கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2022
பார்வையிட்டோர்: 4,901 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, ஒரு தாயும் – மகனும் இருந்தாங்க. தாயுக்கேத்த மகனா வளந்து வந்தா. கல்யாணம் முடிக்கிற பருவத்துக்கு வரவும் தாயி, மகனுக்குப் பொண்ணு பாக்கப் போனா . இவங்களப் போலவே, ஒரு ஊர்ல தாயும் – மகளும் வாந்து வந்தாங்க. மக பெரிய வாயாடியா இருந்தா. தெனமும் ரெண்டு பொம்பளைக கூடச் சண்ட பிடிச்சாத்தா, அவளுக்குச் சந்தோசமா இருக்கும். இவள யாருக்காச்சுங் கட்டிக் குடுத்துடணும்ண்டு , தாயி நெனச்சுக்கிட்டிருந்தா. அந்தச் சமயத்ல, தாயும் மகனும் அந்த வீட்டுக்குப் போறாங்க. பொண்ணு கேட்டு, வந்திருக்கோம்ண்டு சொல்லவும், சந்தர்ப்பத்த எதிர்பாத்துக்கிட்டிருந்த அம்மா, பொண்ணு குடுக்க சம்மதிச்சுட்டா.

ரெண்டு பேருக்குங் கல்யாணம் நடந்திருச்சு. வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்தா. வழக்கம்போல, பக்கத்து வீட்டுப் பொம்பளைக கூடச் சண்ட பிடிக்க ஆரம்பிச்சுட்டா. ஊருக்காரங்களெல்லாம், இவள வெறுக்க ஆரம்பிச்சுட்டாங்க. இவளக் கண்டா எல்லாப் பொம்பளைகளும் பயந்து ஒதுங்கிப் போயிருவாங்க. சண்டக்கி ஆள் கெடைக்காட்டி, ரூவா குடுத்துக் கூலிக்கு ஆள்பிடிச்சுட்டு வந்து, வீட்டுக்கு முன்னால நிண்டுகிட்டு சண்ட பிடிப்பாளாம். புருசஞ் சொன்னா புருசன வையுவா.

புருசஞ் சொல்லிப் பாத்தா. அவளத் திருத்த முடியல. வீட்ட வெறுத்து பரதேசம் புறப்பட்டுப் போயிட்டா. போற வழியில், ஒரு பெரிய ஆலாமரம் இருந்திச்சு. அந்த மரத்தடியில போயி, நெழல்ல ஒக்காந்தர். அப்ப, அந்த வழியா ஒரு சாமியாரு வந்தாரு. அவரு வந்து, அந்த ஆலாமரத்து நெழல்ல ஒக்காந்தாரு. நிய்யி யாருய்யா? எதுக்கு வருத்தமா ஒக்காந்திருக்கேண்டு கேட்டாரு. எங்கிட்ட எதயுங் கேக்க வேணாம். நானு மனம் நொந்து போயிருக்கேண்டு சொன்னா. என்னாப்பா விசயம்? எங்கிட்டச் சொல்லு, முடிஞ்சாத் தீத்து வைக்கிறேண்டு சொன்னாரு.

நா கல்யாணம் முடிச்சுட்டு வந்த நேரம், என் பொண்டாட்டி பெரிய வாயாடி. தெனமும் ஊரு ஆளுங்க கூடச் சண்ட புடிக்கிறது. சண்டக்கி ஆரும் வரலண்டா எங்கூடச் சண்டப் புக்கிறா. எத்தன நாளக்கி இந்த ராட்சசியோட குடும்பம் நடத்துறதுண்ட்டு , குடும்பத்த வெறுத்து, பரதேசம் பெறப்பட்டு வந்திட்டேண்டு சொன்னா. வருத்தப்படாதப்பா. நா ஒரு வழி சொல்றே. இப்ப நிய்யி வீட்டுக்குப் போண்டு சாமியாரு சொன்னாரு. நிய்யி வீட்டுக்குப் போகயில, ஓம் பொண்டாட்டி சண்ட புடிச்சுக்கிட்டிருந்தாண்டா ஒங்கூட வாழ்றதக் காட்டிலும், செத்துப் போறதே மேலுண்டு சொல்லு. போயி, சாவுண்டு சொன்னாண்டா நிய்யும் வாண்டு கூட்டிக்கிட்டு போ.

நம்ம ஊரு பெரிய கொளத்துக்குக் கூட்டிட்டுப் போ. அங்க போயி, எங்கையக் காலக் கெட்டி, கொளத்ல தள்ளி விடுண்டு சொல்லு. அப்பவும், தள்ளி விடுறதுக்கு தயாரா இருந்தாண்டா, பின்னால பத்தடி போயித் தள்ளச் சொல்லு. அதுக்கும் தயாரா இருந்தாண்டா, அவ தள்ள ஓடி வரயில, கொஞ்சம் வெலகி நிண்டுக்க. தள்ள வந்த வேகத்ல, அவ போயி கொளத்துக்குள்ள விழுவா. தண்ணிக்குள்ள விழுந்த பெறகு, வாயாடிண்டாப்ல தண்ணி விடுமா? தண்ணியக் குடுச்சுச் செத்துப் போவா. பெறகு, நிய்யி, வேற பொண்ணப் பாத்துக் கல்யாணஞ் செஞ்சு, நல்லாப் பொளச்சுக்கேண்டு சாமியாரு சொன்னாரு.

சாமியாரு பேச்சக் கேட்டுக்கிட்டு வீட்டுக்குப் போறா. வீட்டுக்கிட்டப் போகயில, பொண்டாட்டி, சண்ட புடிக்கிற சத்தங் கேக்குது. அடுத்த வீட்டுப் பொம்பளைகள, முண்ட-தண்ட தேவிடியா-அவங்கூடப் போனவளே, இவங்கடப்போனவளேண்டு பேசிக்கிட்டிருக்கா”. பேச்சுகளக் கேட்டுக்கிட்டே வீட்டுக்குள்ள வந்து நொளயுறா. நொளயயில, இதுவரைக்கும் எங்கடா போன, பொண்டுகா! அவனே, இவனேண்டு புடுச்சுப் பேசுறா.

பேசவும், மனசு பொறுக்க மாட்டாம நிய்யி சண்ட புடிக்கிறது மனவேதனயா இருக்கு. அதுனால, ஒங்கூடக் குடும்ப நடத்துறதக் காட்டிலும் செத்துப் போகலாம்ண்டு நெனக்கிறேண்டு சொன்னா. சண்ட பிடிக்கிற வேகத்ல, சாகணுமா? அப்ப எந்திரி போவோம். நிய்யி சாகுறதப் பாக்கணும். சீக்கிரம் கெழம்புண்டு சொல்றா. கெழம்பி – கூட்டிக்கிட்டுப் போறா. போற வழில, பெரீ….ய கொளம். கொளத்து நெறயா தண்ணி.

அப்ப, கரயில நிண்டுகிட்டுக் கையக் கெட்டச் சொன்னா. கைகளக் கெட்டி, பின்னால போயித்தள்ளச் சொன்னா. பின்னால போயி, வேகமா ஓடியாந்து தள்ளினா, ஓடி வரயில, கொஞ்சம் வெலகிக்கிட்டா.

அவ தண்ணிக்குள்ள விழுந்து உசுருக்குப் போராடிக்கிட்டிருக்கா. தண்ணிக்குள்ள விழுந்து செத்துக்கிட்டிருக்கே, மரம் மாதிரி நிக்றியே மடயாண்டு கத்றா. அம்மா! புண்ணியவாட்டி! நிய்யி எங்கையக் கட்டிப் போட்டுட்டியேண்டு சொன்னர். அதுக்குங்குள்ள தண்ணிக்குள்ள மூங்கிச் செத்துப் போனா.

அந்த வழியா ஒரு வழி போக்க வந்தா. அவுத்து விடச் சொன்னா. கைகள அவுத்து விடவும், பால் வார்த்து தல முழுகிட்டு, ரெண்டாவது பொண்டாட்டி கெட்டி நல்லாப் பொளச்சானாம். ரண்டி முண்ட கூட வாழ முடியுமா? பொம்பள எப்பவும் பொறுமயா இருக்கணும். பொறு – பொறுண்டு இருந்தா போய் மடிய வேண்டியதே.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *