ரோஜா இதழ்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 3,342 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கிளிக்’ என்ற ஓசையைத் தொடர்ந்து வெடித்தது வெளிச்சம். நிலவுப் பிரவாகம் போல பொங்கிப் பாய்ந்த எலெக்ட்ரிக் ஒளி அவள் முகத்தைக் கருக்கடித்தது. தலையை ஒரு உலுப்பு உலுக்கி விட்டு அடுத்த அறையின் அந்தகாரத்திற்குள் நழுவினாள் சாரதா, இடம் தவறி வீழும் விண் மீன் போல.

ராமநாதன் உள்ளத்தைக் குழப்பிய உணர்ச்சிக் கொந்தளிப்பை அனல் மூச்சாக வெளியே தள்ளினான். உள்ளடங்கிய வாசனையைப் புகையாகக் கக்கி தன்னையே எரித்துக் கொள்ளும் ஊதுவர்த்தியைப் பார்த்தான்.ஒளி கிறுக்கிச் சிரித்த எலெக்ட்ரிக் விளக்கு மீது கவனத்தைத் திருப்பினான். பார்வை தானாக வெள்ளை வெளேரென விரிந்து கிடந்த படுக்கை மீது பாய்ந்தது. துல்லிய ஒளியில் பனிப் பரப்பு போல் கிடந்த படுக்கையில், சிதறிக் கிடந்தன ரோஜா இதழ்கள், புனித வெண்மையைக் கறைப் படுத்தும் ரத்தத் துளிகள் போல.

இதழ் உதிர்ந்து மூளிச்சிரிப்பு சிரித்துக் கிடந்தது ரோஜாப்பூ தலையணை மீது. சில நிமிஷங்களுக்கு முன்பு அது சாரதாவின் கருங்கூந்தலின் ஸ்பரிச இன்பத்தில் ஆழ்ந்திருந்தது. இப்பொழுதோ, சுதி கலைந்த அவன் உள்ளத்தைப் பிரதி பலிப்பது போல் சிதறிக் கிடந்தன இதழ்கள்.

அவன் அதை எதிர்பார்க்க வில்லை. ஏன்? அவள செயகையே அவனுக்குப் புரியவில்லை. தான் அந்த அறைக்குள் வந்ததும் கட்டிலை அணுகியதும், அவள் ஏன் அப்படி விலகிச் சென்று விளக்கேற்ற வேண்டும்? ஒரு வேளை அவள் மன நிலை அப்பொழுது அவன் உள்ளத் துடிப்புக்கு சுருதி சேர்க்கும் தன்மையில் குழைவுற வில்லையோ என்னவோ?

அதை அவள் மனம் ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. சில மணி நேரத்திற்கு முன் நிகழ்ந்ததை எண்ணும்போது…

அவன் சுவாரஸ்யமாக எழுதுவதில் ஈடுபட்டிருந்தான். உணர்ச்சிகளைக் கற்பனையில் மோதவிட்டுப் பேனா முனையில் சிந்தனைச் சித்திரமாக உருவாக்கிக் கொண்டிருந்தான். வேகமாக ஓடிய எழுத்துக்களுக்குத் தடை செய்ய வந்து நின்றாள் அவள். ஒன்றிய உள்ளத்துடன் உயரிய தபசில் ஆழ்ந்திருக்கும் தபஸ்வியின் சித்தத்தைக் குலைக்க வந்த அப்ஸரஸ் போல நின்ற சாரதாவைக் கண்டதும் அவனுக்கு எரிச்சலாகத் தான் இருந்தது. ‘சனியன்!’ என்று முணு முணுத்தான்.

அழகாகப் பின்னிவிடப்பட்டிருந்த சடையை முன்னால் இழுத்து கைகளால் நெருடிக் கொண்டு கோணல் விழிவலை வீசியது அவன் மனதை அலைக்காமல் இல்லை. ‘நேரமாய் விட்டதே இன்னுமா எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டதும் அவன் சித்தம் தளர்வதை நன்றாக உணர்ந்தான். அதை இழுத்து நிறுத்த புத்தரின் வைராக்கியம் தேவையாக இருந்தது. மற்ற நாட்களில் என்றால், ‘எழுத்து என்ன வேண்டிக் கிடக்கிறது! கனவாவது கற்பனையாவது என்று பேனாவை விட்டெறிந்திருப்பான். ஆனால், இன்று அப்படி முடியாது. ஏதோ ஒரு போட்டியில் நிச்சய வெற்றி பெரும் உறுதியுடன் உணர்ச்சியையும் சிந்தனையையும் திறமையுடன் சாரத்தியம் செய்வதில் ஈடுபட்டிருந்தான். அவனது அற்புத சிருஷ்டி நாளைத் தபாலில் பிரயாணமாக வேண்டும். அதற்கு வில்லங்கமாக அவள் வந்தால்…?

அதைப் பற்றி உனக்கென்ன கவலை! போய்த் தூங்கு: அல்லது என்னவும் செய். இங்கிருந்து தொலைந்தால் சரிதான், என்று உறுமினான்.

அதற்குப் பின்னும் அவள் ஏன் அங்கு நிற்கப் போகிறாள்! சாரதா ‘ப்சூ’ என அலுப்பாக உதட்டை அசைத்து வேகமாக வெளியேறினாள். அவள் நடை ஒலிபரப்பிய பாவத்தை உணர, அவன் முயற்சிக்கவே இல்லை. அவன் மனம் எழுத்திலேயே நிலைத்து விட்டது.

கால ஓட்டத்தை அளந்து காட்டும் கடிகாரத்தின் ஓயாத் துடிப்பு கூட அவன் கவனத்தைக் கவரவில்லை. அவன் பாட்டிற்கு எழுதிக் கொண்டேயிருந்தான். முகத்தில் உள்ளப் பூரிப்பின் வெற்றிச் சாயைப் படர அவன் பேனாவை மூடி வைத்து விட்டுத் தலையை நிமிர்த்திய போது, கடிகாரம் ‘மணி ஒன்றரை’ எனத் துடித்தது.

என்ன மணி ஒன்றரையா! என்று ஆச்சரியப்படத்தான் முடிந்தது. அவனால். எழுந்து, ஒரே நிலையில் மடங்கியிருந்த அவயவங்களுக்கு விடுதலை கொடுக்கச் சோம்பல் முறித்து விட்டு வெளியே வந்தான். அந்தத் தெரு ஆழ்ந்த மோனத்தில் லயித்துக் கிடந்தது. வெறிச் சென்று விரிந்து கிடந்த வான நடுவிலே சிறிது தேய்ந்து விட்ட சந்திரனின் முக்கால் உருவம் இணையற்ற அமுதப் பிரவாகத்தைச் சிந்திச் சிரித்தது. எவ்வளவு சௌந்தர்யம்! ஆனால் அதை யார் ரசிக்கிறார்கள்? எடுத்ததற்கெல்லாம் அழகான உவமைகளை முனக்கும் அவனது கலைமனம் அவ் வேளய நிலைமைக்கு உவமை காண முடியாமல் நன்றாயிருக்கிறது என்று தான் பேசியது.

‘இதை ரசிக்க கூட யாராவது இருந்தால்…!’ அவன் மனம் ஒத்த மனோபாவம் பெற்ற கலா ரசிகனை நாடியது. யார் இந்த வேளையிலே, நடு நிசிச்சாக் குருவி போல தனித்து நிற்கும் அவனுக்குத் துணையாகப் போகிறார்கள்! தானாகவே மோன நகை புரிந்து கொண்டான் ராமநாதன். எங்கிருந்தோ கிளம்பி எங்கோ செல்லும் குளிர்காற்று ஜில் லென்று பட்டது அவன் மேலே. புல்லரித்த உடல் மீது துண்டை இழுத்துப் போர்த்துக் கொண்டான். குளிர் சதையைத் தாண்டி எலும்பைத் துளைப்பது போலப் பட்ட்து. வீட்டுக்குள் நுழைந்தான.

தன் கதையைப் பற்றிய பெருமை நினைப்பு ஒருவாறு அடங்கியதும், அவன் மனம் சாரதாவிடம் சென்றது. ‘அவள் நல்லவள் தான். என்ன இருந்தாலும் பெண் தானே. சமய சந்தர்ப்பங்கள் தெரிவதில்லை; அட தானாகவே தெரியாவிட்டாலும் சொன்ன பிறகாவது புரிய வேண்டாமோ?’ என்று கேள்வி போட்டது மனம். ‘வாழ்க்கையே அப்படித்தான். எல்லாம் ஒத்துப் போவதில்லை. வாழ்க்கை பூங்காவில் மணம் தரும் இன்பத் துணை வேண்டுமாம். துணையாவது! போகப் போக தெரிஞ்சி முள்ளாகத்தான் இருக்கிறது’ என்று சிந்தனை மின் வெட்டியது. கலைஞனின் இன் துணை என்றால், கலைத்தொழிலின் போது தலையிடலாமா! கலையுள்ளம் ரசனையை அனுபவிக்கத் துணை நாடும் போது,தேடினாலும் சகா அகப்படுவதில்லை. அதோ எங்கோ ஓலமிடுகிறதே கோட்டான் அதைப்போல் தான் அவன் விழித்துக் கொண்டு நிற்க வேண்டும். வேண்டாத சமயங்களில் தொண தொணக்க ஏகப்பட்ட நண்பர்கள்!’. உலகத்தின் தன்மையை எண்ணும் போது மோனச் சரிப்பு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

‘சாரதாவா…இப்பொழுது நன்றாகத் தூங்கியிருப்பாள்…பார்க்கலாமே’ என்று அறையினுள் புகுந்தான் ராமநாதன். அப்படியே சொக்கி நின்று விட்டான். கட்டிலில் குப்புறக் கிடந்த அவள், ஒரு கன்னத்தைத் தலையணையில் பதித்து, முகத்தின் மறுபாதி நன்கு புலப்படும் வகையில் படுத்திருந்தாள். சாளரத்தின் வழியாக வந்த நிலவு அவளை மோகனச் சிலையாகச் சித்தரித்தது. ஆகாய வர்ணச் சேலையும் அதற்கு ஏற்ற ரவிக்கையுமணிந்து, கருநாக தெளிவு போன்ற தலைப்பின்னல் நீண்டு கீழே தொங்க, அதன் முடியில் முழுதலர்ந்த ரோஜா மலர்கள் அணி செய்ய, அழகுத் தெய்வம் போல் துயில் பயின்ற அவள், சந்திரிகை ராணியா! வானத்து மோகினியா! கலையுள்ளம் படம் விரித்து ஆட் ஆரம்பித்தது. மாசு மருவற்று மிளிர்ந்த, நிலவொளி பட்டுத் தெறித்த, கண்ணாடிக் கன்னமும், மூடியிருந்த சுண்ணிமைகளும், அவள் தோற்றமும்…

அவன் முன் நகர்ந்தான். ‘சாந்தியின் அதிதேவதை போல் கவலையற்றுத் துயில்கிறாள்’ என்று நினைத்தான். மனக் கண், பிறர் உணர்ச்சிகளை வெற்றிகரமாக எடை போடும் அந்தக் கலைஞன் ஒரு பெண்ணுள்ளத்தின் இதயதாபம் மோன வேதனையாக முகத்திலே நெளிந்து செல்வதை உணரவில்லை. இரை தேடி அலுத்த நாகத்தின் நெடு மூச்சுப்போல், அவள் நெட்டுயிர்த்தது கூடவா தெரியவில்லை!

அழகை அள்ளிப் பருகிக் கொண்டே நெருங்கினான். அவளைக் கையால் தீண்டவில்லை. உள்ளக் குழைவை எல்லாம் கூட்டி ‘சாரதா’ என ரகசியம் – பேசவில்லை. என்றாலும், எதிர்பாராதது நடந்தது. சடக்கென எழுந்தாள் அவள். ‘என்ன, தூக்கமில்லை’ என அதிசயித்தான் கணவன்.

அவள் அவனைப் பார்த்த பார்வை! அதில் பரிவோ அன்போ இல்லை. குலைந்து கிடந்த மேலாடையை இழுத்து விட்டுக் கொண்டு, தலைப்பின்னல் சாட்டை போல் துவள, தலையை வெடுக்கெனத் திருப்பி, வேகமாக நடந்தாள். அந்த அதிர்ச்சியில் ரோஜாப்பூ இதழ்களாக உதிர்ந்தது.

‘கிளிக்’ என்ற ஓசை, பிறந்தது வெளிச்சம். ஆனால் ராமநாதன் உள்ளத்தில் இருள்தான் கவிழ்ந்தது. சாரதாவின் செய்கைக்கு அர்த்தம் என்ன? கோபமா! பழிக்குப் பழியா! கலைஞனின் இதயம் தொட்டாற்சினுங்கி இலை போலக் குவிந்தது.

‘நான் பிரியமாக வந்தபோது எரிந்து விழுந்தாயே. நான் தனியாக, தூக்கத்தில் இன்பம் காணக் குமுறும் வேளையில் தொல்லை கொடுக்க வந்ததேன்?’ என்று சொல்ச் சாட்டை கொடுத்திருந்தால் கூட தேவலை. ஆனால், அவளது மௌன வெளியேற்றம் அவன் இதயத்தை அறுத்தது. அவள் பெண், மென்மை இதயத்தில் பட்ட அடி எழுப்பிய வைராக்யத்தைச் செயலிலா காட்ட வேண்டும்…

கலைஞன் பொறுமினான். ரோஜா அழகானது தான். ஆனால், ஆர்வமாக கை நீட்டினால், குத்திவிட முட்களும் உண்டு அதில்.

ஆம் என்று சொல்ல முயல்வது போல் சிதறிக் கிடந்தன ரோஜா இதழ்கள்! சில இதழ்களை எடுத்துக் கசக்கினான் சிந்தனையில் விழுந்த ராமநாதன். எப்பொழுதோ எங்கோ படித்த அமரகவியின் வாக்கு அவன் உள்ளத்தில் எதிரொலித்தது.

‘இனிய் ரோஜா மலர்களைப் பறித்துப் பரவசமாய் மார்பில் பதித்தேன். முள்தான் குத்தியது, இதழ்களின் அழகையும் மணத்தையும் மறந்து விட்டேன். வேதனை மட்டும் நீங்கவில்லை.’

– கல்யாணி முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, சினிமா நிலையம் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *