கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 7,807 
 
 

சுப்ரமணியசாமி என்ற தன் பெயரையும், முழு முகவரியையும் லெட்ஜரில் எழுதி கையெழுத்திட்டு விட்டு, லாட்ஜ் பையன் திறந்துவிட்ட அறைக்குள் நுழைந்தபோது –

அவனுள் ஓர் இறுக்கம். மனதில் பதற்றம். ஒரு குற்ற உணர்ச்சி.

ஷர்ட்டைக் கழற்றி ஹாங்கரில் மாட்டி, கைலியை எடுத்து உடுத்திக் கொண்டு, பேண்ட்டை உருவினான். கட்டிலில் சாய்ந்தான். மின் விசிறி காற்றின் இரைச்சல். ‘யாராவது பாத்திருப்பார்களோ’. உள் தடுக்கம்.

இந்த லாட்ஜ், அப்படிப்பட்ட ‘ஒரு மாதிரி’. இவனும் அதே ‘ஒரு மாதிரி’, சபலத்தில், வங்கியில் வேலை முடிந்த கையோடு ப்ரீஃப் கேஸோடு இங்கு வந்து விட்டான். வீட்டுக்குப் போகவில்லை. அவள் இரண்டாவது பிரசவத்திற்காக வயிற்றைத் தூக்கிக்கொண்டு போயிருக்கிறாள்.

அவள் இல்லாத வெறுமை. வீட் டுக்குள் வந்து மோதுகிறது. தனிமை உணர்வின் பாலையை சகிக்க முடிய வில்லை . சுவரின் சிறு பூச்சிகளின் மெல்லிய முணுமுணுப்புகள் கூட இவனுள் பெரும் சலசலப்பை ஏற் படுத்துகிறது. சமூக முகத்துக்குப் ஆதிமனிதன் ஆரவாரம் செய்து எழுத்து விடுகிறான்.

ஆதி! ஆதிகால மனிதன்! ஆடையில்லா – தடைகளில்லா வன உலகம். ஆணும் பெண்ணும் ஒருடலும் ஒருயிருமாய் – யாருடனும் யாருமாய் – பின்னிப் பிணைந்து மனம் லயிக்க எந்த வரம்புமில்லை. ஒழுக்கம் என்ற சுவர் இல்லை. நாகரீகம் என்ற பாவலா இல்லை. சமூக மரபு வங்கிற இடைஞ்சல் இல்லை. முடிவில்லா வனத்தில் – எல்லை வில்லா சுதந்திரத்துடன், எல்லாப் பெண்களும் எல்லா ஆண்களும், பூக்களும் ஈக்களுமாய்…

ஆ! அது எத்தனை அற்புதம். அந்த வனச்சுதந்திரம். பறவைகளின் ஆகாயர் சுதந்திரம்.

‘காஃப்கா’வின் ‘விசாரணை’ நாவல் மனசுக்குள் வருகிறது. வழக்கு விஷயமாக அலைகிற அதன் கதாநாயகன், எதிர்ப்படுகிற எல்லாப் பெண்களிடமும் இளிக்கிறான். முத்தமிடுகிறான். உறவு கொள்கிறான். அதுகளும் ‘சட் சட்டென்று இசைந்து விடுகின்றன. துளிக்கூட மறுப் பில்லாமல்.

காஃப்காவின் மன உலகமும் சுலபமான உலகம். காட்டுமிராண்டிக்குரிய சுதந்திரமான உலகம்.

சுழலும் விசிறியின் சிறகுகளையே பார்த்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தவன், கதவு தட்டப்படும் சத்தத்தில் திடுக்கிட்டுப் போனான். பதற்றத்தில் மனம் படபடத்தது.

“சார், காபி வேணுமா?”

ஹெப்பா! நீதானா?

“ம்… கொண்டா”

வயிற்றைத் தூக்கிக்கொண்டு மனைவியே வந்து கதவின் மறைவில் நிற்பதாய்…. ஒரு பிரமை.

“வெட்கமில்லாமல் தரங்கெட்டுப்போய் இப்படி அலையுறியே…நீயெல்லாம் படிச்சவன்தானா?”

தெரியும் புருவங்களோடு அவனது மாமனார் அதட்டலாய் திட்டுகிற மாதிரியோர் உணர்வு, சமையலறையில் மாமியார் வெறுப்போடு காறித்துப்புகிற சத்தம். ஏளனமாய் பார்வையில் எற்றி விளையாடுகிற சக ஊழியர்கள். சே!

ஒழுக்கம்… மரபு… பண்பாடு… மனைவி, குடும்பம். சமூக உறவு, மனித நாகரீகம், மதிப்பீடு எல்லாமே போலிகள். வாழ்கிற வாழ்க்கையை அபத்தமாக்குகிற மனிதப் போலிகள். சுதந்திரத்தைத் தின்று வளர்ந்த ராட்சஸப் போலிகள். மனிதனை மடக்கி உருட்டி கட்டப்பட்ட கயிற்றுப் பின்னல்கள்.

ஸ்ட்ரக்ச்சுரலிஸம் சொல்வதுதான் சரி.

இறுகிப்போன நிறுவனங்களைத் தகர். குடும்பம் என்ற பந்தச் சுமைகளை உதறு. ஒழுக்கம் சார்ந்த சகல கட்டுப்பாடுகளையும் அறுத் தெறி. புனிதம் என்று கும்பிடப்படும் சமூகத்தின் எல்லா அமைப்புகளையும் சர்வநாசம் செய், சுதந்திரமாகு உள்ளும் புறமுமாய் தன்னந்தனியனாகு மண்ணின் சுகம் முழுவதையும் காட்டுமிராண்டியின் மூர்த்தன்யத்துடன் ஆக்ரமி….

காபி குடித்தவுடன் சிகரெட் வேண்டும். நல்லவேளை, பையில் இருந்தது.

சேலை உடுத்திய. ‘அது’ வர நேரமாகும்.

அதுவரை?

ப்ரீஃப் கேஸிலிருந்து மூன்று புத்தகங்களை எடுத்தான். ஒன்று, ஆல் பர்ட் காம்யூ எழுதிய ‘அந்நியன்’. மற்றது இரண்டும் இவன் எழுதியது. சுப்ரணிஸா என்ற புனைப் பெயரில்.

‘என் தொலைந்து போனவர்கள்’ கவிதைப் புத்தகம். ‘இஸங்களின் நெரிசலும், 32 இஞ்ச் ப்ராவும்’ என்ற நாவல் ஒன்று. இந்த இரண்டையும் புத்தகமாக்குவதற்குள் இரண்டு மாதச் சம்பளம் அம்பேல். புத்தகம் வந்தவுடன் ‘ப்ரிய நண்பர்கள்’ நிறைய பேர்கள் வந்து ஓசியாக வாங்கிப் போய் விட்டார்கள், டிபனுடன்.

சம்பள இழப்பில் கசந்து போயிருந்தான். சமாளிக்க முடியாமல் திணறினான்.

சிற்றிதழில் விமரிசனம் வந்தது. வேறு சில சிறு சிறு பத்திரிகைகளிலும் திறனாய்வுகள்.

குழம்பிக் கிடந்த சுப்ரணிஸாவை எங்கோ உயரத்திற்குக் கொண்டு போயிற்று. சுப்ரணிஸாவின் வினோதமிக்க மனஉலகம் பற்றிய பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் வந்திருந்தன.

இவனுக்கே தெரியாத தத்துவ வெளிப்பாடுகள், திறனாய்வாளர் களுக்கு தரிசனமாகியிருந்தது. இவனுக்குப் பிடிபடாத பல உன்னதங்களும், மன உணர்வின் அனுபவ ஆழங்களும் அவர்களுக்குப் பிடிபட்டிருந்தது.

வெனுக்கு ரொம்ப சந்தோஷம். இவனுக்கு இவனே புதிதாகத் தோன்றினான். பிரமிப்பாகத் தோன்றினான். இந்தத் ‘தோன்றலில்’ ரெண்டுமாதச் சம்பள இழப்பு கூட மறந்து போயிற்று.

விமரிசகர்கள் வேடிக்கையானவர்கள்தான். அதிலும் சில சிற்றிதழ் ரக விமரிசகர்கள் ரொம்ப விசேஷம்!

சருகுகளைக் கூட பெரிய மேதையாக்கி விடுகிறார்கள். இவனை மேதை என்று புகழ்வதன் மூலம். தங்களது மேதமையை தக்கவைத்துக் கொள்கிறார்கள்.

வெனுள் மெல்லிய பரிகாசச் சிரிப்பு.

என் படைப்பு நிஜமா? இவர்களின் திறனாய்வு நிஜமா? சுப்ரமணியசாமி நிஜமா? சுப்ரணிஸா நிஜமா? எது நிஜம்? இந்த வாழ்க்கையில் எதுதான் நிஜம்? நிஜமென்று நினைப்பதெல்லாம் நிஜமா? நிஜ மாய்த் தோன்றுகிற ஆகாயம் நிஜமா? அதன் நிறம் நிஜமா? ‘நீ படிச்சவன் தானா?’ என்று புருவம் நெரிக்கிற மாமனார் நிஜமா? அவரது தாம்பத்யம் நிஜமா? அவரது ஒழுக்கம் நிஜமா? அவரது ஆத்மாவுக்கு அவர் நிஜமா?

என் மனைவி நிஜமா? மோகத்தில் – அவள் தேகத்தில் புரண்டது நிஜமா? வயிற்றைத் துருத்திக் கொண்டிருக்கிற இன்றைய அவளை வெறுக்கிற உணர்வு நிஜமா? இங்கு வாழ்க்கை என்று சொல்லப்படுகிற அபத்தம் நிஜமா? கட்டிக்கொண்டு மாரடிக்கிற சமூக தர்மம் நிஜமா?

எதுதான் நிஜம்? உலகம் நிஜமா? உறவுகள் நிஜமா? என்னுள் சுரக்கிற ஹார்மோன் நிஜமா? தினவு நிஜமா? வரப்போகிற வாடகைப் பெண் நிஜமா? வங்கிச் சம்பளமும், அந்தஸ்தும் பொய்யா? வயிறும், பசியும், கௌரவமும் பொய்யா?

எது மாயை? எது நிஜம்? எல்லாமே மாயைகள்தானா? உருவமற்ற அரூப சாயைகள்தானா? இந்த மாயைகளைத்தான் நிஜம் என்று நம்பி நம்பி… மோகித்தும், பயந்தும் மனிதன் அலைகிறானா? இந்தக் கானல் அலைச்சலைத்தான் வாழ்க்கை என்று வர்ணமிட்டுப் பேசுகிறோமா?

இதை வைத்தே ஒரு நாவல் எழுதலாமே. எழுதணும். ராசியான நம்பர் 13. 13 அத்தியாயங்கள் எழுதணும். தலை கீழாக வரிசைப் படுத்தணும்.

முன்னுரை முடிந்தவுடன் 13வது அத்தியாயம். அப்புறம் 12-வது அத்தியாயம். பிறகு 11-வது அத்தியாயம் கடைசியாய் முதல் அத்தியாயம்.

புரியுமா? வாசிக்கிறவனுக்குள் குழப்பமும் இருட்டும் தானே மிஞ்சும்? போகட்டும். புரிய வேண்டும் என்பது முக்கியமா? புரிதலுக்கு அப்பாற்பட்டதுதானே இலக்கியம்? அது ஓர் ஆத்ம வெளிப்பாடு. அனுபவதரிசனம். உணர்வுகளின் மௌன அலறல். ஆழ்மன அலையின் தெறிப்பு.

புரிவதும் புரியாததுமா முக்கியம்? ஒவ்வொரு படைப்பிலும் புரிகிற மாதிரி ஒரு செய்தி இருந்தாக வேண்டும் என்பது கட்டாயமா? இது என்ன அஞ்சாங்கிளாஸ் பாடப்புத்தகமா?

எடைமிஷினில் ஏறி காசு போட்டவுடன் ஒரு அட்டை வந்து விழுகிற மாதிரி… ஒவ்வொரு கவிதை வாசித்து முடித்தவுடன் ஒரு செய்தி அட்டை வந்து விழ வேண்டுமா?

ஒவ்வொரு சிறுகதையின் முடிவிலும் ஒரு சோற்றுப் பொட்டலம் நீளும் என்று எதிர்பார்ப்பதா? இது என்ன இலக்கிய பாமரத்தனம்?

மனிதன், மனித நேயம் சமூக மாற்றம் என்று வறட்டுத்தனமாய் பொய்களைக் கட்டிக் கொண்டு மாரடித்து மாரடித்து மரத்துப் போன முற்போக்காளர்கள் தான்… புரிதல் பற்றி கூச்சலிடுவார்கள். மத்தைக்கூச்சல்.

இதுகளை விட்டுத்தள்ளு! தலை கீழ் வரிசையில் அழைக்கப் பட்ட அத்தியாயங்களோடு வரப் போகிற நாவலுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?

“மரண மகிழ்வில் தலை கீழ் உலகம்”

ஆ! அற்புதமான படிமம். புரிபடாத புதிர்த்தலைப்பு. இந்த நாவல் வெளிவந்தால்… விமரிசன மேதைகள் அசந்து போவார்கள். ‘கிறுக்குத் தனம்’ என்று விமரிசித்தால், பாமரத் தனமாகி விடுமே என்ற நடுக்கத்திலேயே ‘இலக்கிய உன்னதம்’ என்பார்கள். ‘நவீன உத்தி’ என்று சிலாகிப்பார்கள். உத்திகளின் மூலமே உலக வாழ்வின் முகங்களைக் காட்டி விடுகிற ‘அதி நவீன முயற்சி” என்று தூக்குவார்கள்.

சுப்ரணிஸா பிரபல்யமாகிவிடுவான். சகலராலும் எதிரும் புதிருமாய் பேசப்படுவான். நவீன இலக்கியத் இன் முன்னணி முகமாகி விடுவான். மௌனி, லா.ச. ரா.. எல்லாம் பின்னுக்குத் தள்ளி, இவன் பெயர் மேலே வந்து விடும்.

இலக்கிய விமரிசகர் பெரிதாக எழுதிக் தள்ளுகிற சர்வதேச நவீன நாவலாசிரியர்களெல்லாம்… கப்ரணிஸா முன் வெறும் தூசியாகி விடுவார்கள்.

கதவு தட்டப்படுகிற சத்தம். சன்னமாய் விலகிய கதவின் அருகில் வாட்ஜ் பையனின் தலை முறைத்தது.

“என்ன ?”

“சார். உருப்படிக வந்துருச்சு. நீங்க வந்து செலெக்ட் பண்ணிக் கிடணுமாம்”

“யார் சொன்னது?”

“மேனேஜர்”

இவனுள் ஜிவ்வென்று ஓர் உணர்வு. நவீன உத்திகள் யாவும் மாயையாகி மறைய…. அவனுள் வெறுமையான பெண் தேகம். நரம்புகளில் ஓர் விறைப்பு. மனசுக்குள் பதற்றம். படபடப்பான ஒரு சூன்யம். அவன் கண் விழித்த போது, மணி ஐந்தரை. இன்னும் சரியாக விடிய வில்லை. எழ மனமில்லை. உடம்பு முழுக்க அயற்சி. அடிபட்ட மாதிரியோர் அலுப்பு.

முரண்பாடாய் மனசுக்குள் ஒரு நமைச்சல். கசப்பை விழுங்கி விட்ட அழற்சி.

ராத்திரி வந்திருந்த அவள், பேசிய தொகையை விட கூடுதலாய் கொஞ்சம் கேட்டாள். சம்மதித்தான்.

மன இசைவோடு ஒத்துழைத்தாள். குழைந்திருந்தாள். மிருதுவாகியிருந்தாள். அவள் உதடுகள்… அதன் கனிவு, தேகத்தின் ஒவ்வொரு இறுக்குகள், அதன் நெளிவுகள், வெயில் முகம் பாராத பிரகாசம்…

அந்த நினைவின் லயிப்பில் கரையவிடாமல் வெட்டிய அவளது கூரிய பார்வை. அவள் உதடுகளில் ஊசியாய் தெளிந்த ஏளனப் புன்னகை.

எல்லாம் முடித்து…பணத்துக்கு பர்ஸைத் துழாவிக் கொண்டிருக் கையில், அவள் கையில் இவனது ‘என் தொலைந்து போனவர்கள்’.

ஒன்றிரண்டு கவிதைகளை மேய்ந்தாள். ஊன்றிப் படித்தாள். அவள் முகத்தில் ஒரு தீவிரம். தொழிலுக்குச் சம்பந்தமில்லாத அறிவுக்களை கண்களில் விமரிசன ஒளிச் சுழிப்பு.

இவன் திகைத்தான்.

“படிச்சிருக்கியா?”

“பி.ஏ. இங்கிலீஷ் லிட்டரேச்சர்”

உள்ளுக்குள் குலுங்கிப் போனான். ஊசி ஊசியாய் அவனுள் குற்ற உணர்வின் குத்தல்கள். தன்னை அசிங்கமாய் உணர்ந்தான். பாயாசத்தில் வாய் வைத்த பன்றியாய்….

“என்ன நெனைக்குறே இப்ப?”

“உங்களைப் பத்தியா?”

“உங்க கவிதைகளைப் போலத் தான் நீங்களும். வேஷம் போடுற ஆபாச இருட்டு”

“கவிதைகளைப் பத்தி?”

“என் தொழிலைப் போல. வி.டி. பரப்புற நோய்க் கிருமிகள்”

அவள் போய் விட்டாள். தேங்க்ஸ் சொல்லிவிட்டு.

அவளின் சாட்டையடிகள் இப்போதும் அவனுள் சுரீரென்கிறது. மனசின் ஜவ்வுகளைக் கிழிக்கிறது.

தனக்குள் தானே அசிங்கமாய் உணர்ந்தான். அவனுக்கு அவனே வேஷமாய் – இருட்டாய் — ஆபாசமாய் – நோய்க்கிருமியாய்….

எல்லாம் சில கணங்கள்தான். சுதாரித்துக் கொண்டான். தலையை உலுக்கிக் கொண்டான். அந்தக் கசடுகளை உதறியெறிந்து விட்டான்.

இவளது விமரிசன அறிவு நிஜமா? தொழில் நிஜமா? ரெண்டுமில் லாமல் இவள் பேசிய விதம் நிஜமா? எல்லாமே பொய். பொய்கள். ஒன்றில் ஒன்றாகக் கலந்து போகிற போலிகள்.

பெருமூச்சுடன் எழுந்தான். வாஷ் பேஸினில் தண்ணீரைத் திறந்தான். வாயைக் கொப்பளிக்கணும். முகம் கழுவணும்.

கன்னம் முழுக்க அவளது காய்ந்த எச்சில். உலர்ந்து மொறு மொறுக்கிய உணர்வு. முகத்தைக் கழுவிய நிலையில் கண்ணாடியில் பார்த்தான். நீர்முத்துக்கள்.

சின்ன வயது சுப்பிரமணிய சாமியை அதட்டிய அப்பாவின் குரல்.

“ஒறங்கி முழிச்சவுடனே வாயைக் கொப்பளிச்சு, மொகத்தைக் கழுவித் துடைடா”

அப்பாவுக்கும் அவ்வாறே அறிவுறுத்தப்பட்டிருக்கும். தாத்தாவுக்கும். அவனுள் கவிதைக்குரிய பரவசம். தரிசனப்பரவசம்.

“முகம் கழுவு
வாயைக் கழுவு”
யார் சொன்னது?
அப்பா.
அப்பாவின் அப்பா
அப்பாவின் தாத்தா
தாத்தாவின் அப்பா
கழுவிக் கழுவி
கரைந்து
காணாமல் போச்சு
முகங்கள்”

எதுவும் நேர்ப் பொருளல்ல. முழுக்க படிமங்கள். ஆ! அற்புதம்!

அவசர அவசரமாய் டைரியில் குறித்துக் கொண்டான். குறிக்கும் போது ஒரு சின்ன இடறல்.

‘போச்சு’ என்பது சரிதானா. அது மட்டும் பேச்சு வழக்கில் இருக்கலாமா? இருந்து விட்டுப் போகட்டும்!

யார் கண்டது? விமரிசகர்கள். அந்த பேச்சு வழக்கு வார்த்தைக்குக் கூட ஏதோலும் புது அர்த்தம் கற்பித்து, ‘ஆகா, ஓகோ’ என்று புகழ்ந்தாலும் புகழக்கூடும்…

இவனுக்கு டீ சாப்பிடணும் போலிருந்தது. கூப்பிட்டால் பையன் வருவான். வேண்டாம். வெளியே காலாற போய் வரலாம். காலை நேர உலகின் குளிர்ச்சி மனசுக்கு ரம்மியம்.

சட்டை போடணுமா? போட்டிருந்தால்தான் டீயா? காசுக்குத் தானே? அப்புறம் எதற்குச் சட்டை? சட்டைதான் சுப்ரணிஸாவா? இல்லாவிட்டால் இல்லையா? சட்டையை தாண்டி, சுப்ரணிஸாவுக் கென்று சுய அடையாளம் இல்லையா?

சட்டை. போலி நாகரீகத்தில் திளைத்து திளைத்து மரத்துப் போன மனசுகளின் குறியீடு.

சட்டையை அணிந்து கொண்டான். செருப்பை மாட்டி, கடிகாரத்தையும்…

கதவைச் சாத்தினான். அந்தப் பால்கனியின் மூலையில் கும்பலாய் உட்கார்ந்திருந்த தாலைந்து துப்புரவு தொழிலாளிகளின் காக்கி உடுப்புகள். அத்துடன் நீல வண்ண லாட்ஜ் பையன்கள். இவனை ஜாடை காட்டி ஏதோ பேசுகிற மாதிரி….. ஒரு தோற்றம்.

கதவைப் பூட்டுகிற சாக்கில் தேங்கினான்.

“இதென்ன பொறம்போக்கா?”

“சும்மாயிரு. பெரீய்ய ஆளு. பேங்க்லே ஆபீஸர்”

“அப்புறம்… இங்க வந்து, இப்புடி?”

“தினவெடுத்துப் போய் இங்க வருது?”

“சே! இம்புட்டு கௌரவமான ஆளு. இங்கயெல்லாம் வரலாமா? அசிங்கம்”

“கௌரவமாவது, மண்ணாங் கட்டியாவது! தெரு நாய், செக்குன்னு கண்டதா…. சிவலிங்கம்னு கண்டதா?”

இவனுக்குள் ஜில்லிடுகிற பயம். கிலி, இவனை ‘தெரு நாய்’ என்று வாயால் ஒற்றி விளையாடுகிறார்கள். சீற முடியாது. சீறினால்… ‘உன்னைப் பேசலே’ என்று எகிறி விடுவார்கள். கேவலப்பட்டதுதான் மிச்சம்.

மனுச ஜென்மங்களையே வெறுத்தான். மிரட்சியோடு அந்த மூலையை பார்த்து விட்டு நடந்தான்.

யோசனைகளைத் தொடர முடியாத இடறல். மனசுக்குள் செருப்படிப்பட்ட அவமான அவஸ்தை.

பவுடர் அப்பிய முகத்தை இடது கையால் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான். காலைப் பொழுதின் வீதி, சத்தங்களின் மழலைச் சன்னம். பரபரப்பு இல்லாத. மெதுவான உயிர்ச்சலனம்.

லாட்ஜைத் தாண்டி சற்று தூரத்தில் டீக்கடை. போய் நிற்பதற்குள் – இவன் கேட்பதற்கு முன்பே –

“சாருக்கு ஒரு டீ போடு”

இதுதான் சட்டை. சட்டை வாங்கித்தருகிற மரியாதை. அவனுள் காலை நேர ஜிலிர்ப்பு. ரம்மியம். இதம்.

எதிர் வீட்டு முற்றத்தில் – நீர் தெனித்த ஈரத்தில் அரை குறையாக உட்கார்ந்து – கோலம் போடுகிற இளம் பெண். மஞ்சள் கிழங்கு மாதிரி இளமையாயிருந்தாள். மஞ்சள் பூசிக் குளித்திருந்தாள். தலையில் சுற்றியிந்த துணியை மீறிக் கொண்டு ஒரு ரோமக்கற்றை. அதன் அடி நுனியில் தொங்குகிற நீர்த்துளி.

காலில் கொலுசு கால் விரலின் மஞ்சளில் துல்லியமாய்த் தெரிகிற மிஞ்சி. கல்யாணமாகியிருந்த அடையாளம். வைகறைக்குளியல்…அப்படீன்னா…

ராத்திரியில் ஜாக்கட் ஊக்குகளைக் கழற்றியிருக்கிறாள். ஒழுக்கம். நாணம், அச்சம் எல்லாவற்றையும் கழற்றிய மனுஷியாய் – மனைவியாய் – ஆடை நெகிழ்ந்த வெளிச்ச தேகமாய்…

இவனுள் இன்னும் நீள்கிற கற்பனை. அவள் விடுகிற பெருமூச்சின் இரைச்சல், குலுங்குகிற தங்கக் குழைவுகள்.

அவள் மீது படர்கிறவனாய்… இவன்.

“இந்தாங்க சார் டீ”

டீக்கிளாஸ். அதிர்வோடு திரும்பி வாங்கிய இவனை அளக்கிற மாதிரி, கடுப்போடு பார்க்கிற டீக்கடைக்காரர். அதைக் கவனிக்காமல் இவன் சுய உலகில்…

“உறக்கச் சட்டையை
உரித்துப் போட்ட
காலை மனசு
கட்டறுந்து மேய…..
அலைத்து மனசு
திரும்பி வந்தது
அழுக்குச் சாக்கடையாய்….”

இவனுள் மீண்டும் – ஆழ்மன வெளிப்பாடு. உள் மனத்தரிசனம். கவிதை உணர்வுப் பெருக்கு. அவசரமாய் இதைக் குறிக்கணும். பரபரப்பாய் ஓடிய அவனை எட்டிப்பிடிக்கிற குரல்.

“சார்….டீக்குக் காசு” அவர் குரலில் இப்போது வெளிப்படையான அலட்சியம். வெறுப்பு.

குழப்பமடைந்து போன இவன், எதையோ உளறிவிட்டு ரூபாயை நீட்டினான். மீதிச் சில்லறையை தருகிற போது – டீக்கடைக்காரர் பார்வை சீறியது: ‘நீயெல்லாம் ஒரு மனுசந்தானா?’

இவன் உள்ளுக்குள் ஒடுங்கிப் போனான். இழிவுபடுத்தப்பட்ட மனநிலையில் திரும்பினான். அவன் முதுகைத் துரத்துகிற டீக்கடைக் காரரின் மெல்லிய முணுமுணுப்பு.

“விடியுறதுக்குள்ளே இம்புட்டுப் பவுடரை அப்புற பய எப்படியிருப்பான்? இப்படித்தான். மலத்திங்கிற பன்னி மாதிரி.. அலையுறான், ராஸ்கல்”

ஒடித்து நொறுங்கிய குச்சியாக அறைக்குள் வந்து விழுந்தான். மனசுக்குள் அவமான அவஸ்தை. பயப்படபடப்பு.

டீக்கடையில் முகம் காட்டிய கவிதையை ஞாபகத்திற்கு கொண்டு வர முயன்றான். வார்த்தைகள் நழுவி… நழுவி… அருபமாகி…கண்ணா மூச்சி காட்டி…

ஆயாசத்தில் அப்படியே படுத்து விட்டான்.

ராத்திரி வந்தவள் பார்வையில், இவன் ‘வேஷம் போடுகிற ஆபாச இருட்டு’.

லாட்ஜ் பையன்கள் பார்வையில் இவன் ‘தெருநாய்’

சிறு பத்திரிகை விமரிசகர்கள் பார்வையில் இவன்… ‘உத்தியின் மூலம் உலசு மாயையை உணர்த்துகிற உன்னத நவீனன்’.

இதில் எது நிஜம்? எது பொய்? எல்லாமே நிஜமா? எல்லாமே பொய்களா?

இவன் பார்வையில் இவன் யார் யோக்கியனா, புழுவா? மனுசனா, தெருநாயா?

யார் இவன்? சுப்ரணிஸா என்றால் யார்? உண்மையில் அவனுக்கு அவன் யார்?

கேள்விகளையே அடுக்கி அடுக்கிப் பார்த்தவன், அந்த அடுக்கு வரிசையிலேயே ஏதோ ஒன்று அவனுள் தரிசனமாக…

டைரியைத் தேடினான், குறிக்க.

– டிசம்பர்-1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *