முகமறியா முகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2021
பார்வையிட்டோர்: 2,926 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஊரு ஒலகத்தில் காதலிப்பதுபோல், தானும் காதலிக்காமல் போனதுக்கு ராசகுமாரி, வட்டியும், முதலுமாய் வருத்தப்பட்டாள். அந்த அரங்கு வீட்டின் கடைசி அறைக்குள் வாசல்படியில் உட்கார்ந்து கொல்லைப்புறத்தைப் பார்த்தபடியே குழைந்தாள். இரண்டு சிட்டுக்குருவிகள், அவள் முன்னால் சல்லாபம் செய்து கொண்டிருந்தன. முன்பெல்லாம் அவற்றை ரசித்துப் பார்க்கும் அவள், இப்போது, கைகளை ஆட்டி அவற்றை கலைக்கப் போனாள். பிறகு அவையாவது நல்ல ஜோடியாகி இருக்கிறதே என்று நினைத்தவள் போல், கம்மாயிருந்தாள். அப்படியும் இருக்க முடியவில்லை. பிடரிமுடியை மேற்பக்கமும், முன்முடியை பின்பக்கமும் இழுத்து இழுத்து அல்லாடியபடியே சிந்தித்தாள். அவளவள், ஒரு காதலோடு நிற்காமல், மறுகாதல், மறுபடியும் காதல்னு ஜோடி மாற்றம் செய்கிறாள்கள். இவளோ ஒரு சிலரை ஏறெடுத்துப் பார்த்தாலும் அவர்களில் எவனையும் காதலிக்காமல் இருந்தவள். பொம்பளைன்னா ஒரு அடக்கம். ஒடுக்கம் வேணும்னு சின்ன வயதிலிருந்தே அம்மா திட்டித் திட்டியும், அப்பா சாட்டைக் கம்பை ஆட்டி ஆட்டியும், அவள் அக்காவுக்குச் சொன்னது, அப்போது அவளுக்குக் கேட்டதோ என்னமோ, இவளுக்குக் கேட்டது. அவளை அடித்தபோது அவள் மந்தக்குறத்தி மாதிரி கம்மா இருந்தாலும், இவளுக்கு வலித்தது. இப்படிப்பட்ட தனக்கா இந்தத் தண்டனை என்று அவள் தடுமாறினாள். நினைக்க நினைக்க கோபம் கூடிக்கொண்டே போனது. அரை மணி நேரத்திறகு முன்புதான், அந்த எதிர்பாராத செய்தியை அவள் கேள்விப்பட்டாள். வெளியேயிருந்து வந்த அப்பா கருப்பசாமி, கக்கத்தில் இருந்த குடையை வீசியடிக்காமல், கால் செருப்புக்களைத் துரக்கி எறியாமல் இதமாக வந்ததிலிருந்தே, அம்மா புரிந்து கொண்டு ‘காரியம் பழந்தானே என்றாள். அவர் லேசாய்ச் சிரித்தார். அதற்காகவே, அவருக்கு பரிசளிக்க விரும்பியதுபோல், அம்மா உள்ளே போய், மோர் கொண்டு வந்தாள். அப்பாவோ, கருத்த மீசைக்கு நரை நிறத்தைக் கொடுத்த மோர்த்து துளிகளைத் துடைக்காமலே, மனைவியிடம் விஷயத்தைச் சொல்லப் போனார். பிறகு அதட்டினார்.

“மொதல்ல உன் மகள உள்ளயாவது. வெளியிலயாவது போகச் சொல்லு.”

“அவள் கிடக்காள். பையன் எப்படி..”

“உனக்கு புத்திகெட்டுப் போச்கடி அவளுக்குத் திமுறப் பாரேன். காலம் கலிகாலம். அது நம்ம வீட்டுக்கும் வந்துட்டா…”

“ஏனா எருமைமாடு. அப்பா சொல்லுறது காதுல விழலே. ஒன் சோலியப் பாத்துட்டுப் போயேtளா. முடிச்சாச்சா.”

“முடிச்சாச்சு. இன்னுமாளா நிக்கே.”

கருப்பசாமி, மகளை பல்லைக் கடித்துப் பார்த்தார். அவளும் ‘எனக்கும் தெரியட்டுமேப்பா என்பதுபோல் கால்களைத் தேய்த்தபடி நின்றாள். பிறகு எனக்குத்தான் தெரியனும் என்பதுபோல் நிலைப்படியில் உள்ள சீப்பை எடுத்து, சிறிது தள்ளி நின்று, ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்தபடியே தலையை வாரினாள். அவர்களோ அவளை ‘வாருவதுபோல் திண்ணையிலிருந்து எழுந்து, சமையலறைக்குள் போய் விட்டார்கள். இவளுக்கும் வீம்பு வந்துவிட்டது.

தொழுவிலிருந்து கிழக்குப் பக்கமாகத் திரும்பி, சமையலறையின் பின் கவரில் சாய்ந்து கொண்டு ஒட்டுக் கேட்டாள். ராசகுமாரிக்கு, அவர்கள் பேசுவது கிசுகிசுப்பாகவே கேட்டது.

“மூணு ஏக்கர் நிலம், அக்கா தங்கச்சின்னு பிச்சுப் பிடுங்கல் கிடையாது. அம்மாவும் நல்லபடியா போய்ச் சேரந்துட்டாளாம். ரொம்பத் தோதானது. நெனைச்சதுக்கு ஒருபடி மேலதான். சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளதானடி..”

ராசகுமாரி மருண்டு போனாள். அந்த சாண்பிள்ளை’ என்ற வார்த்தை அவளை உலுக்கி எடுத்தது. உற்றுக் கேட்டாள். மீண்டும் கிசுகிசுப்பு. ஒலிகள் அவளைப் பொறுத்த அளவில், அருவ நிலையிலேயே ஒலித்தன. அப்போ. ஒருவேளை மாப்பிள்ளை. குள்ளமா இருப்பானோ. போன மாசம் பஞ்சாண்டி ஊருல, இப்படித்தான் ஒரு அநியாயம் நடந்துதாம். வெளியூர் மாப்பிள்ளை மேள தாளத்தோடி காருக்குள்ள இருந்தபடியே வந்திருக்கான், குண்டு முகமாம். அத வச்சு மாப்பிள்ளை பெரிய சண்டியர்னு எல்லாரும் நினைச்சிட்டாங்க. ஜன்னல் வழியா பார்த்த பொண்ணுக.ட சந்தோஷப்பட்டாளாம். கடைசியிலே மணவறையிலே பொண்ணோட காலு தரையில நேரா பட முடியாமல். அவளே அதை வளைச்சு வச்சாளாம். அந்த அளவுக்கு அவள் உயரமாம். ஆனால், மாப்பிள்ளை காலு தரையிலருந்து ஒரு அடிக்கு மேல நிக்குதாம். இவ்வளவுக்கும் முழுக்காலுதான். ஆசாமிதான் குள்ளக் கத்திரிக்காய். எல்லோரும் கசாமுசான்னு பேசினாங்களாம். பொண்ணு அங்கேயே அழுதாளாம். ஆனாலும், போனது போச்சு, ஆனது ஆச்சுன்னு, ஊரும் உறவும் தாலி கட்டும்போது, பூமாரி பொழிஞ்சுதாம். அய்யய்யோ. எனக்கும் அப்படிப்பட்டவன்தான் வருவானோ. சி அப்பா அப்படியா என்னை பாழுங் கிணத்துல தள்ளுவாரு. தள்ள மாட்டாருதான். அவருகிட்டயும் ஆள் மாறாட்டம் செய்திருந்தால், மாட்டிக்கப் போறது நான்தானே… தலைவிதின்னு தப்பிக்கப்போறது அப்பா. அதுல அவரு சுமையும் எறங்கிப் போகும்.

சமையலறைப் பக்கம் இருக்க மனமில்லாமல், ராசகுமாரி கொல்லைப்பக்கமாக வந்தாள். தலை கனத்தது. உள்ளுக்குள், கருப்போ, சிவப்போ ஏதோ ஒன்று அவள் குரல்வளையைப் பிடிப்பதுபோலிருந்தது. எல்லாமே அந்நியமாய்த் தெரிந்தது. மீண்டும் பெற்றவர்கள் திண்ணையில் வந்து பிறந்தவளைப் பற்றி பேசுவது கிசுகிசுப்பாய்க் கேட்டது. இரண்டில் ஒன்றைக் கேட்டுவிட வேண்டும் என்ற வேகத்தில், ராசகுமாரி அவர்கள் பக்கம். வந்து நிலைப்படியில் இரண்டு கைகளையும் விரவிப்போட்டு, தலையை வாசலுக்கு வெளியே கொண்டு போனாள். அவர்கள் பேசி முடித்து விட்டார்கள் போலும். கிண்ணிப் பெட்டியில் இருந்த எள்ளுருண்டையை இருவரும் தின்று கொண்டிருந்தார்கள். எட்டிப் பார்த்த மகளுக்கு அம்மா, எள்ளுருண்டையைக் கொடுத்தாள். இவளும், அதை வாங்கிக் கொண்ட அந்த எள்ளுருண்டையைக் கசக்கிப் பிழிந்து எண்ணெயாக்கினாள். எனக்கத் தெரியாம, எங்கிட்ட கேக்காம என்ன பாக்க விடாம. என் தலையில எவனையும் கட்டுறதுக்கு ஒங்களுக்கு எத்தனாவது சட்டத்தில் இடமிருக்கு என்று கேட்பதற்காக, அம்மாவை விட்டு விட்டு, அப்பாவையும், அப்பாவை விட்டுவிட்டு, அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தாள். ஆனாலும் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது, பெரியவளானதும், இவள் படிச்சுக் கிழிச்சதுபோதும், வீட்டு வேலையைப் பார்க்கச் சொல்லுன்னு அப்பா சொன்னபோது, அதற்குப் பதிலாய் இவள் சிணுங்கியபோது, அப்பா எப்படி கண்களை உருட்டிப் பார்த்தாரோ, அப்படி இப்போதும் பார்த்தார். கண்கள் ரத்தக் கட்டிகளாக, அவளை ரத்தமும் சதையுமாய் குலைக்கப் போவதுபோல் பார்த்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, வாசற் படியில் நின்றவளை கருப்பசாமி கறாராகப் பார்த்தாரே தவிர, கண்டிக்கவில்லை. இதுவே அவளுக்குக் கொஞ்சம் தெம்பைக் கொடுத்தது. கைகள் இரண்டையும் திருவோடுபோல் குவித்தபடி, அப்பாவை கோவில் மூலவரைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். உதடுகள் துடித்தன.

“ஒங்ககிட்ட பேச பயமா இருக்குப்பா. வெட்கமாகவும் இருக்குப்பா. நீங்களே சொல்லுங்கப்பா. மாப்பிள்ளை எப்படிப்பா… எப்படிப்பா… நான் முந்தானைய முகம் தெரியாதவனுக்கா விரிக்கனும் .இடம் தெரியாத வீட்டிலா இடறி விழனும்: சொல்லுங்கப்பர். ஒரு தடவ. ஒரே ஒரு தடவ ஒங்கள தலை குனிய வைக்காம நடந்தவப்பா. என்னையும் தலைகுனிய வச்சுடாதிங்கப்பா.”

ராசகுமாரி, தந்தையின் முகத்தை மலங்க மலங்கப் பார்த்தபோது, அவர் மகளுக்கு ஒரு செய்தியை மனைவி மூலம் சொன்னார்.

“இந்தா பாரு. ஒன்னத்தான் பிள்ள. இவளுக்கு கல்யாணம் நிச்சயமாயிட்டு பாரு. இனிமே வீட்டுக்கு வெளியில போக வேண்டாமுனு சொல்லு. பீடி சுத்துனதுபோதும். நான் தட்டாசாரியைப் பார்த்துட்டு வாறேன். நாளைக்கு தென்காசியில தங்கம் வாங்கணும்.”

“நகையா வாங்கினால் என்ன..”

“பாக்கிறதுக்கு அழகா இருக்கும். ஆனா ஒரே போலி. நம்ம தட்டாசாரியும் கொஞ்சம் கர்ண்டத்தான் செய்வான். ஆனாலும் அவ்வளவு மோசமிருக்காாது. ஒனக்கு தாலி செய்ததே அந்த மனுஷந்தான்.”

ராசகுமாரி, தந்தைக்கு எதிரே வழி மறிப்பதுபோல் நின்றுகொண்டு அவரையே மலங்க மலங்கப் பார்த்தாள். “அப்பா. அப்பா. தங்கத்துலயே தரம் பாக்குற அப்பா. எனக்கு வாச்சவன் தரம் எப்படிப்பா.”

“ஏமுளா அபசகுனம் மாதிரி நிக்கே ஒதுங்கி நில்லேமுளா தடிமாடு.”

கருப்பசாமி பேசிய பேச்சைவிட அவர் பார்த்த பார்வையில் பயந்துவிட்ட ராசகுமாரி சிறிது ஒதுங்கிக் கொண்டாள். பின்புறமாய், நகர்ந்து விலகிக் கொண்டாள்.

ராசகுமாரிக்கு, வீறாப்பும், வீம்பும் ஏற்பட்டன. அதே சமயத்தில் அந்த அநியாயத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் போலிருந்தது. அங்கே எவ்வளவு நேரம் நின்றாலும் அவர்கள் பேசப் போவதும் இல்லை.

ராசகுமாரி வீட்டைவிட்டு வெளியே பாய்ந்தாள். பார்த்துப் போகப்படாதா என்று பொய் அதட்டலாய்க் கேட்ட மாரியம்மாப் பாட்டியை ஏறிட்டுப் பார்த்தபோதுதான், தனது வலுவான மோவாய் பாட்டியின் இற்றுப்போன தலையில் மோதியது தெரிந்தது. ஆனாலும், அந்த சுரணைகட இல்லாமல் அவளைக் கடந்து நடந்தாள். மேயப் போகிற ஆடுமாடுகள் குவியல் குவியலாய், நிற்கும் ஊர் மந்தையைத் தாண்டி, இரண்டு வைக்கப் போர்களின் இடுக்கு வழியாய் நடந்து, அதற்குப் பக்கத்திலுள்ள புளியமரக் கிளையைப் பிடித்து தலையை தொங்கப் போட்டு நின்றவள், சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். துரைச்சாமி, ஒரு பக்கமாக நடந்து கொண்டிருந்தான். உலக்கை தரையில் பட்டு பள்ளம் பறிப்பது போன்ற நடை. இவள் செருமினாள். அவன் திரும்பிப் பார்த்துவிட்டு, போய்க் கொண்டே இருந்தான். அவனிடம் கேட்டுப் பார்க்கலாமா. அய்யய்யோ அவனுக்கும் நிச்சயமாயிட்டே.

ராசகுமாரி, கீழே விழாமலிருப்பதற்கு புளியங்கொம்பைப் பிடித்துக் கொண்டாள். சொல்லி வைத்ததுபோல், மூன்றுபேர் அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்தார்கள். இளவட்டங்கள். அந்த சுருட்டைத் தலையன் ஒரு ஒயர்மேன். அவளைப் பார்த்து பலதடவை பல்லைக் காட்டியிருக்கான். இவளும், அவனுக்கு சலுகை காட்டுவதுபோல் பல்லைக் கடிக்காமல் இருந்தாள். ஒரு தடவை அவன் நடுங்கிய குரலில் ராசகுமாரி, நான் மத்தவங்க பார்க்கிற அர்த்தத்துல ஒன்னப் பார்க்கலே. நெசமாவே ஒன்னை. என்று சொன்னபோது, நின்று கேட்டவள். பிறகு ஒடிப் போய்விட்டாள். அதற்குப் பிறகும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒதுங்கிக் கொண்டாள். அடுத்த சாதிக்காரன பார்க்க முடியுமா. அப்படியே நாம நினைச்சாலும். அப்பா நினைப்பாரா. தூக்குப் போட்டுச் செத்துட மாட்டாரா. சரி, அவன விடு. அதோ ரெண்டு பேரு போறானுவளே. அவங்களும் ஒங்கிட்ட எத்தன தடவை வளைய வளைய வந்தாங்க… ஏறெடுத்துப் பார்த்தியா. ஒனக்கு என்ன கெடைச்கது. ஒன் மாப்பிளைய நீ தீர்மானிக்க கூட வேண்டாம். ஒன்னால பாக்கக்கூட முடியலியே. அப்பா துரக்குப் போடக்கூடாதுன்னு நீயே தூக்குக் கயிற ஒரு தாலியா போடப் போறியா..’

ராசகுமாரி, பித்துப் பிடித்து நின்றாள். இரண்டு கிளைகளுக்குள் கூடு கட்டியிருந்த காகம், அவள் தலைக்கு மேலே அங்குமிங்குமாய் பறந்து உச்சக் குரலில் கத்திக் கத்தி, கால்களால் அவள் தலையைப் பிராண்டியது. அவள் அசைவற்று நிற்பதைப் பார்த்துவிட்டு, கொத்துவதற்குக்கூட குறி பார்த்தது. ஆனாலும் அவள் பித்தம் கலையாமல் நடந்துகொண்டே இருந்தாள். எப்படி நடந்தாளோ எல்லோரும் சுற்றி நிற்பதுபோலிருந்தது. பீடி கற்றும் பெண்கள் தட்டும் கையுமாக அவளைச் சுற்றி வட்டமிட்டு நின்றார்கள். அவர்களில் ஒருத்தி கேட்டாள்.

“ஒனக்கு கலியாணம் நிச்சயம் பண்ணிட்டாங்களாமே. மாப்பிள்ளை எப்படியாம்.”

“நீ ஒருத்தி… நம்மள மாதிரியா இவள்?… அடக்க ஒடுக்கமானவளாச்சே. அப்பா எவனக் காட்டுறாரோ, அவன கட்டுறவளாச்சே குட்டையான மாப்பிள்ளைன்னா, அவன இடுப்புல எடுக்க கழுத்த குனிவாள். கொக்கனா இருந்தால், அவன் இடுப்புல ஏறி, கழுத்த நிமிர்த்துவாள். ஒன்னை மாதிரியா என்னை மாதிரியா. தங்கமான பொண்ணாச்சே.”

ராசகுமாரிக்கு, அழுகை வந்தது.

ஆனால், அந்த இரண்டு பெண்களும் அப்படிப் பேசியதால், அவள் அழுகை மேகம் கலைந்து, மனம் ஒரு புயலானது. ஆமாண்டி நான் அப்படித்தான் என்று சொல்லப் போனாள். இதற்குள் தெய்வயானை மயினி வெளியூரிலிருந்து அந்த ஊரில் வாக்கப்பட்டவள் கேட்டாள்.

“ஏ. ராசகுமாரி. ஒப்பா நல்லா பார்த்தாராமா. தீர விசாரிச்சாராமா. என்னை மாதிரி மாட்டிக்காதடி..”

ராசகுமாரி, மயினியைப் பார்த்தாள். குரங்கு மூஞ்சுக் குடிகாரனிடம் மாட்டிக் கொண்ட பூமாலை. அவளைப் பார்க்கப் பார்க்க அவளுக்காகவும், தனக்காகவும் ரெட்டிப்பாக அழுதாள். முந்தானையை வாயில் வைத்து திணித்துக் கொண்டே நின்றவளின் தலை தானாக ஆடியது. பிறகு அங்கிருந்து ஒடினாள். அழுகை ஆவேசமாகியது. இரண்டில் ஒன்றைக் கேட்டுவிட வேண்டும். வாழப்போகிறவளுக்கு சாகப் போகிறதுகள் நிச்சயிக்க முடியாது.

ராசகுமாரி, வீட்டுக்குள் கோபமாகத்தான் காலடி வைத்தாள்.

அப்பா, அவளைப் போல் ஒரு மதர்ப்பாய்த் தோன்றிய தேங்காயை மண்வெட்டியில் குத்திக் குத்தி ‘உரித்துக்’ கொண்டிருந்தார். லேசாய் இடைவெளி கொடுத்த, தேங்காய் மட்டையை பல்லைக் கடித்து, பல்லால் இழுத்து, வாயில் கவ்வி வெளியே துப்பினார். அப்படியும் முரண்டு பிடித்த அந்தத் தேங்காயை துரக்கி, அம்மிக்கல்லில் ஒரே போடாக போட்டு, மீண்டும் அதைத் தோலுரித்தார். அதைப் பார்க்க பார்க்க, ராசகுமாரிக்கு பயமெடுத்தது. அண்ணன்காரன், தொழுவத்து ஒற்றை மாட்டை அழைத்து தொட்டியில் தண்ணிர் காட்டிக் கொண்டிருந்தான். அண்ணிக்காரி, புண்ணாக்கையும், தவிட்டையும் எடுத்து தொட்டிக்குள் போட்டு, பனை மட்டையால் கலக்கிக் கொண்டிருந்தாள். அண்ணன் அப்பாவிடம் கேட்பது அவளது இரைந்த காதுகளுக்குள் ஊடுறுவியது.

“எத்தனை நாளைக்குப்பா இந்த ஒத்த மாட்ட வச்சு தண்டத் தீனி போடுறது. ராமாசாமி மச்சான் மாடு என்ன ஆச்சு அதை வாங்க வேண்டியதுதானே?”

“வாங்கிடலாம்தான். ஆனால், அது நம்ம மாட்டுக்கு ரெண்டு விரக்கடை கட்டையா இருக்குது. ஜோடி சேராது அதனாலதான் வேண்டாம்னு விட்டுட்டேன்.”

ராசகுமாரி, அந்த ‘அந்நியர்களை’ கோபம் கோபமாகப் பார்த்தாள். ஆனாலும், அடி மனப்பயம், அந்தக் கோபத்தை அழுகையாக்கியது. மீண்டும் வீட்டுக்குள் போனாள். வாயை வாயே மெல்வதுபோல், உதடுகளை மூடவிட்டு, உள்ளுக் குள்ளே பற்களை மோதவிட்டு, நாக்கை ஊழிநடனம் போல் ஆடவிட்டாள். அவளையறியாமலே ஒரு நாடோடிப் பாடல், எப்போதோ கேட்டது இப்போது பல மடங்காய் ஒலித்தது.

“முகமறியா மனிதருக்கு முந்தானி விரிக்கனுமோ?
இடமறியா வீட்டிலே இடறித்தான் விழுணமோ?”

– உஷா – 22-1-95

– ஈச்சம்பாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1998, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

சு. சமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், திப்பனம்பட்டியில் 1941-ம் ஆண்டு பிறந்தார். இள வயதிலேயே தந்தையை இழந்தார். கடையத்தில் ஆரம்பக்கல்வியை முடித்து பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். சு. சமுத்திரம் செங்கல்பட்டு அருகிலுள்ள காட்டுக்கரணை என்ற கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக அலுவலக வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழக அரசில் கூட்டுறவுத் துறை ஆய்வாளர், ஊராட்சி வளர்ச்சி அதிகாரி ஆகிய பதவிகளை ஏற்றுப் பணியாற்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பணியாற்றுகையில் அதிகாரிகளுடன் முரண்பாடு ஏற்படவே பணியைத்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *