(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘டிங் டிங் டிக்! டிங் டிக்! டிங் டிங் டிக்’
இடக் கரம் பற்றியிருந்த சிற்றுளியின் தலையில் விழும். சுத்தியல் அடிகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது சிற்றுளியின் கூரிய முனை மேடையில் நிறுத்தப்பட்டிருந்த கருங்கற்பாறையைக் கண்கவரும் சிலையாக்கிக் கொண்டி ருந்தது. அகல் விளக்கைக் கரங்களில் ஏந்தி அழகே ருவான அந்தக் காந்தச் சிலையை பருவப் பூரிப்பில் திளைத்து நிற்கும் அந்தப் பெண்ணுருவச் சிற்பத்தை ஒரு முறை தன் ஒளிமிகுந்த பார்வையால் கண்ணோட்டமிட்ட கருப்பண்ணன் நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் தன் தோளில் கிடந்த கைத்தறித் துண்டால் துடைத்துக் கொள்கிறான்.
சிற்றுளியைக் கீழே வைத்துவிட்டு, அதைவிடச் சிறிய உளியொன்றை எடுத்தான்.
‘டிங்டிங்! டிங் டிங்!’ சிற்பத்தின் மூக்கில் துளை போட ஆரம்பித்தான். சுத்தியலின் அடிகள் உளியில் சற்று பலமாக விழுந்தாலும் போதும் தான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பாழாகிவிடும் என்பதை உணர்ந்த கருப்பண் ணன் மிகவும் கவனமாக எடுப்பாக நிற்கும் அந்தக்கிளி முக்கில் துளைபோடும் பணியில் ஈடுபட்டான்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமையப்பெற்றிருந்த அந்தச் சின்னஞ்சிறிய குடிலின் வாயிலில் மேடை அமைத்து, ஏழு கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்த மலையிலிருந்து ஒரு கருங்கற்பாறையைக் கொண்டு வந்து மேடை மீது நிறுத்திட அவன் பட்டப்பாடு சொல்லி முடியாது.
ஓயாமல் உழைத்துப் பணம் சேர்த்தான். ஆறு மாதங் களுக்கு முன்புதான், ஆட்களுக்கும் வாகனத்திற்கும் நிறையக் கூலி கொடுத்து பாறையை மேடையேற்றினான்.
அந்தக் கருங்கற்பாறை இன்று அழகே உருவான பெண் வடிவச் சிற்பமாகத் திகழ்கிறதென்றால் – கருப்பண்ணனின் விடா முயற்சியும் கைத்திறனுமே காரணம்.
பிற்பகல் இரண்டரை மணிக்குத் துவங்கும் ‘டிங் டிங் டிக்’ ஒலி மாலை நான்கரை மணி வரையில் தொடரும்.
இன்று நேற்றல்ல கடந்த ஆறுமாதங்களாக இதே நிகழ்ச்சி. இன்று….
கருப்பண்ணனின் தோற்றத்திலே ஒரு கம்பீரம் ஐம்பத்து இரண்டு வயதிலும் கட்டுக்குலையாத உடல் அமைப்பு! ஆள் சற்றுக் குள்ளம். உள்ளமோ கட்டி வெல்லம்!
மூக்கில் துளை விழுந்து விட்டது. லாவகமாக உள்ளே வெளியே இழுத்தாள்.
அந்த மூக்கைத் தடவிப் பார்க்கிறாள்.
அவன் உடலெங்கும் புல்லரிப்பு.
மகிழ்ச்சிப் பெருக்குக் கரை புரண்டு ஓடுவது போன்ற தோர் உணர்வு. மறுகணம்…
கருப்பண்ணனின் விழிகள் பணிக்கின்றன. நீர் முட்டிய விழிகளைத் துடைத்து விட்டு,
“அம்மா! உனக்கு மூக்குக் குத்திட்டேம்மா! மூக்குக் குத்திட்டேன்! ஒத்தைக் கல் மூக்குத்தி வேணும்’னுதானே கேட்டே? வாங்கித் தர்றேன்’மா. கண்ணாடிக் கல் மூக்குத்தி இல்லே. வைரக்கல் மூக்குத்தியா வாங்கிப் போடுறேன்’மா. வர்ற பதினாறாம் தேதி உன் பிறந்தநாள் வருதும்’மா! அன்னிக்கு உன் மூக்குல வைரக்கல் மூக்குத்தி போறதம்’மா! வைரக்கல் மின்னப் போகுது!”
உணர்ச்சி வயப்பட்டுக் கருப்பண்ணன் பினாற்றிக் கொண்டிருந்தான்.
எவ்வளவோ துன்பச்சுமைகளைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை இழந்து விட்டிருந்தது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவன் செய்த ஒரு காரியத்தால் தான் இந்த நிலை அவனுக்கு ஏற்பட்டது என்று பலர் பேசிக் கொள்கிறார்கள். மனச்சாட்சியை விற்றுவிட அவன் விரும்பவில்லை! இது குற்றமா?
அன்று அவன் ஒரு சிற்பி. கோவில் சிலைகளை அமைத் திடும் பணியில் ஈடுபட்டிருந்த நால்வரடங்கிய குழுவில் அவனும் ஒருவன். ஆனால், தனிப்போக்குடையவன், தெய் வீகக்களை என்பார்களே – அப்படிப்பட்ட சிற்பங்களை உருவாக்குவதிலேயே அவன் மனம் லயித்திருந்தது.
கோரமும் வெறியாட்டமும் பக்திக்கு வழிவகுக்க முடியாது எனும் கொள்கையை மிகவும் வலுவாகப் பெற்றி ருந்தது அவன் நெஞ்சம்.
அன்றொரு நாள்…
கருணையே வடிவான சிற்பமொன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தான் கருப்பண்ணன். வரைபடச் சுருளும் கையுமாக அங்கு வந்தார் தலைமைச் சிற்பி.
‘கருப்பண்ணா…!” தலைமைச் சிற்பிதான் விளித்தார்.
‘ஐயா…’ பணிவு காட்டியே பழகிப்போன கருப்பண் ணனின் குரல்.
‘உன்கிட்ட ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்கப் போறேன்’
‘சொல்லுங்கய்யா’ உளியைக் கீழே வைத்து விட்டு- நிமிர்ந்தான் கருப்பண்ணன்.
வரைபடச் சுருளைப் பிரித்துப்போட்டார் தலைமைச் சிற்பி. அதில் ஓர் ஓவியம்.
‘கருப்பண்ணா. இதுதான் பெரியாச்சி’ வடிவம். இதை நீதான் சிலை வடிவமாக்கணும். என்று சொல்லிவிட்டுக் கருப்பண்ணனை நோக்கினார்.
அவனோ ஓவியத்தை வைத்த விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘உருட்டும் விழிகள்’ தொங்கும் நாக்கு. கோரமான பற்கள் – இத்தியாதி.
கருப்பண்ணனின் முகச்சாயல் மாறியது.
‘குழந்தை பிறந்ததும் பெரியாச்சி சிலைக்கு முன்ன கொண்டார்ந்து போட்டு வேண்டுதலை நிறைவேற்று வாங்க. அதனாலதான் இந்தச் சிலைக்கு ஆர்டர் வந்திருக்கு’ தலைமைச் சிற்பி விளக்கம் சொன்னார்.
‘ஐயா, பிறப்பெடுக்கிற ஒரு உயிர் முதன் முதல்’ல பார்க்கப்போற ஒரு சிலையை இந்தக் கோலத்துலயா செதுக்கணும்? அமைதியும் காந்தமும் தவள்ற எத்தனையோ சிலைங்க இருக்கும் போது..’ கருப்பண்ணன் முடிக்கவில்லை.
‘அதுதான் சம்பிரதாயம்!’ என்று முற்றுப்புள்ளி வைத்தார் தலைமைச் சிற்பி.
அந்தச் சிலையை வடிக்கத் தன்னால் ஆகாது என்று முடிந்த முடிவாக முடிவு கூறினான் கருப்பண்ணன். அதன் விளைவு…?
சிற்பிகள் குழுவிலிருந்து விலக்கப்பட்டான். அன்பு மனைவி. அருமை மகள் இருவரையும் அழைத்துக் கொண்டு வேறு இடம் சென்று பிழைப்பைத் தொடர்ந்தான். சிற்றுளீயைக் கரமேந்தி சிலை வடித்த சிற்பி – கூர் உளியைக் கரம்பற்றி பால் மரப்பட்டையைச் சீவினான்.
பாறையைச் செதுக்கி அதில் கலையழகைக் கண்டவன் பால்மரப் பட்டையைச் சீவி அதில் தன் வாழ்வின் வள அழகைக் கண்டான்.
ஆண்டுகள் அழிந்தன.
கருப்பண்ணனின் மகள் கோகிலம் வளர்ந்தாள்; பருவப் படியில் எழில் சேர்த்து நின்றாள். பதினாறு வயதுதான் என்றாலும் வயதைக் கடந்த வளர்ச்சி. நல்ல அழகி குணக் குன்று.
வையாபுரி என்பாரின் மகனுக்குக் கோகிலத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கருப்பண்ணனிடம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும், பெண் கேட்டு வரு பவர்களிடம் ‘காலம் வரட்டும்’ என்று சமாதானம் சொல்லி வைப்பான்.
ஆனால்,
‘காலன்’ வருவான் என்று அப்போதைக்குக் கருப்பண்ணன் அறிந்திட நியாயமில்லைதான்.
காண்டாவும். வாளிகளும், உளியும் பட்டச்சாக்குமாக அதிகாலையில் பிரட்டுக்குப் புறப்பட ஆயத்தமாக நின்று கொண்டிருந்த கருப்பண்ணனை நோக்கி கோகிலம் வந்தாள். மகளை ஒருமுறை பார்த்தான் கருப்பண்ணன்.
“என்னம்மா?”
”அப்பா, வந்து அடுத்த புதன்கிழமை என் பிறந்த நாள் வருது” கொஞ்சும் குரலில் தயங்கித் தயங்கித் தன் பிறந்தநாளை நினைவு படுத்தினாள் கோகிலம்.
‘ஓ! புரியுதம்மா. உனக்கு மூக்குத்தி செய்யக் கொடுக்கணுமில்ல. வேலை முடிஞ்சு வந்ததும் ரெண்டு பேருமாகப் போய்ப் பத்தரைப் பார்ப்போம்!” என்று இதமாகச் சொல்லிக் கொண்டே பிரட்டுக் களம் நோக்கிப் புறப்பட்டான் கருப்பண்ணன்.
கிழக்குச் சூரியன் உச்சிக்கு வந்து மேற்றிசை நோக்கிச் சரிந்து கொண்டிருந்த வேளை.
வேலை முடிந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்த கருப்பண்ணனின் காதில் பயங்கரச் செய்தி ஒன்றை தூக்கிப் போட்டான் துரைச்சாமிகங்காணி.
‘கோகிலத்தைக் காணோம்’ என்ற செய்தி.
கருப்பண்ணனைத் தூக்கிவாரிப் போட்டது. காட்டுத் தீயென இல்லம் நோக்கி விரைந்தான். அழுது துடிக்கும் மனைவியைப் பல பெண்கள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டான்.
துணி வெளுக்க ஆற்றுக்குச் சென்றிருக்கிறாள் கோகிலம். நேரமாகியும் வீடு திரும்பாத கோகிலத்தைத் தேடிச் சென்றிருக்கிறாள் கருப்பண்ணனின் மனைவி. துவைத்த துணிகள் வாளியிலும், அழுக்குத் துணிகள் கல்லின் மேலும் இருக்கக் கண்டு தேடியிருக்கிறாள் கோகிலத்தின் இடக்கால் சிலிப்பர் மட்டும்தான் கிடைத்தது என்று கூறி ஒப்பாரியே வைத்துவிட்டாள் கருப்பண்ணனின் மனைவி.
‘கருப்பண்ணன் மகள் ஓடிப்போய் விட்டாள்!’ எனும் காரசாரப் பேச்சுக்கள்.
‘தட்டுக் கெட்டவள்! தடுக்கி விழுந்தவள். தோட்டத்துக்கே தலைகுனிவைத் தந்துவிட்டாள்!’ என்ற கூரான வார்த்தைகள்.
பெண்கேட்டு ஏமாந்துப் போனோரின் வசை, புராணமாக உருவெடுத்தது.
கருப்பண்ணன் சிலையானான்!
‘கருப்பண்ணா! கவலைப்பட்டுக் குத்துக் கல்லாட்டம் நின்னா என்ன அர்த்தம்! வா, மேற்கொண்டு ஆக வேண்டியதைக் கவனிப்போம்!’ வையாபுரிதான் இப்படிச் சொன்னார்.
‘இல்லை! நான் கவலைப்படலே! நான் எதுக்காசுக் கவலைப்படணும்? என் மகள் மாசு மருவில்லாத மாணிக்கம்! சொக்கத் தங்கம்!’ என்று முழங்கிக் கொண்டே வையாபுரியை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையம் நோக்கி விரைந்தான்.
கருப்பண்ணன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் பன்றி வேட்டைக்குச் சென்றிருந்த வேங்கடம், வேர்க்க விறுவிறுக்க அங்கு வந்து சேர்ந்தான்.
தாங்கள் பன்றி மலையில் வேட்டையாடிக் கொண்டிருக்கையில் துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டதாகப் போலீசாரிடம் தெரிவித்துவிட்டு நகர்ந்தான்.
கருப்பண்ணனும் வையாபுரியும் இது கேட்டுத் திடுக்கிட்டனர்.
அங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அடர்த்தியானக் காட்டுக்குத்தான் பன்றிமலை என்று பெயர்.
மோப்ப நாய்களுடன் ஊர் காவற்படையினர் புறப் பட்டனர். உடன் செல்ல முற்பட்ட கருப்பண்ணனை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டார் காவலதிகாரி.
இடிந்துபோய் கிலோ மீட்டர்க் கல்லாகக் சமைந்து விட்ட கருப்பண்ணனை மிகவும் பிரயாசைப்பட்டு வீடு சேர்த்தார் வையாபுரி.
கருப்பண்ணனின் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள். உணவு எதுவும் உட்கொள்ளாததால் மயங்கி விழுவதும் விழித்துக் கொண்டால் அழுது புலம்புவதுமாக இருந்தாள்
மாலை மறைந்து இரவு பிறந்து, நள்ளிரவு கடந்து விடிவெள்ளியும் முளைத்துவிட்ட நேரம்.
திடுதிப்பென்று நாய்கள் குரைக்க ஆரம்பித்தன.
நேரம் நகர நகர காலடி ஓசை நெருங்கிக்கொண்டிருந்தது.
ஊர் காவற்படையினரில் நால்வர் ஒரு பாடையைச் சுமந்து வந்து கருப்பண்ணனின் வீட்டு வாயிலில் இறங்கினர்.
அதில்…!
பிணமாகக் கிடந்தாள் கோகிலம்.
மூன்று துப்பாக்கித் தோட்டாக்கள் அந்தப் பொன்னார் மேனியாளைப் பிணக்கோலம் பூணச் செய்திருந்தது.
கருப்பண்ணன் கதறினான்.
அவன் மனைவியோ வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அரற்றினாள். மகளின் கோலத்தைக் காணும் திறனற்று மூர்ச்சித்து விழுந்தாள்.
விழுந்தவள் விழுந்தவள்தான்; மீண்டும் எழவேயில்லை! தாயும் மகளும் ஒரே சமயத்தில் ஒரே பாதையில் தங்களின் இறுதிப் பயணத்தைத் துவங்கினர்.
குடும்பம் எனும் தோப்பு அழிந்து கருப்பண்ணன் தனி மரமானான்.
கோகிலம் ஏன் கொலை செய்யப்பட்டாள்?
காட்டுக்காரனுக்கு உதவி செய்யக் கூடிய எவனோ ஒருவன் கருப்பண்ணன் மீது பகைமை கொண்டு, கோகிலத் தைத் தீர்த்துக் கட்டுவதன் மூலம் தன் ஆற்றாமையை அடக்கிக் கொள்ள, காட்டுக்காரனையே ஏவிவிட்டு அவளைக் கொலை செய்திருக்கிறான் எனும் பேச்சு அடிபட்டதே தவிர கொலைக்கான உண்மைக் காரணம் அந்தப் பன்றி மலையோடு ஐக்கியமாகி விட்டது.
மனக் குழப்பத்துடன் சிறிது காலம் அங்கேயே வேலை செய்துவிட்டு, வேறு இடம் நோக்கிப் புறப்பட்டான் கருப்பண்ணன்.
புதிய இடம், புதிய சூழ்நிலை, பத்து ஆண்டுகளை அந்தச் செம்பனைத் தோட்டத்திலேயே கடத்தி விட்டான். அந்தப் பத்து ஆண்டுகளாக அவன் மனதில் சதா சர்வ காலமும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்த ஒரே சொல் அந்த மூக்குத்திதான்.
தன் மகள் இறுதியாகத் தன்னிடம் கேட்ட அந்த மூக்குத்தியை வாங்கும் அளவுக்குப் பணத்தைச் சேர்த்து விட்டான்.
மூக்குத்தியை வாங்கி என்ன செய்வது ?
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
தன் கற்பனைத் திறத்தால் எத்தனையோ சிலைகளைச் செதுக்கிக் கோயில்களில் நிறுத்தியிருக்கிறான். அவற்றிற் கெல்லாம் பெயர் சூட்டப்பட்டு, தீபதூபம் காட்டிக் கொண் டாடப் பட்டு வரும்பொழுது
தன் மகளுக்கு,
தன் அணுவுக்குத் தோன்றிய ஓர் உயிருக்கு ஏன் சிலை யெடுக்கக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கி நின்றது.
தன் மகளின் சிலைக்குச் சாதாரண மூக்குத்தியையே அணிவிக்க வேண்டும் என்ற முடிவோடு காரியமாற்றினான்.
பக்கத்துப் புதுக்கிராமத்தில் நிலத்தோடு கூடிய சிறிய குடிசையை வாங்கினான்.
குடிசையைச் சுற்றி மண்டிக் கிடந்த செடி கொடிகளை அழித்துச் சுத்தம் செய்தான்.
சுத்தம் செய்து கொண்டிருக்கும் பொழுது அங்கே ஒரு புற்று இருக்கக் கண்டான்.
அது கருநாகப் பாம்பின் புற்று என்பதை அவன் விளங் கிக் கொண்டான்.
அதன் அருகிலேயே தன் மகளின் சிலையை நிறுவுவதற் கான மேடையையும் அமைத்தான்.
காலை மாலை இரு வேளைகளிலும் அந்தப் புற்றின் பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் பாலும் முட்டையும் வைக்கலானான்.
காலியான கிண்ணத்தையும் முட்டை ஓட்டையும் பார்த்திருப்பானே தவிர அந்த அரவத்தை அவன் கண்டதில்லை.
மழைக் காலம் வந்தது.
பாலையும் முட்டையையும் குடிசையின் திண்ணையில் வைத்தான்.
சுமார் ஒன்றரை மீட்டர் நீள கருநாகம் ஊர்ந்து வந்து கருப்பண்ணனின் எதிரே படமெடுத்து நின்றது.
அச்சத்தோடு அதை மிரள மிரளப் பார்த்துக் கொண்டே நின்றான் கருப்பண்ணன். ஒரு வினாடி கழிந்தது. படத்தைச் சுருக்கிக் கொண்டு பால் கிண்ணத்தைக் காலி செய்து விட்டு, முட்டையை ஒரு கொத்துக் கொத்தி உறிஞ்சி விட்டுப் புற்றை நோக்கி ஊர்ந்து மறைந்தது அந்தக் கருநாகம்.
காலம் ஓடியது.
காலையில் கருப்பண்ணனை எழுப்ப அலாரம் தேவைப் படவில்லை.
‘புஸ், புஸ்!’ எனும் அரவத்தின் ஒலி கேட்டே துயிலெழுவான்.
அந்த அளவுக்குப் பாம்போடு பழக்கம் நெருங்கியது. அமைக்கப்பட்டிருந்த மேடையின் மேல் ஒரு பெரிய கருங்கற்பாறையை நிறுத்தினான். இருந்த பணமும் கரைந்தது. கருப்பண்ணன் வேலை தேடி அலைந்தான். சுகாதார இவாகாவில் வேலையும் கிடைத்தது.
மலம் அகற்றும் வேலை. மனம் கோணாமல் வேலையை ஏற்றுக் கொண்டான். பலர் கேலி செய்தனர். மலம் அகற் றும் பணி அவ்வளவு கேவலமான வேலையாம்.
இப்பொழுதெல்லாம் கருப்பண்ணன் என்று விசாரித்தால் அவ்வளவு சீக்கிரத்தில் அடையாளம் சொல்ல மாட்டார்கள்.
‘ஜாமான் கூட்டுக் கிழவன்’ என்று விசாரித்தால் முகவரி கூடத் தேவையில்லை; அழைத்து வந்து வீட்டைக் காட்டுவார்கள் அந்த அளவுக்கு அந்தப் பெயர் பிரபல்ய மடைந்து விட்டிருந்தது அந்தப் புதுக் கிராமத்தில்.
‘ஓய் ஜாமான் கூட்டுக் கிழவா | செலையை செதுக்கி முடிச்சுட்டியா?’ குரல் கேட்டுத் திரும்பினான் கருப் பண்ணன். அங்கே ரெத்தினம் மிதந்து கொண்டிருந்தான். பாதங்கள் தரையில் பரவியிருந்த போதிலும், அவன் உணர்வுகள் எங்கெங்கோ பறந்து கொண்டிருந்தன. அந்த அளவுக்கு ‘சரக்கை’ உள்ளே தள்ளியிருந்தான் ரெத்தினம்.
மாருதம் வீசிடும் அந்த மாலைப் பொழுதிலும் கூட ரெத்தினத்தின் மூக்கில் வியர்வைத் தட்டியிருந்தது.
‘ஏண்டா பொனாதைப் பயலே! கஞ்சாவைப் புகைச் சுட்டு, மாத்திரையை உள்ள இறக்கி விட்டுட்டு ஏண்டா இப்படித் தடுமாறுற’ என்று தன் வயிற்றெரிச்சலைக் கொட்டினான் கருப்பண்ணன்.
‘சும்மா கிட கிழவா! கஞ்சாவைப் பத்தியும். மாத்திரையைப் பத்தியும் உனக்கு என்ன தெரியும்?’ என்று கேட்டுக் கொண்டே சிலையை அண்ணாந்து நோக்கினான்.
‘அட அடெ! மூக்குக் குத்திட்டியா?’
‘ரெத்தினம்! வேலை வெட்டியில்லாம உன்னால எப்படிடா பொழைக்க முடியுது?’ கருப்பண்ணன் வேறு திசைக்கு ரெத்தினத்தை இழுத்தான்.
‘திருடிப் பொழைக்கிறீயா?’ தன் மனதில் உள்ளதைக் கொட்டி விட்டான்.
‘ஓய் கிழவா! அதிலேயும்-ஜாமான் கூட்டுக் கிழவா- என்னைப் பார்த்தா திருடன்னு சொல்றே? அட பைத்தியக்கார ஜன்மமே, கமிஷன்ல என் காலம் ஓடிக்கிட்டு இருக்கு! ஏன் முழிக்கிற? ஓ…புரியலியா? சொல்றேன் கேட்டுத் தொலை! போதைப் பொருளைப் பயன்படுத்தறவன் எல்லாம் அஞ்சடிக்காரன்’னு நீ நெனச்சுக்கிட்டு இருந்தா உன் அபிப்பிராயத்தை மாத்திக்க’ என்று கூறிக் கொண்டே திண்ணையில் போடப்பட்டிருந்த மர ஆசனத்தில் அமர்ந்தான்.
அவன் படுக்கையும் அதுதான்.
ரெத்தினம் தொடர்ந்தான், ‘கிழவா, நாங்க எல்லாம் ஏஜண்டுகள். பெரிய பெரிய இடத்திலே இருந்தெல்லாம் எங்களுக்கு ஆர்டர் வரும். பள்ளிப் பிள்ளைங்ககூட எங்க வாடிக்கைகாரங்க தான். ஆம்பிள்ளைங்க மட்டுமல்ல பொம்பளைங்களும் அதுல அடக்கம். சரக்கு வேணும்கிறவங்க முன்கூட்டியே பணத்தைக் கொடுத்துடுவாங்க. மொத்த வியாபாரிகிட்ட தேவையான சரக்கை வாங்குவோம். அங்கயும் எங்களுக்குக் கமிஷன் உண்டு. அதே சரச்கை நாங்க விநியோகம் பண்ணும் போதும் கமிஷன் கிடைக்கும்! எப்படி என் தொழில் ரகசியம்?’ ரெத்தினம் மிதந்து கொண்டிருந்த போதிலும் வார்த்தைகளைத் தடு மாற்றமின்றி மொழிந்தான்.
கருப்பண்ணனுக்கு ரெத்தினத்தின் விளக்கம் வியப்பைத் தந்தது. ‘ஆமா, இந்த வியாபாரம் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்கும்’னு நினைச்சுக்கிட்டிருக்க? யாருமே வாங்கலேனு வச்சுக்க, அப்புறம் என்னடா செய்வே?’ அர்த்த புஷ்டியுடன் கூடிய ஒரு கேள்வியைக் கேட்டு விட் டோம் என்ற தெம்பில் நிமிர்ந்து நின்றான் கருப்பண்ணன்.
‘அட, ஒண்ணும் தெரியாத மடச்சாம்பிராணியா இருக்கிறீயே கிழவா. ஒண்ணு சொல்றேன் புரிஞ்சுக்க! சைவ சாப்பாட்டையே தின்னுக்கிட்டு இருக்கிற பூனைக்கு ஒரு தரம் மாமிசத்தைக் கொடுத்துப் பாரேன். அப்புறம் சைவம் போய் அசைவம்தான். அதுபோலத் தான் இதுவும்! ஒரு தடவை சுவை கண்டுட்டா போதும்! அப்புறம் சொர்க்கமே அதுலதான் இருக்கும்!’ ரெத்தினம் பேச்சை நிறுத்திக் கொண்டு சப்புக் கொட்டிக் கொண்டான்.
‘கிழவா. ரெண்டு மாசத்துக்குப் போதுமான சரக்குப் பிடிப்பட்டுப் போயிடுச்சு. இப்ப சரக்குக்கு பெரிய ‘டிமாண்டு. இந்த நேரமா பார்த்து சரக்கை வாங்கிப் பதுக்குனாச் ஒட்டிக்கு ரெட்டியா கொள்ளை லாபம் கிடைக்கும்.’ ரெத்தினம் பேசிக் கொண்டே சிரித்தான். அந்தச் சிரிப்போடு ஆசனத்தில் சாய்ந்தான்.
நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றி விட்டு கருப்பண்ணன் சுத்தியலையும் உளிகளையும் எடுத்துக் கொண்டு குடிசைக்குள் நுழைந்தான்.
‘புஸ், புஸ், புஸ், புஸ்!’ அரவத்தின் சீற்றம் கேட்டுக் கருப்பண்ணன் விழித்தெழுந்தான். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு திண்ணையில் இன்னும் உறங்கிக் கொண்டிருந்த ரெத்தினத்தை உசுப்பி விட்டான்.
கட்டிலருகில் பால் கிண்ணத்தையும் முட்டையையும் எடுத்து வைத்து விட்டு வேலைக்குப் புறப்பட்டான் கருப்பண்ணன்.
‘ஓய், கிழவா! நீ வீணா அந்தப் பாம்புக்குப் பால் வார்க்கிறே. ஒரு நாளைக்கு அந்தப் பாம்பே உனக்கு எமனா மாறப்போவுது. வேணும்’னா பார்த்துக் கிட்டிரு வெளியே நின்று பால் கிண்ணத்தில் பார்வையை ஓடவிட்டுக் கொண்டிருந்த ரெத்தினம்தான் இப்படிக் கூறினாள்.
‘அடப்போடா! என்றைக்காவது ஒரு நாள் வரக்கூடிய சாவு எந்த ரூபத்துல வந்தாத்தான் என்னடா? ஒரேயடியா சாவுறது எவ்வளவோ தேவலை’டா. ஆனா, நீ செய்துக் கிட்டிருக்கிற காரியம் இருக்கே, அதுதாண்டா பொல்லாதது! போதைப் பொருளை வித்து ஒரு சமுதாயத்தையே கொஞ்சங் கொஞ்சமாக சாவடிக்கிறியே அதுதாண்டா கொடுமையிலும் பெரிய கொடுமை! என்னமோ பெரிய இன்பத்தையெல்லாம் கஞ்சா கொடுக்கிறதாச் சொன்னியே, அதைவிட பாம்போட நஞ்சு எவ்வளவோ தேவலைடா! கடுமையான நோயில இருந்து மனுசனைக் காப்பாத்த ஒரு மருந்தைக் கண்டு பிடிச்சிருக்காங்களாமே! அது பாம்போட நஞ்சுல இருந்து தான் தயாரிக்கிறாங்க; ஞாபகம் வச்சுக்க!’ சற்றுக் காட்டமாகவே பேசிவிட்டுப் புறப்பட்டான் கருப்பண்ணன்.
ரெத்தினத்தின் முகத்தில் அசடு வழிந்தது,
பிற்பகல் இல்லம் திரும்பிய கருப்பண்ணன், கதவு திறந்தது கிடக்கக் கண்டு திடுக்கிட்டான்.
உள்ளே விரைந்தான் அங்கே?
வாய் பிளந்த நிலையில் இரும்புப் பெட்டி அவனை வரவேற்றது.
‘என்னுள் இருந்த ஐந்நூறு வெள்ளி பறிபோய் விட்டது’ என்று அது சொல்லாமல் கருப்பண்ணனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.
தபால் நிலைய சேமிப்பில் அந்தப் பணத்தைப் போட்டு வைத்திருந்தால் வட்டியோடு கூடிய பாதுகாப்பும் கிடைத திருக்குமே என்ற எண்ணம் அவன் மனதில் ஏற்பட்டிருக்குமோ என்னவோ – அசைவற்று அப்படியே நின்று விட்டான்.
வைர மூக்குத்தி வாங்க வேண்டும், அதை மகளின் சிலைக்கு அணிவித்து ஆசை தீரப் பார்க்கவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தவனின் எண்ணத்தில் மண் விழுந்து விட்டது.
‘இப்ப சரக்குக்கு பெரிய ‘டிமாண்டு’ இந்த நேரமாப் பார்த்து சரக்கை வாங்கிப் பதுக்குனா ‘ஒட்டிக்கி ரெட்டியா’ கொள்ளை லாபம் கிடைக்கும்!’
முதல் நாள் ரெத்தினம் உதிர்த்த வார்த்தைகள் அவன் செவிப்பறைகளைத் துளைத்தன.
தாரை தாரையாகக் கண்ணங்களில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.!
‘அடப்பாவி! படுக்க இடங்கொடுத்த பாவத்துக்காகவா எனக்கு இந்த நிலையை ஏற்படுத்தின? என் ஆசையில மண்ணைப் போட்டுட்டியே பாவி!’ ரெத்தினத்தை சபித்துக் கொண்டே அடுக்களையை நோக்கி நடந்தான்.
காப்பித்தூள் டப்பாவைத் திறந்து பார்த்தான். ‘இதையாவது மிச்சம் வச்சிட்டுப் போனியே!’ என்று கூறிக் கொண்டே டப்பாலிருந்த எண்பது வெள்ளியை எடுத்துக் கொண்டு சிலையை அடைந்தான்.
சிலையின் காலடியில் தலையை வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதான் கருப்பண்ணன்
கண்ணீர் வற்றும் வரையில் அழவேண்டும் என்ற முடிவோடு அழுது கொண்டிருந்தான் போலும்.
‘சர சர’ என்னும் ஒலி கேட்டுத் தலையை நிமிர்த்தினான், சிலையின் மேல் கருநாகம் ஊர்ந்து கொண்டிருந்தது.
‘அம்மா. மகளே! நான் தகுதிக்கு மேல் ஆசைப் பட்டுட்டேனாம்மா? உனக்கு வைரத்துல மூக்குத்தி செஞ்சு போடணும்’னு இந்தக் கிழவன், உன் ஏழை அப்பன் நினைச்சது தவறாம்மா? மதுரை மீனாச்சி அம்மனுக்கு மாணிக்கக் கல்லால மூக்குத்தி செஞ்சுப் போட்டிருக் காங்க’னு கேள்விப்பட்டிருக்கேன். அது போல இல்லா விட்டாலும் சிறுசா ரொம்ப ரொம்ப சிறுசா ஒரு வைரக்கல் மூக்குத்தியை உனக்குச் செஞ்சு போடலாம்’னு ஆசைப்பட்டது தவறா’ம்மா? இந்தப்பாவிக்கு மகளாப் பிறக்காம இருந்திருந்தா உனக்கு இந்தக் கதி ஏற்பட்டி ருக்குமா? பிறப்பெடுத்து என்ன சுகத்தைக் கண்டே! கன்னி கழியாம கண்ணை மூடிட்டியே அதுக்கு யார் காரணம்? நான்தானேம்மா? அந்தப் பாவத்தைப் போக்க யார் கிட்டப்போய் இறைஞ்சுவேன்? நீ தராத பாவமன்னிப்பை வேற யார் மகளே எனக்குத் தரப்போறாங்க? அதனால், நீ தான் எனக்குத் தெய்வம்! அந்தத் தெய்வத்துக்கு வைர மூக்குத்தி போட ஆசைப்பட்டேன். முடியல. பரவாயில்லேம்மா. ஜாமான் கூட்டுக் கிழவனோட மக வைர மூக்குத் திப் போட ஆசைப்படக் கூடாதாம்மா. ஏன்’னா வைரம் உன் நெஞ்சுல இருக்கும்’மா. அதைப் புரிஞ்சுக்க முடியாம தானம்மா இவ்வளவு காலமா இருந்துட்டேன்!’ மடை திறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றான்.
கருநாகம் சிலையின் கழுத்தை வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
‘அடுத்த வாரம் உன் பிறந்த நாள் வருது. இந்தப் பணத்து’ல உனக்கு அழகா.. மூக்குத்தியை வாங்கி மாட்டுவேன்!’ என்று கம்மிய குரலில் மொழிந்து கொண்டே போலீஸ் நிலையம் நோக்கி நடை போட்டான் கருப்பண்ணக்கிழவன்.
பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. மனம் போன போக்கில் எங்கெல்லாமோ சுற்றித்திரிந்து விட்டு குடிசையை அடைந்தான் கருப்பண்ணன்.
கருநாகம் திண்ணையில் படமெடுத்து நின்றது.
அவனுக்குத்தான் பசிக்கவில்லை. பாம்புக்குமா பசிக்காது?
பாம்பும் கருப்பண்ணனும் கிழங்கள்தான். மனிதனுக்குக் கவலை, எனவே பசியில்லை. விலங்குக் கவலையில்லை; எனவே பசிக்கிறது. நிலைமையை உணர்ந்து கொண்ட கருப்பண்ணன் கிண்ணத்தில் பாலும், பக்கத்தில் முட்டை யும் எடுத்து வைத்து விட்டுக் குளிக்கச் சென்றான்.
குளித்து விட்டு சாப்பிடாமலேயே படுக்கையில் சாய்ந்தான்.
எண்ணற்ற நினைவுகள் அவன் நெஞ்சத்தில் முகிழ்த் தன இன்பத்தில் திளைத்திருந்த அவன் துன்பத்தில் துவண்டு நின்ற காட்சிகள் தோன்றித் தோன்றிமறைந்தன.
அன்று ரெத்தினம் போதையில் மிதந்து கொண்டிருந் தான். இன்று கருப்பண்ணன் வேதனையில் தத்தளித்துக் கொண்டிருந்தான்.
அப்படியே உறங்கி விட்டான்!
நள்ளிரவு கடந்துவிட்ட நேரம். தொண்டை வறண்டு விட்ட உணர்வு கருப்பண்ணனை விழித்தெழச் செய்தது:
அறையெங்கும் ஒளி மயம்.
திடுக்கிட்டு எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான்.
கட்டிலின் கால்மாட்டிலிருந்து ஒளிக்ககூர் பரவிக் கொண்டிருந்தது.
இமை கொட்டாமல் அதைப் பார்க்க முயன்றான். முடியவில்லை அவனால். இமைகளை மூடித்திறந்தான்.
அங்கே .. பதறிப்போனான் கருப்பண்ணன்.
ரெத்தினக் கல்லைக் கக்கி வைத்துவிட்டு மீளா உறக்கத்தில் மூழ்கிக் கிடந்தது அந்தக் கருநாகப் பாம்பு.
அவன் உடல் நடுங்கியது. உதடுகள் படபடத்தன. பேச முயன்றான்- வார்த்தைகள் தொண்டையோடு நின்றுவிட்டன.
கருநாகத்தின் பக்கத்தில் மண்டியிட்டான்.
அதையே உற்று நோக்கினான். கண்கள் இருளடைந்து கொண்டிருந்தன.
இருள், எங்கும் இருள். அந்த இருளில் ஒரு சுடர் தோன்றிற்று.
அதில் அவன் மகளின் தோற்றம் நகை முகத்தோடு காட்டியளித்துக் கொண்டிருந்தது
உற்று நோக்கினான்: கோகிலத்தின் மூக்கில் ஒரு மூக்குத்தி மின்னிடக் கண்டான்.
அவள் மூக்கில் மின்னிக் கொண்டிருந்தது ரெத்தினக்கல் மூக்குத்தியேதான்.
அவள் இதழ்கள் அசைந்தன. மெல்லிய காற்றில் அவளுதிர்த்த சொற்கள் மிதந்து வந்து கருப்பண்ணனின் செவிப்பறைகளில் உராய்ந்தன. ‘அப்பா! விலங்குணர்வு மனித உருவிலே திரிகிறது! தெய்வத் தன்மை விலங்கு வடிவிலே வாழ்கிறது!’
– அவன் (சிங்கப்பூரன் சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1993, நிலவுப் பதிப்பகம், சிங்கப்பூர்.