கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 5,224 
 
 

திருமணம் முடிந்த அடுத்த நாளே….

என் தம்பி தனஞ்செயன் புதுமாப்பிள்ளை ! மணமேடையில் விழுந்த மச்சான் மோதிரங்களையெல்லாம் கழற்றி என்னிடம் கொடுத்தான்.

வாங்கி எண்ணிய எனக்கு அதிர்ச்சி. ஒன்று குறைந்தது.

சபையில் மோதிரம் போடும்போதே நான் கவனித்தேன். எனது நான்கு தங்கைகளின் கணவன்மார்களும் ஆளுக்கொரு மோதிரம் அணிவித்தார்கள்.

தற்போது புது மச்சான் – பெண்ணின் தம்பி ஒரு மோதிரம் போட்டான். ஆக ஐந்து . ஆனால் என் கையில் இருப்பதோ நான்கு.!

‘இன்னொன்று எங்கே..? ‘விரல்களை பார்த்தேன்.

கையில் மோதிரமில்லை. தொலைத்துவிட்டான்.! திருமணப் பரபரப்பில் கழன்று விழுந்தது தெரியாமல் இருந்து விட்டானா..?

நான் புரியாமல் விழிப்பதைப் பார்த்து….

“என்னண்ணா…? “கேட்டான்.

“இன்னொரு மோதிரம்….?”

“அது அஞ்சலி மாமாகிட்ட இருக்கு..”

‘அவன் திருந்தாத ஜென்மம் .! நாம தலையிட்டும் சரிப்படாத ஆளாச்சே..? – எனக்குச் சொரெக்கென்றது.

“ஏன் அவன்கிட்ட இருக்கு..? “கேட்டேன்.

“என் கை வெறுமனே இருக்கு. அப்புறம் தர்றேன்னு சொல்லி.. தான் போட்டதைக் என் விரல்லேர்ந்து கழட்டி போட்டுக்கிட்டுப் போச்சு.”சொன்னான்.

‘அஞ்சலி புருசன் அறிவொளி ஒரு குடிகாரன். குடிக்கக் கையில் காசில்லை என்று போட்ட மோதிரத்தை வாங்கிப் போய்விட்டானா..?! ‘- எனக்குள் ஓடியது.

அவன் அப்படிப்பட்ட ஆள்தான். சொந்த அத்தை மகன். அப்பாவின் அருமை அக்காள் பையன். அருமையானவன். என் வயசு. 45.

அஞ்சலியைத் திருமணம் செய்யும்போது நல்ல வசதி வாய்ப்பாக இருந்தான். ஐந்து வருடத் தாம்பத்தியத்தில் இரண்டு ஆண் குழந்தைகள்.

அப்புறம்…குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் வந்தது. தொட்டான் குடி கெட்டது. இருந்த வாய்ப்பு வசதி எல்லாம் போய் விட்டது.

அதோடு விட்டாலும் பரவாயில்லை…குடிக்க காசில்லை என்றால் வீட்டிலுள்ள சாமான்கள், பண்டம் பாத்திரம், இருக்கும் புளி, மிளகாய் வரை பறிபோனது. விற்று டாஸ்மாக் வருமானமானது.

நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஆள் கேட்கவில்லை. பஞ்சாயத்து எடுபடவில்லை.

பெரிய போராட்டத்திற்குப் பிறகு….தங்கை சாமர்த்தியம் இருக்கும் நிலத்தை வைத்துக் கொண்டு வயிறு வளர்க்கிறாள். பிள்ளைகளைக் காபந்து செய்கிறாள்.

“ஆள் தெரிஞ்சு ஏன்டா கொடுத்ததே..? “தம்பியைப் பார்த்தேன்.

“எனக்கும் யோசனைதான். மணமேடையில் கேட்கிறாராரே.. எப்படி மறுக்க முடியும்..? “சொல்லிச் சென்றான்.

தங்கை குடும்பங்கள் அத்தனையும் விருந்து, அது இதுவென்று முடிந்து புறப்பட்டுப் போக… இன்னும் இரண்டு மூன்று நாட்களாவது ஆகும். அதற்குள் ஆளைப்பிடித்து வாங்கிவிட வேண்டும் ! ‘மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டு மோதிரங்களைப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தேன்.

எதிரே அஞ்சலி வந்தாள்.

“அஞ்சலி..! உன் புருசன் எங்கே..?”

“ஏன்..? “அவள் கேட்டாள்.

விபரம் சொன்னேன்.

“இப்பத்தான் பெரிய அண்ணனை அழிச்சிக்கிட்டு நெடுங்காட்டிற்கு கறிகாய் வாங்க அனுப்பிச்சேன். மாமா கையில் மோதிரம் இல்லையே..”சொன்னாள்.

“என்னம்மா சொல்றே..? “எனக்குள் திகீர்.

“அம்மாம்ண்ணே ! கறிகாய் வாங்க நான் பணமும் பையும் கொடுக்கும்போது அவர் கையில் மோதிரம் இல்லே. எனக்கு நல்லா நினைவிருக்கு..! “அடித்துச் சொன்னாள்.

ஆக… அதற்குள் மோதிரம் மார்வாடிக்கோ, சாராயக்கடைக்கோ போய் விட்டது ! எனக்குள் ஆத்திரம் துளிர்த்தது.

ஆளைச் சும்மா விடக்கூடாது. பிடித்து நாலு உலும்பல் உலும்பினால்தான் அதன் நிலவரம் தெரியும். இந்த அதிரடியில் ஆள் அடியோடு குடியை விட்டுத் திருந்த வேண்டும். ! – கறுவிக்கொண்டு நகர்ந்தேன்.

என் கடுகடு முகத்தைப் பார்த்த தங்கை அஞ்சலி முகத்தில் கலவரம். !

“அண்ணா..! “அழைத்தாள்.

“என்ன..? “நகர்ந்த நான் நின்றேன்.

“ஒரு நிமிசம் தனியே வா..”நடந்தாள்.

இருவரும் வீட்டுக்கு வெளியே வந்தோம்.

“அண்ணா.. ! மோதிரம் அவர்கிட்ட இல்லே. என்கிட்டே இருக்கு…”சடக்கென்று கலங்கினாள்.

“ஏய்…!!…”அதிர்ச்சியாய்ப் பார்த்தேன்.

“உள்ளாற நீ கூட்டத்துல கேட்டதால உண்மையைச் சொல்லலை..”

“எங்கே காட்டு..?”

“வேணாம்..!”

“ஏன்..??..”

“அது கவரிங்..”

“அஞ்சலீஈஈ…”

“ஆமாம்ண்ணா. என் கூடப் பிறந்த அக்கா தங்கச்சிகள் எல்லாம் சபையில் மோதிரம் போடும்போது…… என்னதான் வறுமையா இருந்தாலும் நான் போடாம இருக்குறது எனக்கு அவமானமில்லையா..?! அதனால… கையில இருந்த காசுக்கு ஒரு பவுன் அளவுல ஒரு கவரிங் மோதிரம் வாங்கி மாட்டிவிட்டு தற்போதைக்கு என் மானத்தைக் காப்பாத்திக்கிட்டேன். பின்னால தெரிஞ்சு குழப்பம் வரக் கூடாதுன்னு மாமாகிட்ட சொல்லி வாங்கி வரச் சொல்லி வாங்கி வச்சுக்கிட்டேன். அடுத்த மாசம் அறுவை நடக்கும். கையில் காசு வரும் செஞ்சு போட்டுடுறேண்ணே.அவரு இப்போ அஞ்சு மாசமா என் கெடுபிடியில புள்ளைங்க மேல சத்தியம் செய்துட்டு குடிக்காம இருக்கார். என்னை மன்னிச்சுடுண்ணே..! “விசும்பி புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்தாள்.

அந்தக் கண்ணீர் என் பாச நெஞ்சுக் குழிக்குள் படக்கென்று விழுந்து வலியை உண்டாக்க…

சடக்கென்று தங்கையை ஆதரவாக அணைத்து…

“நீ ஒன்னும் செய்யவேணாம். புருசன், புள்ளைங்களோட சந்தோசமா இரு. அது போதும்.”

தலையை வருடினேன். கண்கள் கலங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *