ரேணுகா – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2023
பார்வையிட்டோர்: 2,977 
 

வாடிப்போன வயல்வெளியாய் கார்த்திக்கின் இல்லம்.

வீட்டின் முன் ஊரே கூடியிருந்தது. தெருநாய்கள் கூட வேலைகளை நிறுத்திவிட்டு கூட்டத்தினரையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தன.

பழம் இருக்கும் மரம் போல, சில ஆண்டுகளாக கார்த்திக்கின் இல்லம் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருப்பதற்கு காரணம் ரேணுகா தான். ரேணுகா வந்த பிறகு தான் புதுச்சட்டை, தின்பண்டம் எல்லாம் கார்த்திக்கு கிடைத்தது.

ரேணுகாவுடன் தான் கார்த்திக் விளையாடுவான். ரேணுகா சாப்பிட்ட பிறகுதான் சாப்பிடுவான்.

இப்போது ஏன்? துயரக் கடலில்….

சில நாட்களாகவே கார்த்திக்கின் அம்மா இந்துமதிக்கு தீராத வயிற்றுவலி. இப்போது அதிகமானது. பணத்துக்கு எங்கே போவது?

அதனால் ரேணுகாவையே விற்கவேண்டிய சூழ்நிலை. தாடிக்காரர் ஒருவர், பணத்தை எண்ணிக் கொடுத்து விட்டு கயிற்றில் ரேணுகாவை கட்டி ஓட்டிச் சென்றார்.

பசுமாட்டை ரேணுகா என்று செல்லமாக அழைப்பார்கள்.

“அப்பா! ரேணுகாவ எங்கே கூட்டி போறாங்க”

அழுகையுடன் வந்த கார்த்திக்கை கட்டிப்பிடித்தவாறு “ரேணுகாவுக்கு உடம்பு சரியில்லை அதான், அதோட குழந்தையையும் சேர்த்து கூட்டிப்போறாங்க” ஆறுதல் சொன்னார் அப்பா.

அந்த ஏரியாவில் கார்த்திக் வீட்டு பசுமாட்டு பாலுக்கு அதிக மவுசு. பசும்பால் விற்றுதான் வாழ்ந்து வந்தார்கள்.

ரேணுகா மெல்ல திரும்பிப் பார்த்தது. அழுதுகொண்டு இருந்த கார்த்திக்கைப் பார்த்து “சீக்கிரம் வந்துவிடுவேன்” என்று வாலை ஆட்டி ஆறுதல் சொல்லிக்கொண்டு சென்றது. கார்த்திக்கும் தன் கைகள் சோர்ந்து போகும் வரை டாட்டா காட்டினான்.

“ரேணுகா சீக்கிரம் குணமாகனும்” கார்த்திக் தன் கண்களை மூடி வேண்டிக்கொண்டான்.

சேரமாட்டோம் என்று இருவருக்குமே தெரியவில்லையே கார்த்திக்கை அணத்தவாறு அழ ஆரம்பித்தார் அவனது அப்பா.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *