மெய்போலும்மே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2024
பார்வையிட்டோர்: 2,171 
 
 

“இதோ, இப்ப வந்துடுவார்…!”

“பத்து நொடிகளுக்கு ஒரு முறை கண்கள் வாசல்பக்கம் பார்ப்பதும், நிமிஷத்துக்கு ஒருதரம், “இதோ இப்ப வந்துடுவார்…!” – என்று நம்பிக்கையோடு உரத்து முணுமுணுப்பதுமாய், பரபரப்பாகவும் படபடப்பாகவும் இருந்தாள் கல்யாணி.

ஒரு மாத ‘வெக்கேஷனைச்’ சொந்த ஊரில் கழித்துவிட்டு, மகன், மருமகள், பேத்தி மூவரும் இன்னும் சிறிது நேரத்தில் ‘யு எஸ்’ திரும்ப ஆயத்தமாகிறார்கள்.

‘செக்-லிஸ்ட்’ வைத்துக்கொண்டு, பிரயாணப் பெட்டிகளையும், லக்கேஜ்களையும், ‘ஹால்’ நடுவில் கொண்டு வந்து வைக்கிறார்கள்.

எடைமிஷின்மேல் வைத்து எடை பார்த்துக் குறிக்கிறார்கள். வேண்டாததை எடுக்கிறார்கள்.

சியாமளி, பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவதும், படக்கதைகளைப் படிப்பதும், அவ்வப்போது வந்து பாட்டி, “தாத்தா எப்ப வருவாங்க?” என்று கேட்பதுமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறாள்.  

இன்று புறப்பட்டுச் சென்றால், இன்னும் ஒரு வருஷம் கழித்து அடுத்த வெகேஷனுக்குத்தான் அவர்களால் வரமுடியும்.


“தாத்தா, எனக்கு ‘க்யூப்’ வாங்கிக்கொடுக்கறியா?”

வந்தது முதல் பல முறைக் கேட்டுவிட்டாள் பேத்தி சியாமளி.

“ஆபீஸ் வேலை ‘பிஸில’, மறந்துடுச்சுடாக் கண்ணு…!”

பல முறைச் சமாதானம் சொல்லிவிட்டார்.

மீண்டும் ஊருக்குப் புறப்படும் நாளும் வந்துவிட்டது.

“இன்னிக்கு ‘ஷ்யூரா’, உனக்குக் ‘கியூப்’ வாங்கிக்கிட்டு வருவேனாம். ஏரோப்ளேன்ல ஒக்காந்து விளையாடிக்கிட்டே போவியாம்.. சரியாடா செல்லம்..?!” – காலையில் அலுவலகம் புறப்படுகையில், உறுதியளித்துவிட்டுப் போனதால், நிச்சயம் பேத்திக்காகவாவது ‘சென்ட் ஆஃப்’க்கு வந்துவிடுவார் என்றுதான் எதிர்பார்த்தாள் கல்யாணி.

‘ம்ஹூம்…!’ இதுவரை வந்தபாடில்லை.

‘விமானநிலையத்துக்குச் செல்லப் பதிவு செய்த ‘ஓலா’வும் வந்துவிட்டது.

‘இன்னும் அவரைக் காணோமே?’- விசனப்பட்டாள் கல்யாணி.

‘டிக்கியில் லக்கேஜ்’களை ஏற்றும்போதுகூட, ‘தெருவில் அவர் வருகிறாரா…?’-என்று பரபரப்புடன் அலைமோதிக்கொண்டிருந்தன அவள் கண்கள்.

கருணாகரன் வருவதற்கான அறிகுறியே இல்லை.

“இந்த அப்பா இப்படித்தாம்மா…! விட்டுத்தள்ளு…!”- சலித்துக் கொண்டான் மகன்.

“நிச்சயமாப், பேத்திக்கு ‘க்யூப்’ வாங்கிக்கிட்டு, விமான நிலையத்துக்காவது வந்துடுவார்…!” – நம்பிக்கைத் தெரிவித்தாள் கல்யாணி. சொல்லிக்கொண்டே, கைப்பேசி எண்ணையும் அழுத்தினாள்.

வழக்கம்போல, “நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டுள்ளது”- என்றது.

கருணாகரன் கலால் துறை அலுவலகத்தில் சீனியர் க்ளார்க். நேர்மையான அரசு அதிகாரி அவர்.

வழக்கமாக, அலுவலக வேலை நேரத்தில் ‘ஃபோன் சுவிட்ச் ஆஃப்’ செய்து வைத்துவிடுவார்.

‘On Not Answering The Telephone’ என்ற நகைச்சுவைக் கட்டுரையில், ‘வில்லியம் ப்ளோமர்’ எழுதிய “Telephone is a Pest’ என்ற கருத்தின் தீவிர ஆதேரவாளர் அவர்.

போன் பேசுவதே சிறிதும் பிடிக்காது அவருக்கு. அதிலும் குறிப்பாக, அலுவலக நேரத்தில் போன் பேசுவதை அறவே வெறுப்பவர்.

“அவசர ஆத்தரத்துக்கு இருக்கட்டும்…!”- என்றுச் சொல்லி, மகன் வாங்கித் தந்த கைப் பேசியை முழுக்க முழுக்க, சுவிட்ச் ஆஃப்’ செய்தே வைத்திருப்பார்.

இவர் குணமறிந்து, அலுவலக விஷயமாகக் கூட யாரும் இவரிடம் ‘ஃபோன்’ பேசியதில்லை. நேரில் வந்தோ, கடிதம் மூலமாகவோதான் இவரைத் தொடர்ப்பு கொள்வார்கள்.

அலுவலக எண்ணை இதுவரை வீட்டில் யாருக்கும் தந்ததேயில்லை அவர்.


“கருணாகரன் ஒரு டிவோடட் எம்ப்ளாயி…!;

அவர் ஒரு பரோபகாரி…!;

எல்லாரோட வேலையையும் இழுத்துப்போட்டுக்கிட்டுச் செய்வார்…!;

எக்ஸெல், வேர்டு, ஜாவா’ ன்னு… கம்யூட்டர் காலத்துக்குத் தன்னை அப்டேட் பண்ணிக்கிட்டு போடு போடுனு போடுகிறவர்…!;

ஆபீஸ்தான் அவருக்கு முதல் ப்ரிஃபரன்ஸ்…!;

குடும்பம், குட்டி எல்லாம் இடண்டாம்பட்சம்தான் அவருக்கு…!;

அன்றன்றைய வேலையை முடிச்சாத்தான் தூக்கமே வரும் அவருக்கு…!;

மெய்வருத்தம் பாரார், பசி நோக்கார், கண்துஞ்சார் னு ஔவையார் சொன்னதுக்கு உதாரணமானவர் இந்தக் கருணாகரன்…!;

இவரமாதிரி ஒரு சிலர் இருக்கறதனாலத்தான் ஒவ்வொரு ஆபீசும் ஓடிக்கிட்டிருக்கு…!”

இப்படியெல்லாம் அலுவலகத்தில் ஒவ்வொருவரும் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசும்போது, புல்லரித்துவிடும் கருணாகரனுக்கு.

“சார் அவசரமா ‘டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட்’ இருக்கு. உடனே போயாகணும்.  ‘இன்வாய்ஸ்’ பெண்டிங் இருக்கு. அதை முடிச்சி தலைமையகத்துக்கு அனுப்பிடமுடியுமா சார்…!”

“நான் பாத்துக்கறேன்! உடனே புறப்படுங்க…!”- உதவி கேட்டவரைக் கையோடு அனுப்பிவைப்பார் கருணாகரன்.

இரவு எட்டரை… ஒன்பது மணி வரை பிறர் வேலைகளைக்கூடத் தன் சொந்த வேலை போல நேர்த்தியாகச் செய்துமுடித்துவிட்டுத்தான் வீட்டுக்குச் செல்வார்.

“உங்க உதவிக்கு நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கேன் சார்; வாழ்க்கைல உங்களை மறக்கவே மாட்டேன் சார்…”- என்றெல்லாம் அவரைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் முகஸ்துதி செய்யும்போது உச்சி குளிர்ந்துவிடும் கருணாகரனுக்கு.

சிகரெட், கஞ்சா, குடி, போதை-ஊசிகள்… இவைகளைப்போல, ‘புகழ் மொழிகள்’ கூட ஒரு போதைதான் மனிதனுக்கு.

கருணாகரனின் கேரக்டரை நன்கு அறிந்துகொண்டு, அலுவலகத்தில் கிட்டத்தட்ட அனைவருமே அவ்வப்போது தங்கள் வேலையை கருணாகரனின் மூலமாக முடித்துக் கொண்டனர்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் கருணாகரனின் ‘பரோபகாரக் கேரக்டரை’ தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர், அதாவது ‘கருணாகரனை உபயோகப்படுத்திக் கொண்டனர்.’

கருணாகரன் வெள்ளந்தியானவர். தன்னைப்போலவே பிறரை நினைப்பவர். யாரையும் தவறாக நினைக்கவேத் தெரியாது அவருக்கு. யார் எந்த வேலையைச் சொன்னாலும் தட்டாமல் செய்துதந்து அவர்களைத் திருப்திப்படுத்துவதில் திருப்தியடைபவர்.

பொது வாழ்க்கையில் அதிகமாய் ஈடுபடும்போது, குடும்பக் கடமைகள் சற்றே பின்னடைவைச் சந்திப்பதுதானே யதார்த்தம்.


குடும்ப நல்லது கெட்டதுகளுக்கு, குறித்த நேரத்துக்கு வராமல் கருணாகரன் காலை வாரி விட்ட அனுபவங்கள் நிறைய உண்டு கல்யாணிக்கு.

இருந்தாலும், ஒரு சின்ன நம்பிக்கை, இன்று ‘பேத்தி சியாமளிக்காகவாவது, வந்துவிடுவார்…!’ என்று எதிர்பார்த்தாள். அதுவும் பொய்த்துவிட்டது.

“தாத்தா எப்ப வருவாரு…?”

சியாமளி கேட்கும்போதெல்லாம் “தோ வந்துருவார் கண்ணு..” என்றுதான் சொன்னாள்.

ஓலாவை விட்டு, விமான நிலையத்தில் இறங்கியதும் கூட கருணாகரன் வந்துவிடுவார் என்றுதான் நம்பினாள் கல்யாணி.

‘இமிக்ரேஷன் க்ளியர்’ ஆகி அவர்கள் கண் மறைவாய், விமானத்தளத்திற்குள்ளே சென்ற பின், ‘கால் டாக்சியில்’ ஏறி வீடு போகும்போது மனசு கனத்தது அவளுக்கு.

இது வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான்.

இரு பக்கத்து உறவினர்களும் கருணாகரனின் அலுவலகப் பணியைச் சொல்லி,  எத்தனையோ முறை குத்தல் பேச்சுப் பேசியிருக்கிறார்கள் இவளிடம்.

கல்யாணி எந்த எதிர் வினையும் ஆற்றுவதில்லை.

‘எது நடந்தாலும் அது நன்மைக்கே…!’ என்ற கீதாசாரத்தை இறுகப் பற்றி நின்றாள் அவள்.


“கிர்ரிங்… கிர்ரிங்…”- விமானநிலையத்திலிருந்து, டாக்ஸியில் வீடு திரும்பும்போது கல்யாணியின் செல்போன் ஒலித்தது.

தன் கணவர் கருணாகரனின் செல் நம்பர் கண்டதும் அதிர்ந்தாள்.

இதுவரை ஒரு முறையோ இரு முறையோ போனில் அவரோடு பேசியிருக்கிறாள் அவள். அதுவும் அவள் போன் செய்துதான் பேசியிருக்கிறாள். இன்றைக்கு அவர் எண்ணிலிருந்து முதன் முறையாக கால் வந்ததும் அதிர்ந்தாள். ஆன் செய்தாள்.

“என்னங்க…?”

எதிர் முனையில் ஒரு பெண் குரல் கேட்டது.

“நீங்க கருணாகரன் சார் ஒய்ஃப்’தானே?”

“ஆமாம்…! நீங்க யாரு…? அவர்…?”

“பதட்டப் படாதீங்க…! கருணாகரன் சார் ஆபீஸ்லேந்து கொஞ்சம் சீக்கிரமே புறப்பட்டார்.  ஆபீஸ் வாசல்ல ‘சடர்ன்னா’ மயங்கி விழுந்துட்டாரு. உடனே ஆஸ்பத்திரில சேர்த்துட்டோம். ‘இன்டன்சிவ் கேர்’ல இருக்காரு…! லொகேஷன் ஷேர் செய்யறோம், உடனே வந்து சேருங்க”

அதே கால் டாக்ஸியை மருத்துவமனைக்குத் திருப்பினாள் கல்யாணி.


பதினைந்து நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைகள் நடைபெற்றன.

சரியான நேரத்தில் மருத்துவரின் சிகிச்சைக் கிடைத்ததால், ‘ஸ்ட்ரோக்’ வராமல் தப்பித்தார் கருணாகரன்.

மருத்துவச் சான்றுடன் கூடிய ஈட்டாவிடுப்பு வழங்கியது அலுவலகம்.

மருத்துவச் சிகிச்சை முடிந்தது. தொடர்ந்து பிசியோ தெரபி தொடர்ந்து தரப்பட்டது.

வேளா வேளைக்கு, மருந்து மாத்திரைகள், மருத்துவர் அறிவுரைப்படி ஆகாரங்கள், என கல்யாணி கணவருக்குப் பணிவிடைகள் செய்துவந்தாள்.

மனைவி அமைதியாகப் பணிவிடைகள் செய்யும் ஒவ்வொரு கணமும், தான் அவளுக்குச் செய்யத் தவறிய எத்தனையோ கடமைகள் அவர் கண் முன் வந்தன;

தன் ஒத்துழையாமையையெல்லாம் பொருட்படுத்தாமல், தன் மேல் அன்புகாட்டும் மனைவியை நினைத்தபோது, கழிவிரக்கத்தில் கலங்கினார்;

குடும்பம், அலுவலகம் இரண்டையும் இரண்டு கண்களாக பாவிக்காமல், ஒரு கண்ணுக்கு வெண்ணை, ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு என வைத்துவிட்டதற்காக வருந்தினார்.

அவ்வப்போது அலுவலகத்திலிருந்து எவராவது வந்து விசாரிப்பதும் போவதுமாக இருந்தனர்.

இரண்டு மாத விடுப்பில் ஓரளவு உடல்நிலை குணமடைந்தது. மருத்துவச் சான்றுடன் கூடிய ஈட்டா விடுப்பை முடித்துக்கொண்டு, மீளப் பணியில் சேர்ந்தார் கருணாகரன்.


 கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களாக, தன் ‘சீட்’டில் நடக்க வேண்டிய ஒரு வேலை கூட நடக்கவில்லை.

“சார் லீவுல இருக்காரு…!” என்று சொல்லிச் சொல்லி கோப்புகள் தேங்கிக் குவிந்துவிட்டன.

பல வேலைகளை கருணாகரன் மூலம் முடித்துக் கொண்ட ஊழியர்களில் ஒருவர்கூட விடுப்பில் இருந்த இவரின் வேலையில் ஒன்றைக் கூடப் பார்க்கவில்லை. அதுமட்டுமில்லை, கருணாகரன் விடுப்பு முடிந்து மீளப் பணியில் சேர்ந்தவுடன்கூட, எவரும் வந்து ஒட்டிப் பழகவில்லை அவரிடம். ஏதாவது வேலை சொல்லிவிடுவாரோ என்கிற பயம் அவர்களுக்கு.

தாமதமாகத்தான் என்றாலும், இப்போதாவது உலகம் புரிந்தது கருணாகரனுக்கு.

‘பெண்டிங்’ வேலைகளை ஒவ்வொன்றாக முடித்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பினார்.

அலுவலக ஊழியர்களிடம் கொண்ட மேலதிகமான பற்றினாலும், தான் போலியாகவும், காரியவாதமாகவும் புகழப்படுகிறோம் என்ற அறியாமையால், புகழ் போதையில் தடுமாறிய நாட்கள் நினைவில் உறுத்தின.

குடும்பத்தில், மனைவி குழந்தைகளுக்குச் செய்யவேண்டிய அடிப்படைக் கடமைகளைச் செய்யாமல் இருந்துவிட்டோமே…!’- மனசாட்சி உறுத்தியது.


‘கடந்த காலம் எப்படி இருந்தாலும், நிகழ்காலத்தை நிதர்சனமாக்கிக்கொண்டார் கருணாகரன்.

இப்போதெல்லாம், அலுவலகத்தில் நமக்கென ஒதுக்கப்பட்ட வேலையைக் குறையின்றிச் செய்து முடித்துவிட்டுக் காலாகாலத்தில் வீடு திரும்புகிறார்;

மற்றொரு கண்ணான குடும்பத்தில், மனைவியோடு, கோவில், குளம் என்ற சென்று வருகிறார்;

அமெரிக்காவில் இருக்கும் மகன், மருமகள், பேத்தி இவர்களோடு ‘வீடியோ காலில்’ வாரம் இரண்டு முறை பேசி மகிழ்கிறார்.

தன் மாற்றம் குறித்து தனக்குத்தானே மகிழ்ந்தார் கருணாகரன்.

கருணாகரன் மட்டுமில்லை…

மாற்றத்திற்குக் காரணம் தெரியாவிட்லும், மொத்தக்குடும்பமுமே கருணாகரனின் மாற்றம் கண்டு மகிழ்ந்தது.

– கொலுசு – ஆகஸ்ட் 2023

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *