கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 2,197 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏ…சொர்ணம்…சொர்ணம்… எங்கிட்டுப் போயிட்டா? சொன்னா சொன்ன வேலையைச் செய்யதில்லை…வீட்ல போட்டது போட்ட மானிக்குக் கெடக்கு…அத..அத நேரத்துல செஞ்சா ஏன் இப்படி வையப் போறேன்?… ஓரொரு வீட்ல பொம்பளப் பிள்ளிய எம்புட்டு வேலையைச் செய்துக? ஹூம்…எனக்குன்னு வந்து வாச்சிருக்கே….? சொர்ணம்….காதுல வளுவுதா இல்லையா?”

“இந்தாத்தா ஏன் இப்படி எதுக்கெடுத்தாலும் கத்திக்கிட்டு கெடக்கு?” மனத்துள் கேட்டவாறு கட்டியிருந்த கிழிசல் பாவாடையின் கரையில் தொங்கிய துணியை இழுத்து முடிச்சுப் போட்டுக்கொண்டே, தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக்கொண்டு அடிக்கொரு நடை நடந்துவந்தாள்.

“என்னாத்தே…கூப்ட்டியா?..ந்தா…வந்துட்டே..ன். பக்கத்து வீட்டு மருதாயியோட பாண்டி விளையாடிட்டிருந்தேன்… என்ன செய்யத்தே….?”

“சமஞ்ச பிள்ளையாய்ட்டே… இன்னும் என்னடி வெளயாட்டு? ஒன்னல்லாம் சும்மா வாயால் அதட்டுனா போதாதுடீ… ஓடுற கால் தறிச்சு, வீட்லயே உக்கார வெக்கணும். ஆமா… கரிசக்காட்டுக்கு போவணும்லா…போ… CUT… அந்தப் பளய ஓலப்பெட்டிய எடுத்துக்கிட்டுப் போல…. நா..ன் பெறவால வாரேன்…”

“சரியாத்தே!” சொல்லிய மகளை அனுப்பிவிட்டு, கூரையைப் பார்த்த பேச்சியம்மாள், “ம்…ஓடெல்லாம் அங்கிட்டும் இங்கிட்டுமா ஒடஞ்சு சில்சில்லா கெடக்கு. இந்த மனுசன் எங்கன கவனிக்கிறான்? அவம்பாட்டுக்கு உக்காந்துட்ருக்கானே .ம்… எந்தலயெளுத்து”

“ஏலெ…ஏ…ராசா… இங்கிட்டு வாடா… அந்தச் செவப்புச் சட்டைய போட்டுக்கிட்டு வா!!”

“ஏ….ஆத்தே…. அந்தச் சட்டைல பொத்தா…னில்லத்தே, பின்னு இருந்தா குடுத்தே” சொல்லியவாறு அருகில் வந்தவனின் மண்டையில் ஒரு போடு போட்டு, “ஒனக்கு எத்தினி வாட்டி சொல்லுறது? முன்னாலியே சொல்லியிருந்தா தச்சு வச்சிருப்பேன்லா? ஏ…ன்..உசிர வாங்கதுக்குன்னே வந்திருக்கே… கிட்ட வந்தப் பொறவு சொல்லுதியே…” கோபப்பட்டுக் கொண்டே, அழுக்குப் படிந்து மினுமினுத்த கழுத்திலிருந்த கறுப்புக் கயிற்றிலிருந்து சேப்டி பின்’னை எடுத்துப் போட்டு விட்டாள்.

“ஏலே…சாப்டுலே… சடச்சோம் கெடந்தோம்னு இல்லாம கைகால் ஒளச்சலோட, நல்ல கறி சமச்சா திங்க மாட்டங்கியே? ஏனே… தொண்டைக்குள்ள எறங்கலியா? எல்லாம்…திமிருங்கேன்… வந்து வாச்சியளே… எனக்குன்னு …”

“இதுக்குப் போய் அந்தப் பிள்ளியல் வையிறியே… கொஞ்சம் சாந்தமா பேசப்படாதா?” சண்முகம் பொசுக்கென்று மனைவியைத் திட்டினார்.

சொர்ணத்துக்குத் தலைவார உட்கார்ந்தாள் பேச்சியம்மாள். ஒரு பின்னல் பின்னி முடிக்குமுன், மறுபக்கம் திரும்பிய மகளை மண்டையில் ஒரு ஒரு குட்டு வைத்து, பின்னிய பின்னலை ஓர் இழு இழுத்தாள்.

“அய்யா” என்ற மகளின் குரல் கேட்டு,

“என்னடி….ஒரு வண்டி பேன வச்சிக்கிட்டு, வார உக்காந்தா ஒழுங்கா உக்கார்றதில்ல…”

மனைவியின் நடவடிக்கையை அமைதியாக மனத்தில் வருத்தத்துடன், பார்த்துக் கொண்டிருந்தான் சண்முகம். அவனுக்குப் புரியவில்லை, பாசத்தின் ஒரு பக்கம் பூ! மறுபக்கம்? முள்ளா?”

குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரம். கணவனும் மனைவியும் மட்டுமே இருந்தனர்.

“ஏண்டி, அந்தப் பிள்ளியல ஏன் எப்பவும் சடச்சிட்டே இருக்கே? ஒனக்குப் பாசம்னு ஏதாவது இருக்காடீ?”

“அட… பிள்ளைகளுக்கு ஒரேமுட்டாச் செல்லங் கொடுத்தா அதுக உருப்படாது… அதான் கத்தறேன்; எனக்கு மட்டும் நெஞ்சுல பாசம் இல்லியா என்ன? ஆமா… என்ன மசமசன்னு உக்காந்துகிட்டு?…. சந்தை வர்ற நாளில்ல? இன்னைக்கு விட்டா பெறவு ஒரு வாரம் களிச்சுத்தான் வாங்கதுக்கு முடியும்…ம்…எந்திரியும் எந்திரியும். இப்பவே அம்புட்டு கறிசாமான்களையும் வாங்கிட்டு வாரும்…ம்…ன்னும் எந்திரிக்கலயா?”

“ந்தா…வரேன்…பக்கத்துத் தெரு மாடசாமியைப் பாத்துட்டு வாரேன். கொஞ்சம் காசு தரணும்; வாங்கிட்டுப் பெறவு சந்தக்கிப் போறேன்…”

“நாஞ்சொன்ன பெறவுதான் இதெல்லாம் தெரியுதாக்கும்? இம்புட்டு நேரம் வேலையில்லாம உக்காந்துட்ருந்திட்டு…? பிள்ளிய தான் அப்படின்னா வாக்கப்பட்டவரும் அப்படித்தான் இருக்காக…எல்லாம் எந்தலயெளுத்து… ஒரு வேலய உருப்படியா செய்யதில்லை…ம்ஹூம்….” தலையெழுத்தை நொந்தபடி பெருமூச்சு ஒன்றைச் சடக்கென்று வெளியிட்டாள்.

“ஒனக்கு ஒடம்புக்கு ஆகாது; ரொம்பச் சத்தம் போட்டுப் பேசாத… பெறவு ஏதாச்சும் ஆனா அம்புட்டுப் பேருக்கும்தான் கஷ்டம்” என்றான் சண்முகம்.

“ஆமா…எளவெடுத்த வீட்ல அதுக்குத்தான் கொறவு” அலுத்துக் கொண்டாள்.

நோய்நொடி ஏதும் இல்லாதவள், ‘பொக்’கென்று ஒரு நாள் செத்துப் போனாள். வெந்த சோற்றை வடிக்காமலும், கொதிக்கும் குழம்பை இறக்காமலும் சுவரின்மேல் சாய்ந்துகொண்டிருந்தவள், நெஞ்சுக்குழியில் வலி குப்பென்று பீறிட்டு நெஞ்சுக்கூட்டை உடைக்க, அப்படியே விழுந்தவள்தான்.

படலைத் திறந்து கொண்டு வந்த சண்முகம் மனைவியிடம் வர, “பேச்சீ..ஈ… ஈ…ஈ…” அவளை உலுக்கி, மூக்கில் சுட்டுவிரல் வைத்து, அப்படியும் இப்படியும் தலையைத் திருப்பிப் பார்த்தான்; ஓவென்று கதறினார்.

“போய்ட்டீயா…ஐயோ…நீ ஒருத்தி இருக்கண்ணு, நான் எல்லாத்தையும் விட்டுட்ருந்தனே இனிமே நான் என்ன பண்ணுவேன்…பிள்ளியள எப்படிக் காப்பாத்துவேன்? அய்யோ… அந்த ஐயனாருக்குக் கண்ணே இல்லையா?”

குழந்தைகள் இருவரும் அங்கும் இங்கும் பார்த்தவாறு, அம்மா போய்ட்டாளேன்னு அளுவுறதா? இல்லா…இனிமே திட்டமாட்டாங்கன்னு சிரிக்கிறதா? கண்ணில் கண்ணீர் தானாய் வழிய, யோசித்த நிலையில் பிரமை பிடித்தவாறு மூலையில் நின்று கொண்டிருந்தனர்.

துக்க வீட்டிலிருந்து எல்லாரும் சென்று விட்டனர். சொர்ணமும் ராசாவும் குத்துக்காலிட்டு, மூலைக்கொருவராய் உட்கார்ந்திருந்தனர். குப்பென்று குடிசை முழுவதும் மவுனம் படுத்திருந்தது. மயான அமைதி!

அம்மா இருந்திருந்தால் இந்த நேரத்தைக்கூட விட்டு வைத்திருக்க மாட்டாள்; இதைச்செய், அதைச்செய் என்று விரட்டிக்கிட்டே இருப்பாள். இப்போது….

முள் குத்தாதவன் ஓட்டும் மாடு அதன் போக்கில் போவதுபோல எல்லாம் தாறுமாறாய்ப் போனது.

அடுப்பில் ரசம் தாளித்துவிட்டுச் சொர்ணம் பாத்திரங்களை விளக்கிக் கொண்டிருந்தாள். ராசா மாட்டுத் தொழுவத்தைத் தூற்றிக் கொண்டிருந்தான்.

ரசம் மெல்ல மெல்லச் சூடானது; பொங்கும் பருவம் வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன; ஒன்றிரண்டு நுரைகள் முட்டைபோல் தோன்றி, தளதளத்து உடைந்து, கொத்துமல்லி, கறிவேப்பிலை தழைகளின் மணத்துடன் போட்டிபோட்டுக் கொண்டு மணந்து, களுக்கென்று நொடியில் பொங்கி வழிந்தது.

எதையோ தேடுவதற்காகச் சமையலறைக்குச் சென்ற அப்பா, அடுப்பைப் பார்த்தார். அவ்வளவுதான்…”சொர்ணம்…. சொர்ணம்… இங்கன வா களுத….அடுப்புல பெறவு நல்லாருக்குமா? வச்சத பாத்தியா…பொங்குன இதுக்குத்தான் வீட்டுல ஒரு பொம்பள பேருக்காவது இருக்கணுங்கறது. மாடு கணக்காப் போட்டதப் பத்திக் கவலப்படாம் உக்காந்துட்டுருக்கியே…கூறு கெட்ட களுத…ஒன்னய வாயால் திட்டுனா சரியாயிருக்காது. அதுக்கு அவதான் சரி…”

உறுமல்; உறுமல்; பயங்கர உறுமல்; அதிர்ந்து போனாள் சொர்ணம். ‘ஒரு முள் போய் மறு முள்ளா?’ மனம் அதிர்ந்தாள். ராசா திடுதிப்பென்று உள்ளே ஓடி வந்தான். முதுகில் சூடாக ஓர் அடி… “மாடு…மாடு…இப்பவே காளைமாடு கணக்கா சுத்த ஆரம்பிச்சிட்டியா? வீட்ல ஒரு வேலையவாவது கவனிக்கியா? ஒன்னல்லாம் சும்மா விடக்கூடாது, அதான்…” அப்பாவின் கத்தல் அதிர வைத்தது.

இருவரும் சண்முகத்தின் நடவடிக்கையால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து,

“எலேய்.. எலேய்…என்று ஆசையாகப் பெயரிட்டுக் கூடக் கூப்பிடாத அப்பாவா இப்படி? பார்வையாலேயே கேட்டனர்; சொர்ணம் மயங்கினாள்; வெகுண்டாள்; ஆச்சர்யம் அடைந்தாள். அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. “இந்த அப்பாவுக்கு என்னாச்சு? இந்தக் காட்டுக்கத்தல் போடுறாரே! யோசித்தாள்.

துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, சாணமிடப்படாத ஒட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தார் சண்முகம்.

அந்த வீட்டுச் செடியில் பழைய ரோஜாவின் முள், ரோஜாவோடு கருகிவிட்டது. இப்போது புதிய ரோஜா, இதழ்களின் பாதுகாப்பிற்காக முள் நிமிர்த்திக் கொண்டிருக்கிறது.

– மனிதம்,1989, கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email
திருமதி சீதாலட்சுமி B.A., M.A., M Phil., PGDE, Dip in Translation. திருமதி சீதாலட்சுமி தமிழ் நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, நிறைநிலை ஆகிய பட்டங்கள் பெற்றவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியல் பட்டயம் பெற்றவர். 1990-இல் சிங்கபூருக்குக் குடிபெயர்ந்த பிறகு, தேசியக் கல்விக் கழகத்தில் பட்டத்திற்குப் பிந்திய பட்டயக்கல்வி பயின்றவர். உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர், தற்போது தேசியக் கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார். அண்மையில்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *