மிஸ்டர் ராமுடு ஐ.ஏ.எஸ்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2012
பார்வையிட்டோர்: 11,633 
 
 

கதை கேட்க:https://www.youtube.com/watch?v=0RAWV1-NK1U

ஜி.வி.ராமுடு ஐ.ஏ.எஸ்., கிரீமைத் தடவி தலை வாரிக்கொண்டிருந்தார். கண்ணாடியில் தெரிந்த அவரது முகத்தைப் பார்க்க அவருக்கே திருப்தியாக இருந்தது. முன்னைவிட இப்போது சற்று சிவந்து விட்டிருப்பதுபோல அவருக்குத் தோன்றியது. ரஷ்யாவிற்குப் போய் ஒரு வருஷம் தங்கினால், இன்னும் நன்றாகச் சிவந்து விடலாம் என்று அவர் எண்ணினார். ரஷ்யா என்று எண்ணியதும், அவர் பார்வை கண்ணாடியிலிருந்து நகர்ந்து, சுவரின் நடுவில் மாட்டப்பட்டிருந்த காலண்டரின் பக்கம் பாய்ந்தது. ஏப்ரல் 24. அந்தத் தேதியைக் கண்டதும், அவரு டைய கலெக்டர் அந்தஸ்தையும் சட்டை செய்யாமல், இதயத்தில் இன்ப அலைகள் ததும்பி, உடலெங்கும் பரவின. இன்று தான் அன்னாகாதரீனுக்கும் அவருக்கும் திருமண நிச்சயதார்த்த நாள்.

“ஹோ, வாட் எ’ லாங் டேஸ்” என்று ஆங்கிலத்தில் முணுமுணுத்தவாறே, அவர் மீண்டும் தலை வாரத் தொடங்கினார். அன்னாகாதரீனைச் சந்தித்து, அவர்கள் மத்தியில் தேசத்தையும் பாஷை யையும் கடந்து, காதல் அரும்பி முழு மலராக இப்போது வசந்தக் காற்றில் அது மணம் வீசுவதற்கான தாமதத்தைப் பற்றித்தான் அவர் முனகிக் கொண்டார். என்ன நினைத்தோ, மீண்டும் தலை வாருவதை நிறுத்திவிட்டு, அருகிலிருந்த அன்னாகாதரீனின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தார். மற்ற ரஷ்ய முகங் கள் போல் இராமல், இந்திய அம்சங்கள் கொண்ட, அதிகப் புன்னகை தவழும் முகம். நிமிர்ந்த எடுப்பான நாசி! பளிங்கு போல், சந்திக்கிறவர்கள் இதயத்தை சாந்தி யுறச் செய்து குளுமையாக்கும் உன்னத விழிகள்; ரோஜா நிறக் கன்னங்கள்!

கலெக்டர், அன்னாவின் புகைப்படத் தைக் கையில் ஏந்தி, ஆசையும் ஏக்கமும் பிரதிபலிக்க அதை உற்றுப் பார்த்தார். அவர் உள்ளத்தில் காதலின் இன்ப வெள்ளமானது, என்று அன்னாவை அவர் காதலிக்கத் தொடங்கினரோ அன்றிலிருந்து வெளியீடு இன்றி, தன் சக்தியை மறைத்தவாறு உள்ளேயே பொங்கிக்கொண்டிருந்தது. இளங் காத லர்களுக்கு பிரசித்தமான ஜுஹ§ கடற்கரையிலோ, எல்ஃபெண்டா குகைக ளிலோ, பம்பாய்த் தியேட்டர்களிலோ, ஹோட்டல்களிலோ அவரும் அன்னாவும் ஒரே ஒரு மணி நேரத்தைக் கூடக் கழித்ததில்லை. பம்பாய்க்கு அருகிலேயே வாழ்ந்தும், இவை இயலாமற் போன காரணம், அவர் சராசரி மனிதரல்ல என்பதுதான். மேலும் இந்தியன் ஒருவன் ரஷ்யக்காரியுடன் காதல் செய்வது, பெரிய விளம்பரத்துக்கு இடம் கொடுத்து விடுமே!

ஆகவே, அவர்களின் காதல், இனிய காலம் மறந்த சம்பாஷணைகள் இன்றி, அடிக்கடி நேரும் சந்திப்பின்றி, வெறும் இனிஷியல் இட்ட கடிதங்களினாலேயே வளர்ந்தது.

அன்னாகாதரீன், பிலாய் உருக்காலைக்காக இந்தியா வந் திருந்த இன்ஜினீயர் அந்திர யேவ் பெட்ரோவிச்சின் குமாரி. பம்பாய் சர்வ கலாசாலையில், இந்தியத் தத்துவம், கலைகள் பற்றிய பட்டப் படிப்பிற்காக வாசித்துக் கொண்டிருந்தாள். அந்தக் கல்லூரி இலக்கிய மன் றத்துக்கு வருஷாந்தர விழாவிற் குத் தலைமை வகிக்க அவரை அழைக்க வந்த பெண்மணி களில் அவளும் ஒருத்தி. அங்கு அவர் நிகழ்த்திய சொற்பொழி வினால், அதிகமாகக் கவரப்பட் டவள் அவள். ஜி.வி.ராமுடு ஐ.ஏ.எஸ்.ஸின் ஆஜானுபாகுவான தோற்றமும், கவர்ச்சிமிக்க முகமும், அவளைப் பரவசப்படுத்தின.

அவளுக்குத் தமிழ் தெரியாது. ஜி.வி.ஆருக்கு ரஷ்ய மொழி தெரியாது. எனவே, ஆங்கிலத்தி லேயே அவர்கள் கடிதப் போக் குவரத்து நடந்தது. இவ்வாறே ஒன்றரையாண்டுக் காலமாக, தபால்காரர்கள் தயவினால் அவர்கள் காதல் மௌனமாக, ஆழமாக வளர்ந்தோங்கி விட்டது. இன்று பிலாயிலிருந்து அந்திரயேவ் பெட்ரோவிச், தனது மாமனார் ஸ்தானத்தை நிச்சயித்துக் கொள்வதற்காக வரவிருக்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணம் விரைவில் நடந்துவிடும். ஜி.வி.ஆர். ரஷ்யா வில் இந்திய தூதரகத்திற்கு எந்த வேலையிலேனும் தன்னை மாற்றிவிடும்படி மேலதிகாரிகளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். மாற்றல் கிடைத்துவிடும். தனது காதலி அன்னாகாதரீ னாவுடன் வால்கா நதிக்கரை யிலோ, பாலே நடன அரங்கு களிலோ கை கோத்தவாறு இன்மொழிகள் பேசி உலவும் நாள் அதிக தூரத்தில் இல்லை!

ஜி.வி.ஆர். அந்தப் போட்டோ வைக் கீழே வைத்தார். அவரு டைய பெர்ஸனல் ப்யூன் பணி வோடு உள்ளே நுழைந்து அவ ருக்கு குனிந்து சலாம் செய்துவிட்டு, பேட்டிக்காக வந்திருந்த வர்களின் விஸிட்டிங் கார்டு களைக் கொடுத்தான். அவற்றை ஒவ்வொன்றாகத் தள்ளியவாறே வந்தவருக்கு, ஒரு கார்டைக் கண்டதும் சட்டென்று முகம் சுருங்கிற்று. உள்ளத்தின் ஒரு மூலையில் தங்கியிருந்த அவமான இருள், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பெரிதாய்க் கவிந்தது. அந்தக் கார் டில் ‘ஆர்.மட்கோல்கர், காரியதரிசி, பம்பாய் முனிசிபல் தொழிலாளர் சங்கம் (பதிவு செய்யப் பட்டது)’ என்றிருந்தது.

அவருடைய மனக் கண் முன், கிழிசல் காக்கி யூனிபாரம் அணிந்து, புகையிலை மென்று, கறுத்த பற்களுடன் கையில் தெருக்கூட்டும் பெருந் துடைப் பம் பிடித்தவாறு நிற்கும் வயதான முகம் தோன்றிற்று. புண்ணின்மீது மொய்க்க வரும் ஈயை விரட்டுவது போல, ஆத்திரத்துடன் அதைத் துரத்த முயன்றார்; முடியவில்லை.

கோட் அணிந்துகொண்டு கண்ணாடி எதிரில் போய் நின்றார் ஜி.வி.ராமுடு ஐ.ஏ.எஸ். இளமையின் மிடுக்கான கம் பீரத்தோடு அதிகாரம், ஆடை, அந்தஸ்து ஆகியவை பூசியிருந்த பெருமிதக் களையோடு, கண்ணாடியில் தெரியும் இந்த உருவம் ஒரு தோட்டியின் மகனுடைய உருவம் என்று பகிரங்கமாக அந்த அறையில் ஆயிரம் வாய்கள் அலறியது போல் தோன்றிற்று. அவரையும் அறியாமல் அவர் பார்வை தாழ்ந்து, அன்னாகாதரீனாவின் வசீகரப் பார்வையைச் சந்தித்தது. ‘என் அருமையான அன்னா! நான் ஒரு தோட்டியின் குமாரன். என் உடம்பில் தோட்டியின் ரத்தம் ஓடுகிறது. உனக்குத் தெரியுமா?’ என்று உள்ளத்தில் ஒரு கள்ளக் குரல், அவமானத் தின் புழுக்கத்தையும் தன்னி கழ்ச்சியின் பரிதாபகரமான வேதனையையும் தொனி செய் வதுபோல் கேட்டது. சட்டெனத் தானும் தனது உடை, அந்தஸ்து யாவும் மாறி, கையில் தனது தகப்பன் கொண்டிருப்பது போலவே தெருக் கூட்டும் கோலும், முனிசிபல் காக்கி யூனிபாரமும் மாறினாற்போல புத்தி மயங்கிற்று.

உள்ளத்தை உலுக்கி எடுத்து வரும் இந்த உண்மையிடமிருந்து ஓடி வந்துவிடவேண்டுமென்ப தற்காகவே, அவர் சூழ்நிலையை விட்டு, திருப்பத்தூர் முனிசிபல் லைனை விட்டு, தாய், தந்தை, நண்பர்கள் என்ற சகல பந்தங் களையும் அறுத்தெறிந்துவிட்டு, கண்காணாத பம்பாய்க்கு வந்து விட்டார். ஆனால், அவை கேவலம் முயற்சிகள்தான் என் பதையும், உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த உண்மை ஒளிந்திருந்தது என்பதையும் போகப் போக அவர் புரிந்து கொண்டார். ‘தோட்டியின் பிள்ளையாகப் பிறந்து விட்டோம்’ என்பதற்காக அந்தத் தொழிலையே அவர் அடியோடு வெறுத்தார்.

இந்தியாவில் இருந்தால் தனது வாழ்நாள் முழுவதும் இந்த அவலம் தன்னை விட்டு மறையாது என்றுதான், தன் காதலியுடன் ரஷ்யாவுக்குச் சென்றுவிட வேண்டுமென்று அவர் தீர்மானம் செய்திருந்தார்.

ஜி.வி.ராமுடு ஐ.ஏ.எஸ்., கல் நெஞ்சம் படைத்தவரல்ல. முதல் சம்பளம் வாங்கியதுமே வீட்டிற்கு இருநூறு ரூபாய் மணியார்டர் செய்து, அவர் களை உடனே பம்பாய்க்குப் புறப்பட்டு வரும்படிக் கடிதம் எழுதினார்:

‘அவர்கள் வந்தால் கலெக்டர் பங்களாவில் தங்க நேருமே, மற்றவர்கள் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வது’ என்ற எண்ணம் உள்ளத்தில் ஓடியது. அவர்களுக்கு எங்காவது தனி வீடு பார்த்துக் கொடுத்துவிடுவோம் என்ற தைரியத்தில் கடிதம் எழுதினார்.

மகனின் மனதைப் புரிந்து வைத்திருந்த ரோஷக்காரரான வெங்கய்யா, மணியார்டரைத் திருப்பியனுப்பிவிட்டார். ‘உன் கலெக்டர் உத்தியோகத்துக்கு அவமானம் நேர்ந்துவிடும். ஆகையால், அங்கு என்னால் வர முடியாது. உனக்கு அப்பன், அம்மா பாசமிருந்தால், இங்கு எங்காவது மாற்றிக்கொண்டு வா! என்று நீ அப்பனை மதிக்கத் தொடங்குகிறாயோ, அன்றுதான் உன் காசை நான் தீண்டுவேன். என்னைக் கையாலாகாதவன் என்று நினைக்காதே! சாகிற வரைக்கும் தோட்டி உத்தியோகம் செய்தே என் பிழைப்பை நடத்திக்கொள்ள எனக்குத் தெரியும்’ என்று யாரையோ விட்டு கடிதம் எழுதியிருந்தார்.

அதன்பிறகு ராமுடு தனியா கவே இருந்தார். இந்தச் சூழ் நிலையில்தான், அன்னா காத ரீனைச் சந்திக்க நேர்ந்து, அவள் காதலைப் பெற்று, பம்பாயை அவர் பிரியவே முடியாத நிர்பந்தம் உருவாயிற்று.

“சரி, நீங்கள் சொன்னதைக் கவனிக்கிறேன். நீங்கள் போகலாம்” என்று அந்த முனிசிபல் தொழிலாளிகளின் பிரதிநிதியான மட்கோல்கரை அனுப்பிவிட்டு, அன்றைய பேட்டியை முடித்தார் ராமுடு. அவர் நாற்காலியை விட்டு எழ முற்படும்போது, “நாங்களும் பேட்டிக்கு அனுமதிக்கப்படுவோமா?” என்று வெளியேயிருந்து ஆங்கிலத்தில் ஒரு குரல் கேட்டது. அன்னாகாதரீனாவுடன் ஆஜானுபாகுவான ஒரு ரஷ்யர், கம்பீரப் புன்னகை பூத்தவாறு நின்றிருந்தார்.

அவர்களை அன்போடும் மரியாதையோடும் உள்ளே வரவேற்றார் ராமுடு. அந்திரயேவ் பெட்ரோவிச்சை, ராமுடு விற்கு அன்னா காதரீன் அறி முகப்படுத்தியதும், இருவரும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு, கை குலுக்கினார்கள்.

“உள்ளே போகலாம் வருகிறீர்களா?” என்று மரியாதை ததும்ப, ராமுடு தன் எதிர்கால மாமனாரையும், மனைவியையும் வரவேற்றார். அவர்கள் சம்பாஷணை சுமுகமாக நடந்துகொண்டிருந்தது.

அப்போது கதவுக்கு வெளியேயிருந்து அவருடைய பியூன் ‘ஸாப்’ என்று மரியாதையுடன் ஹிந்தியில் ராமுடுவை அழைத்தான்.

“என்ன?” என்று கேட்டார் ராமுடு.

“தெருவிலே யாரோ ஒரு அம்மா நின்னுகிட்டு கலெக்ட ரைப் பார்க்கணும்னு தொந்தரவு பண்றாங்க. எவ்வளவோ சொல்லியும் கேக்கலே. அவங்க தான் உங்க அம்மான்னு சொல் லிக்கிட்டு நிக்கறாங்க” என்று ஹிந்தியில் கூறினான்.

அந்திரயேவ் பெட்ரோவிச் பிலாயில் ஹிந்தி பேசும் மக்களிடையே வசித்தவராகையால்,அவருக்கு ஹிந்தி நன்றாகத் தெரியும். எனவே, “உங்களுக்கு அம்மா இருக்கிறார்களா?” என்று கேட்டுவிட்டார்.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், ஒரு நிமிஷம் மௌனம் சாதித்தார் ராமுடு. அவருடைய அந்தஸ்து, எதிர்காலம், இன்பக் கனவுகள், அன்னா காதரீனாவின் இனிய காதல்யாவும் தூள் தூளாகப் போகப் போவது போல், அவர் உள்ளத்தில் எண்ணங்கள் குமுறின. அவர் முகம் சவத்தைப் போல் வெளுத்தது. குற்றம் செய்தவர்போல் அவர் தலை குனிந்தது.

“நான் உங்கள் தாயாரைப் பார்க்கலாமா?” என்று அன்னா வின் இனிய குரல் அவரைக் கேட்டதும், அவர் சுயநினைவு பெற்றார். ‘இனி இதிலிருந்து தப்பிக்க முடியாது, நேர்வது நேரட்டும்’ என்று, தர்வானின் பக்கம் திரும்பி, “அவளை உள்ளே விடு” என்று இந்தியில் சொன்னார்.

சிறிது நேரத்தில் ராமுடுவின் தம்பி முனிகானுடன், ராமாயி யின் உருவம் ஏழைமைக் கோலத் துடன் உள்ளே நுழைந்தது. விருந்தினர்கள் எதிரில் மரியா தையாக நடந்துகொள்ளவேண் டும் என்ற கருத்தில், “வாம்மா, வா தம்பீ” என்று வரவேற்று, அவர்களை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார் ராமுடு.

அவருடைய அந்தஸ்தையும், அம்மாவின் கோலத்தையும் இருவரும் ஏறிட்டுப் பார்த்தனர். தனது கௌரவம், கலெக்டர் உத்தியோகத்தினால் ஏற்பட்ட மற்ற பெருமைகள் யாவும் சில் சில்லாக அந்தப் பார்வை ஒன்றிலேயே தெறித்து விழுந்தாற் போல் ராமுடுவிற்குத் தோன்றியது.

கொச்சையாகத் தமிழ் அறிந் திருந்த அந்திரேயேவ் பெட்ரோ விச், அவர்களுக்கு இந்திய முறைப்படி நமஸ்காரம் செய்து விட்டு, “சௌக்கியமாக இருக்கிறேங்களா?” என்று கேட்டார்.

தன் அருமை மகனைச் சந் தித்த ஆனந்தத்தினால் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த ராமாயி, முனிசிபல் கமிஷனர் முன்பு கூனிக் குறுகி நிற்பது போல் நின்று, “சௌக்கியந்தான் சாமி” என்றாள். ராமுடுவின் உள்ளம் ரம்பத்தால் அறுபட் டுக்கொண்டிருந்தது.

“நீங்கோ ஒங்களது சொந்த ஊர்லேதான் இருக்கிறீங்களா?” என்றார் அந்திரயேவ்.

“ஆமாங்க சாமி!”

“நம்ப ராமுடுவின் அப்பாகூட அங்கேதான் இருக்கிறாரா?”

“ஆமாங்க சாமி!”

“என்ன செய்யறாரு?”

“தோட்டி வேலைங்க” என்றாள் ராமாயி.

“தோட்டி… வாட்? தோட்டி… ஓ! ஈஸிட் மீன்ஸ் ஸ்கேவஞ்சர்?” என்று ராமுடுவை நோக்கிக் கேட்டார் அந்திரயேவ்.

யாவும் பஸ்மமாகித் தரையோடு தரையாகித் தானே அழிந்துவிடக் கூடாதா என்று தவியாய்த் தவித்தார் ராமுடு.

“இன்னும் அவர் அந்தத் தொழில் செய்துகொண்டிருக்கிறாரா?” என்று மீண்டும் கேட்டார் அந்திரயேவ்.

“யெஸ்” என்று அடங்கிய குரலில் கூறினார் ராமுடு.

“ஆ, என்ன ஒற்றுமை! ராமுடு, நான் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். நானும் ஒரு தொழிலாளியின் மகன். செருப்புத் தைக்கும் தொழிலாளியாக என் அப்பா இன்னும் எங்கள் ஊரில் பணியாற்றி வருகிறார். நமது உறவு முறை இன்னும் நெருங்கியிருக்கிறது” என்று ஆனந்தத்தோடு கூறினார், அந்திரயேவ் பெட்ரோவிச்.

குப்பென வழிந்த வியர்வையோடு, அவமானத்தின் இருளோடிய கண்க ளோடு ராமுடு தலை நிமிர்ந்தார். அந்த உணர்ச்சியை அந்திரயேவ் பெட்ரோவிச் புரிந்துகொண்டார்.

“நீங்கள் அதைப் பற்றி அவமானப்படு கிறீர்களோ? நோ… நோ..! தெ செர்வ் தி சிவிலைசேஷன், அண்ட் ஆஃப்டர் ஆல் வி செர்வ் தெம்! அவர்கள் நாகரிகத்திற்காக உழைக்கிறார்கள். நாமோ, அவர்களுக்காக சேவகம் செய்கிறோம். உழைப்புதான் பெருமை; நாம் செய்யும் தொழிலல்ல! காந்திஜியே சொல்லியிருக்கிறாரே, ‘செருப்புத் தைக்கும் தொழிலாளியும், வக்கீலும் சமூகத்திற்குச் சேவகம் செய்கிறார்கள். எனவே, இருவருக்கும் எந்த அளவிலும் வித்தியாசமில்லை’ என்று!”

ஜி.வி.ராமுடு ஐ.ஏ.எஸ். ஸ்தம்பித்து நின்றார். அவருடைய உள்ளத்திலிருந்து எந்தக் குப்பையையோ அவர் வெளியே வாரிப் போடவேண்டியிருப்பதுபோல் அவருக்குத் தோன்றிற்று. அந்தக் குப்பைதான் இத்தனை நாளும் மக்கி மக்கி நினைவுகளிலெல்லாம் துர்நாற்றமடித்து, தெளிவானதும், உயர்ந்ததுமான சமூக வாழ்க்கையைப் பெருமையோடு ஏற்று, மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு குறுக்கே நின்றது.

‘அவர்கள் நாகரிகத்திற்குச் சேவை செய்கிறார்கள்; நாமோ அவர்களுக்குச் சேவகம் செய்கிறோம்’ என்ற அந்திரயேவ் பெட்ரோவிச்சின் வார்த்தை, ராமுடுவின் எண்ணங்களின் உள்ளே ஆழமாக இறங்கிக் கொண்டிருந்தது. அவர் தன் மனக்குப்பையை வாரி விடுவார். ஒரேயடியாக – சீக்கிரமாக இல்லாவிட்டாலும், மெதுவாக… கொஞ்சங் கொஞ்சமாக..!

– ஏப்ரல், 1963

1 thought on “மிஸ்டர் ராமுடு ஐ.ஏ.எஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *