மூன்று பெண்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 20, 2012
பார்வையிட்டோர்: 9,071 
 
 

சீக்கிரமே பரமேச்வரனுக்கு முழிப்பு வந்து விட்டது. ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். மூடுபனியின்தாக்குதலுக்கு அஞ்சி வெளிச்சம் ஒடுங்கிக் கிடந்தது போல் அரை இருட்டில் தெரு முடங்கிக் கிடந்தது. தெரு என்று சொல்வதுதப்பு. நான்காவது மெயின் நீளமும் அகலமுமாக வீசிக் கிடந்தது. இளங் குளிருக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஆண்களும் பெண்களும் குளிர் ஆடைகளை அணிந்து வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.ஆறுமாதத்துக்கு முன்பு அவரும் இம்மாதிரி வீரர்களில் ஒருவராகத்தான் இருந்தார். திடீரென்று ஒரு நாள் காலையில் அவரது பெண் வசந்தா ஒரு கையில்பெட்டியும் , இன்னொரு கையில் மூன்று வயதுக் குழந்தையுமாக வந்து நிற்கும் வரை.

அவர் அறைக்குள் இருந்த பாத்ரூமிற்குச் சென்று பல் தேய்த்து, முகம் கழுவிதுடைத்துக் கொண்டு வெளியே வந்தார். ஹாலில் எம்.எஸ்ஸின் சுப்ரபாதம் மெல்லிய ஒலி வரிசையில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது. சமையல் அறையில் தெரிந்த விளக்கு வெளிச்சம் வசந்தா வேலையைஆரம்பித்து விட்டாள் என்று தெரிவித்தது.ஏழரை மணிக்குள் அவள்எல்லா வேலையும் முடித்து விடுவாள். பிறகு டியுஷனுக்கு வரும்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து எட்டரை மணிக்கு அதுகளை அனுப்பி விடுவாள். அதன் பிறகு அவள் தன்னை ரெடி பண்ணிக் கொண்டு, குழந்தைக்கு சாதம் போட்டு விட்டு ஒன்பதரைக்கு ஸ்கூலுக்கு கிளம்புவாள். பக்கத்துத் தெருவில் இருக்கும் ஸ்கூலில் டீச்சராக இருக்கிறாள்.

அவர் சமையல் அறைக்குள் நுழைந்த போது, “குட் மார்னிங் டாடி, காபி இந்தாங்கோ” என்று காபிடம்பளரை அவரிடம் தந்தாள். மணம் நாசியைத் துளைத்தது. அவள் கைப் பாகமும், முக மலர்ச்சியும், அவருக்குள் பெருமிதத்தைஉண்டாக்கிற்று. ஆனால் இந்தப் புஷ்பத்தை, ஒரு மூடன் கையில் பிடித்துக்கொடுத்து வாழ்க்கை நாசமாகி விட்டதே என்று குமைச்சலும் ஏற்பட்டது.

அப்போது ஹாலில் டெலிபோன் ஒலித்தது. எடுத்து “பரமேச்வரன்” என்றார்.

“நமஸ்காரம் சாமி” என்று எதிர்க் குரல் சிரித்தது. செட்டியார்.

“நமஸ்காரம். என்ன, இன்னிக்கி நாயை கூட்டிண்டு வாக்கிங் போகலையா?” என்று கேட்டார் பரமேச்வரன்.

அந்தப் பக்கம் செட்டியாரின் சிரிக்கும் குரல் கேட்டது. செட்டியாரின் மனைவி நாய் வளர்க்கிறாள். அரை ஆள் உயரத்திற்கு இருக்கும் அந்த செயின்ட்பெர்னார்ட்டை செட்டியார்தான் காலையில் கூட்டிக் கொண்டு போக வேண்டும். வாஸ்தவத்தில், அந்த நாய்தான் செட்டியாரை ’தர தர’வென்று இழுத்துக் கொண்டு போகும் .” சாமி, ஆச்சி இநத ஊர்ல பிறந்திருக்க வேண்டியவ இல்ல. வீடு, வாசல், நகை, நட்டு , கார் பங்களான்னு இதிலெல்லாம் ஆசை கிடையாது. இநத நாயின்னு அப்பிடி உசிரு. சாப்பாடும், குளிப்பும், மருந்தும்னு, அடேயப்பா அதுக்கு என்ன செலவு, என்ன செலவு ” என்று மாய்ந்து போவார். மனிதர் நல்ல குணவான். ஆனால் தொழிலில் ரொம்ப கெட்டி. இல்லாவிட்டால் அப்படி ஒரு தோட்டமும் பங்களாவுமாக பாலஸ் ஆர்ச்சர்டில் வளைத்துப் போட முடியுமா? அதுதவிர பல இடங்களில் நிலமும் வீடுமாக வாங்கித் தள்ளியிருந்தார்.

பரமேச்வரனுக்கு செட்டியாரை எதேச்சையாகத்தான் பழக்கம் உண்டாயிற்று. பரமேச்வரன் பிரபலமான கார் கம்பனி ஒன்றின் விற்பனை உரிமையை தென்னிந்தியா முழுவதுக்கும் பெற்றிருந்த கம்பனியில் நிர்வாக இயக்குனராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பெங்களூரில் தான் தலைமை அலுவலகம். செட்டியார் மக்கள் உபயோகிக்கும் பல்வேறு சாதனங்களைத் தவணை முறையில் விற்பனை செய்யும் கம்பெனியை நடத்தி வந்தார்.மக்களின் மோகம் ஸ்கூட்டர் ,பைக்கிலிருந்து காருக்குத் தாவுவதைப் பார்த்த செட்டியார், கார்களையும் தவணை முறையில் விற்கத் தீர்மானித்து பரமேச்வரன் கம்பனியைத் தேடி வந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கம் பிறகு நெருக்கமாயிற்று. பரமேச்வரன் ரிடையர் ஆன போது, அவரதுநிர்வாகத் திறமையையும், நிதித் துறையில் அவருக்கு இருந்த அனுபவத்தையும் தன் கம்பனியில் உபயோகப் படுத்திக் கொள்ள செட்டியார் விருப்பம் தெரிவித்தார்…

மறுமுனையில் இருந்து செட்டியாரின் குரல் கேட்டது. “நீங்க இன்னிக்கு அந்த கோபால் ரெட்டிய பாக்க போறேன்னு சொன்னீங்கல்ல. அந்த வேலை முடிஞ்சு மத்தியானம் நீங்க வந்துருவீங்களா? என் மாப்பிள்ளை கதிரேசன் இருக்காரில்லே, அவர் இப்ப நடத்திக்கிட்டு இருக்கற சோலார் தொழில கொஞ்சம் பெரிசாக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. நிலமங்களா கிட்டே ஏதோ பெரியசைட்டு விலைக்கு வருதாம். போய் பாக்கலாம், சாமியும் வரணும்னு ஆசைப்படறாரு” என்றார் செட்டியார்.

“ஒ, பேஷா போய் பாக்கலாமே. என் வேலை பன்னண்டு, பன்னண்டரைக்குள்ள முடிஞ்சுடும் சாப்பிட்டு விட்டு மூணு மணிக்கு உங்க பங்களாவுக்கு வந்துடவா?” என்று கேட்டார்.

செட்டியார் போனைக் கீழே வைத்ததும் அவர் ஹாலில் உட்கார்ந்து கொண்டார்.

கோபால் ரெட்டியைப் பற்றிச் செட்டியார் பேச்செடுத்தது அவருக்கு நேற்று நடந்தவற்றை ஞாபகப் படுத்திற்று. நேற்று லஞ்ச முடிந்ததும் அவர் கங்காராம்சில் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு வரலாம் என்று கிளம்பிப் போனார். எம்.ஜி. ரோடில் அந்தப் பகல் நேரத்திலும் கூட்டம் ‘ஜே ஜே’ என்றுஇருந்தது. கூட்ட நெரிசல் போதாதென்று சுற்றிலும். புழுதி பரவிக் கிடந்தது. மெட்ரோவின் உபகாரம். அவர் கர்சீப்பால் மூக்கையும், முகத்தையும் மூடிக் கொண்டு போக வேண்டியிருந்தது.

புத்தகங்களை வாங்கிய பிறகு அவர் வந்த வழியே திரும்பிப் போய் கஷ்டப்பட விரும்பவில்லை. சர்ச்ஸ்ட்ரீட் வழியாகப் போனால் அது அவரது அலுவலகத்தின் பின்புறத்துக்கு கொண்டு போய் விடும்.அவ்வளவாக இநத நேரத்தில் கூட்டமிருக்காது.

அவர் அலுவலகத்தின் பின் வாசல் வழியாக உள்ளே போனார். லிப்டில் ஏறி மூன்றாவது மாடியை அடைந்தார். அவர் ரூமுக்குப் போவதற்கு முன்பு ரிகார்ட் ரூமைத் தாண்டிச் செல்ல வேண்டும். அவர் அந்த இடத்தை அடையும் போது பேச்சுக் குரல் கேட்டது. அதில் தன் பெயர் அடிபடுவதைக் கேட்டு அவர் மேலே நகராமல் நின்றார்.

அவர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசிய குரல் தணிக்கைப் பிரிவில் சூபர்வைசராக இருக்கும் சிவக்குமாருடையது என்று அவருக்குத் தெரிந்தது. ” திவாகர், இதெல்லாம் கடவுள் ஸாருக்கு தெரியுமா?” என்று அவன் கேட்டுக்கொண்டிருந்தான். ஆபிஸில் பேர் சொல்லியோ, பதவியைக் குறிப்பிட்டோ பேசாது பெயரில் வரும் ஈச்வரனை வைத்து அவரைக் கடவுள் என்று நடுத்தர மட்டத்து ஊழியர்கள் குறிப்பிடுவதை அவர் அறிந்திருந்தார்.

–*–

இன்னொருவனான திவாகர் விற்பனைப் பிரிவில் பண வசூல் செய்யும் மும்முரக் குழுவில் இளைய அதிகாரியாக இருப்பவன். மிகவும் துடிப்பான இளைஞன். வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டு வருவான் என்று ஒருமுறை அவர் செட்டியாரிடம் சொல்லியிருக்கிறார்.

திவாகரின் குரல் கேட்டது. “அதுதான் எனக்கும் கஷ்டமா இருக்கு. எப்படி சொல்றதுன்னு முழிச்சுகிட்டு இருக்கேன்.”

“அது சரி நிஜமாவே அவ இப்படித்தான் நடந்துக்கிறாளா ?” என்று ஆவல் வழியும் குரலில் கேட்டான். சிவா.

“சொன்னா நீ நம்பமாட்டே சிவா. இன்னிக்கு காலேல அவ வீட்டுக்குபோனேன். அவதான் கதவைத் திறந்தா. உள்ளே வந்து உட்காரச் சொன்னா. காபி சாப்பிடறீங்களான்னு கேட்டுட்டு என் பதிலை எதிர்பார்க்காமலே உள்ளே போனா.காபியை எடுத்துக்கொண்டு வந்து என் பக்கத்தில நின்னு கொடுத்துட்டு அங்கேயே நின்னா. வாசனை மூக்கை துளைக்குது. நான் காப்பியை சொல்லலே.பூ வாசனை, பவுடர் வாசனை சோப்பு வாசனை, பர்பியூம் வாசனைன்னு அப்படி ஒரு மணம் . எனக்கு அப்படியே ஒரு மாதிரி இருந்திச்சு. என்ன பண்ணறதுன்னே தெரியலே. ஒவ்வொரு தடவை போகும் போது ஒவ்வொரு விதமா… மை காட்!” என்றான் திவாகர்.

“ஒவ்வொரு விதமான்னா?”

“டிரஸ் பண்ணறதை பாக்கணும். ஸாரி கட்டுற அன்னிக்கு இடுப்புக்கு ரொம்ப கீழே இறங்கியிருக்கும். சல்வார் கமீஸ் போடற அன்னிக்கு துப்பட்டா இருக்காது. பான்ட் ஷர்ட் போட்டிருந்தா சட்டைல முதல் பட்டன் போட்டிருக்கமாட்டா. ஐயோ கேக்காதே” என்று சிரித்தான் திவாகர்.

“பாக்கறதை எல்லாம் பாத்துட்டு, சொல்றதை எல்லாம் சொல்லிட்டு, ராஸ்கல், கேக்காதேன்னு வேறே நாடகமா? ” என்று செல்லமாகத் திட்டினான் சிவா. “கல்யாணமானவள்னு சொல்றே. ஏன் இப்படி இருக்கணும்?”

அந்த ஆபிஸில் பெண் ஊழியர்கள் யாரும் வேலை செய்வதில்லை என்ற தைரியத்திலும், இந்தப் பகுதிக்கு மேலதிகாரிகள் வரும் வழக்கம் இல்லை என்ற நினைப்பினாலும் அந்த வாலிபர்கள் இம்மாதிரி மணம் போன போக்கில் பேசியது பரமேச்வரனுக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. ஆனால் இநத விஷயத்தில் நான் எங்கே வந்தேன்?

திவாகர் மேலும் பேசினான். அது அவரது கேள்விக்குப் பதிலாய் இருந்தது.

“சிவா, அதுதான் எனக்கும் புரியலே. நான் கோபால் ரெட்டியை தேடிப் போய் இதுவரையிலும் பாக்கவே முடியலே. அவன் மனைவிதான் வெளியே போயிருக்காரு. ஊர்ல இல்லே, ராத்திரிதான் வரேன்னு சொல்லிட்டு போனாருன்னு சொல்லுவா. அவ பேசறதைக் கேக்கறப்பவோ, அவ மூஞ்சியை பாக்கறப்பவோ அவளை திட்டணும், கோவிச்சுக்கணும்னு தோண மாடேங்குது . நானும் கோபால் ரெட்டி கிடைக்க மாட்டேங்கிறான்னு பாதி உண்மையை டெய்லி ரிபோர்ட்டுலகுடுத்துட்டு இருக்கேன். நீ சொன்ன மாதிரி ஸார் காதிலே போட்டு வச்சிர்றது நல்லதுன்னு தோணுது. இநத வார மீடிங்ல சொல்லிடறேன்”

“அதுதான் சரி. உனக்கு முன்னால உன் இடத்தில வேல பண்ணிக்கிட்டு இருந்த பாஸ்கரும் இநத கதையை என்கிட்டே சொல்லியிருக்கான். நாம ஜாக்கிரதையா இருந்திடறது நல்லது. சரி போகலாமா?” என்றான சிவக் குமார்.

அவர்கள் சென்றதும் பரமேச்வரன், அங்கிருந்து கிளம்பி தன் அறைக்குச் சென்றார். அன்று காலையில்தான்அவர்கள் கம்பனியின் வக்கீல் அதிர்ச்சி தரும் விஷயத்தைச் சொல்லி விட்டுப் போனார். கோபால் ரெட்டி அவன் வாங்கிய கடனுக்கு அவனுடைய வீட்டையும் காரையும் அடமானம் வைத்திருந்தான். ஆறு மாத காலமாக அவன் மாதாந்திரத் தவணை கட்டவில்லை என்று போன மாதம் காரைப் பறிமுதல் செய்து ஏலத்தில் விற்று கம்பெனி பணத்தை எடுத்துக் கொண்டது. இன்று வக்கீல்அந்த வீட்டின் பேரில் பொய் தஸ்தாவேஜுகளைக் காட்டி கோபால் ரெட்டி இன்னொருவரை ஏமாற்றிக் கடன் வாங்கி இருப்பதாகச் சொன்னார். அவர்கள் கம்பெனி வசம் ஒரிஜினல் பத்திரங்கள் இருப்பதால் கவலை ஏதும் இல்லை என்றாலும், மோசடியால் பாதிக்கப்பட்டவர் கோர்ட்டுக்குப் போவார் என்றும் அதனால் வீட்டை விற்று கடன் பாக்கியை மீட்பதில் தாமதங்கள் ஏற்படும் என்றும் கூறினார்.

அவர் கணினியில் கோபால் ரெட்டியின் கணக்கு விவரங்களைப் பார்த்தார். இன்னும் பனிரெண்டு லட்சம் வரவேண்டியிருந்தது. அவன் வீட்டு விலாசத்தைப் பார்க்க விண்ணப்ப பாரத்தை எடுத்துப் பார்த்தார். அதில் அவன் போட்டோ ஒட்டியிருந்தது. அவனை முதன் முதலாகப் பார்த்த நினைவு அவருக்கு வந்தது. அவன் கிட்டத்தட்ட வசந்தாவின் கணவன் முரளியைப் போலிருந்தான். இருவருக்கும் பூனைக் கண்கள், செம்பட்டைத் தலை மயிர், ரோஜாவின் வண்ணத்தை நினைவுறுத்தும் நிறம்.

ஆனால் குணத்திலும் ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியமாக இருந்தது. முரளி நல்லவனாகத்தான் இருந்தான் என்று அவர்கள் எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு நாள் வேலைக்குப் போவதை நிறுத்தி விட்டான். கேட்டதற்கு அவனுடைய மேலதிகாரி எப்போதும் அவன் மீது குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருப்பதாகவும், எல்லோர் முன்னிலையிலும் கேவலமாக அவனைத் திட்டுவதைப் பழக்கமாக வைத்திருக்கிறார் என்றும் வசந்தாவிடம் கூறினான். வேறு இடத்தில் வேலைக்கு முயற்சி செய்வதாகச் சொன்னான். வசந்தா பரமேச்வரனிடம் சொல்லி வேலை கிடைக்க முயற்சிக்கலாம் என்று சொன்னதை மானப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அவளைத் தடுத்து நிறுத்தி விட்டான். அதனால் அவருக்குத் தெரிய வந்த போது விஷயம் கையை மீறி விட்டது.

அவன் ஆபிஸ் போவதை நிறுத்தி மூன்று வாரம் கழித்து தெரிய வந்தது, அவன் ஆபிஸ் பணத்தைக் கையாடல் செய்ததால் சஸ்பெண்டு செய்திருக்கிறார்கள் என்று. கேட்கப் போன அவளை, ஆங்காரத்துடன் பேசி அடித்தான். கவலைகளை மறக்க குடிக்கிறேன் என்று ஆரம்பித்தான். தனியாய்க் குடிக்க வேண்டாம் என்று குடித்தனத்தைக் கெடுக்கும் சுபாவமுள்ள அவன் நண்பர்கள் அவன் வீட்டுக்கு வந்து கம்பெனி கொடுக்க ஆரம்பித்தார்கள். இதற்கெல்லாம் எங்கே இருந்து பணம் என்று வசந்தா தடுமாறிக் கொண்டிருக்கையில் கடன்காரர்கள் வேளை கெட்ட வேளையில் வந்து வாசலில் நின்று கூச்சல் போட ஆரம்பித்தார்கள். அவள் முரளியுடன் பேசித் தீர்வு காணலாம் என்று போன போது அவளைவீட்டை விட்டுத் துரத்தி விட்டான். வளரும் குழந்தையைப் பாதிக்கும் இந்தச் சூழ்நிலை வேண்டாம்என்று அவளும் அப்பாவைத் தேடி வந்தாள்…

இருவரும் குணக்கேடானவர்கள் என்பதில் சந்தேகமில்லை என்று பரமேச்வரன் தனக்குள் சொல்லிக்கொண்டார். ஒருவன் பெண்டாட்டியைத் துரத்தி விட்ட கனவான். இன்னொருத்தன் அவளை தனக்கு உதவும் பொருளாக உபயோகிக்கும் அறிவாளி. இநத இருவரில் யார் கடைந்து எடுத்த அயோக்கியன் என்பது அவ்வளவு சுலபமாகப் பதில் கிடைக்கக் கூடிய கேள்வி அல்ல என்பதே உண்மை…

–*–

சேஷாத்ரிபுரம் காலேஜுக்குப் பின் புறம் செல்லும் தெருவின் ஒரு வழி குமார பார்க்கைசென்றடைகிறது. பரமேச்வரன் குமார பார்க்கை அடைந்து அதிர்ஷ்ட வசமாகக் கிடைத்த ஒரு சாலையோர மர நிழலில் நிறுத்தினார். பதினோரு மணிக்கே வெய்யில் வந்து ஆளை அடித்தது. முன்னேற்றம், விரிவாக்கம் என்று கூச்சல் போட்டுக் கொண்டு,ஊரில் உள்ள பசுமைகளை எல்லாம் அழித்து கல்மரங்களை அரசும் அரசியலும் நட்டால், புழுக்கமும், வேதனையும், வியாதியும் தான் மனிதர்களை வந்து அரவணைத்துக் கொள்ளும் என்று செட்டியார் அடிக்கடி கூறுவது அவருக்கு ஞாபகத்துக்கு வந்தது.

கோபால் ரெட்டியின் வீடு பெரிதாக இருந்தது. தனித்த வீடு. காம்பவுண்டு கேட்டுக்கும் வீட்டு வாசலுக்கும் நடுவே தோட்டம் தென்பட்டது. கண்ணுக்குக் குளிர்ச்சியான மரங்கள். வித விதமான நிறத்தில் பூக்களைச் சுமந்து கொண்டு காற்றிலாடிய செடிகள். ஒரு நீரூற்று அளவாக தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தது. உள் நடைபாதையை ஒட்டி இரு பக்கமும் சீரான அளவில் வெட்டப்பட்ட புல்தரையின் பச்சை கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது.ரெட்டி நல்ல ரசிகன்தான் போலிருக்கிறது என்று பரமேச்வரன் நினைத்தார். ஆனால் திருட்டு ரசிகன்.

அவர் சார்த்தியிருந்த காம்பவுண்டு கேட்டின் பக்கத்தில் இருந்த அழைப்பு மணியின் ஸ்விட்சை அமுக்கினார். சில வினாடிகள் கழித்து வாசல் கதவைத் திறந்து ஒரு பெண் வந்தாள். கேட்டருகே வந்து “யாரு வேணும்?” என்று கேட்டாள். வீட்டில் வேலை செய்பவள் போலிருக்கிறது.

“திலகா விலாஸ் இதுதானே அம்மா? மிஸ்டர் கோபால் ரெட்டியின் வீடு?”

“ஆமாங்க ஐயா, நீங்க?” என்று கேட்டாள். அவர் தன் பெயரையும் கமபனியின் பெயரையும் சொன்னார்.

“ஒரு நிமிஷம் இருங்க” என்று கூறி விட்டு உள்ளே சென்றவள் திரும்பி வந்து கேட்டைத் திறந்தாள். “வாங்க” என்று அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றாள். “கொஞ்சம் இருங்க .அம்மா வந்துடுவாங்க. ஏதாவது குடிக்கிறீங்களா? ” என்று கேட்டாள். அவர் வேண்டாமென்று தலையை அசைத்தார். அவள் உள்ளே போய் விட்டாள்.

அவர் பார்வை ஹாலைச் சுற்றி வந்தது. பெரிய ஹால். நான்கு புறமும் ஆள் உயரத்துக்கு கடவுள் படங்கள் பிரேம் செய்யப்பட்டு,நின்றிருந்தன. கொண்டையா ராஜுவின் படங்கள். நல்ல தேக்கில் செய்யப் பட்ட நாற்காலிகள் நடுவே பூவேலைப்பாடுடன் ராஜஸ்தான் கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. இரு சுவர்களை ஒட்டி நின்ற புக் ஷெல்புகளில் வரிசையாகப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர் உட்கார்ந்திருந்த சோபாவுக்குப் பக்கத்தில் நான்கு அடுக்குகள் கொண்ட பிரம்பு அலமாரி ஒன்று நின்றிருந்தது. அன்றைய தினசரிகளும் சில வார இதழ்களும் சீராக அதில் உட்கார்ந்திருந்தன.சுத்தத்திலும், ஒழுங்கிலும் மிகுந்த கவனம் கொண்ட ஒருவரின் கைவண்ணம் அந்த ஹாலில் பிரதிபலித்தது.

அவர் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார். அவரை நோக்கி கையைக் கூப்பியபடி ஒரு பெண் வந்து நின்றாள். அவளிடம் பிரமிக்கத் தக்க அழகு காணப்பட்டது என்று அவர் நினைத்தார். திவாகரின் வர்ணனைகள் உண்மையில் அவள் தோற்றத்துக்கு சரியான நியாயம் வழங்க வில்லையோ என்று ஒரு நிமிடம் தோன்றிற்று.ஆனால் அவன் சொன்னது போல் இன்று அவள் இடுப்புக்குக் கீழேதான் தழையத் தழையப் புடவையைக் கட்டிக் கொண்டிருக்கிறாள், நல்ல ஓவியத்தின் மீது மை கொட்டிவிட்டாற் போல. அவர் எழுந்து ”நமஸ்காரம். என் பேர் பரமேச்வரன்” என்றார்.

அவள் “உட்காருங்க , உட்காருங்க ” என்று சிறிது பதட்டமான குரலில் கூறினாள்.” நீங்க பெரியவங்க. உட்காருங்க” என்றாள். பிறகு அவருக்கு எதிரிலிருந்த சோபாவில் உட்கார்ந்த கொண்டு ”என் பேர் திலகா” என்றாள்.

“முதல் தடவையா வரீங்க. ஏதாவது சாப்பிடணும். எளனி சாப்பிடறீங்களா? நம்ம தோட்டத்திலே காச்சது” என்று வேலைக்காரியைக் கூப்பிட்டாள்.

அவர் பேச்சைத் தொடரும் நோக்கத்துடன் ” இங்கே எல்லாம் ரொம்ப அழகாவும் பதவிசாவும் வச்சிருக்கே! இதெல்லாம் உங்க கைவேலைதானா?”என்று புன்னகையுடன் கேட்டார்.

“ஆமாம்” என்று அவள் வெட்கத்துடன் சிரித்தாள். சிரிக்கும் போது ரொம்பவே அழகாக இருக்கிறாள். கோபால் ரெட்டி சிறந்த ரசிகன்தான்.

அவள் அவரைப் பார்த்து “என்னை போயி நீங்கன்னு எல்லாம் கூப்பிடாதீங்க. நீங்க வயசுல பெரியவர். என்னை நீன்னே கூப்பிடலாம். எனக்கு உங்க பொண்ணு வயசுதான் இருக்கும் ” என்றாள்.

“சரி, சரி ” என்றார் அவரும் சிரித்துக் கொண்டே. இளநீர் வந்தது. குடித்தார்கள்.

“நான் ரெட்டியை பாக்க வந்தேன்” என்றார் பரமேச்வரன் . “அவர் தும்கூர் வரை போயிருக்காரு. இன்னிக்கு காலேலதான் போனாரு. கார்ல போறதாலே ராத்திரி வந்திருவேன்னு சொல்லிட்டு போயிருக்காரு ” என்றாள் அவள்.

“நான் எதுக்கு வந்திருக்கேன்னு உனக்கு தெரியுமில்லையா அம்மா?” என்று அவர் கேட்டார்.

“தெரியும்.அவர் சொல்லிருக்காரு. உங்ககம்பெனிலேர்ந்து வாங்கின கடனை திருப்பி கொடுக்கிறதில நாலஞ்சு மாசமா பிரச்சினை இருக்குன்னு. உங்க கம்பனிலேர்ந்து எப்ப பணம் கொடுப்பீங்கன்னு ஆட்கள் வந்து கேட்டுக்கிட்டே இருக்காங்க.” என்றாள் திலகா. ” ஆனா அவா யாரும் பணத்தையும் இதுவரை பாக்கலை. ரெட்டியையும் பாக்க முடியலை. இல்லையா?”

“அதுக்கு என்ன செய்யறது? அவரு ஒருத்தர்தான் பண விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கு. அதுக்காக எல்லா இடத்துக்கும் போய் சுத்தி அலஞ்சு பணம் வருமான்னு பாக்கறாரு” என்றாள்.

“சரி. ரெட்டியின் பிஸினெஸ் பத்தி எல்லா விஷயமும் தெரியுமா? உன் மீது இருக்கிற அக்கறையினாலே கேக்கறேன். நான் வரச்சேயே உன் புருஷனை பார்ப்பது நிச்சயம் இல்லேன்னு தான் நினைச்சிண்டு வந்தேன். உன் புருஷனோட வியாபார விஷயங்கள் உனக்கு எவ்வளவு தூரம் தெரியும்னு எனக்குத் தெரியாது. உண்மையிலேயே நான் பார்க்க வந்தது உன்னைத்தான்.”என்றார் பரமேச்வரன்
“ஸார், நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு தெரியலே. இதுக்கு முன்னாலே உங்களை நான் பார்த்தது கூட கிடையாது. உங்க கம்பெனி பேரை கேட்டதும் பாக்க வந்தேன். நாங்க கடன் பாக்கி வச்சிருக்கிறது உண்மைதான். ஆனா அதுக்காக நாங்க ஏதோ கிரிமினல்னு நீங்க நினைக்கிறீங்களா? இட்ஸ் நாட் பேர் ” என்றாள் திலகா.

“திலகா, நீ கிரிமினல்னு நான் நினைச்சிருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். நான் முன்னாலேயே உன்னிடம் சொன்ன மாதிரி இங்க நான் வந்திருக்கறது உன்னை பாக்கத்தான். நான் உங்க பொண்ணு மாதிரின்னு நீ சொன்னே . அப்படீன்னா என் வேலை கொஞ்சம் ஈஸிதான். நீ கிரிமினல் இல்லே, ஆனா உன் புருஷன் கிரிமினல்தான்.”

“என்னது?”

“ஆமா, உன் புருஷனோட வியாபார விஷயம் உனக்கு எவ்வளவு தூரம் தெரியும்னு எனக்கு தெரியாது. ஆனா இநத வீட்டை அடமானம் வச்சுதான் எங்க கிட்டே கடன் வாங்கியிருக்கார் மிஸ்டர் ரெட்டி. பிசினஸ்ல இதெல்லாம் சகஜம். ஆனா ஒரே வீட்டை பொய் டாகுமென்ட்ஸ் காட்டி ரெண்டு பேர் கிட்டே கடன் வாங்கினா அது பெரிய குத்தம்தான். கிரிமினல் வேலைதான்.”

“நீங்க என்ன சொல்றீங்க? என்றாள் திலகா . அவர் வந்தது முதல் அவள் முகத்தில் காணப்பட்ட வசீகரமான கர்வம் இப்போது கலைந்து போவதைப் பரமேச்வரன் பார்த்தார்.

“ஆமா. ஆனா, நான் எனக்கு , என் கம்பனிக்கு தெரிஞ்சதை மட்டும் உனக்கு சொல்றேன், உங்க வீட்டுல எத்தனை கார் இருக்கு? ரெண்டா?” என்று பரமேச்வரன் கேட்டார்.

“இல்லே. ஒண்ணுதான். அது கராஜில இருக்கு. பெரிய ஆக்சிடென்ட் ஆகி இன்சூரன்ஸ் செட்டில் மென்ட்டுக்காக ரொம்ப நாளா காத்திக்கிட்டு இருக்கோம்” என்றாள் திலகா.

“அதாவது அப்படி உன் கணவர் உன் கிட்டே சொன்னது?”

திலகா அவரை விழித்துப் பார்த்தாள். பிறகு மெல்லிய குரலில் “ஆமா. ஏன் கேக்கிறீங்க ?” என்று கேட்டாள்.

“ஏன்னா அந்தக் காரும் எங்க கிட்டே அடமானம் இருந்தது, அதை நாங்க சீஸ் பண்ணி வித்து கடன்ல கழிச்சு ஒரு மாசம் ஆறது”

திலகா அவள் இருக்கையில் இருந்து எழுந்து விட்டாள். அவள் முகத்தில் இப்போது பயம் தெரிந்தது.

“இதோ பாரம்மா, உன்னோட அதிர்ச்சியையும், பயத்தையும் பார்த்தா உன் கணவர் எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லலைன்னு நன்னாவே தெரியறது.”

“பிசினஸ்ல கொஞ்ச நாளா கஷ்டம்னு மட்டும்தான் சொன்னார். கடன் கொடுத்தவங்க வந்தா கொஞ்ச நாள் நீதான் மேனேஜ் பண்ணனும்னு சொன்னாரு.ஆனா கடைசில இநத மாதிரி ஏமாத்துவார்னு நான் கனவுல கூடஎதிர்பார்க்கலே” என்றாள் திலகா.

“உனக்கு அப்பா, அம்மா, யாராவது..”

“ரெண்டு பேரும் இறந்துட்டாங்க. நான் ஆதரவு இல்லாதவங்கறதுனாலே அவர் கொஞ்சம் …” என்று பேசிக் கொண்டிருந்தவள் சட்டென்று ஆங்கிலத்துக்கு மாறினாள். “என் மீது அதிகமாகவேஅவரது அதிகாரத்தைச் செலுத்த ஆரம்பித்தார். வீட்டுக்குள் இருந்து கொண்டே வரும் ஆட்களிடம் என்னைப் பேச அனுப்பினார். அவர்களின் கவனம் சிதறும்படி நான் நடந்து கொள்ள வேண்டும் என்று உத்திரவிட்டார்.” பேச்சை நிறுத்தி விட்டு திலகா இரு கைகளாலும் கண்களை மூடிக் கொண்டாள். அவள் உடம்பு குலுங்குவதிலிருந்து அழுவது தெரிந்தது.

பரமேச்வரன் அவள் அழட்டும் என்று விட்டு விட்டார். சில நிமிஷங்கள் கழிந்தன

சற்றுக் கழித்து அவள் முகத்திலிருந்து கைகளை எடுத்தாள். “ஐ’ம் ஸாரி ” என்றாள். புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். “ஒரு நிமிஷம்” என்று அவரிடம் சொல்லி விட்டு உள்ளே சென்றாள். திரும்பி வரும்போது முகத்தைத் திருத்தியிருந்தாள். ஸாரி வயிற்றுக்கு மேல் ஏறியிருந்தது.

திலகா அவருக்கு எதிரே வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“எனக்கு ஒரே குழப்பமா இருக்கு” என்றாள். “நான் ஏமாந்தேங்கிறதை விட ஏமாத்தப்பட்டேங்கிறதைத்தான் என்னால தாங்க முடியலே”

“எனக்கு புரியறது. நான் உன்கிட்ட மனம் விட்டு பேசலாமா? இது பெர்சனல் லெவல்லதான். நாட் அபீசியல்.”

அவர் தொடர்ந்தார்:” நேத்தி என் ஆபிசிலிருந்து இங்க வந்துட்டுப் போன பசங்க உன்னை பத்தி பேசறதை கேக்கும்படியா ஆச்சு. அவமானமா எதுவும் சொல்லலை. ஆனா, கோபால் ரெட்டி ஒரு கிரிமினல் மைண்டோட அவன் மனைவியை கூட உபயோகிக்கிறானோன்னு எனக்கு சந்தேகம் வந்தது. இந்த உபயோகம்கிற வார்த்தையை நான் ரொம்ப ஜாக்கிரதையாத்தான் உன்கிட்டசொல்றேன். அவன் செய்ய நினைச்சது, உன்னை வைத்து மத்தவாளை , அது கொஞ்ச நாளைக்குத்தான்னாலும், ஏமாத்தறது பத்தி.ஆனா நீ நினைச்சு நடந்துண்டது அவனுக்கு உதவி செய்யறது பத்தி நிஜமா அவனுக்கு உன்னோட உதவி தேவைன்னு அவன் நினைச்சிருந்தா, தன்னோட எல்லா கஷ்டங்களையும், அது சம்பந்தமான உண்மைகளையும் சொல்லியிருப்பான்.இது மாதிரி மூடி மறைக்கணும்கிற அவசியம் இல்லே.”

திலகா எதுவும் பேசாமல் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“நான் சொல்றதெல்லாம் நீ அப்படியே வேத வாக்கா எடுத்துக்கணும்கிறது இல்லே. எனக்கு உன்னை பத்தி எதுவும் தெரியாது, இந்த சிக்கல் சமாச்சாரம் தவிர. நீ கலங்கறதைப் பார்த்ததும், கல்மிஷம் இல்லாதவள்னு தோணித்து. அதனால என்னோட அனுபவத்துக்கும் அறிவுக்கும் பட்டதை உன்னிடம் சொல்லலாம்னுநினைக்கிறேன்.”

“நீங்க எதுக்கு சுத்தி வளைச்சு பேசறீங்க? தாராளமா உங்க மனசுக்கு பட்டதை சொல்லுங்க.. பெரியவங்க நீங்க. இங்க வந்திருக்கவே வேண்டிய தில்லே. உங்க ஆபிஸ் ஆட்கள் இருக்காங்க. போலீஸ் இருக்கு. நீங்க ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, என் புருஷனை உங்க இடத்துக்கு கூட்டிகிட்டு வந்திருப்பாங்க. அதை எல்லாம் செய்யலே நீங்க” என்று தழதழத்தாள்.

“நாளைக்கு நீ என்ன செய்யப் போறேன்னு எனக்கு தெரியாது. கணவன் செஞ்சது பிடிக்கலேன்னு சினிமால வேணும்னா மறுநாள் கதாநாயகி அவனை விட்டுட்டு போயிடலாம். ஆனா நாம வாழற தினசரி வாழ்க்கையிலே இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்.”

“ஆனா இன்னிக்கு எனக்கு தெரிஞ்சதை எல்லாம் நாளைக்கு கேக்கத்தான் போறேன். அவரை தேடி வர்றவங்களை இவ்வளவு நாள் போய் பார்த்து பேசின மாதிரி இனிமே செய்யப் போறதில்லேன்னு சொல்லப் போறேன்” என்றால் திலகா உறுதியான குரலில்.

பரமேச்வரன் “செய்யக் கூடாத ஒரு காரியத்தை தெரியாம செஞ்சிருக்கலாம். ஆனா தெரிஞ்சதுக்கு அப்புறம் அதை செய்ய மாட்டேன்னு தைர்யமா நிக்கணும். கஷ்டம் வரும் போது, எதிர்த்துநிக்கறதுதான் ஒருத்தனுக்கோ ஒருத்திக்கோபெருமை.முன்னால அனுபவிச்ச சௌகர்யம், சுகம் எல்லாம் எச்செலை மாதிரிதான்.யாரோ எறிந்த எச்சல் இலையை எடுத்து தன்னோட சாப்பாடை வச்சு சாப்பிடறது நம்மோட தன்மானத்துக்கே செய்யற அவ மரியாதை..”

திலகா அவரிடம் “நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு நல்லாவே புரியுது” என்றாள்.

“என் பொண் வசந்தாவுக்கும் உன்னை மாதிரிதான் கஷ்டம் இருந்தது. ஆனா அவள் புருஷன் அவளை உடம்பாலும் மனசாலும் போட்டுப் படுத்தினான். போறாததுக்கு சின்ன குழந்தை வேறு கையில. பொறுத்துபாத்துட்டு, கடைசியில் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்துட்டா. இப்போ ஸ்கூல் டீச்சரா இருக்கா . என் சப்போர்ட் இல்லாட்டா கூட அவ தனியாவந்திருப்பா, ஏதோ ஒரு ஸ்கூல்ல டீச்சரா வேலை பாத்துக் கொண்டிருப்பா” என்று சிரித்தார்.

“என்னாலே நம்ப முடியலே. ” என்றாள் திலகா கண்களை அகல விரித்துக் கொண்டு. “நீங்கல்லாம் கொஞ்சம் ஆர்த்தடேக்ஸ்தானே…”

பரமேச்வரன் மேலும் பேசினார். ” மனுஷத் தன்மை, மரியாதைன்னு வரும்போது, யாரும் பழமைன்னோ புதுமைன்னோ கட்டிண்டு அழறதில்லே. படிச்சவன், மடையன்னு கூட இநத விவகாரங்கள்ல வித்தியாசம் குறுக்க வர்றதில்லே. நான் எங்க அம்மா, அப்பாவோட இருந்தப்போ எங்க ஆத்தில ஒரு வேலைக்காரி தினம் வந்து வேலைபார்த்துண்டு போயிண்டிருப்பா. அவ புருஷனுக்கு அப்படி ஒரு சீட்டு பைத்தியம், போதாதுக்கு குடி வேறே. அதனால அவன் வேலைன்னு கைல ஏதோ திராபையை வச்சிண்டுஅதிலேர்ந்து பணம் வரப்போ எல்லாத்தையும் காலி பண்ணிடுவான்.ரெண்டு பேருக்கும் சண்டை வரப்போ அவன் அவளை போட்டு அடிப்பான் கண்ணு மண்ணு தெரியாமன்னுசொல்லி சில நாள் அவ எங்கம்மாகிட்ட வந்து அழுவா. திடீர்ன்னு ஒரு வாரம் வேலைக்கு வரலை. எங்களுக்கும் ஒரு விஷயமும் தெரியலை. அப்புறம் ஒரு நாள் வந்து வழக்கம் போல வேலை பாக்க ஆரமிச்சா. எங்கம்மா அவளுக்கு காப்பிய கலந்து குடுத்திண்டே கேக்கறா, ஏண்டி பொன்னம்மா, எங்கே ஒரு வாரமா வரலைன்னு. போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தேங்கிறா. எல்லாருக்கும் தூக்கி வாரி போட்டது. என்னடி என்ன உளர்றேன்னு அம்மா கேட்டா. பின்ன என்னாம்மா , ஒரு நாளபாத்தப்பில எல்லா வீட்டு வேலையும் முடிச்சுட்டு வீட்டுக்கு போய் அடுப்பை வச்சு சோத்தை பொங்கலாம்னா , அப்ப பாத்து குடிச்சிட்டு வீட்டுக்கு வரான். சரி பணம் காசு வரதில்லே, நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு பேசாம வேலைய பாத்துக்கிட்டு இருந்தா, இன்னிக்கி யாரோட படுத்துகிட்டு இருந்து இவ்வளவு நேரம் களிச்சு வந்து சோறாக்கறேன்னு வம்புக்கு இழுக்கறான் பாவி. ரெண்டு நாள் பாத்தேன் பொறுக்கவே முடியலே. மூணாவது நாள் அவன் வரதுக்கு முன்னாலே கட்டிலுக்கு அடியில போட்டிருந்த வெட்டரிவாளை எடுத்து பக்கத்திலே வச்சுக் கிட்டேன் .வந்தான். பினாத்தினான். சீட்டு பிடிக்கற கையை பாத்து ஒரு வீசு வீசினேன். ரத்தம் சொட்ட சொட்ட கை அறுந்து தொங்கிச்சு. ஐயோ, ஐயோன்னு கதறிக்கிட்டு வெளியே ஓடினான். போலிஸ்காரங்க வந்தாங்க. விசாரிக்க கூட்டிகிட்டு போனாங்க . பக்கத்தில இருந்தவங்க எல்லாரும் சேந்து அவன் பெரிய குடிகாரன், எங்கயோ போய் குடிச்சு சண்டை போட்டு அடி பட்டுகிட்டு வந்திருக்கான்னு சாட்சி சொன்னாங்க. அதனாலே போலீஸ்ல என்னைய நேத்தி வெளில விட்டுட்டாங்கன்னு பெரியகதையா சொல்றா. எங்க எல்லாருக்கும் வாய் அடைச்சு போச்சு.” என்றார்.

“நான் வசந்தாவும் இல்லே. பொன்னாம்மா போலயும் ஆக முடியாது ” என்றாள் திலகா.

பரமேச்வரன் கனிவுடன் அவளைப் பார்த்தார்.

“நாம இல்லேன்னு நினச்சிண்டா இல்லேதான். இருக்குன்னு நினச்சிண்டா ரொம்பவே இருக்குதான்.” என்றார் பரமேச்வரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *