முத்துச் சிப்பி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2024
பார்வையிட்டோர்: 198 
 
 

1-5 | 6-10 | 11-15

6.கொம்பும் கொடியும்

நாகராஜன் ஊருக்குக் கிளம்பு முன் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துத் தங்கையிடம் கொடுத்தான்.

“எதற்கு அண்ணா இது? என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறதே. தேவையானால் எழுதி வாங்கிக் கொள்கிறேன்” என்றாள் பவானி.

”இருக்கட்டும் பவானி. இன்னும் பத்து நாட்களில் பாலுவுக்குப் பள்ளிக் கூடம் திறந்து விடுகிறார்கள். புஸ்தகம் வாங்கிச் சம்பளம் கட்ட வேண்டாமா? வைத்துக் கொள்.”
பவானி சிரித்தாள்.

“மருமகன் பெரிய படிப்பு படிக்கிற மாதிரி தான் உன் எண்ணம். ஒண்ணாவது படிக்கிறவனுக்குப் புஸ்தகம் வாங்க நூறு ரூபாய் வேண்டுமா என்ன?”

பவானி இப்படி ஒவ் வொரு விஷயத்துக்கும் தர்க்கம் செய்து பேசுவது கோமதிக்குப் பிடிக்கவில்லை. புருஷன் போய் விட்டான். பிரமாதமாகச் சொத்து ஒன்றும் அவன் வைத்து விட்டுப் போகவில்லை. கூட வருவதற்கு ஆயிரம் ஆட்சேபணைகள் சொல்லிவிட்டாள். பள்ளிக் கூடம் திறந்தால் இருக்கட்டும் என்று பணம் கொடுத்தால் ”இது எதற்கு?’ என்கிறாள். கர்வம் பிடித்தவள் என்று நினைத்து கோமதி கணவனைக் கோபமாக விழித்துப் பார்த்தாள்.

இடையில் அடுத்த வீட்டிலிருந்து கல்யாணம் வந்தார். வந்தவர் பேசாமல் இருந்தாரா? அப்படி இருப்பது தான் மனித சுபாவமே இல்லையே!

‘என்ன ஸார்! ஊருக்குக் கிளம்புகிறீர்களா?” என்று கேட்டு வைத்தார் .

“ஆமாம் ஸார்! வந்த வேலை ஆயிற்று. கிளம்ப வேண்டியதுதானே?” என்று சலிப்புடன் நாகராஜன் கூறினான்.

“ஹும்… ஊருக்குக் கிளம்புகிறீர்கள். ஆமாம்….. ஆபீஸ் என்றும், வேலை என்றும் ஒன்று இருக்கிறதே. எத்தனை நாட்களுக்கு ஒரு இடத்தில் இருக்க முடியும்? அவரவர் வேலையை அவரவர் செய்தாக வேண்டுமோ இல்லையோ ஹும்…”

’தங்கையைத் தனியாக விட்டு விட்டுப் போகிறாயே அவளுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டாம் நீ’ என்று கேட்பதற்குப் பதிலாக அவர் ஏதோ சுற்றி வளைத்துப் பேசுகிறார் என்பது கோமதிக்குப் புரிந்து போயிற்று.

“அவரவர் வேலையை அவரவர் இருக்கிற இடத்தில் இருந்து கொண்டுதானே மாமா செய்ய வேண்டும்? இன்னொரு இடத்தில் வந்து உட்கார்ந்து செய்ய முடியுமா? அதுவும் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு நாள் கூட வெளியே போக முடியாது. பத்து தினங்களாக இங்கே இருந்ததே மேல். இன்னும் எத்தனை நாட்கள் இருப்பது?” என்று கேட்டு விட்டுக் கோமதி. அருகில் நின்று கொண்டிருந்த பவானியை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

இந்தப் பத்து தினங்களில் கல்யாணம் கோமதியின் சுபாவத்தை நன்றாகப் புரிந்து கொண்டவர். வீட்டிலே பிறந்த பெண். மணத்தை இழந்து வாடும்போது தன்னுடைய சுகத்தில் ஒன்றும் குறைவு ஏற்படக்கூடாது என்று நினைப்பவள் கோமதி.

கல்யாணராமன் கோமதிக்கு ஒன்றும் பதில் கூறவில்லை. அவருடைய சிந்தனை வேறு எங்கோ லயித்துக் கிடந்தது. உற்றாரும் உறவினரும் இருந்தும், ஒரு பெண்ணுக்கு தனிமை என்பது எப்பொழுது ஏற்படுகிறது என்று சிந்திப்பதில் முனைந்திருந்தார் அவர். உடன் பிறந்த அண்ணனும், பெற்று வளர்த்த பெற்றோரும் இருந்தால்கூட. கட்டிய கணவன் இல்லாமல் போகும் போது அவள் தனிமையில் சிக்கி வாடுகிறாள்.

ஒரு பெரிய நந்தவனம். அதில் மல்லிகை, இருவாட்சி, ரோஜா, கனகாம்பரம், மருக்கொழுந்து முதலிய மலர்ச் செடிகள் நிறைந்திருக்கின்றன. தோட்டக்காரன் ஒரு முல்லைக் கொடியை நட்டுப் பயிர் செய்கிறான். கொடியும் செழித்து வளர ஆரம்பிக்கிறது. கப்பும் கிளைகளுமாகப் புதருடன் மண்டி வளருகிறது. அப்பொழு-தெல்லாம் தோட்டக்காரன் கவலைப்படுவதில்லை. எல்லாச் செடிகளையும் போலச் செழுமையாக வளருகிறது என்றே நினைத்து ஆறுதல் அடைகிறான்.

ஆனால் சில மாதங்களுக்கு அப்புறம் அந்தச் செடியிலிருந்து தனித்தனியே பல கொடிகள் தோன்றுகின்றன. மெல்லிய காற்றிலே அசைந்தாடுகின்றன. பற்றிக் கொண்டு படர ஊன்று கோல் இல்லாமல் தவிக்கின்றன. தோட்டக்காரன் சிந்தனை செய்கிறான். நல்ல கொம்பாக ஒன்றைத் தேடி எடுத்து வந்து அருகில் நட்டு அதன் மீது கொடிகளைச் சேர்த்துப் படர விடுகிறான். முல்லைக் கொடி கொழு கொம்பைப் பற்றிக் கொண்டு பந்தலின் மீது படர்ந்து வெள்ளை மலர்களைத் தாங்கி நிற்கிறது.

ஒரு பெண்ணும் அண்ணன் தம்பிகளுடன் ஒரு குடும்பத்தில் பிறக்கிறாள். அவர்களிடையில் வளருகிறாள். அவள் மங்கைப் பருவத்தை அடையும் வரை அவளைப் பற்றிப் பெற்றோர் அவ்வளவாகக் கவலைப் படுவதில்லை. தள தளவென்று வளர்ந்து வாளிப்பாகத் தன் முன் நிற்கும் மகளைப் பார்த்து தாய் முதலில் கவலைப் படுகிறாள். ”பார்த்தீர்களா நம் மகளை? எப்படித் திடீரென்று வளர்ந்து விட்டாள் ! இனிமேல் நீங்கள் கவலையில்லாமல் தூங்க முடியாது” என்று கணவனை எச்சரிக்கிறாள். தந்தையும் மகளைப் பார்த்துப் பிரமித்துத்தான் போகிறார். மண்ணில் சிறு வீடுகள் செய்து விளையாடிய பெண்ணா இவள்? பந்துக்காகச் சகோதரர்களிடம் சண்டை-யிட்டவளா இவள்? ’அப்பா’ என்று அழைத்து மடியில் உட்கார்ந்து கதை பேசிய கண்மணியா இவள்? எப்படி வளர்ந்து விட்டாள்!’ என்று ஆச்சரியம் ததும்ப மகளைப் பார்க்கிறார்.

”நல்ல இடமாக வந்தால் பாருங்கள். காலத்தில் கல்யாணம் செய்து கொடுத்து விடலாம்” என்கிறாள் தாய்.

நல்ல நாயகனை, கொடிக்குத் தேவையான கொழு கொம்பைத் தேடுகிறார் தந்தை. மணமுடித்து வைக்கிறார். மனதிலே ஆறுதலும் திருப்தியும் அடைகிறார்கள் பெற்றோர்.

ஆனால் முல்லைக் கொடிக்கு ஆதாரமாக ஊன்றிய கொழு கொம்பை ஒரு பேய்க்காற்று, புயல், சூறாவளி அலைக்கழித்துத் தரையில் சாய்த்து விட்டுப் போய் விடுகிறது. முல்லைக் கொடி பற்றிப்படரக் கொம்பில்லாமல் தவக்கிறது. காற்றிலே ஊசலாடுகிறது.

இதைப் போலத்தான் இருக்கிறது பவானியின் வாழ்க்கை என்கிற தீர்மானத்துக்குக் கல்யாணராமன் வந்த போது. கூடத்தில் நின்றிருந்த கோமதியைக் காணோம். அவள் வண்டியில் போய் ஏறிக் கொண்டு விட்டாள். நாகராஜன் மட்டும் அவர் அருகில் நின்றிருந்தான்.

“ஊருக்குப்போய்விட்டு வருகிறேன் மாமா. பவானியைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவசியமானால் அவளைப் பற்றி எனக்கு ஏதாவது செய்தி இருந்தால் தெரிவிக்க அஞ்சாதீர்கள்” என்று அவரிடம் கூறி விடை பெற்றுக் கொண்டான்.

தமையனும் மன்னியும் ஏறிச் செல்லும் வண்டி தெருக் கோடியைத் தாண்டிப் போகும் வரையில் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் பவானி. அவள் அருகில் வந்து நின்ற பார்வதியைச் சிறிது நேரம் பவானி கவனிக்கவில்லை .

“பவானி! என்ன அப்படி ஒரேயடியாக எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று அன்புடன் கேட்டு அவள் சிந்தனையைக் கலைத்தாள் பார்வதி.

7.மூர்த்தி வருகிறான்!

அவள் கண் எதிரே சுவரில் காணப்பட்ட அந்தப் பதினைந்தாம் தேதி தான் அவள் மனத்துள் எத்தகைய சிந்தனைகளை எழுப்பிவிட்டது? பழைய நினைவுகளில் லயித்துப் போய் உட்கார்ந்திருந்த பவானி, அடுப்பில் பால் பொங்கி வழிவதைக் கூடக் கவனிக்கவில்லை. கல்யாணராமன் கொடுத்த பால் ‘சுரு சுரு’ வென்று பொங்கி, பாதிக்கு மேலாக அடுப்பில் வழிந்து போன பிறகு தான் பவானி தன் சுய உணர்வை அடைந்தாள்.

அடுப்பிலிருந்து பாலை இறக்கிக் காப்பி போட்டு முடித்தவுடன், பாலு கொல்லைப் பக்கத்தில் இருந்து பல் தேய்த்துக் கொண்டு உள்ளே வந்தான். அம்மாவின் அருகில் சென்று உட்கார்ந்து அவள் கொடுத்த காப்பியை வாங்கிக் குடித்தான். சிறிது நேரம் இருவருமே பேசாமல் இருந்தார்கள். பவானி மகனின் முகத்தை ஆசையுடன் பார்த்தாள்,

”பாலு! உனக்கு எத்தனாம் தேதி பள்ளிக்கூடம் திறக்கிறார்கள்?” என்று கேட்டாள்.

“ஜுன் மாசம் பன்னிரண்டாம் தேதி திறக்கிறார்கள் அம்மா. மே மாசம் பத்து தேதிக்குள் – ரிஸல்ட்’ சொல்லி விடுவார்கள்.”

அப்போ நீ பாஸ் பண்ணி விடுவாயோ இல்லையோ? கணக்கிலே நீ புலியாயிற்றே. அதனாலே கேட்கிறேன்” என்று பாதி கேலியாகவும், பாதி கவலையுடனும் விசாரித்தாள் பவானி.

பாலு கன்னங் குழியச் சிரித்தான். *ஓ! பாஸ் பண்ணி விடுவேனே ! கணக்கெல்லாம் சரியாகப் போட்டிருக்கிறேன். சமூக நூலில் நான் தான் முதலாகப் பாஸ் பண்ணுவேன். சரித்திரம் அப்படியே ஒரு கேள்வி விடாமல் எழுதி இருக்கேன். அதோடே அம்மா, வாத்தியார்களுக்கெல்லாம் என் பேரிலே கொள்ளை ஆசை. அவர்களுக்கு இடைவேளையின் போது நான் போய் டீ வாங்கி வந்து கொடுப்பேன். கிளாஸிலே பானைத் தண்ணீர் பிடித்து வைத்து கண்ணாடித் தம்ளரை அலம்பி சுத்தமாக வைப்பதும் நான் தான். நம் வீட்டிலிருந்து உனக்குத் தெரியாமல் இரண்டு ஏலக்காய்களை எடுத்துப்போய்த் தட்டி அதிலே போட்டு வைத்து விடுவேன். நல்ல பங்குனி மாசத்து வெயில் வேளையிலே ஏலக்காய் போட்ட ஜலத்தை சாப்பிட்டு என்னை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். கவனித்தும் மார்க்குகள் போடுவார்கள் அம்மா!”

பவானிக்கு மகிழ்ச்சியும் கோபமும் போட்டி போட்டுக் கொண்டு கிளம்பின. இந்தப் பிள்ளை இப்படிப் படிப்பில் அக்கறை இல்லாமல் தண்ணீரிலே ஏலக்காய் போட்டு உபாத்தியாயர்களிடமிருந்து மார்க்கு வாங்கப் பிரயாசைப் படுகிறானே! உண்மையிலே உழைத்துப் படித்தால் பாலு எவ்வளவு கெட்டிக்காரனாக இருப்பான்?’ என்று நினைத்து வேதனைப் பட்டாள் அவள்.

தாயின் முகத்தில் தேங்கி நிற்கும் கவலையைப் பார்த் ததும் பாலு. “அம்மா கட்டாயம் நான் பாஸ் பண்ணி விடுவேன் அம்மா?.அடுத்த தடவை என்னை எந்தப் பள்ளிக்-கூடத்தில் சேர்க்கப் போகிறாய்?” என்று கேட்டு அவள் முகத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் பதில் கூறுவதற்குள் தெருவில் அவனுடைய சிநேகிதர்கள் வந்து அழைத்தார்கள். பாலு விளையாடுவதற்காக வெளியே எழுந்து சென்றான்.

முற்றத்து வெயில் தாழ்வாரத்தில் ஏறி வந்து கொண்டிருந்தது. பவானி குளித்துச் சமையல் செய்வதற்காக கொல்லைப்புறம் போக ஆரம்பித்தவள் தெருக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு நின்றாள்.

வாசல் கதவைத் திறந்து கொண்டு நடுத்தர வயதினனான வாலிபன் ஒருவன் வந்தான். நல்ல உயரமும், மிடுக்கான பார்வையும், எடுப்பான நாசியும், அழகான பதாற்ற-முமுடைய அவன் அவளைப் பார்த்ததும் புன் சிரிப்புடன், “கல்யாணராமன் வீடு இதுதானே? டில்லியில் அக்கௌண்ட்ஸ்’ ஆபீசில் இருந்து ரிடையர் ஆனவர். அவரைப் பார்க்க வேண்டும்” என்று கேட்டான்.

பவானி சிறிது நேரம் தயங்கி நின்றாள். பிறகு நிதானமாக, ”இதுவும் அவர் வீடுதான். ஆனால் அவர் இங்கு இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கிறார். இங்கே நாங்கள் குடியிருப்பவர்கள்” என்று கூறினாள்.

“ஓ! ஐஸி! அதுவும் மாமாவின் வீடுதானா? பக்கத்து வீட்டையும் வாங்கி விட்டார் போலிருக்கிறது. நான் இந்தப் பக்கம் வந்து ஆறேழு வருஷங்கள் ஆயிற்று. என் தாயார் அவருடைய கூடப் பிறந்த தங்கை. அவள் போன அப்புறம் மாமாவை நான் பார்க்கவேயில்லை” என்று வந்திருந்த இளைஞன் பேசிக்கொண்டே நின்றான்.

பவானிக்கு என்னவோ போல் இருந்தது. அவளுக்கு இப்படியெல்லாம் பிறரிடம் பேசிப் பழக்கம் இல்லை. நெஞ்சில் உறுதியும், தைரியமும் வாய்ந்தவளாக இருந்தாலும் நடைமுறையில் அவள் வெகு சங்கோஜி. கட்டிய கணவனிடமே அவள் மனம் விட்டுப் பழகப் பல மாதங் கள் ஆயிற்று. ஆகவே தயக்கத்துடன் அவனைப் பார்த்து “இப்படி பெஞ்சியில் உட்காருங்கள். நான் போய் உங்கள் மாமாவையும் மாமியையும் அழைத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

வந்திருந்த இளைஞன் வெகு சுவாதீனமாகப் பெஞ்சியில் வந்து உட்கார்ந்து கொண்டான். பிறகு, “நோ! நோ! அனாவசியமாக உங்களுக்கு ஏன் சிரமம்? நானே போகிறேன்” என்று சொல்லிக் கொண்டு எழுந்தான். அதற்குள் பவானி கொல்லைப்-புறம் சென்று பார்வதி அம்மாளையும் கல்யாணராமனையும் அழைத்து வந்தாள்.

பார்வதி அம்மாள் ஒரு நிமிஷம் தயங்கியபடி அவனைப் பார்த்தாள். ’சட்’டென்று புரிந்து கொண்டவள் போல், ”யார்? மூர்த்தியா? எப்போடா வந்தே?” என்று கேட்டாள்.

கல்யாணராமன் மட்டும் ஒன்றுமே பேசவில்லை. பிறகு வீட்டிற்கு வந்தவனுடன் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்கிற காரணத்தினாலோ என்னவோ. ”மூன்று வருஷமாக உன்னிடமிருந்து கடிதமே வரவில்லையே! எங்கே, என்ன பண்ணிக் கொண்டிருந்தாய்? ”என்று கேட்டார்.

மூர்த்தி, சுருள் சுருளாக வாரிவிடப்பட்ட தன் கிராப் தலையைத் தடவிக் கொண்டான்.
உண்மையைச் சொல்லுவதா அல்லது அத்துடன் கற்பனையையும் கலந்து சரடு திரிப்பதா என்பது புரியாமல் சிறிது நேரம் யோசித்தான். அப்புறம் ஏதோ தீர்மானத்துக்கு வந்தவன் போல் “பம்பாயில் கபாதேவியில் ஒரு பெரிய துணிக்-கடையில் மானேஜராக இருந்தேன். அவர்கள் தான் என்னை இந்தப் பக்கம் அனுப்பி புதிசாகக் கடை திறந்தால் வியாபாரம் நடக்குமா என்று பார்த்து வர அனுப்பி-யிருக்கிறார்கள்” என்றான்.
”ஓஹோ! அப்படியா? சந்தோஷம் அப்பா. உன் அம்மா இருக்கிற வரைக்கும் தான் நீ எதிலும் நிலைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தாய். வகையாகக் கண்ணியமாக என் பிள்ளை இருக்கப்போகிறானா?’ என்று அவள் என்னிடம் சொல்லி அரற்றிக் கொண்டே இருந்தாள். இனிமேலாவது ஒழுங்காக இருந்தாயானால் சரி’ என்று கூறிவிட்டுக் கல்யாணராமன் வீட்டுக்குப் போக எழுந்தார்.

மூர்த்தியின் முகம் வாட்டமடைந்தது. யாரோ முன்பின் தெரியாத ஒரு பெண் எதிரில் மாமா சட்டென்று தன் பூர்வ காலத்தைப் பற்றிப் பேசிக் கௌரவத்தைக் குலைத்தது மூர்த்திக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பவானியை அவன் ஒரு மாதிரியாகப் பாத்து கொண்டே, பார்வதியிடம், “என்ன மாமி! பேச்சுத் துணைக்கு இருக்கட்டும் என்று குடி வைத்திருக்கிறீர்கள்போல் இருக்கிறது. வேண்டியது தானே?” என்று கேட்டான்.

“ஆமாண்டா அப்பா! வயசானவளாக இருந்தாலும் என்னைப்போல ஒண்டிக்கட்டையாக எனக்கு இருக்கப் பிடிக்காதுடா. நீ தான் உன்னைப் பச்சைக் குழந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். உனக்கு இந்த மாசியோடு முப்பத்தி ஒன்று வயசு ஆகிவிட்டதே. காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால்
மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன் ஆகியிருப்பாய். பிரமசாரிக் கட்டையாய் ஊர் ஊராய்ச் சுற்றிக் கொண்டு, நீயும் உன் போக்கும்! ஹும்… எழுந்திருந்து பெங்கள் வீட்டுக்கு வா. குளித்துச் சாப்பிடலாம்” என்று பார்வதி மேலும் அவனைப் பேச விடாமல் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

பவானிக்கு எல்லாம் ஒரே வியப்பாக இருந்தது. சம்பாதிக்கும் ஒரு கண்ணியமான யுவன், ஏன் பிரம்மசாரியாக இருக்க வேண்டும்? மூர்த்திக்கு என்ன அழசில் குறைவா? படிப்பில் குறைந்தவனாகவும் தோன்றவில்லை.

பவானியின் மனதில் சட்டென்று ஒரு எண்ணம் மதித்தது . யார் எப்படி வேண்டு-மானாலும் இருக்கட்டும். அவன் இங்கு வருவதற்கோ , தன்னுடன் பேசுவதற்கோ எந்த விதமான சந்தர்ப்பத்தையும் அவள் ஏற்படுத்திக் கொள்ளமாட்டாள். அதற்கு அவசியமும் இல்லை .

பாலு விளையாடி விட்டுப் பசியுடன் திரும்பி வருவான் என்கிற எண்ணம் எழுந்ததும் பவானி அவசரமாகச் சென்று குளித்துச் சமையல் வேலையில் ஈடுபட்டாள்.

8.பசுமலையும் பம்பாயும்

பார்வதி அம்மாளுடன் எழுந்து சென்ற மூர்த்தி, நேராகக் கொல்லைப் புறம் சென்று கை கால்களை அலம்பிக் கொண்டு உள்ளே வந்தான். அவன் பார்த்த இடங்களில் எல்லாம் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களுடன் இக்கிராமத்தையும் அந்த வீட்டையும் ஒப்பிட்டால் பசுமலை கொஞ்சம் கூட மாறவில்லை என்று தோன் றியது அவனுக்கு. அங்கங்கே மேடிட்ட நிலங்கள், அதன் வரப்பு ஓரங்களில் இருக்கும் கிணறுகள், அவற்றி லிருந்து இறைக்கப்படும் நீர் வாய்க்கால்களில் சுழன்று – ஓடி நிலங்களுக்குப் பாயும் காட்சி, வயல்களில் பாடுபடும் பாட்டாளி மக்கள். அவர்கள் வாழ்க்கை எள்ளளவாவது மாறி இருக்கிறதா என்றால் அதுதான் கிடை யாது. பம்பாயில் வானளாவும் கட்டிடங்களும், செல்வந்தர்கள் கூடிக் குதூகலிக்கும் ’நைட் கிளப்பு’களும் மூர்த்தியின் மனத்திரை முன்பு எழுந்தன. அங்கேதான் எத்தகைய மலர்ச்சி? அரம்பையர் போல் நாகரிகத்தில் மூழ்கித் திரியும் யுவதிகளும், யுவர்களும் அந்த நகரத்தை ஒரு பூலோக சுவர்க்கமாக அல்லவா மாற்றி இருக்கிறார்கள்!

பசுமலையின் மேட்டுக் கழனியில் தான் கிராமத்து ஏழை மக்கள் குடி இருந்தார்கள். பனை ஓலைகளால் வேய்ந்த குடிசைகள். காற்றினாலும் மழையினாலும் பிய்க்கப்பட்ட அதன் கூரைகளைப் பார்த்தால் பம்பாயின் பிரும்மாண்டமான மாளிகைக்குள் இருப்பவர்களும் இவர்களும் ஒன்றேதானா? மனிதனுக்கு மனிதன் வாழ்க்கைத் தரத்தில் இவ்வளவு வித்தியாசத்துடன் இருப்பதேன்? என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றும்.

ஆனால் மூர்த்தி ஒரு சீர்திருத்த வாதியோக உன்னத லட்சியங்களுக்கு இருப்பிட-மானவனோ அல்ல. கிராமத்தின் வாய்க்காலிலிருந்து அவன் மாமா வீடு வரையில் மாறவே இல்லையே என்று நினைத்துத்தான் அவன் வியப்பில் ஆழ்ந்து போனான்.
இந்த யோசனையுடன் அவன் கொல்லைத் தாழ்வாரத்தைத் தாண்டி வரும் போது வாசற்படியில் ‘ணங்’ கென்று தலையில் இடித்துக் கொண்டான்.

”தலையில் இடித்துக் கொண்டாயாடா மூர்த்தி? குனிந்து வரமாட்டாயோ?” என்று கேட்டுக் கொண்டே பார்வதி சமையல் அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள்.

“ஊர் தான் மாறவில்லை என்றால் வீட்டையாவது மாற்றிக் கட்ட மாட்டீர்களோ? வாசற்படிகளையாவது இடித்துப் பெரிதாக வைக்கமாட்டீர்கள்?” என்று சொல்லிக் கொண்டே மூர்த்தி சமையல் அறையில் போய் உட்கார்ந்தான்.

அவன் எதிரில் வாதாம் இலையைப் போட்டு முறுகலாக நாலு தோசைகளை வைத்தாள் பார்வதி அம்மாள். அதற்கு மிளகாய்ப் பொடியும் எண்ணெயும் போட்டுவிட்டு அவன் அருகில் மணையின் மேல் உட்கார்ந்தாள்.

ஊர் ஊராக ஓட்டல்களில் சாப்பிட்டு அலுத்துப் போயிருந்த மூர்த்திக்கு இந்தத் தோசையும் காப்பியும் அமிருதமாக இருந்தது.

”இப்படி நான் ‘ஹோம்’லியாகச் சாப்பிட்டு எத்தனையோ வருஷங்கள் ஆயிற்று மாமி” என்று பரம திருப்தியுடன் சொன்னான் மூர்த்தி.

“அதென்னடா அது? என்னவோ எலி, பூனை என்று பேசுகிறாயே, பம்பாயிலே எலி உபத்திரவம் அதிகமா என்ன?” என்று கேட்டாள் பார்வதி அம்மாள். மூர்த்தி ‘கட கட’ வென்று சிரித்தான்.

அவன் சிரித்து முடிப்பதற்குள் கல்யாணம் இதைக் கேட்டுக்கொண்டு உள்ளே வந்தார்.
“ஆமாம், அங்கே எலிகள் உபத்திரவம் அதிகம் தான் நம் வீட்டு மச்சில் பூனைக்குட்டிகள் இருக்கின்றனவே. அதிலே ஒன்றை அவன் பம்பாய் போகும்போது கொடுத்து அனுப்பு!”

கணவர் தன்னைக் கேலி செய்கிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. முகத்தை ஒரு நொடிப்பு நொடித்து விட்டு அவள்.

”மூர்த்தி! உன் மாமா ஏதாவது கொஞ்சமாவது மாறி இருக்கிறாரா, பார்த்தாயா? அதே பேச்சு, அதே பரிகாசம்! இப்படித்தான் ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்” என்றாள்.

”உன் மாமி மட்டும் ரொம்ப மாறி இருக்கிறாளோ? அப்படியே சின்னப்பெண் மாதிரி ஒடிசலான உடம்பும், படிப்படியான கூந்தலும், அப்படியே இருக்கிறாள். அன்று கழுத்திலே மூன்று முடிச்சுகள் போட்டு விட்டு அவளைப் பார்த்தபோது எப்படி என்னைப் பார்த்து முறுவலித்தாளோ அப்படியே இருக்கிறது இன்றும் அவள் சிரிப்பது!” என்று கல்யாணம் தம் மனைவியைப் பற்றிப் புகழ்வதில் ஈடுபட்டார்.

தெருவிலே ஒரே இரைச்சல் கேட்டது. பெரியவர்களும், பெண்களும், குழந்தைகளுமாக எல்லோரும் சேர்ந்து ஏகமாகச சத்தம் போட்டார்கள். கல்யாணராமன் உள்ளேயிருந்து வெளியே வந்தார். மூர்த்தியும் என்ன இரைச்சல் என்று பார்ப்பதற்காக வாசலுக்கு வந்தான். அங்கே பெரியவர்களாக ஆண்களில் நாலு பேர் நின்றிருந்தார்கள். நடுத்தர வயதுடைய பெண்களில் நாலைந்து பேர்; மற்றும் குழந்தைகளின் கூட்டம்.

“என்ன விஷயம்?” என்று விசாரித்தார் கல்யாணம் அமைதியை இழக்காமல்.

” என்ன விஷயமா? இந்தப் பையன் தினம் குளிப்பதற்கு எங்கே போகிறான் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே பாலுவைக் கையில் பிடித்து இழுத்துக் கொண்டு முன்னாலே வந்தார் சேஷாத்ரி என்கிற ஒரு பெரியவர்.

கல்யாணம் பாலுவை ஏற இறங்கப் பார்த்தார். தண்ணீரில் நனைந்து, பாதி உலர்ந்ததும் உலராததுமாக இருக்கும் கிராப்புத் தலை. இடுப்பிலே அரை நிஜார் சொட்டச் சொட்ட நனைந்திருந்தது. பயத்தால் அவன் திரு திருவென்று விழித்து எல்லோரையும் பார்த்தான்.

இதற்குள்ளாக இந்த இரைச்சலைக் கேட்டு பவானியும் வெளியே வந்தாள். அவள் வெளியே வராமல் இருந்தால் அதிகமாகப் பேச்சு வளராமல் போயிருக்கும். பாலுவின் தாயைப் பார்த்ததும் அங்கிருந்த ஸ்திரீகளின் கோபம் அதிகமாயிற்று. “இந்த மாதிரி ஒரு துஷ்டத்தனம் உண்டா ? நல்ல குழந்தை !” என்றாள் ஒருத்தி.

”குழந்தையை வளர்க்கிற லட்சணம் அப்படி!” என்று குழந்தை வளர்ப்பைப்பற்றி விமரிசனம் செய்தாள் மற்றொருத்தி.

“அடியே! கேட்டதில்லையோ நீ! கைம்பெண் வளர்த்த மகன் கழிசடை என்று” என்று ஒருத்தி எல்லை மீறிப்பேச ஆரம்பித்தாள்.

பவானி பிரமை பிடித்தவள் போல் நின்றிருந்தாள். கைம்பெண்ணாக இருந்தால் அவள் தான் பெற்ற குழந்தையைக்கூட வளர்க்க அருகதை அற்றவளாகப் போய் விடுகிறாளா? சமூகத்திலே பல்வேறு காரணங்களால் ஒதுக்கப்படவேண்டியவர்கள் தானா?

பாலு தாயைப் பயத்துடன் பார்த்துக்கொண்டே நின்றான்.

கல்யாணராமன் பேச ஆரம்பித்தார்.

”அந்தப் பையன் என்ன செய்தான் என்று ஒருத்தருமே சொல்லாமல், நீங்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகிறீர்களே?” என்று கேட்டார்.

”என்ன செய்தானா பொழுது விடிந்ததும் விடியாததுமாக இருக்கும்போதே இந்தப் பையன் வந்து என் பையனைக் கிணற்றில் குளிப்பதற்குக் கூப்பிடுகிறான் சார்! மிதந்து வைத்தால் யார் பதில் சொல்கிறது போலீஸுக்கு? சிவனே என்று உள்ளோடு கிடப்பவனை இதுகள் நடு வீதிக்கு இழுத்து விடும் போல் இருக்கிறதே! ஹும்” என்றார் சேஷாத்திரி பயங்கரமாகக் கண்களை உருட்டி பாலுவை விழித்துப் பார்த்தவாறு.

கல்யாணராமன் பாலுவின் கைகளைப் பற்றித் தம் அருகில் அழைத்தார்.

”ஏண்டா பாலு! நீ போய் இவர்களைப் கூப்பிட்டாயா அல்லது அவர்கள் உன்னை வந்து கூப்பிட்டார்களா? உண்மையைச் சொல்” என்று கேட்டார், அங்கு நின்றிருந்த பையன்களைச் சுட்டிக் காட்டி.

”அவன் தான் மாமா எங்களை வந்து கூப்பிட்டான்” என்றான் சேஷாத்ரியின் மகன்.

அவன் என்ன உளறி விடுவானோ என்று அவன் தகப்பனார் கவலையுடன் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

”டேய்! டேய் பொய் சொல்லாதே! கிணற்றிலே நீச்சல் சொல்லித்தரேன்னு நீ தானேடா பாலுவைக் கூப்பிட்டே?” என்று மற்றொரு பையன் அதை ஆட்சேபித்தான்.

கல்யாணராமனுக்கு விஷயம் விளங்கி விட்டது. எல்லோருமாகத்தான் கிணற்றில் இறங்கி அமர்க்களம் பண்ணி இருக்கிறார்கள். ஆனால் பழி சுமத்துவதற்குப் பாலு ஒருவன் தான் அகப்பட்டான் அந்த ஊராருக்கு!

“சார்!” என்று சேஷாத்ரியைக் கூப்பிட்டார் அவர்.

“இதிலே பெரியவர்கள் சண்டை போட விஷயமே ஒன்றும் இல்லை, கிணற்றங்-கரையில் இவர்கள் பேசிக் கொண்டு கிணற்றிலே இருக்கும்போது ஒரு கட்சியாக இருந்தார்கள். நடுவில் ஏதோ சண்டை வந்து விட்டது. இப்பொழுது இவர்களுள் ஒரு எதிர்க் கட்சி ஆரம்பிக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவார்கள். குழந்தைகள் சண்டையில் நாம் தலையிடுவது அவ்வளவு உசித மில்லை” என்று கல்யாணராமன் கூறியதும் அங்கு வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த-வர்களுக்கு சண்டை சப் பென்று போய் விட்டது. ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றியபடி பேசிக் கொண்டே அங்கிருந்து சென்றார்கள்.

பீதியினால் உலர்ந்த வாயுடன் பாலு வாசல்குறட்டிலேயே தயங்கி நின்றான். கல்லாய்ச் சமைந்து நின்ற பவானி அவனைக் கோபத்துடன் உருட்டி விழித்துப் பார்த்தாள். ”வாசற்படி தாண்டி நீ உள்ளே வா சொல்கிறேன்!” என்கிற பாவம் அவள் முகத்தில் தெரிந்தது.

கல்யாணம் பாலுவையும் பவானியையும் கவனித்தார். பிறகு கண்டிப்புடன் “உள்ளே போய் ஈர நிஜாரை அவிழ்த்து விட்டு வேறு போட்டுக் கொள். இனிமேல் கிணற்றிலும் குளத்திலும் இறங்காதே. உனக்கேனடா இந்த வம்பெல்லாம்?” என்று கூறிவிட்டு உள்ளே போய் விட்டார்.

“பாலூ!” என்று அழைத்தாள் பவானி.

தலையைக் குனிந்து கண்ணீரை மாலை மாலையாக உதிர்க்கும் அவனைப் பார்த்து அவள் மறுபடியும், ”பாலு! உன்னாலே நான் இந்த ஊரிலே மரியாதையுடன் வாழ முடியாது போல் இருக்கே” என்றாள் வெறுப்புடன்.

”கூப்பிடுகிறேன். பேசாமல் நிற்கிறாயேடா! வாடா உள்ளே !” என்று அவன் கைகளைப் பற்றித் தர தர வென்று இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். விம்மி விசும்பிக் கொண்டே பாலு உள்ளே போனான்.

அடுத்த வீட்டுத் திண்ணையில் நின்று இது வரையில் இந்தச் சண்டையைக் கவனித்து வந்த மூர்த்தி, பவானியின் வீட்டுக்குள் சென்றான். அங்கே கூடத்தில் கையில் பிடித்த விசிறிக் காம்புடன் பாலுவை மிரட்டிக் கொண்டிருந்தாள் பவானி. ஒன்றிரண்டு அடிகள் விழுந்து அவன் விலாப்புறத்தில் வரிகள் தென்பட்டன. அவைகளைத் தடவிப் பார்த்து அழுது கொண்டிருந்தான் பாலு.

பவானியின் முகத்தில் கோபமும் துயரமும் நிரம்பியிருந்தன. ஒன்றும் தெரியாத பாலகன். பாம்பைப் பிடிக்கும் வயசு, துடிப்பு நிறைந்த சுபாவமுடையவன். அவனைக் கண்டால் ஊராருக்கு ஆகவில்லை. எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். புளியந் தோப்பில் நுழைந்து புளியம்பழம் உலுக்குகிறார்கள். கிணற்றில் குதித்து அமர்க்களம் பண்ணுகிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி யெல்லாம் ஊரில் வம்பு கிளம்புவதில்லை. இந்தக் குழந்தை செய்யும் ஒவ்வொரு
விஷமத்தையும் அவர்கள் பூதக் கண்ணாடி வைத்துப் புகார் செய்யவும் வந்து விடுகிறார்கள். ஏன்?

“ஏன்?” என்று பவானி வாய்விட்டு உரக்கவே கேட்டுக் கொண்டாள் தன்னையே. அவள் பேச ஆரம்பித்ததும் மூர்த்தி சுவாதீனத்துடன் அங்கிருந்த ஊஞ்சலில் வந்து உட்கார்ந்து கொண்டு, ”ஏனா? இந்த ஊரில் இருப்பவர்களுக்கே வயிற்றெரிச்சல் அதிகம். புத்திசாலியாக ஒரு குழந்தையைப் பார்த்தால் இவர்களுக்கு ஆகிறதில்லை . இந்த விஷயம் உங்களுக்குப் புதிசு. எனக்குப் புதிசல்ல” என்றான்.

வலுவில் வந்து பேசியும் அவனுடன் பேசாமல் இருந்தால் மரியாதைக் குறைவு என்று நினைத்து பவர்னி பதில் கூறினாள்.

“பாலு எவ்வளவோ சாதுவாக இருந்தான். இப்பத்தான் ஒரு வருஷமாக அவன் பண்ணுகிற விஷமம் சகிக்கவில்லை. இவனை வைத்துக்கொண்டு நான் படுகிற பாடு கொஞ்சமல்ல. ஊரிலே தகப்பன் இல்லாத பிள்ளை என்று இளப்பம் வேறே.”

மூர்த்தி திடுக்கிட்டு பவானியை ஏறிட்டுப்பார்த்தான். களை பொருந்திய அந்த நெற்றி குங்குமத்தை இழந்தும் தன் அழகை இழக்கவில்லையே என்று நினைத்தான். மருட்சியோடு மிரளும் அந்தக் கண்களில் குறும்பும். பரிகாசமும் மிதக்க வேண்டிய காலமல்லவா இது! அவை சதா சோகத்திலும், சஞ்சலத்திலும் ஆழ்ந்து நிற்பது
அவனுக்கு வேதனையாக இருந்தது.

பெண்தான் தன்னை எப்படியெல்லாம் மாற்றிக் கொள்ள முடிகிறது! காதலொருவனைக் கைப் பிடித்தவுடன் அவளுடைய சிரிப்பிலே, பேச்சிலே, நடையிலே அவள் செய்யும் ஒவ்வொரு வேலையிலே புது மாதிரியான, மாறுதல்களைச் சிருஷ்டித்துக் கொள்கிறாள். பள்ளிப் பெண்ணாகப் படித்துக் கொண்டிருக்கும்போது வெடுக் வெடுக்கென்று பேசித் திரிந்தவள் பேச்சிலே இப்போது இனிமை மிதந்து செல்கிறது. கலகல வென்று சிரித்துக் கும்மாளமிட்ட கன்னி, காதலனைக் கண்டவுடன் புன்சிரிப்புச் சிரித்து அவன் உள்ளத்தை கொள்ளை கொள்கிறாள். எத்தனையோ புதுமை பெண்கள் நிமிர்ந்து நடப்பவர்கள் எல்லாம் காதலனைக் கண்டால் கடைக் கண்ணால் தான் பார்க்கிறார்கள். ஆனால்… பெண்ணைத் துயரம் பற்றிக் கொள்ளும் போது அவள் எப்படி மாறி விடுகிறாள்?

பவானியின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு கன்னத்தில் வழிவதைப் பார்த்தான் மூர்த்தி.

”நீங்கள்…” என்று ஏதோ கேட்க ஆரம்பித்தவன், “ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டு முடித்தான்.

“ஆமாம். பாலுவுக்கு அப்பா இல்லை. அதனால் தான் அவனை ஊரில் யாருக்குமே பிடிக்கவில்லை. ஒன்றுக்குப் பத்தாக அவன் மேல் குற்றங்கள் வருகின்றன. அதற்கு நான் என்ன செய்யட்டும்?” என்றாள்.

அதற்கு மேல் பவானியின் கண்களிலிருந்து பிரவாகம் பெருகியது.

அடுப்பங்கரையிலிருந்து அவள் விசும்புவது. வெகு நேரம் வெளியே உட்கார்ந்திருந்த மூர்த்திக்குக் கேட்டது.

9.மொட்டைக் கடிதம்….!

வாசல் திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த கல்யாண-ராமன். மூர்த்தி அடுத்த வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருவதைப் பார்த்து திடுக்கிட்டார்! மூர்த்தி ஒருவரிடம் அனுதாபம் காட்டுகிறான் என்றால், அதில் சுயநலம் கலந்து இருக்குமே தவிர, தன்னலமற்ற தியாக உணர்ச்சி என்று அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் கல்யாணத்தின் நினைவுக்கு வரவே அவர் மனம் மேலும் வேதனையில் ஆழ்ந்தது.

மூர்த்திக்கு அப்போது வயது இருபத்தைந்து இருக்கும். பசுமலையிலிருந்து அடுத்த டவுனில் இருக்கும் காலேஜுக்கு அவன் சைக்கிளில் போய் வருவான். அவன் படிக்கும் காலேஜிலேயே அந்த ஊர்ப் பெண்ணொருத்தி படித்துக் கொண்டிருந்தாள். அவள் தினமும் மாட்டு வண்டியில் காலேஜுக்குப் போகிற வழக்கம். குடும்பத்துக்கு மூத்த பெண்ணாக இருந்ததாலும், பெற்ற தகப்பன் இல்லாததாலும் அவள் படித்து வேலைக்குப் போய்க் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவள் தலையில் விழுந்திருந்தது. ஆகவே, அவள் அந்த எண்ணத்தில் உறுதியாக நின்று படித்து வந்தாள்.

மாட்டு வண்டி கிராமத்தின் எல்லையை அடைந்து டவுனுக்குப் போகும் ரஸ்தாவை அடைந்ததும், எங்கிருந்தோ மாயமாகக் குறுக்கு வழியாக வந்து மூர்த்தி சைக்கிளுடன் அவள் எதிரில் காட்சி அளிப்பான். பலரக சினிமாப் பாட்டுக்களையும், பாரதியின் காதல் கவிதைகளையும் பாடித் தீர்ப்பான்.

நம்முடைய செந்தமிழ் மொழியிலே அவனுக்கு ஏற்பட்ட அக்கறை கொஞ்ச நஞ்சமில்லை. அகநானூறில் காதலைப் பற்றி எத்தனை பாட்டுக்கள் இருக்கின்றன என்று அறிய அவனுக்கு அக்கறை ஏற்பட்டது. பாரதியாரின் குயில் பாட்டை அவன் தலை கீழாக ஒப்புவிக்கப் பயிற்சி செய்து கொண்டான். இவனுடைய காதல் வேதனையும், பைத்தியக்காரத் தனமான பாட்டுக்களும் அந்தப் பெண்ணுக்கு வேதனையையும் அருவருப்பையும் மூட்டின.

“என்ன ஐயா! ஒரு நாளைப் போல மாட்டுக்கு எதிரே சைக்கிளை ஓட்டுறீங்க?” என்று வண்டிக்காரன் அலுத்துக் கொண்டான்.

”சைக்கிள் மேலேயே விடப்பா நீ. இப்படிப் பட்டவங்களுக்கு தயை காட்டக் கூடாது” என்று கூட அவள் தன் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டாள். மூர்த்திக்கு அவள் வாய் திறந்து பேசியதே பிரும்மானந்தமாக இருந்தது.

வண்டிக்காரன் வண்டியை அவன் மேல் ஏற்றினால் கூடத் தேவலை என்று நினைத்து அந்தப் பாக்கியத்துக்காக அவன் காத்துக் கிடந்தான். அதன் பிறகு அந்த யுவதி நேராகவே அவனிடம் தைரியமாகப் பேசினாள்.

”மிஸ்டர்! பாதை உங்களுக்குத் தான் சொந்தம் என்று நினைத்துக் கொள்கிறீர்களே. அது சுத்தத் தவறு!” என்று கண்டித்தாள் அவள். கோபத்தினால் சிவந்த அவள் முகம் பகமலைக் கிராமத்தில் இருக்கும் குளத்தில் அலர்ந்திருக்கும் செந்தாமரையை நினைவூட்டி யது அவனுக்கு.

மூர்த்தி திடு திப்பென்று ஒரு முடிவுக்கு வந்தான். அவனுடன் அவள் தைரியமாகப் பேசுகிறாள். அவன் அவள் வண்டியின் பின்னாலேயே சைக்கிளை ஓட்டி வருவதைப் பார்த்து ஒரு தினுசாகக் சிரித்திருக்கிறாள். வெட்டும் ஒரு பார்வையை அவன் பக்கம் வீசி விட்டு அவள் பாதையின் வேறு பக்கம் பார்த்தவாறு முகத்தைத் திருப்பி-யிருக்கிறாள். ஒருவேளை மூர்த்தியின் மேல் அவளுக்குக் காதலோ என்னவோ?

இப்படி நினைத்தவுடன் அவன் உள்ளம் மகிழ்ச்சிக் கடலில் நீந்தியது. அந்தத் தாமரை முகத்தாள் அவனைக் காதலிப்பது என்றால் அது சாமான்ய விஷய மில்லை அல்லவா? ஆகவே மூர்த்தி கடைசியாக அவளுக்குக் காதல் கடிதம் எழுதத் துணிந்தான். நறுமணம் ஊட்டிய அக் கடிதத்தை ஒரு தினம் அவள் வண்டிக்குள் வீசி எறிந்து விட்டு சைக்கிளை வேகமாகச் செலுத்திக் கொண்டு காலேஜுக்குப் போய்விட்டான்.

மாலை அவன் வீடு திரும்பியதும் கல்யாணம் அவனை, “வாடா குழந்தை!” என்று என்றுமில்லாமல் வரவேற்றார். அத்தோடு விட்டு விடாமல் , ”உனக்கு இதெல்லாம் எத்தனை நாட்களாகப் பழக்கம்!” என்று கேட்டும் வைத்தார். வீட்டிற்குள்ளிருந்து பார்வதி வெளியே வந்தாள்.அவள் பட்டவர்த்தனமாக, “ஏண்டா அப்பா! ஊரிலே எங்களை மானத்தோடு வாழ விடமாட்டாய் போல் இருக்கிறதே?” என்று கேட்டாள்.

அந்த வயசிலே காதல் கடிதம் எழுதுவது அவ்வளவு தவறு என்று யாருமே சொல்ல மாட்டார்கள். ’இந்த மாமாவுக்கும் மாமிக்கும் நம்மைக் கண்டால் ஆகவில்லை. ஏதாவது சொல்கிறார்கள். அந்த அசட்டுப் பெண் இதையெல்லாம் பெரியவர்களிடம் சொல்லுவாளோ?’ என்று நினைத்தான் மூர்த்தி. அந்தப் பெண்ணின் தாய் சற்று முன்பு வீட்டுக்கு வந்ததும் அவனுடைய திருவிளையாடல்களைக் கூறி அந்தக் கடிதத்தைக் காண்பித்ததையும் அவன் அறியவில்லை . அவசரப்பட்டு எதுவும் பேசக் கூடாது என்ற தீர்மானத்துக்கு வந்தவனாக மூர்த்தி அன்றிலிருந்து பதினைந்து தினங்கள் வரையில் அந்தப் பெண்ணின் எதிரில் போகாமல் நடந்து கொண்டான்.

ஒரு தினம் மூர்த்தி காலேஜிலிருந்து வீட்டுக்கு வந்ததும் கல்யாணராமன், ”ஏண்டா! அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதாமே? உன் காதல் எல்லாம் ஊதலாகி விட்டது. பார்த்தாயா? இதற்குத் தான் யோசனை இல்லாமல் நடக்கக்கூடாது என்கிறது” என்றார்.

மூர்த்தி ஸ்தம்பித்து நின்றான். அவன் கால்கள் பூமியில் புதைந்து போன மாதிரி ஆடாமல் அசையாமல் நின்றன.

*என்ன! அவளுக்குக் கல்யாணமா?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். உடலில் இருக்கும் ரத்தமெல்லாம் மூளைக்கு விறு விறு என்று ஏறிற்று. எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று துடித்தான் . மூன்று நாட்கள் சரிவரச் சாப்பிடாமல் ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் திரிந்தான். அவளுக்கும் தன்னிடத்தே காதல் உண்டு என்று நினைத்து தன்னைத்தான் ஏமாற்றிக் கொண்டான் அவன். அவனிடம் தனக்கு உதித்தது உண்மையான காதலா அல்லது அந்த வயதின் சேஷ்டையா என்று அவன் சிந்தித்துப் பார்க்கவில்லை.

கல்யாண வீட்டில் அமளி. மாலையில் மாப்பிள்ளை அழைப்பு ஏற்பாடுகள் பலமாக நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, மாப்பிள்ளைப் யையனிடம் ஒரு சிறுவன் கடிதம் ஒன்றைக் கொடுத்து விட்டுப் போனான். கடிதத்தின் வாசகம் ஒன்றும் பிரமாதமான விஷயம் இல்லை. இருந்தாலும் அந்தப் பெண்ணை மணக்கப் போகிறவனுக்கு அது பிரமாதமாகத்தான் தோன்றியது.

“நண்பரே,
தாங்கள் மணக்க முன் வந்திருக்கும் பெண் ஏற்கனவே என்னால் காதலிக்கப் பட்டவள். மனத்தை ஒருவனிடம் பறி கொடுத்து விட்டு அவள் உங்களிடம் உள்ளன்புடன் எப்படித்தான் வாழ்க்கை நடத்தப் போகிறாளோ? யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.”

என்பது தான் கடிதத்தின் சாரம். இம்மாதிரி பயமுறுத்தல் கடிதங்களும், பிதற்றல்களும் சகஜமாக இருந்தாலும், மாப்பிள்ளை இதைப் படித்தவுடன், வெட்கமும் பயமும் அடைந்தான்.

மாப்பிள்ளை அழைக்க வீட்டில் எல்லோரும் கூடி இருந்தார்கள். மாப்பிள்ளை ஊர்வலக் காரில் ஏறு மறுப்பதாகச் செய்தி வந்தது. சிறிது நேரத்துக்கு அப்புறம்தான் விஷயம் தெரிந்தது . மாப்பிள்ளைக்கு வந்த கடிதம் பெண் வீட்டாரிடம் கிடைத்ததும் எழுதியவன் யார் என்பது உடனே விளங்கிவிட்டது.

கல்யாணராமன் தம் வீட்டுக்கு வந்து இம்மாதிரி ஒரு புத்திர ரத்தினத்தை தம் சகோதரி பெற்று வைத்து விட்டுப் போனதற்காகத் தலையில் போட்டுக் கொண்டார். காதல் கடைத் தெருவிலும், காப்பி ஹோட்டல் களிலும், நடைபாதைகளிலும் விற்கப்படும் ஒரு சரக்காக மாறி இருப்பதை நினைத்து இந்த நிலைமைக்குப் பொறுப்பாளி யார் என்பது புரியாமல் திகைத்தார். தாமே நேரில் சென்று மாப்பிள்ளையிடம் பெண்ணைப் பற்றியும், அவள் குடும்பத்தைப் பற்றியும் விவரமாகக் கூறி, விவாகத்துக்குச் சம்மதிக்கச் செய்து, தாமும் உடனிருந்து கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

மாமாவே பொறுப்பேற்று கல்யாணத்தை முடித்து வைத்து விட்டார். இனிமேல் தன் ஜம்பம் ஒன்றும் அங்கே சாயாது என்பது புரிந்ததும் மூர்த்தி பசுமலைப் பக்கமே ஒரு வருஷத்துக்குத் தலை காட்டவில்லை.

பசுமலையில் இருக்கும்போதே இவ்வளவு கண்ணியமாக நடந்து கொண்டவன். இப்பொழுது பம்பாய் என்றும் கல்கத்தா என்றும் பல பெரிய நகரங்களைப் பார்த்து விட்டு வந்திருக்கிறான். மூர்த்தியின் அறிவு பல விஷயங்களைப் பற்றியும் விரிவடைந்து தானே இருக்கும்?

‘பெண்களிடம் நடந்து கொள்ளவேண்டிய முறையைப் பற்றியே அறியாதவன் பவானியின் வீட்டுக்குள் எதற்குப் போனான்? இதேதடா சங்கடம்?’ என்று நினைத்துக் கொண்டு கல்யாணம் மனதுக்குள் அருவருப்பும் கவலையும் அடைந்தார்.

வெளியே வந்த மூர்த்தி மாமாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து அங்கிருந்த வெற்றிலைப் பெட்டியிலிருந்து வெற்றிலையை எடுத்துப் போட ஆரம்பித்தான் . கல்யாணம் கண்ணை மூடிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்து இருந்தார்.

“ஏன் மாமா!” என்று அழைத்தான் மூர்த்தி.

“உம்…” என்றார் கல்யாணம்.

“இந்தப் பெண், பாவம் — இப்படி இந்த வயசில்… பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது மாமா…”

”பரிதாபமாக இருக்கிறதா? உம்…ஏண்டா . ! அவள் அப்படியெல்லாம் தன்னைப் பிறத்தியார் பார்த்துப் பரிதாபப் படும்படி நடந்து கொள்ள மாட்டாள். அவளைப் போல துன்பத்தை விழுங்கிக் கொள்ளும் சக்தி யாருக்குமே கிடையாதுடா. அதெல்லாம் அவளோடு போகட்டும். நீ பேசாமல் வேலையைப் பார்த்துக் கொண்டு போ.”

”எங்கே மாமா போகிறது? என் ஆபீஸிலே என்னை மதராஸ் ராஜ்யத்துக்கு டிராவலிங் ஸேல்ஸ் மென்னாகப் போட்டிருக்கிறார்கள். என் ஜாகை இனி மேல் இங்கேதான். மாசம் – மாமியிடம் எழுபது ரூபாய் என் சாப்பாட்டுக்காகக் கொடுத்து விடுவேன் . பெற்றவர்களைப் போல் என்னை வளர்த்தவர்களை விட்டு எங்கே போகிறது!”

கல்யாணம் மூடியிருந்த கண்களைத் திறந்து அவனை நேருக்கு நேராகப் பார்தார். பிறகு கண்டிப்பு நிறைந்த குரலில்,

“உன்னை யாரடா ஊரை விட்டுப் போகச் சொன்னது? பிறத்தியார் வம்பிலே தலையிடாமல் உன் வேலையைக் கவனித்துக் கொண்டு இரு என்றுதானே சொன்னேன்” என்றார்.

“மாமா எப்பொழுதும் இப்படித்தான். அவருக்கு என்ன தெரியும்?” என்று நினைத்துக் கொண்டு மூர்த்தி மேலும் அவரிடம் பேச்சை வளர்த்தாமல் திண்ணையில் படுத்துத் தூங்க ஆரம்பித்தான்.

1.10. விசிறிக் காம்பு
குழந்தை பாலுவுக்குப் பிடிக்குமே என்று செய்து வத்திருந்த முருங்கைக்காய் சாம்பாரும் உருளைக் கிழங்கு பொடிமாசும் சமையலறையில் அடுப்பின் கீழ் ஆறிப் போய்க் கொண்டிருந்தது. பவானி கன்னத்தில் கையை ஊன்றித் தூணில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள்.

ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த பாலு விசிறிக் காம்பால் பட்ட அடிகளைத் தடவிப்பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். தெருவிலே சடுகுடு ஆடினால் தண்டனை. குளத்துக்குப் போனால் அடி. கிணற்றில் இறங்கினால் உதை. பள்ளிக்-கூடம் திறந்திருந்தால் இருக்கவே இருக்கின்றன புஸ்தகங்களும் வாத்தியார்களும்! இவ்வளவு பெரிய லீவைத் தந்து விட்டு அதைக் கழிப்பது எப்படி என்று சொல்லித் தராமல் இருக்கிறார்களே என்று நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தான். வயிற்றில் பசி. சற்று முன் உள்ளேயிருந்து வந்த முருங்கைக்காய் சாம்பாரின் வாசனை மூக்கைத் துளைத்தது. சாம்பார் சாதம் சாப்பிட வேண்டும் என்று அவன் நாக்கில் ஜலம் ஊறிற்று. ஆனால் பவானி அவன் நின்றிருந்த பக்கம் கூடத் திரும்ப வில்லை. என்னவோ பெரிதாக நடந்து விட்டதுபோல் முகத்தை ‘உர்’ ரென்று வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.

பாலுவுக்குக் கால்கள் வலி எடுக்கவே மெதுவாக ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டான். பவானியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. ஊராரின் கடுஞ்சொற்கள் அவள் நொந்த மனத்தில் வேல் கொண்டு குத்தித் துளைத்தன.

பாலு தாயைக் கவனித்துக் கொண்டே ஊஞ்சலில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தான். பசியினால் ஏற்பட்ட களைப்பினால் அவன் அயர்ந்து தூங்கிப் போனான். பாலுவின் உள்ளம் விழித்துக் கொண்டது. பசுமலையை விட்டு அவனும் அவன் அம்மாவும் ரயில் ஏறி சென்னைக்குப் போகிறார்கள். அங்கே ரயிலடியில் அவனுக்குப் பிரமாதமான வரவேற்பு மாமா நாகராஜனும், மாமி கோமதியும், அவர்கள் மகள் சுதியும் அவனை ஆசையுடன் வரவேற்றுக் காரில் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்கள். சுமதிதான் எவ்வளவு நல்ல பெண்! தன்னுடைய மேஜையிலேயே பாலுவின் புஸ்தகங்களை வைத்துக் கொள்ளச் சொல்கிறாள். தன்னுடைய விளையாட்டுச் சாமான்கள் அவனுக்குத்தான் என்கிறாள் அவள் கண்களைச் சுழட்டிப் பேசி கலீரென்று சிரிக்கும் போதெல்லாம் பாலு மெய்ம்மறந்து போகிறான்.

“ஏலே பையா! நீ நீச்சல் கத்துக்கொள்ளடா, உடம்புக்கு நல்லது” என்கிறார் மாமா நாகராஜன்.

பவானி வியர்க்க விறு விறுக்க வருகிறாள். “அண்ணா ! இந்த மாதிரியெல்லாம் அவனுக்கு இடங் கொடுக்காதே! அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அங்கேதான் ஆற்றிலும் குளத்திலும் குதித்துக் கொண்டிருந்தானே! போதும் அண்ணா!”

“அதெல்லாம் வேண்டாம் மாமா” என்று பரிதாபமாகச் சொல்லிவிட்டு பாலு சுமதியிடம், “இந்த ஊரிலே விசிறிக்கு காம்பு நீளமா குட்டையா?” என்று கேட்கிறான்.

“ஏண்டா பாலு! விசிறியெல்லாம் இங்கே அடுப்பு விசிறத்தான் உபயோகப்படும். காற்று வேணுமா உனக்கு? இந்தா …பட்…” என்று மின் விசிறியின் பொறியைத் தட்டி விடுகிறாள் சுமதி.

காற்று சுழன்று சுழன்று வேகமாக அடிக்கிறது.

”அப்பா! என்ன காற்று மனசுக்கு சுகமாக இதமாக இல்லையே” என்று பாலு திணறுகிறான். அந்தத் திணறலில் தவித்து ‘ பொத்’ தென்று விழுகிறான்.

கண் விழித்துப் பார்த்தபோது பவானியின் மடியில் படுத்துக்கொண்டிருந்தான் பாலு.
“ஏண்டா கண்ணா ! உனக்குப் பசிக்கவில்லையா மணி இரண்டாகப் போகிறதே! சாப்பிட வாயேன்” என்று அழைத்தாள் பவானி.

“நீயும்தான் சாப்பிடவில்லை அம்மா, உனக்குப் பசிக்காதா? வா, நானும் நீயும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம்” என்று சொல்லியபடி பாலு எழுந்து சமையலறைக்குள் புகுந்து இரண்டு தட்டுக்களை எடுத்து வைத்துத் தானே உணவு பரிமாற ஆரம்பித்தான்.

சற்று முன் கண்ணீரால் நனைந்து போயிருந்த பவானியின் கண்கள் இவ்வதிசயத்தைப் பார்த்து மகிழ்ந்தன. “நீ கொஞ்சம் உருளைக்கிழங்கு அதிகமாகவே போட்டுக் கொள்ளடா பாலு!” என்று மகிழ்ச்சி ததும்பச் சொல்லிக் கொண்டே பவானி தட்டின் முன்னால் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

– தொடரும்…

– முத்துச் சிப்பி (நாவல்), முதற் பதிப்பு: அக்டோபர் 1986, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *