அன்று காலை என் கணவர் ஆபீஸ் கிளம்பியதும், நான் என் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, முகநூல் பக்கத்தைத் திறந்தபோது, அதில் என் நட்பை வேண்டி கிஷோர் என்பவன் செய்தி அனுப்பியிருந்தான்.
எனக்கு அவன் யார் என்றே தெரியாது. இருப்பினும் என்னுள் ஒரு படபடப்பு எழுந்தது. ‘ஹாய் நான் உன்னுடைய நண்பனாக ஆசைப்படுகிறேன்’ என்றது அந்தச் செய்தி.
உதட்டோரம் சிறு புன்னகையுடன் அவனுக்கு பதிலளிப்பதா அல்லது புறக்கணிப்பதா என்று தெரியாமல் சிறிது நேரம் அமைதி காத்தேன்.
முன்பின் தெரியாத நபருக்கு நான் ஏன் பதில் அனுப்ப வேண்டும்? இது பற்றி என் கணவருக்குத் தெரிந்தால் என்னவாகும்? அதை இவர் எப்படி எடுத்துக் கொள்வார்?
என் கணவரைப் பற்றிய எண்ணம் என்னை வெறுப்படையச் செய்தது. அவருக்கு இதிலெல்லாம் ஆர்வம் இல்லை என்பதால், அவரைப் பொறுத்தவரை முகம் தெரியாத ஒரு நபரிடமிருந்து வந்த வெறும் ‘ஹாய்’ என்கிற ஒரு குறுஞ்செய்தி அவரை வேதனைக்கு உள்ளாக்கி விடும்.
என் வாழ்க்கை வேறு விதமாக இருந்திருந்தால் நான் நிச்சயம் இதுபோன்ற குறுஞ்செய்தியை நிராகரித்திருப்பேன். ஆனால் நான் மிகவும் வெறுப்பாக இருந்ததால் அந்த மனநிலையில் ‘ஹாய்’ என்று அவனுக்கு மறுமொழி அனுப்பிவிட்டேன்.
அவனுடைய பெயர் கிஷோர் என்பதைத் தவிர அவனைப் பற்றி எனக்கு வேறு எதுவும் தெரியாது. ஆனால் அதையெல்லாம் யோசிக்காமல் அவனது நட்பு வேண்டுகோளை நான் ஏற்றுக்கொண்டேன்.
என்னுடைய சிறுவயது முதல் பலர் என்னிடம் நான் மிகவும் அழகாக இருப்பதாக என்னிடம் கூறியிருக்கிறார்கள். பால் போன்ற மேனி நிறம்; பாதாம் வடிவத்தில் திராட்சை நிறக் கண்கள்; கூர்மையான அம்சங்கள்; நல்ல கட்டான வடிவம் கொண்ட நான் நிச்சயம் அனைவரையும் கவர்வேன் அல்லவா?
ஆனால் எனது பெற்றோர் அப்போது இருந்த அவசரத்தில் அவர்களுக்கு முதலில் பிடித்த ஒருவனையே எனக்குத் திருமணம் செய்து வைத்தனர். நானும் முன் யோசனை சிறிதும் இன்றி பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினேன். ஆனால் என் கணவருக்கோ என் உணர்வுகளிலோ; அல்லது என்மீது காதல் கொள்வதிலோ எந்த ஆர்வமும், கற்பனையும் இல்லை. முயங்குதலில் கூட முஸ்தீபுகள் இல்லை. சேவல் கோழியை அமுக்குவது மாதிரி அவசரம் காட்டுவார். காரியம் முடிந்ததும் முதுகைத் திருப்பியபடி படுத்துக்கொண்டு தூங்கிவிடுவார். எனக்கு இன்னமும் வேண்டும் போல் இருக்கும். வெப்பமான மூச்சுடன் தலையணையை அணைத்தபடியே தூங்கிவிடுவேன்.
எனக்கு கணவராக வருபவர் என்னை எப்போதும் அன்புடன் பார்த்துக் கொள்வார்; சின்னச் சின்ன ஆச்சர்யங்கள் கொடுப்பார்; அடிக்கடி சில்மிஷங்கள் செய்வார்; திடீரென பின்னாலிலிருந்து கட்டியணைப்பார் என்றெல்லாம் காதல் கற்பனைகள் செய்திருந்தேன்.
ஆனால் என் கணவர் ஒரு இயந்திரம் போன்றவர். காலையில் விழிப்பார், குளித்து ரெடியாகி வேலைக்குச் செல்வார். தாமதமாகவே வீடு திரும்புவார். டிவியில் சேனல்களை மாற்றி மாற்றி நியூஸ் பார்ப்பார், இரவு உணவு உண்பார், பின்னர் போய் படுத்துக்கொண்டு உறங்கிவிடுவார்.
அவர் பிஸியாக இருப்பதை நான் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தமில்லை. ஆனால் மனைவியிடம் அன்பாகப் பேச ஒரு கணவனுக்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அவளைக் கட்டி அணைக்க, அவள் முகத்தை ஆசையோடு பார்க்க எவ்வளவு நேரம் ஆகப்போகிறது?
என் கணவருக்கு இதுபோன்ற எந்த ரொமான்டிக் உணர்வும் இல்லை. அவரைப் பொறுத்தவரை மனைவிக்குப் பிடித்ததை வாங்கித் தருவது, வேண்டியவற்றை செய்து தருவது மட்டுமே குடித்தனம்.
நாங்கள் உடலுறவில் ஈடு பட்டிருக்கிறோம். ஆனால் அதில் எந்தவிதக் காதலும் இருக்காது. உண்மையில் நாங்கள் உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளில் கூட ஈடுபட்டதில்லை.
எவ்வளவு சுவையாக நான் சமைத்தாலும் சரி; வீட்டை எவ்வளவு நேர்த்தியாக நான் கலை நயத்துடன் வைத்திருந்தாலும் சரி, எனக்கு அவரிடம் இருந்து எந்தப் பாராட்டும் இதுவரை கிடைத்ததில்லை.
இணையம் எனக்கு ஒரு அறிமுகமில்லாத பகுதியாகவே இருந்தது. எனது முகநூல் பக்கத்தைக்கூட எனது கணவர்தான் உருவாக்கினார். நண்பராக வேண்டும் என்கிற வேண்டுகோளை எப்படி ஏற்பது மற்றும் குறுஞ்செய்திகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது என்றெல்லாம் அவர்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.
எனினும் என்னுடைய முகநூலில் என்னுடைய புகைப்படம் நான் இதுவரை வைக்கவில்லை. ஏனென்றால் புகைப்படங்கள் திருடப்பட்டு அதுவே ஆபாச தளங்களில் பதிவேற்றம் செய்யப் படுவதாக நான் கேள்விப் பட்டதனால் எனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய நான் பயந்தேன்.
ஆனால் அந்தக் கிஷோர் மீண்டும் மீண்டும் என் புகைப் படத்தை பதிவேற்றச் சொல்லி என்னை வற்புறுத்தினான். அவன் என் புகைப்படத்தைப் பார்ப்பதில் பிடிவாதம் காட்டினான். நான் கண்டிப்புடன் மறுத்து விட்டேன்.
கடைசியாக என்னை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் பார்ட்டிக்கு வரச்சொல்லி அழைத்தான். இதுபோன்ற கூட்டங்கள் அல்லது நிகழ்வுகளில் பெண்கள் குடிப்பது மற்றும் சிகரெட் பிடிப்பது மிகவும் சகஜம் என நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். இவை அனைத்துமே எனக்குப் புதியவை. அதாவது அறியப்படாத உற்சாகமூட்டும் உலகத்தின் கதவைப் போன்றவை.
அன்று நான் என் வேலைகளை விரைவாக முடித்துவிட்டு பிற்பகலை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அதுதான் நான் வழக்கமாக கிஷோருடன் பேசும் நேரம். அவன் திடீரென என்னை வெப் கேமிராவை ஆன் செய்யுமாறு கூறினான். அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக ஆப் லைன் சென்று விட்டேன். அன்றைய தினம் நான் குளிக்கக்கூட இல்லை. அவன் என்னை அப்படியே பார்த்திருந்தால் என்னுடைய இமேஜ் என்ன ஆவது?
இந்நிலையை எப்படிக் கையாள வேண்டுமென்று தெரியாததால் அவனை நான் முற்றிலுமாகத் தவிர்க்கத் தொடங்கினேன்.
இது அவனுக்கு பயங்கரக் கோபத்தைத் தூண்டியிருக்க வேண்டும்.
உடனே அவன் எனக்கு முகநூல் மெசேஜில் “ஏண்டி, நீ என்ன பெரிய அழகியா? யோக்கியமான பொம்பளையா இருந்தா எதுக்குடி முன்பின் தெரியாத என் நட்பை ஏற்றுக் கொண்டாய்? நான் என்ன பிசிராந்தையாரா உன் நட்பை மட்டும் ஏற்றுக்கொள்ள? உன் அழகிய உடம்புதான் எனக்கு முக்கியம். அரிப்பு எடுத்து அலைந்து விட்டு, ஆண்கள் நெருங்கி வரும்போது மட்டும் பத்தினியா ஏண்டி வேஷம் போடுறீங்க?” என்று அசிங்கமாய் திட்டி இருந்தான்.
இதைப் படித்ததும் எனக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. உடனே அவன் அக்கவுண்டை ப்ளாக் செய்துவிட்டேன். பயத்திலும் அவமானத்திலும் அன்று எனக்கு வேறு வேலையே ஓடவில்லை.
இரவு வீட்டுக்கு வந்த கணவர் “ஏன் ஒரு மாதிரியாக இருக்கே?” என்றார்.
“ஒண்ணுமில்லை, மைனர் தலைவலிதான்” என்று சமாளித்தேன்.
இரவு தூக்கம் வராது படுக்கையில் புரண்டபடி யோசித்தேன்.
உண்மைதான். முதலில் எனக்கு எதற்கு முகநூல் கணக்கு? அப்படியே இருந்தாலும் முன்பின் தெரியாதவனுடன் என்ன நட்பு வேண்டிகிடக்கு? பல ஆண்களும், சில பெண்களும் அடுத்தடுத்து பெண்களையும்; அடுத்தடுத்து ஆண்களையும் தேடிக் கொள்ளும் வாய்ப்பும்; தேவைப்படும் போது சரீர ஒத்தாசைகள் செய்து கொள்ளும் வசதிகளும் நிறைந்ததுதானே சோஷியல் மீடியா? நேர்கோட்டில் வாழ விரும்பும் குடும்பப் பெண்களுக்கு எதற்கு சோஷியல் மீடியா? பாசமுடன் பழக குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் போதாதா? அவன் சொன்ன மாதிரி நான் என்ன அரிப்பு எடுத்து அலைகிறேனா?
என் மீது எனக்கே அதீத கோபம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நான் முற்றிலுமாக முகநூலிலிருந்து விலகி விட்டேன்.
அடுத்த சில மாதங்களில் நான் கருவுற்றேன். பத்தாவது மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. எனது மகள் என் வாழ்க்கையை அடியோடு மாற்றி விட்டாள். அவள் வந்த பிறகு எனக்கு எதற்கும் நேரமில்லாது போனது.
இப்போது நான் என் கணவருக்கு ஒரு அன்பு மனைவியாகவும்; என் அருமை மகளுக்கு பாசமான தாயாகவும் மட்டுமே இருக்கிறேன்.
நல்ல வேளையாக நான் மீண்டுவிட்டேன்.
பெண்கள் ஈஸி-கோயிங்காக இருக்கக்கூடாது. மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.