனா, இடையில நான் செய்த செலவுகளையெல்லாம் யாருகிட்ட போயி கேட்கறது.” என்று யோசித்தபோது அருணகிரிக்கு ஆட்டுக்குட்டி தனது வீட்டிற்கு வந்து சேர்ந்ததைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

பள்ளிக்கூடக் கோடை விடுமுறை என்பதால் அருணகிரியின் மூத்த மகன்களான இசக்கியும் வேலனும் தாய் புனிதாவோடு சேர்ந்து காற்றாலையில் செய்த வேலைக்கு, அந்த வார சம்பளத்தை வாங்குவதற்காக காலை உணவை முடித்த கையோடு ஒப்பந்தக்காரரை சந்திக்க சென்றிருந்தான் வேலன். அருணகிரி, புனிதா தம்பதிக்கு வேலன் இரண்டாவது மகன் என்றாலும் எதாவது முக்கிய காரியங்களுக்கு மூத்த மகன் இசக்கி இருந்த போதும் வேலனையே அனுப்பி வைப்பார்கள். அதற்கு காரணம் வேலன் சற்று துடுக்கானவன், பொறுப்பானவன் என்பதையெல்லாம்விட குடும்ப அக்கரையுள்ளவன். ஆளும் பதினாரு வயதென்று கணித்துவிட முடியாத அளவில் ஆறடி உயரம் இருப்பான். இசக்கிக்கு தம்பி என்று சொன்னால் யாரும் அவ்வளவு எளிதில் நம்பி விடமாட்டார்கள்.

வேலன் சென்றிருந்த சமயத்தில் ஒப்பந்தக்காரர் அவரது ஒப்பந்த தொகை விஷயமாக முக்கிய ஓப்பந்ததாரரை சந்திக்க சென்றிருந்தார். ஒப்பந்ததாரரின் வருகைக்காக நீண்ட நேரமாக அவரது வீட்டிலயே காத்திருந்த வேலனுக்கு அவரது மனைவி மூலமாக “ஒப்பந்த தொகை இன்னும் கைக்கு வந்து சேரவில்லை, சம்பளம்னு கேட்டு யாராவது வீட்டுக்கு வந்தாங்கன்னா, இன்னைக்கு கெடைக்காதுன்னு சொல்லி அனுப்பிடு.” என்ற தகவல் தர சம்பளம் கிடைக்காததாலும் திரும்பி வர பேருந்து கட்டணத்திற்கு கையில் பணம் இல்லாததாலும் அந்த ஊரில் இருந்து வேலனின் ஊருக்கு காட்டு வழியே செல்லும் ஒத்தையடிப் பாதையில் திரும்பி வந்து கொண்டிருந்தான்.

மத்தியானம் சாப்பிடாததாலும் நீண்ட தூரத்தை பசியில் நடந்ததாலும் உண்டான கால் வலியால் பொத்துக்கொண்டு வரும் கோபத்தையும் அழுகையையும் தனக்குள் அடக்கியவாறு ஊரை நோக்கி நடந்துக்கொண்டிருந்தான். கருத்து நின்ற மழை மேகங்கள் இப்பவே பெய்யவா! இன்னும் சற்று நேரம் தாமதித்து பெய்யவா! என்று மின்னலை தூதாக்கி மிரட்டிக்கொண்டிருந்தது. அப்போது வேலன் சென்றுக் கொண்டிருந்த திசையிலிருந்து சற்று தொலைவில் ‘மே… மே’ என்று ஒரு இளம் ஆட்டுக்குட்டியின் கதறல் சத்தம் கேட்டது. ஒத்தையாக ஒலிக்கின்ற சத்தத்தை அறிந்து விடும் ஆவல் வேலனின் உள்ளத்தை ஆட்கொள்ள, நடையில் சிறிது வேகம் கூட்டி நடந்தான்.

நடக்க, நடக்க சத்தம் அவனை அருகில் நெருங்கி கொண்டே இருந்தது. அறியும் ஆவல் மேலும் அதிகரிக்கவே நடையை இன்னும் எட்டி போட்டான். சென்றுக்கொண்டிருந்த திசையிலிருந்து கேட்ட சத்தம் இப்போது இடதுபுறம் இருந்த புதருக்குள் கேட்டது.

புதருக்கருகில் சென்று பார்த்ததும் அதுவரை கடு கடுவென இருந்த முகம் மலர்ந்தது. அங்கு சற்று நேரத்திற்கு முன்னர் பிறந்த ஒரு செம்மறியாட்டு குட்டி கிடந்தது. பெற்ற உடனே குழந்தையை இரக்கம் இல்லாமல் குப்பை தொட்டியில் வீசிவிட்டு செல்லும் மானிட ஜென்மமாய் ஒரு ஆடு மாறியிருந்தது. வேலனை பார்த்ததும் தள்ளாடித் தள்ளாடி நடை பயின்று வந்த ஆட்டுக்குட்டி வேலனின் கால்களை முட்டிக்கொண்டு, தாய் ஆட்டின் மடியில் பால் குடிப்பதை போல காம்புகளை தேடியது. ஆட்டுக்குட்டியை கையில் தூக்கி நிமிர்ந்து அதன் முகம் பார்த்தவனின் கண்கள் நாலாபுறமும் சுழன்று ஆட்டுக்கூட்டம் எதாவது தென்படுகிறதாவென தேடியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதுவும் தென்படாதிருக்க, மீண்டும் பார்வையை ஆட்டுக்குட்டியின் மீது திருப்ப, அது வேலனின் விரலை மொச்சி, மொச்சி என சப்பி கொண்டிருந்தது. ஆட்டு குட்டியின் பசியை பார்த்து இரங்கியவனுக்கு அவனது வயிற்றுப்பசியும் கால் வழியும் காணாது போயிருந்தது.

ஆட்டுக்குட்டியை கையில் ஏந்தி இருந்தவனின் மனதில் குட்டியை கையோடு எடுத்து செல்லலாமா? இல்லை இங்கேயே விட்டுட்டு செல்லலாமா? என்பது பற்றிய சிந்தனைகள் ஓட துவங்கியது. ‘ஈனிய ஆட்டில் இருக்கும் ‘ஐ’யை பார்த்ததும் ஆட்டுக்காரன் எப்படியும் குட்டியை தேடிக்கொண்டு வருவான். அதனால இங்கேயே விட்டுட்டு செல்லலாம். இவ்வளவு நாளும் இதோட தாய் ஆட்டை இரவு, பகல், மழை, வெயில், பனி என்று பாராமல் கட்டிய மனைவி முகம், பெற்ற புள்ளைகள் முகம் என்று எல்லாமே மறந்து போகும் அளவிற்கு காடு, மேடேல்லாம் அலைந்து திரிந்து வளர்த்தவனுக்கு பலன் இந்த ஆட்டுக்குட்டியின் மூலமாகத்தானே வரவேண்டும். என்று நினைத்தவனின் மனதில் இன்னொரு எண்ணமும் உருவானது.

ஆட்டுக்காரன் தேடிக்கொண்டு வருவதற்கு முன்னரே நாய், நரி எதாவது வாசனை பிடித்து வந்து விட்டால் ஆட்டுக்குட்டியின் கதி என்னவாகும். ஐயோ! அத நினைக்கவே பயங்கரமாக இருந்தது. ஒரு சமயம் ஆட்டுக்காரன் குட்டிய தேடிப்பார்த்துவிட்டு காணாமல் நாய், நரி எதாவது திண்றிருக்கும் என்று ஏற்கனவே முடிவு பண்ணி சென்றிருந்தால் என்கிற கோணத்திலும், நாய், நரி எதாவது திண்றிருக்கும் என்று நினைப்பு வந்து தேடி வராதிருந்துவிட்டால் என்று பல விதமான கேள்வி கணைகளை தனக்குள்ளே தொடுத்து கொண்ட வேலனின் காதுகளில் தூரத்தில் ஒரு ஓநாய் ஊளையிடும் சத்தம் கேட்க. ஒரு தெளிந்த நீரோடையைப் போல ஆட்டுக்குட்டியை கையில் தூக்கிகொண்டு ஊரை நோக்கி நடக்கலானான்.

ஞாயிற்றுக்கிழமையும் நாளுமாக வெறும் சோற்றை மட்டும் ஆக்கி வைத்துவிட்டு மகன் சம்பளத்தோடு வருவான். அப்பறம், வசதிக்கு ஏற்றார்போல கொழம்பு ஆக்கிக்கொள்ளலாமென்று வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் புனிதா. வெறும் சாதத்தை எப்படி சாப்பிடுவது என்று இசக்கியும் கல்யாணியும் பசியில் வாடிப் போயிருந்தனர். இசக்கி, புனிதாவிடம் “ஏம்மா இந்த கருவண்டன போக சொன்ன? நான் போயிருந்தா எப்பவோ வந்திருப்பேன். அவன் எங்க பராக்கு பார்த்துட்டு நிற்கானோ!” என்றான்.

கருவண்டன் அதுதான் வேலனின் பட்ட பெயர். அருணகிரியின் வீட்டில் எல்லோரும் நல்ல தேன் நிறம். வேலன் மட்டும் கருப்பா, ஒல்லியாக நெடு நெடுவென இருப்பான். இசக்கிக்கும் வேலனுக்கும் சண்டை வரும்போது இசக்கி, வேலனை கருவண்டன் என்றே அழைப்பான். இசக்கி அவ்வாறு சொல்லும் போதெல்லாம் புனிதாவிடம் வேலன் “எல்லாரையும் நல்ல நிறமா பெத்தவ என்னை மட்டும் ஏம்மா கருப்பா பெத்த?” என்று கேட்பான். “அந்த இரகசியமெல்லாம் உன் அப்பாவுக்குதான் தெரியும். நீ அவரையே கேட்டுக்க.” என்று சொல்லி புனிதா தப்பித்து கொள்ளுவாள். ஏனென்றால் ஒரு முறை வேலன் கேட்ட இதே கேள்விக்கு புனிதா எதோ பதில் சொல்ல, வேலன் கேட்ட எதிர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கண் விழி பிதுங்கிய சம்பவமும் அரங்கேறியதுண்டு. அன்று முதல் புனிதா இப்படி கேள்வி வரும்போதெல்லாம் ‘உன் அப்பாவ கேளு’ என்று சொல்லி தப்பித்து கொள்வாள்.

அருணகிரி எப்போதும் வீட்டில் இருக்க மாட்டார். அதனால், இந்த கேள்வியை வேலன் அருணகிரியிடம் கேட்க வாய்ப்பு அமையாமலே இருந்தது. ஒரு நாள் அந்த கேள்விக்கு பதில் சொல்லும் வாய்ப்பு அவருக்கும் அமைந்தது. அருணகிரி, இந்த விஷயத்தை எப்படி சமாளிக்கிறேன் பாரு, என்பதுபோல ஒரு பார்வையை புனிதா மீது விசிவிட்டு, வேலனை நிமிர்ந்து “அவங்க எல்லாரும் என் அம்மா நிறம். நீ மட்டும்தான் என் அப்பாவோட நிறம். நான், என் அப்பாவ பார்த்ததில்ல. எனக்கு விவரம் தெரியறதுக்கு முன்னமே இறந்து போயிட்டாரு. அதனால என் அப்பாவே எனக்கு புள்ளையா வந்து பொறந்துருக்காருன்னு உன்ன பார்த்து சந்தோஷப் பட்டுப்பேன். எனக்கு என் அம்மாவவிட அப்பாவதான் ரொம்ப பிடிக்கும்.”

“அப்படின்னா, அவங்க மூனு பேரவிட என்னைதான் உனக்கு ரொம்ப பிடிக்குமாப்பா.” என்றான் வேலன்.

இந்த கேள்வியை வேலனிடம் இருந்து சிறிதும் எதிர் பாராத அருணகிரி நிமிர்ந்து எல்லோரையும் பார்க்க. அப்பா என்ன பதில் சொல்ல போகிறார் என்று மற்ற மூன்று பிள்ளைகளும் எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்கள். புனிதா ‘இதுக்குதான் இவங்க பஞ்சாயத்துக்கே நான் போறதில்ல’ என்று மனதிற்குள் யோசித்தவாறு அருணகிரியை பார்த்தாள்.

சங்கடமான நிலையில் அருணகிரி எதோ நினைவு வந்தவரைபோல சமிக்ஞை செய்துவிட்டு“ஐய்யய்யோ! முதலாளியம்மா சாயங்காலம் கோயிலுக்கு போகணும்னு சொல்லிட்டு அபிஷேகத்துக்கு பால் வேணும்னு கேட்டிருந்தாங்க, நான் பேச்சு வாக்குல மறந்தே போனேன். சிக்கிரம் போய் பால் கறந்து கொடுக்கனும். நான் வர்றேன்.” என்று நழுவி சென்றார்.

என்னதான் பார்த்து பார்த்து கொழம்பு ஆக்கினாலும் வீட்டின் பின்புறம் இருக்கும் முருங்கை மரத்தின் இலையை பறித்து ரெண்டு காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் ஊற்றி வதக்கிதான் சாப்பிடுவான் இளைய மகன் முத்தையன். அவன் மட்டும் வழக்கம் போல் அவ்வாறு செய்து தனது சாப்பாட்டை திருப்பிகரமாக முடித்திருந்தான்.

அருணகிரி மாத சம்பளத்திற்கு, பக்கத்து ஊர் பண்ணையாரின் மாட்டு பண்ணையில் பால் கறக்கும் வேலை செய்து வந்தார். அன்று அவர் வீடு திரும்பாமலே இருந்தார்.

வேலன் ஆட்டுக்குட்டியோடு வீடு வந்து சேர்ந்தான். மகனின் முகத்தை பார்த்து சம்பளம் கிடைக்கவில்லை என்பதை புரிந்து கொண்டு “ஏதுய்யா இந்த ஆட்டுக்குட்டி” என்றாள் புனிதா.

ஆட்டுக்குட்டி கிடைத்த கதையை சொல்லி முடித்தான் வேலன். “சரி, யாராவது குட்டிய காணோம்னு தேடி வந்தா கொடுத்திடலாம். இல்லேன்னா நம்ம வீட்டுலே இருந்துட்டு போகுது.” என்ற புனிதா கல்யாணியின் கையில் ஐந்து ரூபாயை கொடுத்து “குமார் சித்தப்பா வீட்டுக்கு பால் எடுக்க பால்க்காரர் வருவாரு. அவர்கிட்ட ஒரு நூறு மில்லி பால் வாங்கிட்டு வா. நான் போய் கொழம்பு ஆக்கறேன்.” என்றவள். “இசக்கி, சிவன் நாடார் கடையில போயி, நான் சொன்னேன்னு சொல்லி பால் பாட்டலும் ஒரு அப்பள கட்டும் வாங்கிட்டு வா.” என்ற புனிதா சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்.

ஞாயிற்றுக்கிழமை என்பதினால் பக்கத்து வீடுகளில் இருந்து கறி குழம்பின் மணம் நாசி துவாரத்தின் வழியே புகுந்து நாவில் எச்சில் ஊற வைத்தது. சிறிது நேரத்தில் சமையல் அறையில் இருந்து வந்த ரசத்தின் மணம் கறி குழம்பு வாசனைகளை விரட்டியடித்தது. இசக்கி வாங்கி வந்த அப்பளத்தை பொறித்து எல்லோரும் சாப்பிட்டு முடித்தனர். புதிதாய் வந்த ஆட்டுகுட்டியும் மாட்டுப்பாலை தாய்ப்பால் என்று நினைத்து குடித்துவிட்டு அமைதியாகப் படுத்திருந்தது. அன்றிலிருந்து அருணகிரியின் வீட்டில் ஆட்டுக்குட்டியும் ஒரு உறுப்பினர் ஆனது.

அருணகிரி, புனிதா தம்பதிகளுக்கு மூன்று ஆம்பள புள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும்தான் கல்யாணி. பெண் ஆட்டுக்குட்டி வீட்டுக்கு வந்ததில் கல்யாணிக்கு பெருத்த சந்தோசம். தனக்கு ஒரு தங்கை வந்து விட்டதாகவே நினைத்து அதற்கு அலமு என்ற பேரு சூட்டி வளர்க்கலானாள். அதுவும் ஒரு செல்ல பிள்ளை போலவே அருணகிரியின் வீட்டில் வளர்ந்தது. வீட்டிலிருந்து யாராவது வயல்வெளி பக்கமோ, பம்பு செட்டில் குளிக்கவோ, வயல் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது கையில் ஒரு பிடி புல்லோடுதான் திரும்பி வருவார்கள். ஆறு மாதத்தில் ஆட்டுக்குட்டியும் வளர்ந்து பெரிய ஆடு ஆனது. ஊரில் உள்ள மற்ற ஆடுகளை கண்டால் அலமு பயந்து ஓடியது. அலமுவின் பார்வையில் அது தன்னை ஒரு மனித பிறவி போலதான் நினைத்து கொண்டிருந்தது. தனது முகமும் மானிட முகம் போலதான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டது போலும் அதனால்தான் மற்ற ஆடுகளை கண்டாலே பயந்து ஓடியது.

“கல்யாணி” என்று பக்கத்து வீட்டு ராசாத்தி அத்தை அழைக்கும் குரல் கேட்டு “என்ன….த்த” என்று குரல் கொடுத்தபடி ஒடி சென்றாள் கல்யாணி. அவளோடு சேர்ந்து கட்டு அவிழ்ந்து நின்ற அலமுவும் ஓடியது. பின்னால் வரும் அலமுவை கவனிக்காது ராசாத்தி அத்தையின் வீட்டிற்கு வந்தாள் கல்யாணி. அவளை நிமிர்ந்து “நான் உன்ன மட்டும்தான கூப்பிட்டேன். உன் தங்கச்சியவுமா கூப்பிட்டேன்.” என்றாள் ராசாத்தி. கல்யாணி திரும்பி பார்க்க, அலமு அவளுக்கு பின்னால் நின்றுக்கொண்டிருந்தது. அலமுவை நிமிர்ந்தவள் “ஏய், போடி” என்று சொல்ல. கல்யாணியின் முகத்தையே மழங்க, மழங்க பார்த்தவாறு நின்றது. ராசாத்தியை நிமிர்ந்து“அத்த, இது என்னை விட்டுட்டு போகாது. சரி, நீ ஏன் கூப்பிட்டேன்னு சொல்லு?” என்றாள் கல்யாணி.

“சுப்பராயலு பண்ணையார் பம்பு செட்டுல, மோட்டார் போட்டுருக்காங்க. நீ குளிக்க வர்றீயான்னு கேட்கதான் கூப்பிட்டேன்” என்றாள் ராசாத்தி. “ஆம், வர்றேன் அத்த. நான் போயி அலமுவ கட்டி வச்சிட்டு, அம்மாகிட்ட சொல்லிட்டு துணியும் சோப்பும் எடுத்துட்டு வந்துடுறேன்.” என்று கல்யாணி திரும்பி செல்ல அலமுவும் அவள் பின்னால் சந்தோச துள்ளல் போட்டுக்கொண்டு சென்றது. கல்யாணியின் பின்னாலே ஓடிக்கொண்டு திரியும் அலமுவை தெருவில் நின்றவாறு பக்கத்து வீட்டு குமாரோடு பேசிக்கொண்டிருந்த தெற்கு ஊரைச்சேர்ந்த சுந்தரகோனார் கவனித்துவிட்டு குமாரிடம் “பொம்மறியா இருக்கே யாரோடது.” என்றார். “நம்ம அருணகிரி அண்ணனோடது தான்.” என்றான் குமார். “அப்படியா?” என்று கேட்டுவிட்டு “அருணகிரி வீட்டுல இருக்கானா?” “ம். இப்பதான், வேலை முடிஞ்சி வந்தான். வீட்டுலதான் இருக்கான்.”

“ஒரு நிமிஷம் அருணகிரிய கூப்பிடேன். ஒரு முக்கியமான விஷயத்த பத்தி பேசணும்.”

“அருணகிரியண்ணே… அருணகிரியண்ணே” சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த அருணகிரி “என்ன குமாரு?”

“நம்ம சுந்தர கோனாரு உங்கிட்ட பேசனுன்னு சொன்னாருப்பா, அதுதான் கூப்பிட்டேன்.”

“என்ன கோனார!” என்றவாறு அருணகிரி இருவரின் அருகில் வர. “ஒன்னுமில்ல சும்மாதான் கூப்பிட்டேன்.”

“ஒன்னுமில்லாததுக்கா ஆள விட்டு கூப்பிட்ட? நீ குசலம் விசாரிக்கவே கால் படி பணம் கேட்கற ஆளுன்னு எனக்கு தெரியும். சொல்ல வந்த விஷயத்த சும்மா சொல்லு.”

“அது வந்து அருணகிரி உன் வீட்டுக்குள்ள ஒரு பொம்மறி ஒடி வந்தத பார்த்தேன். அத குடுக்கறியான்னு கேட்கதான் கூப்பிட்டேனப்பா.” என்றவன். அருணகிரியின் பதிலை எதிர்பார்க்காமலே தொடர்ந்து “ஆமா… அருணகிரி, உங்கள மாதிரி ஆளுங்க, கிடா குட்டியதான வாங்கி வளர்ப்பீங்க? நீ என்ன பொம்மறிய வாங்கி வளர்க்கற? இப்படி ஒத்த மறியா கெடந்தா எப்படி பலனுக்கு வரும்?”

“அட, நான் எங்க அத காசு கொடுத்து வாங்குனேன். என் நடு பையன் வெளிய போயிட்டு வரும் போது காட்டுல கெடந்ததுன்னு எடுத்துட்டு வந்தான். யாராவது தேடி வந்தா கொடுத்துறலாம்னு நினைச்சி வளர்த்தோம். இது நாள் வரையில யாரும் தேடி வரல.” என்றதும். இந்த வார்த்தை அருணகிரி வாயில இருந்து வர வேண்டும் என்பதற்காக காத்திருந்ததை போல இதுக்குமேல எதுவும் சொல்ல வேணாம். என்பது போல கை அமர்த்தி “மீதி கதைய நான் சொல்றேன். புல்லாங்குறிச்சி காட்டுல ஆறு மாசத்துக்கு முன்னால எடுத்துட்டு வந்துருப்பான் அப்படி தான?”

“ஆமா.”

“அது என்னோட ஆடு போட்ட குட்டிதான். அன்னைக்கு பொழுதுல நான்தான் அந்த காட்டுல ஆடு மேய்ச்சிட்டு இருந்தேன். அந்த நேரத்துல திடிர்ன்னு மழை வர்ற மாதிரி இருந்ததுன்னு, ஆடுகள விரைசலா ஓட்டிட்டு போயிட்டேன். பட்டிக்கு போனதுக்கு அப்பறமாதான் குட்டி போட்ட ஆட்ட கவனிச்சேன். உடனே வந்து தேடிப்பார்த்தேன், குட்டி கெடைக்கல. நாயி, நரி எதாவது தூக்கிட்டு போயிருக்கும்ன்னு நினைச்சி திரும்பி போயிட்டேன்.”

“என் மகனும் நீ நினைக்கிறது போலவே நாய், நரி ஏதாவது கடிச்சி தின்னுட்டு போயிரும்ன்னு நினைச்சிதான் தூக்கிட்டு வந்திருக்கான். நீ என்ன பண்ணலாம்னு சொல்லு அப்படி பண்ணிடலாம்.”

“சரி, இது கிடா குட்டியா இருந்தா போனா போகுதுன்னு விட்டுறுவேன். பொம்மறி நல்ல ஜாதி ஆடு வேற. அதனாலதான் கேட்கறேன், என் ஆட்ட கொடுத்திடு.”

“என் பையன் எடுத்ததா சொன்ன இடமும், நீ தொலைச்சதா சொல்ற இடமும், ஒன்னா இருக்கதால ஆடு உன் ஆடுங்கற நானும் நம்புறேன். ஆனா, இத வித்தாக்கூட நான் வாங்கி குடுத்த பால் காசு வராதே. நீ சும்மா குடுத்துருன்னா எப்படி தர்றது.”

“அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற? அடுத்தவன் பொருள தூக்கிட்டு வரும்போது நீயெல்ல இத பத்தி யோசிச்சிருக்கனும். அதுக்காக, நான் உன்ன சும்ம விட்டுற மாட்டேன். அடுத்து என் ஆடுகளுல எதாவது கிடா குட்டி போட்டதும் சொல்லிவிடுறேன். வா, உனக்கு ஒரு குட்டி தர்றேன்.”

“கோனார உன்னோட வார்த்தைய நான் நம்புறேன். இது பிறந்த குட்டியா என் வீட்டுக்கு வந்தது. இப்ப வளர்ந்து ஆடாகி பலன் பிடிக்கிற நிலையில இருக்குது. என் மகன் குட்டியா வீட்டுக்கு கொண்டு வந்ததும்மே! நான் தாயில்லாத ஆட்டுக்குட்டி, ஆத்தா அருளோட நல்ல இருக்கனுங்கறதுக்காக, இது ஆடாகி ஈனுகிற முதல் கிடா குட்டிய நம்ம ஊரு சந்தனமாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்திடுறேன்னு வேண்டியிருக்கேன். நீ, அம்மனுக்கு ஒரு கிடா குட்டியை தந்துட்டு ஆட்டை பிடிச்சிட்டு போ. இல்லேன்னா, ஆத்தால ஏமாத்துன கோபத்துக்கு நம்ம ரெண்டு பேருமே ஆளாக வேண்டியது வந்துடும். உனக்கே தெரியும், அந்த ஆத்தால ஏமாத்துனா ஒன்னுக்கு பத்தா வசூல் பண்ணிடுவான்னு.” என்றதும். அதுவரை ஆட்டை வாங்கிவிட்டு செல்வது என்ற உறுதியோடு இருந்த சுந்தரகோனார் மனதில் ஒரு வித பயம் உருவாக “தப்பா நினைக்காத அருணகிரி. இது கிடா குட்டியா இருந்திருந்தா உங்கிட்ட கேட்டுருக்கவே மாட்டேன். புருவ குட்டியா இருந்ததாலதான் கேட்டேன். பொதுவா எங்கள மாதிரி ஆடு வளர்க்கறவங்க, இனிமேல ஆடு வளர்க்க போறதில்ல அப்படிங்கற நிலம வந்தாலோழிய புருவ குட்டிய குடுக்கமாட்டோம். சரி, நீயும் புள்ள குட்டிக்காரனாக போயிட்ட, உன் நிலமையையும் கொஞ்சம் யோசித்துதான் பார்க்க வேண்டியதிருக்கு. நான், உனக்கு ஒரு கிடா குட்டிய தந்துட்டு அப்பறம் ஆட்ட புடிச்சிட்டு போறேன்.” என்றவர். அருணகிரி, குமரன் இருவரிடமும் விடை பெற்று சென்றார். அருணகிரியை நிமிர்ந்த குமாரு “அண்ணே, நான் உன்ன கூப்பிட்டதால, என்னையும் இதுல உடந்தைன்னு தப்பா நினைச்சிடாத. கோனாரு மனசுல இப்படி ஒரு நினைப்ப வச்சிகிட்டு என்னை கூப்பிட சொல்லிருக்காங்கறத, அவர் உங்கிட்ட பேசும் போதுதான் தெரிஞ்சிகிட்டேன்.”

“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு குமாரு. ஆட்டுக்காரன் என்னைக்காவது ஒரு நாள் கண்டு பிடிச்சிருவாங்கறது, எனக்கு தெரியும். இன்னையோட அந்த குறை தீர்ந்தது. ஆட்ட கேட்டுட்டு போனவன், திரும்ப வருவான்னு நினைக்கறீயா? நிச்சயமா வரமாட்டான். அதுக்காகதான், ஆத்தாலுக்கு நேர்த்திக்கடன் இருக்குதுன்னு, ஆத்தா பேரயும் உள்ள இழுத்து போட்டேன். உண்மையில நான் அப்படி எதுவும் நேர்ந்துக்கல்ல. ஒரு நியாயம் வேண்டாம். இவ்வளவு நாள் கஷ்டபட்டு வளர்த்திருக்கறேன். ஒன்னு ஆட்ட வித்து சரி பாதியா எடுத்துக்கலாம். இல்ல ஒரு பொறந்த குட்டிக்கு உண்டான காச குடுன்னு கேட்கறதுல நியாயம் இருக்கு. முதல்ல நான் ஆட்ட குடுக்கணும்மாம். அப்பறம், அவரு ஆடு கெடா குட்டி போட்டதும் சொல்லி விடுவாறாம், நான் போய் வாங்கிக்கனும்மாம். எப்படி இருக்கு நியாயம். கொக்கு தலையில வெண்ணெயை வைச்சி பிடிக்கிறது போல.”

“ஆமாண்ணே, பக்கத்து வீட்டுலதான் இருக்கேன். இதுவரைக்கும் இந்த ஆட்ட பத்தின விஷயம் எனக்கே தெரியாது. கோனாருக்கும் அவரோட ஆடு புருவ குட்டி போட்டுச்சா, இல்ல கெடா குட்டி போட்டுச்சா. கருப்பா, செவப்பான்னுகூட தெரியாது. அப்படி இருக்கறப்ப, எப்படி பார்த்த உடனே கண்டு பிடிச்சிட்டான்?”

“ஆட்டுக்காரங்க எந்த ஆடு எந்த கெடாயோட சேருதுன்னு பார்த்து வச்சிருக்கறதால என்ன மாதிரி குட்டி பொறக்குங்கறது எல்லாம் அவங்களுக்கு அத்துபடி. நல்ல மேய்ப்பன்னு சொல்றவனும், ஒரு பெண்ணோட ஒற்றை முடியைக்கொண்டு அந்த பெண்ணின் அழகை முழுவதுமாக வரைந்திடுற ஓவியன போலதான்.” என்ற அருணகிரி “சரி, குமாரு வேலைக்கு கிளம்புறேன். நாளைக்கு பார்க்கலாம்.” என்று கிளம்பினான்.

ஊரே அம்மை நோய் வார்த்து அல்லோல பட்டுக்கொண்டிருந்தது. அருணகிரியின் குடும்பத்தையும் அது விட்டு வைக்கவில்லை. வேலனையும் புனிதாவையும் தவிர எல்லோருக்கும் அம்மை வார்த்திருந்தது. புனிதாவிற்கு கணவனையும் புள்ளைகளையும் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. வேலைகளுக்கு செல்ல முடியவில்லை. செலவுகளுக்கு பணம் இல்லை. கடன்கூட கேட்க முடியாத நிலை இருந்தது.

ஆட்டுக்குட்டியை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதற்கோ அதற்கு புல் பறித்துக்கொண்டு வந்து போடுவதற்கோ புனிதாவிற்கு போதிய நேரம் இல்லை. அதனால் ஆட்டை விற்று விடலாம் என புனிதா முடிவு செய்து ஆட்டு வியாபாரியை போயி சந்தித்தார். அவர் குறத்தியூர் சந்தைக்கு ஓட்டி வந்தால் விற்று தருவதாக சொல்ல வேலனிடம் ஆட்டை கொடுத்து சந்தைக்கு அனுப்பி வைத்தாள். ஆட்டை விற்றுக்கொண்டு பணத்தோடு வந்த வேலன் பணத்தை புனிதாவிடம் கொடுத்துவிட்டு “யம்மா, ஆட்ட விற்கறதுக்கு என்னைய ஏம்மா போக சொன்ன?”

“ஏன்டா தங்கம். இப்ப, என்ன ஆச்சிது?”

“நான் எப்போதும் போல அத மேய்ச்சலுக்குதான் அழைச்சிட்டு போறேன்னும், திரும்ப வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருவேன்னும் நம்பிக்கையில சத்தம் போடாம என்னோட வந்தது. நான் அதோட நம்பிக்கைய சாகடிச்சிட்டேன். ஆடுகள வாங்குற வியாபாரி அவங்கவங்க வாங்குற ஆட்டுக்கு அடையாளம் போட்டு வண்டி சத்தத்த குறைக்க மொத்தமா ஒரே வண்டியில ஏற்றிக்கொண்டு போவாங்க. அப்படி அடையாளம் போடுறதுக்காக முடிய வெட்டுன வியாபாரி, நம்ம அம்முவுக்கு தோளையும் சேர்த்து வெட்டிட்டான். இரத்தம் எப்படி பீறிட்டு வந்தது தெரியுமா? சே… அதுக்குகூட நான் பக்கத்துல இருந்ததால சின்ன சத்தம்கூட போடல. அத வண்டியில ஏற்றினதும் நான் ஏறாம கீழேயே நின்னதை பார்த்துட்டு கதறுச்சி பாரு. அந்த கதரல் இன்னும் என் காதுக்குள்ள ஒலிச்சிக்கிட்டே இருக்குதும்மா. மனசே ஆறல. அத காட்டுல இருந்து ஏன் தூக்கிட்டு வந்தோம்னு இப்ப நினைக்கிறேன். அப்படியே காட்டுல விட்டுட்டு வந்திருந்தா, அதுக்கு நடந்த அநியாயம் எனக்கு தெரியாமலே போயிருக்கும்.” வேலன், சொன்ன வார்த்தைகளை கேட்டு புனிதா உட்பட அம்மை வார்த்து படுக்கையில் கிடந்த எல்லோரும் கண் கலங்கிவிட சிறிது நேரம் அங்கே மௌனம் ஆட்கொண்டது. மௌனம் களைத்து ஆட்டை திருப்பி வாங்கி தர சொல்லி வேலன் கொடுத்த பணத்தோடு வியாபாரியை காண சென்றாள் புனிதா. “ஒத்தையா வீட்டுல வளர்ந்த ஆடுன்னு தெரிஞ்சதால ஆடு வளர்க்கற சம்சாரிங்க யாரும் வாங்கறதுக்கு முன் வரல. அதனால கசாப்பு கடைக்காரனுக்குதான் விற்றுக் கொடுத்தேன்.” என்றதும்.

“புள்ளைக்கு புள்ளையா வளர்த்துட்டு, கசாப்புக் கடைக்காரனுக்கு வித்த பாவத்த நான் எங்கேன்னு போய் தொலைப்பேன்.” என்ற புனிதா முழு பணத்தையும் சந்தன மாரியம்மன் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு வீடு திரும்பினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *