யார் அந்த சண்முகம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 9,019 
 
 

1

திருமணமாகி மூன்றாண்டுகள் ஒய்யாரமாய் ஓடிவிட்டன. என் மருமகள் செண்பகத்தின் வயிற்றில்தான் இன்னும் எந்த மாறுதலும் இல்லை. திருமணத்திற்கு முன்பு இருந்த அதே தட்டை வடிவில்தான் இருக்கிறது. அது கொஞ்சம் உப்பினால்தான் என்னவாம்? பேரனையோ பேத்தியையோ பார்க்க எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? என்னைவிட ஐந்து ஆண்டு இளைய கிழடுகள் எல்லாம் தாத்தா பட்டத்தைத் தலைமேல் சுமந்து கொண்டாடி மகிழுகிற வேளையில் நான் மட்டும் இதோ அதோ என்று மனசுக்கு ஆறுதல் சொல்லிக்கொள்கிறேன்.

செண்பகம் இருக்கிறாளே, அவள் என்னதான் மகப்பேரு எட்டாதவளாக இருந்தாலும் அவள் மேல் எனக்கோ என் மனைவி அஞ்சலைக்கோ எந்த மனக்கசப்பும் இல்லை. கட்டின கணவனை மட்டுமல்ல; என்னையும் அஞ்சலையையும் தாங்கென தாங்குகிறாள். ஆளானப்பட்ட அஞ்சலையிடமே பேர்போடுகிறாள் என்றால் செண்பகம் எவ்வளவு கெட்டிக்காரியாக இருப்பாள்?

என் ஒரேயொரு பையன் திருமூலம் இருக்கிறானே, அவனுடைய நல்ல மனசுக்கு இறைவன் அளித்த பரிசுதான் இப்பேற்பட்ட மனைவியாக வந்து நிற்கிறாள் செண்பகம் என்று நினைக்கிறேன். திருமூலம் இயற்கையாகவே அமைதியாவன். இரக்க குணம் அவனிடம் அதிகம் உண்டு. இருபத்து மூன்று வயதிலிருந்து இன்றளவும் எடுக்கிற சம்பளத்தில் பத்து சதவீதம் பக்கத்திலிருக்கிற ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறான். சத்தியமாகச் சொல்கிறேன்; அப்பன் என்ற முறையில் நான் அவனுக்கு ஈவிரக்கத்தைக் கற்றுக்கொடுக்கவில்லை. அது அவனிடம் எப்படி வந்து சேர்ந்ததோ எனக்குத் தெரியாது.

செண்பகத்தை அவன் திருமணம் செய்துகொண்டதுகூட இரக்கத்தினால்தான் இருக்கவேண்டும். செண்மகம் யாரும் அற்றவள். ஆதரவற்றோர் இல்லத்தில்தான் இத்தனை நாள் இருந்ததாய்ச் சொல்லியிருந்தாள். ஓர் அனாதைப் பெண்ணுக்கு வாழ்க்கை தரத்தான் திருமூலம் செண்பகத்தைத் திருமணம் செய்ய முன்வந்திருப்பான் என்றே நான் நினைக்கிறேன். யாராக இருந்தால் என்ன? பெண் நல்ல குணவதியாக இருக்கிறாள்; திருமூலத்துக்கும் பிடித்திருக்கிறது. நடுவில் நான் என்னத்தைச் சொல்ல? அதனால்தான் எங்கள் குலதெய்வத்தின் முன்னிலையில் நானே நடத்திவைத்தேன் இவர்களது திருமணத்தை.

வருகிற சீனப் பெருநாள் விடுப்பிற்கு திருமூலத்தையும் செண்பகத்தையும் சாமிபார்க்க அழைத்துச் செல்லவேண்டும். மூன்றாண்டு காலமாக செண்பகம் நவீன வைத்தியத்தை நாடிச் சென்று ஒரு புண்ணியமும் இல்லை. என்னென்னமோ ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்களா அல்லது புதிது புதிதாகச் சொல்லுகிறார்களா என்பதைக்கூட என்னால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது ஆங்கிலம் பேசக் கேட்டால்.

அதனால்தான், இந்த முறை சித்தியாவானில் இருக்கிற சாமியாரைப் போய் பார்த்தால் உண்டு இல்லை என்று பொட்டென போட்டு உடைத்துவிடுவார் விஷயத்தை. கருமம், எனக்கு விளங்கியும் தொலைக்கும். சாமியாருக்கு ஆங்கிலம் தெரியாததால் தமிழில்தானே பேசியாகவேண்டும்? என்னை யாரும் ஏமாற்ற முடியாது.

சித்தியாவான் சாமியார் இருக்கிறாரே, நம்முடைய அடையாள அட்டையை மட்டும் பார்த்துவிட்டு சும்மா புட்டுப்புட்டு வைத்துவிடுவார் நடந்ததையும் நடக்கப்போவதையும். முதல் முறை அவரைச் சந்தித்தேனே, மிரண்டே போய்விட்டேன்! நான் மனசில் நினைத்ததை அவர் வாயால் சொல்கிறார்! ரொம்பவும் சக்திவாய்ந்தவர் அவர்.

3

திருமூலம்தான் அழைக்கிறான். அவனிடம் பேசுவதற்குத் தடையாக ஏகப்பட்ட கோவங்கள் கணக்கில் உள்ளன. ஆனால், நான் பெற்றெடுத்த ஒற்றைச் செல்வம் அவன். அவனை விட்டுப் பிரிந்து இன்னும் எத்தனை நாட்கள் வாடப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. தொலைபேசியை எடுத்தேன். நிச்சயமாக மீண்டும் அதே விதிமுறையை முன்வைத்து பேரம் பேசப்போகிறான் என்று நான் நினைத்திருந்தது மிகச்சரி!

“செண்பகமாவது சண்முகமாவது! யாரையும் பார்க்க நான் தயாராய் இல்ல. இதோ பாரு திருமூலம்! நீ செஞ்சது மாபெரும் தப்பு. குட்டு உடைஞ்சும் கூட நீ இன்னும் பிடிவாதமா இருக்குறது எனக்கு ரொம்ப வேதனையாவும் இருக்கு, கோவமாவும் இருக்கு. அந்தச் சனியன தலமுழுகிட்டு மறுபடியும் நம்ம வீட்டுக்கே வந்துருடா” இப்படியேதான் நானும் நான்கைந்து மாதமாய் திருமூலத்தைக் கெஞ்சிகொண்டிருக்கிறேன். அஞ்சலை சித்தபிரம்மை பிடித்ததுபோல் ஆகிவிட்டாள். வயதான காலத்தில் இப்படி கிடக்கிற அஞ்சலையை வைத்துக்கொண்டு எப்படி நான் சமாளிப்பேன்?

நான் மனசு மாறினால் ஒழிய இந்த வீட்டு வாசலைத் தொடுவதாய் இல்லை என்று சத்தியம் செய்கிறான். எல்லாம் அந்த சண்டாளன் சண்முகத்தால் வந்தது. எப்படி இவ்வளவு அசால்டாக இருந்துவிட்டேன் என்பது எனக்கே வியப்புதான். எப்படியாவது திருமூலத்தில் மனசை மாற்றிவிடுகிறேன்; அஞ்சலையின் வரப்போகிற சாவைப் பயன்படுத்தியாவது!

2

சீனப் பெருநாளுக்குப் போய் சாமி பாக்கலாம்னுதான் சொன்னேன். செண்பகத்தவிட திருமூலம்தான் தாம்தூம் குதியாட்டம் போட்டான். செண்பகத்திடம் சொல்லி அவனை சம்மதிக்கைவைக்கச் சொன்னேன். செண்பகம் சொன்னாலாவது கேட்பான் எனும் நம்பிக்கையில். எப்போதும் எனக்கு வக்காளது வாங்கி பேசும் செண்பகம் இந்த முறை திருமூலத்துக்குச் சார்பாகப் பேசினாள்.

இதில் ஏதோ ஒரு சூட்சும் இருப்பதாக எனக்கு விளங்கியது. மகப்பேருக்காக கோயில் கோயிலாக போய் வேண்டுதல் செய்துகொள்ளும் தம்பதியரைத்தான் பார்த்திருக்கிறேன். நல்ல கடவுள் பத்தி உள்ளவனான திருமூலம் சாமியாரைப் பார்ப்பதில் மிகுந்து எதிர்ப்பு தெரிவிப்பது எனக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணியது.

திருமூலத்துக்கு சித்தியாவான் சாமியாரைப் பற்றி நன்கு தெரியும். வெரும் அடையாள அட்டையை மட்டும் வைத்து எப்படி இவ்வளவு துள்ளியமாக எல்லாவற்றையும் சொல்கிறார் என்று அவனே வியந்துள்ளான். இவர்தான் உண்மையான சாமியார் என்று திருமூலமே சான்றிதழ் கொடுத்திருக்கிறான். இருந்தாலும் இந்த விஷயத்தில் மட்டும் ஏன் அவன் அவரைப் பார்க்க முரண்டுபிடிக்கிறான் என்பது ஒரு புதிராக மட்டும் விளங்கிற்று எனக்கு.

ஒருவேளை இன்னும் சட்டப்படி பதிவுத்திருமணம் செய்யாததால் தயங்குகிறானோ எனும் எண்ணம் எழுந்தாலும் தயங்குவதற்கு என்ன இருக்கிறது? சம்பிரதாயப்படி குலதெய்வக் கோயில் முன்னிலையில் எங்களது ஆசியோடு திருமணம் செய்துகொண்டானே, அது போதாதா? செண்பகத்துக்குத்தான் சொந்தபந்தம் யாருமில்லை. அதுதான் நாங்கள் இருக்கிறோமே?

சித்தியாவான் சாமியாருக்கு ஆள் போய் நேரடியாக நிற்கவேண்டும் எனும் அவசியமில்லை. சம்மந்தப்பட்ட ஆளின் அடையாள அட்டை அல்லது பிறப்புப் பத்திரம் இருந்தால் போதும். முடித்துக் கொடுத்துவிடுவார். இதை எனக்கு அஞ்சலைதான் நினைவூட்டினாள்.

திருமூலமும் செண்பகமும் வருவதாக இருந்தால்தான் சீனப்பெருநாள் வரை காத்திருக்கவேண்டும். அவர்களுடைய அடையாள அட்டை மட்டும் அவர்களுக்கே தெரியாமல் என்னோடு வருகிறது என்றால், அதற்கு எதற்கு பொதுவிடுமுறையெல்லாம்? நாளையேகூட போகலாம்.

திருமூலத்துக்குத் தெரியாமல் அவனது அடையாள அட்டையை முதலில் எடுத்து வைத்துக்கொண்டேன். இந்த செண்பகத்தினுடைய கைப்பையைப் பார்ப்பதுதான் மிக அபூர்வம். பொத்திப்பொத்தி வைத்துக்கொள்வாள். அவள் குளிக்கச் சென்றிருந்த வேளையில் வேரு வழியில்லாமல் அவளது படுக்கையறைக்கே நைசாக நுழைந்து கவர்ந்துவந்தேன் கைப்பையை.

உள்ளே கைவிட்டு துழாவி ஆராய்ந்தபோது சிக்கியது அடையாள அட்டை. யாரோ சண்முகம் எனும் பெயர் போட்ட ஆளின் படத்தோடு இருந்த அந்த அடையாள அட்டையைக் கண்டதும் என் உச்சந்தலையில் நங்கென்று யாரோ குட்டியது போன்று இருந்தது. யார் அந்த சண்முகம்? எதற்கு ஏதோ ஓர் ஆணின் அடையாள அட்டை செண்பகத்தின் கைப்பையில் இருக்கவேண்டும்? செண்பகம் திருமூலத்துக்கு துரோகம் ஏதும்…

குளித்துவிட்டு வரட்டும்; இரண்டில் ஒன்று விசாரித்துவிடுவோம் என்று உக்கிரத்தைச் சேமித்து வைத்துக்கொண்டேன். வீட்டுக் கொள்ளைபுறத்தில் மண்ணைக் கிளறிக்கொண்டிருந்த திருமூலத்தையும் கூப்பிட்டேன். அவனுக்கும் தெரியட்டும் இந்தச் சண்முகத்தைப் பற்றி வெட்ட வெளிச்சமாக.

திருமூலம் ஓடிவந்தான். “இன்னைக்கு ஒங்கிட்டயும் செண்பகத்துக்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயத்த விசாரிக்கணும்,” என்றேன் நான். என் சொல்லில் வில்லங்கம் ஒளிந்திருப்பதை உணர்ந்திருப்பான் திருமூலம். முகம் கருத்து உடல் வியர்த்தது. அஞ்சலை என்னிடம் எதையும் கேட்கவில்லை. அவள் படுத்திருந்த படுக்கையை விட்டு எழும் ஆற்றல் இல்லாமல் அறைக்குள்ளேயே இருந்தபடி நடப்பதை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருப்பாள்; வழக்கம்போல. செண்பகம் குளித்துவிட்டு தலைமுடியைத் துவட்டிக்கொண்டிருந்தாள். “செண்பகம், நில்லு!” என்றேன். என் குரலில் கலந்திருந்த அதிகாரத்தொணி அவளது முகத்தையும் இறுக்கமாக்கிற்று.

சண்முகத்தின் அடையாள அட்டையை எடுத்துக் காட்டினேன். “செண்பகம், யார் இந்த சண்முகம்? கண்டவனோட சாமானெல்லாம் உன் பையில வச்சிருக்கயே? உனக்கும் இந்த சண்முகம்ன்றவனுக்கும் என்ன சம்மந்தம்?” என்று இறுக்கமான முகத்தைக் காட்டிக் கேட்டேன். திருமூலம் தத்தக்க பித்தக்கவென முழித்துக்கொண்டிருந்தான். செண்பகத்தின் முகம் வெளிரிவிட்டிருந்தது.

“அப்பா, சண்முகம் என்னோட கூட்டாளிதான்பா…” என்று சொல்ல எத்தனித்தான். “உன் கூட்டாளியோட ஐ.சி. எதுக்குடா ஒரு குடும்பப்பொம்பள பையில? செண்பகம்! ஒழுங்கா உண்மையச் சொல்லு!” என்றேன். அதட்டல் இன்னும் கூடியது.

“அப்பா, அதான் சொன்னேன்ல, சண்முகம் என் கூட்டா…” திருமூலத்தை இடைமறித்தாள் செண்பகம். “இனிமே எதுக்கு இன்னும் பொய்ங்க? நான் மாமாக்கிட்ட உண்மையச் சொல்லிடப் போறேன்,” என்றாள். செண்பகத்துக்கும் சண்முகம் என்பவனுக்கும் இடையே இருக்கும் கள்ளக்காதலைக் கண்டுபிடித்தேன் என்றுதான் நினைத்தேன். ஆனால்…

“அந்த சண்முகம் வேற யாரும் இல்ல. அறுவை சிகிச்சைக்கு முன்னாலே என் பேருதான் சண்முகம். ஆம்பளையா பொறந்த நான் இருவது வயசிலயும் பெண் குணத்தோடயும் உடல் நெளிவுகளோடயும் இருக்குறதப் பாத்து என்னோட வழியத் தேர்ந்தெடுத்துக்கிடேன். பிறப்பால வேணும்னா நான் ஆம்பளையா பொறந்திருக்கலாம். ஆனா, இப்ப நான் ஒரு குடும்பப் பொம்பள, மாமா,” செண்பகம் நிலையறிந்துதான் சொல்கிறாளா? எனக்கு மயக்கமே வந்துவிட்டது. கீழே விழப்போன என்னைக் கைத்தாங்களாகப் பிடிக்க செண்பகம் அல்லது சண்முகம் ஓடிவர “சீய், கைய விடுடா” என்றேன்.

– அநங்கம் – மலேசிய சிற்றிதழ் ஐந்தாம் இதழில் பிரசுரமானது. திண்ணை இணைய வார இதழ் செப்டம்பர் 4, 2009-இல் பிரசுரமானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *