முக்கலங்குத்தி மாயக்கா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 4,421 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு வெறகு வெட்டி இருந்தா. தெனமும், மூணு மூட நெல்லுக்கு, வெறகு வெட்டி, வித்துப் பொளச்சுக்கிட்டிருந்தா. அவ பொண்டாட்டி, அந்த மூணு மூட நெல்லயுங்குத்தி, கஞ்சி வெள்ளம் வச்சு, புருசெ, வெறகு வெட்டுற எடத்துக்கு, கொண்டுகிட்டு போவாளாம்.

மூணு மூட நெல்லயும் குத்துறதுனால; அவள, அந்த ஊர்ல, எல்லாரும் முக்கலங்குத்தி மாயக்காண்டு கூப்டுவாங்களாம். இப்டி – வெறகு வெட்டுறவ, வாழ்க்க ஓடிக்கிட்டிருக்கு.

இருக்கயில; ஒரு நாள் – அந்த நாட்டு ராசாவும் – ராசா பொண்டாட்டியும் வனசஞ்சாரம் வந்தாங்க. வரயில, அந்த வழியா, முக்கலங்குத்தி மாயக்கா – பெரிய தாழில, கஞ்சி வெள்ளத்த செமந்துகிட்டு வாரா. ராணி; முக்கலங்குத்தி மாயக்காளப் பாத்து, சந்தேகப்படுறா. பக்கத்துல போயி, எங்க போறண்டு கேட்டா. அங்க: எம்புருசெ, வெறகு வெட்டுது. அதுக்கு, கஞ்சி கொண்டு போறேண்டு சொன்னா.

எம்புருசெ, தெனமும் மூணு மூட நெல்லுக்கு வெறகு வெட்டும். அந்த மூணு மூட நெல்லயும் குத்தி, கஞ்சி வெள்ளம் வச்சுக் குடுக்கறேண்டு, முக்கலங்குத்தி மாயக்கா சொன்னா.

அப்ப: ராணி, மூணு மூட நெல்லுல இருந்து எடுத்த அரிசிச் சோற, ஒரு மனுசெ சாபட முடியுமா? தெனமும் மூணு மூட நெல்லக் குத்தியெடுக்கிறது எப்டிண்டு ஓசிக்கிறா. இதுல: ஏதோ அதிசயம் இருக்குண்ட்டு , முக்கலங்குத்தி மாயக்காகிட்டப் போனா.

போயி -, முக்கலங்குத்தி மாயக்கா சீலய, ராணி வாங்கிக் கெட்டிக்கிட்டா. கெட்டிக்கிட்டு, முக்கலங்குத்தி மாயக்கா மாதிரி, வெறகு வெட்டுறவனுக்கு கஞ்சி கொண்டு போறா. ராணியோட ஒடைகள வாங்கி, முக்கலங்குத்தி மாயக்கா போட்டுக்கிட்டு, ராசா கூட அரமணக்கிப் போறா. அரமண ரகசியங்கள, முக்கலங்குத்தி மாயக்காளுக்கு ராணி சொல்லிட்டா.

வெறகு வெட்டி, ராணிய; தம் பொண்டாட்டிண்டு நெனச்சுக்கிட்டு, கொண்டு வந்த கஞ்சி வெள்ளத்தக் குடிச்சுட்டு, அவள, வீட்டுக்குப் போகச் சொல்லிட்டா. சொல்லவும்: – இவளுக்கு வீடு தெரியாதில்ல, அதுனால இவ போக மாட்டேங்குறா. சரிண்ட்டு, வெறக வண்டில ஏத்திக்கிட்டு, ரெண்டுபேரும் வீட்டுக்கு வராங்க.

அங்க – ராசா கூடப் போன முக்கலங்குத்தி மாயக்கா, அரமண விசயங்கள நல்லாத் தெரிஞ்சுகிட்டு, அவபாட்ல அரமணயில இருக்கா. மூணு கலம் நெல்லரிசிக் கஞ்சி வெள்ளத்த செமந்துகிட்டுத் திரிஞ்சவ, அரமணயில சொகுசா இருக்கா.

அப்ப ராசா, அரசாங்க வேலயா வேற நாட்டுக்குப் போயிட்டாரு. முக்கலங்குத்தி மாயக்கா, அவபாட்டுக்குத் திங்க – உங்க இருக்கா.

இங்கிட்டு, வெறகு வெட்டி கூட வீட்டுக்கு வந்த ராணி, மொதல்ல நெல்லுக் குத்துன எடத்தப் பார்த்தா. பாக்கயில, நெல்லு உமி மல மாதிரி குமுஞ்சு கெடக்கு. கெடக்கவும், நாலு பொம்பளைகளக் கூப்ட்டு, இந்த நெல்லுமியத் தூத்துங்கண்டு சொன்னா. அஞ்சாறு பொம்பளைக தூத்துராங்க.

அண்ணக்கி, ஆறு மரக்கா அரிசி போட்டுச் சோறாக்குனா. அதுக்குத் தகுந்த கொளம்பு வச்சா. வெறகு வெட்டுறவனுக்கு கொண்டு போறா. கொண்டு போயிக் குடுத்தா.

ஆறு மரக்கா அரிசிச் சோறுல, மூணு மரக்கா அரிசிச் சோறத் திண்டா. மீதி மூணு மரக்கா அரிசிச் சோற திங்க முடியல. மூணு மரக்கா அரிசிச் சோறச் சாப்டிட்டு, ஏழு வண்டி வெறகு வெட்டுனா. அதுக்குக் கூலியா அஞ்சு மூட நெல்லு வாங்கினா.

கஞ்சியக் குடுத்திட்டு – வீட்டுக்கு வந்த ராணிகிட்ட, நெல்லுமில இருந்து இருவது மூட நெல்லும், எட்டு மூட அரிசியும் தூத்தி வச்சிருந்து குடுத்தாங்க. ரொம்ப சந்தோசப்பட்டு, அதுகள ஒழுங்குபடுத்தி அங்கங்க வச்சா.

மறுநா, மூணு மரக்கா அரிசி போட்டுச் சோறாக்குனா. அதுக்கு ஏத்த மாதிரி கொளம்பு வச்சா. மூணு மரக்கா அரிசிச் சோத்துல, ஒண்டர மரக்கா அரிசிச் சோறச் சாப்ட்டா. மீதி ஒண்டர மரக்ச அரிசிச் சோற வச்சிட்டா. சாப்ட முடியல. கொளம்ப வசமா வச்சுத் தாராள்ல. ஒண்டர மரக்கா அரிசிச் சோறச் சாப்ட்டுட்டு, பத்து வண்டி வெறகு வெட்டிட்டா.

அடுத்தநா — ஒண்டர மரக்கா அரிசி போட்டுச் சோறாக்கி, கொண்டு போறா. அதுல மூணு படி அரிசிச் சோறச் சாப்ட்டர். மீதி மூணுபடி அரிசிச் சோறத் திங்க முடியல, வச்சிட்டா. கஞ்சி குடுத்திட்டு வந்த ராணிகிட்ட நாப்பது மூட அரிசியும் பத்து மூட நெல்லுங் குடுத்தாங்க. அதுகள வக்கிறதுக்கு வீடு இல்லாதனால வெறகுவெட்டியா பேருல. ஒரு வீடு கட்டத் தொடங்கிட்டா.

அதுக்கடுத்தநா, மூணுபடி அரிசி போட்டுச் சோறாக்கி, அதுக்குத் தகுந்த கொளம்பு வச்சு, வெறகு வெட்டியானுக்கு கொண்டு போறா. மூணுபடி அரிசிக் கஞ்சில, ஒண்டரப்படி அரிசிக் கஞ்சியக் குடிச்சர். மீதி ஒண்டரப் படி அரிசிக் கஞ்சியக் குடிக்க முடியல.

ஒண்டரப் படி அரிசிக் கஞ்சி குடிச்ச அண்ண க்கி, பதினஞ்சு வண்டி வெறகு வெட்டுனர். அண்ணக்கி எம்பது மூட அரிசியும் – இருவது மூட நெல்லும் – உமியிலிருந்து எடுத்துக் குடுத்தாங்க. நாளுக்கு நாளு வருமானம் பெருகுது.

இந்த நெல்லுகளக் கொண்டு போயி, சந்தையில வித்தா. வித்து, வீடு கட்றா. வீடு கட்றது, வெறகு வெட்டியானுக்குத் தெரியாது. எண்ணிக்கும் போல – வெறகு வெட்டிக்கிட்டிருக்கா. இங்க – முக்கலங்குத்தி மாயக்கா, அவபாட்ல, ராசாக்கெணக்கா அரமணயில இருக்கா. ராணி, இத்தனயயும் நடத்திக்கிட்டு வாரா.

அதுக்கடுத்த நாளு: ஒண்டரப் படி அரிசி போட்டுச் சோறாக்கி, தகுந்த கொளம்பு வச்சு, காட்டுக்குக் கொண்டு போறா. ஒண்டரப் படி அரிசிச் சோறுல; முக்காப் படி அரிசிச் சோறச் சாப்பிட்டா. மீதி முக்காப்படி அரிசிச் சோற சாப்ட முடியல. அண்ணக்கி வேலயும் நல்லாச்செஞ்சா. இங்க – இவ, வீட்டயும் கெட்டி முடிச்சுட்டா.

இப்டி வெறகு வெட்டிக்கிட்டிருக்கயில, வெறகு வெட்டியான வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போறா. கூட்டிக்கிட்டுப் போயி-, தண்ணியக் காய வச்சுக் குடுத்தா. தல முழுகினர். நல்லாப் படுத்து ஓரங்கிட்டா. ஓரங்கி எந்திரிக்கவும், முடி வெட்டி, மொகம் வளிச்சிட்டு வாண்டு சொன்னா. முடி வெட்டி, மொகம் வளிச்சிட்டு வந்தா. புதுத் துணிகளக் குடுத்தா. உடுத்திக்கிட்டர். கூப்ட்டுட்டுப் போயி -, வீட்டச் சுத்திக்காட்டி, இதா.. ஓ… வீடுண்டு சொல்லி, வீட்டுச் சாவியக் குடுத்தா. வாங்கிக்கிட்டா.

எல்லாம் முடுச்சுட்டு, பெறந்த வீட்டுக்குப் போயிட்டு வாரேண்டு சொல்லிட்டு, அரமணக்கிப் போறா. போயி; முக்கலங்குத்தி மாயக்காகிட்ட நடந்ததச் சொல்லி, தாங்கட்டியிருந்த சீலய, அவகிட்டக் குடுத்துக் கட்டச் சொல்லி, வெறகு வெட்டியா வீட்டுக்குப் போகச் சொல்லிட்டு, ராணி, அரமணயில இருந்துகிட்டா.

இவ அரமணக்கி போகவும், ராசா அரமணக்கி வரவும் சரியா இருந்திச்சு. அரமண சிறப்பா இருக்கது போல, வெறகு வெட்டியா வீடும் சிறப்பா இருக்குது.

நல்ல பொம்பளண்டப் போயி -, வெறகு வெட்டியா வீட்ட நல்லா ஆக்கிட்டா. முக்கலங்குத்தி மாயக்கா மாதிரி இருந்தா எப்படி இருக்கும்? வச்சது வச்ச வாக்குல போட்டது போட்ட வாக்குல, பொறுப்பில்லாமல் இருக்கும். அதுக்குத்தான், குடும்பத்ல பொம்பள, நல்லவளா இருக்கணும்ங்றது.

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *