முகநூல் முகுந்தன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 7,944 
 
 

முகுந்தன் கடந்த இரண்டு வருடங்களாக முகநூலில் ரொம்ப சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து விட்டான். முகநூல் தொடர்புக்கு முன்பு, ஏதாவது கதை கட்டுரைகள் எழுதி அது பிரசுரமாகி தன் பெயர் பிரபலமாக வேண்டும் என்கிற ஆசையில் பல பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பினான். ஆனால் அவைகளில் ஒன்றுகூட பிரசுரமாகவில்லை.

முகநூல் அவனுக்கு அறிமுகமானதும் ரொம்ப குஷியாகி, பத்திரிகைகளுக்கு எழுதுவதையே நிறுத்தி விட்டான். தற்போது முகநூலில் அவனது உறவினர்கள் அனைவரும் முகுந்தனுடைய அப்டேட்டட் ஸ்டேட்டஸ் பார்த்து, அவனுடைய கமென்ட்ஸ் பார்த்து, அடிக்கடி வியந்து ஏராளமாக லைக் போடுகிறார்கள். எங்காவது நேரில் பார்க்கும்போது புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

முகுந்தன் ரொம்ப குஷியாவது அவனது அழகிய மூன்று மச்சினிகளின் லைக்ஸ் பார்க்கும்போதுதான். அவர்களுடைய லைக்ஸ் வர வேண்டும் என்பதற்காகவே வீட்டு வாசலில் வரும் குடுகுடுப்பைக்காரன், பூம் பூம் மாடு பிச்சைக்காரன், குரங்காட்டி, பஞ்சுமிட்டாய் விற்பவன் போன்றவர்களுடன் அடிக்கடி செல்பி எடுத்துக்கொண்டு அவைகளை தன் முகநூலில் பீற்றிக்கொள்வான்.

ஒருநாள் தன் மனைவி அபிதகுசலாம்பாள் சமையலறையில் சமைத்துக் கொண்டிருப்பதாக ஒரு புகைப்படம் எடுத்து அதை முகநூலில் போட, அதற்கு அவனுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன.

அவனது மாமனார், மாமியார், மச்சினிகள், மச்சான்கள், ஷட்டகர்கள், அபிதகுசலாம்பாளின் ஓர்ப்படிகள் என அன்று முழுவதும் போனில் கூப்பிட்டு, லைக்ஸ் போட்டு….. ஏகப்பட்ட அமர்க்களம்.

ஆனால் உண்மையில் அபிதகுசலாம்பாளுக்கு சமைக்கவே தெரியாது என்பதும், வெந்நீர் மட்டும் நன்றாகப் போடுவாள்; அவ்வப்போது பால் பொங்கிவிடாது நன்றாக காய்ச்சுவாள்; மற்றும் ஆறிய பாலுக்கு நன்றாக உறை குத்தி அதை நல்ல தயிராக்குவாள் என்பதும்; வீட்டில் தினசரி சமைப்பது முகுந்தன்தான் என்பதும்; அவளுக்கும் முகுந்தனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியங்கள். அந்த ரகசியத்தை இருவரும் சாமர்த்தியமாக காப்பாற்றி வந்தார்கள்.

முகுந்தன் ஒரு பரமார்த்தி. வீடு விட்டால் ஆபீஸ், ஆபீஸ் விட்டால் வீடு; அது தவிர தன்னுடைய முகநூல் முஸ்தீபுகளின் விஸ்தாரமான அணிவகுப்பு என்று ஆத்துக்குள்ளேயே சமர்த்தாக முடங்கிவிடுவான். சொந்தங்கள் போடும் லைக்ஸ் ஒன்றே அவனுக்கு சுவாசக்காற்று. குடி, சிகரெட், சீட்டாட்டம், ரேஸ், பெண்கள் சகவாசம் என வேறு வகையான ஷோக்குகள் எதுவும் அவனிடம் கிடையாது. ரொம்ப மடி.

அதுவும் சமீப காலமாக முகுந்தனின் தொல்லை தாங்க முடியவில்லை. முகநூல் பைத்தியமாகி அதிலேயே தன்னுடைய பெரும்பாலான நேரங்களை செலவிட ஆரம்பித்தான். நிறைய லைக்ஸ் எதிர்பார்த்தான். லைக்ஸ் போடாதவர்களிடம் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொள்ளவும் துணிந்தான்.

அடிக்கடி தன்னுடைய தாத்தா, பாட்டிகளின் புகைப் படங்களை வெளியிட்டு அவர்களைப் பற்றிய குறிப்புகளைச் சொல்லி பெருமையடைந்தான். ஒருமுறை அவனுடைய கொள்ளுப் பாட்டி தன்னுடைய பொக்கை வாயைப் பிளந்தபடி முறுவலிக்க, அதற்கும் ஏகப்பட்ட லைக்ஸ்.

அவ்வப்போது தன்னுடைய ப்ரோபைல் அப்டேட்டை மாற்றிக் கொண்டு, அதை பெருமையுடன் முகநூலில் போட்டு புளகாங்கிதம் அடைவான். ஒரு முறை மீசையுடன், அடுத்த முறை மீசையை மழித்துவிட்டு, காலர் வைத்த மற்றும் காலர் வைக்காத டீ ஷர்ட்டில்; கூலிங்கிளாஸ் அணிந்துகொண்டு அல்லது ப்ளெய்ன்கிளாஸ் அணிந்துகொண்டு விறைப்பாகவோ அல்லது தளர்வாகவோ போஸ் கொடுப்பான். சில சமயங்களில் இரண்டு புகைப்படங்களை ஒரே நேரத்தில் வெளியிட்டு அவற்றில் ஆறு வித்தியாசங்கள் கண்டு பிடிக்கச் சொல்லி சவால் விடுவான். அவனுக்கு இருப்பதோ ஒரு குடை மிளகாய் மூக்கு மூஞ்சி…அதுக்கு எதுக்கு மாதத்துக்கு ஒரு ப்ரோபைல் அப்டேட் என்று பார்ப்பவர்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொள்வார்களே….என்று யோசிக்கவே மாட்டான்.

அன்று முகுந்தனுடன் வேலை பார்க்கும் சியாமளா, தன்னையும் அவனுடைய முகநூலில் சேர்த்துக் கொள்ளுமாறு ரிக்வெஸ்ட் அனுப்பினாள். அவனது உறவினர்களைத் தவிர வெளியிலிருந்து ரிக்வெஸ்ட் அனுப்பிய முதல் ஆள் சியாமளா என்பதால், முகுந்தன் சந்தோஷத்துடன் ஒப்புதல் அளிக்க, சியாமளாவும் முகுந்தனின் முகநூல் விசிறி ஆனாள்.

முகுந்தன் ஆபீஸ் வேலை விஷயத்தில் கெட்டி. ஏனென்றால் அவனுடைய சிஈஓ சில்வெஸ்டர் மிகவும் கண்டிப்பானவர். திறமையானவர்களை நன்றாக ஊக்குவித்து அவர்களை முன்னுக்கு கொண்டுவருவார். அடிக்கடி லீவு எடுப்பவர்களை அவருக்குப் பிடிக்காது. அதிலும் குறிப்பாக, பொய் சொல்பவர்களைக் கண்டால் அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. கண்டிப்பாக அவர்களை தண்டிப்பார்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. முகுந்தனைப் பார்க்க அவனது அழகிய மூன்று மச்சினிகளும் வீட்டிற்கு வந்திருந்தனர். கடைசி மச்சினி கிரிஜா, குரலில் குழைவுடன் முகுந்தனிடம், “அத்திம்பேர், அடுத்த வாரம் ஒரு நாள் லீவு போட்டுவிட்டு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் எங்களை குற்றாலம் அழைத்துக் கொண்டு போங்களேன்….இப்பதான் சீசன்ல குற்றாலம் குளு குளுன்னு இருக்கே..” என்றாள்.

மச்சினி சொன்னால் அதை தட்ட முடியுமா?

முகுந்தன் உடனே மொபைல் மூலமாக சென்னையிலிருந்து குற்றாலத்துக்கு அடுத்த வியாழன் இரவு லக்ஸுரி பஸ்ஸில் அபிதகுசலாம்பாளுக்கும், தனக்கும் சேர்த்து ஐந்து டிக்கெட்டுகள், மற்றும் குற்றாலத்தில் இரண்டு நாட்களுக்கு தங்குவதற்கு தரமான ஹோட்டல் என்று அமர்க்களப் படுத்தி
மச்சினிகளை சந்தோஷப் படுத்தினான்.

வியாழன் மதியம் தன் சிஈஓ சில்வெஸ்டரிடம் சென்று, தனக்கு கடுமையான பல்வலி என்றும் மறுநாள் காலை பதினோரு மணிக்கு டென்டிஸ்ட் அப்பாயின்ட்மென்ட் என்றும் ஒரு நாள் லீவு வேண்டுமென்றும் ஒரு கன்னத்தை பொத்தியபடி கதைவிட, அவர் பெருந்தன்மையுடன் லீவு கொடுத்தார். அது மட்டுமின்றி அவனை சனி, ஞாயிறுகளில் நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

முகுந்தன் உற்சாகம் கொப்புளிக்க மச்சினிகளுடன் அன்று இரவு லக்ஸுரி பஸ்ஸில் குற்றாலம் பயணித்தான். நல்ல வேளையாக குற்றால அருவிகளில் அவ்வளவு கூட்டமில்லை. முகுந்தன் நாள் முழுவதும் நீராடியபடி அருவியை துவம்சம் செய்தான். அருவியில் அபிதகுசலாம்பாளை கட்டிப் பிடித்துக்கொண்டு வாயெல்லாம் பல்லாக மொபைல் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, கிரிஜா க்ளிக்கினாள்.

குற்றாலக் குளியல்கள் இனிதே முடிந்து, அனைவரும் ஞாயிறு இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பினர். இரவு ஒருமணி வரை தூங்காது தன்னுடைய குற்றாலக் குளியல் புகைப் படங்களை முகநூலில் ஏற்றி, சுடச்சுட ஆர்வத்துடன் பரிமாறினான்.

திங்கட்கிழமை கிழமை காலை பத்து மணிக்கு சியாமளா அவனது குற்றால பிரதாபங்களுக்கு லைக் போட்டாள். மதியம் இரண்டு மணிக்கு சில்வெஸ்டர் அழைப்பதாக முகுந்தனிடம் ப்யூன் வந்து சொன்னான்.

முகுந்தன் அவர் அறைக்குள் பவ்யமாக சென்று “குட் ஆப்டர்நூன் சார்” என்றான்.

“பல்வலி எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொன்னார்?”

“இப்ப ரொம்ப நல்லாயிடுச்சி சார்….ஒரு இன்ஜெக்ஷன் போட்டாரு”

“சனி, ஞாயிறுகளில் ரெஸ்ட் எடுத்தியா?”

“கம்ப்ளீட் ரெஸ்ட் சார்”

“அப்ப இது என்ன?….”

தன்னுடைய லாப்டாப்பை திருப்பி அவனிடம் காண்பித்தார். அதில் முகுந்தன் வெறும் ஜட்டியில் குற்றால அருவியில் நனைந்தபடி அபிதகுசலாம்பாளுடன் பெரிதாக பல்லைக் காட்டியபடி இளித்தான். அது போதாதென்று வெள்ளி, சனியில் குற்றாலம் சென்று என்ஜாய் பண்ணியதாக கமென்ட் வேறு…

முகுந்தன் முகம் சுருங்கியது. பதில் சொல்லத் தோன்றாது எச்சில் கூட்டி விழுங்கினான்.

“நான் குடும்பத்துடன் குற்றாலம் போகிறேன் என்று நேர்மையாக லீவு எடுத்துக்கொண்டு போகலாமே…எதுக்கு என்னிடம் பல்வலின்னு சொல்லிட்டு அங்கபோய் அருவில பல்லைக் காட்டிக்கொண்டு இளிக்கணும்? அத பேஸ்புக்ல வேற போட்டு மாட்டிக்கணும்…. அசிங்கமா இல்ல?”

“…………………….”

“சரி சரி பொய் சொன்னதுக்காக உன்ன உடனடியாக நம்ம தாம்பரம் கொடவுனுக்கு மாத்திட்டேன்…யூ லாஸ்ட் மை ட்ரஸ்ட்…..கெட் லாஸ்ட்.”

முகுந்தன் தலையைக் குனிந்தபடி வெளியே வந்தான்.

அதுசரி நான் போட்ட ஸ்டேட்டஸ் இவருக்கு எப்படித் தெரியும்..? ஓ இன்று காலை பத்து மணிக்கு சியாமளா லைக் போட்டாளே ! உடனே சியாமளாவிடம் விரைந்து சென்று “நம்ம ஸிஈஓ உன் பேஸ்புக் நண்பரா? என்றான்.

அவள் ரொம்ப பெருமையாக “ஆமாம் முகுந்த்” என்றாள். ஓ காட்! அவர் காமன் பிரென்ட் என்பதால் என் ஸ்டேட்டஸ் பாத்திருக்கிறார்.

சில்வெஸ்டரும், சியாமளாவும் முகநூல் நண்பர்கள் என்பதும், அதனால்தான் அவரும் அவனுடைய குற்றால வழிசல்களை காண நேரிட்டது என்பதும் முகுந்தனுக்கு புரிய அதிக நேரமாகவில்லை.

நல்ல வேளையாக தான் பொய் சொன்னதற்காக, தன் வேலை பறிக்கப் படவில்லை என்பதை நினைத்து சற்று ஆறுதலடைந்தான். இனி தன் முகநூல் நட்பிலிருந்து சியாமளாவை நீக்கவும் முடியாது, அதே சமயம் பழைய மாதிரி தன் ஜெகதலப் பிரதாபங்களை முகநூலில் பீற்றிக் கொள்ளவும் முடியாது என்பதை நினைத்தபோது அவனுக்கு வேதனைதான் மிஞ்சியது.

பாயாசத்தில் விழுந்த அப்பளம் மாதிரி தொய்ந்துபோனான்.

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

1 thought on “முகநூல் முகுந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *