முதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2012
பார்வையிட்டோர்: 9,246 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்னுடைய முதல் மனைவிக்கு இந்த உலகத்தில் பிடிக்காத விஷயங்கள் இரண்டு.

1. சூரிய அஸ்தமனத்தின் போது பையிலே பணம் இருப்பது. கையிலே இருக்கும் காசை எந்தப் பாடுபட்டாவது நாள் முடிவதற்கிடையில் செலவழித்துவிட வேண்டும். காலையில் எவ்வளவு பணம் பையில் இருந்தாலும் இரவு படுக்கப் போகும்போது ஒரு சதமும் இருக்கக்கூடாது. இதில் அவள் மிகவும் கண்டிப்பானவள்.

2. அம்மாவின் சமையல். அதைப் பற்றி நான் வாய் திறக்கக்கூடாது. திறந்தாலும் சிலாகிக்கக்கூடாது. அப்படிச் சிலாகித்தாலும் அதை அவளுடைய சமையலுடன் ஒப்பிடக்கூடாது.

பொய்களைக் காப்பது சிரமம் என்றால் உண்மைகளை மறைப்பது அதிலும் சிரமமானது அல்லவா!

அம்மா சாதாரண கிராமத்துக்காரி. கிராமப் பெண்கள் போலவே ஈடுபாட்டோடு சமைப்பார். என் முதல் மனைவியைப் போல சமையல் வகுப்புகளுக்குப் போய் பாடம் கற்றிருக்கவில்லை. இன்னும் காசு செலவழித்து அழகுபடுத்தவோ, ரோஜாப்பூ உதிரும் சோடனை செய்யவோ பழகவில்லை. ஆனால் அம்மா செய்யும் சமையல் ருசியானது. எந்த உணவின் ஒரு பகுதியைச் சுவைத்தாலும் அது ஆயுளுக்கும் மறக்க முடியாதபடி இருக்கும்.

சிறுவயதாக இருந்தபோதே அம்மா ஆதார சுவைகளை ஆய்ந்து அறிந்துவிட்டார். வண்ணத்துக்கு நீலம், சிவப்பு, மஞ்சள் என்ற மூலநிறங்கள் இருப்பதுபோல ருசிக்கு இனிப்பு, உப்பு, புளிப்பு, கைப்பு என்ற சுவைகள். விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த உண்மை அம்மாவுக்கு அப்பொழுதே தெரிந்திருந்தது. இந்த நாலையும் வெவ்வேறு விகிதத்தில் கலந்து பத்தாயிரம் புதிய சுவைகளைத் தயாரித்துவிடுவார்.

மிகச் சிறிய வயதிலேயே என் ரசனை கூர்மையாகிவிட்டது. அம்மா சமைக்கும் போது ருசி பார்த்து அபிப்பிராயம் சொல்லப் பழக்கப் பட்டிருந்தேன். உண்மையில் அவருக்கு என் மதிப்பீடுகள் தேவையில்லை. எனக்கு அது ஒருவித பயிற்சிதான் என்று இப்போது புரிகிறது.

புளியம்பூ சம்பலைக் கண்டுபிடித்தது நான்தான். இயற்கையாகவே புளியம்பூவில் கொஞ்சம் இனிப்பும், புளிப்பும் இருக்கும். எவ்வளவு காம்புகள் சேர்க்கிறோம் என்பதைப் பொறுத்த துவர்ப்பும், கைப்பும் கூடிவிடும். நாங்களாக உப்பும், மிளகாயும் சேர்த்துக் கொள்வோம். என்னுடைய சுவை அப்பியாசம் இப்படித்தான் ஆரம்பமாகியது. இதைத் தாண்டிய ஓர் அயிட்டம் இந்த உலகத்திலேயே இல்லை எனலாம்.

பீதோவன் என்ற சிறந்த இசை மன்னர் ஸ்வரங்களை எழுதும்போதே அவர் மூளைக்குள் பெரிய வாத்தியங்கள் வாசித்தபடி இருக்குமாம். அது மாதிரித்தான் அம்மாவின் சமையலும். மூலக்கூறுகளைக் கலக்கும் போதே அந்த உணவின் சங்கீதம் அவர் காதுகளுக்குள் ஒலிக்கும். முன்பின் அனுபவிக்காத ஒரு பதார்த்தத்தை அவரிடம் கொடுத்தால் அதை ருசி பார்க்கும்போதே அதன் மூலக்கூறுகளைக் கூறிவிடுவார். அதே போல ஒன்றைச் சமைப்பதும் அவருக்கு பெரிய காரியமில்லை.

என்னுடைய முதல் மனைவி சமையல் வகுப்புகளுக்குப் போவாள். அதில் ஒன்றும் ஆபத்தில்லை. ஆனால் வந்ததும் வராததுமாக அவளுடைய மூளையிலே படித்தது ஈரமாக இருக்கும்போதே சமைக்கத் தொடங்கிவிடுவாள். அதை நான் ருசித்து அபிப்பிராயம் சொல்ல வேண்டும். என்னுடைய கருத்து பாதகமாக இருக்கும் பட்சத்தில் அவளிடம் இருந்து ஒரு பதில் புறப்படும். ‘மோசஸின் பத்து கட்டளைகள் கூட முதல்தரம் தோல்வியிலேயே முடிந்தது. இரண்டாவது பதிப்புதான் வெற்றி பெற்றது’ என்பாள். அதற்குப் பிறகு அந்தப் பதார்த்தம் கைவிடப்பட்டுவிடும். இரண்டாவது தயாரிப்பை சுவை பார்க்கும் தண்டனையில் இருந்து நான் காப்பாற்றப்படுவேன்.
சிறுவயதில் இருந்தே எனக்குப் பழக்கமான ஒரு நண்பர் இருந்தார். கடந்த இருபது வருடங்களாக தொடக்க நிலை எழுத்தாளராக இருப்பவர். தமிழிலே எழுதும் மூன்றாம் தர எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒரு நிரையில் நிற்கவைத்தால் இவர் நாலாவது வரிசையில் நிற்பார். எந்தப் புத்தகம் வாங்கினாலும் அதன் முதல் பக்கத்தில் ‘இதைத் திருடியவர் தயவுசெய்து கீழ்க்கண்டவரிடம சேர்ப்பிக்கவும்’ என்று தன் பெயரை எழுதி வைத்திருப்பார். அருந்ததிராய் எழுதி சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த புத்தகத்தை ‘சிறு கடவுள்களின் சாமான்கள்’ ‘சிறு கடவுள்களின் சாமான்கள்’ என்று அடிக்கடி சொல்லி சிலாகிப்பார்.

புத்தகங்களின் தலைப்பை அவர் என்றுமே சரியாகச் சொன்னதில்லை. அந்தப் பாவவோ என்னவோ அவருக்கு கல்யாணம் வாய்க்கவில்லை. வீட்டுக்கு வரும்போதெல்லாம் என் முதல் மனைவி தான் அன்று புதிதாகச் செய்த ஏதாவதொரு அயிட்டத்தை பரிமாறுவாள். என் முழங்கால்கள் அப்போது தனித்தனியாக ஆடத்தொடங்கும். அந்த ஆட்டத்தை இன்னும் அதிகரிக்கும் விதத்தில் நண்பர் அவளுடைய சமையலைப் பற்றி வாய் திறக்காமல் எப்பவோ சாப்பிட்ட அம்மாவின் நெத்தலிப் புளிக்குழம்பை மறக்காமல் புகழுவார். இப்படி மிகச் சாதுவாக அடுத்து வரும் ஏழு நாட்களை எனக்கு நரகமாக்கிவிட்டு நழுவிவிடுவார்.

என் முதல் மனைவியின் சமையலை முற்றிலும் மட்டம்தட்ட முடியாது. அவள் செய்த அற்புதமான சமையல்களில் ஒன்று 1989ல் நடந்தது. அப்பொழுது நாங்கள் அமெரிக்காவின் சாந்தகுரூஸ் நகரத்தில் இருந்தோம். மணமுடித்து சில வருடங்களே ஆகியிருந்தன. அது ஒரு விசேஷமான நாள் என்றபடியால் தேதியும் ஞாபகமிருக்கிறது. ஒக்டோபர் 17. என் முதல் மனைவி அங்கே பிரபலமான ‘கொப்ளர்’ என்ற இனிப்பு பதார்த்தத்தை செய்ய ஆரம்பித்தாள். அப்பிள், பீச் பழங்களின்மேல் பால், மா, சீனி என்ற கலவையைப் பரப்பி சூட்டடுப்பில் 350 பாகை வெப்பத்தில் 45 நிமிடம் வேகவைக்க வேண்டும். இந்த அருமையான இனிப்பு வகை கொஞ்சம் அசந்தாலும் காலை வாரிவிட்டுவிடும்.

உலகத்து தினப் பத்திரிகைகள் அத்தனையும் தலைப்பு செய்தியாக வெளியிட்ட நிலநடுக்கம் அப்பொழுதுதான் சம்பவித்தது. சாதாரணமானது அல்ல. றிக்டர் அளவில் 7.2. கிளாஸ்களில் வைத்த தண்ணீர் துள்ளி எழும்பியது. சரவிளக்குகள் பெண்டுலம் போல தானாகவே ஆடின. சன்னல் கண்ணாடிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே படீர் படீர் என்று வெடித்தன. எங்களுக்கு நிலநடுக்கம் பற்றி ஒன்றுமே தெரியாது. தலை தெறிக்க வெளியே ஓடினோம். நாங்கள் விளிம்பில் இருந்தபடியால் நல்லவேளையாக அதன் முழுத்தாக்கமும் எங்கள் பகுதியை எட்டவில்லை என்று சொன்னார்கள். மின்சாரம் துண்டாகிவிட்டதே ஒழிய வேறு சேதம் ஒன்றுமில்லை.

ஒரு மணிநேரம் கழித்து திரும்பவும் வீட்டுக்குள்ளே மெல்ல அடியெடுத்து வைத்தபோது தான் கொப்ளர் பற்றிய ஞாபகம் வந்தது. அது அப்படியே கேட்பாரற்று சூட்டடுப்பில் கிடந்தது. நல்ல பசி வேறு. அன்று சாப்பிட்ட கொப்ளர் போல என் வாழ்க்கையில் முன்னும் சாப்பிட்டதில்லை, பின்னும் சாப்பிட்டதில்லை. அதன் பிறகு எவ்வளவுதான் முயற்சி செய்தபோதிலும் கொப்ளர் அப்படி அமையவே இல்லை.

இதுதான் வித்தியாசம். என் முதல் மனைவியின் சமையல் ஒரு நாளைப்போல் இன்னொரு நாள் வாய்ப்பதில்லை. இன்று ஒகோவென்று இருப்பது மறுநாள் படுத்துவிடும். அம்மாவுடையது அப்படியல்ல. தோசையில் விழும் துளைகளைக்கூட எண்ணினால் ஒரே எண்ணிக்கையில் இருக்கும்.

எங்கள் பெரியய்யாவுக்கு மூலநோய் இருந்தது. இதைப் போக்குவதற்கு ஒரே வழி முட்டை இடும் இளம் கோழியை சமைத்துச் சாப்பிடுவது தான் என்று நாட்டு வைத்தியர் சொல்லிவிட்டார். அதைச் சமைப்பதற்கும் அம்மாவே நியமிக்கப்பட்டிருந்தார். அம்மா அழகான ஒரு கோழியை ஆசையாக வளர்த்து வந்தார். புள்ளிபோட்ட வித்தியாசமான கோழி. அப்பொழுதுதான் அது முட்டை இடத் தொடங்கியிருந்தது. ஒரு வார்த்தை அம்மா எதிர்த்துப் பேசவில்லை. முட்டையிட அவசரமாக இடம் தேடித்திரிந்த கோழியைப் பிடித்து வெட்டிச் சமைத்த போது அதன் வயிற்றில் இன்னும் ஒரு மணி நேரத்தில் பிரசவமாக வேண்டிய முட்டை ரெடியாக வாசலில் இருந்ததாம். அதைத் தொடர்ந்து கோர்வையாக பல முட்டைகள் பல சைஸ்களில். கடைசி முட்டை பல்லி முட்டை அளவில் இருந்தது. பெரியய்யா கோழியையும். அது இட உத்தேசித்திருந்த முட்டைகளையும் ருசித்து ருசித்து சாப்பிட்டார். நாங்கள் ஏழு பேர் அவரைச் சுற்றிவர நின்றோம். அவருடைய உணவில் பங்கு கேட்கக்கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தப் பட்டிருந்ததால் மறுப்பதற்கு தயாராகவே இருந்தோம். அது அவருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர் ஒரு வாய்கூட கொடுக்கவில்லை.

பெரியய்யா போன பிறகு நான் அடுக்களைக்குப் போனேன். சட்டியில் மீதமாக ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கை. மஞ்சள் கரை போட்ட சேலை ஒன்று அம்மாவைச் சுற்றியிருந்தது. திருப்பி வைத்த ஒரு ஓடத்தைப்போல முதுகு வளைந்து தெரிந்தது. இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்தியபடி இருந்ததால் நான் வந்ததை கவனிக்கவில்லை. அவருடைய முதுகும், தோள்பட்டையும் அசாதாரணமாகக் குலுங்கிக் கொண்டிருந்தன. பெரியய்யாவுக்கு மூல வியாதி போய்விடுமா என்று நான் கேட்க நினைத்ததை கேட்காமலே திரும்பிவிட்டேன்.

வியாதிக்காரர்களுக்கு மாத்திரம்தான் அம்மா சமைப்பார் என்றில்லை. எங்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தபடியே இருப்பார்கள். காலையில், மத்தியானத்தில், மாலையில், ஒருநாள் ஒருத்தர் இரவு பத்துமணிக்கு மேலே வந்தார். அம்மா சமையல் பாத்திரங்களை கழுவிக் கவிழ்த்து வைத்துவிட்டார். என்ன செய்வது. தோட்டத்திலே கீரை இருந்தது. அதை ஆய்ந்தார். வெய்யிலிலே காய்ந்த பிலாக்கொட்டையை நீளம் நீளமாக வெட்டி உப்பும், மிளகாய்த்தூளும் கலந்து பொரித்தார். அன்றுதான் மரத்தில் இருந்து இறக்கிய இளநீர்க் குலைகளில் அம்மா இரண்டு முட்டுக்காய்களை சுண்டி சுண்டி தேர்ந்தெடுத்தார். அதன் வழுக்காய் இளசாகவும், வழுவழுப்பாகவும் ‘ஆட்டுச் செவி பருவத்தில்’ முறியாத தன்மையுடனும் இருந்தது.

அம்மாவுக்கு இன்ன மரக்கறியை இன்னமாதிரி வெட்ட வேண்டும் என்ற முறை முக்கியம். வெண்டைக்காய் என்றால் தோடு தோடாக வெட்டுவார். கத்தரிக்காய் என்றால் கீலம் கீலமாகத்தான். காரட் என்றால் அரைச் சந்திர வடிவம். அப்படியே வழுக்காயை சற்சதுரமாக வெட்டி ஒரு குழம்பு வைத்தார். விருந்துக்கு வந்தவர் இதற்கு முதல் வாழ்க்கையில் இப்படி அனுபவித்ததே இல்லை என்பதுபோல ஆசையோடு சாப்பிட்டார். கடைசிவரை அவர் சாப்பிட்டது வழுக்காய் கறி என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை.

அம்மாவிடமிருந்த இன்னொரு உயர்ந்த குணாம்சம் சமைக்கும் பதார்த்தம் வெந்துவிட்டதைத் தீர்மானிப்பது. மற்றவர்களைப்போல அம்மா அதை நேரத்தை வைத்து முடிவு செய்வதில்லை. ருசித்துப் பார்த்தும் தீர்மானிப்பதில்லை. அதன் மணத்தில் இருந்தே கணித்துவிடுவார். ஒருநாள் கணவாய் அடுப்பில் வெந்துகொண்டிருந்தது. கணவாயை சுத்தமாகக் கழுவி, கலருக்காக ஒரு சொட்டு மை போட்டு, முருங்கைப்பட்டையும் கலந்து வேகவைத்தார். இது மிகவும் விழிப்பாக இருக்கவேண்டிய நேரம். கொஞ்சம் குறைய அவித்தால் வேகாது; கூட அவித்தால் இறுகிவிடும். அந்த சமயம் பார்த்து பக்கத்துவீட்டு கனகம்மாக்கா வந்துவிட்டார். அம்மா அவருடன் வெளியே இருந்து பேசினார். ஆனால் அவருடைய மூக்கு மட்டும் அடுக்களையில் இருந்து வரும் வாசனையிலேயே கவனமாக இருந்தது. அந்த மணம் ஒரு கட்டத்தை அடைந்ததும் அம்மா உள்ளே வந்து கறியை சட்டென்று இறக்கி வைத்துவிட்டார். உப்பு, புளி அளவுகள்கூட அவருக்கு மணத்திலேயே தெரிந்துவிடும்.

இப்படி பல தந்திரங்கள் அவரிடம் இருந்தன. உளுத்தம் களி கிண்டும் போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்ப்பதம் கட்டியாகிக் கொண்டே வரும். அடிக்கடி அகப்பைக் காம்பால் குறுக்காக கீறுவார். தண்ணீராக இருந்தால் கீறல் உடனே அழிந்துவிடும்; கட்டிவற்றிப் போனால் மறையாது. கீறிய கோடு இரண்டு செக்கண்ட கழிந்து மறைந்தால் அது தான் இறக்குவதற்கு சரியான தருணம் என்பார் அம்மா.

அம்மாவின் முழுத்திறமையும் வெளிப்படுவது ஆட்டுக்கறிப் பிரட்டல் செய்யும்போது தான். அதன் ஆயத்தங்கள் ஆறு மாதம் முன்பாகவே எங்கள் வீட்டில் தொடங்கிவிடும். ஆட்டை வளர்க்கும்போதே ஐயாவிடம் அம்மா சொல்லி வைத்துவிடுவார். ஆடு ஒரு பருவமான எடையை எட்டியதும் அதன் முழுச் சாப்பாட்டு பொறுப்பையும் அம்மா ஏற்றுக் கொள்வார். அதன் பிறகு ஆட்டின் கண்ணில் புல்லையே காட்டமாட்டார். சோறு, பருப்பு, வெல்லம், வெண்ணெய், இஞ்சி என்றே ஊட்டுவார். பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அதன் பின்பாகம் பெருத்துக் கொண்டு வரும்.

அந்தப் பகுதி இறைச்சிதான் அம்மாவின் பங்காகக் கிடைக்கும். கருஞ்சிவப்பாக கொழுப்பிலே மிதந்துகொண்டு, தொடுவதற்கு மிருதுவாக மினுங்கும். மிளகாய்த்தூள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, உப்பு என்று சேர்த்து மெல்லிய சூட்டில் இறைச்சியை அதன் கொழுப்பிலேயே வதக்குவார். அதன் பிறகு பச்சை மிளகாயை நீளவாட்டில் கீறிப் போட்டு தக்காளி, இஞ்சி, கறுவா, ஏலக்காய் என்று சேர்த்து பிரட்டி அது கட்டியாக இறுகும் சமயத்தில் கொத்தமல்லிக் கீரை கொஞ்சம் சேர்த்து இறக்குவார். வாசம் கமகமவென்று எழும்பும். பற்களாலே இறைச்சியை மெல்லுமுன் நாக்கின் நடுவிலே ஒரு நிமிடம் நிறுத்தி, அப்புறம் மெல்ல ருசியை உறிஞ்சவேண்டும். அப்படித்தான் அதன் முழுச் சுவையையும் அனுபவிக்கலாம். ஆனால் இது எங்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் விருந்து. அப்படியும் மோசமில்லை. ஏனென்றால் ஒரு வருடத்துக்கு அந்த ருசி நாக்கிலேயே தங்கியிருக்கும்.

அருமையான மாலை வேளை. யாரோ ராட்சதன் அடித்து விழுத்தியது போல சாந்தகுரூஸ் ஆகாயம் சிவத்துப்போய் கிடந்தது. இன்னும் சில நிமிடங்களில நட்சத்திரங்கள் தோன்றிவிடும். நான் சொகுசு நாற்காலியில் சாய்ந்திருந்து சன்னல் வழியாக ரோட்டைப் பார்த்துக்கொண்டிருந்தேன். கையிலே விரித்தபடி கிடந்த தடித்த தோல் அட்டை போட்ட, இத்தாலோ கால்வினோவின் நாவல் – கதாநாயகன் மரத்திலே ஏறி கீழே இறங்க மறுத்தது – நாற்பதாவது பக்கத்துக்கு மேலே நகர மறுத்தது. ஒரு மாது குழந்தையை தள்ளுவண்டியில் தள்ளியபடி நடந்தாள். படுவேகமாக ஓடக்கூடிய ஒல்லியான கறுப்புப் பெண் அவர்களை கணத்தில் கடந்து வேகமாக ஓடினாள்.

முதல் மனைவி சமையல் கட்டில் பரபரப்பாக இயங்குகிறாள். இடைக்கிடை தலையை தோள்மூட்டில் சாய்த்தபடி எதையோ உன்னிப்பாகப் படிக்கிறாள். இன்று ஏதோ விசேஷமானது மேசைக்கு வரப்போகிறது. பால் ஆடை அலங்கரிக்கும் டேட் புடிங்க் ஆகக்கூட இருக்கலாம். காரியம் இப்படியே போய்க்கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். நாங்கள் சாந்தகூரூஸை விடுவதற்கு இன்னும சில மாதங்களே இருந்தன. திடீரென்று அம்மாவின் கடிதம் வந்தது. அவர் வருகிறார்.

பசிபிக் மகாசமுத்திரத்துக்கு மேலே இரண்டு பெரும் காற்றுகள் உருண்டு திரள்வதுபோல ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது. அம்மா பெரும் சமையல் செய்யத்திட்டமிட்டு சிறு சிறு பொருள்களை எல்லாம் சேகரித்து வருவார். அதில் எனக்கு மிகவும் விருப்பமான நெத்தலியும் இருக்கும்.

என் மனைவியிடம் மிக்ஸி, கிரைண்டர், ஜுஸர் என்ற பல உணவு தயாரிப்புக் கருவிகள் இருந்தன. வெட்டுவதற்குக்கூட பலரக மெசின்கள். விதம்விதமான உருவங்களில், பல்வேறு சைஸ்களில் தடிப்பான தாமிர அடிப்பாகம் வைத்த பாத்திரங்கள் சமையலறையை அலங்கரித்தன. எப்படி எப்படியெல்லாம் சமைக்கவேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படியெல்லாம் சமைத்துத் தரும் வசதிகள் கொண்ட மின்சார அடுப்பு.

எங்களுடையது நாலு பக்கமும் வெளிச்சம் வரும் திறந்த சமையல் கட்டு. என்றாலும் அங்கே எப்படியோ ஓர் அரண் உண்டாகிவிட்டது. அம்மாவை சமையல் கட்டுக்கு வெளியே பார்ப்பது எனக்கு விசித்திரமான அனுபவம். அதே மஞ்சள் கரை போட்ட சேலையை அணிந்திருந்தார். சேலையின் நுனியை இழுத்துப் பிடித்தபடி இரண்டு நாற்காலிகளில் மாறி மாறி உட்கார்ந்தார். அவருடைய சமையல்கட்டு ராச்சியத்தை யாரோ எதிரி அரசன் பிடுங்கியதுபோல என் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தார். பெரும் பயிற்சி பெற்ற அமெரிக்க சுங்க அதிகாரிகளை ஏமாற்றிக் கொண்டுவந்த அம்மாவின் சமையல் சாமான்களில் ஒன்றுகூட சமையல்கட்டுக்குள் நுழைய அனுமதி பெறவில்லை.

என் முதல் மனைவியின் பேச்சில் தேன் ஒழுகியது. இதுவே அம்மாவுக்கு அவள் கொடுக்கும் முதல் விருந்து. பலமான ஆரவாரங்களுக்குப் பிறகு தயாரித்த ‘கொப்ளரை’ அம்மாவுக்கு பவ்யமாகப் பரிமாறினாள். அது சப்பையாக இருந்தது. மூன்று நாட்கள் பழுதாகிப் போன ஏதோ ஒன்றின் வாசனை அடித்தது. சலவை மெசினில் துவைத்த சட்டையில் தவறவிட்ட நோட்டுத் தாள்போல சுருங்கி பல்லிலே இழுபட்டது. அம்மா மிகவும் சாமர்த்தியமாக தனது அவஸ்தையை மறைத்தார். வாயே திறக்கவில்லை.

என்றுமில்லாத விதமாக அன்றைக்கு அவர் என் நாடியை மெல்லத் தடவிக் கொடுத்துவிட்டு படுக்கைக்கு போனார். நான் முதல் மனைவியிடம் சொன்னேன். “இனிமேல் இந்த கொப்ளர் சனியனை செய்ய வேண்டாம். ஒவ்வொரு முறையும் நிலநடுக்கததின் உதவியை எதிர் பார்ப்பது சரியல்ல.” இதை மிகவும் சமாதானமான ஒரு குரலில்தான் சொன்னேன். இதில் என்ன பிழை இருக்கிறது?

அப்படியும் என் வீட்டில் ஒரு பூகம்பம் தொடங்கியது. றிக்டர் அளவையில் அது எவ்வளவு என்று தெரியாது. ஆனால் ஒரு மாதம் கழித்து அம்மா திரும்பும் வரைக்கும் நீடித்தது.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *