அதிகாரம் 13-15 | அதிகாரம் 16-17 | அதிகாரம் 17(தொடர்ச்சி…)-18
அதிகாரம் 16 – திரிசங்கு சொர்க்கம்
மேனகா காணாமற்போன தினத்திற்கு நான்காம் நாள் காலை ஏழுமணி சமயம், சாமாவையர், பெருந்தேவியம்மாள், கோமளம் ஆகிய மூவரும் வழக்கப்படி வராகசாமியின் வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருந்தனர். அதற்கு முதல் நாள் மாலையிலே தான் வராகசாமி மோட்டார் வண்டியின் கீழ் அகப்பட்டுக் கொண்டான் ஆகையால், அவர்களுடைய முகம் மிகவும் கவலையைத் தோற்றுவித்தது. பெருந்தேவியம்மாள் சாமாவையரைப் பார்த்து, “மேனகா போன விஷயத்தைப் பற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் உன்னிடம் கேட்டார் என்றாயே! அவருக்கு இதை யார் சொல்லி இருப்பார்கள்? ஒரு வேளை மேனகா மரக்காயன் வீட்டிலிருந்து தப்பித்துக்கொண்டு தஞ்சாவூருக்குப் போயிருப்பாளோ? அங்கிருந்து அவளுடைய அப்பன் இந்த ஊர் போலீஸாருக்கு இதைப்பற்றி எழுதியிருப்பானோ? காரியம் அப்படி நடந்திருந்தால் நம்முடைய பாடு திண்டாட்டந்தான்” என்றாள்.
உற்சாகமற்றவராய் இருந்த சாமாவையர், “நன்றாய்ச் சொன்னாய்! நீ மரக்காயன் வீட்டுக்குள் வந்து பார்த்திருந்தும் இந்தச் சந்தேகம் உனக்கேன்? அவன் மாளிகைக்குள் இரகசியமான அறைகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் ஒரு அறைக்குள் மேனகாவை விட்டு பூட்டி யிருக்கிறானே! அவள் இனி வெளியில் வருவது எமலோ கத்துக்குப் போன உயிர்மீளுவதைப் போலத்தான். இந்த விஷயத்தில் மரக்காயன் மகா கெட்டிக்காரன் அல்லவா; அவனுக்குத் தெரியாத தந்திரமே இல்லை. அவன் வீட்டில் நானும், இன்னும் எத்தனையோ குமாஸ்தாக்களும், ஏராளமான வேலைக்காரர்களும் வேலைபார்த்து வருகிறோமே! அவன் வீட்டில் நடந்த இந்த விஷயம் யாருக்காவது தெரியுமா? ஒருவருக்கும் தெரியாது; காதும் காதும் வைத்த மாதிரி இது நடந்து போயிருக்கிறது. அவன் ஒன்றையும் அறியாதவனைப் போலவும், ஏதோ வியாபார நிமித்தம் போகிறவன் போலவும், நாகைப்பட்டணம் போய்விட்டானாம். அவளையும் நாகைப்பட்டணத்திற்குக் கொண்டு போய் பந்தோபஸ்தாக வைத்திருக்கிறானோ, அல்லது, அவனுக்கு அந்தரங்கமான ஒரு வேலைக்காரி இருக்கிறாள், அவள் வசம் மேனகாவை ஒப்புவித்துப் போயிருக்கிறானோ தெரியவில்லை. எந்த வகையிலும் அவள் அவனிடமிருந்து தப்பிப் போயிருக்க முடியாது” என்றார்.
பெரு:- அப்படியானால் டிப்டி கலெக்டரே நேற்று நமக்கு கொடுத்த தந்தியோடு போலீசாருக்கும் தந்தி கொடுத்திருக்க வேண்டும்.
சாமா:- அப்படி யிருக்கலாம்.
கோமளம் :- அவள் மரக்காயனுடைய வீட்டிலிருந்து கொண்டே போலீசாருக்காவது, அவளுடைய அப்பனுக் காவது, வராகசாமிக்காவது கடிதம் எழுதி; நாமே துலுக்கனிடம் அவளை விற்றவர்களென்று தெரிவித்துவிட்டால், போலீசார் அவனைப் பிடித்துக் கொள்வார்களே! தான் தப்பும் பொருட்டு அவனே நம்மைக் காட்டிக்கொடுத்துவிட்டால், நாம் என்ன செய்கிறது?
சாமா:- பைத்தியந்தான்; அவள் கடிதம் எழுதி நாக்கை வழித்துக்கொள்ள வேண்டியது-தான்; அந்தக் கடிதத்தை வெளியில் யார் எடுத்துக்கொண்டு போய் தபாலில் சேர்க்கிறது? முதலில் அவளுக்கு அங்கே காகிதம் யார் கொடுக்கப் போகிறார்கள்? அதைப்பற்றிக் கவலையே யில்லை. அவனுடைய தலை போவதாயினும், அவன் நம்மை ஒருநாளும் காட்டிக் கொடுக்க மாட்டான். அவன் வீட்டிற்குள் போலீசார் திடீரென்று நுழைந்துவிட முடியுமோ? உள்ளே இருக்கும் கோஷாப் பெண்டுகள் அப்புறம் போக சாவகாசம் கொடுத்த பிறகே போலீசார் உள்ளே நுழைய வேண்டும். அதற்குள் மேனகா பூமிக்குள்ளிருக்கும் அந்தரங்க அறைக்குள் விட்டுப் பூட்டப்படுவாள். அந்த இடத்தை எவனும் கண்டு பிடிக்க முடியாது; அந்தச் சாமர்த்தியம் இல்லாமல் போனால், அவன் துணிந்து இதில் இறங்குவானா?
கோமளம் :- அவனுடைய வீட்டுக்குள் இருக்கும்போது அவளைக் கண்டுபிடிக்க முடியாது. அது சரிதான். அவள் அங்கிருக்கும் வேலைக்காரிக்கு லஞ்சம் கொடுத்து வெளியில் வந்து விடுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீ என்ன செய்வாய்?
பெரு:- அடி முட்டாளே! போ; அவள் வெளியில் வந்தால் அதனால் நமக்கென்ன கெடுதல்? மாயாண்டிப்பிள்ளை தான் கடிதம் எழுதியிருக்கிறானே! மாயாண்டிப்பிள்ளை அவளைத் தள்ளிவிட்டான்; அவனிடமிருந்துதான் வந்திருக்கிறாள் என்று நாங்கள் சொல்லிவிடுகிறோம். அதன் பிறகு அவள் ஆயிரம் சொல்லட்டுமே. அவளுடைய சொல்லை யார் நம்புவார்கள்? நம்மீது சொல்ல அவளுக்கு என்ன சாட்சி இருக்கிறது? அவள் எதைத்தான் சொல்லிக் கரடியாய்க் கத்திய போதிலும் சரி; நாமே அவள் விஷயத்தில் பரிந்து பேசி சிபாரிசு செய்தாலும் சரி; வராகசாமி இனி தன் உயிர்போவதானாலும் அவளை ஒரு நாளும் அழைத்துக்கொள்ள மாட்டான். ஓடிப் போனவளை அழைத்துக்கொண்டான் என்னும் தூஷணைக்கு அவன் ஒருநாளும் இணங்கமாட்டான். அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலையில்லை. இந்த அசடு போய் மோட்டார் வண்டியில் விழுந்து அறைபடுமோ; பட்டப்பகலில் கண் அவிந்தா போய்விட்டது! இதுவல்லவோ சகிக்கக் கூடாத கஷ்டமா யிருக்கிறது. நேற்று முதல் இன்னமும் கண்ணைக்கூடத் திறக்கவில்லையாமே! அவன் கதி என்னவாகுமோ தெரிய வில்லையே! நம்மை அங்கே இருக்கவிடமாட்டேனென் கிறார்களே! வழியில் போகிறவர்களுக்கு நம்மைப்பார்க்கிலும் அதிகக் கவலைபோலிருக்கிறதே!”
சாமா :- சே! அப்படிச் சொல்லாதே; நாம் அங்கே இல்லாவிட்டாலென்ன? அவர்கள் எவ்வளவு கவலையோடும் உபசாரம் செய்து பார்த்துக்கொள்ளுகிறார்கள் தெரியுமா! மணிக் கணக்குப்படி யல்லவா ஒவ்வொரு காரியமும் செய்கிறார்கள். அவனை இப்போது பார்த்துவிட்டே இப்படி நடுங்குகிறாயே, நேற்று சாயுங்காலம் கடற்கரையில் அவன் பயங்கரமாக விழுந்து கிடந்தபோது பார்த்திருந்தால் என்ன சொல்லமாட்டாயோ! பாவம் தரை முழுதும் இரத்தம் சிறிய குளத்தைப் போல தேங்கி உறைந்து போய்க் கிடந்தது. வண்டி முழங்காலின் மேல் ஏறிப்போய்விட்டதாம்; அங்கே ஒரு எலும்பு முறிந்து போயிருப்பதாகத் தெரிகிறதாம்; பெரிய டாக்டர் துரை யதனால் தான் மிகவும் பயப்படுகிறாராம். அவன் பிழைத்தால் பழையபடி எழுந்து நடக்க ஒரு மாசத்துக்கு மேலாகும்.
பெரு:- ஹோட்டலில் காப்பி சாப்பிடப் போகிறேனென்று சொல்லிவிட்டுப் போனவன் கடற்கரைக்கு ஏன் போக வேண்டும்! இவன் போகாமல் அங்கே என்ன மகா காரியம் கெட்டுப் போய்விட்டது! பெண்டாட்டி போய்விட்டால், கடற்கரையில் என்ன திண்டாட்டம் வேண்டியிருக்கிறது! இது வரையில் இல்லாத அருமைப் பெண்டாட்டியை இப்போ தென்ன கண்டுவிட்டது.
சாமா:- நான் நேற்றைய தினமே சொன்னேன்; அவனை போது தனிமையில் வெளியில் விடக் கூடாது என்றேன். அது நிஜமாய் முடிந்தது. இதனால் என்னுடைய நாகைப் பட்டணப் பிரயாணங்கூட வீணாய் நின்று போய் விட்டது. நான் வீட்டில் பணத்தை வைத்துவிட்டு வெளியில் போய் தெருத்தெருவாய் அலைந்து தேடிப்பார்த்தேன்; அவன் எங்கும் காணப்படவில்லை. ஒருவேளை கடற்கரைக்குப் போயிருப்பானோ என்று ஒருவித சந்தேகம் உதித்தது. பார்த்தசாரதி கோயிலுக்கு எதிரிலுள்ள சந்தின் வழியாக சமுத்திரக் கரைக்குப் போய் மணலில் மூலை முடுக்கெல்லாம் தேடினேன். அதற்குள் ஜனங்கள் கூக்குரல் செய்து கொண்டு பாட்டைக்கு ஓடினர். அது என்னவோவென்று அஞ்சி நானும் ஓடினேன். ஓடிப் பார்க்கிறேன். இவன் விழுந்துகிடக்கிறான். என்ன செய்கிறது! என் தேகம் அப்படியே பதறிப் போய்விட்டது. நல்ல வேளையாக அங்கே அப்போது ஒரு தனிகருடைய மோட்டார் வண்டி வந்தது. அவர் பவழக் காரத் தெருவில் இருப்பவராம்; அவர் பெயர் முத்தையன் செட்டியாராம்; எங்கேயோ அவசர காரியத்தின் மேல் போனவர், இந்த கோரமான காட்சியைக் கண்டு மனவிரக்கங் கொண்டு, அதில் வராகசாமியையும், என்னையும் வைத்துக்கொண்டு போய் ராயப்பேட்டை வைத்தியசாலையில் விட்டுப்போனார்.
பெரு :- அவர் நல்ல தயாள குணமுள்ள மனிதர் போலிருக்கிறது! எல்லாப் பெரிய மனிதர்களும் இப்படி இருக்க மாட்டார்கள். இப்படி எவனாவது விழுந்திருக்கக் கண்டால், அவர்கள் இன்னொரு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடுவார்கள் – என்றாள்.
அப்போது டிக்டிக்கென்ற காலடியோசையுடன் நடையில் வந்த யாரோ ஒருவர் “சாமாவையர்!” என்று கூப்பிட்டார். அந்தக் குரலைக் கேட்ட இவர்கள் மூவரும் திடுக்கிட்டு வாசற் பக்கம் நோக்கினர். அடுத்த நொடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமயசஞ்சீவி அய்யர் உட்புறம் நுழைந்தார். அவருடைய கருடப் பார்வையும் கம்பீரத் தோற்றத்தையும் இராஜவேஷ நடையையும் கண்ட அம்மாள்கள் இருவரும் நடுநடுங்கி, எழுந்து நாணிக்கோணி சமையலறைக்குள் புகுந்து மறைந்தனர். சாமாவையர் விரைவாகத் தமது ஆசனத்திலிருந்து எழுந்து, “வாருங்கள் அண்ணா ! இப்படி வாருங்கள்; ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று கையைக் காட்டி நாட்டியமாடி, அவரை கூடத்திற்கு அழைத்து வந்து ஊஞ்சலில் உட்காரவைத்தார்.
போலீஸ்:- உட்காருவது இருக்கட்டும்; எப்போதுந்தான் உட்கார்ந்து கொண்டே இருக்கிறோம்; வந்த காரியத்தைப் பார்ப்போம். இந்த வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்? வராகசாமி அய்யங்காரின் அக்காள், தங்கை ஆகிய இருவரைத் தவிர வேறு ஒருவரும் இல்லையே?
சாமா:- ஆம்; வேறு ஒருவரும் இல்லை.
போலீஸ் :- அன்றைக்கு ராத்திரி என்ன நடந்தது? அவருடைய தமக்கையை இப்படிக் கூப்பிடும்; அந்த அம்மாளுடைய வாக்குமூலம் வாங்க வேண்டும் – என்றார்.
உடனே சாமாவையர் சமையலறைப்பக்கம் திரும்பி, “பெருந்தேவியம்மா! இப்படி வா. அன்றைக்கு ராத்திரி நடந்ததைச் சொல்” என்றார்.
கதவின் மறைவில் நின்ற பெருந்தேவியம்மாள், “நீதான் சொல்லேன். என் வாயால்தான் வரவேண்டுமா” என்றாள்.
சாமா:- கச்சேரியில் உனக்குப் பதிலாக நான் சாட்சி சொல்ல முடியுமா? நீதான் சொல்ல வேண்டும்; அன்றைக்கு நடந்தது எனக்குத் தெரியுமா? உனக்குத்தானே நேரில் தெரியும்.
பெரு :- அன்று ராத்திரி 7 1/2 மணிக்கு நீயும் வராகசாமியும் ரயிலுக்குப் புறப்பட்டுப் போனபிறகு நாங்கள் மூன்று பேரும் சாப்பிட்டுக் கையலம்பினோம். கோமளம் பாயைப்போட்டுப் படுத்துக் கொண்டவள் அரை நாழிகைக்கெல்லாம் தூங்கி விட்டாள். நானும் மேனகாவும் பேசிக்கொண்டிருந்தோம். சுமார் 8, 812 – மணி இருக்கலாம். அம்மா! அம்மா!! வென்று கூப்பிட்டுக் கொண்டு உள்ளே ஒருவன் வந்தான். “யாரடா?” என்றேன். “நான் தஞ்சாவூர் டிப்டி கலெக்டருடைய சேவகன் ரெங்கராஜு; எஜமான் வாசலில் பெட்டி வண்டியில் இருக்கிறார்; மகளோடு பேசவேண்டுமாம்; கூப்பிடுகிறார்” என்றான் அவன். உடனே மேனகா புறப்பட்டு வெளியில் போனாள். வாசலில் நின்ற பெட்டி வண்டியிலிருந்த மனிதரோடு பேசிக் கொண்டு கொஞ்ச நாழிகை நின்றாள். பிறகு அவர் பெட்டி வண்டியின் கதவைத் திறந்தார். அவளும் ஏறி உள்ளே உட்கார்ந்து கொண்டாள். உடனே வண்டி போய்விட்டது. நடந்தது இவ்வளவுதான் – என்றாள்.
போலீஸ் :- அந்தச் சேவகன் சாதாரணமான உடை தரித்திருந்தானா? அல்லது சேவகனைப் போல சர்க்கார் உடுப்புப் போட்டிருந்தானா?
பெரு :- ஆம், தலைப்பாகை, நீண்ட சட்டை, வெள்ளி வில்லை முதலிய அலங்காரத்துடன் வந்தான்.
போலீஸ் :- அதற்குமுன் அவன் எப்போதாவது, டிப்டி கலெக்டருடன் வந்திருக்கிறானா? அல்லது வந்தவனைப் போலாகிலும் இருந்தானா?
பெரு:- ஒரு வருஷத்துக்கு முன், அவரோடு இரண்டு சேவகர்கள் வந்தார்கள் எனக்கு. அவ்வளவாக ஞாபகமில்லை. வன் அவர்களில் ஒருவனாக இருக்கலாம்; ஆனால், நான் வனை அவ்வளவு நன்றாகக் கவனிக்கவில்லை.
போலீஸ்:- பெட்டி வண்டியில் இருந்தவர் டிப்டி கலெக்டர் தானே? அதைப்பற்றி சந்தேகம் இல்லையே?
பெரு :- நான் சமீபத்தில் நெருங்கிப் பார்க்கவில்லை. முற்றத்தில் நின்றுகொண்டு பெட்டிவண்டியைப் பார்த்தேன். தலைப்பாகை, சட்டை, திருமண் முதலியவற்றுடன் ஒருவர் வண்டியில் இருந்தார். அவர் டிப்டி கலெக்டர் என்றே அப்போது நினைத்தேன். அவர் இல்லாவிட்டால் மேனகா நின்று பேசமாட்டாள் ஆகையால் வந்தவர் அவர்தான் என்று நிச்சயமாக நினைத்தேன்.
போலீஸ்:- அந்தப் பெண் பிறகு இதுவரையில் திரும்பி வர வில்லையா?
பெரு:- இல்லை.
போலீஸ்:- இதற்கு முன் அவர் பெண்ணை எப்போது இங்கே கொணர்ந்து விட்டார்?
பெரு :- ஒரு வாரத்திற்கு முன்.
போலீஸ்:- அப்படியானால், இவ்வளவு சீக்கிரமாக மறுபடியும் வந்து அழைத்துப் போகக் காரணமென்ன?
பெரு :- அதுதான் எங்களுக்குத் தெரியாமையால் தவிக்கிறோம். அதைப்பற்றி அவரையே கேட்கவேண்டும்; கேட்டு உண்மையை எங்களுக்குத் தெரிவிப்பீர்களானால் உபகாரமா யிருக்கும் – என்றாள்.
போலீஸ் இன்ஸ்பெக்டர், “சரி; அப்படியே செய் கிறோம்” என்று ஒருவாறு புரளியாகக் கூறிவிட்டு , “சாமாவை யரே! இதில் உமக்கென்ன தெரியும்?” என்றார்.
சாமா:- நான் வராகசாமியைக் கொண்டுபோய் ரயிலில் ஏற்றி விட்டு வந்தேன். அப்போது மணி ஒன்பது இருக்கலாம். இங்கே வந்தவுடன் வாசலில் உட்காந்திருந்த பெருந்தேவி யம்மாள் என்னைக் கூப்பிட்டு இப்படி நடந்ததென்ற விவரம் தெரிவித்தாள்; மேனகா கூட தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டாளே என்று வருத்தப் பட்டாள். ஒருவேளை அவர் எங்கேயாவது அறிமுகமான இடத்துக்கு அவளை அழைத்துக்கொண்டு போயிருப்பார் என்றும், திரும்பவும் கொணர்ந்து விட்டுவிடுவார் என்றும், கவலைப் படவேண்டாம் என்றும் சொல்லிவிட்டு நான் என் கிரகத்துக்குப் போய்விட்டேன்; மேனகா பிறகு இதுவரையில் வரவே இல்லை – என்றார். அவர்கள் இருவரின் வாக்குமூலங்களையும் காகிதத்தில் எழுதிக்கொண்டே வந்த இன்ஸ்பெக்டர் அடியில் அவர்களுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டுப் போனார். சாமாவையர் திரும்பவும் விதவை களோடு பேசிக்கொண்டிருந்தார்.
வெளியிற் சென்ற இன்ஸ்பெக்டர் தமது கைக் கடிகாரத்தைப் பார்த்தார்; எட்டு மணி ஆகியிருந்தது. வாசலிலிருந்த இரண்டு ஜெவான்களையும் அழைத்துக் கொண்டு அவர் எதிர்த்த வீட்டின் திண்ணைக்குப் போய் உட்கார்ந்து கொண்டார். அந்த மூன்று செந்தலைப் பூச்சிகளையும் கண்ட அவ்வீட்டு மனிதர் தமக்கு எத்தகைய துன்பம் நேரப்போகிறதோ வென்று பெரிதும் அச்சங்கொண்டு நடு நடுங்கி, செய்யவேண்டுவதை அறியாமல், உள்ளேயே உட்கார்ந்து விட்டனர். அண்டை வீட்டுக்காரர்கள் யாவரும் ஒன்றுகூடி மகாபுத்திசாலித்தனமான பல யூகங்களைச் செய்யலாயினர். போலீசார் உட்கார்ந்திருந்த வீட்டிற்குள் ஏதோ திருட்டுச் சொத்திருப்பதாகவும், அந்த வீட்டைப் போலீசார் சோதனை போடப்போகிறார்கள் என்றும் அந்த வீட்டில் உள்ளோரைக் கைதி செய்து விலங்கிட்டுக் கொண்டுபோகப் போகிறார்கள் என்றும் பலவாறு கூறிப் புரளி செய்திருந்தனர். எவரும் தம் தம் வேலையைக் கவனிக்கவே மனமற்றவராய், அவ்விடத்தில் நடக்கப்போவ தென்ன என்பதைப் பார்க்க ஆவல்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
கால்மணி நேரம் கழிந்தது. அப்போது ஒரு குதிரைவண்டி ஜல் ஜல் ஜல் என்று சதங்கையோசை செய்துகொண்டு வந்தது; ஆடம்பரம் மாத்திரம் அதிகமா யிருந்ததே யன்றி, குதிரையோ மாதம் காதவழி மயமாய்ப் பறக்கும் நீலவேணிக் குதிரை; அதன் வயது சொற்பமே. அது உயிர்விட வேண்டிய முடிவுகாலம் ஆனபிறகு மேலே கொசருக்கு மூன்று நான்கு வருஷங்களே ஆயிருக்கலாம். உடம்பு முற்றிலும் முகத்திலும் எலும்புகள் மாத்திரம் இருந்தமையால், அது குதிரையைப் போலவும் இருந்தது. கழுதையைப் போலவும் இருந்தது. ஒவ்வொரு கண்ணிலும் எழுமிச்சங்காய் அளவு கையளவு வெண்ணெய் திரண்டிருந்தது. சதங்கை யொலிக்குச் சரியான பின் புறக்கால் ஒன்றோடொன்று மோதி தத்தோம் தகதோமென்று தாளம் போட்டு பஜனை செய்தன; அதற்கு வருஷம் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் விரத தினங்கள்; வயதான ஜெந்துவாதலால் அவ்வாறு பஜனை செய்து பட்டினி கிடந்து அடுத்த உலகத்துக்குத் தன்னைத் தயார் செய்துகொண்டு வந்தது. ஆனால், முகமெல்லாம் பட்டுக் குஞ்சங்கள் அழகு செய்தன. உடம்பு முழுதும் இழைத்திருந்ததாயினும், அதன் வால் மயிரும், அதை ஒட்டிய சாயிபுவின் தாடி மயிரும் கொஞ்சமேனும் இளைக்காமல், இரண்டு சாமரங்களாய் அசைந்து குதிரையின் எண்ணிறந்த புண்களில் மொய்த்த ஈக்களை ஓட்ட உதவியா-யிருந்தன. அந்த வண்டிக்குள் வருபவர் யாவரென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் உற்று நோக்கினார். வண்டி அடுத்த நிமிஷத்தில் வந்து வராகசாமியின் வீட்டு வாசலில் நின்றது.
அதற்குள்ளிருந்து கீழே இறங்கிய சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய இருவரும் அவ்வண்டியின் குதிரையைப் போல உயிரற்றவரைப் போல காண்போர் இரக்கங் கொள்ளும் வண்ணம் பரிதாபகரமான நிலையில் இருந்தனர். எப்போது பட்டணம் வருவோம், எப்போது தமது பெண்ணிருந்த இடத்தைக் கண்டு உண்மையை அறியப் போகிறோம் என்று ஆவல் கொண்டு இரவு முழுதும் கண் மூடாமல் முதல் நாட் காலையிலிருந்து தண்ணீரும் அருந்தாமல் பெருத்த வேதனை அடைந்து தவித்து வந்தனர் ஆதலின், அவர்களுடைய உடம்பில் உற்சாகம் என்பது ஒரு சிறிதும் காணப்படவில்லை. அதிகாலையில் தனது இளங்கன்றை விடுத்துப்பிரிந்த பசு மாலையில் கன்றைப் பார்க்க ஆவலும் இரக்கமும் கொண்டு ஓடி வருதலைப் போல வராகசாமியின் வீட்டைக் கண்டவுடனே அவர்களுடைய உள்ளம் பொங்கி எழுந்து பதறியது. மேனகா இருக்கமாட்டாளே என்று அவர்களுடைய மனது நம்பவில்லை. உள்ளே நுழைந்தவுடன் அவளைக் காணலாம் என்னும் மூடநம்பிக்கை கொண்டவராய், வண்டியிலிருந்து இறங்கி உடபுறம் விரைந்து சென்றனர்.
வண்டிக்காரன் வண்டியை ஓட்டிச் செல்லாமல், அவ்விடத்திலேயே அதை நிறுத்திக்கொண்டிருந்தான். எதிர்த்த வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்த போலீஸ் இன்ஸ் பெக்டர் சைகை செய்து வண்டிக்காரனை அழைத்தார். அவன் இன்ஸ்பெக்டரிடம் பன்முறை சூடுண்டவன் ஆதலின், எமனைக் கண்ட உயிரைப் போல, அவன் நடுநடுங்கி ஓடி வந்து, எண் சான் உடம்பையும் ஒரு சாணாய்க் குறுக்கிக் குனிந்து சலாம் செய்தான்.
மகா கம்பீரமாகவும் அலட்சியமாவும் அவனைப் பார்த்த இன்ஸ்பெக்டர், “அடே தாடிமியான்! என்னடா ஜோர்மேலே ஓட்டுகிறாய்? இரட்டைக் குதிரை சவாரியோ ? சிவப்புக் குதிரை மேலே வண்டி; வெள்ளைக் குதிரைமேலே நீ! நல்ல வேட்டை தானோ? எங்கிருந்து வருகிறாய்? கூலி ஒரு ரூபாயாவது இருக்குமா ?” என்றார்.
வண்டிக்காரனுக்கு அடி வயிற்றில் நெருப்பு விழுந்தது. தான் வண்டியை மிதமிஞ்சிய விசையில் ஓட்டினதாக அவர் எழுதி தனக்கு பத்து இருபது அபராதம்போட்டு வைப்பாரோ வென்று நினைத்து அச்சங்கொண்டவனாய், “இல்லே நாயனா! ஏளேமேலே கோவம் வைக்காதிங்க நாயனா! நம்பிளுக்கு புள்ளே குட்டீங்கோ பத்து பதினஞ்சு இருக்கான், பஞ்சகாலம் நாயனா! ஒங்க காலுக்கு நம்ப சலாம் செய்யறான் நாயனா! மனசுலே கோவம் வைக்கவேணாம் நாயனா! வண்டி எளும்பூரிலே யிருந்து வந்திச்சு நாயினா! வண்டியிலே வந்தவரு தஞ்சாவூருதுப்பட்டி கலையக்கட்டராம் நாயனா! இன்னேக்கி முளுக்க வண்டி பேசியிருக்கான் நாயனா ரெண்டே ரூவாதான்; அதிக மில்லீங்கோ நாயனா” என்ற தனது பற்களைக் காட்டிக் காட்டிக் கெஞ்சிக் கூத்தாடினான்.
அதைக்கேட்ட போலீஸ் இன்பெக்டர் வியப்பைக் கொண்டவரைப்போலக் காட்டி’ “ஓகோ! தஞ்சாவூர் டிப்டி கலெக்டரா வந்திருப்பவர் ! இவருடன் நான் அவசரமாகப் பேசவேண்டும். நல்லது நீ ஒரு வேலை செய்; இவர் மறுபடியும் வண்டியில் ஏறியவுடன் இவரிடம் சொல்லாமல் வண்டியை நம்முடைய ஸ்டேஷன் வாசலுக்குக் கொண்டுவா. நாங்கள் பேசிய பிறகு நீ அவர் போகச் சொன்ன இடத்துக்கு ஓட்டலாம், தெரியுமா? நான் போகலாமா? இந்த ஜெவான்களை இங்கே வைத்துவிட்டுப் போகிறேன்; வராமல் தவறி ஓட்டிக் கொண்டு போவாயானால் முதுகு தோலை உரித்து விடுவேன், ஜாக்கிரதை” என்றார்.
வண்டிக்காரன் குனிந்து குனிந்து சலாம் செய்து, “அப்பிடியே ஆவட்டும் நாயனா! நம்பளோட ரோக்கியம் இதுல பாரு நாயனா! நாம்ப முசல்மான் நாயனா! நம்ப வாயிலே பொய் வரமாட்டான் நாயனா! நீங்க போவலாம் நாயனா” என்றான்.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெவான்களிடம் ஏதோ இரகசியமாகப் பேசிய பிறகு அவர்களை அவ்விடத்தி லேயே உட்காரவைத்து விட்டு தம்முடைய ஸ்டேஷனுக்குச் சென்றார். வண்டிக்காரன் வராகசாமி வீட்டு வாசலையடைந்து அன்றைப் பொழுது அபராதம் இல்லாமல் நல்ல பொழுதாய்ப் போகவேண்டுமே யென்று அல்லாவைத் தொழுது கொண்டிருந்தான்.
சாம்பசிவம் முன்னும் கனகம்மாள் பின்னுமாக இருவரும் உட்புறஞ் சென்றனர். கூடத்தில் நின்றுகொண்டிருந்த சகோதரிமார் இருவரும் அவர்களைக் கண்டவுடன் பெரிதும் அருவருப்பைக் காட்டிய முகத்தோடு, “வாருங்கள் !” என்று ஒரு உபசார வார்த்தை கூடச் சொல்லாமல் அசைந்தாடிக்கொண்டு அலட்சியமாக சமையலறைக்குள் நடந்தனர். ஊஞ்சற் பலகையில் இருந்த சாமாவையர் மாத்திரம் திடுக்கிட்டெழுந்து டிப்டி கலெக்டருக்கு மரியாதை செய்து , “வாருங்கள் அண்ணா ! வாருங்கள் பாட்டியம்மா!” என்று அன்போடு இருவரையும் வரவேற்று உபரசணை செய்தார்.
சந்திர பிம்பம் போல இனிமையே வடிவாகத் தமது பெண்மணி மேனகா தம்முன் தோன்றுவாளோ வென்று நினைத்து மனப்பால் குடித்தவராய் வந்த அவர்களுக்கு அந்த வீடு இழவு வீழ்ந்ததனால் பாழ்த்துப்போன வீட்டைப்போலத் தோன்றியது. பெருந்தேவி கோமளம் இருவரும் எந்த நாளிலும் அவர்களுடன் அன்னியோன்னியமாகப் பேசிப் பழகியோர் அல்லர். என்றாலும், வரும் போது “வாருங்கள்” என்று சொல்வது மாத்திரமுண்டு. அந்த வாயுபசரணையும் இப்போது இல்லாமற் போனது. தமது பெண் போனமையால் அந்த மரியாதையும் அவளுடன் போயிருப்பதாக அவர்களிருவரும் நினைத்து அதைப்பற்றிச் சிறிதும் மனவருத்தங் கொள்ள வில்லை. அவர்களுடைய மனம் பெண்ணைப் பற்றிய கவலையால் பெரிதும் உலைப்பட்டு அவளைப்பற்றி எவ்விதமான செய்தியைக் கேட்போமோ வென்று கரைகடந்த ஆவல் கொண்டு தத்தளித்தது. அவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாய்த் தோன்றியது. அவ்விருவரும் எதிரிலிருந்த தண்ணீர்க் குழாயில் கால்களை அலம்பிக் கொண்டு கூடத்திற் புகுந்தனர். சாம்பசிவம் ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்தார். கனகம்மாள் ஒரு கம்பத்தருகில் நின்றாள். அதற்குள் சாமாவையருடைய முகம் முற்றிலும் மாறுதல் அடைந்தது; மனம் கலங்கியது. அவர்களிடம் எவ்விதமாகப் பேசுவதென்பதை அறியாமல் தடுமாற்றம் அடைந்தார். என்றாலும் ஏதாயினும் ஒன்றைச் சொல்லவேண்டு மென்று நினைத்து, “போட்மெயிலில் தானே வந்தீர்கள்?” என்றார்.
அதைக் கேட்ட சாம்பசிவம், “ஆம்; வேறு வண்டி யேது? எங்கே மாப்பிள்ளையைக் காணோமே? பெரிய வக்கீல் வீட்டுக்குப் போயிருக்கிறாரோ?” என்றார்.
உடனே சாமாவையர் பெரிதும் விசனத்தோடு சிரத்தைக் கீழே கவிழ்த்தார்; இரண்டொரு நிமிஷநேரம் மௌன மாயிருந்தார். பிறகு, “அதை ஏன் கேட்கிறீர்கள்! பட்டகாலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்பது போல எல்லா ஆபத்தும் நமக்கே வந்து சேருகிறது” என்றார். எதிர்பாராத அந்தப் பயங்கரமான சொல்லைக் கேட்க அவர்களுடைய பதை பதைப்பு ஒன்றுக்கு நூறாய்ப் பெருகியது. சாம்பசிவம் சாமாவையருடைய வாயிலிருந்து என்ன விபரீத சமாச்சாரம் வெளிப்படுமோவென்று அஞ்சினார்; அவருடைய வாயையே நோக்கி வண்ணம், ” என்ன விசேஷம் ?” என்று ஆவலோடு கேட்க, சாமாவையர், “நேற்று காலையில் சேலத்திலிருந்து வராகசாமி திரும்பி வந்தான். வந்தவுடன், மேனகா காணாமற் போனதைப் பற்றிக் கேள்விப் பட்டு நிரம்பவும் விசனமடைந்தான்; ஜலபானம்கூடச் செய்யாமல் பைத்தியம் பிடித்தவனைப்போல பிதற்றிக் கொண்டிருந்தான். சாயுங்காலம் எழுந்து ஒருவருக்குந் தெரியாமல் கடற்கரைக்குப் போய்விட்டான் போலிருக்கிறது. அதற்கப்புறம் தற்செயலாக நான் இங்கே வந்தேன். வராகசாமி எங்கே என்றேன். ஹோட்டலில் காப்பி சாப்பிடப்போவதாகச் சொல்லி விட்டுப் போனான் என்று இவர்கள் சொன்னார்கள். நான் உடனே அவனைத் தேடிக்கொண்டு தெருத்தெருவாய் அலைந்தேன். அவன் எங்கும் அகப்படவில்லை ; கடைசியாக கடற்கரைக்குப் போனேன். அங்கே அப்போது ஒருவன் மேல் மோட்டார் வண்டி ஏறிவிட்டதைக் கண்டு ஜனங்கள் ஓடினார்கள்; நானும் ஓடிப்போய் பார்க்கிறேன்! வராகசாமி கீழே கிடக்கிறான்!” என்று பெரிதும் வியப்போடு கூறினார்.
அதைக் கேட்டுத் துடிதுடித்த கனகம்மாள் கையைப் பிசைந்து கொண்டு, “ஐயோ! அவர் இப்போது எங்கிருக்கிறார்? உயிருக்கு மோசமில்லையே?” என்று சகிக்கமாட்டாத ஆவலோடு கேட்டாள். அவர்களுக்கு அந்த ஒரு நொடியும் ஒரு கோடி வருஷங்களாய்த் தோன்றியது. வராகசாமி உயிர் துறந்திருப்பானோ வென்னும் சந்தேகம் உள்ளூற அவர்களை வதைத்து வாட்டியது.
சாமா:- உயிருக்கு ஆபத்தில்லை. ராயப்பேட்டை சர்க்கார் வைத்தியசாலையில் இருக்கிறான் – என்றார்.
அப்போதே கனகம்மாள் சாம்பசிவம் இருவருக்கும் உயிர் வந்தது; சரியான மூச்சாக விடுத்தனர்.
சாம்ப:- காயம் அதிகமோ?
சாமா:- வண்டி முழங்காலில் ஏறிவிட்டது; அதில் ஒரு எலும்பு கொஞ்சம் ஒடிந்துபோய் விட்டதாம். இரத்தச் சேதம் இவ்வளவு அவ்வளவென்று சொல்லமுடியாது! அபாரம்! அவன் இன்னம் கண்ணைத் திறக்கவில்லை. நேற்று ராத்திரி முழுதும் மருந்து கொடுத்தார்கள்; இன்று காலையில் நாங்கள் முன்று பேரும் போய் விட்டு இப்போதே திரும்பி வந்தோம். பெரிய டாக்டர் மிகவும் கவலைப் படுகிறார்; அங்கே எல்லோரும் கூடிக்கொண்டிருந்தால் சீக்கிரம் குணப் படாதென்று சொல்லி, எங்களை அனுப்பிவிட்டார் – என்றார்.
அந்தப் புதிய இடயப் பெற்ற அவர்களுடைய மனம் ஆடி அலமர்ந்தது; அவர்களது தேகங்கள் மண்ணில் நிலைத்து நில்லாமல் விண்ணில் பறந்தன. அவர்களுடைய உள்ளம் பட்டபாட்டை என்னவென்று சொல்வது! அவர்கள் அப்படியே திகைத்துப் போயினர்.
கனகம்மாள், “பெண் இப்போது இங்குதானே இருக்கிறாள்?” என்று மிக்க துன்பகரமான அந்த முக்கிய விஷயத்தை மெல்ல கேட்டாள். அந்தக் கேள்வியைக் கேட்காதிருக்கவும் அவளுக்குச் சகிக்கவில்லை ; அதைக் கேட்டவுடனே, “அவள் இல்லை” என்னும் மறுமொழி வந்து விடுமோவென்று தயங்கி, கடைசியில் அதைக் கேட்டு விட்டாள்; சாமாவையர் என்ன செய்வார்? கையுங்களவுமாக பிடிபட்ட கள்ளனைப்போல விழித்துச் சிறிது நேரம் தவித்தார்; பிறகு, “பெண் இங்கிருந்தால், வராகசாமிக்கு ஏன் இந்த ஆபத்து வருகிறது? பெண் போனவிடந்தான் தெரியவில்லை ” என்றார்.
கனகம்மாள் இன்னமும் அதை நம்பாமல், “ஆனால் அவள் இப்போது உள்ளே இல்லையா?” என்று பேதைமைப் பெருக்கால் மறுபடியும் வினவினாள்.
சாமாவையர் “இல்லை” யென்று விடை கூறினார். ஆகா! அவர்களுடைய மனதின் குழப்பம் பெருங் குழப்பமாயிற்று! அவர்கள் தீத்தணலின் மேல் விடப்பட்டோரைப் போலாயினர். பெண்ணுக்கும் மாப் பிள்ளைக்கும் ஒரே காலத்தில் துன்பம் சம்பவித்த விஷயம் ஒரு நிமிஷத்தில் அவர்களுடைய தேகத்தைச் சீர்குலைத்து, நெஞ்சைப் பிளந்து, இருதயத்தைச் சின்னாபின்ன மாக்கிவிட்டது. பேசமாட்டாமலும், எவ்வித யோசனையும் செய்ய மாட்டாமலும் அப்படியே சோர்ந்து அசைவற்றுச் சாய்ந்து விட்டனர். ஒரு நிமிஷமான பிறகு சாம்பசிவம், “அப்படியானால் நான் இங்கே வந்து மேனகாவை அழைத்துப் போனேனென்று இவர்கள் மாப்பிள்ளையிடம் சொன்னதாக எனக்குத் தந்தி வந்ததே! அதென்ன சங்கதி? அந்தத் தந்தியை யார் கொடுத்தது?” என்றார்.
சாமா:- அதை வராகசாமிதான் கொடுத்தானாம். நான்காம் நாள் வராகசாமி ஒரு கேஸின் விஷயமாக சேலம் போனான். ராத்திரி 8 மணி வண்டிக்கு நானும் அவனுடன் போய் அவனை ரயிலில் ஏற்றிவிட்டு ஒன்பது மணிக்குத் திரும்பி வந்தவன், வராகசாமிக்கு ரயில் கிடைத்துவிட்டதென்று இவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போக நினைத்து இங்கே வந்தேன்.
அப்போது கோமளம் தூங்கிக் கொண்டிருந்தாள்; பெருந்தேவியம்மாள் மிகவும் வருத்தத் தோடு உட்கார்ந்திருந்தாள்; என்னவென்று கேட்டேன். அதற்குக் கொஞ்ச நாழிகைக்கு முன் நீங்கள் ஒரு பெட்டி வண்டியில் வந்து வாசலில் வண்டியிலே இருந்து கொண்டு, வெள்ளி வில்லை தரித்த ஒரு சேவகனை உள்ளே அனுப்பி, மேனகாவை அழைத்து வரச்சொன்னதாகவும், உடனே மேனகா வெளியில் போய் பெட்டி வண்டிக்கருகில் நின்று உங்களோடு கொஞ்ச நாழிகை பேசிக்கொண்டிருந்து விட்டு அவளும் வண்டியில் ஏறிக்கொண்டதாகவும், பிறகு வண்டி போய்விட்டதாகவும் பெருந்தேவி என்னிடம் தெரிவித்தாள். மேனகா தன்னிடம் சொல்லிக்கொள்ளாமற் போனதைப்பற்றி பெருந்தேவியம்மாள் வருத்தப்பட்டுக்கொண்டாள். நீங்கள் எங்கேயோ அறிமுகமான இடத்துக்கு மேனகாவுடன் போய்விட்டுத் திரும்பி வந்துவிடுவீர்களென்று இவளுக்கு சமாதானம் சொல்லிவிட்டு நான் போய்விட்டேன். மறுநாளும் நீங்கள் வராமையால், உங்களுக்கு அறிமுகமானவர் வீட்டிலெல்லாம் போய் நாங்கள் விசாரித்துப் பார்த்தோம். ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. நேற்று வராகசாமி வந்தான்; உடனே உங்களுக்குத் தந்தி கொடுத்தான் – என்றார்.
அதைக் கேட்ட சாம்பசிவம் சகிக்கவொண்ணா ஆச்சரியத்தையும், திகைப்பையுங் கொண்டு , ” என்ன கண்கட்டு வித்தையா யிருக்கிறதே! நானாவது இங்கே வரவாவது! அன்றையதினம் நான் அம்பாள் சத்திரத்திலல்லவா முகாம் செய்திருந்தேன்; இங்கு வர எனக்கு ரஜா ஏது? ரஜா இல்லாமல் நான் இங்கு வரமுடியுமா? ஒரு வாரத்துக்கு முன்னால் தானே நான் இங்கே பெண்ணைக் கொண்டு வந்து விட்டேன். அதற்குள் இவர்களுடைய அனுமதி யில்லாமல் அவளை அழைத்துப் போவேனோ! என்னகென்ன பைத்தியமா? இது கேழ்வரகில் நெய் ஒழுகுகிற தென்னும் சங்கதியா யிருக்கிறதே!” என்று கூறி மேலும் பேசமாட்டாமல் மதிமயக்கம் கொண்டு சாய்ந்தார்.
மிகவும் பதைபதைத்து நின்ற கனகம்மாள், “இதைப் போலீஸில் எழுதி வைத்தீர்களா?” என்றாள்.
சாமா:- வராகசாமி எழுதிவைக்க வேண்டாமென்று சொல்லி விட்டான்.
சாம்ப:- ஏன்? – என்றார்.
அதற்குமேல் பதிற் சொல்லமாட்டாமல் சாமாவையர் தயங்கினார்; கனைத்துக் கொண்டார்; இருமினார்; எச்சிலை விழுங்கினார்; அப்புறம் திரும்பினார்; ஆகாயத்தைப் பார்த்தார்; பூமாதேவியைக் கடாட்சித்தார்; சமையலறையைக் கடைக் கணித்தார்; கடைசியாக மெளனம் சாதித்தார். சாம்பசிவம் அத்துடன் விடுபவரல்லர்; “போலீசில் பதிவு செய்யும் படி நான் தந்தியில் கூட தெரிவித்தேனே; அதைச் செய்யாத காரணமென்ன?” என்று அதே கேள்வியைக் கேட்டார்.
சாமா:- உங்களுடைய தந்தியைப் பார்த்தவுடன் அன்றைக்குப் பெட்டி வண்டியில் வந்தது நீங்களல்ல வென்று நிச்சயித்தோம். ஆனால், மேனகா எப்படித்தான் போயி ருப்பாள் என்பதைப் பற்றி வராகசாமி எண்ணாததெல்லாம் எண்ணிப்பார்த்தான். அப்போது அவனுக்கு ஏதோ சந்தேகம் உதித்தது. மேனகாவின் டிரங்குப் பெட்டியை உடைத்துப் பார்த்தான்; அதில் ஏதோ இரண்டு கடிதங்கள் அகப்பட்டனவாம். அதைப் பார்த்தவுடன், அதில் பல இரகசியங்கள் வெளிப்பட்டனவாம். அதன்மேல் , அவன் போலீஸில் எழுதிவைக்க வேண்டாமென்று நிறுத்திவிட்டான் -என்றார். அதைக்கேட்ட அவ்விருவரின் பைத்தியமும், ஆவலும் உச்ச நிலையை அடைந்தன, சிரம் சுழன்றது; அந்த வீடே கிருகிரென்று சுற்றி மேலே கிளம்புவதாய்த் தோன்றியது. புத்தியின் தெளிவை இழந்து மேலே கேட்கவேண்டுவ தென்ன என்பதை அறியாமல் சோர்ந்தனர்.
சாம்ப:- என்ன கடிதங்கள்? யாருக்கு யாரால் எழுதப்பட்ட கடிதங்கள்? அதில் அப்படி என்ன பரம இரகசியத்தைக் கண்டீர்கள்? எங்கே அந்தக் கடிதங்கள்? நான் படித்துப் பார்க்கிறேன் – என்று அருவருப்போடும் அடக்கிய கோபத்தோடும் கேட்டார்.
சாமா:- (மிகவும் பணிவாக) அண்ணா ! அதை மாத்திரம் நீங்கள் என்னிடம் கேட்கவேண்டாம்; கடிதங்கள் வராகசாமி யிடத்தில் வைத்தியசாலையில் இருக்கின்றன. நேரிலேயே பார்த்துக்கொள்ளுங்கள்; இந்த விஷயத்தில் மாத்திரம் தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும் – என்றார்.
சாம்ப:- (பொங்கியெழும் ஆத்திரத்தோடு) என்ன ஐயா! இவ்வளவு தூரம் சொன்னவர் பாதிக் கிணற்றில் விட்டதைப் போல முக்கியமான இடத்தில் மறைக்கிறீரே! எங்கள் மனம் தவிக்கிறது உமக்குக் கொஞ்சமும் தெரியவில்லையா? வீணாக இன்னமும் வேடிக்கை பார்க்கவேண்டாம். மிகுதி விஷயத்தை யும் சொல்லும். எப்படியும் அதை நாங்கள் அறிந்து கொண்டே தீரவேண்டும். நடந்ததைச் சொல்ல உமக்கென்ன யோசனை? அதனால் உம்மீது யார் என்ன குற்றம் சொல்லப் போகிறார்கள்? பாதகமில்லை , சொல்லும்; அது எதுவாக இருந்தாலும் இருக்கட்டும் – என்றார்.
சாமாவையர் பற்களைக் காட்டிக் கெஞ்சி, “இல்லை அண்ணா. அதை மாத்திரம் நீங்கள் மற்றவர்களிடத்திலேயே கேட்டுக்கொள்ளுங்கள். அதை வாயில் வைத்துச்சொல்லவும் எனக்கு மனமில்லை; இப்போது இன்னம் ஐந்தே நிமிஷத்தில் நாம் ராயப்பேட்டை வைத்தியசாலைக்குப் போனால் கடிதங்களையே நீங்கள் பார்க்கலாம்” என்று பிடிவாதமாகப் பேச அவர்கள் மிகுந்த ஆயாசமும், ஆத்திரமும் அடைந்தனர். அவர்களது ஆவல் மகா உக்கிரமாக எழுந்து அவர்களது நெஞ்சையும் தேகத்தையும் படீரெனக் கிழித்து விடுமோ வென்னத்தகுந்த விசையையும் பருமனையும் அடைந்தது. கோபம் தேகத்தையே நெருப்பாய்ப் பற்றி எரித்தது. ஆனால், அதை யார் மீது காட்டுவது? சாமாவையர் அன்னிய மனிதர்; வராகசாமியின் வீட்டில் புண்ணியத்திற்கு உழைப்பவர். ஆகையால், அவரை மேலும் வற்புறுத்த சாம்பசிவத்திற்கு மனமில்லை. இரண்டு கைகளுமற்ற மனிதன் முஷ்டியுத்தம் செய்ய நினைத்ததைப் போல அவருடைய அடங்காக் கோபம் வீணில் ஜ்வலித்தது. “சரி; அப்படியானால், போவோம்
எழுந்திரும்” என்றார் சாம்பசிவம். இருவரும் எழுந்தனர்.
அதற்குள் கனகம்மாள் சமையலறைப்பக்கம் போய் உள்ளே எட்டிப்பார்த்து, “பெருந்தேவியம்மா! என்ன செய்கிறாய்? இப்படி வா அம்மா! என்ன இது கூத்தாக இருக்கிறதே! பெண்ணையார் அழைத்துக் கொண்டு போனது? நீங்கள் ஒருவரும் பார்க்கவில்லையா? அந்தச் சேவகன் யார்? விவரமாகச் சொல்லம்மா!” என்று தனது ஆத்திரத்தை யெல்லாம் அடக்கிக்கொண்டு நயமாகக் கேட்டாள்.
பொறுப்பதற்கு இயலாத துர்நாற்றத்தைக்கண்டு முகத்தைச் சுளித்துக் கொள்பவள் போல பெருந்தேவியம்மாள் தனது முகத்தை விகாரப்படுத்திக்கொண்டு அருவருப்பாக, “ஆம்; கூத்துதான்! அது எங்களுக்கு எப்படித் தெரியப் போகிறது? கூத்தைப் பார்க்கிற-வர்களுக்கும் கூத்தாடிகளைப் பார்க்கிறவர்களுக்குந்தான் நிஜம் தெரியும்; எங்களுக்கென்ன தெரியும்” என்று ஒன்பது முழம் நீட்டிப் பேசினாள். அவளுடைய முகமும் உதடுகளும் கைகளும் யாவும் நீண்டன. ”வா, உட்கார்” என்ற மரியாதையும் இல்லாமற் போனதன்றி தன் வீட்டில் வந்து அல்லல் கொடுக்கும் பிச்சைக்காரரை அவமதித்துப் பேசுபவளைப் போல மொழிந்தாள் பெருந்தேவியம்மாள்.
கனகம்மாள் தங்களுடைய பொல்லாத காலத்தை நினைத்துத் தனது ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, ” என்ன இது? நீ சொல்வதொன்றும் விளங்கவில்லையே! நடந்ததை விவரமாகச் சொல்லம்மா! பெண்ணை அழைத்துப் போனது யார்? ஏதோ கடிதம் அகப்பட்டதாமே; அது என்ன கடிதம்?”என்று திரும்பவும் நயமாகக் கேட்டாள்.
பெருந்தேவி முன்னிலும் அதிகரித்த எரிச்சலைக் காட்டி, “பெண் சங்கதிதான் ஊர் சிரிக்கிறதே! அவளால், நாங்கள் எல்லோரும் மூடி முக்காடிட்டு உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கும்படி ஆய்விட்டதே! வராகசாமி இதைக் கேட்டு தற்கொலை செய்து கொள்ளத்தானே மோட்டார் வண்டியின் கீழ் தன்னுடைய கழுத்தைக் கொடுத்தான்; அப்படியல்லவோ செய்து விட்டாள்! பெண்ணிருந்தாலும் இப்படித்தான் இருக்க வேண்டும்! இந்தப் பெண்ணைப் பெற்ற வயிற்றில் பிரண்டையை வைத்துக் கட்டிக்கொள்ளலாம். இப்படிப்பட்ட பெண்ணிருந்தால் ஏழேழு தலைமுறைக்கும் போதும். அடாடா! இருந்திருந்து நல்ல இடத்தில் சம்பந்தம் செய்துகொண்டோம்! இனி எங்கள் வீட்டில் நாய் கூட தண்ணீர் குடிக்காது. அநியாயமாக எங்கள் குடியைக் கெடுத்துவிட்டாள் கொழுப்பெடுத்த முண்டை” என்றாள்.
அந்தச் சொல் உருக்கிய இரும்பைப் பெய்தலைபோல, கனகம்மாள், சாம்பசிவம் ஆகிய இருவரின் செவிகளிலும் நுழைந்தது. அவர்களது தேகம் கட்டுக்கு அடங்காமல் பதைபதைத்தது. ஒரே அடியில் பெருந்தேவியின் மண்டையை சுக்கள் சுக்கலாக உடைக்கக்கூடிய மூர்க்கத்தை அடைந்தனர். கோபமூட்டப்பெற்ற புலிகளைப் போல நின்ற கனகம்மாள், “பெருந்தேவியம்மா! என்ன தாறுமாறாகப் பேசுகிறாய்? யாரிடம் பேசுகிறாய் என்பதைக்கூட மறந்துவிட்டாயே! நடந்த விஷயத்தையும் சொல்லமாட்டே-னென்கிறாய்; நினைத்தவிதம் எங்களை தூஷிக்கிறாய்! இதனால் உங்களுக்கு மாத்திரமே துக்கமும் வெட்கமுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய் போலிருக்கிறது! அருமையாக வளர்த்த எங்களுடைய குழந்தை போய்விட்டது; எங்கள் மாப்பிள்ளையின் உயிருக்கு ஆபத்து வந்தால், அதில் எங்களுக்கு விசனம் இல்லையா? உங்களுடைய விசனத்துக்கு எங்களுடையது குறைந்த தென்று நினைத்துக்கொண்டாயா? நீ எங்களை எதிரிகளைப்போல நினைத்து ஆத்திரமாய்ப் பேசுவதேன்? குழந்தை எங்கு தவிக்கிறாளோ! அவளையல்லவோ நாம் இருவரும் சேர்ந்து கண்டு பிடிக்க வேண்டும்; இந்தச் சமயத்தில் நீயும் நானும் சேர்ந்து சண்டையிடுவதா அழகு? – என்றாள்.
பெருந்தேவி மிகுந்த அருவருப்பைக் காட்டி வலது கையால் மோவாயில் வியப்புக் கொக்கி மாட்டி, ”குழந்தையாமே குழந்தை! நல்ல குழந்தை! வாயில் விரலை வைத்தால் அந்தக் கோந்தைக்குக் கடிக்கக் கூடத் தெரியாது பாவம்! அந்தக் கோந்தை தவிக்கிறதோ? நல்ல தடிப்பய லோடே உல்லாசமாகப் பொழுது போக்கித் தவிக்கிறதோ? அவள் போன இடம் தெரியாதோ? தஞ்சாவூரில் ஒரு வருஷம் வைத்துக் கொண்டு நாடகக்காரனுக்குக் கூட்டிக்கொடுத்த உங்களுக்கு அவள் போன இடம் தெரியாதோ? காக்கை பிடிக்கிற பைத்தியக்காரியைப்போல, என்னைக் கேட்க வந்துவிட்டாயோ? அப்பா! பொல்லாக் கும்பல்! மகா பட்டிக்கும்பலென்று தெரிந்து கொள்ளாமலல்லவா மதி மோசம் போனோம்” என்று ஏழு மேகங்களும் ஒன்றுகூடி கிடுடாயமான இடிகளை உருட்டி விடுதலைப்போல மொழிந்தாள். அந்த கன்னகடூரமான சொற்களைக் கேட்ட சாம்பசிவம் வீராவேசங் கொண்டு தம்மை முற்றிலும் மறந்து பாய்ந்து எதிரில் கிடந்த அம்மிக் குழவியைக் கையிலெடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைய, சாமாவையர் குறுக்கில் விழுந்து மறைத்து அம்மிக்குழவியை வாங்கி அவரையும் கூடத்திற்கு இழுத்து வந்தார். நெருப்புக் கடலில் நீந்திய கனகம்மாள் அழுத்தமாக, “அடி பெருந்தேவி! நாக்கை உள்ளே வைத்துப் பேசு; தாறுமாறாக உளறாதே; என்ன நடந்ததென்று கேட்டோம். ஒழுங்காகச் சொல்ல மனமிருந்தால் சொல்; இல்லாவிட்டால், சொல்ல மாட்டே னென்று சொல்லிவிடு; நாங்கள் அறிந்துகொள்ளும் விதத்தில் அறிந்தகொள்ளுகிறோம். உனக்குத்தான் வாயிருக்கிறதென்று பேச்சை ஓட்டாதே”-
என்றாள்.
அதற்குள் கட்டுக்கடங்காத கோபத்தைக் கொண்ட பெருந்தேவியம்மாள், “அடியாமே அடி! உங்கள் வீட்டு சேவகன் பெண்டாட்டியென்று நினைத்துக்கொண்டாயோடி நாறமுண்டை ! யாரைப் பார்த்து அடி என்கிறாய்? அதற்குள் அந்தக் கட்டையிலே போவான், மொட்டைச்சி மாதிரி அம்மிக்குழவியைத் தூக்கிக்கொண்டு ஓடி வருகிறானே! போங்கள் வெளியில்; ஜாதிகெட்ட பிணங்களா! உங்களை யார் இங்கே பாக்கு வைத்து அழைத்தது? பேத்தியை நாடகக்காரப் பயலுக்குக் கூட்டிக்கொடுத்த தாய்க்கிழவி முண்டைக்கு இவ்வளவு அகங்காரமா! வீட்டைவிட்டு மாரியாதையாக வெளியிலே போகிறாயா? சந்தனாபிஷேகம் பண்ணட்டுமா?” என்று கூறி தைதாவென்று தாண்டிக் குதித்து இலங்கணி அவதாரம் எடுத்தாள்.
அந்த விபரீதத்தைக் கண்டு மிகவும் அச்சமடைந்த சாமாவையர் நடுவில் விழுந்து, ”அண்ணா ! வாருங்கள் வெளியில் போவோம்; இது சுத்த அசடு; இவளோடு சண்டையிடுவது நமக்குத்தான் அவமானம்; அம்மாவைக் கூப்பிடுங்கள். நம்முடைய அகத்துக்குப் போவோம், வாருங்கள் பாட்டியம்மா! இது நன்றாக இல்லை; வாருங்கள் வெளியில் போவோம்” என்று வற்புறுத்தினார். ஆகாயமோ பூலோகமோ வென்பது தெரியாமல், தம்மை முற்றிலும் மறந்து நின்ற சாம்பசிவம், அம்மாளுடைய கையைப் பிடித்து அழைக்க, அவள் கடைசியாக, “பெருந்தேவியம்மா! கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்குக் கஷயாத்தால் அதை ஜீரணம் செய்யப் பார்க்கிறாயா! அது எங்களிடம் பலிக்காது; இ ; இதோ ஒரு நிமிஷத்தில் உன் சூதைக் கண்டு பிடிக்கிறோம்” என்று சொல்லி விட்டு வர, மூவரும் வீட்டிற்கு வெளியில் வந்தனர்.
அப்போது சாமவையர், “அண்ணா ! இவளுடைய குணம் உங்களுக்கு எப்போதும் தெரிந்ததுதானே. நீங்கள் இதைப் பாராட்டி மனவருத்தப் படவேண்டாம்; நாம் பாலைப் பார்ப்பதா பானையைப் பார்ப்பதா? வராகசாமியின் பொருட்டு நீங்கள் இதை க்ஷமிக்க வேண்டும்; வாருங்கள் நம்முடைய அகத்துக்குப் போவோம். இன்னம் நீங்கள் காப்பிக்கூட சாப்பிடவில்லையே! முதலில் காப்பி கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு பிறகு மேல் யோசனையைச் செய்வோம்” என்றார்.
அவருடைய சொற்கள் சாம்பசிவத்தின் செவிகளில் நுழையவில்லை. அவருடைய மனமும் தேகமும் கோபத் தாலும், ஆத்திரத்தாலும், அவமானத்தாலும், துயரத்தாலும் படபடத்தது. அதிவிசையில் சுற்றிக்கொண்டிருந்தும் அசைவற்றிருப்பது போலத் தோன்றும் பம்பரத்தைப் போல இருந்தன. உடம்பெல்லாம் வியர்வை ஒழுகியது; கண்கள் கலங்கின. தாம் ஒரு பெண்ணைப் பெற்றதனால் அவ்வாறு கேவலமாக நடத்தப்பட நேர்ந்ததல்லவா என்று சாம்பசிவம் நினைத்து உருகி ஓய்ந்து போனார். அதுகாறும் அத்தகைய பழிப்பைப் பெறாமல், எவ்விடத்திலும் பணிவையும் மரியாதையையும் பெற்றவராதலின், வெட்கமும், துக்கமும், அழுகையும் பொங்கியெழுந்தன ; கண்களில் துளிந்த நீரைத் துடைத்துக் கொண்டார்; இன்னமும் தாம். வந்த காரியம் முடியாமையால், அதற்குள் தாம் அவ்வாறு சோர்வடைதல் கூடாதென நினைத்தவராய், “சாமாவையரே வண்டியில் ஏறும்; நேராக வைத்திய சாலைக்குப் போவோம்” என்றார். அவருடைய சொல்லின் உறுதியைக் கண்ட சாமாவையர் , அதை மறுக்க மாட்டாதவராய் உடனே அதற்கிணங்கி வந்து வண்டியில் உட்கார்ந்து, இன்ன இடத்திற்குப் போக வேண்டுமென்று வண்டிக்காரனிடம் சொன்னார். அதற்குள் சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய இருவரும் ஏறி வண்டியில் உட்கார்ந்து கொண்டனர். அதிவேகமாய் ஓட்டும்படி சாம்பசிவம் கண்டித்து உத்தரவு செய்தார். வண்டி அப்படியே புறப்பட்டது. வண்டிக்கார சாயுபுவின் கைகளும், சாட்டை வாரும், சதங்கைகளும், வாயும் அதிகவேகமாய் வேலை செய்தனவே யொழிய குதிரையின் ஓட்டத்தில் எவ்வித மாறுபாடும் உண்டாகவில்லை. அடிகள் அதிவேகமாக படப்பட குதிரையின் நடை தளர்ந்த நடையானது.
கிழக்கு திரையின் முதுகில் அவன் இன்னம் சிறிது தாராளமாக அடிகளைச் சமர்ப்பித்திருந்தால் குதிரை ஈசுவரனைக் குறித்துத் தவம் செய்து இன்னம் அதிகமான பலத்தையும் பாலியத்தையும் பெற்று வர அடுத்த உலகம் சென்றிருக்கும்; எதிர்த்த வீட்டு திண்ணையிலிருந்த போலீஸ் ஜெவான்களும் வண்டியில் பின் தொடர்ந்து வந்தனர்.
வண்டிக்குள்ளிருந்த தாயும் பிள்ளையும் அப்படியே பிரமித்து வாய் திறக்கவும் மாட்டாமல் உட்கார்ந்திருந்தனர். மேனகாவின் விஷயம் அவர்களுக்கு இன்னதென்று நன்றாய் விளங்கவில்லை. பெருந்தேவியம்மாளின் தூஷணையிலிருந்து அவளுடைய கற்பிற்குக் குறைவான விஷயம் ஏதோ வெளிவந்திருப்பதாக மாத்திரம் ஒரு சிறிது தெரிந்தது; மேனகாவின் நற்குண நல்லொழுக்கத்தையும், கற்பின் உறுதியையும், மேன்மையான மனப்போக்கையும் அவர்கள் நன்றாக அனுபவத்தில் உணர்ந்தவராதலின், அது சுத்தக் கட்டுக் கதையாகவே இருக்க வேண்டு மென்று நினைத்தனர். மேனகாவைப்பற்றி அப்படி அவதூறாக நினைக்க அவர்களுடைய மனம் துணியவில்லை. மகா புனிதவதியான அந்தக் கோமளாங்கியின் கற்பைச் சந்தேகித்தால், சந்தேகிப் போரின் சிரத்தில் இடியே வீழ்ந்து அழித்து விடுமென்று நினைத்தனர். அவர்கள் அவ்வாறு எண்ண மிட்டிருந்த தருணத்தில் வண்டி மேன்மேலும் சென்றது. தொளசிங்கப் பெருமாள் கோயில் தெருவின் தொடர்ச்சியான சாத்தானித்தெருவைக் கடந்து அப்பால் மேற்கு முகமாய் திரும்பி பீட்டர் சாலையிற் செல்ல ஆரம்பித்தது. அடுத்த நிமிஷத்தில், அங்கே இடது பக்கத்திலிருந்த போலீஸ் ஸ்டேஷன் வாயிலில் திடீரென்று நின்றது. சாமாவையர், “சாயிபு! ஏன் வண்டி நின்று விட்டது?” என்றார்.
உடனே சாயிபு ஒன்றையும் அறியாதவனைப்போல, “இல்லே ஸாமி! எங்க ஊடு இங்கே இருக்கிறான்; அதுக்காகவ குதிரே எடக்குப் பன்றாங்கோ; இதோ ஆச்சு ஓட்டறேன் ஸாமி! ரோசனை பண்ண வாணாம் ஸாமி!” என்று கூறிக் குதித்து, குதிரையின் கடிவாள வாரைப் பிடித்து நடத்துபவன் போலச் செய்து, வண்டியை ஸ்டேஷன் வாசலின் ஓரமாக நிறுத்தினான். உடனே புற்றிலிருந்த ஈசல்கள் கிளம்புதலைப்போல, ஐந்தாறு போலீஸ் ஜெவான்கள் தோன்றி, வண்டியின் நாற்புறங்களிலும் சூழ்ந்துகொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பின்பக்கத்தில் திடீரென்று தோன்றி பனைமரத்தைப் போன்று விறைத்து நின்று சாம்பசிவத்திற்கு திருஷ்டி தோஷம் கழிப்பவரைப்போல வலது கையை தூக்கிக்காட்டி ஒழுங்காக சலாம் செய்து தமது கையைத் துடையில் சேர்த்து நின்றார். எதிர்பாராத அந்தக்காட்சியைக் கண்டு திடுக்கிட்ட சாம்பசிவத்தின் நிலைமை எப்படி இருந்தது என்றால், பாசி நிறைந்த குளத்தில் ஒரு கல்லைப் போட்டவுடன் பாசி விலகி நாற்புறங்களிலும் அலை நகர்ந்து, இடையில் தெளிவான இடத்தைக் காட்டுதலைப்-போல, அவருடைய ஏனைய துன்பங்களும், உணர்ச்சிகளும் திடுக்கென்று அவருடைய மனத்தின் முன்புறத்திலிருந்து பின் புறத்துக்கு ஒதுங்கின; அவர் சுய உணர்வைப் பெற்று தமது இயற்கையான கௌரவத் தோற்றத்தைக் கொண்டு, தமது முகத்தில் சந்தேகம் தோன்ற, “யார் நீங்கள்? இந்த டிவிஷன் போலீஸ் இன்ஸ் பெக்டரோ? இதற்கு முன் என்னைப் பார்த்திருக்கிறீர்களோ?” என்றார்.
சமய சஞ்சீவி அய்யர் தம்முடைய முகத்தைத் தாமரைப் பூவைப் போலப் புன்னகையால் மலர்த்திக் காட்டி, “ஆம்; தாங்கள் தஞ்சாவூர்டிப்டி கலெக்டர்வாள் அல்லவா?” என்றார்.
சாம்ப:- ஆம்; நான்தான் – என்றார்.
போலீஸ் :- அப்படியானால் தாங்கள் ஒரு நிமிஷ நேரம் ஸ்டேஷனுக்குள் தயவு செய்யவேண்டும் – என்றார்.
குதிரையின் இடக்கினால் வண்டி நின்றவுடன் இன்ஸ்பெக்டர் அதைப் பார்த்து வெளியில் வந்ததாகவும், வண்டியில் தாம் இருந்ததைக் கண்டவுடன் பழைய அறிமுகத்தால், தம்மை அவ்வாறு சலாம் செய்தார் என்றும் சாம்பசிவம் முதலில் நினைத்தார். பிறகு இறங்கி ஒரு நிமிஷம் வரும்படி மரியாதைக் குறைவாகத்தம்மிடம் அவர் சொல்லவே, சாம்பசிவம் ஒரு சிறிது திகைப்படைந்தார். அது காலை வேளையாதலால், ஒரு கால் தமக்கு பழம், காப்பி, முதலிய சிற்றுண்டிகள் கொடுத்து உபசரிக்க அழைக்கிறாரோ வென்று நினைத்தார்; என்றாலும் தம்முடைய அவசரத்தை நினைத்து, “ஸ்டேஷனுக்குள் என்ன விசேஷம்? நான் மிகவும் அவசரமாய்ப்
போக வேண்டும்” என்று கூறினார்.
போலீஸ்:- ஸ்டேஷனில் அதிக தாமதப்படுத்தக்கூடிய வேலை ஒன்றுமில்லை. போலீஸ் கமிஷ்னர் வந்திருக்கிறார். அவர் தங்ளோடு மிகவும் அவசரமாக இரண்டொரு வார்த்தைகள் பேச விரும்புகிறார். உடனே திரும்பி வந்து விடலாம்; தயவு செய்யவேண்டும் – என்று நயமாகவும் அதிகாரத்தோடும் கூறினார். அதைக்கேட்ட சாம்பசிவத்திற்கு அது உண்மை உலகமோ அல்லது தாம் கனவு நிலைமையில் இருக்கிறோமோ என்னும் சந்தேகம் உதித்தது; பெரிதும் ஆச்சரியத்தோடு, ” என்ன ஐயா! நான் வண்டியிலிருக்கிறேன் என்பதை இப்போது தான் நீங்கள் பார்த்தீர்கள் கமிஷனர் என்னோடு பேசவேண்டுமென்று எப்போது சொன்னார்? என் வரவை முன்னதாகவே எதிர்பார்த்திருப்பவரைப் போலப் பேசுகிறீர்களே! முதலில் நான் இந்த ஊருக்கு வந்ததுதான் உங்களுக்கு எப்படித் தெரியும்? இப்போது இந்த வழியாக நான் வருவேன் என்பதுதான் எப்படித் தெரியும்; அதற்குத் தகுந்தாற்போல, இவ்விடத்தில் வண்டியும் தானாக நின்றதும் ஆச்சரியமாக இருக்கிறது!” என்றார்.
போலீஸ்:- இந்த விவரங்களை யெல்லாம் அவரே தங்களிடம் நேரில் திருப்திகரமாகச் சொல்வார்; காத்திருக்கிறார், தயவு செய்யுங்கள் – என்று மேன்மேலும் வற்புறுத்தி னார். சாம்பசிவையங்காருடைய மனதில் கோடானு கோடி எண்ணங்கள் உண்டாயின; தாம் செல்லும் இடங்களி லெல்லாம் போலீஸார் தம்முடன் தொடர்ந்து கொண்டே வருகிறார்களோ வென்றும், அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய முகாந்திரம் என்னவென்றும் நினைத்து நினைத்து எவ்வித நிச்சயமான முடிவையும் அடையக் கூடாதவராய் தயங்கினார். தாம் அதற்குமுன் பார்த்தும் அறியாத போலீஸ் கமிஷனர் தம்மிடம் என்ன அவசரசங்கதியைக் கூறப்போகிறார் என்றும், அது எத்தகைய புதிய துன்பத்தைச் செய்யக் காத்திருக்கிறதோ வென்றும் கவலை கொண்டு தவித்தார். பெண்ணின் விஷயமும் , மருமகப்பிள்ளையின் விஷயமும் இன்னொரு புறத்தில் வதைத்தது. “நிற்கவேண்டாம் பரவும் பறவு”மென்று அவரைத் தூண்டிக்கொண்டே இருந்தன. அந்த நிலையில் இருதலைக் கொள்ளி எரும்பு போலான சாம்பசிவம் அரை மனதோடு கீழே இறங்கி ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்.
அங்கு நடந்த சம்பாஷணையைக் கவனித்திருந்த கனகம்மாளுடைய மனது இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு வகையான சஞ்சலத்தை அடைந்தது. இன்ஸ்பெக்டருடைய குரலைக் கேட்டபோதே கோட்டான் சாகுருவி முதலியவற்றின் அவகுரலைக் கேட்பதைப் போல இருந்தது. சாம்பசிவத்திற்கு ஏதோ பெருத்த விபத்து நேரக் காத்திருப்பதாக நினைத்த அம்மாள் வண்டியிலிருக்க மனமற்றவளாய்க் கீழே இறங்கினாள். சாமாவையரும் கூடத் தொடர்ந்தார். அவர்கள் இருவரும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தனர். அவர்களும் வந்ததை போலீஸார் ஆட்சேபிக்கவில்லை. சாம்பசிவம் உள்ளே சென்று, எதிரில் ஓர் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரியைக் கண்டார். அவர் நமது சாம்பசிவத்தைக் கண்டவுடன், அன்பான குரலில் மரியாதை யாக, “டிப்டி கலெக்டரே! வரவேண்டும்; இதோ இந்த ஆசனத்தில் உட்காருங்கள்” என்றார். சாம்பசிவம் அப்படியே உட்கார்ந்தார்; என்றாலும், விஷயம் இன்னதென்பது தெரியாமை மாத்திரம் அவருக்கு மிகுந்த ஆவலைக் கொடுத்தது. சாம்பசிவம் மெதுவாக, “தாங்களை நான் பார்த்ததில்லை; போலீஸ் கமிஷ்னர் தாங்கள்?”
துரை, “ஆம்; நான்தான்; சங்கதி வேறொன்றுமில்லை. நேற்றிரவு எனக்குத் தஞ்சாவூர் கலெக்டர் துரையிடமிருந்து ஒரு அவசரத்தந்தி வந்தது. அதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்பியே உங்களைத் தருவித்தேன்” என்றார்.
திடுக்கிட்டுப் பெரிதும் வியப்படைந்த சாம்பசிவம், “நேற்று சாயுங்காலம்தானே நான் அங்கிருந்து புறப்பட்டு வந்தேன். இதற்குள் என்ன அவரசமான சம்பவம்
நேர்ந்துவிட்டது?” என்றார்.
துரை, “இதோ படிக்கிறேன்; கேளுங்கள். இதில் முதல் பாதிபாகம் உங்களுக்கு சம்பந்தமானது, பிற்பாதி பாகம் எங்களுக்குச் சம்பந்தமானது. ஆகையால், உங்களுக்குச் சம்பந்தப்பட்ட முதல் பாகத்தைப் படிக்கிறேன் கேளுங்கள் :
சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களுக்கு :-
தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் சாம்பசிவையங்கார் இன்று மாலையில் இங்கிருந்து புறப்பட்டு பட்டணம் வருகிறார். காலையில் எழும்பூரில் இறங்குவார். பிறகு திருவல்லிக்கேணி தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலிருக்கும் வக்கீல் வராகசாமி அய்யங்கார் அவர்களது வீட்டிற்கு வருவார். அவரைக் கண்டு அவரிடம் அடியில் எழுதப்பட்ட எனது உத்தரவைக் கொடுத்து, அதற்கு சாட்சியாக நீங்களே அவருடைய கையெழுத்தையும், பெருவிரல் ரேகை அடையாளத்தையும் பெற்றுக் கொள்ளக் கோருகிறேன். அவர் ரஜா இல்லாமல் இரண்டு தடவைகளில் தம்முடைய அதிகார எல்லையை விடுத்து வெளியூர்களுக்குப் போயிருக்கிறார். அப்படிப் போன ஒரு சமயத்தில், தாம் தம்முடைய உத்தியோக முறையில் தம்முடைய அதிகார எல்லைக்குள்ளிருக்கும் கிராமங்களில் முகாம் செய்ததாக பொய்யான செலவுப் பட்டி தயாரித்து, சர்க்காரை ஏமாற்றிப் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார். தவிர, அவர் பலரிடம் லஞ்சம் வாங்கினதாக அனுமானிக்க பல சாட்சிகளும் இருக்கின்றன. இவற்றால் அவர் உத்தியோகத்தினின்று நீக்கப் படத்தக்கதும், நியாயஸ்தலத்தில் தண்டனை பெறத் தகுந்தது மான பலகுற்றங்களைச் செய்திருப்பதாக நினைக்க இடமிருக்கிறது. அவற்றைப்பற்றி நாம் செய்யப்போகும் விசாரணை முடியும் வரையில், அவரை வேலையிலிருந்து நீக்கி வைத்திருக்கிறோம். தம்மிடமிருக்கும் சர்க்கார் சம்பந்தமான காகிதங்கள் சீல்முகர் முதலிய யாவற்றையும் இந்த உத்தரவை அவர் பெற்ற இரண்டு நாட்களுக்குள் தஞ்சை கஜானா டிப்டி கலெக்டரிடம் ஒப்புவிக்க வேண்டியது :
என்று கமிஷனர் முற்பகுதியைப் படித்துக் காட்டினார். அதைக் கேட்ட சாம்பசிவத்தின் மனோநிலைமையை மனிதர் யூகித்தல் வேண்டுமேயன்றி, அதை உள்ளவாறு விரித்தெழுதத் தேவையான அறிவாற்றல் இந்த எழுது கோலுக்கு இல்லையென்று சொல்வது பொய்யாகாது. அவர் மிஞ்சிய வியப்பும் திகைப்பும் கொண்டு பேசமாட்டாமல் அப்படியே கல்லாய்ச் சமைந்து போனார். அவமானத்தால் அவருடைய தேகமும் மனமும் குன்றிப்போயின. முகத்தைக் கீழே கவித்துக்கொண்டார்; உடம்பு பதைபதைத்தது. விழிகளில் தீப்பொறி பறந்தது. அது வேறு எவராலோ அனுப்பப்பட்ட பொய்த் தந்தியா யிருக்க வேண்டுமென்று நினைத்தார். தாம் எத்தகைய குற்றமும் செய்யாதிருக்கையில், கலெக்டர் தம்மீது பொய்க்குற்றம் சுமத்தி, வேலையினின்றும் நீக்கியிருக்கிறார் என்பதை அவருடைய செவிகள் நம்பவில்லை. அது உண்மையாயிருக்குமோ வென்றும், அது யாருடைய விஷமமோவென்றும் யோசித்தார். ஒன்றுந் தோன்றவில்லை. சாமாவையர் ஆங்கில பாஷை சிறிது உணர்ந்தவராதலால், அவர் அங்கு நடந்த சம்பாஷணையின் கருத்தை அறிந்து கொண்டார். கனகம்மாள் விஷயம் என்னவென்பதை மெல்ல சாமாவையரிடம் கேட்க, அவர் உடனுக்குடனே அந்த சம்பாஷணையை மொழிபெயர்த்து வந்தார். கனகம்மாளின் மனமும் மெய்யும் ஆத்திரத்தினாலும், வியப்பினாலும் அவமானத்தினாலும் படபடத்து நின்றன.
சாம்பசிவையங்கார் கமிஷனரைப் பார்த்து, ” என்ன ஆச்சரியம்! இந்த உத்தரவு எனக்குச் சம்பந்தப்பட்டது தானா? நன்றாகப் பாருங்கள். இந்தக் குற்றங்களில் எதையும் நான் செய்யவில்லையே!” என்றார். கமிஷனர் துரையேனும் மற்ற போலீஸாரேனும் அவர் சொன்ன சொல்லைச் சிறிதேனும் மதிக்கவில்லை. கையுங்களவுமாகப் பிடிபடும் திருடன்கூட தாம் குற்றம் செய்யவில்லையென்று சொல்வதைக் கேட்டுப் பழகிய போலீஸார் புத்திக்கு சாம்பசிவம் அதே வேஷந்தான் போடுவதாகத் தோன்றியது. ஆகையால், கமிஷனர் அவரைப் பெருத்த அயோக்கிய சிகாமணியாகவே மதித்தாராயினும், வெளிக்கு மாத்திரம் மரியாதை காட்டி, “கலெக்டர் சொல்வது பொய்யோ , டிப்டி கலெக்டர் சொல்வது பொய்யோ; அது தானே பின்னால் விளங்குகிறது. எனக்கு அவர் கொடுத்த வேலையைச் செய்ய நான் கடமைப் பட்டவன். இதோ தந்தியை நீங்களே பாருங்கள்!” என்று கூறியவண்ணம் தந்தியின் கீழ்பாகத்தை மறைத்துக்கொண்டு முற்பகுதியைக் காட்டினார். அது உண்மைத் தந்தியாகவே காணப்பட்டது; தஞ்சாவூர் கலெக்டரிடத்திலிருந்தே வந்திருந்தது. அதன்தன் வாசகமும் கமிஷனர் படித்தபடியே இருந்தது; சாம்பசிவம் சிறிது யோசனை செய்தவராய், “உம் நடக்கட்டும்; எல்லாம் காலவித்தியாசம்; என்னென்ன சம்பவிக்கிறதோ பார்க்கலாம். இப்போது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்றார்.
துரை அவருடைய வேதாந்தப் பேச்சைக் கேட்டுப் புரளியாகப் புன்னகை செய்து, “இந்த முற்பாதியின் நகல் ஒன்று வேறு காகிதத்தில் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதில் என்னுடைய கையெழுத்தும் செய்திருக்கிறேன். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். சென்னை ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷனில் நானே நேரில் கமிஷனரிடம் இதன் முற் பகுதியான உத்தரவைப் பெற்றுக்கொண்டேன்’ என்று தந்தியின் பின்புறத்தில் எழுதிக் கையெழுத்துச் செய்து அதில் உங்களுடைய பெருவிரல் ரேகையை அழுத்துங்கள்; அவ்வளவே, வேறொன்றுமில்லை. அதன்பிறகு உங்களுக்கு விருப்பமான இடத்துக்கு நீங்கள் போகலாம்” என்றார்.
அதைக் கேட்ட சாம்பசிவம் தம்மை மறந்த நிலைமையில், கமிஷனர் சொன்னபடி செய்துவிட்டு; உத்தரவுக் காகிதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு, துரையிடம் சொல்லிக்கொள்ள வேண்டுமென்னும் மரியாதையையும், தமது தேகத்தையும் முற்றிலும் மறந்து நேராக வெளியிற் போய் வண்டியில் ஏறிக்கொண்டார். வண்டி ஓட்டப்பட்டது. மூன்று உலகங் களையும் எரித்த ஈசனது கோபத்தையே, அவ்விருவரின் கோபத்திற்கு இணைசொல்லவேண்டும். அன்றி, வேறு எந்த கோபமும் அந்தச் சமயத்தில் இணைசொல்லத் தகுந்ததல்ல. தாங்கள் வண்டியிற் செல்வதாக அவர்களுக்குத் தோன்ற வில்லை. ஆகாயத்தில் பறப்பதாகவே நினைத்துக் கொண்டனர். அவர்களுடைய மனதிலிருந்து பொங்கியெழுந்து உலகத்தை யெல்லாம் மூடிய உணர்ச்சியைக் கோபம் என்பதா , துயரம் என்பதா , விபத்து என்பதா என்ன வென்பது? யாவும் இருந்தன வென்றே சொல்லவேண்டும். மிதமிஞ்சிய கொதிப்பில் அவர்களுடைய நிலைமை கட்டுக்கடங்காமல் போயிற்று, வாய் திறந்து பேசவும் வலுவற்றவராய்ப் போயினர். ஐந்து நிமிஷ நேரத்தில் வண்டி வைத்திய சாலையின் வாசலில் நின்றவுடன், சாமாவையர் “இறங்குங்கள்” என்ற பிறகே, அவ்விருவரும் தமது உணர்வைப் பெற்றுக் கீழே இறங்க, மூவரும் உட்புறம் நுழைந்தனர். அப்போது அகாலமாய்ப் போனமையால், பிணியாளிகளிடம் போகக் கூடாதென்று சேவகன் அவர்களைத் தடுத்துவிட்டான். என்ன செய்வது என்பதைப்பற்றி சாம்பசிவம் யோசனை செய்தார். மற்றவரை வெளியில் இருக்கச் செய்து தாம் மாத்திரம் பெரிய டாக்டர் துரையிடம் போய், தாம் தஞ்சாவூர் டிப்டி கலெக்டரென்றும், வண்டியில் அடிபட்டுக் கிடக்கும் தமது மருமகப் பிள்ளையை அவசரமாகப் பார்க்கவேண்டுமென்றும் கூற, அவர் இரக்கங்கொண்டு, போய்ப் பார்க்க அனுமதி கொடுத்தார். ஆனால், வராகசாமியுடன் பேசி, அவனை அலட்டக்கூடா-தென்றும், பதினைந்து நிமிஷத்திற்கு மேல் இருக்கக் கூடாதென்றும் நிபந்தனை கூறி அவ்வாறு அநுமதித்தார்.
உடனே மூவரும் நோயாளிகள் கட்டில்களிற் படுத்திருந்த ஒரு அறைக்குள் சேவகனால் நடத்தப்பட்டனர். வராகசாமி படுத்திருந்த இடத்தை சாமாவையர் அறிவார் ஆதலின், அவர் மற்ற இருவரையும் அவ்விடத்திற்கு அழைத்துப் போனார். ஆனால், கட்டிலில் படுத்திருந்த மனிதன் வராகசாமிதானா வென்னும் சந்தேகம் அவர்களது மனதில் உதித்தது. அவ்வளவு அதிகமாக அவன் உருமாறிப்போய், கண்களைத் திறவாமல் முற்றிலும் உணர்வற்று தளர்வடைந்து உயிரற்றவன் போலத் துவண்டு கிடந்தான்; உடம்பில் ஏராளமாகத் துணிக்கட்டுகள் காணப்பட்டன. அவன் அத்தனை காயங்களை அடைந்தான் என்பதை அவற்றிலிருந்து யூகித்துணர்ந்தவுடன் அவர்களது உயிரே கிடுகிடென்று ஆடித் தத்தளித்தது ; குலைநடுக்கம் எடுத்தது; மயிர் சிலிர்த்தது; கண்களில் கண்ணீர் பொங்கிக் கடகடவென்று கன்னங்களில் வழிந்தது. அவர்களது மனம் கொதித்தது; வயிறு பற்றி எரிந்தது; இருவரும் அந்த நிலைமையில் என்ன செய்வர்? அந்தப் பிணியிலிருந்து அவனை மீட்பதற்குத் தங்களது உடல் பொருள் ஆவி மூன்றையும் கொடுத்துவிடவும் தயாராக இருந்தனர். அந்தப் பரிதாபகரமான தோற்றத்தைக் காண, அவர்களுடைய முந்திய விசனங்கள் யாவும் புலியின் முன் பூனைக் குட்டிக ளென்ன ஓடி யொழிந்தன; அவர்களது மனம் நைந்திளகி ஏங்கியது. இருவரும் கட்டிலுக்கருகில் நின்று மாறிமாறி காயங்களையும் முகத்தையும் உற்று நோக்கினர்.
ஒவ்வொரு காயமும் எவ்வளவு பெரிதாயிருந்த தென்னும் விவரத்தை சாமாவையர் சொல்லச் சொல்ல, அவர்கள் விம்மி விம்மி அழுதனர்; தமது முந்தானையால் வாயை மூடிக் கொண்டு பொருமி யழுது, கண்ணீரைத் துடைத்துக் கொண்டனர். சிறிதும் அசைவின்றி வராகசாமி சவம்போலக் கிடந்தான். உடனே சாம்பசிவம் மனவுருக்கம் அடைந்து, “ஐயோ! ஏழரை நாட்டான் எல்லாரையும் ஒரே காலத்தில்தானா ஆட்டிவைக்கவேண்டும்? எனக்காயினும் உத்தியோகம் போனதோடு நின்றது; உமக்குத் தேகத்துன்பமா நேரவேண்டும்! பாவியாகிய எனக்கு நன்மையே நிலைப்பதில்லை. பத்து நாட்களுக்கு முன் மேனகாவை நீர் மிகவும் அன்பாக நடத்தி அரை நொடியும் அவளை விட்டுப் பிரியாது வாஞ்சையைக் காட்டியதைக்கண்டு என் மனம் எவ்வளவு பூரித்தது. உனக்கும் இவ்வளவு சந்தோஷமா என்று தெய்வமே அதைக் கண்டு பொறாமை கொண்டு என் வாயில் மண்ணைப் போட்டு விட்டதே! என்னுடைய திருஷ்டி தோஷமே உங்கள் இருவரையும் இப்படி அலங்கோலப்படுத்தி உங்கள் வாழக்கையைச் சின்னா பின்னமாக்கி யிருக்குமோ! அப்படிப்பட்டதுஷ்டக் கண் இப்போது ஏன் விசனப்படுகிறது” என்று பலவாறு தமக்குள் நினைத்து உருகினார். கனகம்மாள் வராகசாமியின் முகத்தருகினில் குனிந்து அன்பு ததும்ப, ”மாப்பிள்ளை; மாப்பிள்ளை!” என்று இரண்டு மூன்று முறை கூப்பிட்டாள். அவன் அதை உணர்ந்ததாகத் தோன்றவுமில்லை; சிறிதும் அசைவற்றும், கண்திறவாமலும் முன்போலவே கிடந்தான்; கனகம்மாள், அப்போது அவனுக்கு எவ்வித உபசரணை செய்வதென்பதை அறியமாட்டாமல் தவித்தாள்.
புலிப்பால் தேவையென்றாலும், உடனே தருவிக்கவும், அவனது உயிர் எமலோகத்தின் வாசற்படியில் இருந்தாலும், அங்கு சென்று எமனுடன் முஷ்டியுத்தம் செய்து அவன் உயிரை மீட்டுவரவும் தக்க திறமை வாய்ந்த கனகம்மாள், அப்போது எப்பாடு படுவதாயினும், வராகசாமியின் நிலைமையில் சிறிய மாறுபாடும் தோன்ற வகையில்லை; மற்ற துன்பங்களாகிய இடிகளைத் தாங்கிய கனகம்மாள் அதைக் கண்டு சகிக்கமாட்டாமல் பதைபதைத்தாள்; தான் ஒன்றையும் செய்யமாட்டாமல் சும்மா நிற்பது அவளுக்குத் துன்பமயமாக இருந்தது. அன்பு என்னும் பெரும் பேய் மனதிற்குள்ளிருந்து ஓயாமல் இடித்து இடித்து அவளை ஊக்கிக்கொண்டே இருந்தது. கன்றுக்குக் கனிந்திறங்கும் பசுவைப்போல உள்ளம் உருகிநின்று, தன் வலது கையை நீட்டி அவனுடைய கன்னத்தை மெல்லத்தடவி, “மாப்பிள்ளை! மாப்பிள்ளை!” என்றாள். திடீரென்று வராகசாமியின் கண்கள் திறந்து கொண்டன. ஆனால் விழிகள் பயங்கரமாக இருந்தன. பார்வை அங்கு நின்றவர்களின் மீது விழவில்லை. அவன் வேறு வெளியைப் பார்த்தான்; அவனுடைய மூளை நன்றாய்க் குழம்பிப் போயிருப்பதையும், அவன் தேகமுற்றிலும் பச்சைப்புண்ணா யிருப்பதையும் அவன் விழியின் குழப்பமும், ஒளியின்மையும் தெளிவாகக் காட்டின. அடுத்த நிமிஷத்தில் கண்களில் அயர்வு தோன்ற, இமைகள் தாமே மூடிக்கொண்டன. அப்போது அங்கு வந்த துரைஸானியாகிய தாதி யொருத்தி, “சந்தடி செய்யாமல் பார்த்துவிட்டுப் போங்கள். அவருடன் பேசக்கூடாது” என்று இங்கிலீஷ் பாஷையில் கீச்சுக்குரலில் அதிகாரத்தோடு கூறினாள். அதைக் கேட்ட கனகம்மாள் அடங்கிப் பின்வாங்கினாள்.
அதற்குள் சாமாவையர் வராகசாமிக்குப் பக்கத்தில் கழற்றி வைக்கப்பட்டிருந்த, அவனுடைய சொந்த உடையை மெல்ல எடுத்து அதிலிருந்த கடிதங்கள் இரண்டையும் படத்தையும் எடுத்து சாம்பசிவத்தினிடம் கொடுக்க அவர் மிகுந்த ஆலலோடு அவற்றை வாங்கி படத்தை உற்று நோக்கினார். அதைக் கண்ட கனகம்மாளும் அருகில் நெருங்கி அதைப் பார்த்தாள். விஷயம் இன்னதென்பது அவர்களுக்கு உடனே விளங்கவில்லை. மதிமயக்கங் கொண்ட சாம்பசிவம் ஒரு கடிதத்தை எடுத்துப் படித்தார்; பிறகு இன்னொன்றைப் படித்தார். கனகம்மாளும் அவருடன் கூடவே அவற்றைப் படித்துவிட்டாள். இருவரின் முகங்களும் சடக்கென்று மாறிவிட்டன; பிரேதக்களை தோன்றியது; புத்தி குழம்பியது; சிரம் கிருகிருவென்று சுழன்றது; நெருப்பாற்றில் நீந்தித் தத்தளிப்போரைப் போலாயினர். வைத்தியசாலையும், வராகசாமியும்,அவனுடைய காயங்களும், கட்டுகளும் அவர்களுடைய நோக்கத்தினின்று இந்திரஜாலமோவென்ன நொடியில் மறைந்தன.
மாயாண்டிப் பிள்ளை மேனகாவுமே அவர்களது அகக்கண்ணாகிய நாடகமேடையில் தோன்றிக் கூத்தாடினர். தமது உடம்பையும் தாம் எங்கிருக்கிறோம் என்பதையும் மறந்து பதறிப்போய் அப்படியே தூண்களைப் போல நின்றுவிட்டனர். யார் என்ன சொல்லுவது என்பதை அறியாமல் சுவரில் தீட்டப்பட்ட சித்திரப் பதுமைகளைப் போல அசைவற்றிருந்தனர். அப்போது தாதியின் கீச்சுக்குரல் திரும்பவும் உண்டாயிற்று. “பதினைந்து நிமிஷம் முடிந்து போய்விட்டது; போகலாம்” என்ற சந்தோஷ சங்கதியை சிறிதும் மனங் கூசாமல் அவள் தெரிவித்தாள். அதற்குள் சாமாவையர், “அண்ணா ! நாழிகையாய் விட்டதாம்; நாம் வெளியிற் போக வேண்டும்; கடிதங்களை முன்போல வைத்துவிடுவோம். துரையின் அனுமதி யில்லாமல் நாம் எதையும் எடுத்துக் கொண்டு போகக்கூடாது” என்றார். அதைக் கேட்ட சாம்பசிவம் கடிதங்களையும் படத்தையும் முன்போல உடைக்குள் வைத்துவிட்டு வெளியில் நடந்தார். அவருடைய நிழலைப்போலக் கனகம்மாளும் கூடவே சென்றாள். மூவரும் வைத்தியசாலைக்கு வெளியில் வந்தனர். அங்கு குதிரை வண்டியுடன் சாயப்பு தயாராக இருந்தான். வண்டியில் பூட்டப்பட்டு, விடுபடும் வழியறியாமல் தத்தளித்து நின்ற குதிரையும், சாம்பசிவம் கனகம்மாள் ஆகிய இருவருக்கும் நேர்ந்து வரும் பொல்லாங்குகளைக் கண்டு அழுவதைப்போலக் கண்ணீர் சொரிந்து தன் விதியை நினைத்து அழுதுகொண்டு நின்றது.
வெளியில் வந்தவுடன், சாம்பசிவம் வண்டிக்கருகில் நெருங்காமல் சற்று தூரத்திலேயே நின்றார். மற்ற இருவரும் வந்தனர். இரணியனது குடலைப் பிடுங்கி மாலையாய்த் தரித்துக்கொள்ளும் எண்ணத்துடன் மகா கோபத்தோடு தோன்றிய உக்கிர நரசிம்மமூர்த்தி தூணிற்குள்ளிருந்து கோப நகை செய்ததைப்போல, அங்கிருந்தோர் நடுங்கும்படி சாம்பசிவம் கலகலவென்று சிரித்தார். கடிதங்களில் காணப்பட்ட விஷயம் முற்றிலும் முழுப்புரட்டான கற்பனை யென்று அவர் முன்பே உறுதி செய்துகொண்டார். மேனகா தஞ்சையிலிருந்த ஒரு வருஷ காலத்தில் கணவனது பிரிவாற்றாமையால் பட்ட பாட்டையும் ஊணுறக்கமற்றும் மேன்மாடியை விட்டுக் கீழிறங்காமலும் கிடந்து ஏங்கித் துரும்பாய் மெலிந்து தன்னை வதைத்துக் கொண்டதையும் நன்றாக அறிவார் ஆதலின், அவர்களுக்கு விபசார தோஷம் கற்பிப்பது, மகா பாபமான காரியமென்று எண்ணினார். அவளைப் பற்றி மனதாலும் அவ்வாறு நினைப்பது கொடிய பாதகமென்று உறுதியாக நினைத்தார். மகா உத்தமியான அவள் விஷயத்தில் எத்தகைய தகாத நினைவும் கொள்ள அவருடைய மனது கூசியது.
தமது விஷயத்தில் தந்தியில் அபாண்டமான பொய் குற்றங்கள் சுமத்தப் பட்டிருக்கையில், தமது பெண் விஷயத்திலும் இப்படிக் கற்பனையான குற்றம் சுமத்தப்படுவது ஒரு பெரிய வியப்பாகாது என்றும், ஒன்று எப்படி முற்றிலும் புரட்டோ , அவ்வாறே மற்றதும் புரட்டானது என்றே நிச்சயித்தார். கடித விஷயம் நாத்திமார்களாலேயே உற்பத்தி
செய்யப்பட்டதென்றும், கனகம்மாள் முதல்நாள் கூறியபடி அவர்கள் மேனகாவைக் கொன்றே இருக்கவேண்டும் என்று நினைத்தார். அவர்கள் போலீஸில் பதிய வைக்காமையும், அந்த நினைவையே உறுதிப்படுத்தியது. தமது அருமைப்பெண்ணை தாம் இனி காண்போமா, அவளை எப்படிக் கொன்றிருப் பார்களோ என்ற எண்ணங்கள் உதிக்க உதிக்க அவருடைய உடம்பு அப்பொழுதே வெடவெடவென்று துடித்தது.
உடனே போலீஸில் பதியவைத்து, வராகசாமியின் வீட்டைச் சோதனை போட்டு விதவைகள் இருவரையும் கைது செய்து நன்றாக விசாரணையைத் தொடக்க வேண்டுமென்று நினைத்தார். தனது சகோதரிகளை அவமானப்படுத்தியதைப்பற்றி வராகசாமி தங்கள் மீது கோபங்கொள்ளக் கூடுமாயினும், தாம் அவ்வாறு செய்தே தீரவேண்டு மென்று உறுதியாக வெண்ணினார். ஆனால், அதற்குள் அவர் மனதில் இன்னொரு நினைவு உண்டாயிற்று. சென்ற பத்து மாதங்களாக தஞ்சையில் நாடகம் நடத்திய வீராசாமி நாயுடு கம்பெனியில் மனமோகன மாயாண்டிப் பிள்ளை யென்ற புகழ்பெற்ற ஒரு ராஜ வேஷக்காரன் இருந்ததாகவும், அவன் ஏராளமான குடும்ப ஸ்திரீகளைப் பைத்தியங்கொண்டலையும் படி செய்து அவர்களைக் கெடுத்துவிட்டான் என்றும், அந்தக் கம்பெனி சமீபகாலத்தில் சென்னைக்கு வந்தது என்றும் அவர் தஞ்சையிலேயே நாளடைவில் கேள்விப்பட்டிருந்தார். வீராச்சாமி நாயுடுவும் வருமானவரி போடும் விஷயமாக தமது கச்சேரியில் ஒருதரம் விசாரணைக்கு வந்ததாகவும் அவருக்கு நினைவுண்டாயிற்று. ஆகையால் உடனே நாடகக் கொட்டகைக்குப் போய், வீராசாமி நாயுடுவையாவது மாயாண்டிப்பிள்ளையையாவது கண்டு கடிதத்தில் எழுதப்பட்டிருப்பது பொய்யென்பதற்கு அவர்களுடைய சாட்சியமும் கிடைக்கும்படி தயார்படுத்தி விட்டுவந்து அதன் பிறகு போலீஸில் பதிவு செய்வதே பலமான முறையென்று நினைத்தார்.
சாமாவையரை நோக்கி, “சாமாவையரே! வீராச்சாமி நாயுடுவின் கம்பெனி எந்தக் கொட்டகையில் ஆடுகிறது?” என்றார் சாம்பசிவம். மாயாண்டிப் பிள்ளை இருந்த கம்பெனி விஷயத்தை அறிந்தவரைப் போலப் பேசியதைக் கண்டு திடுக்கிட்டு உள்ளூற நடுங்கினார். ஆனால் அதை வெளியிற் காட்டாமல் மறைத்துக்கொண்டு “செங்காங்கடைக் கோட்டையில் ஆடுகிறது” என்றார்.
”சரி; அங்கே போய்விட்டு வருவோம், வாரும்” என்றார் சாம்பசிவம். அவருடைய அந்தரங்க நினைவை உணராத கனகம்மாள் அவர் மேனகாவின் கற்பு விஷயத்தில் சந்ததேகப்படுகிறார் என்று நினைத்து அதைப் பொறாமல், ” என்னடா இது? இந்தப் பொய்க் கடுதாசியை எடுத்துக்கொண்டு நாடகக் கொட்டகைக்குப் போக வேண்டுமா? குட்டிச்சுவரில் முட்டிக்கொள்ள வெள்ளெ ழுத்தா? இந்த மொட்டை முண்டைகளே கட்டுக்கதை எழுதி வைத்து விட்டு நீ இங்கே ரஜா இல்லாமல் வந்ததாக கலெக்டருக்கும் எழுதியிருக்கிறார்களடா! அங்கே எதற்காகப் போகிறது? அங்கே போய், “ஏனடா மாயாண்டிப் பிள்ளை! நீ என் பெண்ணை அழைத்துக்கொண்டு வந்துவிட்டாயா?” என்று கேட்கிறதா? அதெல்லாம் வேண்டாமப்பா! நீ பேசாமல் போலீஸில் எழுதி வை; முண்டைகள் தாமாக வழிக்கு வருகிறார்கள்” என்றாள்.
சாம்பசிவம் பணிவாக, “அம்மா! உண்மை யென்ன வென்பது எனக்குத் தெரியாதா? இருந்தாலும் கொட்டகைக்கு நாம் போவதில் கொஞ்சம் அனுகூலம் இருக்கிறது. நாம் போய்விட்டு வர ஒரு மணி நேரத்திற்கு மேலாகாது. அப்புறம் உடனே போலீஸில் பதிய வைப்போமே! போலீஸ் எங்கே ஓடப்போகிறது?” என்று மரியாதையாகக் கூற, கனகம்மாள், ”அப்படியானால் வண்டியில் ஏறுங்கள்” என்றாள்.
உடனே மூவரும் வண்டியில் ஏறிக்கொண்டனர். வண்டியைச் செங்காக்கடைத் தெருவிற்கு விரைவாக ஓட்டும்படி சாமாவையர் வண்டிக்காரனுக்கு உத்தரவு பிறப்பித்தார். எப்போதும் சுறுசுறுப்பையும் துரிதத்தையுமன்றி சோர்ந்த நிலைமையைக் காட்டாத வண்டிக்காரபாச்சாமியான் சாயுபுவின் வாயில் “இதோ ஆச்சு ஸாமி” என்ற சொல்லே எப்போதும் தவறாமல் வந்தது. அதற்கிணங்க குதிரையின் சதங்கைகளும் ஜல் ஜல் ஜல்லென்று ஓசை செய்தன. அவற்றால் உட்புறம் இருந்தவர் வண்டி வேகமாகவே ஓட்டப்படுவதாக நினைத்துக்கொண்டு திருப்தியடைந்தனர். ஆனால், உண்மையில் முன்னிலும் விசை குறைந்து கொண்டே வந்ததன்றி அதிகரிக்க வில்லை. தமயந்தியின் இரண்டாவது சுயம்வரத்திற்குப் போகும் பொருட்டு சாரத்தியம் செய்த நளமகராஜனைப்போல பாச்சாமியான் சாயப்பு கடிவாள வாரைக் கம்பீரமாக கையில் ஏந்தினான். வண்டி புறப்பட்டது.
ஒன்பதரை மணிக்கு வைத்தியசாலையிலிருந்து கிளம்பிய வண்டி மிகவும் சீக்கரமாக, பிற்பகல் ஒரு மணிக்கு செங்காங்கடைத் தெருவை அடைந்து (மூன்று மயில் தூரம்) வீராச்சாமி நாயுடு எவ்விடத்தில் ஜாகை வைத்துக் கொண்டிருக்கிறான் என்று சாமாவையர் விசாரிக்க, அவன் நாகமணித் தோட்டத் தெருவில் குடியிருக்கிறான் என்பது தெரிந்தது. வண்டி அவ்விடம் சென்றது. அது பரத்தையர் வசிக்கும் தெருவாதலால், அங்கு எப்போதும் இரவாகவே யிருந்தது. வீட்டின் கதவுகள் திறக்கவில்லை; மனிதரும் காணப்படவில்லை. பிளேக் வியாதி கொண்டதினால் காலி செய்யப்பட்ட ஊரைப்போல, அந்த இடம் மிகவும் பயங்கரமாகக் காணப்பட்டது; சூரியனும் அந்தத் தெருவில் தனது கிரணங்களை விடுவதற்கு அஞ்சுபவன் போலத் தனிமையில் நின்று மேற்குப் புறத்திலிருந்த தெருவிற்கு ஓடப் பார்த்தான். ஆந்தை, கோட்டான், கூத்தாடிகள், பரத்தையர், கள்வர், கொலைஞர், அமெரிக்க தேசத்திய ஜனங்கள் முதலியார் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவ ராதலின், நமது பகல் அவர்களுக்கு இரவல்லவா? அதனால், அந்தத் தெருவில் யாவரும் படுக்கையில் இருந்தனர்.
வீராசாமி நாயுடு எந்த வீட்டில் இருக்கிறார் என்பதைச் சொல்லக்கூடிய மனிதன் எவனும் அங்கு காணப்படவில்லை. சாமாவையரும் வண்டிக்காரனும் கீழே இறங்கி வீடுதோறும் சென்று கதவைத் தட்டினர்; ஒரு வீட்டில் பதிலே இல்லை. இன்னொரு வீட்டில் அப்போதே பயங்கரமாக கொட்டாவி விடுத்துக் கூச்சல் செய்து விழித்துக் கொண்ட ஒரு மனிதன் இன்னமும் தனது உணர்வைப் பெறாமல் “ஆ””ஊ” என்ற மறுமொழியே கொடுத்தான். இன்னொரு வீட்டில் அரைத் தூக்கத்திலிருந்த ஒரு கிழவி “ஆழது? இங்கே ஒழுத்தழுமில்லே! போழா!” என்று குழறிக்பேசி அதட்டினாள். அவ்வாறு அவர்கள் வீண் பாடுபட்டுக்கொண்டே செல்ல, அப்போது தெய்வச் செயலாக அங்கு ஒரு வழிப்போக்கன் வந்தான். அவன் வீராச்சாமி நாயுடுவின் வீட்டைக் காட்டினான். சாமாவையர், சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய மூவரும் அந்த வீட்டை அடைந்தனர். சாமாவையர் கதவைத் தட்டினார். பதில் இல்லை. மேலும் ஓங்கி இடித்தார். அப்போதும் பதில் இல்லை; கை ஓயாமல் ஒரு நாழிகை வரையில் கதவில் தமது முஷ்டியை உபயோகப்படுத்தினார். அதன் பிறகு ஒருவன் கதவைச் சிறிதளவு திறந்து அதைக் கையில் பிடித்துக்கொண்டு வழிமறைத்து நின்று மிகவும் நிதானமாக சாம்பசிவம் முதலியோரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு இழுப்பான குரலில், “நீங்க எங்கேயிருந்து வறீங்க?” என்றான்.
உடனே சாமாவையர், “வீராசாமி நாயுடு இங்கேதானே குடியிருக்கிறார்?” என்று கேட்டார்.
கதவைத் திறந்த மனிதன், ” என்ன சங்கதி? நீங்க எங்கயிருந்து வறீங்க” என்று திரும்பவும் கேட்டான்; அவன் அவர்களைக் கண்டு பயந்து விட்டான் என்பது நன்றாக விளங்கியது.
சாம்ப:- தஞ்சாவூரிலிருந்து வருகிறோம். நாயுடு தெரிந்தவர்; அவரைப் பார்த்துவிட்டுப் போகவேண்டும் – என்றார்.
அதைக் கேட்ட அந்த மனிதன் மறுமொழி யொன்றுங் கூறாமல் கதவைத் திரும்ப மூடி உட்புறம் தாளிட்டுக்கொண்டு போய் விட்டான்; வெளியிலிருந்த மூவருக்கும் அவனது நடத்தை வியப்பை உண்டாக்கியது; அவன் வருவானோ மாட்டானோ , வீராசாமி நாயுடு அந்த வீட்டில் இருக்கிறானோ இல்லையோ, மறுபடியும் கதவை இடிப்பதா கூடாதா வென்று பலவாறு எண்ணமிட்டுக்கொண்டு அரைநாழிகை நேரம் வெளியில் நின்றனர். அப்படி நின்றது சாம்பசிவத்திற்கு மிகவும் அவமானமாய்த் தோன்றியது; தேகமே கூசியது. என்ன செய்வார்? அது பெண்ணைப் பெற்றதன் பலனென்று நினைத்து நின்று வருந்திக்கொண்டிருந்தார். நல்ல வேளையாக அவன் திரும்பவும் கதவைத் திறந்தான். அவன் என்ன சொல்லப் போகிறானோவென்று மூவரும் அவன் வாயை நோக்கினர்.
அவன், “அவுங்க, இப்பத்தான் எந்திருச்சாங்க; அப்பிடி ஒக்காருங்க; மொகங் கழுவிக்கின போறவால உள்ளற போவலாம்” என்று சொல்லிவிட்டுத் திரும்பவும் தாளிட்டுக் கொண்டு போய்விட்டு ஒரு நாழிகைக்குப் பிறகு வந்து கதவைத் திறந்து, “வாங்க உள்ளற” என்றான். மூவரும் உட்புகுந்தனர். பல தாழ்வாரங்கள், கூடங்கள், அறைகள் முதலியவற்றைக் கடந்து மூன்றாங் கட்டுக்குள் நுழைந்தனர். கண்டவிட மெல்லாம் கிழிந்த திரைகளும், ஒடிந்த நாற்காலிகளும், பல்லிளித்த பக்கப் படுதாக்களும், இடுப்பொடிந்த காட்சிகளும், மூங்கில்களும், கயிறுகளும், குப்பையும், செத்தையும், புகையிலைத் தம்பலங்களும், கிழிக்கப்பட்ட தீக்குச்சிகளும், குடித்து மிகுந்த சிகெரட்டுகளும், வாடிப்போன வெற்றிலைகளும் கிடந்தன. ஆண்களும், பெண்களும் மூலைமுடுக்குகளி லெல்லாம் அலங்கோலமாய்ப் படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கினர். முகத்தில் பூசப்பட்ட அரிதாரம் பாதி கலையாமலும், கடவாயைப் பெருகவிட்டும், உடைகளை இழந்தும் தாறுமாறாய்க் கிடந்தனர். எங்கும் துற்நாற்றம் சூழ்ந்து வயிற்றைப் புரட்டியது.
சாம்பசிவம், கனகம்மாள் இருவரும் துணியால் மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு விரைவாக அப்புறம் நடந்தனர். “ஆகா! இந்த அழகைக் கண்டுதானா ஜனங்கள் ஏமாறி மோகிப்பது! இதன் பொருட்டா ஜனங்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் விரயம் செய்கிறார்கள்! இந்த விகாரங்களைக் கண்டுதானா குலஸ்திரீகள் தமது உயிராகிய கற்பையும், இம்மை வாழ்க்கையையும், தமது பெற்றோரையும், உற்றாரையும் இழந்து திண்டாடித் தெருவில் நிற்பது? இவர்களைப் பார்த்த கண்களைத் தண்ணீர் விடுத்தலம்பினும் அருவருப்புத் தீராது! கோரம்! கோரம் !” என்று நினைத்துக் கொண்டே மூன்றாங் கட்டில் நுழைந்தனர். அங்கிருந்த தனியான ஓரறையில் பாய் திண்டு முதலியவற்றின் மீது வீராசாமி நாயுடு உட்கார்ந்திருந் தான். ஒரு மூலையில் காப்பித் தண்ணீரும் கருத்த ஆப்பமும் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு புறத்தில் வெற்றிலை பாக்கு புகையிலை சிகரெட்டு முதலிய நிவேதனம் வைக்கப்பட்டிருந்தன. வேறு யாரோ வரப்போகிறார்களென்று நினைத்து அமர்த்தலாகக் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த வீராசாமி நாயுடு சாம்பசிவத்தைக் கண்டவுடன் திருக்கிட்டுத் தனது கண்களை நம்பாமல் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து அடங்கி யொடுங்கி குனிந்து கைகுவித்து, “சுவாமி! நமஸ்காரம்; வரவேண்டும்” என்று அன்போடு வரவேற்று, நாற்காலிக்காக அங்குமிங்கும் தாண்டிக் குதித்தான். ஒன்றும் அகப்படாமையால், எதிரிலிருந்த ஒரு கம்பளியை எடுத்துக் கீழே விரித்து உட்காரும்படி வேண்டினான். அவர் தஞ்சை டிப்டி கலெக்டரென்பது அவனுக்கு நன்றாகவே நினைவிருந்தது; அவனுடைய அந்தரங்கமான விசுவாசத்தைக் கண்ட சாம்பசிவத்தின் அருவருப்பு ஒரு சிறிது தணிந்தது; அவரும் புன்னகை காட்டி, “நான் உட்காருவதற்கு நேரமில்லை; நடு தூக்கத்தில் உம்மை நாங்கள் எழுப்பிவிட்டோம். ராத்திரி யெல்லாம் கண் விழித்திருப்பீர்கள். பக்கத்திலுள்ள நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவுக்கு ஒரு காரியமாக வந்தோம்; நீர் இங்கே இருப்பதாகக் கேள்விப்பட்டு உம்மையும் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தோம். வேறொன்றும் விசேஷ மில்லை; சௌக்கியந்தானே?” என்றார்.
நாயுடு:- (கைகுவித்து) தங்கள் தயவினால் சௌக்கி யந்தான்; ஏதோ இருக்கிறேன். இந்த ஏழையை மதித்து தாங்கள் இவ்வளவு தூரம் தயவு செய்தது என்னுடைய பாக்கியந்தான் – என்றான். ஆனால், அவனுடைய மனது மாத்திரம் ஒருவாறு அச்சங்கொண்டது. அவர் தமக்கு அதிகரித்த வருமானவரி விதிக்கும் பொருட்டு உளவறிய வந்திருப்பாரோ வென்று ஒருவகையான சந்தேகம் உதித்தது. ஆகையால், அவன் தனது தேக சௌக்கியத்தைக்-கூடப் பூர்த்தியாகத் தெரிவித்துக் கொள்ளாமல் இழுப்பாகக் கூறினான்; தான் சௌக்கியமாக இருக்கிறதாக அவன் சொன்னால், அதனால் அவனுக்கு நல்ல வருமானம் வருகிறதென்று நினைத்து வரி விதிக்கக் கூடிய சர்க்கார் அதிகாரிகளும் இருப்பதால், அவன் தனது க்ஷேமத்தைத் தெரிவிப்பதில் கூட சுங்கம் பிடித்தான்.
சாம்ப:- உங்களுக்குத் தஞ்சாவூரில் நஷ்டம் வந்ததென்று சொல்லிக்கொண்டார்களே! இங்கே எப்படி இருக்கிறது? – என்றார்.
நாயுடுவின் சந்தேகம் நிச்சயமானது. உடனே மூக்கால் அழத்தொடங்கினான். “ஆமாம்! இராமேசுவரம் போனாலும் சநீசுவரன் விடாதென்கிறமாதிரி தன்னிழல் தன்னோடு தானே வரும். அங்கே நஷ்டப்பட்டேன்; இங்கே பொருளை வாரி எடுக்க வந்தேன். இங்கே பெரிய அவக்கேடு சம்பவித்தது; என்ன செய்கிறது? அதிர்ஷ்டமில்லை ” என்றான். சாம்பசிவம் மிகவும் அநுதாபங்காட்டி, “அடாடா! என்ன அவக்கேடு வந்தது? சொல்லக்கூடியதுதானே?” என்றார்
வீரா:- எங்களிடத்தில் மாயாண்டிப்பிள்ளை யென்று ஒரு புகழ் பெற்ற ராஜா வேஷக்காரன் இருந்தான். அவன் திடீரென்று ஒரு வாரத்திற்கு முன் எங்கேயோ ஓடிப்போய்விட்டான். அவன் போனது மட்டுமின்றி ஐந்நூறு ரூபா பெறுமான உடுப்புகளையும், நகைகளையும் எடுத்துக்கொண்டு நல்ல சமயத்தில் போய்விட்டான். வேறு சரியான ராஜா வேஷக்காரன் இல்லாமையால், பண வசூலே கிடையாது; சோற்றுக்கும் திண்டாட்டமாய் விட்டது – என்றான்.
சாம்ப:- ஐயோ பாவம்! அவன் ஏன் போய்விட்டான்? சம்பளம் குறைவென்று போய்விட்டானோ?
நாயுடு :- அப்படி யொன்றுமில்லை. அவனுக்குச் சாப்பாடு போட்டு மாதம் இருநூறு ரூபா கொடுத்தேன். நான் அதில் குறைவு வைக்கவில்லை; இங்கிருந்தால் அவனும் பிழைத்துப் போகலாம்; நாங்களும் தலையெடுப்போம். தலைச்சுழி யாரை விட்டது.
சாம்ப:- அப்படியானால், அவன் ஏன் ஓடினான்?
நாயுடு:- வேறு எதற்காக ஓடுகிறான்? எல்லாம் ஸ்திரீ விஷயந்தான். அவன் சும்மாவிருந்தாலும், நாடகம் பார்க்க வரும் பெண்டுகள் அவனை விடுகிறதில்லை. அவன் தஞ்சாவூரிலிருந்தபோது யாரோ ஒரு பெரிய மனிதருடைய பெண்ணைத் திருட்டுத்தனமாக வைத்துக்கொண்டிருந்தானாம். அவள் மகா அழகு சுந்தரியாம்; அவளுடம்பில் ஐயாயிர ரூபா நகை யிருந்ததாம். அங்கிருந்து நாங்கள் இங்கே வந்த பிறகு, அவளும் ஏதோ தந்திரம் செய்து, தன் பெற்றோர் புருஷன் முதலியோரை ஏமாற்றிவிட்டு, இவனிடம் வந்துவிட்டாளாம். அவளும், அவனும் எங்கேயோ இரகசியமாய் ஓடிப்போய் விட்டார்கள், ரெங்கூன் சிங்கப்பூர் முதலிய அக்கரை தேசங்களுக்குப் போய் அவர்கள் இருவரும் நாடகக் கம்பெனி ஏற்படுத்தி ஆடப்போகிறதாகக் கேள்விப்பட்டேன். அவன் போன தேதி முதல் எங்களுக்குத் துன்பந்தான் – என்றான்.
அதைக் கேட்ட சாம்பசிவம் கனகம்மாள் ஆகிய இருவரின் முகங்களும் மாறுதலடைந்தன. விஷயம், கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதைப்போல முடிந்ததைப்பற்றிக் பெரிதும் கலக்க மடைந்தனர். மேனகா தஞ்சையில் தமது வீட்டிலிருந்த ஒவ்வொரு நிமிஷமும் கனகம்மாளின் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தாள் ஆதலின், இதில் சம்பந்தப் பட்டவள் மேனகா அன்றென்பது நிச்சயமாகத் தெரிந்ததா யினும் கடிதத்திற்கும், அந்த விவரத்திற்கும் ஒற்றுமை யிருப்பதால், ஒருக்கால் அவளே அவ்வாறு செய்திருப்பாளோ வென்னும் சந்தேகமும் அவர்களுடைய மனதில் அஞ்சி அஞ்சித் தலையைத் தூக்கியது. அவர்களுடைய குழப்பம், பெருங்குழப்பமாய், முற்றிலுங் குழப்பமாய் முடிந்தது.
நாயுடு:- பிராமண ஜாதியாம்!
சாம்ப:- வைஷ்ணவ ஜாதியா? ஸ்மார்த்த ஜாதியா?
நாயுடு:- அதை நான் கேட்கவில்லை. யாரோ ஒரு பெரிய மனிதருடைய பெண்ணாம். மகா சாகஸம் செய்து தங்கள் வீட்டாரை ஏமாற்றிவிட்டு வந்துவிட்டாளாம்.
சாம்ப:- பாவம்! யாருடைய பெண்ணோ தெரியவில்லை. சரி; நான் தஞ்சாவூர் போனவுடன் அந்தப் பெண்ணின் பெற்றோர் என்னிடம் வந்து பிராது சொல்லிக்கொண்டு அழுவார்கள்; அவனுடன் கூட இருந்த உங்களுக்கே அவன் போன இடம் தெரியவில்லையே! நான் இதில் என்ன செய்யப்போகிறேன்! சரி; நாழிகை யாகிறது; நாங்கள் போய் விட்டு வருகிறோம். நீர் ஒரு உதவி மாத்திரம் செய்யும்; மாயாண்டிப்பிள்ளை எங்கிருக்கிறான் என்பது உமக்கு இனிமேல் தெரியவந்தால், தஞ்சைக்கு என் பெயருக்கு ஒரு கடிதம் எழுதி விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்; அதை நான் அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் சொன்னால் அவர்கள் போய் பெண்ணை அழைத்துவருவார்கள்; அப்போது அவனும் இங்கே உங்களிடம் திரும்பி வந்து விடுவான்” என்றார். வீராசாமி நாயுடுவுக்கும் அது அநுகூலமான காரியமாகத் தோன்றியது; ” எஜமான்களின் தயவு மாறாமல் ஏழைமேல் எப்போதும் இருக்க வேண்டும்” என்று பன்முறை வேண்டிக் கொண்டான். உடனே மூவரும் வெளியில் வந்தனர்.
திண்ணையில் உட்கார்ந்திருந்த பாச்சாமியான் சாயப்பு எழுந்து போய் வண்டியின் மேல் தம் சிம்மாசனத்தில் திடீரென்று உட்கார்ந்தான். நின்றபடியே தூங்கி ஆடி விழுந்து கொண் டிருந்த குதிரை எதிர்பாராத அந்த அசைப்பால் மரக்கிளையி லிருந்து நைந்து விழும் பழம் போல பொத்தென்று கீழே விழுந்துவிட்டது. சாயபுவும் குதிரையின் முதுகின் மேல் குப்புற விழுந்தான். ஆனால், அவனுடைய மீசையில் மண் படுமுன் எழுந்துவிட்டான் என்றாலும், தன்னுடைய குதிரை அப்படிச் செய்து தன்னை அவமானப்படுத்தியது அவனால் சகிக்கக் கூடாத காரியமாக இருந்தது. அதிகரித்த கோபத்தினால் அவனுடைய தாடி மயிர் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஈட்டியைப் போல நீண்டு நின்றது; படுத்திருந்த குதிரையின் முகத்தண்டை அவன் வந்து கீழே உட்கார்ந்து அதன் இரண்டு காதுகளையும் இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டான்; அவன் ஒருக்கால் அதன் காதில் ஏதேனும் இரகசியமான மந்திரம் சொல்லி அதை எழுப்பப் போகிறானோ வென்று பிறர் சந்தேகிக்கத் தக்கதாக அந்த நிலைமை காணப்பட்டது.
ஆனால், அவன் குதிரையின் இரண்டு காதுகளையும் இறுகப் பிடித்துக்கொண்டு, பாறையில் மட்டையை உடைக்க இளநீரை மோதுதல் போல் ஓங்கி அதன் முகத்தைத் தரையில் ஏழெட்டு முறை மோத கிழக்குதிரை வீர் என்று கதறிக்கொண்டெழுந்தது. அதன் உடம்பில் விபரீதமான சுறுசுறுப்புண்டாயிற்று. மோவாயும், உதடுகளும், பற்களும், வாயிலிருந்த கடிவாளமுள்ளும், இரத்தப் பெருக்கும் ஒன்று சேர்ந்து தக்காளிப் பழமாய் நசுங்கி உருவமற்று ஒரே மொத்தையாகத் திரண்டு காய்ந்த பேரீச்சம் பழம் போலாயின; குதிரை சாகவும் மாட்டாமல், சகிக்கவும் மாட்டாமல் தவித்து மரண வேதனைப்பட்டது. தான் வண்டியில் ஏறும் போது தூங்கிய பெரும் பிழைக்காக குதிரையைத் தான் தக்கபடி தண்டித்து விட்டதாக நினைத்துத் தனது மார்பை பெருமையோடு பார்த்துக்கொண்ட சாயப்பு மூவரையும் நோக்கி, “ஏறுங்க ஸாமி! போகலாம்” என்று மரியாதையாக அழைத்தான். சாமாவையரும், பெரிதும் களைப்படைந்து தம்மை முற்றிலும் மறந்திருந்த மற்றிருவரும் வண்டியில்
ஏறிக்கொண்டனர்.
அதற்குள் அந்தத் தெருவில் இரண்டொரு வீட்டு வாயில்கள் திறக்கப்பட்டிருந்தன. எதிர்த்த வீட்டுத் திண்ணையில் நாலைந்து சோம்பேறிகள் உட்கார்ந்து சிகரெட்டுப் பிடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர். அவர்கள் நால்வரும் இருபது முதல் முப்பது வயது வரையில் அடைந்த யௌவனப் புருஷர்கள். அவர்கள் அந்தத் தெருவிலுள்ள பரத்தையர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் புருஷரைத் தேடிவந்து பிழைப்புக்கு வழி செய்யும் பேருபகாரிகள். அவர்களுடைய அலங்காரங்களோ, அவர்கள் மிக்க கண்ணியமான பெரிய மனிதர்கள் என்பதைச் சுட்டின. ஆனால், உண்மையில் அவர்களைக்காட்டிலும் இழிவான மனிதரை பூமாதேவி இது காறும் பெற்றிராள்.
சாம்பசிவம், கனகம்மாள், சாமாவையர் ஆகிய மூவரும் வீராசாமி நாயுடுவின் வீட்டுக்குள்ளிருந்து வந்ததைக் கண்டவுடன் அந்தத் தரகர்கள் புரளி செய்து அவர்களைப் பழிக்கத் தொடங்கினார்கள். அவரவர் மனதிலிருப்பதே அவரவர் வாயிலும் செயலிலும் தோன்றும் என்பதற்கு இணங்க, அந்தப் பெரிய மனிதர்களுக்கு உலகத்திலுள்ள எல்லோரும் கூட்டிக் கொடுக்கும் தரகராய்த் தோன்றினர். அவர்கள் சாம்பசிவம் முதலியோரைக் கண்ணெடுத்தும் பாராமலே சுவரைப்பார்த்து உரத்த குரலில் பேசத்தொடங்கினார்கள். ஆனால், அவர்களது ஒவ்வொரு சொல்லும் கணீர் கணீரென்று இம்மூவர் செவியிலும் பட்டது. என்றாலும், தம்மை ஏன் அப்படிப் பழித்துப் பேசுகிறார்கள் என்று சாம்பசிவம் கேட்பதற்கு வழியின்றி, அந்தச் சோம்பேறிகள் தமக்குள் பேசிக் கொள்வோரைப் போலச் சாமர்த்தியமாகப் பேசினார்கள்.
ஒருவன், “அடே பாப்பான்!” என்றான். இன்னொருவன், “அடே கும்பகோணத்துப் பாப்பான்!” என்றான்.
மூன்றாவது மனிதன், “இல்லேடா! அக்காளே! மாயாண்டிப் பிள்ளையைத் தேட்றாண்டா! அக்காளே இவனுக்கு மக இருப்பாடா! மாயாண்டிப்பிள்ளை தான் ஆண்டவனாச்சே; அந்த ஆண்டவனுக்கு எல்லோரும் குட்டிங்களை இட்டாந்து நிமித்தியம் (நிவேதனம்) பண்ண வாராங்கடா!” என்றான். நான்காவது மனிதன் , “அக்காளே! இந்த பாப்பார நாயிங்க கெட்டமாதிரி ஒருத்தனுங் கெடல்லேடா! அக்காளே அவுங்க எந்த வேலைக்குமே போவட்டுமே; எல்லோரையும் கெலிச்சுப்புட்றாங்கடா! கள்ளுக் குடிக்கட்டும்; அதை நாம்ப மொந்தை, மொந்தையாகக் குடிச்சா அவங்க மொடா மொடாவா முழுங்கிப்புட்றாங்க, பள்ளிக் கூடத்திலே படிச்சா , அவங்கதான் மொதல்ல தேர்றாங்க. கச்சேரி வேலே செஞ்சா ஒருத்தன் நாலுபேரு வேலையைச் செய்றான். அவுங்க பெரிய ராக்சசப் பயலுங்கடா; போன வருசம் கெவுணரு பங்களாவுலே ஒரு விருந்து நடந்திச்சாம்! அதுலே ஒரு பாப்பானும் மூணு தமிளனும் ஒரே மேசேலே ஒக்காந்தானுவளாம். மீன் குஞ்சேநெய்யிலே பொரிச்சு ஆளுக்கு ஒரு தட்டு வச்சாங்களா அக்காளே! அந்தப் பாப்பான் நாலு தட்டையும் பொட்லரு கையிலே யிருந்து புடிங்கிக் கொட்டிக்கினு தானே துன்னுட்டானாம். அப்பாலே இன்னம் எட்டுத் தட்டுக் கொண்டாரச் சொல்லித் துன்னானாம்; அக்காளே! அவங்க ஆம்பிளெங்களும் அப்படித்தான் பொம்பிளெங்களும் அப்படித்தான். பொம்பிள்ளெங்க, நாடவம் பார்க்க வந்தா நாடவக்காரனைப் பிடிச்சுக்கிறாங்க – என்றான்.
முதல் மனிதன்:- (பல்லைக் கடித்துக்கொண்டு) பார்டா? அக்காளே! வெட்கம், மானம், சூடு, சொரணை, ஒண்ணுமில்லாம பட்டப்பகல்லே , ஒரு கௌவியையும் இட்டுக்கினு நாடவக்காரன் ஊட்டுக்கு வந்துட்டான்; பாக்கறதுக்கு மகாபெரிய மனிசனைப் போல இருக்கறாண்டா! ஒதேடா அக்காளே! – என்றான்.
இன்னொருவன், “அக்காளே! குடுடா சாக்கடே ஹல்வா”
தங்களைத்தான் அவர்கள் அவ்வாறு தூற்றுகிறார்கள் என்பதை சாம்பசிவம் அறிந்து அந்தப் பக்கம் திரும்பி உற்று நோக்கினார்; அப்போது அவர்கள் ஒன்றையும் அறியாத பரம் சாதுக்களைப் போலக் காணப்பட்டனர். அவர்களில் ஒருவன் எழுந்து மிகவும் மரியாதையாகவும் அன்பாகவும் நன்மையும் புன்னகையும் ஜ்வலித்த முகத்தோடும், ” என்ன நாயனா பாக்கறீங்க? யாரைத் தேட்றீங்க; சொன்னாக்க நாங்க காட்டறோம் நாயனா!” என்று உபசாரமாகக் கேட்டு அதே காலத்தில் தணிந்த குரலில் ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால், “அக்காளே அக்காளே’ என்று திட்டினான். சாம்பசிவம் பட்டணத்துச் சோம்பேறிகளின் குணத்தை நன்றாய் அறிந்தவராதலின் பேசாமல் வண்டியில் ஏறிக் கொண்டார்.
மற்றவரும் ஏறிக்கொள்ள, வண்டி புறப்பட்டு தெருவின் கடைசியிற் போய் நின்றது. வண்டியை எவ்விடத்திற்கு ஓட்டுவதென்று வண்டிக்காரன் கேட்க, சாமாவையரும் கனகம்மாளும் சிந்தனை செய்யலாயினர். அதற்குள் சாமாவையர், “இப்போது மணி மூன்றிருக்கலாம். நாம் நேராக என்னுடைய வீட்டிற்குப் போவோம். அப்புறம் மற்றதைச் செய்வோம். நீங்கள் வேறு யார் வீட்டிலும் இறங்கவேண்டாம்” என்றார். வேறு இடமில்லாமையால் அவர்கள் அதற்கு இணங்கினார்கள். தொளசிங்கபெருமாள் தெருவிற்கு வண்டியை ஓட்டும்படி சாமாவையர் வண்டிக்காரனிடம் சொல்ல, அவன் அப்படியே வண்டியை நடத்தினான்.
சாம்பசிவமும் கனகம்மாளும் மேலே செய்யவேண்டுவ தென்ன வென்பதைப் பற்றி எண்ணமிடலாயினர். வீராசாமி நாயுடுவின் நாடகக் கம்பெனியின் விவரங்கள், மாயாண்டிப் பிள்ளையின் காரியம் முதலியவற்றை நிச்சயமாக அறிந்து கொண்டு போலீஸில் பதிய வைக்க நினைத்த சாம்பசிவத்தின் சந்தேகம் தீராச் சந்தேகமாய் முடிந்தது. அவர்களுடைய மனக் குழப்பமும் மலையாய்ப் பெருகியது. மாயாண்டிப்பிள்ளையைத் தேடிச் செல்வதா? அப்படியானால் எங்கு தேடிச்செல்வது? ரெங்கூனுக்குப் போவதா , சென்னையிலேயே தேடுவதா என்று ஒன்றன் மேல் ஒன்றாக எண்ணிக்கையற்ற நினைவுகளும், சந்தேகங்களும் மனதில் உதித்தன. முதல் நாட் காலையிலிருந்து அன்னம் தண்ணீரின்றி ஓயாமல் அலட்டப்பட்டதனால் அவர்களது தேகம் கட்டுக்கடங்காமல் தளர்ந்து போய்விட்டது. மயிர்களெல்லாம்
நெருப்பாய்ப் பற்றி எரிந்தது. முதல் நாளிரவு துயிலாமையால் கண்கள் அடிக்கடி இருண்டன; மூளை கலங்கியது; அடிக்கடி மயங்கி வண்டிக் கூண்டில் சாய்ந்தனர். முகம் விகாரத் தோற்றம் அடைந்தது. தமக்கு ஏற்பட்ட பலவகையான விபத்துக்களையும் ஒன்றன்பின் ஒன்றாக நினைத்து நினைத்து அவர்கள் மனது எவ்வித முடிவிற்கும் வரக்கூடாமல் சுழன்று கொண்டே இருந்தது; அது காறும் மேனகாவின் உறுதியான கற்பையே ஒரு வலுவாகக் கொண்டு; அதனால் எத்தகைய மனிதரையும், துன்பங்களையும் பொருட்படுத்தாமல் வந்த அவர்களுக்கு அந்த வலு ஆற்றில் இறங்கிய மண் குதிரையின் வலுவைப்போலத் தோன்றவே, அவர்களுடைய பெருமையும், ஆபத்திலும் ஒடுங்காத மனோதிடமும் சோர்வடைய ஆரம்பித்தன. மேலே எங்கு செல்வது? எதைச் செய்வது? பிழைப்பானோ சாவானோவென்னும் ஐயந்தோன்றக் கிடக்கும் மருமகப் பிள்ளையைப் பற்றிக் கவலை கொண்டு அவனைப் பிழைப்பிக்க வழிதேடுவதா? அன்றி, காணாமற்போன பெண்ணைத் தேடுவதா? இரண்டு நாட்களுக்குள் தஞ்சாவூர் போய்த் தமது உத்தியோகத்தை ஒப்புக்கொடுத்து விட்டு அங்கு நடக்கும் விசாரணையைக் கவனிப்பதா என்று எண்ணாதன வெல்லாம் எண்ணி ஏங்கித் தவித்தனர். அவர்கள் இருவரும் வாய் பேசா மௌனிகளாய்க் காணப்படினும் அவர்களது மனமும் தேகமும் எரிமலையின் உட்புறம்போல, எல்லாம் உருகிய நெருப்புக் குழம்பாயிருந்தமையால், தாமே எரிந்து பஸ் மீகரமாய்ப் போய்விடத்தக்க நிலையில் இருந்தனர்.
அவர்களுடைய நிலைமையைக் காட்டிலும் கோடி மடங்கு அதிகரித்த வேதனையை அடைந்து சாகுந் தருணத்திலிருந்த குதிரை இடைவழியில் திடீரென்று கீழேவிழுந்து படுத்துவிட்டமையால், ஆங்காங்கு வண்டி அரை நாழிகை, ஒரு நாழிகை நின்று போயிற்று. அதனால் உள்ளிருந்தோரும் ஒருவர் மேலொருவர் விழுந்து புரண்டு, மொத்துண்டதும், வண்டியின் நிறுத்தங்களும், சாம்பசிவம் கனகம்மாள் இருவரின் யோசனைகளுக்கு முற்றுப் புள்ளிகளாகவும், வியப்புக்குறிகளாகவும் வினாக்குறிகளாகவும் விளங்கின. தம்மைப் பிடித்த சனியன் இன்னமும் ஒழியவில்லையே யென்றும், மேலும் என்னென்ன துன்பங்கள் சம்பவிக்குமோ வென்றும் அவர்களது நெஞ்சம் கலங்கியது. அத்தகைய நிலைமையில் வண்டி மாலை ஐந்தரை மணிக்குச் சாமாவையரின் வீட்டை அடைந்தது; மூவரும் இறங்கி உட்புறம் சென்றனர். சாம்பசிவம் நடைத்திண்ணையில் “உஸ்” என்று உட்கார்ந்தார்; வாயிற்கதவை அரைப்பாகம் மூடிவிட்டு அதன் மறைவில் கனகம்மாள் கீழே உட்கார்ந்துகொண்டாள். சாமாவையர் தடதடவென்று உள்ளே ஓடினார்.
உட்கார்ந்த இருவருக்கும் களைப்பு வந்து மேலிட்டது; தேகத்தின் அங்கங்கள் யாவும் ஈயகுண்டுகளைப்போலப் பெருஞ் சுமைகளாக அழுத்தின. உட்கார்ந்த மாத்திரத்திலேயே அவர்கள் பிரம்மாநந்த போக அனுபவிப்பவரைப்போல ஒத்தனர். ஆனால், அவர்களது மனமொன்றே மேற் செய்ய வேண்டுவதைப்பற்றித் துடிதுடித்தது. உள்ளே ஓடிய சாமாவையர் ஐந்து நிமிஷ நேரத்திற்குள் காப்பியும் உப்புமாவும் தயாரிக்கும்படி தமது மனைவியிடம் கூறிவிட்டு அங்கிருந்த சமையற் பாத்திரங்களைக் கொணர்ந்து முற்றத்திலிருந்த கிணற்றடியிற் போட்டுவிட்டு நடைக்கு வந்து, “பாட்டியம்மா! எழுந்து வாருங்கள்; சாயுங்காலமாய்விட்டது. பாத்திரங்ளை தயாராக வைத்திருக்கிறேன். எழுந்து கொஞ்சம் சமையல் செய்து கொள்ளுங்கள். ராத்திரி முதல் பட்டினியல்லவா? வாருங்கள் காப்பி தயாராகிறது; சமையலாவதற்குள் அண்ணா கொஞ்சம் காப்பி சாப்பிடட்டும்” என்று கூறிவிட்டு உள்ளே ஓடினார். அதற்குள் அவர்களுடைய தேகம் அசைக்கவும் வல்லமையற்று ஓய்ந்து போனது. அவர்களுடைய உயிர் எந்த உலகத்திலிருந்ததோ வென்பது அவர்களுக்கே விளங்க வில்லை. மனமோ மேனகா வராகசாமி தஞ்சை கலெக்டர் ஆகிய மூவரிடத்திலும் சென்று சென்று மாறி மாறிப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தது.
சாம்பசிவம், “அம்மா! எல்லாவற்றிற்கும் நீ கொஞ்சம் ஆகாரம் தயார் செய். மேலே பல இடங்களுக்குப் போய் பார்க்கவேண்டியிருக்கிறது. உன்னாலும் இனி மேல் பசி தாங்கமுடியாது” என்றார். அம்மாள் அருவருப்போடு, ” எனக்கு ஆகாரமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். ஸ்நானம் செய்தால், களைப்பு தீர்ந்து போகும், அதை மாத்திரம்தான் செய்யப்போகிறேன்; நீ காப்பியைச் சாப்பிடு” என்று சொல்லி விட்டு எழுந்து கிணற்றடிக்குச் சென்று நீராடத் துவங்கினாள். அதற்குள் சாமாவையர் கூஜாவில் காப்பியும் ஒரு தட்டில் உப்புமாவும் எடுத்துக்கொண்டு ஓடிவந்து நடைத்திண்ணையில் வைத்து விட்டு, வாயிற்கதவை மூடித் தாளிட்டு விட்டு, அவற்றை நிவேதனங் கொண்டருளும்படி சாம்பசிவத்தை வேண்டினார். அவர் தமக்கு “வேண்டாம் வேண்டாம்” என்று மறுக்க, சாமாவையர், “இல்லை, இல்லை; கொஞ்சம் ஆகட்டும், ஆகட்டு”மென்று வற்புறுத்தினார்; சாம்பசிவம், “எனக்கு உடம்பெல்லாம் அசுசியா இருக்கிறது. ஸ்நானம் செய்த பிறகு பார்த்துக்கொள்வோம்” என்று கூறிவிட்டு காப்பியை மாத்திரம் அருந்தும் எண்ணத்துடன் எழுந்து தண்ணீர் குழாயண்டையில் சென்று இடையின் வஸ்திரத்தை நனைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யத் தொடங்கினார். பாதிவழி தூரம் கீழே நடந்து, தானே குதிரையையும் இழுத்துக்கொண்டு வந்த பச்சாமியான் வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரையை அவிழ்க்காமலே வேகவைக்கப்பட்ட கொள் நிறைந்த பையை அதன் வாயிற் கட்டிவிட்டு, வண்டியின் பெட்டிக்குள் விருந்த ஒரு ரொட்டியை எடுத்துக் கடித்து இழுத்து, அதிலிருந்து கொஞ்சமும் பிய்க்கமாட்டாமல் கைக்கும் வாய்க்கும் பெருத்த தகராறு உண்டாக்கிவிட்டான். அந்த ரொட்டி அவன் மனதைக் காட்டிலும் அதிகமாக இறுகிப்போயிருந்தது.
அப்போது சமையலறைக்குள்ளிருந்த சாமாவையருடைய மனைவி மீனாட்சியம்மாள் ஏதோ ஒரு அவசரமான விஷயத்தை நினைத்துக் கொண்டவளாய் அதைத் தனது கணவரிடம் தெரிவிக்க நினைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தாள். சாமாவையர் தாழ்வாரத்தில் நின்று கொண்டு வேறு பக்கத்தில் தமது கவனத்தைச் செலுத்தியிருந்தார். சாம்பசிவம் முதலிய அயலார் இருந்தமையால், மீனாட்சியம்மாள் தன் கணவனைக் கூப்பிட வெட்கியவளாய் சூ சூ வென்று மூஞ்சூறு கத்துவதைப்போல உதட்டால் ஓசை செய்ய, அதையுணர்ந்த ஐயர் அவளிடம் சென்றார். மிகவும் சாந்தமாக அவள் அவருடைய செவியில், “காலை 4 மணிக்கு ஒரு தந்தி வந்ததாம். அதைப் பெருந்தேவியம்மாள் கொடுத்துவிட்டுப்போனாள்; அதை வாங்கிப் புரையில் வைத்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு விளக்கெண்ணெய் வழிந்த ஒரு மாடத்தைக் காட்டினாள். சாமாவையர் விரைந்து சென்று மாடத்தில் எண்ணெயில் நனைந்து கிடந்த ஒரு தந்தியை எடுத்து மேல் விலாசத்தைப் பார்த்தார்.
”சென்னை திருவல்லிக்கேணி தொளசிங்கப்ருெமாள் கோவில் தெருவிலிருக்கும் வக்கீல் வராகசாமி வீட்டில் வந்திருக்கும் தஞ்சை டிப்டிகலெக்டர் சாம்பசிவஐயங்காரவர்களுக்கு” என்ற மேல் விலாசம் அதன் மேல் காணப்பட்டது. தஞ்சை கலெக்டரிடத்திலிருந்து அது வந்திருக்கலாமென்று நினைத்த சாமாவையர், அதை எடுத்துக்கொண்டு குழாயண்டையில் ஓடி, அண்ணா! உங்களுக்குத் தஞ்சாவூரிலிருந்து ஒரு தந்தி இன்று காலையில் வந்ததாம். வாங்கி வைத்திருக்கிறாள்” என்று கூறி உறை மூடிக்கொண்டிருந்த தந்தியைக் காட்ட, அதை எதிர்பாராத சாம்பசிவம் திடுக்கிட்டு, “யாருக்கு? எனக்கா? எங்கிருந்து வந்திருக்கிறது? இப்படிக் கொடும்” என்று பதைபதைத்தவராய், பாதி நனைந்தும் நனையாததுமாயிருந்த இடைத் துணியோடு பாய்ந்து வந்து அதை வாங்கி உடைத்து அது யாரிடத்திலிருந்து வந்தது என்பதை முதலில் பார்த்தார். “கிட்டன்” என்று கையெழுத்து செய்யப்பட்டிருந்தது. உடனே அவரது மனது எண்ணாத தெல்லாம் எண்ணியது. அந்த ஒரு நிமஷமும் நான்கு யுகங்களாய்த் தோன்றியது. அவர் விஷயத்தைப் படித்தார். அது அடியில் வருமாறு எழுதப்பட் டிருந்தது. –
“நீங்கள் பட்டணம் போனபின், “நேற்று ராத்திரி பன்னிரண்டு மணிக்கு நம்முடைய வீட்டிற்குள் தீவெட்டிக் கொள்ளையர்கள் முப்பது பேர்கள் நுழைந்து என்னையும் அக்காளையும் அடித்துப் போட்டு விட்டு நகைகள், பணங்கள், துணிகள், பாத்திரங்கள் பெட்டிகள் மேஜை நாற்காலிகள் முதலிய எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். எனக்கு ஒரு கோவணமும் அக்காளுக்கு ஒரு சிறிய கிழிந்த புடவைத் துண்டமும் கொடுத்துவிட்டு ஒரு துரும்பு விடாமல் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அக்காள்மேல் இருந்த நகைகளைப் பிடுங்கியதில் காது மூக்கு முதலியவற்றை அறுத்துவிட்டதோடு பச்சைப் புளியந்தடியால் அவளை அடித்து விட்டனர். அவள் செத்தவள் போலவே கிடக்கிறாள். பிழைப்பது கடினமென்று டாக்டர் சொல்லுகிறார். நீங்கள் உடனே வராவிட்டால் அவளைக் காணமுடியாது. தந்திக்குப் பணமும் கட்டிக்கொள்ளத் துணிகளும் சேவக ரெங்கராஜு கொடுத்தான்” என்று எழுதப்பட்டிருந்த தந்தியை சாம்பசிவம் படித்தார். எதிர்பாராமல் பீரங்கி குண்டு மார்பில் பாய்ந்து அவருடைய உடம்பையே தகர்த்து சின்னாபின்னமாக்கிவிட்டதைப் போல தமது மனத்தில் எழுந்த விசனத்தையும் ஆத்திரத்தையும் தாங்கமாட்டாமல் பைத்தியங்-கொண்டவரைப்போல ஆகாயத்தில் துள்ளிக்குதித்தார். பல வீடுகளுக்கு ஓசை கேட்கும்படி “அம்மா”வென்று வீரிட்டுக்கத்தினார்.
அந்த விபரீதக் கோலத்தைக் கண்ட கனகம்மாள் திக்பிரமை கொண்டு தண்ணீர் ஒழுகிய வஸ்திரத்தோடும் உடம்போடும் ” என்ன! என்ன!”வென்று கேட்டுக்கொண்டே ஓடிவந்தாள். சாம்பசிவம் தந்தியின் கருத்தை இரண்டொரு வார்த்தையில் தெரிவித்து விட்டு வெளியில் ஓடி மிகவும் அவசரமாக இரயிலுக்குப் போக வேண்டும் என்றும், வண்டியைத் தயாரிக்கும்படியும் சாயுபுவிடம் கூறிவிட்டு உள்ளே ஓடிவந்து அம்மாளையும் அழைத்துக்கொண்டு வெளிப்பட்டார்; மேனகாவையும், வராகசாமியையும், தமது உத்தியோகத்தையும், உலகத்தையும் மறந்தார்.
சாமாவையரையும் நடையிலிருந்த காப்பியையும், இடையில் பிழி படாமையால் ஜலம் சொட்டிய வஸ்திரத்தையும் கவனிக்காமல், இருவரும் வெறி கொண்டவரைப்போல ஓடி வண்டியில் உட்கார்ந்து கொண்டு, ” எழும்பூருக்கு ஓட்டு” என்றனர். மிகவும் தயாளமான மனத்தைக் கொண்ட சாயப்பு அவர்களது கோலத்தைக் கண்டு வேறு பக்கத்தில் தனது முகத்தைத் திருப்பி கலகலவென்று சிரித்தவனாய் வண்டியிலேறிக்கொண்டான். அவ்வளவோடு அவர்கள் தன்னை விட்டு விடுவார்களென்று நினைத்து வண்டியை ஓட்ட ஆரம்பித்தான். கொள்ளிருந்த பை, வாயை விட்டுப் போய் விட்டதே என்று ஏக்கங் கொண்ட நமது நீலவேணிக் குதிரை திரும்பவும் புறப்பட்டது. ஒன்றையும் அறியாமல் திகைத்த சாமாவையர் வெளியில் ஓடிவந்தார்; அதற்குள் வண்டி நெடுந்தூரம் போய்விட்டது.
அதிகாரம் 17 – அணங்கோ? ஆய்மயிலோ?
மூர்ச்சை யடைந்து இரவு பன்னிரெண்டு மணிக்குக் கீழே வீழ்ந்த மேனகா மறுநாட் காலை எட்டு மணிக்கே தனது உணர்வை ஒரு சிறிது பெற்றாள். அவ்வளவு நீண்ட நேரம் வரையில், அவளது தேகம் உணர்வற்று, உயிர்ப்பற்று, அசைவற்று, ஓய்ந்து, ஜடத்தன்மை யடைந்து இவ்வுலகையும், தன்னையும் மறந்து சவம் போலக் கிடந்தது. அவளது ஜீவனோ மண்ணிலு மின்றி விண்ணிலுமின்றி அந்தத் தேகத்தை விட்டுப் பிரிந்ததோ பிரியவில்லையோ வென்னும் சந்தேக நிலைமை யில் எவ்விடத்திலோ மறைந்து கிடந்தது.
மெல்லிய மலர்கள் மூக்கிற்கருகில் வருதலால் வாடிக்குழைந்து போதலைப்போல உத்தம ஜாதிப் பெண்களின் மனதும் தேகமும் காமாதூரரது சொல்லால் குழைந்து கருகிப்போகுமல்லவா! அவ்வாறே மேனகா வென்னும் மெல்லியலாள் எதிர்பாராத பெருத்த விபத்திற் பட்டு அன்றிரவில் நெடு நேரம் வரையில் நைனா முகம்மது மரக்காயனுடன் போராடவே , அவளது மனதும் மெய்யும் அளவுகடந்து அலட்டப்பட்டு நெகிழ்ந்து போயின. உயிரிலும் அரியதான தனது கற்பை , அந்தக் கள்வன் அபகரித்து விடுவானோவென்ற சகிக்கவொண்ணா அச்சமும் பேராவலும் பொங்கியெழுந்து அவளை வளைத்துக் கொண்டன. கணவனது சுகத்தைப் பெறாமல் நெடிய காலமாய் பெருந்துன்பம் அனுபவித்து அலமாந்து கிடந்த தன்னைத் தனது ஆருயிர்க் கணவன் கடைசியாக வரவழைத்து ஒப்பற்ற அன்பைக் காட்டி இன்பக் கடலிலாட்டிய காலத்தில், அதை ஒரு நொடியில் இழந்துவிட நேர்ந்ததைக் குறித்துப் பெரிதும் ஏங்கினாள். தனது பிராணநாதனை இனி காணல் கூடுமோ கூடாமற் போகுமோ வென்ற பெருந்துயரமும் பேரச்சமும் உரமாக எழுந்து வதைத்தன.
நைனா முகம்மதுவின் காமாதூரமான தோற்றமும் மோகாவேசக் குறிகளும் வரம்பு கடந்த கன்னகடூரமான சொல்லம்புகளும் பசுமரத்தாணிபோல அவளது உள்ளத்தில் தைத்து ஊடுருவிப் பாய்ந்து அதை சல்லடைக் கண்ணாய்த் துளைத்துப் புண்படுத்திய தாதலின், தத்தளித்து மயங்கி தற்கொலை புரிந்து கொள்ள வெண்ணி, தனது மெல்லிய இயற்கைக்கு மாறாக மிகவும் வற்புறுத்தி வலுவையும் மனோ உறுதியையும் வருவித்துத் தனது தேகத்திற்கும் மனதிற்கும் ஊட்டி, விண்ணென்று சுருதி கூட்டப்பட்ட வீணையைப் போல இருந்த தருணத்தில் தந்தியருதலைப்போல, அவளது கரத்திலிருந்த கத்தியை யாரோ பிடுங்கிக்கொள்ளவே அவளது வீராவேசமும், மனதின் உரமும், உறுதியும் ஒரு நொடியில் உடைந்து போகும் நீர்க்குமிழியைப் போல, இருந்தவிடந்தெரியாமற் போகவே, அவளுடைய அங்கம் முற்றிலும் தளர்வடைந்து நிலை தடுமாறிப்போனது. தனது கத்தியைப் பிடுங்கினவன் அந்த மகம்மதியனே யென்னும் அச்சமும், இனி தனது கற்பு நிலையாதென்னும் அச்சமும் பெரும் பேய் அறைதலைப் போல, அவளுடைய மனத்தைத் தாக்கவே, அவளது மூளையும், அறிவும் சிதறிப்போயின. சிரம் கிருகிரென்று சுழன்றது. ஒரு விநாடிக்குள் அவள் வேரற்ற மரம்போலக் கீழே படேரென்று வீழ்ந்து மூர்ச்சித்தாள். முகம் வெளுத்துப் பிணக்களை பெற்றது. நித்திரைக்கு அப்பாலும் மரணத்திற்கு இப்பாலுமான இருண்ட நிலைமையில் நெடுநேரம் வரையில் அவளது உணர்வு ஆழ்ந்து கிடந்தது.
மேற்கூறப்பட்டபடி மறுநாட்காலை எட்டு மணிக்கே பூந்தோடுகள் போன்ற அவளது அழகிய இமைகள் சிறிது விலகின. வெளுத்திருந்த வதனத்தில் இரத்த ஓட்டம் காணப்பட, ரோஜா இதழின் நிறம் தலை காட்டியது. ஆனால், அவளது விழிகள் தமது தொழிலைச் செய்யாமல் வெறும் விழிகளாயிருந்தன. வெளியிலிருந்த எந்தப் பொருளையும் அவ்விழிகள் உட்புறத்திற்குக் காட்டவில்லை. ஆனால், அவைகள் உட்புறத்தின் தன்மையை மாத்திரம் நன்றாக வெளியில் தோற்றுவித்தன. மூளையின் குழப்பமும், உணர்வின்மையும் நிதரிசனமாக விளங்கின. அவ்வாறு பிளவுபட்ட இமைகள் இரண்டொரு நிமிஷ நேரத்தில் சோர்வடைந்து சேர்ந்து கொண்டன. அவள் திரும்பவும் சவம் போலானாள். மிக்க பயங்கரமாக இருண்ட இரவுகளில் எப்போது இரவு தொலையுமென்றும் எப்போது பொழுது புலருமென்றும் மனிதர் வருந்து கையில் நெடுநேரத்திற்கு முன்னரே கோழி கூவி பொழுது விடியுமென்னும் நம்பிக்கை உண்டாக்குதலைப்போல மேனகாவை நாகபாசமெனக் கட்டி அழுத்தியிருந்த இருள் விலகுமென்பதை அவளது இமைகள் முன்னால் அறிவித்தன. அதனால், அவளது உடம்பு மாத்திரம் இன்னமும் அசைவற்றே கிடந்தது; காணாமற்போன மனிதரைத் தேடியழைத்து வர வேவுகாரரை அனுப்புதலைப் போல, மறந்து போன அவளது உணர்வைத் தேடிக்கொண்டு வரும் பொருட்டு அன்றிரவு முதல் காலை வரையில் உள்ளே செலுத்தப்பட்ட மருந்துகள் தமது அலுவலை மிகவும் திறமையோடு செய்து, எமனுலகம் வரையிற் சென்று முஷ்டி யுத்தம் செய்து, அதைத் திரும்பிக் கொணர்ந்து, அவளுடைய உடம்பை இறுக அழுத்திக் கொண்டிருந்த இரும்புக் கதவு போன்ற உணர்வின்மையை உடைத்து அதில் ஒரு சிறிய துளை செய்து, உட்புறத்தில் உயிரைப் பெய்தன. அவளது உயிராகிய விளக்கு நன்றாய்ப் பிடித்துக்கொண்டு சுடர்விட்டு எரிய ஆயத்தமாய் புகைய ஆரம்பித்தது. அவளது மனதில் உடனே ஒரு சிறிது உணர்ச்சி உதயமானது. அவ்வுணர்ச்சியில் ஒரே குழப்பமும் உடம்பு முற்றிலும் ஒரே இரணகாயமா யிருப்பதும் தெரிந்தனவன்றி, தான் யாவரென்பதும், தானிருந்த இடம் எதுவென்பதும், தனக்கு நேர்ந்த துன்பங்கள் இன்னின்ன வென்பதும் மனதிற் புலனாகவில்லை. இன்னமும் தேகமும் மனதும் சலனப்பட்டு இயங்காமல் ஜடத்தன்மையான நிலைமையில் இருந்தன. மேலும், கால் நாழிகையில் புகையின் நடுவில் மெல்லிய சுடர் எழுதலைப்போல அவளது உயிரும் உணர்வும் சிறுகச்சிறுக வலுவடைந்து பெருகின. தான் மேனகா வென்பதை அப்போதே அவள் உணர்ந்தாள். தான் தனது இல்லத்தில் படுத்துத் துயில்வதாயும், அதில் பயங்கரமான கனவு கண்டு கொண்டிருப்பதாயும் ஒரு எண்ணம் அவளது மனதில் உதிக்க ஆரம்பித்தது.
தனது நாத்திமார்களும், அவர்களது துர்ப் போதனையால் தனது கணவனும் தன்னைக் கொடுமையாய் நடத்தியதும், அவர்கள் சொன்ன சொற்களும், புரிந்த செய்கையாலும் , தான் பிறகு ஒரு வருஷகாலம் தஞ்சையில் தவித்துக் கிடந்ததும், அப்போதே நிகழ்வன போலக் காணப்பட்டன. தான் இன்னமும் தஞ்சையில் இருப்பதாகத் தோன்றியது. அவளது உணர்வு மேலும் அதிகரிக்க அதிகரிக்க, முற்றிலும் சிதறிக் குழம்பிக்கிடந்த மனது தெளிவடையத் தொடங்கியது. தான் தனது கணவனிடம் திரும்பி வந்ததும், அவனுடன் ஐந்து நாட்கள் புதிய வாழ்வாக வாழ்ந்து பேரின்பச் சுகமடைந்ததும் தோன்றின. கடைசியில் தனது கணவன் சேலத்திற்குப் போன அன்றிரவு சாமாவையர் தன்னையும் பெருந்தேவியம்மாளையும் நாடகம் பார்க்க அழைத்துச் சென்ற நினைவு மெல்ல மனதில் தலைகாட்டியது. அதன்பிறகு தான் மகம்மதியன் வீட்டில் தனிமையில் விடப் பட்டதும், அங்கு ஒரு யௌவன மகம்மதியன் தோன்றியதும், அதன்பிறகு நேர்ந்த விஷயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அவளது நினைவில் நாடகக் காட்சிகளைப் போலத் தோன்றின. முடிவில், தான் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை புரிய முயன்றதும், அப்போது திடீரென்று ஒருவர் தோன்றிக் கத்தியைப் பிடுங்கிக்கொண்டதும் தெளிவாக விளங்கின. கத்தி பிடுங்கப்பட்ட பிறகு நடந்த தென்ன வென்பது அவளுக்குத் தெரியவில்லை. அதன் பிறகு எட்டு மணிநேரம் இடைவேளை கழிந்ததென்பதை அவள் அறிந்தவளேயன்று. அது இன்னமும் இரவென்றும்,முந்திய நிமிஷத்திலேதான் கத்தி பிடுங்கப்பட்டதென்றும் எண்ணினாள். அன்றிரவில் நிகழ்ந்த விஷயங்கள் யாவும், உண்மையில் சம்பவிக்கக்கூடாத அசாதாரணமானவைகள். ஆதலால், அவைகள் நிஜத்தில் நடந்தனவென்று அவள் மனது நம்பிக்கை கொள்ளவில்லை. தான் கனவு காண்பதாகவே அவள் உறுதியாக நினைத்தாள்.
ஆனால், அது எது முதல் எதுவரையில் கனவென்பதை நிச்சயிப்பதே கூடாமல் குழப்பத்தை உண்டாக்கியது. தான் நாடகம் பார்க்கப் போனதும் அதன் பின்னர் நடந்தவைகளும் கனவா, அன்றி, தான் தகப்பன் வீட்டிலிருந்து திரும்பிவந்ததும், இன்புற்று வாழ்ந்ததும், பிறவும் கனவா, அன்றி, தான் தஞ்சைக்குப் போனதும், அவ்விடத்தில் ஒரு வருஷமிருந்தது முதலியவும் கனவா, அன்றி, தன்னைத் தனது கணவன் முதலியோர் கொடுமையாய் நடத்தியது கனவா என்று அவளுடைய குழப்பம் பெருங்குழப்பமாய்விட்டது. “உலகமே பொய்; அதிலுள்ள பொருட்கள் பொய்; எல்லாம் மாயை; பொருட்களே கிடையாது என்று மாயா தத்துவத்தைப்பற்றி வாதிப்போருக்கு, தமது தேகமும், தாம் பேசுவதும், தாம் நினைப்பதும், தாம் உணர்வதும் எல்லாமே பொய்யாகத் தோன்றுதலைப்போல, மேனகாவின் மனதிற்கு அப்போது எல்லாம் பொய்யாகவும், மெய்யாகவும் தோன்றியது. பாவம் மனிதருக்கு உணர்வு என்னும் அந்த ஒப்பற்ற ஒரு வஸ்து தனது நன்னிலைமையை இழந்துவிடுமானால், அப்புறம் அவர்கள் மனிதரல்லர். யௌவனம் கட்டழகு காந்தி முதலிய எத்தகைய உயர்வுகளும் அருமை பெருமைகளும் இருப்பினும் அவை சிறிதும் மதிப்பற்றவையாம். அங்ஙனமே ஆனது அவளது நிலைமை. தான் மேனகாதானா , தான் டிப்டி கலெக்டருடைய பெண்தானா என்னும் பெருத்த சந்தேகம் தோன்றியது.
கண்களைத் திறந்து தனது உடம்பைப் பார்த்து அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள நினைத்தவளாய், நலிந்த தமது நேத்திரங்களைத் திறந்து தனது மேனியை உற்று நோக்கினாள்; என்ன ஆச்சரியம்! தனது உடம்பு மேனகாவின் உடம்பாகத் தோன்றவில்லை! தும்பைப்பூவிலும் அதிகமான வெண்மை நிறத்தைக் கொண்ட மெல்லிய மஸ்லின் துணியொன்று தனது தேகத்தில் ஒரு சுற்றாக அன விலையுயர்ந்த மேகவர்ணப்பட்டாடை, பாப்பு , கொலுசு, காசுமாலை, அட்டிகை முதலியவை தனது தேகத்தில் காணப்படவில்லை. அவற்றை தனது தேகத்திலிருந்து எவரும் விலக்கியதாகவும் அவளுக்கு நினைவுண்டாகவில்லை.
தன்னுடைய கரத்திலிருந்த கத்தியை மாத்திரம் யாரோ சற்று முன்னே பிடுங்கியது நினைவுண்டாயிற்று. தான் கண்ணை மூடித் திறப்பதற்குள் அத்தகைய மாறுதல் தனது தேகத்தில் வந்திருப்பதென்ன விந்தை! அது இந்திரஜாலம் மகேந்திர ஜாலமோ? சே! எல்லாம் தவறு! எல்லாம் பொய்! தான் காண்பது கனவே! என்று நினைத்த அவளது பேதை மனம் முற்றிலும் குழம்பிச் சோர்வடைந்து போயிற்று. மனத்தி லெழுந்த எண்ணிறந்த சந்தேகங்களின் சுமையைத் தாங்க மாட்டாமல் மனம் தவித்து மழுங்கி ஓய்வை அடைந்து விட்டது ஆகையால், கண்ணிமைகள் மூடிக்கொண்டன! அவளது மனம், தன் குழப்பத்தால், தன்னையே ஏமாற்றிக்கொண்டது. வெள்ளை வஸ்திரத்தை விதவைகளே அணிபவர். தான், ஒருநாளும் மஸ்லின் துணியை அணிந்ததில்லையே. தானறியாவகையில் அது அப்போது தனது உடம்பில் எப்படி வந்தது? தான் மேனகாவன்று; வேறுயாரோ ஒருத்தி என்று நினைத்து எண்ணாததெல்லாம் எண்ணி மயக்கமும் குழப்பமும் அடைந்தாள்.
மேலும் அரை நாழிகை சென்றது. ஊற்றுக் கண்களிலிருந்து தெளிந்த நீர் ஊறுதலைப் போல, அவளுடைய உணர்வு பெருகி தெளிவைப் பெறப் பெற, விஷயங்கள் யாவும் உண்மையாகவே தோன்றின. தான் மேனகாதான் என்னும் நினைவு இயற்கையாகவும், உறுதியாகவும் அவளது மனதில் எழுந்து மாறுபடாமல் நிலைத்து நின்றது. தான் கனவு காணவில்லை யென்பதும் தெளிவாகத் தெரிந்தது. அப்படியானால், தானறியாமல், தன்னுடம்பில் வேறு வஸ்திரம் எப்படி வந்தது, தனது பட்டுத் துகிலை எவர் களைந்தவர் என்ற சந்தேகங்களே இப்போது உரமாக எழுந்து வதைத்து அவள் மனதில் வேறு பலவித பயங்கரமான யூகங்களுக்கு இடங் கொடுத்தன. பெருத்த வேதனை உண்டாயிற்று. தனது கையிலிருந்த கத்தியைப் பிடுங்கிக் கொண்ட மகம்மதியனே தனது ஆடையை மாற்றினவ னென்றும், அவன் தனது கற்பை பிடுங்கமுற்பட்டபோது தான் மயங்கிக் கீழே தரையில் விழுந்ததாக கனவைப் போல ஒரு ஞாபகம் உண்டாயிற்று. உண்மை அப்படி இருக்க, தான் இப்போது விலையுயர்ந்த உன்னதமான கட்டிலில், மிக்க இன்பகரமான வெல்வெட்டு மெத்தையின் மீது படுத்திருப்பதன் முகாந்தரமென்ன வென்பதை நினைத்தாள். தனது கற்பு ஒழிந்துபோன தென்பதை தனது சயனம் உறுதிப்படுத்தியது. என்ன செய்வாள்! அவளது தளர்வடைந்த மனது பதறியது. வேதனையும் வியாகுலமும் பெருத்த கோபமும் மகா உரத்தோடு எழுந்து மனதிற் குடிகொண்டன. அவளது தேகமோ அவளுக்குச் சகிக்க இயலாத அருவருப்பைத் தந்தது. தனது உடம்பைப் பார்ப்பதற்கே கண் கூசியது. மகம்மதியனைத் திரும்பவும் பாராமல் தற்கொலை புரிந்து கொள்ள முயன்ற தனது எண்ணத்தில் மண்விழுந்து போனதை நினைத்து பெருந்துயரமும் ஆத்திரமும் அடைந்தாள்.
களங்க மடைந்துபோன தனது இழிவான தேகத்தை உடனே சாம்பலாக எரித்து அழித்துவிட தனக்கு வல்லமை யில்லையே என்று நினைத்துப் பதைத்தாள். அவ்வளவு நாழிகை தனது வேசைச் சரீரத்தைச் சுமந்திருப்பதைப்பற்றி ஆறாத் துயரமடைந்தாள். கட்டிலின் மீது தனக்கருகில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தது அவள் மனதில் அப்போதே புலனாயிற்று. அது தன்னைக் கெடுத்த மகம்மதியனே என்று நினைத்தாள். அவள் மனதில் ரௌத்திராகாரமாய்க் கோபம் பொங்கி எழுந்தது.
அந்த அசங்கியமான படுக்கையில், அன்னிய புருஷனுக்கருகில் தானிருப்பதாக நினைத்து, தான் ரௌரவாதி நரகத்தில் இருப்பதாக எண்ணிப் பதறினாள். அவ்விடத்தை விட்டெழுந்து அப்பாற் செல்ல நினைத்து மிகவும் வற்புறுத்தி முயன்று பார்த்தாள். அவளது மனது மாத்திரம் துடித்ததன்றி, தேகம் ஒரு சிறிதும் அசையும் வல்லமை அப்போது இல்லாதிருந்தது. தான் நினைத்த விதம் கண்களைத் திறந்து நோக்கவும் இயற்கையான திறனுண்டாகவில்லை. தேகம் ஜடப் பொருளாய்க் கிடந்தது. தேகவலுவற்றவருக்கு மற்றையோரிலும் கோபமும், ஆத்திரமும் அதிகமென்பது யாவரும் அறிந்த விஷயமாம். அதற்கிணங்க, செயலற்றுக் கிடந்த மேனகா தன் மனதில் பொங்கி எழுந்த சீற்றத்தைக் கடவுன் மீது திருப்பினாள். நிரபராதியான ஜெகதீசனை நினைத்த விதம் தூஷிக்கலானாள். “ஆ பாழுந் தெய்வமே! உன் கோவில் இடியாதா? நீ நாசமாய்ப் போக மாட்டாயா? என்னை இப்படிக் கெடுத்து சீர்குலைத்துக் கண்ணாரப் பார்க்க வேண்டுமென்று எத்தனை நாளாய் நினைத்திருந்தாய்! என் வயிறு பற்றி எரிகிறதே! மனம் பதைக்கிறதே! உயிர்துடிக்கிறதே! தெய்வமே, நீ கருணாநிதி யென்று அழைக்கப்படக் கொஞ்சமும் யோக்கியதை உள்ளவனா நீ! முற்காலத்தில் நீயா திரௌபதியின் மானத்தைக் காத்தவன்! எவனோ புளுகன் எழுதி வைத்தான் மகா பாரதத்தை! சதிகார தேசத்திற்கு கொலைகாரன் அரசனாம் என்பதைப் போல உன்னுடைய மகிமை இருக்கிறது. உன்னுடைய படைப்பும், உன்னுடைய நியாயமும் நன்றா யிருந்தன! இந்தப் பாழும் உலகத்தில் கற்பாம்! நீதியாம்! சே! மூடத்தனம்!” என்று கடவுள் மீதும், உலகத்தின் மீதும், தனது தேகத்தின் மீதும் பெரிதும் ஆத்திரமும் வெறுப்பும் கொண்டு தூஷித்துத் திரும்பவும் அநாசாரம் பிடித்த அந்த மெத்தையை விடுத்து எழுந்து அப்பால் போய், நொடியேனும் தாமதியாமல் தனது உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தாள். அவளது மனம் பம்பரம்போலச்சுழன்றது. ஆனால், அவளது தேகம், ஒரே பச்சை புண்ணாகவும், இரணக் குவியலாகவும், அசைவற்று கட்டிற்கடங்காது கிடந்தது. மனது மாத்திரம் புதிதாய்ப் பிடித்துக் கூண்டில் அடைக்கப்பட்ட கிள்ளைப் போல படபடத்து தவித்தது.
அந்த நிலைமையில் அவளுக்கு அருகில் மெத்தையில் உட்கார்ந்திருந்தவர் தமது கரத்தால் அவளது முகத்தைத் தடவிக் கொடுத்ததாக அவளுடைய உணர்வில் புலனாயிற்று. அந்தக் கை ஆண்பிள்ளையின் முரட்டு கையாகத் தோன்றவில்லை. அது பூவிதழைப்போல மிருதுவாயும், குளிர்ச்சியாயும் இருந்தது. பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, பனிக்கட்டி முதலியவை கலக்கப்பட்ட சந்தனம், ஜூர நோய் கொண்டவனது உடம்பில் பூசப்படுதலைப்போல, அது அளவு கடந்து இனிமையாய்த் தோன்றியது. உடனே “மேனகா! அம்மா மேனகா!” என்ற ஒரு குரல், அருகில் உண்டாயிற்று; அந்தக் குரல் குயிலையும், குழலையும், யாழையும், பாகையும், தேனையும் பழித்ததாய், சங்கீத கானம் போன்றதாய் , அமுதத் துளிகளையும் குளிர்ச்சியையும் ஒருங்கே சொரிந்து செவிகளில் இனிமையைப் பெய்வதாய் கணீரென்று சுத்தமாய் ஒலித்தது.
எதிர்பாராத அந்தக் குரலைக் கேட்டுத் திகைத்த மேனகா, அது தேவகானமோ சாமகானமோ வென்று சந்தேகித்து வியப்புற்றாள். அது ஒரு பெண்மணியின் குரலென்பது சந்தேகமற விளங்கியது. தன்னை அபகரித்து வந்த மகம்மதியனது குரலுக்கும் இந்தக் குரலுக்கும் பெருத்த வேறுபாடு காணப்பட்டது. ஒன்றைப் பறையோசைக்கு ஒப்பிட்டால் இன்னொன்றை வீணா கானத்திற்கே ஒப்பிடல் வேண்டும். ஆதலின், இப்போதுண்டானது அந்த மகம்மதியனது குரலன்று என்பதும், இது ஒரு பெண்பாவையின் இனிய குரலென்பதும், எளிதில் விளங்கி விட்டன. தனக்கு அருகில் இருப்பது மகம்மதியனல்லன் என்றும், அது அவனது பணிப் பெண்ணாகவேனும் அல்லது உறவினளாகவேனும் இருக்க வேண்டும் என்றும் யூகித்துக் கொண்டாள். தனது உணர்வு அறிய தான் அன்னிய புருஷனைத் தீண்டியதான இழிவும் பாவமும் இல்லாமற் போனதைக் குறித்துப் பெரிதும் மகிழ்வடைந்தாள். ஆனால், அந்த அற்பமான இன்பமும் ஒரு நிமிஷமே மனதில் நிலைத்து நின்றது. ஏனெனில், தனது கற்பை ஒழிந்தது நிச்சயமே என்ற அருவருப்பு நினைவில் திரும்பவே அவளது மனக்களிப்பு கைப்பாக மாறியது. தான் கண்களைத் திறந்து தனக்கருகிலிருந்த அந்த மாதை, வெட்க மில்லாமல் பார்த்து எப்படி அவள் முகத்தில் விழிப்பது என்று நினைத்து மேனகா மனமாழ்கினாள். அவளது தேகம் குன்றியது. அவள் கண்ணைத் திறவாமலே இரண்டொரு நிமிஷநேரம் கிடந்தாள். முன்னரே அறியாத அயலார் வீட்டில், அதுவும், அவனது கட்டிலின் மேல்தான் எவ்வளவு நேரம் அவ்வாறு கண்ணை மூடிப் படுத்திருத்தல் கூடுமென்றும், அப்படி யிருப்பதால் இழிவே யன்றி தனக்கு யாது பயனென்றும், தான் அவ்வாறு கிடப்பது ஒழுங்கல்ல வென்றும் நினைத்தாள். மெல்ல தனது கண்ணைத் திறந்தாள்.
அவள் ஒரு புறமாகத் திரும்பிப் படுத்திருந்தவளா கையால், அருகில் இருந்தவளை முதலில் பார்க்கவில்லை. அவளது அகன்ற சுந்தரவிழிகள் ஒரு நொடியில் அந்த அறையை நன்றாக ஆராய்ந்தன. உடனே ஒரு விஷயம் எளிதில் விளங்கியது. அது, தான் மகம்மதியனோடு தனிமையிலிருந்த அறையல்ல வென்பது நிச்சயமாயிற்று. தான் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு வந்ததையும், தனது தேகத்திலிருந்த ஆடையாபரணங்கள் விலக்கப் பட்டதையும், தான் அறியாது போனது என்ன மாயமோ என்று திகைத்தாள். அப்போது தான் துயின்றாளோவென்று சந்தேகித்தாள். அல்லது மயக்கந்தரும் மருந்தை, அந்த மகம்மதியன் தனது வஞ்சகத்தால், தன் உடம்பில் செலுத்தி விட்டானோ வென்று எண்ணாத தெல்லாம் எண்ணினாள். அந்த இடமும் மிக்க அழகாக அலங்கரிக்கப்பட்ட ஒரு சயன அறையாய்க் காணப் பட்டது. எங்கும் அழகிய மலர்களையும், இலைகளையும் கொண்ட தொட்டிகளும் சம்பங்கிக் கொடிகளும், ரோஜா செடிகளும், நிலைக் கண்ணாடிகளும், படங்களும், பதுமை களும், நாற்காலிகளும் சோபாக்களும், பிறவும் நிறைந் திருந்தன. தானிருந்த கட்டிலும் அதன் மீதிருந்த மெத்தையும், திண்டு, தலையணைகளும், ஏராளமான மெல்லிய பட்டுப் போர்வைகளும், பட்டுத் துப்பட்டிகளும், சால்வைகளும், கொசு வலைகளும் விலை மதிப்பற்றவை யாவும், ஒரு சிறிய மாசுமற்றவையாயும் இருந்தன.
மனிதரது பஞ்சேந்திரி யங்களுக்கும் சுகம் தரத்தக்க பொருட்கள் யாவும் அந்த அறையில் காணப்பட்டனவாயினும், மிகவும் மேம்பட்ட மகா ராஜனும், அங்கிருந்த இனிய போகத்தில் ஆழ்ந்து ஈடுபட ஆவல் கொள்ளத் தக்கனவாய் அவை காணப்படினும், மேனகா தான் தீத்தணல்கள், தேள்கள், பாம்புகள் முதலியவற்றின் மீது கிடப்பதாக எண்ணங் கொண்டு அருவருப்படைந்து வருந்தினாள். அவளது விழிகள் அந்த அறையை ஆராய்ந்த போது இன்னொரு புதுமை அவளது காட்சியில் பட்டது. கட்டிலிற்கு அருகிலிருந்த ஒரு நாற்காலியில் வெள்ளைக்கார துரைசானி உட்கார்ந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டாள். அவளது வயது சற்றேறக்குறைய முப்பத்தைந்திருக்கலாம். மெலிந்ததும் கம்பீரமாக நீண்டதுமான அழகிய தேகத்தைக் கொண்ட அந்த மாது, தனது இடக்கரத்தில் ஒரு சிறிய தோல் பையையும், வலக்கரத்தில் வைத்தியர் பிணியாளரின் மார்பில் வைத்து நாடி பார்க்கும் குழாயையும் வைத்திருந்தாள். அந்த துரைஸானியை தான் அடிக்கடி பார்த்திருப்பதாக உடனே மேனகாவுக்கு நினைவுண்டாயிற்று. தான் அவளைக் கண்டது எவ்விடத்தில் என்று மேனகா யோசனை செய்தாள். தனது கணவன் வசித்த தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலுள்ள வீடுகளில் பெண்பாலருக்கு வைத்தியம் செய்ய அவள் அடிக்கடி வந்து போனதைத் தான் கண்டதாக எண்ணினாள். அவள் தனது கண்ணைத் திறந்து புதுமையான அத்தனை விஷயங்களையும் கண்டதனால் மிகவும் சோர்வடைந்தாள். இமைகள் திரும்பவும் மூடிக்கொண்டன.
கால் நாழிகை வரையில் அயர்வடைந்து உணர் வற்று உறங்கினாள். மறுபடியும் தனது உணர்வைப் பெற்றாள். திரும்பவும் மனது வேலை செய்யத் தொடங்கியது. தனக்கருகில் துரைஸானி உட்கார்ந்திருப்பதி லிருந்து, தனக்கு ஏதோ தேக அசௌக்கியம் உண்டான தென்றும், அதன் பொருட்டு அவள் வந்திருப்பதாகவும் யூகித்துக்கொண்டாள். தனக்கு எவ்விதமான நோயுண்டானது என்பதைப்பற்றி நினைத்துப் பார்த்தாள். ஒரு கால் தான் தன்னைக் கத்தியாற் குத்திக் கொண்டதனால் இரணம் ஏற்பட்டதோ வென்று ஐயமுற்றாள். தனது தேகத்தில் எந்த இடத்தில் நோவுண்டாகிறது என்பதை அறிய தனது தேக நிலைமையை ஊன்றி அகக்கண்ணால் நோக்கினாள். பொதுவாக தேகம் முற்றிலும் மரத்துப் புண் பெற்று அசைவின்றித் தோன்றியதே யன்றி ஏதாயினும் குறித்த விடத்தில் எத்தகைய பிணி இருப்பதாகவும் புலப்படவில்லை. ஆதலால் அவள் அவ்விஷயத்தில் எத்தகைய முடிவிற்கும் வரக்கூடாமற் போனது.
அப்போது பகல் நேரமா யிருந்ததை உணர்ந்தாள். தான் இரவு பன்னிரண்டு மணிக்கே தற்கொலை செய்து கொள்ள முயன்றது என்பதும், அப்போதே கத்தி பிடுங்கப்பட்டது என்பதும் நினைவிற்கு வந்தன. இடைவேளையான அவ்வளவு நீண்ட காலம் தான் உணர்வற்றோ துயின்றோ இருந்திருக்க வேண்டு மென்பதும், அப்போதே உடை மாற்றப்பட்ட தென்பதும் ஒருவாறு விளங்கின. தனது பெயரைச் சொல்லி அன்பே நிறைவாக அழைத்த பெண்மணி யாவள் என்பதை அறிய ஆவல் கொண்டவளாய், மிகவும் பாடுபட்டுத் தனது வதனத்தைச் சிறிது இப்புறம் திருப்பி தனக்கருகில் இருந்தவளை நோக்கினாள்.
அருகில் உட்கார்ந்திருந்த யௌவன மங்கை அந்தக் குறிப்பை யறிந்து, திரும்பவும் முன்போலவே அன்பாக அழைத்து, “அம்மா ! உடம்பு இப்போது எப்படி இருக்கிறது தெரிவி; நாங்கள் யாரோ அன்னியர் என்று நினைக்காதே; நாங்கள் உன் விஷயத்தில் அந்தரங்கமான அபிமானம் உள்ளவர்கள்” என்று மிக்க உருக்கமாகக் கூறி, தனது கரத்தால் அவளது கன்னம் கரம் முதலிய விடங்களை அன்போடு மிருதுவாக வருடினாள். விடுபடும் வழியின்றி கொடிய நரகத்தினிடையில் கிடந்து தவிக்கும் ஒருவனது வாயில் ஒரு துளி தேன் சிந்தியதைப்போல, அத்தனை துன்பங்களின் இடையே அவ்வளவு மனமார்ந்த உண்மை அன்பை ஒருவர் தனக்குக் காட்டக் கிடைத்ததை நினைத்த மேனகா ஒரு நிமிஷம் தன்னை மறந்து ஆநந்தப் பரவசம் அடைந்தாள். அழகே வடிவாய் பூரண சந்திரோதய மென்ன ஜெகஜ்ஜோதியாய் கந்தருவ மாதைப் போல தனக்கருகில் உட்கார்ந்திருந்த பெண்மணியின் கபட மற்றதும், மென்மை , உத்தம குணம், பெருந்தகைமை முதலிய அரிய சிறப்புகளைக் கிரணங்களாய்ச் சொரிந்ததுமான அழகிய வதனத்தைக் காண மேனகாவின் மனதில் ஒரு வகையான நம்பிக்கையும், ஆறுதலும் இன்னமும் தோன்றின. காணக் கிடைக்காத அந்த அற்புதமான காட்சி உண்மையானதோ அன்றி பொய்த் தோற்றமோ வென்று உடனே ஐயமுற்றாள். மகா பயங்கரமான நிலையிலிருந்து தான், இரமணீயமான அந்த நிலைமையையடைந்த பாக்கியத்தை நினைத்து நினைத்து பெருமகிழ்வடைந்தாள். அந்த இன்பகரமான நிலையில் அவளது புலன்கள் தொய்ந்து எளிதில் தெவிட்டிப் போயின. மனதிலும், உணர்விலும் அந்த மனோகரமான அற்புதக் காட்சி எளிதில் பதிந்தது. அதற்கு முன், தன்னை ஒரு நாளும் கண்டறியாத அப் பெண்பாவை தனக் கருகில் உட்கார்ந்து, தனக்குரிய உபசரணைகளைச் செய்ததும், தன் மீது அவ்வளவு ஆழ்ந்த அபிமானம் காட்டியதும், தனது பெயரைச் சொல்லி யழைத்ததும் மேனகாவின் மனதில் பெருத்த வியப்பை உண்டாக்கின.
அவளது நடத்தை யெல்லாம் வஞ்சக நடத்தை யல்ல வென்பதும், அவள் மகா உத்தம ஜாதி ஸ்திரீ யென்பதும், அவளது முகத்திலேயே ஜ்வலித்தன. அவள் யாவள்? முதல் நாள் இரவு தன்னை வற்புறுத்திய மகம்மதியனுக்கு அவள் உறவினளா? பணிப்பெண்ணா ? அல்லது அவனுக்கும் அவளுக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லையா? அது முதல் நாளிரவில் தானிருந்த வீடுதானா? அல்லது வேறிடமா? கத்தி தனது கையினின்று பிடுங்கப்பட்ட பிறகு தனக்கு என்ன நேர்ந்தது? என்பன போன்ற எண்ணிறந்த சந்தேகங்களைக் கொண்டு அவற்றை வெளியிடவும் வல்லமை யற்று, பெரிதும் கலக்கமும், துன்பமும் அடைந்து திரும்பவும் சோர்ந்து காம் பொடிபட்ட ரோஜாவைப்-போலக் கண்களை மூடிக்கொண்டு தலையணையில் சாய்ந்து விட்டாள். பிறகு நெடுநேரம் வரையில் அவள் இமைகளைத் திறக்கவுமில்லை. அவளது தேகம் அசையவுமில்லை. அவள் திரும்பவும் உணர்வற்ற நிலைமையில் வீழ்ந்து விட்டாள்.
மூர்ச்சையிலிருந்து மேனகா தெளிவடைந்ததையும், அவளது வதனம், தேகம் முதலியவற்றின் மாறுபாடுகளையும் மிகவும் ஆவலோடும் சிரத்தையோடும் கவனித்து உணர்ந்த துரைஸானியம்மாள், “நூர்ஜஹான்! நான் வைத்திய சாலைக்குப் போக நேரமாய்விட்டது. இனி இந்த அம்மாளைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை; மிகவும் விரைவில் நல்ல நிலைமையை யடைந்து விடுவாள். நான் போய் விட்டு மாலையில் திரும்பவும் வந்து பார்க்கிறேன்.
இவளே கண்விழித்துப் பேசினால் பதில் சொல்; அப்போதும் இவளது மனதை அலட்டாமல் பார்த்துக்கொள், பெருத்த பயத்தினால் உண்டான மன அதிர்ச்சி இவளது நரம்புகளை வரம்பு கடந்து தளர்த்தி விட்டது. நரம்புகள் மிகவும் தாமதமாகவே தமது சுய நிலைமையை யடைய வேண்டும்; நாம் இன்னம் சிறிது தாமதமாய் மருந்து கொடுத்திருப்பேர் மானால் இவள் இதுவரையில் பிழைத்திருப்பதே அரிதாய்ப் போயிருக்கும்; அதே மருந்தை மூன்று மணி நேரத்திற்கொருமுறை மார்பில் தடவிக்கொண்டே இரு; மூக்கினால் உள்புறம் செலுத்தும் மருந்தை இனி மூக்கினால் வார்க்க வேண்டாம். இவள் விழிக்கும் போது அதை வாயினாலேயே இரண்டொருமுறை செலுத்தினால் முற்றிலும் குணமுண்டாய்விடும்; நான் போய்விட்டு வருகிறேன் என்று இங்கிலீஷ் பாஷையில் கூறினாள்.
நூர்ஜஹான் கவலையோடு; “இனி உயிருக்குப் பயமில்லையே?” என்றாள்.
துரைஸானி :- இல்லை, இல்லை. இனி அதைப்பற்றி கவலைப்படாதே; சந்தேகப்படக்கூடிய குறிகள் ஏதாவது இனி தோன்றினால் உடனே எனக்குச் செய்தியனுப்பு. பகல் பதினொன்றரை மணி நேரம் வரையில் நான் இராயப்பேட்டை வைத்தியசாலையில் இருப்பேன். அதன் பிறகு என்னுடைய பங்களாவிலேயே இருப்பேன். இவளுடைய புடவையையும், நகைகளையும், இப்போது அணிவிக்க வேண்டாம்; அவைகள் மாத்திரம் விலக்கப்படாம லிருக்குமாயின், தடைப்பட்ட இரத்த ஓட்டம் இவ்வளவு விரைவில் திரும்பியிராது. இந்த மஸ்லினே உடம்பில் இருக்கட்டும்; இதை நாளைக்கு மாற்றலாம்.
நூர் :- சரி; அப்படியே செய்வோம்; நடுராத்திரி முதல் நீங்கள் இங்கிருந்து பட்ட பாட்டிற்கு நான் எவ்விதம் நன்றி செலுத்தப்போகிறேன்! தவிர, இந்த விஷயம் இப்போது எவருக்கும் தெரிதல் கூடாது. இரகசியமாக இருக்க வேண்டும்; என்னுடைய கணவனது மானமோ அவமானமோ உங்களுடைய கையிலிருக்கிறது.
துரைஸானி :- நூர்ஜஹான்! அதைப்பற்றிக் கவலை கொள்ளாதே. எப்படிப்பட்ட இரகசியமானாலும், நான் அதை வெளியிட மாட்டேன். வைத்தியர்கள் அதை வெளியிடுதல் கூடாது. எவ்வளவோ அந்தரங்கமான வியாதிகளுக்கெல்லாம் நாங்கள் சிகிச்சை செய்கிறோம். அவற்றை வெளியிடுவதனால் எங்களுடைய தொழிலே கெட்டுப்போகுமே; இரகசியத்தைக் காப்பாற்றுதலே இந்தத் தொழிலின் நாணயம்; இதைப்பற்றி நீ யோசனை செய்யாதே. நான் போய் விட்டு வருகிறேன் – என்றாள்.
நூர்:- சரி; நீங்கள் மாலையில் வருவதற்குள் இவள் நன்றாக விழித்துக்கொண்டால், இவளுக்கு எவ்விதமான ஆகாரம் கொடுக்கிறது? இவள் பிராமணப்பெண் என்பதை பார்வையிலே நீங்கள் அறிந்து கொண்டிருக்கலாம். அதற்குத் தகுந்த விதம் ஆகாரம் கொடுக்க வேண்டும். நாங்கள் தயாரித்த ஆகாரத்தைக் கொடுப்பதாய்ச் சொல்லி, ஒரு பிராமண பரிசாரகனை அழைத்து வரும்படி ஆளனுப்பியிருக்கிறேன். இந்தப் பங்களாவில் நாங்கள் வசிக்கும் இடத்திற்கும் இதற்கும் இடையில் நெடுந்தூரம் இருக்கிறதென்பது உங்களுக்குத் தெரியும். விஷயத்தை யெல்லாம் நான் என்னுடைய தகப்பனாரிடம் சொல்ல வேண்டாமென்று நினைத்தேன். என்னுடைய அக்காள் அப்படிச் செய்வது தவறென்று நினைத்து அவரிடம் சொல்லிவிட்டாள். அவரே பரிசாரகனை அழைத்து வரும்படி ஆளை அனுப்பினார். ஒரு மனிதர் அவசியம் வருவார். ஒருவரும் அகப்படாவிட்டால், நாம் என்ன ஆகாரத்தைக் கொடுக்கிறது? – என்று கேட்டாள்.
துரைஸானி :- இப்போது எவ்விதமான ஆகாரமும் கொடுக்க வேண்டாம். உட்புறம் செலுத்தப்படும் இந்த மருந்திலேயே தேக புஷ்டிக்குரிய மருந்தும் கலக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இன்று மாலை வரையில் பசியே தோன்றாது; ஒருக்கால் இவளே பசியென்று சொன்னால் சர்க்கரை கலந்து பாலில் சிறிதளவு கொடுப்பது போதும். இன்றிரவு பார்லி (Barley) அரிசிக்கஞ்சி கொடுக்கலாம். அதற்குள் நான் திரும்பவும் வருகிறேன் – என்று கூறியவண்ணம் அறையை விட்டு வெளியிற் சென்று தனது மோட்டார் சைக்கிலில் ஏறிக்கொண்டு போய்விட்டாள்.
அவளை அனுப்பிவிட்டுத் திரும்பி வந்த நூர்ஜஹான் பக்கத்திலிருந்த மருந்தை எடுத்து மேனகாவின் மார்பில் தடவி விட்டு, முன்போலவே அருகில் உட்கார்ந்து கொண்டு பரிதாபகரமாகக் காணப்பட்ட அவளது களங்கமற்ற முகத்தைப் பார்த்த வண்ணம் இருந்தாள். தனது கணவரும், பிறரும் செய்த சதியினால், ஒரு சூதையுமறியாத அப் பெண்பேதை அடைந்த நிலைமையைப் பற்றி நினைத்து நினைத்து வருந்தினாள். அவளைத் திரும்பவும் அவளது கணவனிடம் சேர்த்து, அவன் அவளது கற்பின் விஷயத்தில் எவ்வித ஐயமும் கொள்ளாதபடி திருப்தியடைந்து அவளை ஏற்றுக்கொள்ளும்படி எப்படிச் செய்வதென்னும் யோசனையே ஓயாமல் அவளது மனத்தில் எழுந்து பெருஞ்சுமையாக அழுத்தியது. அதைக் குறித்து எவ்விதமான முடிவிற்கும் வரக்கூடாமையால் தாமரை இலைத் தண்ணீரைப் போலத் தத்தளித்தாள். அவளது முழு வரலாற்றையும், அவள் வாய் மூலமாக எப்பது அறிவதென்பதைக் குறித்து மிகவும் ஆவல் கொண்டவளா யிருந்தாள். அதுகாறும் தனது கணவன் பரம-யோக்கியனென்று நினைத்து அவனே உயிரென மதித்துத் தனது பாக்கியத்தைக் குறித்துப் பெருமை யடைந்திருந்ததெல்லாம் ஒரு நொடியில் ஒழிந்து போனதையும், அவன் கேவலம் இழிகுணமுடைய வனாய், வேசைப்பிரியனாய், சமயத்திற்கேற்ற விதம் பொய்மொழி கூறி வஞ்சிக்கும் அயோக்கியனாயிருந்ததையும் ஓயாமல் சிந்தித்தாள்.
அதைப்பற்றி நினைக்கும்போது துக்கமும் வெட்கமும் அழுகையும் அவள் மனதில் பொங்கியெழுந்து நெஞ்சையடைத்தன. கண்களும் மனதும் கலங்கின. அப்போதைக் கப்போது கண்ணீர்த் துளிகள் தோன்றின. நெடுமூச்செறிந்தாள். மனிதர் வெளிப்-பார்வைக்கு அழகாயும், உட்புறத்தில் அவ்வளவு மிருகத்தன்மையைக் கொண்டும் இருப்பாரோவென்று நினைத்து அவள் பெரிதும் வியப்புற்றாள்; தன் கணவன் எழுத்து வாசனையறியாத முட்டாளன்று; அப்படி இருந்தும், கொஞ்சமும் நல்லொழுக்கமும் மன உறுதியு மற்றவனாயும், நிறையில் நில்லாத சபலபுத்தியுள்ளவனாயும் இருப்பதைக் குறித்து வருந்தினாள். அவனுக்கும் தனக்குமுள்ள உறவு இனி ஒழிந்த தென்றும், அவனது முகத்திலே இனி விழிப்பதில்லை யென்றும் அவன் இனி தனது வீட்டிற்கு வராமல் தடுத்துவிட வேண்டும் என்றும், தனது இல்லற வாழ்க்கை அந்த இரவோடு ஒழிந்து போய்விட்டதென்றும் உறுதியாக நினைத்து மனமாழ்கினாள். தனது சொந்த விசனத்தைக் காட்டிலும் மேனாவின் நிலைமையும், அவள் களங்கமற்றவளென்பதை ருஜுப்படுத்தி அவளுடைய கணவனிடம் அவளை எப்படி சேர்ப்பது என்னும் கடினமான காரியமும், அவள் மனதில் அதிகமாக வேரூன்றி வதைத்தன. அதிலேயே அவள் தனது முழு மனதையும் செலுத்தி, தனிமையில் சிந்தனை செய்து கலக்க மடைந்து மனமுருகிக் கண்ணீர் பெருக்கி உட்கார்ந்திருந்தனள்.
மிகவும் சிங்காரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறையில் சிறிய மாசும், தூசியும் தோன்றாத புதிய மெல்லிய பட்டுப் போர்வைகள், துப்பட்டிகள், திண்டு, தலையணைகள், முதலியவற்றி னிடையில் மேனகா அழகே வடிவாய்க் கிடந்ததும், அவளுக்கருகில் இரதிதேவியோவென்ன தனக்குத் தானே நிகராய் தேஜோமயமாக நூர்ஜஹான் உட்கார்ந் திருந்ததும் தெய்வங்களும் காணக் கிடைக்காத கண்கொள்ளா அற்புதக் காட்சியாக விருந்தன. அவ் விருவரில் எவள் அழகிற் சிறந்தவள் என்பதைக் கண்டு பிடிப்பது எவருக்கும் பலியாக் காரியமாயிருந்தது. மேனகாவைப் பார்க்கையில், அவளது அழகே சிறந்ததாயும், இருவரையும் ஒன்றாகப் பார்க்கையில் இருவரும் இரண்டு அற்புத ஜோதிகளாகவும், ஒருத்திக்கு இன்னொருத்தியே இணையாகவும் தோன்றினர். ஒருத்தியை ஜாதி மல்லிகை மலருக்கு உவமை கூறினால் மற்றவளை ரோஜா மலருக்கு உவமை கூறுதல் பொருந்தும். ஒருத்தி வெண்தாமரை மலரைப் போன்றவளென்றால், மற்றவள் செந்தாமரை மலரை யொத்தவளென்றே கொள்ளவேண்டும். ஒருத்தியை இலட்சுமிதேவி என்றால், இன்னொருத்தியைச் சரசுவதி தேவியென்றே மதிக்க வேண்டும். இருவரது அமைப்பும் அழகும் ஒப்புயர்வற்ற தனிப்பேறா விளங்கினவன்றி அவர்களைக் காணும் ஆடவர் மனதில் காமவிகாரத்தை யுண்டாக்காமல், அவர்களிடம் ஒரு வகையான அச்சமும், அன்பும், பக்தியும் உண்டாக்கத் தக்க தெய்வாம்சம் பொருந்திய மேம்பட்ட அமைப்பாகவும் அழகாகவும் இருந்தன. சிருஷ்டியின் செல்வக் குழந்தைகளாயும், கடவுளின் ஆசைக் குழந்தைகளாயும் காணப்பட்ட அவ்விரு மடமயிலார் வசிப்பதான பாக்கியம் பெற்ற இல்லத்தில், மனிதர் காலையிலெழுந்தவுடன் அவர்களது தரிசனம் பெறுவாராயின் அவர்களது மனக்கவலைகளும் துன்பங்களும் அகன்றுபோம். அந்த உத்தமிகளைப் பார்த்தாலே பசி தீரும்.
அவ்வாறு நூர்ஜஹான் துயரமே வடிவாக இரண்டொரு நாழிகை உட்கார்ந்திருந்தாள். அதற்குள் மேனகாவின் மார்பில் இரண்டு முறை மருந்தைத் தடவினாள். அப்போது நூர்ஜஹானின் அக்காள் திடீரென்று உள்ளே நுழைந்து, “அம்மா பரிசாரகன் வந்து விட்டார். ஏதாவது ஆகாரம் தயாராக வேண்டுமா? இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள்.
நூர் :- சற்று முன் கண்ணைத் திறந்து நன்றாகப் பார்த்தாள். இனி பயமில்லை யென்று துரைஸானியம்மாள் சொல்லி விட்டாள். இப்போதும் ஆகாரம் கேட்க மாட்டாளாம். எல்லாவற்றிற்கும் பாலை மாத்திரம் காய்ச்சி வைக்கட்டும் – என்றாள்.
அலிமா:- சரி; அப்படியே செய்வோம்; உனக்குக் காப்பியும் சிற்றுண்டியும் இவ்விடத்திற்கே கொண்டு வருகிறேன். நீ அவற்றைச் சாப்பிடு; வேண்டாமென்று சொல்லாதே. – என்றாள்.
நூர்:- இல்லை அக்கா! எனக்கு இப்போது ஒன்றும் வேண்டாம். பெருத்த விசனத்தினால் எனக்கு ஒன்றுந் தோன்றவில்லை. பசி உண்டானால் பார்த்துக்கொள்வோம். தயவு செய்து என்னை வற்புறுத்த வேண்டாம். – என்று நயந்து
வேண்டினாள்.
அதைக் கேட்ட அலிமா புண்பட்ட மனதோடிருக்கும் தனது சகோதரியை மேலும் வருத்த மனமற்றவளாய், “அப்படி யானால் இன்னம் கொஞ்சநேரம் ஆகட்டும்; அப்புறம் வருகிறேன்” என்று அன்போடு கூறிவிட்டு அவ்வறையை விடுத்துச் சென்றாள்.
மேலும் ஒரு நாழிகை நேரம் கழிந்தது. நூர்ஜஹானால் பிரயோகிக்கப்பட்ட மருந்து நன்றாக வேலை செய்து மேனகாவின் உணர்வைத் திருப்பியது. தனக்கருகில் ஓர் அழகிய பெண்பாவை யிருந்ததைத் தான் கடைசியாகக் கண்ட நினைவும் அவ்வுணர்ச்சியோடு திரும்பியது. அந்த நினைவினால் அவளது அப்போதைய மனநிலை ஒரு சிறிது இன்பகரமாயும், நம்பிக்கை தரத்தக்கதாயு மிருந்தது. அந்தப் பெண் யாவளென்பதையும், மற்றும் எல்லா விவரங்களையும் அந்தப் பெண்மணியிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டு மென்னும் விருப்பமும் ஆவலும் உண்டாயின. அந்த மகமதியப் பெண், அன்றிரவு தன்னை வற்புறுத்திய மகம்மதியனுக்கு ஒருகால் அனுகூலமானவளாய் இருப்பாளோ என்னும் ஒருவகையான அச்சம் தோன்றி ஒரு புறம் அவள் மனதைக் கவர வாரம்பித்தது ; இவ்வாறு நம்பிக்கையாலும், அவநம்பிக்கை யாலும் ஒரே காலத்தில் வதைக்கப்பட்டவளாய், நூர்ஜஹானது முகத்தை நோக்கினாள். அதுகாறும் அவளுடைய வாய், பூட்டப்பட்ட கதவைப் போலத் தோன்றியது. அப்போது, தான் பேசக்கூடுமென்னும் தைரியம் அவளது உணர்வில் தோன்றியது.
(முதற்பாகம் முற்றிற்று)
– மனோரஞ்சிதம் என்னும் இதழில் இந்நாவல் வெளிவந்தது. மேனகா நாவலை ஒட்டி 1935-ம் ஆண்டு மேனகா என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது.
– மேனகா (நாவல்) – முதல் பாகம், முதற் பதிப்பு: 2004, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.