கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 2,241 
 

(1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காந்திமதிப் பாட்டியின் வீட்டிற்கு முதல்நாள் இரவு தான் மீனி வந்திருக்க வேண்டும். ஏனெனில் அன்று இரவு முழுவதும் அலமாரியின் மேல் ‘தொப் தொப்’ என்று ஏதோ விழும் சப்தமும், சமையலறையில் பாத்திரங்களும் கரண்டிகளும் உருளும் ஓசையுமாக இருந்தன. கிழவிக்கு இன்னதென்று . புரியவில்லை. அர்த்தராத்திரியில் எழுந்திருந்து போய்ப் பார்க்கவும் அலுப்பு. எலியாக இருக்குமென்று சபித்துக்கொண்டே மறுபடியும் கண்ணயர்ந்தாள்.

மறு நாள் அதிகாலையில் கிழவி திருப்பள்ளி எழுச்சிகளும் சிவன் தோத்திரங்களும் சொல்லி முடித்துவிட்டு எழுந்தபொழுது மீனி குறுக்கே ஓடிற்று. “அட தரித்திரமே! நீதானா ராத்திரி முழுதும் கொட்டம் அடித்தாய்? போதாக்குறைக்கு முதல் முதல் உன் தரிசனம் தானா? என்ன ஆபத்து வரப்போகிறதோ?” – என்று நொந்து கொண்டாள்.

அதற்குப் பிறகு பகல் முழுவதும் மீனி கண்ணில் படவில்லை. அன்று கிழவிக்குக் கறிகாய் நறுக்கும்பொழுது அரிவாள்மணை கூடக் கையில் படவில்லை. ‘இப்படிச் சாஸ்திரம் பொய்யாகுமா?’ என்று கிழவி யோசித்துக்கொண்டிருந்தாள்.

இரவு வந்தது. பலகாரத்திற்குப் பால் கொழுக்கட்டை செய்து ஜாக்கிரதையாய் மூடி வைத்துவிட்டுச் சுவாமி தரிசனத்திற்குச் சென்றாள். பலகாரத்திற்குக் காவலாகப் பேரன் சூரிய நாராயண மூர்த்தியையும் அவன் தங்கை கௌரியையும் நியமித்தாள்.

சிறிது நேரம் சென்றது. சூரியநாராயணமூர்த்தி ராமசப்தம் சொல்லிக்கொண்டிருந்த சிரமத்தில் ஈடுபட்டிருந்தான். அண்ணனுடைய உத்தியோகத்தையும் சேர்த்துப் பார்த்துவந்த கௌரி அப்படியே கூடத்தில் தங்கிப் போய்விட்டாள்.

உள்ளே தாம்பாளம் உருண்டு விழுந்தது. அந்தச் சப்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டுச் சூரி உள்ளே ஓடினான். பூனைக்குட்டி அந்தர்த்தானமாகிவிட்டது. பாத்திரத்தில் கொஞ்சம் பால் குறைந்திருந்தது. கிழவி வந்து தொணதொணக்கப் போகிறாளே எனப் பயந்து, தாம்பா ளத்தை மறுபடியும் மூடிவைத்து விடலாமென்று கையில் எடுத்தான். சமயத்தில் கிழவி திரும்பி வந்துவிட்டாள். ஒரு விநாடிக்குள் விஷயம் விளங்கிவிட்டது. பாட்டியின் அம்பறாத்தூணியிலுள்ள அவ்வளவு வசவுகளும் அழகாய்ப் புறப்பட்டன. அப்புறம் சூரிக்கு இரண்டு அறை; தூங்குமூஞ்சி கௌரிக்கு நான்கு. வாரிச் சுருட்டிக்கொண்டு கௌரி எழுந்தபொழுது வீட்டு விட்டத்தின் மீது மியா, மியா என்று பிரலாபித்துக்கொண்டிருந்த பூனைக்குட்டியைப் பார்த்தாள். தன் நிலைமையைப் பார்த்து இரங்குவது போல் கூவிய பூனைக்குட்டிக்கு மீனி என்ற அன்புப் பெயர் சூட்டினாள்.

அன்று முதல் அண்ணனுக்கும் தங்கைக்கும் மனஸ்தாபம். இரவு எட்டு மணிக்குத் தூங்கக் கௌரிக்கு யாதொரு நியாயமுமில்லை என்றும், படிப்பவனைச் சுயேச்சையாய் விடவேண்டியது ஸ்திரீ தர்மமென்றும், அதையெல்லாம் மறந்து தூங்கிப்போன கௌரி கணவன் வீட்டிற்குப் போய் நல்ல பெயர் வாங்கப்போவதில்லை என்றும் சூரி எண்ணிக் கொண்டிருந்தான். கௌரி நினைத்தாள்: ‘எனக்குத் தான் தூக்கம் தலை சுற்றியடித்ததை இவன் பார்த்தானே; நானும் சொன்னேனே. கை சொடுக்கும் நேரத்தில் நெட்டுருச் செய்யவேண்டியதை ஒரு யுகம் வரையில் செய்தால் யார் ஜவாப்? மக்குப் பையன்! சமையலறையிலாவது விளக்கை வைத்துக்கொண்டு வாசிக்கலாகாதா? அதையெல்லாம் விட்டுவிட்டுக் கிழவிக்குத் தூபம் போட்டு எனக்கு அடிவாங்கி வைத்தானே. களிமண்! பிரம்மகத்தி! இவனுக்குப் படிப்பு வருமா?’

மீனியும் அன்று முதற்கொண்டு அங்கேயே ஸ்திரவாசமாகி விட்டது. ருசி கண்ட பூனை விடுமா? அங்கே இங்கே பாட்டி போயிருக் கையில் நெய்யைத் தின்றுவிடுவது, பாலைக் குடித்துவிடுவது, நைவேத் தியத்தைத் தொட்டுவிடுவது, நூற்கண்டைச் சிடுக்கடித்துவிடுவது-இப்படி யெல்லாம் பூனைக்குட்டிக்குத் தெரிந்த அவ்வளவு விஷமமும் செய்தது.

ஒரு நாள் சமையல் அடுப்பிற்குள் மீனி தூங்கிக்கொண்டிருந்தது. காந்திமதிப் பாட்டி அதைப் பார்க்கவில்லை. “இந்தாடா காபி” என்று காபியை வைத்துவிட்டுக் காசித்தும்பைப் பூப்பறித்து வரச் சென்றாள். சூரி மசிக் கூடு, நோட் புஸ்தகங்கள் இவைகளை ஒழுங்குபடுத்திவிட்டு வருமுன் காபியில் பாதிக்குமேல் காணாமல் போய்விட்டது. பாட்டியி னிடம் போய்ச் சொன்னான். “உனக்கு நன்றாய் வேண்டும்!” என்று கிழவி ஆசீர்வதித்தாள். சூரிக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவில்லை.

அங்கிருந்த சுடு தண்ணீரை எடுத்துப் பூனையின் மேல் கொட்டினான். ‘மியாவூ’ என்று நீளமாக அழுது கொண்டே அது ஓடி விட்டது.

இதைப் பார்த்திருந்த கௌரிக்குக் கண்ணில் ஜலம் வந்தது; தன் மீது சுடுதண்ணீர் விழுந்த எரிச்சல் உண்டாயிற்று. அதிலிருந்து மீனியின் மீது கௌரிக்குப் பின்னும் அதிகமான ஆசையும் நேசமும் உண்டாயின. கிழவிக்கும் சூரிக்கும் தெரியாமல் நெய்யுடன் கலந்த சாதத்தைக் கொல்லையில் கொண்டுபோய் மீனிக்குப் போடுவாள்; தன் காபியில் கடைசியில் பாக்கி வைத்து, கிணற்றங்கரையில் பாத்திரம் தேய்க்கும் பாவனையாய் மீனிக்குக் காபியைக் கொடுப்பாள்; மத்தியான வேளைகளில், பாட்டி தூங்கும்போதோ, பஞ்சீகரணம் போடும்போதோ மீனியுடன் கொல்லையில் விளையாடப் போவாள்.

நாளாக நாளாக ரகசியம் அம்பலமாகிவிட்டது. இருவருக்கும் வெட்கம் கெட்டுப்போயிற்று. கௌரி காபி குடிக்கும் பொழுதும், சாதம் அல்லது பட்சணம் சாப்பிடும் பொழுதும் பகிரங்கமாய் அவளிடம் வந்து மீனி கத்தும். அவள் பரிவுடன் தன்னுடையதை அதற்குப் பகிர்ந்து கொடுப்பாள். இதர வேளைகளில் வெறுமனே கௌரியின் மீது அன்புடன் மீனி உராயும்.

பூனையைப்பற்றிக் கிழவியின் உணர்ச்சிகள் ஒரு விதம். எவ்வளவு ஜாக்கிரதையாய்க் கிழவி. வீட்டுக் காரியங்களைச் செய்த போதிலும் முடிவில் எதிலாவது ஏமாறாமல் இருக்க மாட்டாள், தவிர, தினசரி காலையில் பூனை தரிசனம். கண்ணாடிக் குப்பியில் அடைத்து வைத்திருக் கும் அக்கினித் திராவகத்தைப்போல் மீனியின் மீதுள்ள கோபத்தை அடைத்து வைத்திருந்தாள். அவள் இல்லாவிட்டால் தங்கப் பூனைகளாகச் செய்து தானம் செய்ய அவளிடம் ஐவேஜி ஏது? எனவே கிழவியின் ஆத்திரத்திற்கு இலக்கு, கௌரிதான்!

சூரியின் உணர்ச்சி மற்றொரு விதம். என்றைத் தினம் மீனியின் சாக் கிட்டுத் தனக்கு . அடி விழுந்ததோ அது முதல் அதை எப்படியாவது தொலைத்துவிடவேண்டும் என்றதாக நினைத்தான் அவன். அதற்குக். குறுக்கே நின்றாள் கௌரி. இல்லையா? தவிர அவளைப் பார்த்ததும் – மீனி தாவிப் பாய்ந்து ஓடிப்போய்விடுவதும், கௌரியைக் கண்டால் கொஞ்சிக் குலாவுவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை; ‘ஒரு பூனை கூட என்னைப் பார்த்து அலட்சியம் செய்யும்படி ஆகிவிட்டதா?’ என்ற துயரம். இவ்வளவு எண்ணங்களும் சேர்ந்து, ‘மீனியையும் கௌரியையும் ஏக காலத்தில் கர்வபங்கப் படுத்திவிடு’ என்று சூரிக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தன.

ஒரு நாள் காலை வெயிலில், குட்டிச்சுவருக்குப் பின்னால் மீனி கால்களை நீட்டிக்கொண்டு சுகமாய்ப் படுத்துக் கிடந்தது. சூரி பார்த்தான். ஒரு. பெரிய சாக்கைக் கொண்டுவந்து, ‘திடும்’ என்று பூனையின் மீது போர்த்திச் சாக்கையும் பூனையையும் அப்படியே தூக்கிக்கொண்டு வந்தான். கிழவி பார்த்து, “அடே ! பூனை ஹத்தி செய்யாதே. பிராயச்சித்தம் செய்யப் பணமில்லை” என்று கூப்பாடு போட்டாள்.

“ஒன்றும் செய்யவில்லை , பயப்படாதே” என்று சொல்லிக் கொண்டே ஒரு கம்பிக் கூட்டில் கொண்டுபோய் அதை அவன் அடைத்து விட்டான். சர்க்கஸில் சிங்கம் புலிகளைப் பழக்கவில்லையா? அதற்குப் பிறகு, ‘இப்படிச் செய்’, ‘அப்படிச் செய்’ என்று ஆட்டிவைத்தபடியெல்லாம் அவை ஆடவில்லையா? அதைப்போல, புலிக்குப் பதிலாகப் பூனையை வைத்துக் கௌரியைக் கண்டால் ஓடிப்போகும்படி பழக்க வேண்டுமென்ற உத்தேசம்போலும் சூரிக்கு! மீனி சிறிது நேரம் கத்திப் பார்த்தது. பிறகு கூண்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கம்பி இடுக்குகளில் முகத்தை விட்டுப் பார்த்தது. அப்பால் கம்பிகளை முன்கால் களால் பிறாண்டிப் பார்த்தது. ஒன்றும் பலிக்கவில்லை. திரும்பவும் முன் போல் அலையத் தொடங்கிற்று. சிறிது நேரம் சென்று சூரி பூனைக்குப் பால் கொண்டுபோய் வைத்தான். என்ன காரணத்தாலோ மீனி பால் சாப்பிட மறுத்தது. கண்களை மூடிக்கொண்டு ஏதோ குருட்டு யோசனை செய்தது.

நடந்தது அவ்வளவும் கௌரிக்குத் தெரியும். இருந்தாலும் அவ் வளவு வெளிப்படையாகச் சூரியுடைய விரோதி ஆவதற்குக் கௌரிக்குத் துணிவில்லை. இருந்தாலும் மீனியின் நிலைமைக்காக வருந்தாமல் இருக்க வில்லை. அன்று கௌரிக்குச் சாப்பாடு கூடச் சரியாகச் செல்லவில்லை. இரவு எப்பொழுது வரும் என்று காத்துக்கொண்டிருந்தாள்.

இரவு ஒன்பது மணி இருக்கும். எங்கே கூட்டில் பூனை செத்துப் போய்விடப்போகிறதோ என்று பயந்து மெதுவாக ஒருவருக்கும் தெரியாமல் கூட்டை அப்படியே வெளியே எடுத்துக்கொண்டுபோய்ப் பூனையை விட்டுவிடுவோம் என்ற எண்ணத்துடன் கிழவி அக்கூட்டண்டை வந்து சேர்ந்தாள். அங்கே கொஞ்சம் இருட்டு; அவ்விருட்டில் மற்றோர் உருவம் தோன்றிற்று. “யாரது?” என்றாள். “நான் தான்” என்றாள் தூங்கிப்போய்விட்டதாக நினைத்தாளே அந்தக் கௌரி.

“இருட்டில் இங்கே என்ன செய்கிறாய்?” என்றாள் கிழவி.

“நீ என்ன செய்யப்போகிறாய் பாட்டி?” என்று பதில் கேள்வி கேட்டாள் கௌரி.

“பயப்படாதே; உன் பூனைக்குட்டியைச் சந்தில் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன். இல்லாவிட்டால் இந்தச் சூரி அதைக் கொன்றுவிடுவான்…நீ என்ன செய்கிறாய் இருட்டில்?”

“ஒன்றுமில்லை” என்று கௌரி சொன்னது பொய். உண்மையில் சாயங்காலம் தனக்குக் கிடைத்த காபியில் கொஞ்சம் ரகசியமாய் மிகுத்துவைத்து அப்பொழுதுதான் மீனிக்குக் கொடுத்து முடிந்திருந்தது.

“ஆனால் சரி, நீ இங்கேயே இரு; நான் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன்” என்றாள் கிழவி.

கௌரிக்கு மீனியை இழக்கவும் இஷ்டமில்லை; குற்றவாளியைப் போல் கூட்டில் பார்க்கவும் இஷ்டமில்லை. முடிவில் எங்கேயாவது பிழைத்துக் கிடக்கட்டும் என்று தைரியம் மூட்டிக்கொண்டு, “சரி பாட்டி, எடுத்துக்கொண்டு போ” என்று தானும் சந்துவரையில் போய் விட்டு வந்தாள். ‘சனி ஒழிந்தது’ என்று கிழவி அக மகிழ்ந்து கொண்டிருந்தாள். கௌரிக்கோ துக்கம் நெஞ்சை அடைத்தது. அவரவர்கள் படுக்கப் போய்விட்டார்கள்.

நல்ல நிசிவேளை. பின்னும் ஓர் உருவம் பூனையைப் பார்க்க வந்தது – ஆஜர் பார்க்க! சந்தேகமென்ன? சூரிதான்! இருட்டில் குனிந்து பார்த்த பொழுது கூடு மட்டும் இருந்தது; பூனையைக் காணவில்லை. வடவாக்கினி போலக் கோபம் சீறியெழுந்தது; அந்தக் கௌரியை ஒரு கை பார்க்கிறேன். ராத்திரி பூனையை விரட்டிவிட்டால் எனக்குத் தெரியாமல் போய்விடுமா?….இருக்கட்டும்” என்று சபதம் செய்தான்.

மறு நாள் பொழுது விடிந்தது. கிழவி படுக்கையை விட்டு எழுந்ததும் –மீனி முகத்தில் விழித்தாள்; “சிவ சிவ! போன சனியன் திரும்பிவந்து விட்டதா?” என்று தலையில் அடித்துக்கொண்டாள். ஆனால் கௌரியின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. கொல்லைப் பக்கம் பல் துலக்கப் போனாள். வெந்நீர் அடுப்புக் கூரைமேல் பூனைக்குட்டி பதுங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தாள்.

“அட மீனி!” என்றாள் கௌரி. ‘மியாவ், மியாவ்’ என்று கத்திக்கொண்டே அவளருகில் வந்தது பூனை.

“என்னை விட்டுப் போகமாட்டாயோ? நல்ல மீனி! தங்கக் கம்பி! கண்ணு!”

‘மியாவ் மியாவ்!’

“சூரி பார்த்தால் ஓடிப்போன திருடன் என்று உன்னைக் கொன்று விடுவானே. என்ன செய்கிறது?”

‘மியாவ் மியாவ்!’

இப்படிக் கௌரியும் மீனியும் பிரேம பாஷையில் பேசிக்கொண்டிருந்தபொழுதே சூரி வந்துவிட்டான்.

“ஏண்டீ கௌரி! பூனைக்குச் செப்பிடு வித்தை தெரியும் போலிருக்கிறது. கூட்டிலே இருந்து தானே வெளியிலே வந்துவிட்டதே!” என்று கண்ணைச் சிமிட்டினான்.

“போடா குரங்கு. உனக்கு என்னடா தெரியும் அதெல்லாம்?” என்று சீறினாள் கௌரி.

மீனி காலபைரவனைக் கண்டது போல் எங்கேயோ நடுங்கிப் பதுங்கிவிட்டது.

சூரிக்கு அவமானம் தாங்கவில்லை. ‘நான் கௌரிக்கு அண்ணன் என்று உணரும்படி செய்யாவிட்டால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்’ என்று ஓர் அந்தரங்கச் சங்கற்பம் செய்து கொண்டான். ஆனால் பதற்றமாய் ஒன்றும் செய்யவில்லை. தந்திரத்தைக் கைக்கொண்டான்.

“கௌரி, உன்மேல் எவ்வளவு ஆசை பார்த்தாயா மீனிக்கு! போன ஜன்மத்திலே . அது உனக்குத் தங்கை. அது தான் அவ்வளவு கொஞ்சுகிறது. அப்போது நான் ஓர் எலி. அதுதான் உங்கள் இரண்டு பேருக்கும் என் மேல் கோபம் வருகிறது. பழையதெல்லாம் போகட்டும். இனிமேல் எல்லாரும் சேர்த்தியாக இருப்போம். சரிதானா’ என்று அழகாக உருக்கமாகப் பேசினான்.

கௌரி வெகுளிதானே! பேச்சு அவள் மனத்தைக் கரைத்தது. அண்ணாவுக்கு நல்ல புத்தி வந்துவிட்டதென்ற சந்தோஷத்தால் தன் பட்சணத்தில் ஒரு பங்கு அண்ணனுக்கு வழங்கினாள்.

மணி பத்து அடிக்கவே சூரி காலைப் பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டுத் திரும்பினான். இரண்டாம் தரம் சாப்பிட்டான பிறகு ஓர் அழுக்குக் கடுதாசியை எடுத்து எழுதினான்.

“சார் அவர்களுக்கு,

எனக்கு ரொம்ப ரொம்பத் தலைவலி. பாட்டி மத்தியானமாய்ப் பள்ளிக்கூடம் போகாதே இன்னூட்டாள். எனக்குப் பொட்டில் மொளகு அறச்சுப் போட்டிருக்கு. எனக்கு லீவ் வேணும்.

டி. சூர்யநாராயணமூர்த்தி.”

இக் கடிதத்தை அடுத்த வீட்டுப் பையனிடம் கொடுத்தனுப்பி விட்டான்.”வயிற்று வலி; பள்ளிக்கூடம் போக முடியாது” என்று பாட்டியிடம் சொல்லிவிட்டு ஒரு பாயை எடுத்துப் போட்டுக்கொண்டு நான்கு தரம் அங்கப் பிரதட்சிணம் செய்தான். பாட்டி குழந்தைக்கு ஓமமும் வெற்றிலையும் கொடுத்துவிட்டு, மூக்குக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு மெய்ம் மறந்து ஞானவாசிஷ்டம் படிக்க ஆரம்பித்துவிட்டாள்.

சமயம் வாய்த்ததென்று பாயை விட்டுச் சூரி மெதுவாய் நழுவினான். வீட்டின் இரண்டு கட்டிலும் கௌரியைக் காணவில்லை. ‘திருடர்கள் கொல்லையில் இருப்பார்கள்’ என்று எண்ணிக்கொண்டே குதிருக்குப் பின் வைத்திருந்த கிட்டிப்புள் கழியை முதுகுக்குப் பின்னால் ஒளித்து எடுத்துக் கொண்டு கொல்லைப்புறம் போனான்.

கௌரி ஒரு காலை நீட்டிக்கொண்டு ஆனந்த சாகரத்தில் மூழ்கியபடி உட்கார்ந்திருந்தாள். எதிரே அம்மானைக் காய்கள் கிடந்தன. மீனி அவற்றைக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தது. சூரிக்கு மீனியைக் கொல்ல வேண்டுமென்ற எண்ணமல்ல. பள்ளிக்கூடத்து வாத்தியார் ரூல் கழியால் லேசாகத் தலையில் தட்டுகிறாரே, அதைப்போல் மீனிக்கு இரண்டு தட்டுப் போட்டால் அது வழிக்கு வந்துவிடும் என்ற யோசனை. மெதுவாய், கௌரிக்குத் தெரியாமல் அவளுக்குப்பின் போய் நின்று, ஓர் அடி போட்டான். அது இவ்வளவு பலமாய் விழும் என்று அவனே எதிர் பார்க்கவில்லை. கௌரி அடிப்பதற்கு முந்திப் பார்த்துவிடப்போகிறாளே என்ற பயத்தாலேயே அடி அவனை அறியாமலே பலமாய் விழுந்துவிட்டது.

மீனி பிரமாதமாய் அழுதவண்ணம் ஒடிந்து போன இடுப்பை இழுத்துக்கொண்டு ஒரு புதருக்குள் மறைந்தது.

சூரிக்கு அஸ்தியில் சுரம். அதைப் பொய்க்கேள்வியால் மறைக்கப் பார்த்தான். “ஏண்டீ கௌரி! நான் விளையாட்டுக்குத்தானே மெதுவாய்த் தட்டினேன்? உன்னைப்போலவே உன் பூனையும் மாமாலம் பண்ணுகிறதே!”

கௌரி பதில் சொல்லவில்லை. முகம் கடுகுபோல ஆகிவிட்டது. பூனை கிட்டப் போனாள் – தடவிக் கொடுப்பதற்காக. மீனி பழைய மீனியாகவே இல்லை. நல்ல பாம்புபோல் புதருக்குள் இருந்தபடியே சீறிற்று. “மீனி! மீனி! நான் கௌரிதானே? ஒன்னோடெ சேத்திதானே? கோவிச்சுக்கறயே? கொலைகாரன் சூரி இன்னா அடிச்சான்” என்று அழுகையுடன் கெஞ்சினாள். மீனி புஸ் புஸ் என்று சீறியது மல்லாமல் கௌரியின் கைகளைப் பிறாண்டிவிட்டது. அவ்வளவு துன்பம் போலும் அதற்கு! கௌரிக்குப் பிறாண்டினதுகூடப் பெரிதாகத் தோன்றவில்லை. தன்னையும் பார்த்து மீனி நடுங்கலாச்சே என்ற துக்கம். துக்கத்தால் அழுகை பலத்தது; தாரை தாரையாகக் கண்களில் நீர் வடிந்தது. கௌரி அழுவதைப் பார்த்த சூரிக்கு என்றும் அறியாதவாறு கண்ணீர் ததும்பிற்று. அண்ணனும் தங்கையும் ஒருவரைப் பார்த்து ஒருவர் தேம்பித் தேம்பி அழுதார்கள். அழுகை ஓய்ந்ததும் சூரி போய் மீனிக்கு வைத்தியம் செய்ய முயன்றான். பிரயோஜனப்படவில்லை. பிறகு இருவரும் கைகோத்துக்கொண்டு உள்ளே போய்விட்டார்கள்.

இரவு வந்தது. கிழவி கௌரியைப் பார்த்து, “எங்கே என் பிரதிவாதி – உன் மீனி?” என்றாள். கௌரி கண்களில் வரும் ஜலத்தைக் கசக்கிக் கொண்டு, “போ பாட்டி, உனக்கு வேறே வேலை இல்லையோ?” என்றாள்.

அன்றிரவு பத்து மணிக்கு மேல் மழை பிடித்துக்கொண்டது. ஒரே பாயில் படுத்துக் கொண்டிருந்த சூரியும் கௌரியும் மீனியை உத்தேசித்து மழையைத் திரும்பிப் போகும்படி பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.

மறுநாள் அதிகாலையில் கரிச்சான் குருவியும், சேவலும், பச்சைக் குழந்தைகளும் எழுந்திருக்கும் நேரத்தில் இருவரும் எழுந்திருந்து கொல்லைப்புதரில் போய்ப் பார்த்தார்கள். பூனை கண்ணில் படவில்லை. எங்கேனும் போயிருக்கும் என்று திருப்தி யடைந்தார்கள்.

அந்திப் பொழுது. பலமாய்க் காற்றுக் கிளம்பிவிட்டது. மரங்களெல்லாம் பேயாடின. தெருக்களில் தென்னை மட்டையும் உதிர்ந்த இலைகளும் விழுந்தன. இலைச் சருகுகள் சுழன்றன. வடகிழக்கிலிருந்து சமுத்திரமே புரண்டு வருவதுபோல் கருமேகக் கூட்டங்கள் வானில் வந்து நிரம்பின. ஓஹோ! மழைக் காலத் துவக்கம்!

பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிவந்த சூரிக்கு ஒரு குடைச்சல், சந்தேகம் – ஒருவேளை தாங்கள் காலை இருட்டில் பூனையைச் சரியாகத் தேடவில்லையோ என்று. அப்படி இருந்துவிட்டால் இரண்டாவது நாளும் மீனி மழையில் நனைந்துவிடுமே என்று நினைத்துக் கௌரியையும் அழைத்துக்கொண்டு கொல்லைப்புறம் போனான்.

காலையில் பழைய பத்திரிகையோ இலைச் சருகோ என்று அலட்சியம் செய்தது இப்பொழுது மீனி என்று தெரிந்தது. குழந்தைகள் நெஞ்சம் இளகு நீராகிவிட்டது. பரபரப்பாக இருவரும் உள்ளே சென்று ஆளுக்கு ஒரு பிடி நெய்யுஞ் சாதமுமாய்க் கொண்டுவந்து மீனியின் முன் வைத்தார்கள். அது ஆவலின்றிக் கொஞ்சம் தின்றது. அன்றாவது மழையில் நனையாமல் உள்ளே இருக்கட்டும் என்று அவர்கள் மீனியைப் பிடிக்க முயன்றும் பயன்படவில்லை. வலி பொறுக்கமாட்டாமல் இருவர் கையிலும் கீறி ரத்த காயம் அடித்துவிட்டது. கௌரி கண்கொட்டாமல் சூரியைப் பார்த்தாள். அவன் தலைகவிழ்ந்து கால் கட்டைவிரலால் மண்ணைத் தோண்டினான். மழை வந்ததும் குழந்தைகள் உள்ளே போய்விட்டார்கள்.

அன்று முதல் எட்டுத் திக்கும் கரைந்து விடும்படியாக மழை பொழிந்தது. ஜலப் பிரளயம்; வெளியே தலை நீட்ட முடியாது. அப்படியும் குழந்தைகள் ஒவ்வொரு தினமும் புதரடியில் மீனிக்குக் கொண்டுபோய் ஏதேனும் ஆகாரம் வைப்பார்கள். மூன்றாவது நாள் போன பொழுது மீனி விறைத்துக் கிடந்தது. பாவம்! இரு குழந்தைகளும் அதைப் பார்த்து விம்மி விம்மி அழுதார்கள். அவர்களுக்குத் தேறுதல் சொன்ன கிழவியின் வார்த்தைகள் அவ்வளவும் புதுக் கோட்டை அம்மன் காசுகூடப் பெறவில்லை.

– ஜூலை, 1934 – கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *