மெளன தண்டனை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 19, 2018
பார்வையிட்டோர்: 5,822 
 

காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்குள் நுழைந்ததுமே தியாகராஜன் மொபைல் சிணுங்கியது.

எடுத்துப் பார்த்தார். மனைவி வத்சலாவின் பெயர் ஒளிர்ந்தது.

“இப்பதான் ஆபீஸுக்குள்ள நுழையறேன்… அதுக்குள்ள என்ன போன்?”

“உடனே புறப்பட்டு நீங்க வீட்டுக்கு வாங்க…”

“வீட்டிற்கா? ஸாரி… நாட் பாஸிபிள்…”

“இல்லை நீங்கள் கண்டிப்பாக வந்துதான் ஆக வேண்டும்.”

“ஸாரி வத்சு…”

“ப்ளீஸ் கிளம்பி வாங்க… நான் ரொம்ப டென்ஷனில் இருக்கிறேன்.”

“எதற்காக டென்ஷன்?”

“அதை போனில் சொல்ல முடியாது.”

“பரவாயில்லை சொல்லு…”

“ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க… நிஜமாகவே போனில் சொல்ல முடியாது…”

தியாகராஜன் ஒரு கணம் மெளனமாக இருந்தார்.

பின்பு தயங்கியபடி, “போனில் சொல்ல முடியாது என்றால்? விஷயம் நம்முடைய மகள் வித்யா பற்றியதா?”

“நோ… வித்யா தங்கமான பெண்.”

“அப்படியென்றால் உன் மகன் முரளி ஏதாவது வம்பில் மாட்டிக் கொண்டானா?”

“ஆமாம்… நீங்கள் உடனே வராவிட்டால் அவனை போலீஸில் ஒப்படைத்து விடுவார்கள்.. ப்ளீஸ்.”

உடனே தியாகராஜன் பதட்டத்துடன் வீட்டிற்கு விரைந்தார்.

வீட்டு ஹால் சோபாவில் மனைவி வத்சலாவும், மகள் வித்யாவும் நிராதரவுடன் அமர்ந்து காத்திருந்தார்கள்.

வத்சலா பதட்டத்துடன் எழுந்து, “முரளியை நான்காவது வீட்டில் கட்டிப் போட்டிருக்கிறார்கள்…” என்றாள்.

“எதற்காக? அது அட்வகேட் சடகோபன் வீடு அல்லவா?”

“ஆமாம்… அவருடைய இரண்டாவது மருமகள் அனுராதா பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது நம் முரளி போய் எட்டிப் பார்த்திருக்கிறான்.”

தியாகராஜன் அதிர்ந்தார்.

“அவன் எப்படி அவர்கள் வீட்டிற்கு போனான்?”

“ஒவ்வொரு வீட்டு மாடியாக தாண்டிப் போயிருக்கிறான்…”

“ஓ காட்… பதினெட்டு வயசில் என்ன திமிர்?”

“இவன் எட்டிப் பார்த்ததை அனுராதாவே பார்த்து கத்திவிட்டாள். அதைக்கேட்டு முரளி பயந்து நடுங்கி ஓடப் பார்த்தான். உடனே பாய்ந்து அவர்கள் வீட்டு மனுஷர்கள் முரளியைப் பிடித்து விட்டார்கள்.”

“……………..”

“போங்கள் எப்படியாவது நல்லவிதமாகப் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி விஷயம் போலீஸ்வரை போகாமல் நம் முரளியை அழைத்து வந்து விடுங்கள்… அவமானத்தில் அவர்கள் எதிரில் என்னால் பேசக்கூட முடியவில்லை. என்னவெல்லாம் என்னைக் கேவலமாகக் கேட்டார்கள் தெரியுமா?”

“ஸோ… இப்போ நானும் போய் அவாகிட்ட அவமானப் படணும். அந்த அட்வகேட் சடகோபன் கொசுவைக் கொல்வதற்குக் கூட துப்பாக்கியை தூக்குகிற ஆள்…”

“நடு ஹாலில் நம் முரளியை தூணில் கட்டிப் போட்டிருக்கிறார்கள்…”

“நீயும் வருகிறாயா, இல்லை நான் மட்டும்தான் போகணுமா?”

“ப்ளீஸ்… நீங்கள் மட்டும் போய் அவனை பத்திரமாக அழைத்து வந்து விடுங்கள்…”

“அப்பா ப்ளீஸ்…”

மனத்துக்குள் பிரார்த்தனை செய்துவிட்டு, அட்வகேட் சடகோபன் வீட்டை நோக்கி தொய்ந்துபோய் நடந்தார்.

அது ஒரு பழைய காலத்து வீடு. வாசலில் மல்லிகைப் பந்தலின் கீழ் சடகோபனின் மூத்த மகன் நாராயணன், தியாகராஜன் வருகைக்காக காத்திருப்பவன் போல் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தான்.

இவரைப் பார்த்ததும் “அப்பா, மிஸ்டர் தியாகராஜன் வரார்…” என்று கத்திக் குரல் கொடுத்தான்.

ஈஸிசேரில் கேட்ராக்ட் கண்ணாடியுடன் அட்வகேட் சடகோபன் அண்ணாந்து நெடுந்தூரம் பார்க்கிற பாவனையுடன் தியாகராஜனை ஏறிட்டுப் பார்த்தார்.

தியாகராஜன் தூணில் கட்டப்பட்டிருக்கும் முரளியை திரும்பிக்கூடப் பார்க்காமல் சடகோபன் எதிரில் போய் நின்றார்.

தன் எதிரே வந்து நிற்பவர் யாரென்று தெரியாதவர் போன்ற நடிப்பாற்றலுடன் கண்ணாடியை தூக்கி விட்டுக்கொண்டு, “யாரது?” என்றார் அட்வகேட் சடகோபன்.

நாராயணன் அவர் அருகில் போய், “தியாகராஜன் சார்ப்பா…” என்றான்.

“ஓ” – சடகோபன் அலட்சியத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

மனத்துக்குள் நொறுங்கிப்போய் இந்த அவமானத்தை தியாகராஜன் தாங்கிக் கொண்டார்.

தூணில் கட்டப் பட்டிருந்த முரளியின் அருகில் சினத்துடன் நின்ற தனது இரண்டாவது மகன் கோபாலனிடம், “கோபாலா… சாரோட மகன் நம்ம வீட்டில் என்ன காரியம் செய்தான்னு சொல்லுடா…” என்றார்.

தியாகராஜன் அவசரமாகக் குறுக்கிட்டு, “என் மனைவி சொன்னாள்” என்றார்.

அந்த கோபாலன் அவர் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளாமல் கோபத்துடன் கத்த ஆரம்பித்தான். “இன்னிக்கிதான் சார் உங்க பையன் எங்ககிட்ட மாட்டியிருக்கான். ஏற்கனவே என் மனைவி நாலஞ்சு தடவை என்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்கா, யாரோ பாத்ரூம்ல எட்டிப் பார்க்கிற மாதிரி தோணுதுன்னு… சந்தேகப்பட்டு நானும் இன்னிக்கி மாடிப்படியில் ஒளிஞ்சு நின்னு பார்த்தேன். வசமா மாட்டிக்கிட்டான். இந்தக் கேவலமான காரியத்தை செஞ்சதுக்கு உங்க மகனை நாங்க சும்மா விடப்போறதில்லை. நீங்களே சொல்லுங்க, உங்க வீட்டுப் பெண்கள் குளிக்கிறப்ப நாங்க யாராவது வந்து எட்டிப் பார்த்தா சும்மா விட்டுருவீங்களா எங்களை?”

இந்த ஒப்பீடு தியாகராஜனை வதைத்தது.

மகனை முறைத்துக் கொண்டே, “அவன் பண்ணியது பெரிய தப்புத்தான்…” என்றார்.

சடகோபன் கண்ணாடியைக் கழற்றியபடியே “ஸாரி தியாகராஜன், உங்களை வரச்சொன்னது ஒரு பார்மாலிட்டிக்காகத்தான்… அவனை நாங்க சும்மா விடறதா இல்லை. இப்பவே போலீஸ்ல ஒப்படைக்கப் போகிறோம்.” என்றார்.

“ப்ளீஸ் இந்த முறை அவனை நீங்கள் பெரிய மனது வைத்து மன்னிக்க வேண்டும்…” தியாகராஜன் கெஞ்சினார்.

“இது ஒண்ணும் முதல் தடவை இல்லையே, தியாகராஜன்?”

“இனிமேல் இது மாதிரி கண்டிப்பாக நடந்துகொள்ள மாட்டான்.”

“இதுவரை அவன் செஞ்சதுக்கு பதில் சொல்லுங்கள் தியாகராஜன்.”

சடகோபனின் மனைவி, அறைக் கதவருகில் நின்றுகொண்டு, “என்னத்துக்கு இவரிடம் வீணாகப் பேசிக்கிட்டு… பேசாம இவனை போலீஸ்ல கொண்டுபோய் ஒப்படைச்சுட்டு வரச் சொல்லுங்க… சும்மா இப்படியே விட்டுட்டு இருந்தா, நாளைக்கு வீதியில போறப்பவே பொம்மணாட்டி கையைப் பிடிச்சு இழுத்தாலும் இழுப்பான்…”

“உஸ்…நீ உள்ளே போ.” சடகோபன் மனைவியை விரட்டினார்.

“சொல்லுங்க தியாகராஜன், இவனை போலீஸில் ஒப்படைத்து விடட்டுமா?”

“ப்ளீஸ்… எனக்காக, எங்கள் குடும்ப நிம்மதிக்காகவாவது இவனை விட்டு விடுங்கள்… போலீஸ் வேண்டாம்.”

“உங்களுக்காகத்தான் அடுத்த வீட்டுக்குக் கூடத் தெரியாமல் விஷயத்தை எங்க வீட்டுக்குள்ளேயே அமுக்கி வைத்திருக்கிறோம்… இவனின் லட்சணத்தை எல்லார் வீட்டிலேயும் போய்ச் சொல்லி விடட்டுமா? சொன்னால் உங்க குடும்ப கெளரவம் என்னாகும் தெரியுமா? நான் உங்களோட முகத்திற்காகத்தான் பார்க்கிறேன்.”

“ப்ளீஸ்.”

“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்னோட சொத்து விஷயமா கோர்ட்ல என் மேல் ஒரு கேஸ் நடந்தப்ப, உங்களை எனக்குச் சாதகமா சாட்சி சொல்றதுக்கு கூப்பிட்டேன்… ஆனா நீங்க வரலை. அதையெல்லாம் நான் ஞாபகத்தில் வச்சிண்டு இல்லை. ஒரு பேச்சுக்குச் சொல்றேன்.”

தியாகராஜனுக்கு லேசாக வியர்த்தது… சடகோபன் பழிவாங்கப் பார்க்கிறாரா?

கோபாலன் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, “இனிமே இவரோட என்னத்துக்குப்பா பேச்சு? விஷயத்தை சொல்லிட்டோம். அடுத்து போலீஸுக்கு போன் பண்ணிடலாம். சும்மா விட்டுடக் கூடாது இவனை…” என்று கோபத்தில் இரைந்தான்.

“ப்ளீஸ் மிஸ்டர் கோபாலன், தயவுசெய்து போலீஸ் வேண்டாம். செய்த தவறுக்கு பிடிபட்டுப் போனதே அவனுக்கு பெரிய தண்டனை. இந்தத் தண்டனையும் அவமானமுமே போதும்… திருந்தி விடுவான். நான் திருத்தி விடுகிறேன் அவனை…”

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்.” கோபாலன் தொலைபேசி இருந்த மேஜையை நோக்கிச் சென்றான். முதன் முறையாக முரளி, “அங்கிள் ப்ளீஸ்…” என்று கெஞ்சினான்.

அட்வகேட் சடகோபன் ஈஸிசேரில் சாய்ந்து கண்களைச் சில நிமிடங்கள் மூடியபடி மெளனமாக ஏதோவொரு தீவிர யோசனையில் இருந்தார்.

பின், தன் மூத்த மகனிடம், “நாராயணா, அந்தப் பையனை அவிழ்த்து விட்டுடு.” என்றார்.

“என்னப்பா இது கடைசியில் இப்படிச் சொல்லிட்டீங்க?” – கோபாலன் அதிர்ச்சியுடன் கேட்டான். ஆனால் அவிழ்த்து விடவில்லை.

சடகோபன் சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு மறுபடியும் சொன்னார். “பரவாயில்லை, அவனை அவிழ்த்து விட்டுடு நாராயணா.”

நாராயணன் எரிச்சலுடன், “நீங்களே அவிழ்த்துவிட்டு வெத்திலையும் பாக்கும் கொடுத்து அனுப்பி வைங்க…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து போய்விட்டான்.

எல்லோரும் பேசாமல் அமைதியாக நின்றார்கள்.

சடகோபன் ஒரு நீதிபதியைப் போன்று சுற்றிலும் பார்த்துவிட்டு, “மிஸ்டர் தியாகராஜன் உங்க மகனை நீங்க அழைச்சிட்டுப் போகலாம்…”

உடனே தியாகராஜன் வேகமாகப் போய் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு முரளியின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு சடகோபனிடம் வந்தார்.

“இந்த உதவியை ஒருநாளும் மறக்கவே மாட்டேன். எங்கள் குடும்பமே உங்களுக்கு கடமைப் பட்டிருக்கிறது. முரளி, சாருக்கு நன்றி சொல்.”

“ரொம்ப நன்றி சார்…”

“நாங்கள் வருகிறோம்.”

தியாகராஜன் மகனை அரவணைத்தபடியே விடை பெற்றார்.

சடகோபன், “ஒண்ணு மட்டும் மறந்துடாதீங்க தியாகராஜன். உங்க பையனை மன்னிச்சது உங்க குடும்ப கெளரவத்தைக் காப்பாத்தறதுக்காக மட்டும் இல்லை; எங்க குடும்பத்தோட கெளரவத்தையும் காப்பாத்திக்கறதுக்காகவும்தான்…”

இதன் பொருள் தியாகராஜனுக்குப் புரியவில்லை என்றாலும், மகனுடன் வேகமாக வெளியேறினார்.

சடகோபன் களைப்புடன் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டார்.

“தெரியும் எனக்கு. எல்லா விஷயத்திலும் நீங்க இப்படித்தான் கடைசி நிமிஷத்துல காலை வாரி விட்டுடுவீங்க…” கோபாலன் கத்தினான்.

சடகோபன் மெதுவாக எழுந்து நின்றுகொண்டு வீட்டில் இருப்பவர்களிடம், “நீங்க எல்லாருமே ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க… இந்தப் பையனை போலீஸ்ல ஒப்படைக்கணும்னு சொன்னதே நான்தான். ஆனா, போலீஸ்னு போயாச்சுன்னா அப்புறம் விஷயம் இந்தப் பையனோடது மட்டுமா இருக்காது. நம்ம அனுராதாவும்தான் போலீஸ் ஸ்டேஷன்லேயும்; கோர்ட்லேயும் போய் நிக்கணும். ஒவ்வொருத்தனும் கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் அவளும்தான் பதில் சொல்லியாகணும்…

“புடவை கட்டி குளிச்சியா? இல்லாம குளிச்சியா? சோப்பு போடும்போது பார்த்தானா? இல்ல குளிக்கும்போதான்னு கேப்பானுங்க… இவ குளிக்கிறதை இந்த பொடிப் பயல் பார்த்தானோ இல்லையோ, கோர்ட்ல வந்து இவ நிக்கறப்போ, அத்தனை பேரும் மானசீகமா இவ குளிக்கிறதைப் பார்ப்பானுங்க. அதை இவளால தாங்க முடியுமோ? இல்லை, நம்மால்தான் தாங்க முடியுமா? கேஸ்ன்னு போயாச்சுன்னா இப்போ தலை குனிஞ்சுண்டு நின்ன இந்தப் பொடியனே கோர்ட்டில் நிமிர்ந்து நின்னு, “நான் இவ குளிக்கிறதைப் பார்க்கப் போகல.. மாடில என் காத்தாடி விழுந்தது… அதை எடுக்கத்தான் போனேன்.” அப்படீன்னு இவன் வக்கீல் சொல்லிக் கொடுத்த மாதிரி சொல்லுவான்.

“நம்ம அனுராதாவோட கெளரவம் வீணா காற்றில் பறக்கப் போவதுதான் மிச்சம். அவளோட கெளரவத்தைக் காப்பாத்திக்கறதுக்காகவாவது இந்தப் பையனை இப்படியே விட்டுடலாம்னு நான் சொன்னேன்… புரியுதா?”

சடகோபனின் மனைவி உள்ளே இருந்து, “எல்லாம் தலைவிதி. இப்படி ரெளடிப் பசங்களுக்கெல்லாம் பயந்துபோய் வாயை மூடிட்டு இருக்க வேண்டியிருக்கு… நானும்தான் பிள்ளைகளைப் பெத்து வளர்த்திருக்கேன். இப்படியா பெண்கள் குளிக்கிறச்சே போய் எட்டி எட்டிப் பார்த்ததுகள்…? அதது இருக்கிற இடம் தெரியாமல் வளர்ந்ததுகள். இந்தப் பையன் முளைச்சு ஒரு இலை விடறதுக்குள்ளேயே இப்படியிருக்கு…. ஆனா, அதுகளைச் சொல்லியும் பலனில்லை. இதுகளைப் பெத்ததுகள் இப்படி இருந்திருந்தால்தான் இதுகளும் இப்படியெல்லாம் பண்றதுகள், வேறென்ன?”

தூக்கத்துக்கு மெல்ல நழுவிக் கொண்டிருந்த சடகோபனின் மனம் சட்டென்று விழித்துக் கொண்டது.

சன்னம் சன்னமாக அவருள் பற்பல திரைகள் விலகின…

ஐம்பது வருடங்களுக்கு முன் அவருடைய சொந்த ஊராகிய கல்லிடைக்குறிச்சியில் நடந்த சில சம்பவங்கள் மங்கிய காட்சிகளாகத் தெரிந்தன.

கல்லிடைக்குறிச்சியில் அவருடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் அலமேலு என்ற அழகிய பெண் இருந்தாள். அவள் குளிக்கும் போதெல்லாம் சடகோபன் ஒளிந்து நின்று பார்த்ததுண்டு.

ஆனால் ஒரு வித்தியாசம். தியாகராஜனின் மகன் முரளி எதிர்பாராமல் மாட்டிக் கொண்டான். சடகோபன் மாட்டிக் கொண்டதில்லை…

Print Friendly, PDF & Email

1 thought on “மெளன தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *