முடிவிற்கான ஆரம்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 6,703 
 
 

(இதற்கு முந்தைய ‘தாமிரபரணி’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)

சபரிநாதன் பேருந்து நிலையம் வந்து நின்றாரே தவிர, அவருடைய மனசு பூராவும் சுப்பையாவையும் ராஜலக்ஷ்மியையுமே நினைத்துப் பயந்து கொண்டிருந்தது.

இருவருக்கும் இடையே உடலுறவு நிகழ்வது போலக்கூட மனசில் காட்சி விரிந்து சபரிநாதனை கதி கலங்க வைத்தது. மச்சக்காளையின் சாவுக்குப் போவதில் இருந்து அவருடைய மனசு பின்வாங்கப் பார்த்தது.

உடனே கிளம்பிவர தோதுப் படவில்லை என்று கழுகுமலைக்கு போன் பண்ணிச் சொல்லிவிட்டு, சாவகாசமாக ராஜலக்ஷ்மியுடன் போய் துக்கம் கேட்டுவிட்டு வரலாம் என்ற தீர்மானத்திற்கு வந்த பிறகுதான் அவருக்கு மூச்சு சீராக வந்தது.

மறுபடியும் திம்மராஜபுரம் நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார். அனால் நடக்க நடக்க அவரின் மனம் கொஞ்சம் பயந்தது. நிஜமாகவே வீட்டில் பார்க்கக்கூடாத காட்சி எதையாவது பார்க்க நேர்ந்துவிட்டால்? சபரிநாதனின் மண்டைக்குள் பயம் குபீரென்று ஓங்கி உயர்ந்தது. சில நிமிஷங்கள் ஸ்தம்பித்துப் போய் நின்றார். அவருக்குள் ஆவேசம் முறுக்கேறியது. ஆவேசத்தோடும் அச்சத்தோடும் வீட்டை நோக்கி விறுவிறுவென நடந்தார். ரொம்பநேரம் நடந்து வீடு போய்ச் சேர்ந்தபோது, அது பூட்டிக் கிடந்தது.

சபரிநாதன் வெளியே நின்றுகொண்டிருந்த சுப்பையாவின் மோட்டார் பைக்கையும் ஒரு வன்மப் பார்வை பார்த்துக்கொண்டார். கோபத்துடன் வீட்டுத் திண்ணையில் ஏறி நின்றார். அவருடைய பார்வையை சுழல விட்டபோது, அவரின் பார்வை ஸ்தம்பித்தது. ஊரிலுள்ள பெண் பிள்ளைகளுடன் அவரின் அழகான பெண்டாட்டி ஆற்றில் குளித்த ஈரத் தோற்றத்தில் அவசரமாக வந்து கொண்டிருந்தாள். ஈரப் புடவை உடம்பை ஒட்டிய தோற்றத்தில் பார்ப்பதற்கு படு செக்ஸியாக இருந்தாள். கொஞ்சம் தள்ளி குளித்த தோற்றத்தில் சுப்பையாவும் வந்து கொண்டிருந்தான். சபரிநாதனின் உச்சி மண்டை கொதிநீர் போல தகித்தது. உடம்பு வெட வெடவென்று ஆடியது. பதட்டத்தில் கீழே விழுந்து விடக்கூடாது என்கிற உறுதியில் தூணைப் பிடித்துக்கொண்டு இறுக்கமாக நின்றுகொண்டிருந்தார்.

சபரிநாதனின் அந்த நெடிய உருவத்தைப் பார்த்த மாத்திரத்தில் ராஜலக்ஷ்மியின் முதுகுத்தண்டில் ஜிலீர் என்றது. நனைந்த உடைகள் உடம்பை இறுக்கிக் கொண்டிருந்தாலும் அவளுக்கு குப்பென்று வியர்த்து விட்டது. வாழ்க்கை அசம்பாவித எல்லை ஒன்றைத் தொடப்போவது தெரிந்தது. ஆனாலும் ராஜலக்ஷ்மிக்குள் வீரக் குஞ்சு ஒன்றும் சிறகடிக்கத்தான் செய்தது. புகைந்து கொண்டிருக்கிற தாம்பத்திய வாழ்க்கையில் இப்படி ஏதாவது தீப்பொறி போல் வந்து விழுந்தால்தான் இரண்டில் ஒன்று எரிந்து சாம்பலாகும். காலத்திற்குமா ஒருத்தி புகை மூட்டத்திற்குள்ளேயே அவிந்து போய்க் கிடப்பாள்?

இப்படிப்பட்ட மனச் சிலிர்ப்போடுதான் ராஜலக்ஷ்மி கதவைத்திறந்து வீட்டிற்குள் போனாள். சபரிநாதன் நின்ற இடத்தில் நின்றபடியே இருந்தார். சுப்பையாவைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அவரின் மனத்துக்குள் ஆக்ரோஷமும் அச்சமும் கர்ஜனை செய்தன. இரையை அடித்து வீழ்த்த மனச் சிங்கம் வாலை மெல்ல சுழற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அவரின் உடம்பு மன நிலைக்கு முரணாக ஒரு சின்னஞ்சிறு அசைவுகூட இல்லாமல் திண்ணையில் நின்றது. உடல்நிலையின் முரண் சில நிமிடங்களில் மனநிலையிலும் வந்தது.

அவர் இப்போது வீட்டிற்குள் போய் எதிர்நோக்க வேண்டியது அவர் கட்டிக் காபந்து பண்ணி வைத்திருந்த பெண்டாட்டியை இல்லை. அவருடைய கட்டுப்பாட்டை ஊரறிய உடைத்துப் போட்டிருக்கும் இளம் பெண்ணை! இந்த இடத்தில்தான் கிழ சிங்கத்தின் வால் ஆட கொஞ்சம் தயங்கியது; அல்லது பயந்தது. கட்டுப்பாடு உடைக்கப்பட்டிருப்பதே சிங்கத்திற்குத் தோல்வி இல்லையா? அதனால் சிங்கம் திண்ணையிலேயே நின்ற கோலத்தில் இருந்தது.

அப்போது சற்றும் எதிர்பாராமல் காந்திமதியின் அப்பா கோட்டைசாமி அங்கு வந்து நின்றார்.

“ஒரு சமாச்சாரம் கேள்விப்பட்டேன். அது எவ்வளவு தூரம் நெசம்னு தெரியலை…”

சபரிநாதன் அவரை எரிச்சலுடன் பார்த்தார்.

“தேர்தல்ல நீங்க நிக்கிறதுக்கு ஸீட்டு கேட்டு, மந்திரி அருணாச்சலம் முடியாதுன்னு சொல்லிட்டாஹளாமே?”

“யாரு சொன்னது?” கிழசிங்கம் கர்ஜித்தது.

ஏனென்றால் மந்திரியைப் போய்ப்பார்த்த விவரத்தை யாரிடமும் மூச்சு விடக்கூடாது என்று சிங்கம் முருகபூபதியிடம் பல தடவைகள் சொல்லி மிரட்டி வைத்திருந்தது! மிரட்டி என்ன செய்ய? நடுத்தெருவில் சிதர் தேங்காய் மாதிரி விஷயம் இதோ உடைக்கப்படுகிறது.

“மாதிரியோட பி.ஏ.தான் வந்து நம்ம ஊரு பூரா சொல்லிட்டுப் போனமாதிரி தெரியுது!”

“அவன் ஏன் சொல்லமாட்டான்? அருணாச்சலமே ஒரு புளுகன். அவனோட பி.ஏ அவனைவிட அண்டப் புளுகன் போல…! இந்தப் பக்கம் அந்தப் பய மறுபடியும் வந்தா சொல்லிவை கோட்டை – அவனோட மூஞ்சி முட்டிக்குப் பக்கத்ல வந்திரும்னு.”

அப்போது திடீரென தெரு பூராவும் ஜனங்கள் திரள ஆரம்பித்தார்கள். ஆற்றில் மூழ்கி இறந்துபோக இருந்த புவனாவை சுப்பையா காப்பாற்றி கரை சேர்த்தான் என்கிற செய்தி பரவித்தான் கூட்டம் உணர்வு வேகத்துடன் திரண்டு வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தி சபரிநாதனின் காதில் விழுந்தது. சிங்கம் இதைப் பார்த்துக்கொண்டே இருந்தது.

சுப்பையாவைப் பாராட்டவும், வணங்கவும் ஏழைத் தொழிலாளி மாடசாமியின் தலைமையில் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. வறுமையில் வாடும் மாடசாமிக்கு சுப்பையா அவருடைய மகள் புவனாவை ஆற்று வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி கரை சேர்த்தது சந்தோஷம்தான். ஆனால் அந்த நிமிஷம் அதுவே கழிவிரக்கமாகிவிட மாடசாமி மனமுடைந்து போய்ப் புலம்பினார்.

“ஏன் சாமி இந்தப் பொட்டக் களுதையை காப்பாத்தினீங்க? இது என்ன பண்ணப் போகுது பொழச்சி கெடந்து? வயித்துக்குக்கூட சோறு போடமுடியாத நான் என்னிக்கி அதுக்கு கல்யாணமெல்லாம் செஞ்சி வைப்பேன்? அவ எப்ப புருசன்கூட போறத பாப்பேன்? சொல்லுங்க சாமி; ஏன் இந்தப் புள்ளைய காப்பாத்தினீங்க…?”

மாடசாமியின் இந்த அழுகையைப் பார்த்து சாமிநாதனைத் தவிர மற்ற எல்லோருமே கலங்கிப் போனார்கள். ஆனால் சபரிநாதனுக்கு மட்டும்தான் இதெல்லாம் சுப்பையா எழுதித் தயாரித்த நாடகமாகத் தெரிந்தது. மூஞ்சியைத் திருப்பிக்கொண்டு வீட்டிற்குள் போக எத்தனித்தபோது, உள்ளிருந்து உடை மாற்றிய தோற்றத்தில் ராஜலக்ஷ்மி எதிரில் வந்து நின்றாள்.

இருவரின் பார்வையும் ஒரு சூனியத்தில் சந்தித்துக்கொண்டன. ஒரு விலங்கு சபரிநாதனுக்குள் உடலை சிலிர்த்துக்கொண்டது.

“மதிய சாப்பாட்டுக்கு என்ன சமைக்கட்டும்?” ராஜலக்ஷ்மி பயப்படாமல் அவரின் கண்களை பார்த்துக் கேட்டாள். சட்டென அவரின் மனவேகம் சுப்பையாவிடம் இருந்து பெயர்ந்து அவள் மேல் குவிந்தது.

“மொதல்ல உள்ளே போ, வந்து சொல்றேன்.”

வீட்டிற்குள் திரும்பிச்சென்ற ராஜலக்ஷ்மியை பின்தொடர்ந்து உள்ளே போனவர் அடுத்த வினாடியே கதவை சாத்தித் தாளிட்டார். மனசோடு உடம்பும் சூடானது. “நில்லுளா…” என்று அதட்டினார்.

“என்ன சமைக்கணும்னா கேக்க நீ? செத்த மூதி! நான் சொல்லியிருக்கிறதை மீறி கண்ட பயலும் பாக்கிற மாதிரி ஆத்துல பொரண்டுட்டு வந்திட்டு; என் மானம் மரியாதை எல்லாத்தையும் காத்துல விட்டெறிஞ்சிட்டு; எவ்வளவு தைரியம் இருந்தா என்னை வந்து கேப்ப நீ என்ன சமைக்கட்டும்னு…!” கொந்தளிப்புடன் எட்டி ராஜலக்ஷ்மியின் பின்புறத் தலை முடியை கொத்தாகப் பிடித்தார்.

“இது எத்தனை நாள் கள்ளத் தொடுப்புளா? புருசன் ஊர் எல்லையைத் தாண்டிட்டான்னதும் ஆத்துல கூத்தடிக்க கெளம்பியாச்சோ? குளிச்சதும் இல்லாம ஈரச்சேலையோட உடம்பைக் காட்டிட்டுவேற வார… எந்தக் காலத்துலளா சபரிநாதன் பெண்டாட்டி ஆத்துல குளிச்சிருக்கா? இன்னிக்கி ஆத்துக்குப் போனவ நாளைக்கி அவனோட படுக்க எங்கே போவியோ.. சொல்லுளா சொல்லு. போவியா என் வார்த்தையை மீறி… போவியா என் சொல்லை மீறி..” என்று கேட்டுக்கேட்டு அவர் உலுக்கிய உலுக்கலில் ராஜலக்ஷ்மி தடுமாறிக் கீழே விழுந்தாள்.

அவிழ்ந்த வேட்டியைத் தூக்கி டப்பாக் கட்டு கட்டிக்கொண்டார்.

ராஜலக்ஷ்மியை தூக்கி நிறுத்தி மாற்றி மாற்றி அவளுடைய கன்னங்களில் அறைந்தார். அவளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சுவரில் முட்ட வைத்தார். அப்படியும் அவருக்கு மனவேகம் தணியவில்லை.

“அழகு ராணின்னு திமிர்ளா ஒனக்கு… அந்தத் திமிர்தான் அவனோட போகச் சொல்லியிருக்கு… நீ போன நேரம் பார்த்து எப்படிளா அவனும் வந்தான்? வரச் சொன்னியா? நெசத்தைச் சொல்லு… இல்லேன்னா நீ பேதியிலதான் போவ…” ராஜலக்ஷ்மி சபரிநாதன் பிடியிலிருந்து உடனே திமிறினாள்.

“அடிக்காதீங்க என்னை, என்னால தாங்கமுடியாது… யாரும் யாரையும் வரச் சொல்லலை. சந்தேகம் இருந்தா புவனாவைப் போய்க்கேட்டு தெரிஞ்சுக்கோங்க. பெண்டாட்டி என்கிறதுக்காக அடி உதைங்கிற புது வழக்கமெல்லாம் வேண்டாம்…”

“என் பெண்டாட்டி என் பெண்டாட்டியா மட்டும்தான் இருக்கணும். இல்லேன்னா அடி உதைதான்.”

“பெண்டாட்டி என்கிறதுக்காக என்னால அடிமையா இருக்க முடியாது.”

“ஓ அப்ப நான் இல்லாத நேரம் ஆத்துக்குப் போவேன்னு சொல்ற?”

“ஏன், ஒங்க மொதல் பெண்டாட்டி ஆத்துல போய் குளிச்சதே இல்லையோ?”

வன்முறையின் வேகத்தில் இருந்த சபரிநாதனால் இந்தக் கேள்விக்கு உடனே பதில்சொல்ல முடியவில்லை. எதிர்பாராத கேள்வியை சந்தித்துவிட்ட மலைப்பு அவரின் மேட்டு விழிகளில் புடைத்துத் தெரிந்தது. ஏதோ ஒரு பதில் உணர்வுகளில் ஓடியதே தவிர வார்த்தைகளில் வெளிப்படவில்லை.

“பதில் சொல்லுங்க. ஒங்க மொதல் பெண்டாட்டி ஆத்துல குளிச்சிருக்காங்களா இல்லையா?”

“ஒனக்குப் பதில் சொல்ற நிலைமையில் இல்லை நான்.” அவர் குரலில் ஒரு சின்ன பயம் தொனித்தது.

“புரியுது… ஒங்க மொதல் சம்சாரம் ஆத்துல குளிக்கலாம். ஆனா நான் குளிச்சிடக்கூடாது. அவங்களைக் கூட்டிக்கிட்டு வருசா வருசம் குற்றாலம் போவீங்க; டெல்லி, பம்பாய் போவீங்க… என்னை மட்டும் வீட்டுவாசல் படியைத் தாண்ட விடமாட்டீங்க. அப்படியென்ன அவங்களுக்கு ஒரு நியாயம்; எனக்கு ஒரு நியாயம்? வேளா வேளைக்கு உங்களுக்குச் சோறு வடிச்சிப் போட்டுக்கிட்டு நாலு சுவத்துக்குள்ளேயே வேலைக்காரியாட்டம் கெடக்கணும். இல்லேன்னா மாட்டை அடிக்கிற மாதிரி போட்டு அடிப்பீங்க. கடைசியா என் கேள்வி இதுதான்… என்னை உங்க முதல் சம்சாரத்தை நடத்தின மாதிரி நடத்த மாட்டீங்க; ஆனா என் சமையல் மாத்திரம் அந்த முதல் சம்சாரத்தோட சமையலாட்டம் தேவாமிர்தமா இருக்கணும்! பூமி தாங்காது இந்த அநியாயத்தை…தூ.” காறித் துப்பிவிட்டு ராஜலக்ஷ்மி விடுவிடுவென சமையல் அறைக்குள் போய்விட்டாள்.

நிஜமாகவே அவளுக்கு அப்பாடா என்று இருந்தது. ஏதோ ஒரு முடிவிற்கான ஆரம்பம் தொடங்கியாகி விட்டது. இதை கொஞ்சமும் எதிர் பார்க்காத சபரிநாதன் எதற்குள்ளோ மூழ்கிப் போனவராக மலைத்து நின்றார். அவரையும் மீறி ஒரு குழப்பம் நடந்திருப்பது சிறிது புரிந்தது. அப்போது பார்த்து காதுகளுக்குள் ஒலித்த ஒருமாதிரியான மணியோசை அவரை மிரள வைத்தது. தோற்றுப்போன பிரமையும் அவர் மனசை அச்சுறுத்தியது. ராஜலக்ஷ்மியை அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பார்த்தார். ஆனால் பதிலுக்கு அவள் சபரிநாதனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டாள். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டதே தண்டனையாகத் தெரிந்து சபரிநாதனைக் கோபமூட்டியது.

குழப்பம்; பயம்; கோபம் என்ற உணர்வுக் கலவையில் நூதனமான அமைதியில் அவர் அமிழ்ந்து போயிருந்தார். அவருடைய மனம் மரகதத்தை நினைத்துப் பார்த்தது. மரகதம் இல்லாத தனிமையை சோகமாக எண்ணிப் பார்த்தார். என்ன செய்வதென்று தெரியாத வெறுமையில் வீட்டிற்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக அடிபட்ட புலிபோல் நடந்து கொண்டிருந்தார். பிறகு, இரண்டு மணி வெயிலில் இயல்புக்கு மாறாக குளியல் அறைக்குள் போனவர், காலம் இழந்த மனநிலையில் கிட்டத்தட்ட இரண்டுமணி நேரங்கள் குளித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வு ராஜலக்ஷ்மியை பதட்டப்படுத்தி விட்டது. ஆனாலும் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டாள். சபரிநாதனின் எப்பேற்பட்ட அடுத்த நகர்வுக்கும் ஈடு கொடுக்க உள்ளூரத் தன்னை அவள் தயார் படுத்திக்கொண்டாள்.

சபரிநாதன் அணு அணுவாக மனச் சிதைவிற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் சீர்குலைவு பாவம் அவளுடைய அறிவுக்கு அப்போது புலப்படவில்லை…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *