மணி : ஹலோ ! டாக்டர் இருக்காருங்களா ?
வரவேற்பாளர் : இது அரசு ஆஸ்பத்திரி . உங்களுக்கு யாரை பாக்கணும் ? அப்பாயின்ட்மென்ட் இருக்கா ?
மணி : இல்லீங்க . இது மன நல மருத்துவ மனை தானே ? ரொம்ப அவசரம் மேடம். . டாக்டரை பார்க்கணும் .
வரவேற்பாளர்: இன்னிக்கு முடியாது . என்னிக்கு முடியும்னு பார்த்து சொல்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க உங்க பேரு, வயசு, மொபைல் நம்பர் சொல்லுங்க
மணி : மணி மேடம் . வயசு 73. மொபைல் xxxxxxxx
வரவேற்பாளர்: நோட் பண்ணிகிட்டேன் . நாளைக்கு காலைலே பத்து மணிக்கு வந்து புற நோயாளி பகுதிலே பதிவு செஞ்சுக்குங்க. டிமென்சியா நோயாளின்னு பதிவு பண்ணியிருக்கேன்.
மணி : எனக்கு டிமென்சியா இல்லையே .
வரவேற்பாளர்: 60 வயசுக்கு மேலே டிமென்சியா நோய் வரும் . நாளைக்கு , அதாவது வியாழக்கிழமை, அவங்களை டாக்டர்கள் பாப்பாங்க. அதான் இங்கே நியமம். உங்களுக்கு என்ன பிரச்னை ?
மணி : எனக்கு தற்கொலை பண்ணிக்கணுங்கிற உந்துதல் கொஞ்ச நாளா அதிகமா இருக்கு . அதுக்காக பாக்கணும்
வரவேற்பாளர்: அப்படியா ! கொஞ்சம் அவசரம் தான் .. அப்ப நீங்க நாளைக்கு கட்டாயம் வாங்க . நீங்க டாக்டரை பாக்க ஏற்பாடு பண்ணலாம் . நேரே பதிவு பண்ற இடத்துக்கு வந்து உங்க பேரை சொல்லுங்க. ஓகே வா !.
மணி : எனக்கு அல்சிமர்ஸ் நோயே இன்னும் தாக்கலியே. மறதியே இன்னும் வந்த பாடில்லே . எப்படி மேடம் எனக்கு டிமென்சியான்னு புக் பண்ணீங்க?
வரவேற்பாளர்: அல்சிமர்ஸ் நோய் வந்த பிறகு தான் டிமென்சியா வருங்கிறது இல்லேங்க. டிமென்சியாங்கிறது, எல்லா மறதி நோய்க்கும் உள்ள பொது பெயர். ஜூரம் மாதிரி . அதிலே டிங்கு , டைபாயிட், மலேரியா மாதிரி ஒரு வகை தான் அல்சிமர்ஸ் நோய். புரிஞ்சுதுங்களா ?
மணி : ரொம்ப நன்றி மேடம் . பொறுமையா பதில் சொல்லுறீங்க . எனக்கு இன்னிக்கே பாக்க முடியாதா ? நாளை வரை நான் இருப்பேனா தெரியலையே ?
வரவேற்பாளர்:: புரியுதுங்க சார். ஆனா. நாளைக்கு தான் முடியும். கட்டாயம் நாளைக்கு வந்துடுங்க . டாக்டரை பார்க்கலாம் .
மணி : சரிங்க மேடம் . ரொம்ப நன்றி.
மணிக்கு பட பட வென்றிருந்தது . “ம்ஹும் .. இது சரிப்பட்டு வராது . அரசு மனநல மருத்துவகம்கிறாங்க. இன்னிக்கு முடியாது நாளைக்கு வாங்கிறாங்க. எனது அவசரத்தை அவங்க புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்களே! நாளைக்கு போனா மட்டும் உடனே சரி பண்ணிடுவாங்களா என்ன ? சுத்தி விடுவாங்க. இங்கே போ , அங்கே போன்னு அலைய விடுவாங்க ! காத்திருக்க வைப்பாங்க !
டாக்டர் இல்லை , நாளைக்கு வாங்கன்னு கழுத்தறுப்பாங்க . பேசாம பிரைவேட் டாக்டரை பாக்க வேண்டியது தான் . பைசா செலவானாலும் டக்குனு காரியம் நடக்கும் .
உடனே மணி கூகலில் தேடினார். ஆ! கிடைச்சுது . கார்மேகம் – மனோ தத்துவ நிபுணர் , நேரிலும் வரலாம் . அலைபேசி மூலமாகவும் ஆலோசனை பெறலாம் . அலைபேசி எண் xxxxxxxx
மணி அலைபேசியில் பேசினார் . “ நான் அண்ணா நகர்லேருந்து பேசறேன் . டாக்டர் கார் மேகத்துடன் தொடர்பு கொள்ள முடியுமா ?
“நான் கார்மேகம் தான் பேசறேன் . சொல்லுங்க !”
மணி : டாக்டர் , நான் மணி . எனக்கு கொஞ்ச நாளா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உணர்வு மீண்டும் மீண்டும் வருகிறது . அது விஷயமா பேசணும் . உங்க பீஸ் எவ்வளவு, எப்படி செலுத்தனும், அலைபேசியிலேயே ஆலோசனை கூற முடியுமா ? எனக்கு வயது 70க்கு மேலே. நேரே வருவது கொஞ்சம் கடினம் . அவசியமானால் வருகிறேன் .
கார்மேகம்: ஒன்னும் பிரச்னையில்லை . போனிலே கூட பேசி தீர்வு காணலாம் . தேவைப்பட்டா நேரில் வாங்க . நான் இங்கே ஆவடிலே இருக்கேன் .
மணி : உங்க பீஸ்?
கார்மேகம்: அப்புறம் சொல்றேன் . அரை மணி கழித்து கால் பண்ணுங்க .
கார்மேகம் வைத்து விட்டார் அலைபேசியை .
மணி மீண்டும் அவரை தொடர்பு கொள்ள வில்லை . தொடர்பு கொள்ள நேரமில்லை அவருக்கு நிறைய பிரச்னைகள். முதியோர் காப்பகம் தேடனும் . அல்லது நல்ல வீடு அபார்ட்மெண்ட் தேடனும் , மனைவியின் ஆஸ்பத்திரி அருகே சகல வசதிகளுடன் அபார்ட்மென்ட் இருக்கான்னு பாக்கணும் . தன் மகனின் மன நோய் தீர ஒரு வழி தேடனும் .
தனக்கு , இந்த தற்கொலை எண்ணம் குறைய, ஒன்று மகனை விட்டு, தான் தூர போய்விட வேண்டும் . அல்லது மகன் தன்னை விட்டு விலக வேண்டும் .தான் மனைவியுடன் தூர போக என்ன வழி ?
முதியோர் இல்லம் . பராமரிப்போடு தேவை . மணி அடுத்த வேலையை ஆரம்பித்தார் . அவருக்கு துணை கூகிள் தான் , கூகிள்ல தேடினார் . மூன்று நான்கு முதியோர் இல்லம் , மொபைல் எண்ணோடு கிடைத்தது எழுதி வைத்துக் கொண்டார் . அதில் முதலில் ம்ருதுல்யா முதியோர் இல்லத்திற்கு தொடர்பு கொண்டார் . பேசினார் . நிறைய செலவாகும் போல இருக்கிறதே ? மாசம் ஒன்றரை லட்சம் கேக்கறாங்க . கட்டுபடி ஆகுமா ?
அடுத்து, ஜெல்டர் கேர் எனும் முதியோர் இல்லத்திற்கு தொடர்பு கொண்டார் . அதுவும் பயனில்லை . பேசாமல், மனைவியின் ஆஸ்பத்திரி , நுங்கம்பாக்கம் அருகே ஒரு சகல வசதியுடன் கூடிய ஒரு சர்விஸ் அப்பார்ட்மெண்ட் பார்த்தால் என்ன ? முயன்று பார்த்தார். அதுவும் சரிப் பட்டு வரவில்லை . முயற்சி செய்து கொண்டிருக்கையிலே, அலை பேசி அழைத்தது .
“ஹலோ , நான் டாக்டர் கார்மேகம் பேசறேன். மன தத்துவ டாக்டர் . கொஞ்ச நேரம் முன்னே பேசினன் . இப்போ பேசலாமா ?”
மணிக்கு ஒரே ஆச்சரியம். டாக்டரே கூப்பிடராரே.
மணி: டாக்டர் , நான் உங்களை எதிர்பார்க்கவே இல்லை .
கார்மேகம் : பரவாயில்லை சொல்லுங்க. இந்த தற்கொலை எண்ணம் உங்களுக்கு அடிக்கடி வரதா சொன்னீங்களே? அதை பத்தி விரிவா சொல்லுங்க ! எப்போதிலிருந்து இந்த மன நிலை ஆரம்பம் ?
மணி : டாக்டர், பீஸ் பத்தி எதுவும் சொல்லலையே?
கார்மேகம்: அதை பத்தி அப்புறம் பேசிக்கலாம். ரொம்ப குறைவா வாங்கிக்கறேன் . உங்களுக்கு என்ன வயசு ? விவரமா சொல்லுங்க .
மணி விவரித்தார் . தன்னை பற்றி, தன் குடும்பம் பற்றி, தன் மனநிலை பற்றி .
மணி : டாக்டர், என் மனைவிக்கு தீராத நோய் . அவளை நான் பார்த்துக் கொள்கிறேன் . எனக்கு ஒரே மகன். 41 வயது. பெரிய படிப்பு படித்து விட்டு வேலையிருந்தான் . பனிரண்டு வருடத்திற்கு முன் வேலையை விட்டு விட்டு எங்களிடம் வந்து ஒட்டிக் கொண்டான். இதுவரை சம்பாதிப்பு என்பது ஒரு பைசா கூட இல்லை. தன் குறையையே அவன் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. வேலைக்கு போக அவன் விருப்பபடவில்லை. அவனது இந்த நிலைக்கு எங்களையே திட்டிக் கொண்டு இருப்பான், என்னை கண்டாலே கண்ணா பின்னா என கத்துவான். அடிக்கடி என்னை அடிக்க கை ஓங்குவான். சில சமயம் என்னை அடித்தும் இருக்கிறான் உறவு அத்துனை பேருடனும் சண்டை. யாருடனும் பேச மாட்டான். என்னை பார்த்தாலே , கிட்ட தட்ட பைத்தியம் பிடித்தது போல இருப்பான். அதனாலேயே எனக்கு வாழ்க்கையிலே நாட்டம் இல்லை . எதிலும் பிடிப்பு இல்லை. செத்துடலாம் போல இருக்கு. என் மனைவிக்காக பார்க்கிறேன் . மனைவி அவனை விட்டு விட்டு வர விருப்பப் பட வில்லை .
கார்மேகம் : உங்க பையன் , நிறைய பயப்படுவாரோ?
மணி ரொம்ப பயம் கிடையாது . தனியாகத்தான் படுத்துப்பான். ரூமை விட்டு ரொம்ப வெளியே வர மாட்டான் . ரூமை இருட்டா வெச்சுப்பான் . விண்டோ ஸ்க்ரீன் எல்லாம் இழுத்து மூடி இருப்பான். அவன் மொபைலே யாரும் தொட விட மாட்டான். ரொம்ப கஷ்டமான பாஸ்வர்ட்எல்லாத்துக்கும் போட்டு வெச்சுப்பான். என்னோட இன்டர்நெட் ரௌட்டர் பாஸ்வோர்ட் மட்டும் 24 எழுத்து, எண், கேபிடல் என அசத்துவான். யாரேலேயும் பிரேக் பண்ண முடியாது. அவனது அம்மா மொபைல், வாட்சப் எல்லாம் அவன் கன்ட்ரோல்லே தான். புதுசு புதுசா செக்யூரிட்டி போட்டு வைப்பான் . அப்படின்னா பாத்துக்கோங்களேன்.
கார்மேகம் : சரி , அப்புறம்?
மணி : காரண காரியம் இல்லாமல் எரிச்சல் அடைவான்.
சேது : அப்புறம் ?
மணி சில சமயம் நல்ல மூடில் இருப்பான் . திடீரென சில நாள் , மூட் அவுட் ஆகிவிடுவான். நம்ப முடியாது . அவன் சொல்வதை எல்லாரும் கேட்க வேண்டும் எதிர்த்து சொன்னா, குற்றம் கண்டுபிடிப்பான், எதற்கெடுத்தாலும் சண்டை. ஆக்ரோஷம்.
கார்மேகம் : மணி, நான் ஒண்ணு சொல்லட்டுமா. எனக்கு என்னமோ உங்க தற்கொலை எண்ணம் பெரிய குறைன்னு தோணலை. இது எல்லாருக்கும் இருக்கும் குறை தான் . சாக நினைக்கிறது ஒரு இயலாமையின் தோற்றம் . இது ஒரு மன அழுத்தம். நாம் எதுவும் செய்ய முடியலேன்னு ஆற்றாமை. இதை சரி பண்ண முடியும். . ஆனா அதுக்கு மருந்து மாத்திரை தேவை . கொஞ்சம் மருத்துவ ஆலோசனை தேவை . உங்கள் முயற்சியும் தேவை.
ஆனால், உங்க மகன் கேஸ் கொஞ்சம் சீரியஸ். அவர் பேரில் மனோ தத்துவ ரீதியா இன்னும் கொஞ்சம் ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டியிருக்கும். விட்டா மன நோய் தீவிரமாக சான்ஸ் இருக்கு
மணி: ஏன் அப்படி சொல்றீங்க டாக்டர் ?
கார்மேகம்: அவர் பத்து வருடத்திற்கு மேலே வேலைக்கு போகலைங்கறதே, அவருக்கு ஏதோ மன நோய் இருக்கலாம்னு தோணுது. எதையோ நினைச்சு பயப்படறார் போல இருக்கு . டெஸ்ட் பண்ணணும் .
மணி : என்ன பண்ணலாம்னு சொல்றீங்க டாக்டர் ?
கார்மேகம்: நல்ல மன நல மருத்துவரை பாக்க சொல்லுங்க . அவர் மாட்டாருன்னு சொன்னா, அவரை ஒரு மன நல மருத்துவமனைலே சேர்த்துடுங்க .
மணி : அவர் வர மாட்டாரே. ஒப்புக்க மாட்டார். ஒன்று ஓடி போய்விடுவார் . இல்லை அடிக்க வருவார் .
கார்மேகம்: அது ஒண்ணும் பிரச்னையில்லே. நீங்க “என் மகன் என்னை துன்புறுத்தரான்னு” போலிஸ் புகார் கொடுத்தா போதும். மத்ததெல்லாம் ப்ளிஸ் பாத்துக்குவாங்க .
மணி : வேணாம் டாக்டர். போலிஸ் வந்தா எங்க குடும்பத்துக்கு கெட்ட பேர் வந்துடும்
கார்மேகம்: எனக்கென்னமோ, நீங்க அவனை ஒரு ரெண்டு மூணு மாதம் பிரிஞ்சிருக்கறது அவனுக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லதுன்னு தோணுது. . நான் ஒரு நம்பர் தரேன் . அது ஒரு அரசு மன காப்பகம் . நீங்க அவங்க கூட பேசுங்க . அவங்க உங்களுக்கு எல்லா உதவியும் செய்வாங்க .ரெண்டு மூணு பேரா வந்து உங்க பையனை குண்டு கட்டா மருத்துவமனைக்கு தூக்கிட்டு போயிடுவாங்க . அரசு மருத்துவமனை நல்லது . பெட்டெர். அங்கேயிருந்து அவ்வளவு ஈசியா ஓடி வர முடியாது பிரைவேட்லே தப்பிக்க முடியும் . ப்ரைவேட்லே செக்குரிட்டி போதாது .
மணி : சரி டாக்டர், நீங்க சொல்றா மாதிரி அரசு மன காப்பகம் கூட பேசி பாக்கறேன் . டாக்டர், உங்க பீஸ்?
கார்மேகம்: எதுவும் வேணாம் .
மணிக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்படி ஒரு டாக்டரா ?
சிறிது நேரத்தில் கார்மேகமிருந்து வாட்சப்பில் அரசு மன காப்பக நம்பர் வந்தது .
மணி உடனே பேசினார் .
மணி முழு விவரமும் அரசு மன காப்பக அதிகாரியிடம் சொன்னார். அதிகாரி, அவர் சொன்னதை கேட்டு, அதை அப்படியே அவரது மேலதிகாரிக்கு அனுப்பினார்.
அடுத்த நாள் வந்தது பதில். “சார், நீங்க , உங்க வீட்டுக்கு பத்து கிலோ மீட்டர் தூரத்திலே, சாலிக்ராமம் பக்கத்திலே இருக்கிற ப்ரைமரி ஹெல்த் செண்டர் டாக்டரை பாருங்க. நான் அட்ரஸ் அனுப்பறேன். அவங்கஎன்ன பண்ணணும், எப்படி பண்ணனும்னு சொல்வாங்க . அது படி பண்ணுங்க”
மணி : ஐயோ , அது என்னால் முடியாதே! எனக்கு வயது 73. மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. ஆஸ்பத்திரிக்கும் வீட்டும் அலையவே நேரம் போதாது. இதில் வீட்டை வேறு கவனித்து கொள்ள வேண்டும். என்னால் அதெல்லாம் முடியாது யாரையாவது என் வீட்டிற்கு அனுப்புங்கள். ஆகும் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன். ப்ளீஸ் , உதவியாய் செய்யுங்கள்.
பின்னர் அங்கிருந்து பதில் எதுவுமில்லை. மணி எதிர் பார்க்கவுமில்லை .
அடுத்த நாள்.
மணி தனக்கு மன நிலை சரியாக இருக்கிறதா ? தனக்கு ஏன் தற்கொலை எண்ணம் அடிக்கடி வருகிறது என்பதை தெரிந்து கொள்ள அரசு மன நல மருத்துவ மனையில் அனுமதி வாங்கிய நாள்.
தன்னை பற்றி தான் தெரிந்து கொண்டு, முடிந்தால் தன்னை மாற்றி கொள்ள மருந்து உட்கொள்ள, மருத்துவரை பார்க்க வேண்டிய நாள்.
மணி மருத்துவ மனையை சரியான நேரத்தில் வந்தடைந்தார் . முன்னாள், அவருடன் டிமென்சியா பற்றி விளக்கம் கொடுத்த பெண்மணி அவரை நினைவில் கொண்டு அவருக்கு அடையாள அட்டை, சீட்டு கொடுத்து அமரச்சொன்னார் . சிறிது நேரத்தில் அவரை ஒரு பெண் கூப்பிட்டு கொண்டு, மன நல ஆலோசகர் ஒருவரிடம் அழைத்து சென்றார் . எல்லாம் சடுதியில். ஆச்சரியம் மணிக்கு ! அரசு மருத்துவ மனையில் , இவ்வளவு அதி வேக நிர்வாக திறனா ?
மன நல ஆலோசகர் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒரு படிவம் கொடுத்து நிரப்ப சொன்னார் . நிரப்பும் போதே , கேள்விகளை படிக்கும் போதே , மணிக்கு தெரிந்து விட்டது, தனக்கு மன அழுத்தம் என்று . இதற்கா இவ்வளவு கேள்விக் கணைகள் ?
பின்னர், மணியை மன நல ஆலோசகர் (psychologist ), மன நல மருத்துவரிடம் (Psychiatrist ) அழைத்து சென்றார் . அவரும் கேள்வி மேல் கேள்வி . மணி பதில் சொல்ல மருத்துவர் பொறுமையாக கேட்டுக் கொண்டார். இறுதியாக, தூக்க மருந்து ஒன்று எழுதிக் கொடுத்தார் . அடுத்த வாரம் வரச்சொல்லி அதையும் நேரம் குறிப்பிட்டு எழுதிக் கொடுத்தார் . வீட்டிற்கு அனுப்பி விட்டார் மணி அரசு மருந்தகத்திலேயே மருந்து வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார்..
வீட்டுக்கு வந்து அவரது யோசனை எல்லாம் இது தான்:
“என்ன இது , எல்லாரும் சொன்னதையே சொல்றாங்க ! உங்களுக்கு மன அழுத்தம் தான் காரணம். அதுக்கு உங்கள் இயலாமை தான் காரணம். மனைவியின் நோய், மகனின் மனப் போக்கு உங்களை ஆட்டிப் படைக்குது. இதுக்கு தற்கொலையை நீங்க ஒரு வடிகாலா தேடறீங்க உங்க இயலாமைக்கு இது ஒரு எஸ்கேப் ரூட். ஆனால் அது சரியான பாதையில்லை. . இந்த வயசிலே, நல்ல படியாக போய் சேரணும். தற்கொலை ஒரு அவமானகரமான இறப்பு . அது வேண்டாம் . பிரச்னைகளை எதிர் கொள்ளுங்க . நல்லா தூங்குங்க . இந்த தூக்க மாத்திரை அதுக்கு உதவும் .
ஏதாவது நல்ல மனத்திற்கினிய பொழுது போக்கில் ஈடுபடுங்க. நிறைய பாட்டு கேளுங்க . இந்த தற்கொலை எண்ணத்தை தர்க்க ரீதியா தவிர்க்க பாருங்க. உங்கள் மனைவியின் நிலையை மனதில் கொள்ளுங்க. நீங்களும் போயிட்டா அவங்களுக்கு யார் உதவி, துணை ? .
வாரா வாரம் இந்த மருத்துமனைக்கு வந்து எங்களை பாருங்க. உங்களுக்கு எந்த அளவு முன்னேற்றம், உங்கள் மன சோர்வு, தற்கொலை எண்ணம் குறையுதான்னு பார்ப்போம் . இது கொஞ்சம் மெதுவாகத்தான் சரியாகும். கூடவே மன தத்துவ நிபுனர் உங்களுக்கு தற்கொலை எண்ணத்தை குறைக்க வழி சொல்லி தருவார். மருந்து, ஆலோசனை, உங்கள் விடா முயற்சி, உங்கள் எதிர்மறை எண்ணம் குறைய உதவும் . அப்படியும் சரியாகவில்லை என்றால், உங்களுக்கு தற்கொலை எண்ணம் எல்லை மீறிப் போகிறதென்றால், எங்கள் மன நல காப்பகத்தில் உங்களை அனுமதி செய்து, உள் நோயாளியாக மருத்துவம் செய்கிறோம்.
மனைவிக்கு என்ன செய்வதா? அதற்கு ஒரு வழி செய்து விட்டு வாருங்கள். அவர்கள் மருத்துவம் தொடர ஏற்பாடு செய்து விட்டு, உறவினரிடம் விட்டு விட்டு எங்கள் மருத்துவ மனையில் அக நோயாளியாக வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
உங்க மகனுக்கு மன நிலை சரியில்லை. அது எங்களுக்கு நன்றாக புரிகிறது அவரிடம் உங்க மனைவி மூலமா பேசி பாருங்க. நீங்க கொஞ்சமும் தலையிடாதீங்க . மகனுக்கு உடனடியாக மருத்துவம் பாருங்க. அவரை மனநோய் மருத்துவனையில் சேருங்க .அவரா சேர்ந்தா நல்லது . இல்லேன்னா, போலீஸ்லே“ என் மகன் என்னை துன்புறுத்தறான். வேலைக்கு போக மாட்டேங்கிரான். கேட்டால் அடிக்க வரான்னு“ புகார் கொடுங்க. வயசானவங்க புகார் கொடுத்தா மகன் அல்லது மகள் பேரில் போலிஸ் கட்டாயம் நடவடிக்கை எடுப்பாங்க.
உங்க உடல் நிலையிலே முன்னேற்றம் இருந்தால், ஏதாவது மருத்துவ வசதி கொண்ட முதியோர் இல்லத்திலே சேர்ந்து கொள்ளுங்கள். உங்க மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் , உங்களாலே, இந்த வயசிலே தனியா கவனிக்க முடியாது . அவங்க உங்க மனைவியை பார்த்துப்பாங்க .
மணிக்கு மிக ஆச்சரியம் . “மன நோய் என்பது மொத்தமே இவ்வளவு தானா? ஒரே மன நோய்க்கு இத்தனை பேர்களா? இல்லை, என் சிற்றறிவுக்கு புரிந்தது இவ்வளவுதானா ? இதெல்லாம் எனக்கே தெரியுமே . இதுக்கு மேலே தான் தெரியாது . இதுக்கா இவ்வளவு அலைஞ்சி, செலவு செஞ்சு ஆஸ்பத்திரிக்கு வந்தோம்? சரியான வேஸ்ட்!
மணிக்கு ஒன்னும் புரியவில்லை . இதெல்லாம் தேவைதானா? கஷ்டமோ நஷ்டமோ, நம்ம வீட்டிலேயே இருந்து நமது மனைவிக்கு வைத்தியம் பார்ப்போம் . மகன் பக்கமே போகாமல் இருப்போம் எத்தனையோ பேர், மன நிலை பாதிக்க பட்டவங்களை வீட்டிலேயே வைத்து வைத்தியம் பாக்கலையா? அது மாதிரி, நாமும் நம் மகனுக்கு செய்வோம் . போலிஸ் எல்லாம் வேண்டாம் .
தேவைப்பட்டால் , நமக்கு முடியாத போது, நமக்கு தெரிந்தவர் யாரையாவது, பகல் நேரம் முழுதும் வேலைக்கு வைத்து கொள்வோம் . ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல, கடை கன்னிக்கு போய்வர, வங்கி விஷயங்களை பார்த்துக் கொள்ள, மிஞ்சி போனால் ஒரு 30,000- மாதம் செலவாகுமா? நம் உறவுகாரர் அல்லது நம்பிக்கையான நண்பரை அமர்த்திக் கொள்வோம். இவ்வளவு பார்த்து விட்டோம் . இதையும் பார்த்து விடுவோமே?
பார்க்கப் போனால், வாழ்க்கையே ஒரு பிரச்னைதான் . மன நல ஆஸ்பத்திரி ஒரு வகை பிரச்னை . இல்லாத நோய்க்கு வைத்தியம் பார்க்க போனால் போலத்தான். . யாருக்கு இல்லை மன அழுத்தம் ? யாருக்கு இல்லை குடும்ப பிரச்னை ?வீட்டுக்கு வீடு வாசற்படி . இதெல்லாம் தெரிந்தும் ஏன் இப்படி அலையறேன்?
மன நல ஆஸ்பத்திரி வேண்டாம் . முடிவு செய்து விட்டார் மணி .
முதியோர் இல்லம் வேறு வகை பிரச்னை . காசு பணம் வேண்டும் . இந்த வீடு கொஞ்சம் பழைய வீடு நல்ல விலைக்கு விற்குமோ விற்காதோ ?. அல்லது வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் . அதன் பராமரிப்புக்கு அடிக்கடி ஓடி வரவேண்டும் ..
நமக்கு , வேறு வீடு பார்ப்பதில் வேறு வகை பிரச்னை . புது இடம் . நல்ல இடம் கிடைக்க வேண்டும் . ஆயிரம் சொன்னாலும் சொந்த வீடு வசதி போல் வராது . மகனை மன நல மருத்துவகத்திற்கு அனுப்ப முடியாது . உறவு மத்தியில் இருக்கும் நல்ல பெயர் போய்விடும் . கேலிக்கு உள்ளாகி விடுவோம் .
பேசாமல் இருக்கும் வாழ்க்கையிலேயே இருப்பது நல்லது . மனதை இறைவன் பக்கம் திருப்புவோம் . கண்டதை நினைத்து கவலை படுவதை விட்டொழிப்போம்.
மணி இப்போதெல்லாம், இறைவனை முழு மனதாக நம்பினார் . சரணாகதி , அதை நம்பினார் . கீதை சொல்வதை நம்பினார்.
BG 18.65: எப்பொழுதும் என்னை நினைந்து, என்னிடம் பக்தி செலுத்து, என்னை வணங்கி, எனக்கு வணக்கம் செலுத்து. அப்படிச் செய்தால், நீ நிச்சயமாக என்னிடம் வருவாய். இது உனக்கான என்னுடைய உறுதிமொழி, ஏனென்றால் நீ எனக்கு மிகவும் பிரியமானவன்.
தள்ளாத காலம்தான் . அதனால் என்ன? இறைவன் இருக்கிறான் . அவன் பார்த்துக் கொள்வான். என்னால் , என்னால் என்று சொல்லும் வரை தான் எல்லா பிரச்சனையுமே . ஆண்டவன் பேரில் பாரத்தை போட்டாகி விட்டால் பிரச்னை விட்டது. மனைவியிடம் மட்டும் பற்று கொள்வோம். அது பூர்வ ஜன்ம பந்தம்.
தள்ளாடி தள்ளாடி, தன் மனைவிக்கு எல்லா பணிவிடைகளும் அவரே செய்து கொடுத்தார். ஆஸ்பத்திரியில் ஆறு மணி நேரம் மனைவிக்காக , மனைவியின் நோய் மருந்தேற்றம் முடியும் வரை காத்திருந்து அழைத்து வந்தார் . பெட் (Positron emission tomography) ஸ்கேன், எக்ஸ்ரே, எல்லாவற்றையும் தானே வாங்கி வந்து மருத்துவரை பார்த்தார். இறைவன் இருக்கையில் அவருக்கென்ன கவலை? டாக்டரது அறிவுரை படி நடந்து கொண்டார் . தனது வங்கி முதலை தானே சென்று, பொறுத்திருந்து முடித்து, பணம் பெற்று வந்தார்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு..
என்ன அழகாக சொல்லியிருக்கிறார் வள்ளுவர் .
இப்பவும் எப்போதாவது மணிக்கு தோன்றும் எண்ணம், நாம வாழ்ந்து என்ன சுகம் கண்டோம் ? பேசாமல் மண்டையை போட்டா என்ன? வேண்டாம்! அது அழகான முடிவல்ல! இறைவனிடம் சரணாகதி பண்ணிவிடலாம். இருவரும் அவனே கதி என பற்றி விடலாம். அவன் இருக்கும்வரை எங்களுக்கென்ன பயம்?
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (குறள்)
எவ்வளவு நயம்பட உரைத்திருக்கிறார் ? இறைவனை சரணாகதி அடைந்தவருக்கும் சரி, அல்லது மண்டையை போட்டவர்க்கும் சரி, யாண்டும் (எப்போதும்) துன்பம் இல்லை என என்ன மறைமுகமாக சொல்லியிருக்கிறார் . அப்படியென்றால் இறந்து விடு என்கிறாரா? அதுவும் ஒரு சரணாகதி என்கிறாரா?
மணியின் மனம் குழம்பியது . மனம் அலை பாய்ந்தது . அதை தவிர்க்க வேண்டும் . நேர்முக எண்ணம் வேண்டும் . எதிர்மறை எண்ணம் கூடாது . தன்னைத்தானே நேர் செய்து கொண்டார். வள்ளுவர் சரணாகதி என்று தான் சொல்கிறார். நாமாக கற்பனை செய்து கொள்கிறோம் அவன் அடியை வணங்குவோம் . இடை விடாது அவன் காலடி பற்றுவோம் ! இந்த தற்கொலை எண்ணத்தை தவிர்ப்போம் ! இது ஒரு எதிர்மறை எண்ணம்.! நமக்கு வேண்டாம் இது!
இறைவனே சரனாகதி . அவன் பாதம் பற்றுவேன் . இடைவிடாது பற்றுவேன் .
த்வமேவ மாதா ச த்வமேவ பிதா த்வமேவ பந்துஸ் ச த்வமேவ ஸகா த்வமேவ வித்யா ச த்வமேவ த்ரவிணம் த்வமேவ ஸர்வம் மம தேவ தேவ
ஆருயிர் அன்னையும் நீயே அருமை தந்தையும் நீயே
உறவும் சுற்றமும் நீயே உற்ற நண்பனும் நீயே
கற்கும் கல்வியும் நீயே சேர்க்கும் செல்வமும் நீயே
அனைத்துமாய் ஆன எந்தன் ஆதி தேவனும் நீயே
ரொம்ப முடியாத போது, இருவரும் முதியோர் இல்லத்தில் போய் சேர்ந்து விடுவோம். இந்த வீட்டை விற்று அதை வைத்து வைத்தியம் பார்த்துக் கொள்வோம் .அது தான் சரி ! அதற்கும் இறைவனே ஏதாவது வழி சொல்வான் . நம்பினார். நிம்மதி வந்தது . வந்தது சாந்தி . நம்பினார் . துயர் போனது, போனது துன்பங்கள் (பாரதியார்).. மணி முடிவுக்கு வந்துவிட்டார் . சேர்ந்து மனைவியுடன் வாழ்வோம் . இறைவனை விடாது பற்றுவோம் . மற்றது அவன் விட்ட வழி.
மணிக்கு தெரிந்தது . இப்போது புரிந்தது . இயற்கை மரணம் தவிர்க்க முடியாதது . உடல் அழியக்கூடியது . ஆனால் அகால மரணம் அழகற்ற மிருத்யு . இறந்த பின்னும் இந்த பிரேதம் ஆஸ்பத்திரி, பிரேத பரிசோதனை, சவ கிடங்கு என அலையும் . இந்த அகால மரணம் தேவை தானா?. இறைவன் இருக்கிறான் அவன் பார்த்துக் கொள்வான் ..
கம்பன் சொன்னது நினைவிற்கு வந்தது.
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
அந்த இறைவன் திருவடி நான் என் மனைவி சேர்ந்து பற்றுவோம். அவள் சோர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வோம் .நமக்கு எந்த குறையும் வாராது .
கீதை என்ன சொன்னதோ, மணி அதை அப்படியே கடைபிடித்தார்
மிகவும் முட்டாள்தனமான, மனிதகுலத்தில் மிகத் தாழ்ந்த, மாயையால் அறிவு திருடப்பட்ட, பேய்களின் நாத்திக குணத்தில் பங்குபெறும் அந்த அக்கிரமக்காரர்கள் இறைவனிடம் சரணடைவதில்லை. (கீதை 7.15)
பின்னர் வள்ளுவன் இந்த குறளில் இப்படி சொல்கிறாரே .
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு..
பற்றுக என்கிறாரே ! சரணாகதியை சொல்கிறாரா ? இல்லை இறந்து விடு என்கிறாரா? ஏன் என் மனம் இப்படி அலை பாய்கிறது ?. கூடாது . இதை தவிர்க்க வேண்டும்.
நான் இறைவனை முழுதும் சரனைடைந்தேன் . வள்ளுவனும் பற்றுக என்று சரணாகதி பற்றி தான் சொல்கிறார் . அதில் சந்தேகமேயில்லை . என் உள்மனம் என்னை ஆட்டிப் படைக்கிறது .
மணி இறைவனை முழுவதும் நம்பினார் . நேர்மறை எண்ணம் வேண்டும் தனக்கு தானே சொல்லிக் கொண்டார் . இறைவனை மீண்டும் மீண்டும் சரணடைந்தார்
BG ( கீதை ) 18.66 : எல்லாவிதமான தர்மங்களையும் கைவிட்டு, என்னிடம் மட்டும் சரணடையுங்கள். நான் உன்னை எல்லா பாவ வினைகளிலிருந்தும் விடுவிப்பேன்; பயப்படாதே.
கொஞ்ச நாள் கழிந்தது .
ஒரு நாள் ஒரு தமிழ் நாளிதழில், ஒரு மூலையில் வந்த செய்தி : “மணி என்னும் 73 வயது முதியவர், இன்று அதிகாலை மாடியிலிருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டார் . மணியின் மரணம் விபத்தா , தற்கொலையா எனும் கோணத்தில் போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கிறனர் .
முன்னாள் இரவில், மணியின் வீட்டில் உரத்த குரலில் வாக்கு வாதம், சண்டை சத்தம் என அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலிஸ்காரரிடம் சொல்லிக் கொண்டிருந்தனர் ..
மணி அன்றே டாக்டர் பேச்சை கேட்டிருந்தால் ! மனநல மருத்துவ மனையில் மகனை சேர்த்திருந்தால்? அல்லது, அவரே மனைவியுடன், பராமரிப்புடன் கூடிய ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்திருந்தால்? அவரும் அவர் மனைவியும் இன்று நிம்மதியாக இருந்திருக்கலாமோ? துர்மரணம் நிகழ்திருக்காதோ?
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (குறள்)
கடல் சுனாமி அலை இன்று கரை தாண்டி விட்டது . நிழலாக இருந்தது இன்று நிஜமாகி விட்டது.