கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 6,502 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாழ்க்கையின் சிக்கலே போன்று தண்டவாளங்கள் பின்னியும் பிரிந்தும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும், அதற்கு அப்பாலும் ஒடுகின்றன. அங்கங்கே ஆப்பு அறைந்தாற் போன்று தந்திக் கம்பங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. இரு மருங்கிலும் வயல்களும், குன்றுகளும், மரங்களும், பாய்ந்து சுழன்று செல்கின்றன. ஒருசமயம் ஆகாயத்தின் முழு நீலம், ஒரு சமயம் அதில் அடித்த பஞ்சைப் போன்ற வெண்மேகம், ஒரு சமயம் அத்தனையையும் மறைக்கும் புகைப்படலம்.

இத்தனைக்குமிடையில், அத்தனையினதும் நடு நாடி போல், அலுப்பற்று ஒரே நிதானமான வேகத்தில், ஒரு ரயில் வண்டித் தொடர், மரவட்டை போல் நெளிந்து நெளிந்து, விரைந்து செல்கிறது.

“ஜன்னலைத் திற:

“இல்லேடா கண்ணா- அங்கே உட்காரப்படாதுடா-“

“மாட்டேன்- அங்கேதான் உக்காரணும்- நான் ஜன்னல் வழியாப் பாக்கணும்- ஐயோ- அம்மா இதோ பாரேண்டிஅக்கா திறக்க மாட்டேங்கிறாடி!”

“சனி தொலையட்டும் திறந்துவிட்டுடேண்டி எப்படி யாவது அழாமலிருந்தால் போறும்-“

“இந்தா தொலைச்சுக்கோ.”

வண்டிக்குள்தான் எத்தனை பேர், எத்தனை விதமாய் உட்கார்ந்து படுத்து, நின்று, குமைந்து வருகின்றனர்! எத்தனை விதமான பேர்கள்- எங்கெங்கிருந்தோ எங்கெங்கேயோ போகிறவர் –

எஞ்சினின் ஊதல் ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு போகிறது. அதுவே ஒவ்வொருவருக்கு அவரவர் மனத்திற் கேற்ப, ஒவ்வொரு விதமாய்ப் படுகிறது. ஒருத்தருக்கு இருப்புக் குதிரையின் உற்சாகமான கனைப்பாயிருக்கிறது: ஒருத்தருக்குப் பின்வரும் விபத்தின் முன்னோலக் குறியாய் மனத்தில் “சுறுக்கென்று தைக்கிறது.

மூணு நாலு பேர் சேர்ந்தாற்போல் ஒரே பெஞ்சில் நெரிகின்றனர்

“என்னப்பா உன்னை நம்பி-“

“என்னத்தே என்னை நம்பி? நான்தான் அப்பவே சொன்னேனே- குதிரை என்னவோ நல்ல குதிரைதான், ஆனால் அந்த ஜாக்கி ஏறினால் கோவிந்தாதான் என்று! போனால் போறது போ- வர சனிக்கிழமை நைஜாம் பிளேட் இருக்கு போ-“

“அடப்பாவி- என்னடா இருக்கு இருக்கு என்கறே? இன்னிக்குப் போனால் வீட்டில் அவள் மூக்கைச் சிந்திச் சிந்திப் போடுவாளேடா! எப்படியடா போய் முழிப்பேன்? அவளுக்கு அப்பப்போ குடும்பச் செலவுக்குக் கொடுக்கிற பணத்தில், அவள் மிச்சம் பிடித்து, கடுகு டப்பாவிலும் மிளகு டப்பாவிலு மாய்ப் போட்டு வைத்திருந்ததையெல்லாம் பீராய்ந்து எடுத்துக் கொண்டு முப்பதை முன்னுறாய்க் கொண்டு வரேன்னு சொல்லி வந்தேன்!”

“என்னடா மூக்காலே அழறே? இங்கே மாத்திரம் வாழறதோ? ஸ்வஸ்திக் வளையல் ஒரு ஜோடி அடித்துப் போன மாலம்தான் அவள் பிறந்த வீட்டில் போட்டார்கள். இன்னிக்குக் கழட்டிக்கொண்டு வந்து இங்கே கப்பங் கட்டி யாச்சு- எல்லாம் இப்படித்தான்-“

“ஒருநாள் வரதுதான், ஒருநாள் போறதுதான்இதெல்லாம் பார்த்து முடியாதப்பா.” –

“என்னப்பா பண்ணுவே- இன்னிக்கு உனக்கு இந்த வேதாந்தமிருப்பது ஒண்ணும் வினோதமில்லை- உன் ஜேபியிலே, லட்சணமாய் நூறு ரூபாய் நோட்டுகள் இரண்டு பதுக்கியிருக்கையோன்னோ!” –

“எனக்கு எல்லாம் ஒண்ணுதான்- இருந்தாலும் ஒரே பேச்சுதான்; இல்லாவிட்டாலும் அதே பேச்சுதான்; என்னவோ- என்னய்யா- என்னய்யா அவ்வளவு அவசரம்? மேலே இடிச்சுண்டு ஒடறே! எதிரே நிக்கறேனே கல்லாட்டமா, தெரியல்லே?” –

“இல்லை, மன்னிக்கவும்- இந்த ஸ்டேஷனில்தான் இறங்கணும்- அடிபட்டுடுத்தா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லேன்னா! பரவாயில்லே, போங்கோ- வண்டி பாஸ்ாயிடுத்தே-“

“டிக்கட், டிக்கட்-“

“இதோ உள் ஜோயியிலே- ஐயையோ!”

“என்ன என்ன?”- வண்டி முழுவதும் ஒரே கலவரம், ஆரவாரம்.

“பைக்குள்ளே தேளா, கொட்டிடுத்தா?” “ஐயையோ! என் காசைக் காணோமே- கடியாரத்தைக் காணோமே- பர்ஸ்- டிக்கட்-“

“அதனால் என்னப்பா, நீதான் சொன்னையே- இருந் தாலும் ஒண்ணுதான், இல்லாவிட்டாலும் ஒண்ணுதான் என்று- எல்லாம் நீ சொல்லிக்கொடுத்த வேதாந்தம்தானே-“

“திருட்டா? யார்? யார்?”

“யார், யார் என்றால் உங்ககிட்டே சொல்லிக்கொண்டு போவானா? எல்லாம் அவரே வழிகூட்டியனுப்பிச்சாரே அந்த ஆசாமிதான் கைவெச்சிருக்கனும் இல்லாட்டா அவனுக் கென்னையா அவ்வளவு அவசரம், வண்டி புறப்படற சமயத்தில் இடிச்சுப் புடிச்சுண்டு இறங்கும்படியா?-“

“இதே மாதிரிதான் ஸார், நான் பத்து வருஷங்களுக்கு முன்னால் விருத்தாசல மார்க்கத்தில் போய்க்கொண்டிருக் கையில்-“

“- டாமிட் டிக்கட் டிக்கட்-“

“ஒருத்தரையும் குற்றம் சொல்வதற்கில்லை. இந்த முழி பிதுங்கும் கூட்டத்தில் அவாளவாள் ஜேபியைப் பற்றியே சந்தேகம் வந்துவிடுகிறது- தன் பையென்று நினைத்து இன்னொரு சட்டையில் கைவிட்டுவிட்டான்! அவ்வளவுதான்.”


வண்டியின் ஊதல் எல்லாரையும் பரிஹசிக்கிறது. விதியின் விலக்க முடியாத கதி போன்றிருக்கிறது, வண்டி ஒரே திக்கில் செல்லும் தீர்மானம்.

“டேய், சொன்னத்தைக் கேளு- நீ ரொம்ப எட்டிப் பாக்கறே- காலை வாரி விட்டுடப் போறது-“

“நீ என் காலைப் புடிச்சுக்கோ- அதைவிட உனக்கு என்னடி வேலை?”

அந்தப் பக்கம் முழுதும் இதைக் கேட்டதும் ஒரே சிரிப்பு.

“பேஷ்- பிழைக்கிற பிள்ளைதான்! என்ன இருந்தாலும் ஆண்பிள்ளைகள் ஆளப்பிறந்தவர்கள்தான்.”

பிள்ளையைப் பெற்றவர்களுக்கு உள்ளுற ஆனந்தம் பொங்குகிறது.

“என்னடா, உனக்கா உனக்கு இன்னமும் சிசுருவுை பண்ணிண்டு இருக்கணுமா! அவளுக்குக் கலியாணம் ஆன அப்புறங்கூட? போனாலும் போறதுன்னு ஒரு வார்த்தை சொன்னையே அதுவும் மாப்பிள்ளையை எதிரே வெச்சிண்டு!-“

சர்க்கரையென்று நினைத்து உப்பை வாயில் வைத்துக் கொண்ட முகம்போல், மாப்பிள்ளை மூஞ்சியில் அசடு வழிகிறது. அவனுக்குக் கலியான வெறி இன்னமும் தணிந்த பாடில்லை- மாமனார் வீட்டில் rேத்ராடனம் போகப் போகிறார்களென்று வீட்டில்கூடச் சொல்லிக்கொள்ளாமல் “டிமிக்கி கொடுத்துவிட்டு வந்திருக்கிறான். அவன் மாமியார் ஏதோ பெரும் வெற்றியைக் கண்டுவிட்டது போல், பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒன்றாய் உட்கார வைத்துவிட்டு மனமகிழ்கிறாள்.

அவனுக்குள் அவனையும் அவளையும் சுற்றித்தான் உலகமே சுழல்வதாய்த் தியானம். மணலில் தலையைச் செருகிக்கொண்ட நெருப்புக்கோழிபோல், ஒருவரும் தன்னைப் பார்க்கவில்லையென்று அவன் நினைத்துக்கொண்ட போதெல்லாம், அவள் தோள் பக்கமாய்க் கையைப் போடுகிறான். இந்த விரசத்தில் தட்டும் வெறுப்பில் அவளுக்கு முகம் சுளிக்கிறது. அதே சமயத்தில் ஒரு திருட்டுச் சந்தோஷமும் அந்த வெறுப்பில் கலந்திருப்பதால், சலிப்புக் கரைந்து முறுவலாய் மாறுகிறது. இப்படியே அவள் பக்கத்தில், அவள் புதுப்புடவை சலசலத்துக் கொண்டு, உடல் பட்டதும் படாததுமாய் இருவரும் உராய்ந்து கொண்டு, இப்படியேஇந்த ரயில் எப்பொழுதுமே எங்கும் நிற்காமல் போய்க் கொண்டே இருக்காதா?


“இந்த ரயில் எப்போதான் நிற்குமோ தெரியவில்லை!-”

“ஏன் இப்படிக் கரிச்செடுக்கறேள்?. எப்பவோ ஒரு தடவை சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்தாப் போலே லீவு வரதே! வேளா வேளை எந்தெந்த ஊரிலே யிருந்தோ பெருமாளைச் சேவிக்கணும்னு வராள்- நாம் இப்படிப் பக்கத்து ஊரிலேயிருந்துண்டே ஒரு தடவையாவது பார்க்காமலிருக்கிற-தான்னு கூப்பிட்டால்-“

“இதோ பார்- எனக்கு எங்கேயாவது போய்த் தலையை சாய்ச்சால் போறுமென்னிருக்கு. இத்தனை குழந்தையும் குட்டியும், மூட்டையும் முடிச்சுமாய்ப் போய், இந்தப் புண்ணியத் தைச் சம்பாதிச்சுண்டு வரணும்னு எனக்கு ஆசையே இல்லை.”

“உங்கள் கூட்டமே நாஸ்திகக் கூட்டம்தானே- உங்களுக் கெல்லாம் ஒரே ஆசைதான்- புகையிலையைப் போட்டுண்டு கண்ட இடத்தில் துப்பவும் சீட்டாடிண்டு இருக்கவுமேயொழிய”

“அம்மா, தாயே-“

“நீங்கள் என்ன வேணுமானாலும் சொல்லலாம். நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் தாய்தான்- நானும் கலம் பெத்தாயிடுத்து!”

“ஐயோ. நம்ம வமிசாவளியெல்லாம் இங்கே வந்து கூடவா படிக்க வேண்டும்!”

“ஏன் இப்படி-” இல்லை, மற்றதொன்றும் கேட்கவில்லை. வண்டியின் ஊதல் எல்லாச் சத்தத்தையும் அடக்கிவிடுகிறது.


தடக்-தடக்-தடக்

வண்டி விழுங்க விழுங்க, தண்டவாளம் திரெளபதியின் துகில்போல் நீண்டுகொண்டே போகிறது. அது வளைந்து சுழன்று மறுபடியும் வெறித்துச் செல்லும் ரீதியைப் பார்க்கையில் அதுவும் காலத்தைப்போல் எல்லையே அற்றது போலிருக்கிறது. எங்கெங்கெல்லாம் எப்படியெல்லாம் போகிறது! ஒர் இடத்தில் தாபத்தால் உடைந்த இதயம் போல், பூமி பளார் பளார் என்று அங்கங்கே, தண்ணீரே காணாமல் வெடித்திருக்கிறது. இன்னோர் இடத்தில், துக்கம் நிறைந்த உள்ளத்தினின்று பிழியும் கண்ணிர்போல் சதுப்பு நிலத்தில் ஜலம் கசிகிறது. இன்னொரு சமயம், பாலத்தினடியில் இரு மருங்கிலும் கண்ணாடித் தகடு வார்த்தாற்போல் ஏரியில் தண்ணீர் விளிம்பு கட்டி அசைவற்று நிற்கிறது.

ஒரு சமயம், கோபத்தில் வெதும்பும் மனம்போல், வானத்தில் மேகங்கள், கறுத்தும் வெளுத்தும் புழுங்குகின்றன. இன்னொரு சமயம் ஆகாயம் பிரேதம்போல் ஒரே நீலமாய்ப் பூரித்திருக்கிறது.

ஒரு சமயம், மாலை வேளையில் மலரும் மலர்களின் மணம், மனத்தை மயக்குகிறது. மறுசமயம் ஜதையில் வேகும் பிணத்தின் நிணம் மூக்கைப் பொசுக்குகிறது. வண்டி ஒரு மூலையில் திரும்பியதும் அதோ சவுக்குத் தோப்புக்கப்பால், சுடுகாட்டினின்று எழும் ஜ்வாலைகளே தெரிகின்றன.

வேளை முதிர முதிரக் கவியும் இருளில், ஒரு விளக்கு ஒளி மினுக்கென்று தோன்றுகிறது. கண்மூடி வழிகாட்டும் லட்சணம் போல், எட்டியும் கிட்டியும் நிலையற்று எரிகிறது.

ரயிலில் பெஞ்சோரத்தில் ஒருத்தி இத்தனை பேரிடை யிலும் தன்னந்தனியாய்ப் பதுங்கிக் கிடக்கிறாள். பாம்பின் கண்பட்ட இரைபோல் பார்வை நிலை தவறி, ஒரே குத்தலில் விறைத்திருக்கிறது. மார்த்துணி சரிந்திருப்பது கூட அவளுக்குத் தெரியவில்லை. வண்டி அலறும் போதெல்லாம். அவள் கைகள் அவளை அறியாமலே, அடி வயிறைப் பிட்டாய்ப் பிசைகின்றன.

அவள் போய்ச் சேரும் இடத்தில் என்ன காத்திருக்கிறதோ அவளுக்கு! வண்டி இவ்வளவு சீக்கிரம் பிரயாண முடிவை நெருங்குகிறதே எனும் பயங்கரம் ஒரு பக்கம், ஐயோ! இந்தச் சங்கடத்தைச் சகிக்க முடியவில்லையே! ஒரே வழியாய்ச் சுருக்கப் போய்ச் சேர்ந்துவிட மாட்டோமா!” எனும் உள்ளம் பதைப்பில், உயிரே ஊசலாடுகிறது.

“ஐயோ நான் படும்பாடு சிவனே- உலகோர், நவிலும் பஞ்சுதான் படுமோ- சொல்லத்தான் படுமோ!-“

“இதென்ன கஷ்டம்! நாம் இடமில்லாமல் படும் கஷ்டம் போதாதென்று பிச்சைக்காரர்களின் உயத்திரவம் வேறேயா? இந்தக் கும்பேனிக்காரன் எல்லாத்துக்கும் ஒரு வரி போட றானே இவாள் மேலே ஒண்னு போடப்படாதோ?”

“ஏன் ஸ்வாமின்னு. உங்களுக்கு அவ்வளவு தயாளம்: அவன் வயிற்றுக் கொடுமை; ஏதோ கத்திவிட்டுப் போறான்.”

“ஏதேது அவனுக்குக்கூட வராத கோபம் பெரியவாளுக்கு வராப்போலே யிருக்கு பெரியவா ஏதேனும் வாரிசோ?”

“வாரிசு என்ன சுவாமி? பார்க்கப் போனால் உலகத்திலே எல்லாருமே பிச்சைக்காராள்தானே! நான் ஒரு பிச்சைக்காரன், நீரும் ஒரு பிச்சைக்காரன்.”

“என்னடா சொன்னாய் என்னை! நீ வேணுமானால் பிச்சைக்காரனாயிரு- என்னை- பல்லை-“

“சீச்சீ”

“சூ-சூ-” – இது ஒரு சமாதானக்காரர்.

வண்டி முழுதும் ஏகக் கூச்சல் களேபரம்.

‘தடக்-தடக்-தடக்’- இது வண்டி

“என்ன சிரிக்கிறேள்?”

“என்னத்துக்கு அழவேண்டும் என்றுதான் சிரிக்கிறேன்-“

“என்ன புதிர் போட ஆரம்பிச்சுட்டேளே?”

“புதிரேயில்லை. எல்லாம் வெட்ட வெளிச்சம்தான். எல்லாம் கண்ணெதிரே நடக்கிறதுதான். ஒரு சிமிழுக்குள்ளேயே உலகம் அடங்கியிருக்கிறது. உனக்கு ஒரு பெரிய விந்தையா யில்லையா?-“

“இந்த மாதிரி எல்லாம் பேசினால் எனக்குப் புரிஞ்சுடுமோ?-“

“சொல்கிறேன், கேள்; அக்காவை விரட்டிக்கொண்டு ஜன்னலின் வெளியே வேடிக்கைப் பார்க்கும் சின்னப் பையனாய் நான் இருந்திருக்கிறேன். இன்னமும் மாப்பிள்ளைக் கருக்கழியாமல், வண்டியே தனக்காகத்தான் ஒடுகிறதென்று நினைத்துக்கொண்டிருக்கும் வயசுப் பிள்ளையாகவும் இருந் திருக்கிறேன். ஏண்டாப்பா இத்தனை பெரிய குடும்பத்தைப் படைத்தோம் என்று ஏங்கும் அந்தச் சம்சாரியாகவும் இருந்திருக்கிறேன்-“

“உங்கள் எண்ணத்தின் கடுப்புத்தானோ என்னவோ அஞ்சும் பெத்து, வளத்து வயசு வந்த பிறகு ஒண்ணொண் ணாய்ப் பறிகொடுத்தோம்!” –

“அதுவும் சரிதான்- நீயும் ரொம்பக் கஷ்டப்பட்டு விட்டாய் இல்லையென்றா சொன்னேன்? ஏதோ நீ பட்டதில் பாதியாவது நான் பட்டிருக்க மாட்டேனா? உனக்கு இருந்தது எனக்கும் இருந்திருக்காதா?-“

“இப்பொ என்னத்துக்கு அதெல்லாம்?-“

“அதைத்தானே சொல்ல வந்தேன்!- உப்புமில்லை, புளியுமில்லாததற்கெல்லாம், உறுமிக்கொண்டும், கருவிக் கொண்டும், குலாவிக்கொண்டும், கொக்கரித்துக்கொண்டும் இருந்திருக்கிறோம்- இருக்கிறோம்- ஆனால் இப்போ…”

“என்ன, டக்குனு நிறுத்திட்டேள்?-“

“இப்போது நமக்கும் வயசாகிவிட்டது. நீ முந்திக் கொள்கிறாயோ, நான் முந்திக்கொள்கிறேனோ- எல்லாம் பட்டாய்விட்டது. சந்தோஷப்படவும் அலுப்பா இருக்கிறது. துக்கப்படவும் தெம்பில்லை. என்னவோ போகிறோம். வருகிறோம். எங்கே போகிறோம், எதற்காக என்னும் அக்கறையும் அதிகமில்லை. இந்த மாதிரி சமயங்களில்உலகத்தைவிட்டு நாம் ஒதுங்கி நின்று, அதன் வேடிக்கையைக் கவனிக்கும்போது மனத்திற்கே ஒரு நிம்மதி பிறக்கிறது. ஏதோ சந்தேகம் தெளிந்தாற்போல் ஒரு கனம் குறைகிறது- இதைச் சரியாய் வெளியில் சொல்லக்கூட முடிகிறதில்லை. மனதுக்கு மனதுதான்.

“அதே சமயத்தில் உலகத்தில் இருக்கும் சுகதுக்கங்களுக்கும் குறைவில்லை. உலகம் மாத்திரம் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. காலமும் கடந்துகொண்டிருக்கிறது, இத்தனை யையும் ஏந்திக்கொண்டு இந்த வண்டி போகிறமாதிரி. பார், இதுவும் உலகத்தின் நடுநாடி போல், அடித்துக்கொள்கிறது ஒரே நிதானமாய் -தடக்-தடக்-“

தடக்-தடக்-தடக்-தடக்-

– ஜனனி (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூன் 1992, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *