“கணன் மாமாவும், மாமியும் கனடா வந்து நிக்கினம்.. ஒரு கிழமைக்கு என்னோட தங்கச் சொல்லிக் கேட்டனான்.. உன்ர அறையிலதான் விடப்போறன் நீ தம்பியோட ஷெயர் பண்ணு” அம்மா சொல்லி விட்டுப் போய் விட்டாள். தம்பி அவசரமாக தன்ரை அறைக்குள் புகுந்து கொண்டான். என்னத்தை ஒளிக்கிறான், மறைக்கிறானோ தெரியாது. அம்மா யன்னல் சீலைகளைத் தோய்கிறது, கட்டிலுக்கு புது பெட்சீட் மாத்திற தெண்டு படு பிஸியாயிட்டா.
பாவம் அம்மா..அப்பா இருக்கேக்க ரெண்டு பேருமா வேலைகளை சேந்து செய்திச்சீனம்.. இப்ப ரெண்டும் பெடியள்.. அதுகளிட்ட என்னண்டு வீட்டு வேலை செய்யக் கேக்கிறதெண்டு நினைச்சுத் தானே கிடந்து முறிவா.. நான் கொஞ்மாவது ஏதாவது உதவுவன்.. ஆனால் தம்பி படிக்கிற மாதிரிப் போஸ் குடுத்துக் கொண்டு எந்த நேரம் பாத்தாலும் கொம்பியூட்டரைக் கிண்டிக்கொண்டு இருப்பான்.
கணன் மாமா.. எங்கட சொந்தாக்காறர் இல்லை.. ஊரில பக்கத்து வீடு.. மாமியும், அம்மாவும் நல்ல ப்ரெண்ஸ்.. குமுதம், ஆனந்தவிடகனில வாற தொடர்கதை பற்றிக் கதைக்கிறது, சேந்து சொப்பிங் போறது, படத்துக்குப் போறது எண்டு ஒண்டாச் சுத்தித் திரிவீனம். ஆனால் மாமாவும் அப்பாவும் பெரிசாக் கதைக்கிறதை நான் கண்டதில்லை.. சிலவேளகளில ரோட்டில எங்காவது கண்டா சும்மா சாட்டுக்கு “எப்பிடி” எண்டு ஆளையாள் கேட்டிட்டுப் போவீனம். அவ்வளவுதான்.. மாமாக்கு மூண்டு(ம்) பெட்டைகள்..
(நானும் தம்பியும் அவேலை பெட்டைகள் பெட்டைகள் எண்டு கதைக்கிறது அம்மாக்குப் பிடிக்கிறேலை.. “அதென்ன பெட்டைகள் மனேஸ் இல்லாமல்” எண்டு ஒருநாள் அம்மா சொல்லிப்போட்டுப் போக தம்பி “அதென்ன மனேஸ் இல்லாமல்” எண்டு அம்மா மாதிரி நௌ¤ச்சுக் காட்டிச் சிரித்தான், எனக்கு அது அவ்வளவாப் பிடிக்கேலை)
நான் நடுவானைக் கொஞ்ச நாளாச் சைட் அடிச்சன். அது பிறகு வேற ஒரு பெடினோட கதைச்சுக் கொண்டு திரியிறதைக் கண்டிட்டு விலகீட்டன்.
ஒரு நாள் மாமி எங்கட வீட்டை அவசரமா ஓடி வந்து அம்மாட்ட ஏதோ ரகசியமாச் சொல்லி மூக்கைச் சீறிச் சீறி அழுதா.. அம்மா என்னைக் கடைக் கண்ணால பாத்துப் பாத்து மெல்லமா ஏதோ மாமீன்ர காதுக்க குசுகுசுத்தா. நான் விறாந்தையில் லாவகமாகக் கதிரையில சரிஞ்சு இருந்து கொண்டு ஆனந்தவிகடனில கமலகாசன் வாணி கணபதியக் கலியாணம் கட்டப் போகுதாம் எண்ட கிசுகிசு வாசிச்சுக் கொண்டு இருந்தனான். சிறீதேவியைக் கட்டாதது எனக்கு நல்ல சந்தோஷம். அம்மா என்னைப் பாத்து “தம்பி பெரியாக்கள் கதைக்கேக்க நீ என்ன இஞ்ச, உள்ள போ” எண்டு என்னைக் கலைச்சுப் போட்டா.. நான் கனநேரமா மாமி அழுத விஷயத்தைச் சொல்லுவா எண்டு ஆனந்தவிகடனில முகத்தை மேஞ்சது வீணாப் போச்சுது. அம்மா இன்னும் என்னைப் பெரிய பெடியனாப் பாக்காததும் ஏமாற்றமா இருந்துது.
நான் சோம்பல் முறித்தபடி எழும்பி முன் ஒழுங்கேக்க வந்து யாரும் பெட்டைகள் சைக்கிளில வரீனமோ எண்டு பாத்துக்கொண்டு நிண்டன். (ஒண்டும் செய்ய இல்லாட்டி இதுதான் என்ர பொழுது போக்கு) மாமியின்ர கடைசிப் பெட்டைதான் ரியூசன் வகுப்புக்கு போறதுக்காக சைக்கிளோட வெளியில வந்துது. கொஞ்சம் கறுப்பா இருந்தாலும் நல்ல முகவெட்டும் வடிவும். இருந்தாலும் ரெண்டாவதை நான் மனசார விரும்பினதால கடைசிப் பெட்டையில ஒரு பிடிப்பு வரமாட்டன் எண்டிட்டிது. பெட்டைக்குப் பக்கத்தால சந்தோஷமாத் துள்ளிக் கொண்டு “ரெக்ஸ்” உம் ஓடி வந்துது. கையில இருந்த ஒரு துண்டு பிஸ்கோத்தை என்ர காலடியில போட்டு ரெக்ஸ்சை என்ர காலுக்க வரப்பண்ணிப் போட்டு ஒரு வில்லங்கமான சிரிப்போட கடந்து போச்சுது பெட்டை. நான் முகத்தை “உம்” எண்டு பிடிச்சுக் கொண்டு நிண்டன். ரெக்ஸ் பிஸ்கோத்தை திண்டிட்டு என்ர காலை நக்கீச்சு.. நான் அதின்ர தலையில தடவி விட்டன்.
வீட்டுக்கு ஒருக்கா கள்ளன் வந்த பிறகு மாமா எங்கையோ இருந்து இந்த உருண்ட வெள்ளை ரெக்ஸ்சை வீட்டை கொண்டு வந்து கட்டினார். மாமா வீட்டை ஆர் கடந்து போனாலும் அதிகமா ரெக்ஸ் குரைச்சுக் கொண்டு அவையள விட்டுக் கலைக்கும். அதால அதிகமா மாமா வீட்டைக் கடக்கிற எல்லாருமே கொஞ்சம் உசாரா விடுவிடு வெண்டுதான் நடந்து போவீனம். சைக்கிள்காறர் எண்டா பாஸ்ட்டா ஓடி வந்து வீட்டைக்கடக்கேக்க பாரில காலைத் து£க்கி வைச்சுக் கொண்டு போவினம். ஆனால் ரெக்ஸ் இதுவரைக்கும் ஒருத்தரையும் கடிச்சதெண்டு நான் கேள்விப்படேலை.. நாங்கள் பக்கத்து வீட்டில இருக்கிறதாலையும், மாமியோட சேந்து ரெக்ஸ் அடிக்கடி எங்கட வீட்டை வாறதாலையும் எங்க வீட்டில யாரைக்கண்டாலும் சந்தோஷத்தோட வாலை ஆட்டிக்கொண்டு வந்து காலை நக்கும்.
ஒருநாள் நான் வகுப்பு முடிஞ்சு வீட்ட சைக்கிள்ள வரேக்க,, மாமி வீட்டை பெரிய சத்தமா ரெண்டு மூண்டு நாய்களின்ர கத்தி குரைக்கிற சத்தம் கேட்டுது. நான் சைக்கிள மதிலோட சாய்சுப் போட்டு போய்ப் பாத்தன் ரெக்ஸ் ஒரு பெட்டை நாயோட ஒட்டிப்போய் இழுப்பட்டுக் கொண்டு நிண்டுது. மாமி வீடு பூட்டிக் கிடந்துது.. (பூட்டிக் கிடக்கோ இல்லாட்டி பெட்டைகள் வெளியில வர வெக்கப் பட்டு உள்ளுக்க நிக்கீனமோ எண்டு தெரியேலை.). நான் ஒரு தடிய எடுத்து அதுகளைக் கலைச்சன். ரெண்டும் கத்திக் கொண்டு இழுபட்ட படியே பின் வளவுக்க ஓடீற்றுதுகள்..
பிறகு கொஞ்ச நாளால ஒருநாள் நான் வெளியில வெளிக்கிட்டிக்கொண்டிருக்கேக்க அம்மா ஓடி வந்து “தம்பி நான் ஊத்தையா நிக்கிறனடா இதை ஒருக்கா மாமீட்டைக் குடுத்திட்டுப் போ” எண்டு ஒரு பெட்டிய நீட்டினா.. மங்கையர்மலரில சொன்ன “ரெசுப்பி” இப்பிடித்தான் அடிக்கடி பெட்டியோட அங்கையும் இஞ்சையும் கை மாறும். நான் சினத்தோட பெட்டிய வாங்கிக் கொண்டு மாமி வீட்டை போனன். மாமி வீட்டு விறாந்தையில சறத்தை மடிச்சுக் கட்டி, மஞ்சள் நிறத்தில நைலோன் ஆம்கட் ரீசேட் போட்ட தடிச்ச கறுப்பன் ஒருத்தன் ரெக்ஸ்சை அமத்திப்பிடிச்சுக் கொண்டு மாமாவோட ஏதோ கதைச்சுக் கொண்டு நிண்டான். ரெக்ஸ் என்னைக் கண்ட உடன மெல்லிய குரலில முனகிப் பிறகு குரைச்சுது. நான் தயங்கித் தயங்கிக் கிட்டப் போக மாமா என்ன ஒரு மாதிரிப் பாத்திட்டு உள்ள போ எண்டு தலைய ஆட்டினார். நான் பேசாமல் உள்ள போனன். மாமி மேசையில துணிய விரிச்சு வைச்சு அளந்து அளந்து ஏதோ வெட்டிக்கொண்டிருந்தா. அவவின்ர வயிறு உப்பின மாதிரி இருந்துது.
மூண்டு பெட்டைகளும் ரேடியோவில இசையும் கதையும் கேட்டுக்கொண்டு இருந்தீச்சுதுகள். நான் முகத்தை “உம்” எண்டு பிடிச்சுக் கொண்டு மாமீற்ர பெட்டிய நீட்டினன். மாமி வாங்கி மேசையில வைச்சுப் போட்டுத் துணி வெட்டிறதில கவனமா இருந்தா. இசையும் கதையுமில “காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருத்தன்” எண்டு பாட்டுப் பாடீச்சுது. நான் பெட்டைகளையும் மாமியையும் மாறி மாறி பாத்துக் கொண்டு நிக்க
(நான் மூத்த பெட்டைய மட்டும்தான் அக்கா எண்டு கூப்பிடுறனான், முந்தி எனக்கு அக்காவோட நல்லா ஒத்துப் போகும். அவ சொல்லுற வேலையெல்லாம் ஓடியோடிச் செய்வன்.. ஆனால் இப்பவும் அவ என்னைச் சின்னப் பெடியன் மாதிரி கண்ட கிண்ட வேலைகள் சொல்லுறதால நான் அவேன்ர வீட்டை போறதைக் குறைச்சுப் போட்டன்.. பத்தாததுக்கு ரெண்டாவது பெட்டை அக்காட்ட என்னைப் பற்றி ஏதோ அள்ளி வைச்சிட்டுது எண்ட சந்தேகமும் எனக்கு இருக்கு)
அக்கா என்னைப் பாத்து “என்ன பெட்டி வேணுமே” எண்டு கேட்டா.. நான் “இல்லை” எண்டு தலையாட்டினன். கடைசிப்பெட்டை என்னைப் பாத்துக் கண்ணால சிரிச்சுது. பிறகும் நான் போகாமல் நிக்கிறதைக் கண்ட மாமி “என்னடா” எண்டா.. “இல்லை மாமி ரெக்ஸை யாருக்கும் குடுக்கப் போறீங்களே?” எண்டன். கடைசிப் பெட்டை ஒரு மார்க்கமா சிரிச்சுக் கொண்டு அறைக்குள்ள ஓடிச்சுது. நான் வந்த கோவத்தில திரும்ப “அது ஒண்டுமில்லையடா இஞ்சதான் நிக்கும் நீ போ” எண்டு மாமி வாயுக்க ஒரு சிரிப்போட சொன்னா.. எல்லாமே எனக்கு ஒரு புதிரா இருந்துது.. ரெண்டாவது பெட்டை என்னை ஒரு பொருட்டாவே எடுக்கிறதில்லை.. நினைச்சா நான் அவவின்ர லவ் கதைய அம்மாட்டச் சொல்லி நாறடிச்சுப் போடுவன்.. ஆனால் ஏனோ மனம் கேக்கேலை.. நான் பேசாமல் திரும்பி நடக்க, பின் முத்தத்து வேப்பமரத்தில ரெக்ஸ்சை அந்த தடியன் கட்டி வைச்சிட்டு நிலத்தில இருந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.. ரெக்ஸ் அனுங்கிக் கொண்டு நிண்டுது. நான் நிண்டு கொஞ்ச நேரம் பாக்க மாமா “இதெல்லாம் நீ பாக்கக் கூடாது போ” எண்டார். தயங்கித் தயங்கி நான் வெளியில் வர ரெக்ஸ் பெரிசாக் கத்திற சத்தம் கேட்டுது. ரெக்ஸ்க்கு ஏதோ செய்யிறான் அந்த தடியன்.. ஓடிப்போய் அதைக் காப்பாற்ற வேணும் எண்டு ஆசையா இருந்திச்சு.. நான் எட்டிப் பாத்தன்..மாமான்ர தலை மதிலால இன்னும் தெரிஞ்சுது.. அதால நான் திரும்பிப் போகாமல் பேசாமல் வந்திட்டன்.
அடுத்தநாள் நான் வெளியில வெளிக்கிடேக்க ரெக்ஸ் மாமா வீட்டு வாசலில நிண்டு மெல்லமாக் குரைச்சுது. நான் “ஓடி வா” எண்டு கையக் காட்டவும் வராமல் சினுங்சிச் சினுங்கிக் குரைச்சுது.. நான் கிட்டப் போக பின்பக்கத்தை ஒரு மாதிரி உயத்திப் பிடிச்சுக் கொண்டு கால்கள் ரெண்டையும் அகட்டிக் கொண்டு முனகிய படியே மெல்ல மெல்ல என்னட்ட நடந்து வந்துது. நான் அதை மெல்லமாத் து£க்கி தடவி விட்டன். பின்பக்கமா அதுக்கு ஒரு கட்டுப் போட்டிருந்துது.
மூண்டு பெட்டைகளுக்குப் பிறகு கனகாலத்தால மாமிக்கு ஒரு பெடியன் பிறந்துது. நானும் தம்பியும் மாமிக்குப் பிள்ளை பிறந்ததை கதைச்சுச் சிரிச்சதைக் கேட்டு அம்மா “வயசுக்கு ஒரு மரியாதை இல்லாமல் உதென்ன கதையும் சிரப்பும்” எண்டு கோவிச்சா.. தம்பி என்ர காதுக்கு “எங்களுக்குத் தங்கச்சி பிறக்காட்டிச் சரி” எண்டு சொல்ல நான் சிரிப்புத் தாங்கேலாம் வெளியில ஓடீற்றன். அம்மா என்னை முறைச்சுப் பாத்துப் போட்டுப் போட்டா..
கணன்; மாமான்ர தலை நரைச்சிருந்தாலும் நடையில தளர்ச்சி இல்லை.. மாமி தலைக்கு டை அடிச்சிருந்தா. முகந்தான் சுருங்கிப் போய் இருந்துது. எங்களைக் கண்ட உடன கட்டிப் பிடிச்சு அழுதா. அப்பா செத்தாப்பிறகு இப்பதான் காணுறா.. அதுதானாம் அந்த அழுகை. பெட்டைகள் மூண்டும் கலியாணம் கட்டி லண்டனில தான் இருக்குதுகள் எண்டா. ரெண்டாவது பெட்டைக்கு எத்தின பிள்ளை எண்டு வாயில வந்த கேள்விய நான் அடக்கிக் கொண்டன். எனக்கு எப்ப கலியாணம் எண்டு கேட்டா.. “அவன் யாரையோ லவ் பண்ணிறானாம் பெட்டை யூனிவேசிட்டியில படிக்குதாம் படிப்பு முடியத்தான் கலியாணம் எண்டு இழுத்தடிக்கிறான்” எண்டு அம்மா சொன்னா. நான் பெருமையாச் சிரிச்சன். தன்ர கடைசிப் பெடியன் லண்டனில் டொக்டருக்குப் படிகிக்கிறான் எண்டு என்ர பெருமையில மண்ணை அள்ளிப் போட்டா மாமி.
லண்டனிலும் பாக்க கனடா நல்லா இருக்குது எண்டும், சாப்பாடு, இடமெல்லாம் எங்கட ஊர் போல கிடக்குது எண்டும் மாமா சொன்னார். தான் இப்ப இடியப்பம் தோசை ஒண்டும் செய்யிறேலை எல்லாம் கடையில வாங்கலாம் எண்டு அம்மா கனடாப் பெருமையக் கொஞ்சம் கூட்டிச் சொன்னா. தான் கனடாவில வாங்கின சீலைகள மாமி அம்மாக்குக் காட்டினா. அம்மா முகத்தைச் சோகமா வைச்சுக் கொண்டு தான் இப்ப பெரிசாப் பட்டு ஒண்டும் கட்டிறேலை எண்டா.. எனக்கு விசர் வந்துது. தம்பி ரூமுக்க கொம்பியூட்டரில் கிணுகிணுக்கிற சத்தம் கேட்டுது. நாளைக்கு வேலைக்கு வெள்ளணைப் போக வேணும் இருண்டிட்டுது படுக்கலாம் எண்டா வழியக் காணேலை.. (நான் மூத்த ஆம்பிளப் பிள்ளையாம் விசிற்ரேஸ் வந்திருக்கேக்க அவையளோட இருந்து கதைக்க வேணுமாம்..அம்மான்ர மனேஸ் இஞ்சையும் வேலை செய்யுது) நான் சோபாவில இருந்து து£ங்கிக் கொண்டு இருந்தன். கதை கதையெண்டு கதைச்சு அலம்பி ஒரு வழியாக் கொட்டாவி விட்ட படியே ஒவ்வொருத்தரா படுக்கப் போச்சீனம். நான் பேசாமல் சோபாவில படுக்க அம்மா வந்து எழுப்பி “அவையள் கண்டாச் சரியில்லை.. போய்த் தம்பியோட படு” எண்டு பலவந்தமா அனுப்பினா. தம்பி கட்டிலில காலை விசிச்சுப் பரந்து படுத்திருந்தான். இண்டைக்கு நித்திரை கொண்ட மாதிரித்தான் எண்டு நான் ஒரு ஓரமா ஒதுங்கினன்.
கண் மூடி மூடித் திறக்க நான் அயருவதும் முழிப்பதுமாகப் புரண்டு கொண்டு கிடந்தன். மாமீன்ர ரெண்டாவது அடிக்கடி வந்து சிரிச்சிது. தம்பி சின்னதாக் குறட்டை விட்டான். நான் கையால அவன்ர வாயை மூடிப்பாத்தன் சரி வரேலை.. பெட் சீட்டை எடுத்து தலையைப் போத்து கண்களை இறுக மூடி ஒண்டு ரெண்டு எண்டு மனதுக்க எண்ணிக் கொண்டு கிடக்க, என்ர அறையில கட்டில் ஆடுற சத்தம் கேட்டுது. மாமி கிளுகிளுத்தா சின்னதாச் சிரித்தா.. பிறகு சினுங்கினா..மாமா ஏதோ ரகசிய குரலில குசுகுசுத்தார்.. மாமியின்ர குரல் இன்னும் சினுங்கியது.. பிறகு ரெண்டு பேற்ற மூச்சும் ஒரு மாதிரிக் கேட்டுது. என்னடா இது சோதினை எண்ட படி நான் தம்பியப் பாத்தன் அவன் வாய் திறந்து சொர்க்கத்தில கிடந்தான். நான் காதைப் பொத்திக் கொண்டு கிடக்க மாமியின்ர ஆ.. ஆ வெண்ட குரல் வந்து காதைப் பொத்தி அடிச்சிது.. பிறகு கொஞ்ச நேரத்தால ஓய்ஞ்சு போச்சுது. மாமா இருமுற சத்தம் கேட்டீச்சு.. எனக்கு கையெல்லாம் குளிந்து விறைச்சுப் போச்சு.. அடக்க முடியாமல் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கிடந்த என்ர கண்களை நித்திரை வந்து மூட பின் கால்களை அகட்டிப் பிடித்த படி முனகலோடு அரக்கி அரக்கி நடக்கும் நான் மறந்து போயிருந்த “ரெக்ஸ்”; என் கண்களுக்குள் வந்து போனது.
– ஏப்ரல் 2005