முற்பகல் செய்யின்…

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 12,742 
 
 

புடவை தலைப்பை இழுத்து போர்த்திகொண்டார் பூசம். குளிர்ச்சியான காற்றுடன் சன்னமான தூறலும் சேர்ந்து கொண்டு நடுக்கியதால் டீ குடிக்க வேண்டும் போல இருந்தது அவருக்கு. இன்னும் ஒருமணி நேரமாவது கடந்தால்தான் பால்காரன் வருவான், பிறகு அரைமணி நேரம் கழித்துதான் மறுமகள் எழுந்து வந்து டீ போட துவங்குவாள். ஒடுக்கு டம்ளரில் அது கைக்கு வரும்போது மணி ஏழரையை தொட்டுவிடும் ஆனால் அஞ்சு மணிக்கெல்லாம் மண்டைகுளிர் தெறிக்கிறமாதிரி டீ குடிக்கிறதுதான் பூசத்துக்கு பிடிக்கும். “ம்ஹும்… அதெல்லாம் ஒருகாலம்” என்று சலித்துக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்தவர், உள்பக்கம் பூட்டிய கதவருகே எதையோ தட்டியவுடன் மின்விளக்கு எரியத்துவங்கியது. உள்ளே பேரக்குழந்தைகளுடன் மகனும் மருமகளும் நிம்மதியாக உறங்குகின்றனர் என்பதை உணர்த்தும் மின்விசிறியின் “மரக்” மரக்” ஓசையை கவனிக்காதவராய் முகம்கழுவ புழக்கடைக்கு சென்றவர், தண்ணீர் நிரம்பிய வாளி, விளக்குமாறு சகிதமாக வெளிப்பட்டு வாசலை கூட்ட துவங்கினார்.

பூசத்தின் மறுமகளுக்கு எழுந்து வெளியில் வரும்பொழுதே கோலத்தில்தான் விழிக்கவேண்டும். தவறும்பட்சத்தில் “வீட்ல இருக்குற பெரியவங்களுக்கு வாச கூட்டக்கூட வலியா இருக்கு” என்று ஆரம்பித்து விடுவாள். இருந்தாலும் அவளை அப்படியொன்றும் பெரிய கொடுமைக்காரி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆரம்பகாலங்களில் மாமியாரும் மருமகளும் சுமூகமாகத்தான் இருந்தனர். மகன் வெளிநாட்டு வேலைக்கு சென்று வந்ததிலிருந்து அதிகாரமெல்லாம் மருமகளின் கைக்கு போய்விட்டது, “காலம்போன காலத்தில் நாமளும் ஒதுங்கிக்க வேண்டியது தான், அப்பப்ப முள்ளு தைக்கிறா மாதிரிதான் பேசுவா மத்தபடி என்னைய யார்ட்டையும் விட்டுகொடுக்கமாட்டா” என்று உறவுக்காரர்களிடம் பூசம் மட்டும் அடிக்கடி சொல்லி கொள்வார்.

தண்ணீரை தெளித்து, அரிசிமாவில் கோலகோடுகள் இழுக்க துவங்கிய பொழுது வடகரை பெரியபள்ளிவாசலில் சங்கு ஊதும் சத்தம் கேட்டது. “ம்ம் இப்பதான் நாலரை ஆவுதா…” என்று மனதிற்குள் நினைத்துகொண்டவர் சுருக்கென்று முள்தைத்தவள் போல சுதாரித்து நிமிர்ந்தார்.

“என்ன இன்னைக்கு ஒன்னும் சத்தமே காணும்..?.” என்று நினைத்த படியே தன் வீட்டுக்கு நேர் எதிரே இருக்கும் அஞ்சலையின் இல்லத்தை நோக்கிய பொழுது உடல் கனமாக உதற துவங்கியிருந்தது பூசத்துக்கு. அந்த வீடு இருளே உருவாய் காட்சி அளித்தது. “போய்தான் பாத்துடுவோமே” என்று ஒரு அடி எடுத்துவைத்த பூசம், சற்று நிதானித்து ஏதோ யோசித்தவராய் திரும்பிவந்து கோலத்தை முழுமையாக வரைந்து விட்டு ஆலோடியில் கிடந்த பெஞ்சில் வந்து அமர்ந்து கொண்டார். “நேத்து ராத்திரி கூட நல்லாத்தானே பேசுனா.. இப்ப சத்தமே காணுமே.. ஒருவேளை முடிஞ்சிட்டா.. !!?” என்று அவரது மனம் பலவகையில் சிந்திக்க துவங்கி இருந்தது. படுத்திருந்த இடத்தில் கிடந்த வெற்றிலை பொட்டலத்தை எடுத்து ஒரு தரம் போட்டு கொண்டவர் “பாவம் தூங்குறா போல இருக்கு.. “ என்று தனக்குதானே சமாதானம் சொல்லி கொண்டாலும் படபடப்பு மட்டும் அடங்க வில்லையாதலால் எதிர்வீட்டு கதவு எப்பொழுது திறக்கும் என்றும், அஞ்சலையின் இந்த அமைதிக்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ளவும் பதற்றத்துடன் காத்திருந்தார் பூசம்.

வாழ்க்கைப்பட்டு வந்த காலத்தில் இருந்து பூசமும் அஞ்சலையும் முன்னிரவு எத்துனை தாமதமாக உறங்க போனாலும் நாலரை மணி சங்குசத்தம் கேட்டதும் எழுந்து விடுவார்கள். ஆனால் கடந்த ஒருவாரமாக அஞ்சலையின் கதறலை கேட்டுதான் எழுந்திரிக்க வேண்டியிருக்கிறது. இரவு முழுவதும் கொடூர வலியை தாங்க முடியாத அஞ்சலை, நள்ளிரவு நேரங்களில் உறங்கினாலும் அதிகாலை வேளைகளில் விழித்து கொண்டவுடன் கத்த துவங்கி விடுவார். “ஐயோ!! அம்மா.. கேட்ட தொறந்து விடுங்கடி.. என்ன இப்புடி கொலை பண்ணுறாளுவோளே!! அம்மா.. அப்பா..” என்ற அஞ்சலையின் அழுகுரல் கதவை aஅடைத்து உள்ளே உறங்கும் அவருடைய வாரிசுகளுக்கு கேட்கிறதோ இல்லையோ பூசத்தை எழுப்பிவிட்டுவிடும், நெருங்கிய சிநேகிதி வேதனையில் துடிக்கும் சத்ததை கேட்டுக்கொண்டே படுத்திருப்பார் பூசம்.

இந்த எதிரெதிர் வீட்டு பெண்களின் நட்பானது அவர்களது மாமியார்களிடமிருந்து தொன்று தொட்டு வருகிறது. அஞ்சலை வாழ்க்கைப்பட்டு வந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் பூசம் திருமணமாகி வந்தார். அப்போதெல்லாம் பூசத்தின் மாமியாரும் அஞ்சலையின் மாமியாரும் நகமும் சதையுமாக இருப்பார்கள் என்றாலும் ஒருவர் பெருமையை ஒருவரிடம் காட்டிக்கொள்வதில் இருவருக்கும் அலாதியான பிரியம் இருந்தது. புதிய மணப்பெண்ணான பூசம் மாதிரி பெண்ணே இல்லை என்று தலையில் தூக்கி கொண்டு ஆடினார் பூசத்தின் மாமியார். அஞ்சலைக்கு இதைபற்றி கவனிக்கக்கூட நேரமிருக்காது வீட்டு வேலைகள் கழுத்தை நெரிக்கும். “இந்த கிழவிங்க ரெண்டும் உக்காந்து ஊர் கதைய பேசுறதும் இல்லாம எல்லா வேலையும் நம்ம தலையிலேயே கட்டுதுங்க” என்று நினைத்துகொள்வாள். அஞ்சலையின் மாமியாருக்கு ஒரே ஒரு வேலைதான் இருக்கும் அதுவென்னவெனில் தொழுநோயால் பீடிக்க பட்டிருந்த அவரது கணவரை பார்த்து கொள்வது மட்டும்தான். அந்த கிழவர் எப்பொழுதும் பின்கட்டில் இருக்கும் சிறிய குடிசையில்தான் இருப்பார். நோய் ஒன்றும் தீவிரமாக இல்லை என்றாலும் அப்பொழுதுதான் ஒன்றிரண்டு விரல்கள் மடங்க துவங்கி இருந்தது. அந்த குடிசைக்குள் அஞ்சலையின் மாமியார் மட்டுமே சென்று வருவார் என்னதான் நோயாளி என்றாலும் கணவர் அல்லவா? சிசுருஷை எல்லாம் குறையின்றி இருக்கும். அஞ்சலை திருமணம் ஆனபோது ஒருமுறை மட்டும் கணவனுடன் மாமனாரிடம் ஆசிர்வாதம் வாங்க அந்த குடிசைக்குள் சென்றிருக்கிறார். அதன்பின் அஞ்சலையின் மாமியார் இறக்கும் வரை அந்த குடிசைக்குள் சென்றதே இல்லை. வருடங்கள் ஓடியது, முதல்நாளிரவு வரை நன்றாக பேசி சிரித்துக்கொண்டிருந்த கிழவி காரணமே தெரியாமல் படுக்கையிலேயே இறந்து கிடந்தார் ஒருநாள். அஞ்சலையின் கைகளுக்கு குடும்ப நிர்வாகம் வந்தது. வைத்தது சட்டம், செய்வது செலவு என்று குடும்பம் நடத்தினார். முன் போல் மாமியாருக்கு பயந்துகொண்டே மூச்சுக்கூட விடாமல் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இப்பொழுது அஞ்சலைக்கு இல்லை. கணவரும் நல்ல சம்பார்த்தனைக்காரர். ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள்தான்.

அதே சமயம் எதிர் வீட்டிலும் பூசத்திடம் அதிகாரம் வயப்பட்டது அவரது மாமியாரும் முதுமையின் காரணமாக குடும்ப பொறுப்புகளை மருமகளிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக்கொண்டார். மாமியார்களிடம் இருந்த நட்பு இந்த மருமகள்களிடமும் தொடர்ந்தது. தொழுநோயாளி இருக்கும் வீடாதலின் ஊரிலுள்ளவர்கள் யாரும் அஞ்சலையின் வீட்டுக்கு அதிக போக்கு வரத்து வைத்து கொள்ளமாட்டார்கள். அதனாலேயே அஞ்சலைக்கும் பூசத்திடம் அதிக அன்பும் பாசமும் பெருகியது. கணவர்கள் வேலை பிழைப்புக்கு சென்று விட்டால் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு ஊர் கதைகளை பேசுவதுதான் இருவருக்கும் வேலை. அதோடு சேர்ந்து வற்றல் பிழிவது வாடாம் போடுவது என இதர வேலைகளும் நடக்கும். தீபாவளி வந்துவிட்டது என்றால் விடிய விடிய கண்விழித்து இருவரும் பலகாரம் செய்வதை வருடாந்திர திருவிழாவாகவே எண்ணுவார்கள். பூசத்தின் வீட்டில் ஒருநாள் கெட்டி உருண்டை பிடித்தால் அஞ்சலையின் வீட்டில் ஒருநாள் முறுக்கு பிழிவார்கள். ஒருவர் பிழிய ஒருவர் எடுக்க என மாறி மாறி ஒரே சிரிப்பும் பேச்சுமாக பானைகள் பலகாரங்களால் நிறையும்.

புதுத்துணி எடுப்பதும் வெடி வாங்குவதும்தான் பிள்ளைகளுக்கான தீபாவளி என்றால் பலகாரம் செய்வதுதான் பெண்களுக்கான தீபாவளி. மற்ற காரணங்களுக்கு துணி எடுக்கும் பொழுது அதீத ஆர்வத்துடன் தேர்வு செய்யும் பெண்கள் தீபாவளி நேரத்தில் மட்டும் உடைகுறித்து அதிக கவனம் காட்ட மாட்டார்கள் அவர்கள் கவனம் முழுதும் முறுக்கு மாவிலும், அதிரச பாவிலும்தான் இருக்கும், சோமாஸ் எப்டி செய்யிறது, உள் பூரணம் சீக்கிரமே வாடை வராம இருக்கணும்னா என்ன செய்யிறது என பெண்களுக்கு சந்தேகங்களால் நிரம்பி இருக்கும் காலகட்டம் அது. எல்லாம் முடிந்ததும் எண்ணை குளியல் முடித்து பிள்ளைகளும் கணவனும் கூடத்தில் அமர்ந்து பலகாரங்களின் பக்குவத்தை சிலாகிக்கும் பொழுது வரும் மகிழ்ச்சியை பட்டுபுடவை கொடுத்திடாது பெண்ணுக்கு

ஆனால் சந்தேகங்கள் எல்லாம் மற்ற பெண்களுக்கு எப்படியோ பூசத்துக்கும் அஞ்சலைக்கும் பலகாரங்கள் எல்லாம் தண்ணி பட்ட பாடுதான். மாமியார்களிடம் இருந்து தெரிந்து கொண்ட பக்குவமே போதுமானதாக இருக்கும் இருவருக்கும். இப்படித்தான் ஒருவருடம் முறுக்கு பிழிந்து கொண்டிருக்கும் பொழுது அஞ்சலையின் மகன் விளையாடிகொண்டிருந்த பந்து எண்ணெய் சட்டிக்குள் விழுந்து தெறித்ததில் பூசத்திற்கு படுகாயம் ஏற்பட்டு விட்டது. அந்த வருடம் தீபாவளி மருத்துவமணையில்தான் கழிந்தது இருவருக்கும். பூசத்தின் தாய் வீட்டு உறவுகள், கடமைக்கு ஒருநாள் வந்து பார்த்துவிட்டு சென்றதோடு சரி தீபாவளி கொண்டாட போய்விட்டனர். ஆனால் எதிர் வீட்டு அஞ்சலையோ பலகார வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு பூசத்தை மருத்துவமணையிலேயே இருந்து கவனித்து கொண்டார். தீபாவளி அன்று மட்டும் பூசத்தின் கணவரை மருத்துவமனையில் விட்டுவிட்டு இருவீட்டு குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிவிட்டு சுழியம் இட்லியோடு மதியத்திற்குள் மருத்துவமனைக்கு வந்துவிட்டார். அதிலிருந்துதான் பூசத்திற்கு அஞ்சலையின் மீது இருந்த அன்பும் மரியாதையும் பன்மடங்கு பெருகிவிட்டது.

ஆனால் அதெல்லாம் அந்தகாலம் இப்பொழுது சரி சமமாக இருவருமே மருமகள்களால் ஓரம்கட்டபட்டு விட்டனர். நேற்று இரவு மனது வெகுபாரமாய் இருந்தது பூசத்திற்கு. உயிர் தோழியான அஞ்சலை படும் வேதனைகளை கண்டு கண்ணீர் உகுந்தவாறே அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்தார். நோயின் தீவிரம் மரணத்தருவாயில் கொண்டு வந்து சேர்த்திருந்தது அஞ்சலையை.

“அஞ்சலை.. அஞ்சலை..” இரண்டு முறை சத்தமாக கேட்ட பூசத்தின் குரலுக்கு

“ம்ம்” என்ற முனகலுடன் அதிர்ச்சி காட்டின மூடியிருந்த கண்கள். மெலிதாக விழித்து பார்த்தவர் வந்திருப்பது பூசம் என்று தெரிந்ததும் வீங்கிய உடல் கொடுக்கும் சிரமத்தையும் பொருட்படுத்தாமல் எழுந்து அமர முற்பட்டார் அஞ்சலை. பூசத்தின் உதவியுடன் மெல்ல எழுந்து சுவற்றில் சாய்ந்து கொண்டவர் கண்களில் நீர் பெருகி ஓடியது, அது இயலாமையின் கண்ணீர். ஆடியோடி ஆண்டு கொண்டிருந்த குடும்பஸ்திரியின் வாழ்க்கையில் முதுமையால் பொங்கி வழியும் கண்ணீர். பூசமும் சத்தமின்றி அழுதார். சத்தமின்றி என்ற வார்த்தையை இங்கு குறித்து கொள்ளுங்கள் ஏனென்றால் அஞ்சலை படுக்கையில் விழுந்ததிலிருந்து யாரேனும் ஒருவர் வந்து பார்ப்பதும் அழுவதுமாக இருக்க வீட்டுக்கு சொந்தக்காரியான அஞ்சலையின் மருமகளோ.. “இது என்ன எழவு வீடா.. எழவு உழுவுறதுகுள்ள இப்புடி ஒப்பாரி வைக்கிறிங்க” ன்னு நேரடியாகவே கேட்பாள். அவளுக்கு குரல் கேட்காமல் ஆலோடியில் கிடந்த அஞ்சலையிடம் பேசிகொண்டிருந்தார் பூசம். நேற்று என்னவோ வழக்கத்திற்கு மாறான தெளிவு இருந்தது அஞ்சலையின் பேச்சில்.

அதனை எண்ணிய வாறே ஏதேதோ சிந்தித்து கொண்டிருந்த பூசத்தின் கவனத்தை கலைத்தபடி பால்காரன் வந்து ஒருலிட்டர் பால் பாக்கெட் ஒன்றை கேட்டில் தொங்கிக் கொண்டிருந்த வயர் கூடையில் போட்டுவிட்டு சைக்கிள் மணியில் ஓசை எழுப்பியவாறே அடுத்த வீட்டுக்கு சென்றான்.

“அஞ்சல என்ன விட்டு போய்ட்டியா? நேத்தி நல்லாதான பேசுன, இந்நேரத்துக்கு எழுந்திருச்சு சத்தம் போடுவியே, இன்னைக்கு ஏன் இப்புடி பொட்டுவம்போல இருக்க?” என்று தனக்குள் கேட்டு கொண்டிருந்த பூசத்தின் கண்களில் இருந்து நீர்த்தாரை பெருகியது. அடுத்தகனமே பூசத்தின் நெஞ்சத்தை வேறு ஒரு கேள்வி தாக்கியது. “தப்பு செஞ்சவங்க தண்டனைய அனுபவிச்சுதானே ஆவனும்? அவங்கவங்க போட்ட வெததான் முளைக்கும், அவ செஞ்ச பாவத்துக்குதான் இப்புடி கெடந்து அனுபவிக்கிறா” என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டார் பூசம்.

அஞ்சலையை நேற்று முன்தினம்தான் கோரிமேடு மருத்துவ மனையில் இருந்து கொண்டு வந்தனர். “இந்த வியாதிக்கு தஞ்சாவூர் திருவாரூர் லாம் சரி பட்டு வராது பாண்டிச்சேரி கோரிமேடு பெரியாஸ்பத்திரிக்குதான் போவனும்” ன்னு அருகிலுள்ளோர் ஆலோசனை வழங்க அஞ்சலை கோரிமேடு ஜிப்மரில் வைக்க பட்டு இருந்தார். மொத்தம் இருபது நாள் துணைக்கு இருந்தது என்னவோ பெற்ற கடனுக்காக மகனும் பழகிய பாசத்திற்காக பூசமும் தான்.

அஞ்சலையின் உடலில் சிறு தொந்தரவு ஏற்படத் துவங்கியிருந்ததிலிருந்து ஆறு மாதம் கழித்து இன்று மரண பரிந்தையத்திலும் கூட ஒவ்வொரு நொடியும் உடன் இருப்பது பூசம்தான். “வியாதிக்காரிய கட்டிக்கிட்டு அழுவுறா” என்று மருமகளிடமும் வாங்கி கட்டிக்கொண்டுதான் தோழிக்கு சிசுருஷை செய்கிறார் பூசம். ஆறுமாதத்திற்கு முன் ஒரு நாள் காலை படுக்கையில் இருந்து எழுந்த பொழுது வயிறு வலிப்பது போல இருந்தது அஞ்சலைக்கு. தொடர்ந்த வலியானது இரண்டு கை இடுக்குகள் வரை பரவி விண்விண் என்று தெறித்தது. தலை சுற்றல் மயக்கமும் சேர்ந்து கொள்ளவே ஒருநாள் படுக்கைக்கு பின்னர் பூசமும் அஞ்சலையும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று வந்தார்கள் அங்கு கொடுக்கபட்ட வலிநிவாரனியின் உபயத்தில் இரண்டுநாள் நிம்மதியாக கழிந்தது அஞ்சலைக்கு. நான்காம் நாள் வயிறு மெலிதாக புடைப்பாக இருந்ததுடன் கை மடக்கிலும் ஏதோ கட்டி போல உறுத்தி கொண்டு பயங்கர வலி கொடுத்து கொண்டிருந்தது. மாலை மகன் வந்ததும் அருகில் உள்ள அறுவை சிகிச்சை மருத்தவரிடம் அழைத்து செல்லப்பட்டார். மேற்பார்வையான சோதனைகள் செய்யப்பட்டு “டீபி கட்டிமாதிரி” இருக்கு என்று முடிவு வெளியானது. அதிக செலவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் நடுத்தர வர்க்கத்துக்கு ஏற்றவாறு மருந்துகள் எழதபட்டது. மீண்டும் வலி நிவாரனியோடு ஒரு வாரம் கழித்தார் அஞ்சலை ஆனால் உபாதை பெருகியதே தவிர குறைந்த பாடாயில்லை.

மீண்டும் வேறொரு மருத்துவர் அறுவை சிகிச்சையாளர்தான். பழைய சோதனை முடிவுகளை பார்த்து விட்டு

“எனக்கென்னவோ வேற மாதிரி தெரியுது!! நீங்க எதுக்கும் ஒரு பயாப்சிஸ் எடுத்து பாத்துடுறது நல்லது” என்றார் அவர்

“அப்டினா என்னங்க ரொம்ப செலவாகுமா!! வேற மாதிரின்னா?! என்ன வியாதிங்க சார்” என்றான் அஞ்சலையின் மகன்

“இல்லல்ல ஏன் இப்புடி பதட்ட படுறீங்க எனக்கு என்னவோ கேன்சரா இருக்குமோன்னு ஒரு சந்தேகம், சந்தேகம் வந்துட்டுன்னா உடனே தீத்துகுறது தான் நல்லது அப்புறம் வளரவிட்டு அவதிபடுறது தும்ப விட்டு வால புடிச்ச மாதிரி ஆயிடும்” மருத்துவர் முன்பு ஏதோ அரசு மருத்துவராக இருந்திருக்க வேண்டும் போல, வார்த்தைகளில் கனிவு அதிகமாக இருக்கிறது.

கேன்சர் என்ற வார்த்தையை கேட்டதும் கண்கலங்கினான் அஞ்சலையின் மகன்.

“அய்யயோ!! ஏங்க இப்ப அழுவுறீங்க, ஒரு சந்தேகம்தான் டெஸ்ட்டு எடுத்தா அதுதானா இல்ல வேற ஏதும் சாதா கட்டியான்னு தெரிஞ்சிடும், நமக்கும் ட்ரீட்மென்ட் எடுக்க வசதியா இருக்கும், தோ பாருங்க அழுவுறத நிறுத்துங்க உங்க பேரு என்ன மொதல்ல சொல்லுங்க”

“கண்களை துடைத்துகொண்டவன் “மாதவன்” என்று பெயரை சொல்லி தொடர்ந்தான்..

“ சரி சார் எவ்ளோ செலவானாலும் பரவால்ல நீங்க டெஸ்ட் எடுங்க”

“இங்கயே எடுக்கலாம்தான் ஆனா எப்டி இருந்தாலும் முடிவு சென்னை போய்ட்டுதான் வரும், ஒருவாரம் ஆயிடும், நீ சென்னை போனினா அடையாறுல இதுக்குன்னே பெரிய ஆஸ்பத்திரி இருக்கு அங்க உடனே டெஸ்ட் எடுத்து மறுநாளே சொல்லிடுவாங்க மேற்கொண்டு எல்லா வைத்தியமும் அங்கேயே பாப்பாங்க ஆப்பரேஷன் பன்னுறதுனாலும் பண்ணுவாங்க, கவர்மென்ட் ஆஸ்பத்திரிதான் காசுலாம் இல்ல”

உடனே சென்னையில் இருக்கும் தங்கை நினைவுக்கு வந்துவிட்டாள் மாதவனுக்கு,

“சரிங்க சார் சென்னைக்கு எப்ப போகணும்??”

“உங்க விருப்பம், நோய் இப்ப என்ன ஸ்டேஜ்ல இருக்குன்னு டெஸ்ட் பாத்தாதான் தெரியும் அதுனால முடிஞ்சா அளவுக்கு சீக்கிரம் போங்க.. நாளைக்கே போனாலும் போங்க”

“நாளைக்குலாம் போறது கஷ்டம் சார், கொஞ்சம் பணம் ஏற்பாடு பண்ணிக்கனும்ல!! ஒரு வாரத்துல போய் பாக்குறேன் இப்போதைக்கு மருந்து எழுதி கொடுங்க” என்று கேட்டு வாங்கி கொண்டு வராண்டாவில் உட்கார்ந்திருந்த அஞ்சலையை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தான்.

“மெட்ராசா”, “அதிக செலவாகுமா”, “புத்து கெளம்பிட்டா”, “ஒண்ணுமில்லாத மனுசனுக்கே எல்லாம் வந்து சேருது”, “என்னால லாம் வரமுடியாது”, “உங்க தங்கச்சி இருக்குல்ல”, “என் புள்ளைங்கள யார் பாத்துப்பா”, “தாலி செயின் தான் இருக்கு அதையும் கேக்குறீங்களே” என்று வீடு ஒருவாரமும் அல்லோல பட்டது. நடப்பவற்றை பார்க்கும் பொழுது தனக்கு ஏதோ பெரியவியாதி வந்திருப்பதை உணர்ந்து கொண்டு மகன் ஏதாவது சொன்னானா? என்று பூசத்திடம் விசாரித்தார் அஞ்சலை.

புற்றுநோயென சந்தேகம் இருப்பதாக பூசத்துக்கு தகவல் தெரிந்தாலும் அஞ்சலைக்கு தெரிய படுத்தகூடாது என்பதால் “அதுலாம் ஒன்னும் சொல்லல ஏதோ டெஸ்ட் எடுக்கணுமாம் அதான்” என்று சூதானமாக முடித்து சென்னைக்கு வழி அனுப்பி வைத்தார் பூசம்.

மாதவனின் தங்கை வீட்டில் ஒருநாள் தாங்கி இருந்து மைத்துனரின் உதவியுடன் அடையாறு வந்து சோதனைக்கு உடபடுத்த பட்டார் அஞ்சலை. கட்டியில் ஊசியை நுழைத்து சீழும் இரத்தமும் எடுக்க பட்டு சோதனை முடிவு நாளை வெளியாகும் என்று அறிவிக்க பட்டது.

மறுநாள்-

சோதனை முடிவை கையில் வைத்து கொண்டிருந்த மருத்துவரின் எதிரில் மாதவனும் மைத்துனரும் அமர்ந்திருந்தனர்.

“இது புதுவிதமான கேன்சர் ங்க அம்பது நோயாளிங்கள்ள ஒருத்தவங்களுக்கு இது வருது, கை இடுக்கு நடுவயிறு, தொடை னு உடம்புல நாலைஞ்சி இடத்துல இப்ப கட்டி இருக்கு இன்னும் சில இடங்கள்ள வந்துகிட்டு இருக்கு, நோய் தாக்கின இடத்துலருந்து இரத்தம் போற இடமெல்லாம் புது கட்டிங்க வர வாய்ப்பு இருக்கு, சின்னதா கட்டி வந்தப்பயே கூட்டி வந்துருந்திங்கன்னா அதமட்டும் சர்ஜரி பண்ணி எடுத்துருக்கலாம் இப்ப நாலஞ்சி இடத்துல இருக்கு சோ ஆப்பரேஷன் லாம் பண்ண முடியாது ஒரு இடம்னா ரேடியேஷன் வச்சு க்யூர் பண்ணலாம் ஆனா வயசானவங்க தாங்க மாட்டாங்க சோ அதும் முடியாது, இப்போதைக்கு தள்ளி போடலாமே தவிர தவிர்க்க முடியாது” என குழம்பு சட்டியை கூடத்தில் போட்டு உடைத்தார் போல உடைத்துவிட்டார் அந்த மருத்துவர்.

எப்படியிருந்தாலும் எதிர்பார்த்த செய்திதான் என்பதால் கண்ணீர் வரவில்லை ஆனால் கவலை அதிகாமாயிருந்தது மாதவனுக்கும் மைத்துனருக்கும். பெற்றத் தாயின் இறுதிநாட்கள் எண்ணபடுகின்றன என்றால் எந்த மகனுக்குத்தான் பொறுக்க முடியும்?. ஒருவாரம் அடையாரில் தாங்கி வைத்தியம் பார்த்து கொண்டிருந்தனர். மருந்து மாத்திரை, படுக்கை, எடுப்பு சோறு, என்று தங்கையின் வீடு அலைந்தது. என்ன இருந்தாலும் வேலை பிழைப்பை விட்டு விட்டு எத்துனை நாள்தான் சென்னையில் கிடக்க முடியும்? ஒருநாள் மருத்துவமனையில் இருந்து தாயை அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான் மாதவன்.

“இது என்னாடி இது? உடம்பு சரியில்லனா மெலிஞ்சி போவாங்கனு பேரு, அஞ்சலைக்கு இப்புடி சத போட்டுருக்கு?!!” என ஊர் பெண்கள் ஆச்சர்ய அதிர்ச்சி காட்டும் அளவுக்கு மெலிதாக வீங்க துவங்கி இருந்தது அஞ்சலையின் உடல். இரண்டு நாள் போனது உறவுக்காரர்கள் வந்து பார்க்க துவங்கினர், அதில் ஒருவர் கொடுத்த விபரம்தான் பாண்டிச்சேரி கோரிமேடு பெரியாஸ்பத்திரி,

“சும்மா கண்ணாடி மாதிரி வச்சிருக்கான், நம்ப மேல வீட்டு கணேசனுக்கு இந்த வியாதிதானாம் அங்கதான் வச்சிருந்தாங்க இப்ப எவ்ளவோ பரவால்லியே!! நீங்க அங்க கூட்டி போய் வச்சிருந்து பாருங்க” என்ற அவரது ஆலோசனை மாதவனின் மனதை பிசைந்தது. எப்படியாவது தாயை குணபடுத்தி தீருவது என்ற வெறி அவனிடம்

அடுத்தநாள் பாண்டிச்சேரி பயணப்பட்டார் அஞ்சலை. இம்முறையும் மறுமகள் வர விரும்பவில்லை துணைக்கு ஒரு பெண் தேவை ஆயிற்றே? பூசத்தின் உதவி கோரப்பட்டது. மறுபேச்சு இன்றி கிளம்பிவிட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட பரிசோதனைகளை பார்த்துவிட்டு அங்குள்ள மருத்துவர்கள் பதிலேதும் சொல்லாமல் அனுமதித்து கொண்டனர்.

“என்ன டாக்டர் ஒண்ணுமே சொல்லமாட்டுறீங்க?”

“என்னங்க சொல்லுறது உங்களுக்கு என்ன விஷயம்னு புரிஞ்சிருக்கும் நீங்க இப்ப போய் கூட்டிட்டு வந்துருகிங்க? சரி வந்த வரைக்கும் நல்லது இங்க முடிஞ்ச அளவுக்கு ட்ரீட்மென்ட் கொடுப்போம், அதுக்கப்றம் கடவுள்தான் காப்பத்தனும் உங்களுக்கு எப்ப போயிடலாம்னு தோணுதோ அப்ப கெளம்புங்க “ என்றார் அவர்.

மருத்துவமனையின் வெள்ளை புடவையில் நூறு சதிவித நோயாளியாக காட்சி அளித்தார் அஞ்சலை, மருத்துவக்கல்லூரி என்பதால் அடிக்கு அடி மாணவர்களும் மருத்துவர்களும் வந்து வந்து செல்வார்கள். முதல் வாரம் வெற்றிகரமாக ஓடிய பொழுது வீக்கம் காரணமாக முற்றிலும் மாறுபட்டு விட்டது அஞ்சலையின் முகம். அஞ்சலையை அதிகம் தெரிந்தவர்களே உற்று பார்த்தால் கூட கண்டுபிடிக்க முடியாதபடிக்கு உடலும் முகமும் மாறிப்போய் இருந்ததோடு வலியின் அளவு பன்மடங்கு பெருகி இருந்தது.. வலி தாங்க முடியாமல் துடிப்பதும் பின் தூங்குவதும் சற்று ஆசுவாசம் ஆவதுமாக இருப்பார் அஞ்சலை. திட ஆகாரம் நிறுத்தப்பட்டு விட்டது, உறவுகள் உயிரோடு இருக்கும் போது ஒருமுறை பார்க்கும் விருப்பத்துடன் இங்கும் வந்து சென்றது, பேரபிள்ளைகளை அழைத்து கொண்டு ஒருநாள் மருமகளும் வந்து சென்றாள்

“இனிமே வச்சிருக்குறது வேஸ்ட் சார் நீங்க வீட்டுக்கு வேணாலும் கூட்டிட்டு போயிடுங்க” என்றார்கள் மருத்துவர்கள்.

மகன் வெளியில் சென்று அழுதான், பூசம் ஆற்றாமையில் சிநேகதியை கட்டிக்கொண்டு அழுதார்.

“யாருக்கும் ஒரு பாவமும் செய்யிலையே உனக்கு ஏண்டி இப்புடி ஒரு பெரும்பாடு வந்து சேர்ந்துது” அழுது கொண்டே கேட்டார்.

பேசுவதற்கு மட்டும் எஞ்சியிருந்த சக்தியை திரட்டி ஏதோ சொல்ல முற்பட்ட அஞ்சலையின் கண்களிலும் தண்ணீர். தொடர்ந்து பேசினார்.

“இல்லடி.. எனக்கு இது வரவேண்டிய ஒன்னுதான்.. ஒரு உயிர கொன்ன பாவிடி நான்”

பூசம் கண்களை துடைக்காமல் கேள்விக்குறியுடன் அஞ்சலையை நோக்கினார்…

“என்னாடி சொல்லுற?”

“இத்தினி நாளா உன்கிட்ட கூட சொல்லாத ஒன்ன சொல்ல போறேண்டி.. எம்மனச போட்டு அழுத்திகிட்டு கெடக்குறத உன்கிட்ட சொல்லிட்டனா இந்த உயிர் நிம்மதியா போயிடும்”

“……” பூசத்திடம் அமைதியும் கேள்விக்குறியும்

“எங்க மாமனார் பெருவியாதில கிடந்தாருல்ல.. அவர் தானா சாகலைடி”

பூசத்திற்கு நெஞ்சம் படபடப்பாக இருந்தது, மேற்கொண்டு என்ன நடந்திருக்கும் என்ற ஆவலோடு வீங்கி போன அஞ்சலையின் முகத்தை பார்த்து கொண்டிருந்தார்

“கெழவி செத்தப்புறம் அவர முகம் கோணாம பாத்துகிட்டுதானடி இருந்தேன், ஆனா அப்பலாம் வியாதி அதிகமா இல்லடி, ஆனா கொஞ்ச நாள்ல விரல்லாம் அழுவி ஊத்த ஆரம்பிசுட்டுடி.. பிள்ளைங்க வேற அடிக்கடி அந்த பக்கம் போய் பயப்பட்டுதுங்க.. எங்க மாமனார் என்கிட்ட நல்ல பேசுவார்ல!! ஒருநாள் அவராவே ‘ தாயி!! எலி பாசாலம் கெடச்சுதுன்னா வாங்கிட்டுவா நான் தின்னுட்டு செத்துடுறேன்’ ன்னு சொல்லி அழுதார். நானும் ஏன் மாமா இப்டிலாம் பேசுறீங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா போக போக வியாதி ரொம்ப அதிகமா ஆயிட்டு அதோட ஆஸ்துமாவும் சேந்துகிட்டு இருமிகிட்டே இருந்தாரு. அக்கம்பக்கத்து பிள்ளைங்க கூட நம்ப பிள்ளைங்களோட சேர்ந்து விளையாட மட்டுனுதுவோ, அவரு படுற வேதனையும் பாக்க முடியில அதாண்டி காப்பில எலிமருந்த கலந்து கொடுத்துட்டேன்”

“அடிப்பாவி சண்டாளி!!”

“ஆமாண்டி.. நான் பாவிதான் அதுக்குதான் இப்புடி அனுபவிக்கிறேன், காப்பிய குடிச்சிட்டு ‘என்னம்மா காப்பி கசக்குது?’ னு கேட்டார். நான் பேசாம நின்னேன். அவரு என்ன நெனச்சாருன்னு தெரில சிரிச்சுகிட்டே, ‘நல்லாரும்மா நல்லாரு’ னு சொல்லிட்டு படுத்துட்டாரு அதுக்கப்புறம் எந்திரிக்கவே இல்ல” என்று கதறி அழுதார் அஞ்சலை

பூசத்திற்கு வெறுப்பாக இருந்தது “இவ்ளோ நாள் நம்மகிட்ட இந்த விஷயத்த சொல்லவே இல்ல பாரு” மனதிற்குள் பொருமினார் “எப்புடி மனசு வந்து ஒரு உயிரை கொன்னுட்டு இவ்ளோ நாள் நிம்மதியா இருக்க முடிஞ்சிது இவளால?” வாழ்நாளில் முதல் முறை அஞ்சலையின் மீது வெறுப்புண்டானது பூசத்திற்கு

மருத்துவர்கள் வந்து சோதித்தனர், ஏதேதோ காகிதங்களை கோப்பாக தயார் பண்ணி கொடுத்தனர். கார் வந்தது அஞ்சலையை ஏற்றி கொண்டு பூசமும் மாதவனும் வீடு நோக்கி புறப்பட்டனர். பூசம் அதிகமாக ஒன்று பேசிக்கொள்ளவில்லை அவ்வபோது நோயாளிக்கு தேவையான பணிவிடைகளை மட்டும் செய்து கொண்டு வந்தார்.

இதோ ஒருவாரம் கடுமையாக ஓடிவிட்டது. வலியின் காரணமாக எழும் அஞ்சலையின் ஓல ஒலி மூன்று தெரு தாண்டி கேட்டது.. அதிகாலை அமைதியை கிழித்து கொண்டு கேட்கும் அஞ்சலையின் மரண ஓலம் வயதானவர்களை கொடுமை செய்வோருக்கான எச்சரிக்கி மணியாக பூசத்தின் காதுகளில் கேட்கும். ‘என்ன இருந்தாலும் உயிர் தோழி ஆயிற்றே யாரிடமும் இது பற்றி வாய் திறக்க வில்லை அவர், அடிக்கடி போய் அஞ்சலையை கவனமாக பார்த்து கொண்டார். பேசுவதற்கும் சக்தியற்று கிடந்த அஞ்சலையின் உயிர் எப்போது போகும் என்று சலித்து வெறுத்து விட்டனர் அனைவரும்.

நேற்று இரவு வழக்கத்திற்கு மாறாக எழுந்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் அஞ்சலை. அதை எண்ணித்தான் பூசத்துக்கு மனது தவித்தது “நேத்து ராத்திரி நல்லா பேசுனாளே.. அதுக்குள்ளையா முடிஞ்சிருக்கும்?” என்று நினைத்து கொண்டிருந்த நேரம் பொழுது வெள்ளென வெளுத்துவிட்டது. வண்டிகள் சாலையில் ஒவ்வொன்றாக ஓடத்துவங்கி விட்டன. மருமகள் எழுந்து வந்து ஏதோ எதிர்பார்த்தவளாய் அஞ்சலையின் வீட்டை நோக்கி விட்டு பால் பாக்கெட்டை எடுத்துகொண்டு உள்ளே சென்றாள்.

அதைப்பற்றி கவனிக்காமல் மீண்டும் எதிர்வீட்டை நோக்கிய பூசத்திற்கு அஞ்சலையின் மருமகள் கதவு திறந்து வெளிவருவது தெரிந்தது. வந்தவள் நேரடியாக அஞ்சலை படுத்துகிடக்கும் பகுதிக்கு சென்று அதிர்ச்சியுடன் “என்னங்க.. என்னங்க.. “ என்று கணவனை அழைத்தாள்

மகன் வந்தான் பார்த்துவிட்டு கதறி அழுதான் அஞ்சலையின் மகள் ஓடி வந்து அழுதாள்.. அது நடந்துவிட்டது.. அஞ்சலை கூடுவிட்டு பறந்துவிட்டார் என்று புரிந்தது பூசத்துக்கு கண்கள் ஆறாய் ஓடியது பழகிய தோழியின் பிரிவு தாங்கொணா துயரத்தை தருவித்தது.. தன்னை மறந்து கதறினார் பூசம்.. ஆனால் மறித்து போன அஞ்சலையின் முகத்தை காண ஏனோ தயங்கியது மனம். ஆலோடியிலேயே அமர்ந்துவிட்டார்.. அக்கம் பக்கம் கூடியது, வழிகூட்டி குளிப்பாட்டி கிடத்தினர், தப்பு கொட்டப்பட்டது, உறவுகள் வாய்க்கரிசி கூடை ஏந்தி வந்தன பாடை கழிகள் வெட்டப்பட்டு தயாராகி கொண்டிருந்தது. தெரிந்தவர்கள் பூசத்தின் வீட்டு வாசலில் வந்து அமர்ந்து கொண்டு பேசி கொண்டிருந்தனர் பூசத்தின் மருமகள் முடிந்தவரை டீயெல்லாம் போட்டு கொடுத்து நற்பேறு சம்பாதித்து கொண்டிருந்தாள்.

தண்ணீர் தூக்கிவந்து குளிப்பாட்டி பாடையில் கிடத்தினர். “போக போறா, ஒரேடியாக போ போறா இனிமே பாக்க முடியாது” என்ற உணர்வு தொண்டை குழியை அடைத்தது பூசத்திற்கு “அஞ்சலை….” என்று கதறி கொண்டு ஓடிப்போய் மாரிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைத்து ஒப்பற்ற தோழியை வழி அனுப்பினார் பூசம்.

கூட்டம் கலைந்தது. இழவு வீட்டிற்கு உரிய ரோஜா சாமந்தி நறுமணம் வீதியையும் வீட்டையும் நிறைத்திருந்தது.. இருள துவங்கிய பொழுது ஏதோ ஹோட்டலில் ஆர்டர் கொடுத்திருந்த சாப்பாடு வந்து இறங்கவே அஞ்சலையின் மருமகள் பூசத்தின் வீட்டினரை சாப்பிட அழைத்தாள்.

“எனக்கு தீட்டு வீட்டு சாப்பாடு ஒத்துக்காது நீங்க போய் சாப்பிட்டு வாங்க” என்று பூசத்திடம் கூறினாள் மருமகள். கனமான மனதுடன் போய் அஞ்சலை கிடத்த பட்டிருந்த இடத்தில் அமர்ந்தார். இலை போடப்பட்டு சோறு குழம்பு கூட்டு வகைகள் பரிமாற்ற பட்டது யாரிடமும் பேசாமல் சாப்பிட்டார். அஞ்சலை இல்லாத வீட்டில் சாப்பிடும் முதல் சாப்பாடு, இதுவே கடைசியாகவும் இருக்கும். சாப்பிட்டு முடித்து இலையை மடக்கி கொள்ளை புறம் எடுத்து சென்றார் எப்போதும் இருட்டாக இருக்கும் பகுதிகள் கூட தற்காலிக மின்விளக்கு வெளிச்சத்தில் மிதந்தது, குப்பை மேடிருக்கும் பகுதிக்கு சென்று இலையை வீசி திரும்பும் பொழுது கண்களில் ஏதோ பளிச்சென பட்டது. குனிந்து பார்த்தார். ஏதோ பெருகாய பாக்கெட் போல தெரிந்தது. பளபப்பான ஜிகினா தாளில் கண்களுக்கு புலப்பட்ட எழுத்துகளை கூட்டி படித்தார் “எலிமருந்து” என்று கொட்டையாக எழுத பட்டிருந்தது.

ஒருகணம் உற்று பார்த்து எதையோ யோசித்தார், மனம் மிகுந்த பாரமாய் இருக்கவே உடனே அங்கிருந்து நகர்ந்துவிட்டார். நீங்களும் வந்துவிடுங்கள் அது எதேச்சையாக கூட கிடந்திருக்கலாம்.

Print Friendly, PDF & Email

3 thoughts on “முற்பகல் செய்யின்…

  1. தீபன் இன்னும் நான் கதையை விட்டு வெளியேவரவில்லை , முடிவு அற்புதம்

  2. மிக நன்றாக இருந்தது . முடிவு மனதை தொட்டது.

  3. அஞ்சலையின் மரண வீட்டில் நானும் அழுதேன் பூசத்தோடு சேர்ந்து . உணர்வுபூர்வமான, அற்புதமான கதை . ஆசிரியருக்கு அன்பான வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *