யேசுநாதர் என்ன சொன்னார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 5,016 
 
 

வருடப் பிறப்புக்கு ஒரு வாரம் தான் இருந்தது. நான் பதுளையில் இருந்து புறப் பட்டேன். வழியில் சில வேலைகளை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் போக வேண் டும் என்பது தான் எனது திட்டம்.

ஆனால்…

YesunatharEnnaSonnarPicசேகுவேரா இயக்கத்தினர் அரசாங் கத்துக்கு எதிராகத் திடீர்த் தாக்குதல்களை மேற்கொண்டதன் விளைவாக நான் மத்திய மாகாணத்தில் மாட்டிக்கொண்டு விட்டேன். போக்கு வரத்து வச திகள் எதுவும் கிடையாது. வானொலியில் நிமிடத்துக்கொரு அறிவித்தல் வெளியாகிக் கொண் டிருந்தது. ஊர்மக்களின் வாய் களில் பிரசவமாகி விசுவரூப மெடுத்து வானத்தையும் பூமியை யும் தொட்டுக் கொண்டு நின்ற வதந்திப் பிசாசுகள் திகிலூட்டித் திணறடித்தன. போதாதற்கு ஊரடங்குச் சட்டம் வேறு.

எனக்கு எங்கே போய் யாரு டைய காலில் விழுந்து எனது ஆறடி உடம்பையும் ஒளித்துக் கொள்ளலாம் என்று தெரிய வில்லை. ஒரே ஏக்கம்! ஒரே கலக் கம்! ஒரே குழப்பம்!

“இப்படியே நடு ரோட்டில் நின்று தபசிருந்தீரானால், ராணுவக்காரன் தரிசனம் தந்து, உமது தபசை மெச்சிக் கயிலாய வாசலை அகலத் திறந்து விட்டு விடுவான். இதோ இந்தப் பக்கமாக கால் மைல் தூரத்தில் சாது சொக்கலிங்கத்தின் ஆசிரமம் இருக்கிறது. அங்கே போனால் இராப்பொழுதைக் கழித்து விடலாம். மிச்சத்தை நாளைக்கு யோசிக்கலாம்” என்று ஒரு நண்பர் இலவச ஆலோசனை வழங்க முன் வந்தார்.

அதற்கு மேலும் யோசித்துக் கொண்டிருக்க எனக்கு அவசாசம் இல்லை. நான் ஆசிரமத்தை நோக்கி நடந்தேன். யமதர்மராஜன் அன்றைக்கு எனது பைலை’ எடுத்து கணக்கு முடித்து வைத்திருக்கவில்லை. அதனால் நான் பத்திரமாக ஆசிரமத்தை அடைந்து விட்டேன்.

”அடே , சொக்கலிங்கம் நீயா? நீ ஏன் சும்மா இருக்கமுடியாமல் இப்படிச் சாதுவாகப் போனாய்? உனக்கு அப்படி என்னவந்தது?” என்று தொண்டை வரைக்கும் வந்து விட்ட வார்த்தைகளைத் தலையில் அடித்துத்தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பி விட்டு, ஒன்றுமேயில்லாத ஒரு சங்கதிக்குள்ளே இந்த உலகமே அடங்கியிருக்கிறது என்ற தற்கால நாகரீகப் போலித்தனத்தின் சூனியத்து நிழலுக்குள்ளே நான் நின்று கொண்டு, ”சாதுவுக்கு என்னைத் தெரிகிறதோ?” என்று பவ்வியமாகக் கேட்டேன்.

என்னைப் பொறுத்தவரையில் அவன் – மன்னிக்கவும் – அவர் சாது என்ற சட் டையைக் கழற்றி மடித்து வைத்துவிட் டுப் பழைய சொக்கலிங்கமாகவே பழகினார்.

சொக்கலிங்கம் என்னோடு ஒன்றாகப் படித்தவர் – அவர் உத்தியோகம் பார்க்கத் தொடங்கிய பின்னரும் எங்களு டைய தொடர்பு கொஞ்சக் காலம் இருந்தது. பிறகு அவர் ஒரு நல்ல குடும்பத்திலே மனோன்மணி என்ற ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருந்தார். நான் இரண்டொரு தடவை அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். மனோன்மணியும் அடக்க ஒடுக்கமான நல்ல குணங்கள் நிரம்பிய பெண்ணாகத்தான் எனக்குத் தோன்றினாள். பிறகென்ன வந்தது?

சொக்கலிங்கத்தை இங்கே எல்லோரும் சாது என்று தாராளமாக அழைக்கிறார்கள். என்ன காரணமாக அப்படி அழைக்கிறார்களோ தெரியாது. அவருக்கு இப்பொழுது வயது நாற்பதுக்கு மேல் இருக்கவேண்டும். அவர் வாழ்ந்து வந்த வீட்டையும் – அதாவது ஆசிரமத்தையும், அவருடைய போக்கு வாக்கு பேச்சு மூச்சு ஆகியவற்றையும் கொண்டு என்னால் சில விஷயங்களை அனுமானிக்க முடிந்தது.

அங்கே பத்துப் பதினைந்து சிறுவர்கள் இருந்தார்கள். அவர்களெல்லாம் பக்கத்துக் கிராமங்களிலிருந்து நகரத்துக் கல்லூரிகளில் படிப்பதற்காக வந்து தங்கியிருக்கிறார்கள். அந்த பட்டும் தான் சங்கதியென்றால் அதை ஓர் ஆசிரமம் என்று சொல்லாமல் ஒரு விடுதிச்சாலை என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும், ஆனால் சொக்கலிங்கம் சில சமயங்களில் கூட்டங்கள், பஜனைகள், பிரார்த்தனைகள் ஆகியவற்றையும் நடத்துவதுண்டாம். இடையிடையே இரண்டொரு அனாதைச்சிறுவர்களும் வந்து இருந்துவிட்டு அவர்களுடைய வேலைகள் முடிந்ததும் – அல்லது , சொக்கலிங்கத்தின் வேலைகள் முடிந்ததும் போய் விடுவார்கள். இவைகள் தவிர, அதை ஓர் ஆசிரமம் என்று சொல்வதற்கு ஒரு பலமான ஆதாரமும் உண்டு. ஆமாம், வாசலில் ஒரு பெரிய பிளாஸ்ற்றிக் ‘ பெயர்ப் பல – கையும் தொங்குகின்றதே!

“யேசுநாதர் என்ன சொன்னார்?’ என்று சொக்கலிங்கம் என்னைக் கேட்டார்.

‘என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே” என்று நான் அவரையும் அவருடைய கேள்வியையும் புரிந்து கொள்ளாமல் வேறு ஏதோ நினைவாகச் சொல்லிவிட்டேன்.

‘மடையா! யேசுக்கிறிஸ்து பெருமான் உலக மக்களுக்கு என்ன சொன்னார்?” என்று அவர் என்னைத் திருப்பிக் கேட்டார்.

“அவரா? எதையாவது சொல்லியிருப்பார். அதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா” என்று சொல்விவிட்டு, நான் எப்படி யாழ்ப்பாணம் போய்ச் சேர்வது என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

“வலது கையால் செய்யும் தர்மத்தை இடது கை அறிய வேண்டாம் என்று அந்த மகான் சொன்னார். ஓர் ஏழைக்கு வாழ்வளிக்க நான் முயன்றேன். அதை மனோன்மணியிடம் சொன்னால் கூட மாசு பட்டுவிடும் என்று எனது நெஞ்சுள்ளேயே வைத்திருந்தேன். அது எனது வாழ்வைச் சீர்குலைத்து ஊரை விட்டு உறவை விட்டு இங்கு வந்து ஆசிரமம் அமைத்துக்கொண்டு வாழ வைத்துவிட்டது . இல்லை …………….. சீர்குலைத்தது என்று கூடச் சொல்ல முடியாது தான் …………. என்று இழுத் தார்.

சொக்கலிங்கம் கூறிய விபரங்கள் சில இடங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல், கோர்வையற்று, முரண்பாடாகக் காணப்பட்டாலும் நான் எனக்குத் தெரிந்தவரையில் அவற்றை ஒழுங்கு படுத்திப் பார்த்தேன். சில இடைவெளிகளை எனது ஊகத்தினால் நிரப்ப வேண்டியிருந்தது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவன் காதைத் திருகி வாக்கியங்களில் உள்ள கீறிட்ட இடங்களை நிரப்பக் கற்றுக்கொடுப்பதிலும் ஒரு தீர்க்க தரிசனம் உண்டோ ?

***

சொக்கலிங்கம் உத்தியோகம் பார்த்த காலத்தில் ‘கோவிந்தன் கோவிந்தன்’ என்றொருவன் அவனுடைய வேலைத் தலத்தில் காவற்காரனாக வேலை பார்த்து வந்தான். கோவிந்தனுக்குச் ‘சொக்கலிங்க சுவாமிகள்’ தான் வாலாயம். ஒவ்வொரு மாதத்திலும் பிற்பகுதியில் அவன் சொக்கலிங் கத்திடம் தனது கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி ஏதாவது ஹெல்ப்’ கேட்க வேண்டியிருந்தது. சொக்கலிங்கமும் அவ்வப்போது நாலோபத்தோ கொடுத்து உதவுவது வழக்கம். அப்ப டிக் கொடுக்கப்பட்டவை சில சமயங் களில் திரும்பி வரும். சில சமயங்களில் திரும்பி வராமலும் போய்விடும்.

கோவிந்தனுடைய மனைவி வெகு காலத்துக்கு முன்னரே இறந்துவிட்டாள். கோவிந்தன் தனது ஒரே மகளான வசந்தியை யாராவது ஒருவனுடைய கையில் பிடித்துக் கொடுத்து விட்டால், தனது மிகப் பெரிய பணி ஒன்று முடிந்து விடும் என்று எண்ணிக் கொண்டிருந்தான். இதைப் பற்றிச் சொக்கலிங்கத்திடமும் பல தடவைகள் சொல்லியிருக்கிறான்.

YesunatharEnnaSonnarPic2ஒரு நாள் கோவிந்தன் காய்ச்சலோ கறுப்போ என்று சொல்லிப் படுத்து விட்டான். திடீரென்று தனக்கு ஒரு நல்லாங்கு பொல்லாங்கு நேர்ந்து விட்டால், வசந்தி தனித்துப்போவாளே – தவித்துப் போவாளே என்று ஏங்கினான். இப்போதைக்கு அவளை ஒரு பெண்கள் விடுதியில் சேர்த்துவிட்டால், தான் ஆஸ்பத்திரியிலாவது போய்ப் படுத்திருந்து நோயுடன் போராடலாம் என்று எண்ணினான். தனது முடிவைச் சொக்கலிங்கத்துக்குச் சொல்லியனுப்பினான்.

சொக்கலிங்கம் வீட்டுக்கு வந்து கோவிந்தனைப் பார்த்தார்; பிறகு வசந்தியையும் பார்த்தார்.

வசந்திக்குப் பதினாறு பதினெட்டு வயதிருக்கும். அங்க , உருவ அபுைமப்கள் வஞ்சகமில்லாமல் வளர்ந்து. உருண்டு திரண்டு குளிர்ச்சியாக இருந்தன . கண்களில் ஒரு கவர்ச்சி குடியிருந்தது. முகத்தில் ஒரு மலர்ச்சி கொழுவிருந்தது.

சொக்கலிங்கம் பிரயாசைப்பட்டு வசந்தியை ஒரு விடுதியில் சேர்த்துவிட் டார். அதற்கான செலவையும் மாதா மாதம் செலுத்தி வந்தார். அனாதரவுப் பட்ட ஏழைகளுக்கு இத்தகைய உதவிகளைச் செய்வது தான் உலகத்திலேயே சிறந்த தர்மம் என்று சொக்கலிங்கம் தனது நெருங்கிய நண்பர்களிடம் சொல்லிக்கொண்டார்.

வசந்தி தான் விடுதியில் நிம்மதியாக இருக்கிறாளே , சொக்கலிங்கம் தான் எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொள்ளுகின்றாரே. தனது சுமை தான் நீங்கிப்போய்விட்டதே என்று அந்த அப்பாவி கோவிந்தன் எண்ணினானோ , என்னவோ ! அவன் ஒரு நாள் சந்தோஷமாகச் செத்துப்போய்விட்டான்.

வசந்தியைப் பராமரிக்க வேண்டிய முழுப் பொறுப்பும் சொக்கலிங்கத்தின் தலையில் வந்து விடிந்தது. அதையிட்டுச் சொக்கலிங்கம் கொஞ்சமும் கவலைப் படவில்லை. முழு மனத்தோடு. இதய பூர்வமாகச் செய்யும் தர்மமே மிகச் சிறந்த தர்மம் என்பது தான் அவருடைய சித்தாந்தம் ஆயிற்றே!

வசந்தி தொடர்ந்து விடுதியில் இருக்க முடியாத ஒரு நெருக்கடி வந்தது. சொக்கலிங்கம் வசந்தியை அழைத்துப்போய் ஒரு நண்பரின் வீட்டில் விட்டு வைத்தார். அதிலும் சில சங்கடங்கள் தோன்றின. இறுதியாக அவர் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் வசந்தியை வாழவைத்து, வேண்டிய வசதிகளெல்லாம் செய்து கொடுத்து, அடிக்கடி போய்ப் பார்த்து வந்தார்,

இந்தச் சமுதாயத்தில் ஒரு காரியம் நடைபெற்றால், அது சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும், அதற்குச் சாதகமாக நாலுபேரும் பாதகமாக நாலுபேரும் கிளம்பி , அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் கொஞ்சம் கொஞ்சம் கற்பனையைக் கரைத்துப் பூசி ரகசியம் ரகசியமாகக் கதைத்துப் பேசி ரசித்துக் கொண்டிராவிட்டால் . சிருஷ் டிகளுக்கெல்லாம் தலைமை தாங்கும் இந்த மனிதனுடைய மண்டை வெடித் துவிடும் என்று எப்பொழுதாவது. யாராவது. ஏதாவது சாபம் கொடுத் திருக்கிறார்களோ என்ற விபரம் சொக் கலிங்கத்துக்குத் தெரியாது.

சொக்கலிங்கத்தின் மனைவி மனோன் மணியின் காதுகளில் செய்திகள் சிறிது சிறிதாக விழ ஆரம்பித்தன. அவள் தனக்கு நம்பிக்கையான இரண்டொருவரை அனுப்பிப் ‘புலன் விசாரணை’ செய்வித்தாள்.

ஒரு நாள் சொக்கலிங்கம் வீட்டுக்கு வந்த பொழுது. மனோன்மனி கோடு கிழித்துக் கோட்டிலே நிறுத்தி அவரைக் கசக்கிப் பிழிந்து முறுக்கி உதறிப் போட்டுவிட்டாள்.

சொக்கலிங்கம் எத்தனையோ கதை களைச் சொன்னார். எத்தனையோ கார ணங்களைச் சொன்னார். எத்தனையோ சமாதானங்களைச் சொன்னார். அவள் எடுபடவில்லை.முடிவாக அவர் துண்டை தோல் போட்டுக்கொண்டு ‘பரதேசம்’ போய்விட்டார்.

இந்தச் சொக்கலிங்கத்தின் சம்சாரத்துக்கும் நமது திருநீலகண்ட நாயனாரின் ‘சம்சார’த்துக்கும் ஏதாவது மும்மைத் துவந்தம் இருந்திருக்குமோ?

***

“பட்டணத்தார் என்ன பாடி யிருக்கிறார். தெரியுமா?” என்று சொக்கலிங்கம் என்னைக் கேட்டார்.

“தெரியாது” என்று சொல்லிவிட்டு நாளைக் காலையில் இங்கிருந்து எப்படியாவது கண்டிக்குப் போய்விட்டால், அங்கிருந்து அனுராதபுரம் போய், வவுனியா போய் யாழ்ப்பாணம் போய் விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். நான் எப்படியும் வருடப் பிறப்புக்கு முன்னர் வீட்டுக்குப்போக வேண்டுமே!

”பெண்களை உரித்துப் பிடுங்கி உண்மையை அப்பட்டமாகப் பாடியிருக்கிறார். சுருக்கமாக அவர் பெண்களை மாயப்பிசாசுகள் என்று சொல்லிவிட் டார், போதுமா?” என்று கேட்டார் சொக்கலிங்கம்.

”பட்டணத்தாரையும் அவருடைய காலத்தையும், நோக்கத்தையும். வாழ்க்கை முறையையும் அலசி ஆராய எனக்கு அறிவு போதாது. ஆனால் நான் அறிந்த வரையில் இரண்டு வகையானவர்கள் இன்றைக்குப் பெண்களைப் பொதுவாகத் திட்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன் நான்.

“யார் யார்?”

“ஒரு பெண்ணிடம் எதையாவது எதிர்பார்த்து ஏமாந்து போனவனும் திட்டுகிறான். ஒரு பெண்ணை ஏமாற்ற நினைத்து, அங்ஙனம் ஏமாற்ற முடி யாமல் ஏமாந்து போனவனும் திட்டுகிறான். ஆனால் ஒருவன் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக ஒரு சமுகத்தையே திட்டுவது சரியென்று எனக்குத் தோன்றவில்லை.”

சொக்கலிங்கம் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். சில நிமிடங்கள் எங்கள் மத்தியில் மௌனம் நிலவியது. பின்னர் அவரே. ‘நமக்கு எதற்கு வீண் ஆராய்ச்சி. வாருங்கள் சாப்பிடலாம்” என்று எழுந்தார். எதிர்ப்படை பின் வாங்குவதால் தன் படை முன்னேறுகிறது என்பது சில சமயங்களில் சரியாக இருக்கலாம்.

உள்ளே மண்டபத்தில் ஒரு புற்பாய் போடப்பட்டிருந்தது. சொக்கலிங்கமும் நானும் அக்கம் பக்கமாக உட்கார்ந்தோம். ஒரு பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி தண்ணீர்ச் செம்பைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, எங்களுக்கு முன்னால் ஒவ்வொரு தலைவாழையிலையைப் போட்டாள்.

எனக்கு ஒரு சந்தேகம்.

ஊரில் உலகத்தில் ஒவ்வொருவனும் பிறரைப்பற்றிக் கவலைப்படாமல், தன் தன் நலம் கருதி எத்தனையோ காரியங்களைச் செய்துவிட்டுப் போகிறான். அதனால் பிறருக்கு நன்மையும் ஏற்படலாம், தீமையும் ஏற்படலாம். ஆனால் –

யேசுநாதருக்கும் பட்டணத்தாருக்கும் முடிச்சுப் போட்டு ‘சாது’ என்ற பட்டத்தால் போர்த்து மூடி வைத்து விட்டால் –

மணலுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ளும் தீக்கோழி உலகத்தின் கண்களில் இருந்து மறைந்து விடுகின்றதா?

ஒரு இளம் பெண் சோற்றுப் பாத்திரத்துடன் வந்தாள். அவள் ‘மூக்கும் முழியுமாக இருந்ததோடு சில தங்க நகைகளையும் அணிந்திருந்தாள். கழுத்தில் மாங்கல்யமும் இருந்தது.

எனது நெஞ்சில் ஓர் உண்மை ‘பளிச்’ சென்று தெரிந்தது. மனோன்மணி பிள்ளைகளுடன் எங்கே இருக்கிறாளோ? என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறாளோ?

பாவம்.

– அஞ்சலி மாத சஞ்சிகை – ஜூன் 1971

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *