மூன்று கண்கள் !

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 14,760 
 
 

மாலினிக்கு, கொஞ்ச நேரம் அழ வேண்டும் போல இருந்தது. தோழிக்கு என்னவென்று பதிலுரைக்க? இப்படியா சொல்லி வெச்சது போல எல்லாரும் சேர்ந்து அவளைப் படுத்துவர்? சந்தேகமே இல்லை… நாற்பத்தேழில் கிடைத்த சுதந்திரம், ஆண்களுக்கு மட்டும் தான்.
கணினியின் வெண்திரையில், லதிகாவின், “இ-மெயில்’ அவளைப் பதில் கேட்டது.
மூன்று கண்கள் !“பாருடீ… ஒன்ஸ் இன் எ லைப் டைம் ஆப்பர்சூனிட்டி… பத்மாவிலிருந்து, சரளா வரை, ஒவ்வொருத்தர் அட்ரசும் கண்டுபிடிக்க நான் பட்டபாடு… இருபது வருஷத் துக்கப்புறம், நாம எல்லாரும் ஒண்ணா லூட்டி அடிக்கப் போறோம். ஜெய்ப்பூர், சிம்லான்னு கலக்கப் போறோம். முன்னால, நாம காலேஜ் டூர்ல கலக்கின அதே இடங்களுக்கு… எல்லாரும், “எஸ்’ கொடுத்துட்டாங்க. எவ்ரிதிங் அரேஞ்ஜ்ட். இந்த இருபதாம் தேதி புறப்படறோம். உனக்கும் சேர்த்துத்தான் இடம் போட்டிருக்கு. எதுக்கும், ஒரு ஓ.கே., மெயில் கொடுத்திடு… பை….
இந்த ஐடியாவை லதிகாவிடம் போட்டுக் கொடுத்ததே மாலினி தான். இப்ப அவளாலேயே வர முடியாதுன்னு சொல்ல வேண்டியிருக்கு.
மகள், கணவன், மாமனார் என்று எந்நேரமும் இயங்குகிறவளுக்கு, இதுவும் வேணும், இன்னமும் வேணும்… மனசு கெக்கலி பண்ணிற்று.
“நடந்தது நிஜம் தானா?’ அவளால் நம்ப முடியவில்லை.
நேற்று மாலை —
கம்பெனியிலிருந்து திரும்பிய கணவர் கணேசனிடம், டூர் பற்றி சொல்ல வாயெடுத்த போது, “மாலு… சி.சி.ஐ.ஈ., அடுத்த எக்சாமுக்கு அப்ளை பண்ணிட்டேன்!’
“அய்யோ… அப்ளை பண்ணிட்டீங்களா… அது பத்தி நாம டிஸ்கஸ் பண்ணவே இல்லையே இன்னும்?’
“அதான் நீ இருக்கீயே, அப்புறம் என்ன கவலை… போன வருஷம், எல்லா ஹெல்பும் நீ தானே பண்ணினே… நாளையிலேர்ந்து உன் வேலை தொடங்குது. ரெண்டு மாசம்… அவ்வளவு தான். வெற்றி நமதே!’ எனறு சொல்லி விட்டார். இனி என்ன சொல்றது… என்னத்தை கேக்கிறது? மெல்ல சொல்லிப் பார்க்கலாமா… அடுத்த வருஷம் கூட எழுதலாமேன்னா, கேட்க மாட்டார். வந்த ஸ்பிரிட் போயிடுச்சு உன்னாலம்பார்…
அதற்குள் மகள் சங்கீதா, அடுத்த குண்டைப் போட்டாள்.
“மாம்… புராஜக்டில் பர்ஸ்ட்டா வந்தேனில் லையா… டான்சுலேயும் ஒரு கை பாருன்னாங்க கமலி டீச்சர். அதான், பேர் கொடுத்திட்டேன். அடுத்த வாரம் பங்ஷன். நீ தான் எல்லா ஹெல்பும் பண்றே…’
“அடிப்பாவி… என்கிட்டே ஏதும் கேக்க வேணாமா?’
“உன்கிட்ட கேட்டா, என்ன மறுக்கவா போறே… என் செல்ல அம்மா?’
“வரவர எல்லாம் உன் இஷ்டம்ன்னு ஆயிப்போச்சு… போய் முடியாதுன்னு சொல்லிடு!’
“நத்திங் டூயிங். நாளையிலேர்ந்து ரிகர்சல். தயாரா இரு…’
இவள் சொன்னதை கொஞ்சமாவது பொருட்படுத்தினால் தானே!
இந்த பக்கம் வந்தால், மாமனார் அவர் பங்குக்கு, “மாலினி… இங்க வாம்மா!’ என்றார்.
“சொல்லுங்க மாமா…’
“ஒரு ஹெல்ப் பண்ணணுமேம்மா… அடுத்த வாரம் கொல்கத்தாவுல, எழுத்தாளர் மாநாடு இருக்கு. நாளைக்கு நான் கிளம்பணும். தோட்டத்துல தேங்காய் வெட்டற வேலை இருக்கு. கிணத்தில தூர் வார்றதுக்கு ஆள் வருது. கொஞ்சம் மேனேஜ் பண்ணிக்கிறீயா?”
“சரி மாமா…’ என்று சொல்லத்தான் முடிந்தது.
சரி, சரி… எல்லாம் நம் தலை எழுத்து. உழைத்து என்ன? எல்லாம் வரிசையாய் வேலை வாங்கத்தான் காத்திருக்காங்க.
ரிப்ளையை கிளிக் பண்ணி, தோழிக்கு பதில் டைப் பண்ண ஆரம்பித்தாள்.
“சாரிடா… வீட்டில் சில வேலைகள். நான் தான் சொன்னேன் இந்த யோசனையை என்றாலும், என்னால உங்களோட கலந்துக்க முடியல… ஆல் த பெஸ்ட்!’
“சென்ட்’ பட்டனை கிளிக் செய்யப் போகும்முன், “டக்’கென்று, “ஹேங்’ ஆகி விட்டது கணினி.
எரிச்சலுடன் எழுந்தாள். போனில் சொல்லலாம் என்றால், வறுத்தெடுத்து விடுவாள் லதிகா. அப்புறம் வந்து மெயிலை அனுப்பலாம்.
சாயங்காலம் வரை, ஒன்று மாற்றி ஒன்றாக வேலைகள்.
அப்போது தான் அந்த ஆனந்த அதிர்ச்சி. ஒன்றன் பின் ஒன்றாக, “”அம்மா… டான்ஸ் புரோகிராமில், என் பேரை கேன்சல் பண்ணிட்டாங்க. சரி போங்கடான்னு விட்டுட்டேன். அடுத்த வாட்டி பார்த்துக்கலாம்மா…” என்றபடி வந்தாள் சங்கீதா.
முகத்தைப் பார்க்காமலேயே கிச்சனுக்கு போனாள்.
கம்பெனியிலிருந்து கணேசனின் போன் கால் வந்தது.
“”மாலுக்குட்டி… எனக்கென்னமோ கொஞ்சம் யோசனையா இருக்கு. இப்ப பரீட்சை எழுதினா, வீணா உடனே கம்பெனி மாறணுமேன்னு, அப்ளிகேஷனை கிழிச்சுப் போட்டுட்டேன். நீ அடிக்க வர மாட்டீயே…” கெஞ்சினான்.
இந்த பக்கம் மாமாவும், கையில் ஏதோ ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு, “”ஒண்ணுமில்லே, மாநாட்டை ஒத்தி வெச்சுட்டாங்கம்மா… இனி, மத்த வேலைகளை நான் பார்த்துக்கறேன்!”
மூடிய அதே வேகத்தில் திறந்த கதவுகள்!
நம்பவே முடியவில்லை… மனசுக்குள் மறுபடி சிறகடித்தல்கள் சப்தம் அவளுக்கே கேட்டது.
நல்லவேளை… கம்ப்யூட்டர் காலை வாரியது. இப்ப ஆன் செய்து பார்க்கலாம். எஸ் மெயில் கொடுத்திரலாம். சாதுவாய் மேஜை மேல் அமர்ந்திருந்த, “தகவல் தேவன்’ அருகில் வந்தாள்.
போட்டதும் திரை திறந்தது. விட்ட இடத்திலேயே. சட்டென்று அவளுக்கு எல்லாம் புரிந்து போயிற்று. காலையில் ஸ்கூல் போகும்முன், கம்ப்யூட்டர் பக்கம் சங்கீதா ஒரு நிமிடம் வந்தது ஞாபகத்தில் நின்றது.
“அதான்… விட்ட இடத் திலேயே ஓபன் ஆகுதே!’ பார்த்திருப்பாள்; மத்தவங்க கிட்டேயும், அம்மாவுக்கு இப்படி ஒரு பிளான் இருந்திருக்கு என்ற செய்தியை கொடுத்திருப்பாள்.
அதான் உடனே சுதாரிச்சு, “இத்தனை அன்பா என் மேல… இத்தனை விட்டுக் கொடுத்தலுக்குத் தயாரா இருக்கிறவங்க கூடவா நான் இருக்கேன்?’ வைரசாக விழுங்கிற்று அந்த பிரமிப்பு.
“”என்னம்மா மெயில்ல?” என்று அருகில் வந்தாள். ஒன்றும் தெரியாதவள் மாதிரி நடிக்க, மகள் சிரமப்படுவதைப் பார்த்து, சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது மனதில்.
எட்டிப் பார்க்கிற மாதிரி பார்த்துவிட்டு, “”அட… சூப்பர் கெட் டூ கெதர்… அம்மா… போயிட்டு வாம்மா. என்னம்மா வர முடியாதுன்னு பதில் அடிச்சு வெச்சிருக்கே… அதை டெலிட் பண்ணும்மா. ஒரே வார்த்தை ஓ.கே., கொடு…”
திரும்பி அவள் முகத்தைப் பார்த்தாள் மாலினி. அவள் கண்ணுக்குள், அதே போல், கணேசனுடையதும், மாமாவுடைய முகங்களும் தெரிந்தன.
இந்த பாசம்,
இந்த அன்பு… இதற்காக எதையும் செய்யலாமே!
ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுப்பதுதானே வாழ்க்கை!
அவள் டூர் செல்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்து விட்டனர் அவள் குடும்பத்தினர்.

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

1 thought on “மூன்று கண்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *