மினுங்கும் தாரகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 9,138 
 

நலம் விரும்பி நல்ல சாமி விருவிருவென்று போய்க் கொண்டிருந்தார் தாலுகா அலுவலகம் நோக்கி.

ஏம்வே இன்னிக்கு யாரப்பத்தி கோள் மூட்டி உடப் போறீறு.

அடி பைப்பில் தண்ணீர் பிடிக்க வந்த சின்னத்தாயியின் குரலைக் கேட்டும் கேட்காததுபோல் ஓடிக் கொண்டிருந்தார் அவர். சின்னத்தாயி குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு தன் தோழி கௌரியிடம் பேசிக்கொண்டேவீடு நோக்கி நடக்கலானாள்.

போய் தான் உல வைக்கணும். வீட்ல சொட்டு தண்ணியில்ல. யார் சொன்ன பேச்ச கேக்கறாங்க. நான்தான் ஒத்தேல கிடந்து மாரடிக்கவேண்டிக் கிடக்கு,

பாதையெங்கும் உடை முள் மரங்கள் நிறைந்திருந்ததால் காலில் குத்திய முள்ளைத் தூக்கி வீசி விட்டு

எருக்கஞ் செடிக்கு ஒரு பஞ்சமில்ல இந்த ஊருல. எங்கெல்லாம் முள்ளுச் செடி இருக்கோ அங்க இதுவும் இருக்கு. பிள்ளயயும் கிள்ளிவிட்டு பிறவு தொட்டிலயும் ஆட்டின மாதிரி

சொல்லிக் கொண்டே எருக்க இலையை ஒடித்து அதன் காம்பில் வடியும் பாலை முள் குத்திய இடத்தில் தேய்த்து விட்டு வீட்டை நோக்கி நடக்கலானாள்..

அவளின் மகன் செந்தில் பக்கத்து ஊரிலிருந்த சட்டக் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவன். மகள் மீனாட்சியோ பாப்பாங்குளத்துக்கு பதினெட்டு வயதிலேயே வாக்கப்பட்டுப் போய்விட்டாள்.

வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கும் பாப்பாத்தி பாட்டி தான் சின்னத் தாயியின் மாமியார். ஒரு காலத்துல சீரும் செழிப்புமாக இருந்த ஊர் அது. அப்போது அவளின் குடும்பம் பண்ணையார்க் குடும்பம். அந்த நாளில் காரை (கான்கிரீட் கட்டிடம்) வீடு கிடையாது. எல்லாமே மண் வீடு தான். பாப்பாத்திப் பாட்டிக்கு திருமணம் ஆகும்போது வயது பத்து. அவளின் அப்பா சுத்து வட்டார எட்டு ஊர்ப் பண்ணையாரையும் கூப்பிட்டு ஊரடைத்து பந்தல் போட்டு அவளின் திருமணத்தை நடத்தினார்.

திருமணத்திற்குச் சீராக அவளுக்கு ஒரு பனங்காடும், பத்து பசு மாடுகளும், வெள்ளாடுகளும் கொடுக்கப்பட்டன. ஆறு அண்ணன் தம்பிகளுக்கிடையில் அவள் ஒருத்தி தான் பெண் குழந்தை என்பதால் அம்மாவின் நூறு களஞ்சி நகைகளும் அவளுக்கே சீராகக் கொடுக்கப்பட்டது.

மொத்தம் அந்த ஊரில் நூறு நூற்றைம்பது வீடுகள் தேரும் அவ்வளவுதான். அனைவரும் உடலுழைப்பையே நம்பி வாழ்பவர்கள். பெரும்பாலானவர்கள் குடியானவர்களாக இருந்தாலும் ஒரு சிலர் மண்பாண்டம் செய்யும் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

இருபது வருடத்திற்கு முன்னால் பள்ளிக்கூடம் வந்த பிறகு தான் கான்கிரீட் கட்டிடங்கள் முளைக்க ஆரம்பித்தன. வாசலில் உட்கார்ந்திருக்கும் ஆச்சியிடம் போவோரும் வருவோரும் ஏதாவது பேசிவிட்டுத்தான் செல்ல வேண்டும். இடித்து வெற்றிலை சீவல் பாக்கை வாயிலில் போட்டுக்கோண்டே அனைவரிடமும் பேச்சு கொடுப்பாள்.

போறது யாரு ?

மாடத்தி மவன். பதில் சொன்னான் சென் என தன் பெயரைச் சுருக்கி வைத்திருக்கும் செங்கையன்.

சீமைல இருக்க னு சொன்னாங்க. குழாய் டவுசர் மாட்டிட்டு வராம பண்டாரம் கணக்க இதென்னப்பா கோலம்.

வெண்மை நிற பைசாமா குர்தா அணிந்து தோளில் காவி நிற சோல்னா பையுடன் நடந்து கொண்டிருந்தார் ஓவியர் சென்

என்னம்போ இந்தகாலத்துல புள்ளங்க படிச்சிபோட்டு பெத்ததுவ பேச்ச கேக்காம சுத்துது.

மாடத்திக்கு என்ன கொறச்ச. அவ புருசன் அரசாங்க வேலக்காரன். ஒரு சொல்லு அதுந்து சொல்ல மாட்டான். அவ வயக்காட்டுல பாடுபாத்து சம்பாதிக்க காசு பூரா நக நட்டுன்னு வாங்குதாளாம். இப்போகூட தேர்வடம் கணக்கா ஏழு பவுனுல தாலிக்கயிறு பொறவு அது கூட சோடிக்கு மூணு வடம் மொகப்பு வச்ச சங்கிலியும் தெனக்கும் போட்டுருக்காளமே. ஆச்சிக்கு தன் மருமகள் சொன்ன தகவல் ஞாபகம் வந்தது.

முன்னால் ஆட்கள் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆச்சி தானே பேசிக்கொண்டேயிருப்பாள். ஆச்சிக்கு அவள் மருமகளின் மீது அபரிதமான மரியாதை.

மச்சு ஊட்டுக்கு மகாராணியா இருக்க வேண்டியவ

இப்பங் குச்சு ஊட்டுல கெடந்து சீரளியிதாளே

ஒத்த சங்கிலியோட இப்டி ஊர் முளுக்க சுத்துதாளே.

எத்தனை முறை சின்னத்தாயி பதில் கூறினாலும் அது அவளின் காதுகளுக்கு எட்டாது.

அத்த. வருத்தப்படாதீங்க. இல்லாமையா நா இப்டி சுத்துதேன். வீட்டு ஆம்பள படிச்சவரு. பள்ளியூடத்து எட்மாஸ்டரு. அதான் காதுல வெள்ளக் கல்லுத் தோடும், மூக்குல எட்டுக்கல்லு பேஸ்திரியும் போட்டிருக்கேன்ல. போதாதா. தினப்படிக்கு இதுக்கு மேல போட்டா நல்லாவா இருக்கும்.

உங்களோட தெனெக்கும் கரச்சலால (தொல்லையாக) இருக்கு. தெருவோட போறவங்களுக்கெல்லாம் கேக்குதாப்புல பொலம்புதீங்களே. அப்புறம் நம்மள பாத்து ஊர் சிரிக்காது.

அவளுக்கு நன்றாகத் தெரியும் ஆச்சிக்கு ஊரில் எவ்வளவு மரியாதை என்று. இருந்தாலும் அந்நேரத்தில் புலம்பலை நிறுத்த யுக்தி.

தான் அனுபவித்த அனைத்து வசதிகளையும் தன் மருகளுக்குக் கொடுக்க முடியவில்லையே என்பதுதான் ஆச்சியின் ஒரே மனக்குறை. யோசிக்கும்போதெல்லாம் பாட்டு தானாக வரும்.

குளத்து மண்ண எடுத்து பித்தாளக்

குடத்த தேச்ச பின்ன

கழுத்து சங்கிலிய கழட்டி தேப்பேனே

நெளி வளவி ஆறும் நெளிஞ்சி போச்சுதுன்னு

புது வளவி கேட்டு ….

எம்புட்டு நக வச்சிருந்தேன். அத்தனையும் போச்சே. பாழாப்போன செருக்கி ஆள மயக்கி அள்ளிட்டு போயிட்டா.

நினைவுகள் திசை திரும்பின.

பத்து வயதில் திருமணம். தான் பிறந்து வளர்ந்த ஊரான பாப்பாங்குளத்தை விட்டு வரவே மனம் வராமல் புக்ககம்(திருவேங்கடபுரம்) வந்த பாப்பாத்திக்கு அந்த இடம் சிறிது நாட்களிலேயே பழகிவிட்டது.

அவளின் கணவரும் அவ்வூர்ப் பண்ணையாரின் ஒரே வாரிசுமான அய்யாவு படிப்பிற்காக பட்டணத்திற்குச் சென்றுவிடவே அனைவரின் முழுக்கவனமும் பாப்பாத்திக்குத் தான்.

வீடு கூட்டுவதிலிருந்து, சோறு பொங்குவது வரை அனைத்திற்கும் வேலையாட்கள் இருந்தும் அவளின் மாமியார்

உக்காந்து தின்னா ஒடம்பு உட்டுப் போயிடும்

ஓடியாடி வேல செஞ்சாதான் கெதியா இருக்க முடியும்

எனச் சொல்லிக் கொண்டே சிறிய சிறிய வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.

பெரிய பண்ணையாரின் ஆணைப்படி பணிப்பெண் நாச்சியார் எப்போதும் பாப்பாத்தி கூடவே இருந்தார்.

காலையில் எழுந்தவுடன் அந்த ஊரிலிருந்த பெரிய குளத்தில் நீச்சல் பயிற்சி.

குளம் எனச் சொல்லப்பட்டாலும் அதன் பரப்பளவு ஊரில் பாதி என்பதால் கடல் போன்று அலைகளுடன் காணப்படும்.

ஊர் மக்கள் குளிக்க , துணிகள்துவைக்க வேப்பமரப் படித்துறை, அரச மரப் படித்துறை, ஆல மரப் படித்துறை என மூன்று பொதுப் படித்துறைகள்.

நாச்சியார் கூட்டிச் செல்வது பண்ணைப் படித்துறை. அது பண்ணையார் குடும்பத்தவரின் உபயோகத்திற்கு மட்டுமே.

தலை முடியை சாம்பிராணிப் புகை போட்டு காய வைத்த பின் ராக்கொடி வைத்து சடை பின்னி பூ சூட்டி விடுவாள். குஞ்சலம் வைத்த நீளமான பின்னலில் தங்கத்தில் செய்த நாகொத்து அல்லது பின்னப்பூ சொருகிவிடுவாள்.

பாப்பாத்திக்கு அந்நாளில் ஒரே ஒரு சங்கடம் தான். எந்த நகையையும் வேண்டாம் எனச் சொல்ல முடியாது.

வீட்டுக்கு வந்த மகாலச்சுமி நீ இப்டிதான் இருக்கணும். மாமியாரிடமிருந்து பதில் வரும்.

கைவள , நெளி மோதிரம், ஒட்டியாணம், கால் கொலுசு, மெட்டி , கொத்துச் சங்கிலி எல்லான் சரியா இருக்கு. தெனக்கும் போடணும் புரிஞ்சிதா.

வெள்ளிக்கிழமையென்றால் அமர்க்களம் அதிகம் தான்.

நாச்சியா….. சுருளங்கிட்ட வண்டிமாட்டோட மதியத்துக்கு மேல வரச் சொல்லு. மருமகள குறிச்சி பகவதியம்மங் கொயில் கூட்டிட்டுப்போகணும். அப்டியே கோயிலுக்கு கொண்டு போக மாலயும், வீட்டு சீதேவிக்கு பின்னல்ல வச்சு கட்டுததுக்கு தாழம்பூ இல்லன்னா பிச்சி அரும்பு கொண்டு வரச் சொல்லு.

பூ தைக்கும் நாச்சியாருக்கு பொருமை இருந்தாலும் பாப்பாத்திக்கு ஒவ்வொரு முறையும் எரிச்சல் தான் வரும். அந்த ஊரிலேயே பண்ணையார் வீடுதான் மிகப்பெரியது.

அது மற்றவீடுகள் போல் மண்ணால் கட்டப்பட்டது அல்ல.

உள் நுழைந்தவுடன் நடைவாயில், பின் வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் நிறைந்த தாழ்வாரம் , அதற்கு அடுத்தார்ப் போல் காற்றோட்டமான ஊஞ்சல் போடப்பட்ட நீண்ட கொட்டில். கொட்டிலின் மேற்புரத்தில் தான் அடுப்பு எரிக்கத் தேவையான விறகுகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். பின்புறம் பசு மாடுகளும், எருமை மாடுகளுக்கும் கட்டி வைக்கப் பட்டிருக்கும் மாட்டுக் கொட்டில்கள். பக்கவாட்டில் மாமியாரால் வளர்க்கப்பட்ட பூச்செடிகள் நிறைந்த நந்தவனம்.

பின்புறமுள்ள வெட்ட வெளியில் சிறு சிறு குன்றுகள் போல் வைக்கல் போர்கள். பெரிய பரப்பில் நெல் காயப் போடப் பட்டிருக்கும் . பின் தானியக் கிடங்கு, அதை அடுத்தாற் போல் ரைஸ் மில். ரைஸ் மில்லை அடுத்த பெரிய சமயல் கூடத்தில் கல்யாண சமயல் போல் பெரிய பாத்திரங்களில் பண்ணையாட்களுக்குத் தேவையான சாப்பாடுகள் நாள் முழுவதும் தயாராகும்.

பாப்பாத்திக்கு பிடித்த அறை மாடியறை தான். அங்குதான் எந்தத் தொந்தரவும் இல்லாமல் அமைதியாக விளையாடலாம். பண்ணை வேலை செய்பவர்களின் குழந்தைகள் தான் அவளின் தோழிகள். அவர்களுள் நெருக்கமான தோழி எசக்கி என அழைக்கப்படும் இசக்கி. எசக்கி எப்போதாவது தான் அவளின் மண் குடிசைக்குப் போவாள். பெரும்பாலும் அவளின் பொழுது பண்ணை வீட்டிலேயே கழியும்.

அவளுடன் மாடியில் காயப் போடப்பட்டிருக்கும் நெல்லில் பாண்டிக் கட்டம் வரைந்து அதில் நொண்டியடித்து விளையாடுவதில் ஒரு மகிழ்ச்சி. யாராவது வேலையாள் பார்த்துவிட்டால் எசக்கிக்கு தான் திட்டு விழும்.

ஏ புள்ள எசக்கி அவிச்சு போட்ட நெல்லுல என்ன ஆட்டம் வேண்டிக்கெடக்கு. அம்புட்டும் வம்பா போயிடும்.

புடம் போட்டு தொங்குத வாழத் தார்லேந்து ரெண்டு பழத்த பிச்சி தின்னுட்டு தாவாரத்துல உக்காந்து மேனிஅலுங்காம ஏழு கல்லு ஆட்டம் ஆடுங்கம்மா. இரண்டு பேரும் ஓட்டம் எடுப்பார்கள்.

ரொம்ப நாளு இந்த ஆட்டம் தாங்காதும்மா. இது நீங்க தாலி முடிச்சி வந்த எடம். நெனப்புல வச்சி நடந்துகிடுங்க நாச்சியாரின் அன்பான வசவுகள் தேடி வந்து கிடைக்கும்.

சில நாட்களிலேயே வாழ்க்கை திசை மாறியது.

அய்யாவுப் பண்ணையார் படிப்பை முடித்து வீடு திரும்பியவுடன் முழுப்பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த ஊரின் முக்கால் வாசி விளை நிலங்கள் பண்ணையாருக்கே சொந்தமாக இருந்தது. அந்த ஊர் மக்கள் அந் நிலங்களில் உழைத்து பயிர்விளைவித்து அதற்குரிய கூலி பெற்று வந்தனர். அவர்களின் பொருளாதாரநிலையை மாற்றினால் தான் ஊர் முன்னேறும் என எண்ணினார் அய்யாவு.

அய்யாவுவின் தந்தை படிக்காதவர் என்றாலும் பரந்த மனம் படைத்தவர். படித்துவிட்டு வந்திருக்கும் தன் மகனைப் பெரிதும் நம்பினார். அவர் செய்ய விரும்பிய மாற்றங்களை ஏற்றார். அதன்படி அனைவரையும் அழைத்து

எம் மவன் சின்னப் பண்ணையார் பட்டணத்துல படிச்சி போட்டு வந்து ஊருக்கு நல்லது செய்யணும்னு நெனைக்காரு. அதோட முதப் படியா

நீங்க வெள்ளாம பாக்க நெலத்துல வெளஞ்ச நெல்லுல ஒரு கோட்ட அதாவது இருபத்தோறு மரக்கால் பண்ணவீட்டுக்கு அளந்து கொடுத்தாப் போதும். மீதி நெல்லு வித்து வந்த காச உங்க குடும்பத்த முன்னேத்துரதுக்கு உபயோகிச்சிக்கிங்க.இனி யாரும் பண்ண வீட்ல தங்கி வேல பாக்கணுங்கறதில்ல.

அனைவரும் மவராசன் என அய்யாவுவை வணங்கிச் சென்றார்.

அடுத்த கட்டமாக பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். அதற்காக வஞ்சிக் குறிச்சிக்குச் சென்று விண்ணப்பம் கொடுக்கத் தீர்மானித்தார். தாலுகா அலுவலகம் சென்ற போது தான் தெரிந்தது தன் ஊர் முன்னேறாததற்கான காரணம்.

திருவேங்கடபுரம் உட்பட சுற்றுப்பட்டு ஏழு கிராமங்களும் வஞ்சிக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்டவை. அருகிலிருந்த டவுணில் புதிதாக ஆரம்பித்திருக்கும் துணி மற்றும் நகைக் கடைகளில் எடுபிடி வேலை செய்யத் தேவையான ஆட்களை வண்டி வைத்து தினமும் இக்கிராமங்களிலிருந்துதான் கூட்டிச் செல்வார்கள்..

பள்ளிக்குச்சென்று படிக்கும் வயதில் சின்னஞ் சிரார்கள் இப்படிவேலை செய்வது பொறுக்காமல் தான் தன் கிராமத்திலேயே பள்ளிக்கூடம் கட்டத் தீர்மானித்தார் அய்யாவு. தாலுகா அலுவலகத்திலிருந்த அதிகாரி பேசிய விதம் அதிர்ச்சியை அளித்தது.

உம்ம புள்ளய படிக்க வைக்கரதா இருந்தா டவுணுக்கு அனுப்பி படிக்க வையும். ஊரப் பத்தி உமக்கு ஏன் இவ்வளவு அக்கறை. அதுக்குதான் அரசாங்கம் இருக்குல்ல.

பிறகு அங்கிருந்த வேண்டப்பட்ட நபர்அய்யாவு பண்ணையாருக்கு அறிவுரை கூற ஆரம்பித்தார்..

பய புள்ளய படிச்சுப் போட்டானுவ ன்னா நாயம் பேச ஆரம்பிச்சிடுவானுக இல்ல. நம்ம ஊரு பயலுக மாதிரி உழப்பாளி எங்க கெடைப்பான்.. ரெண்டு வேள சோறு போட்டா போதும் சொணங்காம வேல பாப்பானுவ. முதலாளிக வெசனப் படுதாங்கப்பா. நீ ஏதும் பேசப் போய் அந்த பயலுவ பொழப்புல மண்ணு உளுந்திச்சி. ஊரே ஒன்ன வையும். பாத்துக்க.

அய்யாவு கோபத்துடன்

ஏன் இம்புட்டு நாளும் சோறு எங்கேந்து வந்திச்சாம். காலங்காலமா குடும்பத்தோட வயலுல தானே பாடுபாப்பாங்க. இந்த மொதலாளிங்க விளையற பயிருக்கு இடையில முளக்க ஆரம்பிச்சிருக்கிற கள மாதிரி. சரியா எடுத்துச் சொன்னா சீக்கிரமே புடுங்கி எறிஞ்சிரலாம்..

பண்ணையாரின் வேலைகள்அதிகமாயின. பள்ளிக்கூடத்தைத் தவிர இப்போது மற்ற பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும்.

அய்யாவுவின் ஒரே எண்ணம். வளமிக்க அந்த பூமியை பண முதலைகளிடமிருந்து காப்பாற்றி அனைவருக்கும் படிப்பறிவுகொடுக்க வேண்டும் என்பதுதான்.

வஞ்சிக் குறிச்சியில் கொடுத்த விண்ணப்பம் ஒருமாதமாகியும் பரிசீலிக்கப்படாமல் கிடப்பிலேயே போட்டிருப்பதைக் கண்டு மாவட்ட வட்டாட்சியரிடம் மேல் முறையீட்டு மனு கொடுத்தார். மாவட்ட வட்டாட்சியர் அவரை நேரில் அழைத்த அன்றைய தினம் திருவேங்கட புரமே அமர்க்களப் பட்டது.

ஊர்க்காரர் விசயத்தைப் பாப்பாத்தியிடம் கூறவே அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஒன்றுவிட்ட ஓரகத்தி பொன்னுத்தாயியின் உதவியுடன் பிள்ளையார் கோவில் மரத்தடியில் ஊர்ப்பெண்களின் பொதுக்கூட்டத்தைக் கூட்டி ஒப்பாரி வைக்கத்தொடங்கினாள்.

யாத்தா நா இப்படி செய்வாரு னு நெனைக்கலியே..

படிச்ச குமரி கூப்பிட்டா னு அவிச்சுவைச்ச இட்லிய கூடத்

திங்காம ஓடிப் போயிட்டாகளே. நான் என்னத்த.. கண்டேன்.

எங்கயும் காங்காம (காணாம) போயிட்டா என்னயும் இந்தப் புள்ளயையும் யாரு பாப்பா.

கூட்டத்து மகளிரனைவரும் ஆதரவாகப் பேசினர். செருக்கி மவள வாரியலெடுத்து அடி. பேதீல போவா… வசவுகள் தொடர்ந்தன. சிறிய பையனான நல்லசாமி அனைத்தையும் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தான்.

யே அத்தைகளா….

உங்க ஊரு ஆம்பிளய திட்ட மாட்டீகளாக்கும். இந்த திட்டு திட்டுதீங்களே அவுங்க மாவட்ட ஆட்சித் தலைவர் சுசீலா அம்மையார். இந்த ஊரு வெளங்கின மாதிரிதான்.

சற்று முன் விளையாடியபோது தான் தொலைத்த கோலிக்காயைத் தேட வந்த நல்லசாமி அங்கு மேலும் நிற்க மனமில்லாமல் டிரவுசர் பாக்கெட்டில் கை விட்டு மீதமிருந்த கோலிக்காய்களைக் குலுக்கிகொண்டே சென்றான்.

மாவட்ட ஆட்சித்தலைவர் பள்ளிக்கூடம் கட்ட அனுமதி அளிப்பதாகவும், ஆனால் அரசாங்கத்தால் நிலம் மட்டுமே ஒதுக்கமுடியும் என்பதால் கட்டிடச்செலவை ஊர்க்காரர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டார். பண்ணையார் ஊர் மக்களிடம் பணம் கேட்க விரும்பாததால் வீட்டு நகைகளை அடமானம் வைக்கத் தீர்மானித்தார். .

வீட்டுப் பெண்களிடம் கலந்தாலோசிக்கும் பழக்கம் அக்கிராமத்தில் இல்லாததால் மனைவியின் தந்தையிடம் மட்டும் அனுமதி கேட்ட பின் பாப்பாத்தி அணிந்திருந்தது தவிர அனைத்து நகைகளும் டவுண் சேட்டின் உதவியுடன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டு கட்டிடங்கள் எழுந்தன.

முதலில் ஆறாம் வகுப்பு வரை தொடங்கப்பட்ட அப்பள்ளி மெதுவாக உயர் நிலைபள்ளியாகி பின் மேல் நிலைப் பள்ளியாகியது. பள்ளிக்கு பாப்பாத்தியம்மாள் அரசினர் உயர்நிலைப் பள்ளி என்றே பெயர் வைக்கப் பட்டிருந்தது,.

அலுவலக அறையின் உட்புறம் அவளின் புகைப்படம் வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து டவுண் போட்டோ ஸ்டூடியோவில் அவளின் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதுவே பேருந்தில் அவளின் முதல் மற்றும் கடைசி முறைப் பயணம். அய்யாவு உடன் வந்திருந்ததால் கூட வந்த நல்லசாமியிடம் எதுவும் கேட்கமுடியவில்லை.

அவர் எங்கு போனாலும் பள்ளி மாணவனான நல்லசாமியை உடன் அழைத்துக் கொண்டு தான் செல்வார்.. ஊருக்கு எப்படியெல்லாம் நன்மைசெய்ய வேண்டும் என்று தினமும் அறிவுரை. தனது மகனான தங்க துரை ஒன்றாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்ததால் அவனுக்குச் சொல்ல நினைத்ததெல்லாம் கடைசியில் நல்லசாமிக்கே கிடைக்கும்.

டவுணுக்குச் சென்று வந்த பாப்பாத்தி தன்னைச் சுற்றி ஏதோ சூது நடக்கிறது என யூகித்து தோட்டத்தில் வேலை பார்க்கும் பழனி மூலம்-அடுத்த ஊரிலிருந்த தந்தைக்குச் செய்தி அனுப்பினாள். அவசரமாகக் கிளம்பி வந்த தந்தையை அய்யாவு நிதானமாக வரவேற்பதைப்பார்த்தவுடன் அவருக்குப் புரிந்துவிட்டது.

ஒண்ணுமில்ல இந்தப் பக்கமா ஒரு சோலியாபோயிட்டிருந்தேன். களுத புள்ளய ஒரு மட்டம் பாத்துட்டுபோயிடலாமேன்னு…… நீங்க ஒங்க வேலையப் பாக்கப் போங்க.

சொல்லிவிட்டு மாப்பிள்ளை அய்யாவு போனவுடன் பாப்பாத்திகுடுத்த காபியைக் குடித்துக் கொண்டே.

இந்த பாரு புள்ள இனிமே இந்தச் சோலி வச்சிக்கிடாத மாப்ள படிச்சவரு. நல்லவரு. எத செஞ்சாலும் ஆஞ்சு (ஆய்ந்து)அறிஞ்சு (அறிந்து) தான் செய்வாரு. ஒங்க மாமனாரு போனப்புறம் வயக்காடு , பள்ளிக்கூடம் ரெண்டையும் பாக்க வேண்டியதிருக்கு. நீ உம்பாட்டுக்கு உல வச்சு பொங்கி தின்னு குடும்பத்த நல்லபடியா பாத்துக்க. எதும் வம்பு தும்பு வச்சிக்கிட்ட னு கேள்விப்பட்டேன் வெட்டிப் போட்டுருவேன் ஆமாம்.

சொல்லிவிட்டு மீசையை முறுக்கிக் கொண்டு நின்ற அப்பாவிடம் திருநீறு டப்பாவைக்கொடுத்து மூக்கைப் மூடியது போல் வலது கையை வைத்துக்கொண்டு குனிந்து நின்றாள்.

என்னப் பெத்த தாயி நீயும் உங்குலமும் நல்லா இருக்கணும் ஆசிர்வாதம் செய்து கொண்டே நெற்றியில் திருநீறு பூசிவிட்டார் அவளின் அப்பா.

தெருமுக்கு திரும்பும் வரை பார்த்துக்கொண்டே நின்ற பாப்பாத்தி மீண்டும் தன் புலம்பலைத் தொடங்கினாள்.

செருக்கிமவ என்ன குலமோ என்ன கிளையோ என் வீட்டு ஆம்பளய மயக்கி நக நட்டெல்லாம் புடுங்கிட்டு இரும்புச் சிலையா நின்ன எங்கப்பனையும் இல்ல சாச்சுப்புட்டா இத கேக்க இந்த ஊர்ல நாதியில்லயா.

ஏன் ஆத்தா.. பள்ளியூடத்துல இன்னிக்கு விழாவாமே நீ போகல. கேட்டுக் கொண்டே நடந்தான் மாடசாமி.

அவளின் புலம்பல் அதிகரித்தது.

அதென்ன எளவோ. எனக்கு வினையால முடிஞ்சுபோச்சு. அத கட்டின அன்னிலேர்ந்து அந்த பொம்பளய இளுத்துகிட்டு இல்ல சுத்துறாக. அந்த திச பக்கங்கூட நான் தல வச்சு படுக்க மாட்டேன் சாமி.

தன் கணவன் என்ன செய்கிறான் என்பதை உணராமலேயே சதா சர்வ காலமும் அவளின் புலம்பல் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அய்யாவு அவளிடம் எடுத்துக் கூறியும் அவள் நம்பத் தயாராக இல்லை. தன் நகைகளைத் அந்தப் பெண்ணிடம் உள்ள தவறான தொடர்பிற்காக உபயோகப் படுத்தியதாக குற்றம் சாட்டிப் பேசிக் கொண்டேயிருந்தாள்-மழையும் பொய்த்துப் போனதால் விளைச்சல் குறைவின் காரணமாக அடகு வைத்த எல்லா நகைகளையும் உடனே மீட்க முடியவில்லை.. ஊர் முன்னேற்றம் என்று கூறிக் கொண்டு உள்ளே நுழைந்த பண முதலைகளை குறு விவசாயிகள் நம்பத் தொடங்கினர். முன்பெல்லாம் அவர்களுக்கு விளைச்சல் சரியில்லையெனில் சாப்பாட்டிற்காக தன் நிலத்திலிருந்து நெல்லைப் பண்ணையார் கொடுப்பார்.

பண்ணையார் நிலத்தின் கிணறுகள் என்றுமே வற்றாதவை. வெயில் காலங்களில் மட்டும் ஊர் மக்கள் குடிநீர் எடுப்பதற்காக அங்கு வருவர். அது மொட்டைக் கிணறு (சுற்றுச் சுவரில்லாத) என்பதால் நீர் இறைப்பதற்கு தனித் திறமைவேண்டும். உள்ளே விழுந்து விடாமல் வெளிப்புறம் நின்று கொண்டு இருகைகளையும் மேலும் கீழும் ஏற்றி இறக்கி உள்ளே விட்ட கயிறை இழுத்து நீர் இறைக்க வேண்டும். மேற்புறம் திறக்கப்பட்ட டின்களில் கயிறு கட்டி நீர் இறைப்பார்கள். மற்ற நாட்களில் குடிநீருக்கெனவே வெட்டப்பட்ட சுற்றுச் சுவர் கொண்ட கிணறுகள் உபயோகிக்கப்படும். அதுவும் குளத்து நீர் வற்றியிருக்கும் காலங்களில் அதனுள் இருக்கும் ஊருணி கிணறுகள் ( ஊற்று நீர்க் கிணறுகள்) குடி நீருக்கு பிரசித்திபெற்றவை.

அந்த ஊர் எல்லையில் இருந்த பெரிய குளம் நிரம்பி ஐம்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. சிறிய குளத்தில் மட்டும் மழை அதிகம் பெய்த காலங்களில் தாமிரபரணி ஆற்றுத்தண்ணீர் சிற்றாறு மற்றும் வாய்க்கால்கள் மூலம் பயணித்து வந்து சேரும். பாப்பாத்திக்கு நினைவுதெரிந்து அவளின் ஒரே மகன் திருமணத்தின் போது தான் அந்த சிறிய குளம் நிரம்பி வழிந்தது. மகன் திருமணத்தின் போது மருமகளுக்கு போட நகைகள் இல்லாமல் போய்விடும் என

அவள் வருந்தியதால் அடகு வைத்ததில் பாதி நகையை விற்று வந்த பணத்தைக் கொண்டு மீதி நகையை மீட்டார் அய்யாவு.

அந்த ஊரில் முளைத்த முதல் கான்கிரீட் கட்டிடம் பள்ளிக்கூடம் தான். அதன் பிறகு மெதுவாக மற்ற கட்டிடங்கள் வர ஆரம்பித்தன. மண்ணால் கட்டப்பட்ட வீடுகளை வருடாவருடம் பராமரிக்க வேண்டிவந்ததால் மக்கள் பணம் சேமித்து நிரந்தரக் கட்டிடங்களைக் கட்ட ஆரம்பித்தார்கள். செங்கல் சூளைகள் வர ஆரம்பித்தன. மண் பாண்டம் விற்றுப் பிழைத்தவர்கள் செங்கல் சூளைகளில் வேலைக்குச் சேர்ந்தனர். சமைப்பதற்கு மண் பாண்டங்கள் இல்லாமையால் மக்கள் டவுண் கடையிலிருந்து ஸ்டீல் பாத்திரங்கள் வாங்க ஆரம்பித்தனர்.

முதலில் எல்லா மாற்றங்களும் நன்றாகத்தான் இருந்தன. நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளுடன் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டபோது நகரங்களின் இட நெருக்கடி காரணமாக கிராமங்களை முற்றுகையிட ஆரம்பித்தது அரசாங்கம். திருவேங்கடபுரத்தில் மக்கள் குடியிருப்பு குறைவாகஇருந்ததாலும் புறம்போக்கு நிலம் அதிகமாக இருந்ததாலும் சிமெண்ட் தொழிற்சாலைக்காக இங்கு இடம் ஒதுக்கப்பட்டது.

பாப்பாத்தியின் மகன் தங்க துரை தன் பள்ளிப் படிப்பை முடித்திருந்த காலம் அது. அந்த ஊர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் கல்லூரிக்காக முப்பது கிலோமீட்டர் பயணம் செய்து டவுணுக்கு தான் போக வேண்டும். அங்கு படிக்கச் சென்ற இளைஞர்கள் நாகரிக முன்னேற்றம் எனக்கருதி தங்கள் தோற்றத்தையே மாற்றிகொள்ள ஆரம்பித்தனர். இம்மாற்றத்தைச் சிலர் வரவேற்றாலும் பெரும்பாலானோர் எதிர்த்தனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பண முதலைகளின் இடைத்தரகர்களாக இருந்த முக்கண்ணனும் அவன் கூட்டாளியும் ஊருக்குள் வதந்தியைக் கிளப்பி விட்டனர்.

ஊரில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டால் ஊர் விழித்துக் கொள்ளும். பின் அவர்களின் பிழைப்பில் மண் தான். வதந்தியின் விளைவு ஊர்ப் பெரிசுகள் டீக் கடைகளிலும் ஊர்ப் பொது மரத்தடியிலும் கூடிப் பேச ஆரம்பித்தனர். பல கதைகள் உருப்பெற்றன.

படிக்கப் போன ஆம்பிள புள்ளங்கள மோகினி பிசாசு கணக்கா (மாதிரி) இருக்க டவுண் பொம்பள பிள்ளங்க வசியம் வச்சுறுதாங்களாம். அதனால தான் வேப்பெண்ண வச்சி உச்சி வகுடு எடுத்து தல சீவி நடந்த பையனுவ எல்லாம் இப்போ பரட்ட மாதிரி எண்ண இல்லாம காஞ்ச தலயோட கோண வகுடு எடுத்து சீவிட்டு அலயறானுக.

வதந்தியை நம்பி பெரும்பாலானோர் கல்லூரிக்கு அனுப்பவில்லை. பண்ணையார் மனம் மிகவும் சஞ்சலப்பட்டது. என்ன செய்தும் இவ்வூர்மக்களைத் திருத்த முடியவில்லையே என்று. புதியதாக உருவாகியிருக்கும் தொழிற்சாலைகள் அந்த இளைஞர்களின் உழைப்பை சூறையாட ஆரம்பித்தன.

முக்கண்ணனின் வருமானம் எளிதானது, டவுண் முதலாளிகளிடமிருந்தும் , தொழிற்சாலை அதிகாரிகளிடமிருந்தும் உழைக்காமலேயே இளைஞர்களை வேலைக்குச் சேர்த்துவிட்டதால் கிடைத்தது.

இதற்கிடையில் அரசியல் தலையீடும் ஏற்படவே சாதிக்காக சண்டையிட்ட காலம் போய் ஊருக்குள்ளேயே தொண்டர்படை அமைப்புகள் உருவாயின. அவர்கள் வாக்குச் சேமிப்பிற்காக மக்களுக்கு சிறு சிறு இனாம்கள் கொடுத்து பழக்கி விட்டனர்.

இவையனைத்துக்கும் காரணம் உழைக்காமல் எளிதில் சம்பாதித்துகாலம் தள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது தான். விவசாயம் குறைந்ததால் அவர்களின் விளைச்சல் அன்றாட வீட்டுச் செலவுக்கே பயன்பட்டது. பண்ணையாரும் ஊர் நற்பணிக்காக சிறிது சிறிதாக தம் சொத்துக்களை இழந்தார்.

தங்க துரை படிப்பை முடித்து அவ்வூர் பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

பள்ளி ஆரம்பித்த காலத்திலிருந்தே தலைமை ஆசிரியர் பொறுப்பை சிறப்பாக வகித்து வந்த முகம்மது காசிம் ஓய்வு எடுத்துக்கொண்டு ஹஜ் யாத்திரை செல்ல விரும்பியதால் தங்கதுரைக்கு அப்பதவி கொடுக்கப்பட்டது. தங்கதுரை சிறிய வயதில் பெரும்பாலும் அவர்கள் வீட்டில்தான் விளையாடுவான். மசூதித் தெருவிலிருந்த அவர்களின் வீட்டருகே அவரின் மகள் ரோசன்னாரா பேகத்துடன் தினமும் சைக்கிள் டயரை ஓட்டி விளையாடுவான்.

மசூதித் தெருவில் முன்னும் பின்னுமாக மொத்தம் ஐம்பது வீடுகள் தான். தெருவைக்கடந்து வெளியில் வந்தால் சுடலை மாடசாமி கொவில். தினமும் ஓட்டப் பந்தயம் மசூதியில் தொடங்கி சுடலை மாட சாமி கோவிலில் முடியும்.

தங்கதுரை பதவி ஏற்ற பின் மிகச்சிறப்பான மாற்றங்கள் கொண்டு வர ஆரம்பித்தார். படிப்புடன் சேர்த்து விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அவரின் தந்தை அய்யாவு அவர்களின் சொந்த செலவில் சாலைகள் அமைக்கப் பட்டதால் அரசாங்கம் பேருந்துப் போக்குவரத்தைத் தொடங்கியது. ஒருநாளைக்கு நான்கு முறை பேருந்துகள் வந்துபோயின. வெளியூரிலிருந்து ஆசிரியர்கள் வந்துபோகத் தொடங்கினர்.

போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகள் வெளியூருக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். பெண் ஆசிரியைகளும் இருந்ததால் மாணவிகள் வெளியூர் செல்ல எந்தத் தடையும் இருக்கவில்லை. மாணவ, மாணவிகளுக்கு நீர் வற்றிய பெரிய குளம் பயிற்சிக் களமாக அமைந்தது. ஓட்டப் பந்தையம் , ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போன்றவை பயிற்று -விக்கப்பட்டன.

கட்டிடம் கட்டுவதற்காக குவிக்கப்பட்ட மணலில் மாணவர்கள் நீளம் தாண்டுதலும் , உயரம் தாண்டுதலும் பழகினார்கள். குறைந்த காலப் பயிற்சிக்குப்பின் மாணவர்கள் பரிசுக்கோப்பைகளை வெல்ல ஆரம்பித்தனர். மெதுவாக ஓவியம், தையல் போன்ற தொழிற்கல்விகளும் நுழைய ஆரம்பித்தன. திருவேங்கட புரம் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தது.

பாப்பாத்தி தன் மகனுக்கு ஏற்ற வரன் தேட விழைந்தாள். அய்யாவு பண்ணையார் மற்றும் பங்காளிகளுடன் பக்கத்து ஊரான வடக்கு ஊருக்குச் சென்றனர்..

தங்கதுரைஅம்மாவிடம்

ஆத்தா….. வரும்போது ஒரு போட்டோ வாங்கிட்டுவா என்றான்.

அவ்வளவுதான்

வாயக் கழுவு. எங்க ஊட்டுக்கு வர சீதேவிய போட்டோ புடிச்சா ஆயிசு கொறைஞ்சிடாது.

இப்பம்போயி பாத்துட்டு வந்துட்டு பட்டெடுத்து பரிசம் போட்டு கை நனைக்கயில நீயும் எங்க கூட வா சொல்லிவிட்டு திரும்பாமல் சென்று விட்டாள்.

அதன் பிறகு வரிசையாக சடங்குகள் நிறைவேறின.

அப்போதுதான் உறவினர்களைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. திருமணத்திற்குப் பின் பொங்கிப் போடுதல் என்ற சடங்கிற்காக அனைத்து உறவினர்களும் அரிசி பருப்புடன் படையெடுத்துவரும்போது, ஒவ்வொரு நாளும் புது மணப்பெண் சின்னத்தாயிக்கு விதவிதமான தகவல்கள் கிடைத்தன.

தாயி சூதானமா நடந்துக்கோ. உம் மாமனாரு ஊதாரி. காசு பணத்த தண்ணியா எடுத்துவெளில செலவளிச்சிட்டாரு. சொத்த பூரா அழிச்சி, உம் மாமியாரு நக பூராத்தையும் ஒண்ட வந்தவளுக்கு கொடுத்து அவள பள்ளியூடத்துல வச்சிட்டிருந்தாரு னு கேள்விப்பட்டிருக்கோம். ஒம் புருசன கெட்டிய புடிச்சி வச்சிக்கோ. இல்லாட்டி மிச்சம் மீதி உள்ளதும் போயிடும். ஒம் பாடு திண்டாட்டம் தான்.

குழப்பத்துடனே கொஞ்ச நாளைக் கழித்த பின் அவளின் மாமியாரும் அதே விஷயத்தைக் கூறவே சந்தேகம் வலுத்தது. இயல்பிலேயே அதிகமாகப் பேசக் கூடிய அவள் கணவனின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க ஆரம்பித்தாள்.

பின் மகள் மீனாட்சியும், மகன் செந்திலும் பிறந்த பிறகே அவளின் மனம் அமைதியானது.

குழந்தைகள் இருவரையும் தன் பள்ளியிலேயே சேர்த்துப் படிக்க வைத்தார் தங்கதுரை. செந்தில் படிப்பில் கெட்டிக்காரன். மீனாட்சிக்கு அந்த அளவு நாட்டமில்லை. எப்போதும் டிரான்சிஸ்டரில் பாட்டு கேட்பதும், அக்கம் பக்கத்தாரோடு அரட்டை அடிப்பதுமாக பொழுது போக்கினாள்.

படிக்கிர புள்ளக. பண்டமும் பணியாரமும் சுட்டு வச்சிருக்கேன் தின்னுபுட்டுபடிங்க என்று பாட்டி அவள் பங்குக்கு கொஞ்சுவாள். ஐந்தாம் வகுப்பு வரை எப்படியோ பரீட்சைகளில் தேர்ச்சி பெற்ற மீனாட்சி ஆறாம் வகுப்பில் இரண்டு வருடம், ஏழாம் வகுப்பில் இரண்டு வருடம் எனக் கழிக்க ஆரம்பித்தாள்.

தான் படிக்காததற்கு ஏதேதோ காரணம் கூற ஆரம்பித்ததால் செய்வதறியாது அவளின் படிப்பை நிறுத்தினார் தம்பிதுரை. மீண்டும் பள்ளியில் சேர்க்கக் கூடாது என்பதற்காக வலுவான கதைகளைக் கூற ஆரம்பித்தாள் பாட்டியிடம். அவளின் பள்ளி இருந்த இடத்திற்குப் பின் புறம் தான் சுடுகாடு என்பதால் அவள் பயந்தது போல் எளிதாக நடிக்க முடிந்தது.

பள்ளியூட பென்ச் ல உக்காந்து இருக்கும்போது வெறிச்சி வெறிச்சி மோட்டுவளய பாக்கத் தோணுது. முன்னால நின்னு வாத்தி (ஆசிரியர்) என்ன சொன்னாலும் எனக்குள்ளாரேந்து ஒரு குரல் கேக்காத னு சொல்லுது.

எம் பேத்திய சுடுகாட்டு காட கருவாச்சி பிடிச்சிட்டா. இனிமே அந்த திசைக்கே அனுப்பாத. தலையில வேப்பிலய சொருகி வீட்டுக்குள்ளேயே ஒக்கார வய்யி.

பாப்பாத்திப் பாட்டியின் ஆணைகள் பறந்தன. மீனாட்சியின் படிப்பு எந்த சிக்கலுமின்றி நிறுத்தப்பட்டது.

சிறிது நாட்களில் அவள் பூப்பெய்து விடவே வீடே சடங்கு சுத்தும் விழாவிற்கு தயாரானது. பச்சை ஓலைகளால் பந்தலிட்டு அதற்குள் மீனாட்சி அமர்ந்திருந்தாள்.

மஞ்ச பூசி உக்காந்திருக்குற எங்க வீட்டு குமரிக்கு ஊர் கண்ணு முழுக்க பட்டுரும் நெட்டி முறித்தாள் பாப்பாத்தி.

வீட்டு வாசலில் பந்தலிட்டு வாழைத் தோரணங்கள் கட்டி மேள தாளத்துடன் மாமன்கள், அத்தைகள் உட்பட அனைத்து உறவினர்களின் ஆசிகளுடன் மிகச்சிறப்பாக பூப்புனித நன் நீராட்டு விழா நடந்தேறியது. அதன் பின் அவளின் கட்டுப்பாடுகள் அதிகரித்தன.

சமஞ்ச புள்ள நட வாசல் பக்கம் வரக்கூடாது. நடமாட்டம் கூடத்தோட (ஹால்) நிக்கணும். வெளி ஆம்பளங்க வந்தாங்கன்னா ஏறெடுத்து (நிமிர்ந்து) பாக்காம சமயல் கட்டுக்குள்ள (சமயலறை) போயிடணும். மதியம் உறங்காம (தூங்காமல்) சோலி (வேலை) பாக்கணும். இப்படிப் பலப் பல.

தம்பிகிட்ட கேட்டு கேட்டு வாய்க்கு ருசியாசோறாக்கி போடு. அப்பந்தான் போற இடத்துல புருசனுக்கு(கணவன்) பொங்குததுக்கு சுளுவா(எளிதாக) இருக்கும். இப்படி அறிவுரைகள் வேறு.

செந்திலுக்கு இக்கட்டுப்பாடுகளில் விருப்பமில்லை. அவன் எவ்வளவு எடுத்துக்கூறியும் அவள் கேட்பதாக இல்லை. மீனாட்சிக்கு அந்த வாழ்க்கை பழகிவிட்டது. ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டே சாணியைக் கரைத்து வீடு முழுக்க மொழுகி கோலம் போடுவது. பின் சமையல் செய்வது இரண்டு மட்டும்தான் அவளின் வேலை. பிறகு அவளின் அரட்டைக் கச்சேரி தொடங்கும்.

மற்றபடி தொழுவத்தில் மாடுகளைப் பராமரிப்பது, அவைகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வது, மாடுமேய புல்,தழைகளை வெட்டி வருவது துணிகளைக் குளத்தில் துவைப்பது. குடி தண்ணீர் பிடித்து வருவது போன்ற வெளி வேலைகள் அம்மா சின்னத்தாயினுடையது. செந்தில் பள்ளியிலிருந்து வருவதைக் கண்டவுடன் அவளின் அங்கலாய்ப்பு தொடங்கும்.

எம்புட்டு வேல. சடவா (அயர்வாக) இருக்கு. கொஞ்சம் ஒத்தாச செய்யு கண்ணு.

வேலைகள் செந்திலிடம் இடம் மாறும். சைக்கிளின் பின்புறம் ரப்பர் டியூபால் பிளாஸ்டிக் குடங்களைக் கட்டிக் கொண்டு அம்மாவுடன் குடிதண்ணீர் எடுத்துவரச் செல்வான். கடைக்குச் செல்வது, அறுத்துவைத்த புல் கட்டுக்களை தூக்கிவருவது போன்ற சின்னச் சின்ன வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்.

அக்கா நாள் முழுவதும் வீட்டில் தானே இருக்கிறாள். அவளைச் செய்யச் சொல்லுங்கள் என்று சொல்ல முடியாது. வசனங்கள் தொடங்கி விடும்.

என்னிக்குந்நாலும் வேற வீட்டுக்குப் போகப் போறவ. அவள வையாத. (திட்டாத). வெளி வாசல் வேலய சமஞ்ச புள்ள அவ எப்டி பாக்க முடியும்.

குண்டு குண்டு. உன்னால தான் எனக்கு இவ்ளோ வேல. சொல்லிக்கொண்டே வேலைகளைச் செய்வான் செந்தில்.

மூன்றே வருடத்தில் பாப்பாங்குளம் ஆசிரியர் கந்தசாமிக்கு அவளை மணம் பேசினார் தங்கதுரை.

ஆத்தி… வாத்தியா. என ஒதுங்கிய மீனாட்சிக்கு பொறுமையாக எடுத்துக்கூறி மணமுடித்து வைத்தார் தங்கதுரை. முதன் முதலில் அவளின் கல்யாணத்தில் தான் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் , வான வேடிக்கைகளுடன் அமர்க்களமாக மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது,

பள்ளி இறுதித் தேர்வில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்ற செந்தில் தாத்தா அய்யாவுவைப் போலவே ஊர் முன்னேற்றத்தில் அதிக அக்கரை உடையவனாக இருந்தான். அக்கம்பக்கத்து கிராமங்கள் வெகு வேகமாக முன்னேறும் போது தன் கிராமத்தில் மட்டும் இன்னும் பழைய கட்டுப் பாடுகளுடன் வாழ்கிறார்களே என வருந்தினான்.

அவன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பப்பட்ட படிப்பைத் தொடர்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தை அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. பலவிதமான படிப்புக்கள் அவற்றின் பயன்கள் விளக்கப்பட்டன. செந்தில் சட்டப் படிப்பைத் தொடர வேண்டும் எனத் தீர்மானித்து பள்ளிப்படிப்பிற்குப் பின் டவுணில் உள்ள சட்டக் கல்லூரியில் சேர்ந்தான். அதற்கு ஒருவகையில் நல்லசாமியும் காரணம்.

அய்யாவுப் பண்ணையாரின் முழு நம்பிக்கையைப் பெற்று, அவரின் மகன் தங்கதுரைக்கு பக்க பலமாக விளங்கிய நல்லசாமி, பண்ணையாருக்குப் பின் அவரால் ஆரம்பிக்கப்பட்ட திருவேங்கடபுரம் நற்பணி மன்றத்தின் தலைவரானார். ஊருக்குத் தேவையான அனைத்து நற்பணிகளும் அதன் மூலம் நிறைவேற்றப் பட்டன. அரசாங்க நலப் பணித் திட்டங்கள் சரிவர ஊர் மக்களுக்குப் போய்ச் சேருதல். ஊரில் ரேஷன் கடைகளை நிறுவியது, ஊர்ப் பொதுச் சாலைப் பராமரிப்பு, ஆதரவற்றோர், கைம்பெண்களுக்கான நலப் பணி, கைவிடப்பட்ட விலங்குகளை ஆதரிப்பது, குடும்ப நல ஆலோசனைகள் மற்றும் பல வேலைகளை அந்நற்பணி மன்றம் செய்து வந்தது. அப்பணிகளுக்காக ஊரில் அந்தந்தத் துறையில் படித்த இளைஞர்கள் தாமாகவே வந்து சேவை புரிந்தனர்.

வருடத்திற்கு ஒருமுறை பொதுக்கூட்டம் கூடி வரவு செலவுக் கணக்குகள் வாசிக்கப்பட்டன. வெளியூரில் வேலை பார்க்கும் அந்த ஊர் இளைஞர்கள் அம்மன்றத்திற்கு தங்களால் இயன்ற நிதியுதவியை தாமாகவே செய்து வந்தனர். இருந்தாலும் தொடக்கத்தில் பாப்பாத்திப் பாட்டியின் பனங்காடுகளை விற்றே அம்மன்றம் ஆரம்பிக்கப்பட்டதால் அவளுக்கு அதன் மேல் பெரிதும் ஈடுபாடு இல்லை.

நல்லசாமி அவ்வப்போது ஊர் இளைஞர்களின் கூட்டம் கூட்டி அந்த ஊரிலேயே இருந்து கொண்டு கெடுதல் செய்யும் மூக்கண்ணன் போன்றோர்களைப் பற்றி எடுத்துரைப்பார். அதனால் கோபமுற்ற அவர்கள் நல்லசாமிக்கு கோள் மூட்டி (வதந்தி பரப்புபவர்) என பட்டப்பெயர் வைத்து ஊர் விசயங்களில் அதிக நாட்டம் இல்லாத பெண்களின் மூலம் ஊர் முழுவதும் பரப்பி விட்டனர்.. நம் பாப்பாத்தி பாட்டியும் அவளின் மருமகளும் எப்போதும் பிறரைப் பற்றி கோள் மூட்டுவதே (புகார் சொல்லுவதே) நல்லசாமியின் வேலை என நம்பினர்.

வம்ம வரிச(சீர்) வச்சு வயக்காட்டு நெல்லு வச்சு

எம் பாட்டன் சீதேவியா கொண்டுவிட்டான்.

பள்ளியூடப் பேய் புடிச்சி நக நட்டு போனபின்னே

எச்ச சொச்சம் காடு, கழனியையும் இந்த கோள் மூட்டி புடுங்கிப் புட்டான். யாத்தா……….

கொண்டவனும் சரியில்ல. பெத்ததுவும் சரியில்ல…..

பாட்டியின் தினசரி புலம்பலில் இதுவும் ஒன்று.

மத்திய மந்திரி வந்திருப்பதால் அவரைச் சந்திக்கவே நல்லசாமி வேகமாக தாலுகா அலுவலகம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்.

அந்த ஊர் சிறந்த கிராமமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவைக் கொண்டாடுவதற்காகவே அந்த ஊர் இளைஙர்கள் தங்கள் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அஹமதாபாத்திலிருந்து ஓவியர் சென் வந்தாயிற்று.

அடுத்தது கவிஞர் மாணி என்ற மாசாணியின் வருகை.

சென்னையிலிருந்து, காவல் துறை அதிகாரிகளாகப் பதவி வகிக்கும் செல்வியும் , லதாவும் வந்தவுடன் ஊருக்குள் அமோக வரவேற்பு.

அடுத்து இராணுவ வீரன் பெருமாளின் வருகை.

மாலை விழாவிற்காக தடபுடலான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. மேடை அலங்காரத்திற்காக பெண்கள் வாசனைப் பச்சிலைகள் வைத்து கதம்ப ஆரம் தொடுத்துக் கொண்டிருந்தனர். வாயிலில் பந்தல் போடப்பட்டு குலை வாழை , மாவிலைத் தோரணங்கள் அலங்கரித்தன. சாமந்திப் பூக்கள் கூடைகளில் வைத்திருப்பதைப் பார்த்த ஊர்ப் பெண்கள் நல்ல காரியத்துக்கு சவ்வந்திதான் வக்கணும் எனக் கூறியதால் மாற்றங்கள் செய்யப்பட்டன. லதாவும், செல்வியும் போலீஸ் சீருடையுடன் பெருமையாக ஊரை வலம் வந்தனர். பாப்பாத்திப் பாட்டியைப் பார்த்தவுடன்

தங்கதுரை அய்யா விளையாட்டுல எங்கள சேத்ததால தான் நாங்க போலீஸாக முடிந்தது என்றனர். ஆச்சியோ

அதென்னம்போ எம் புள்ள பேரு சொன்னதால கொமரிங்க ரெண்டு பேருக்கும் சொம்புல மோரு கொண்டு கொடுஎன மருமகளைப் பணித்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே விழாவிற்கு மற்றும் பலர்வருகை தந்தனர். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், என. எல்லாரும் எங்க போறாங்க. சுடல மாடசாமி கோயில் கொட (திருவிழா) இப்போ இல்லையே. ஆச்சி பேசிக் கொண்டே யிருந்தாள்

அது அப்டிதான் ஏதும் சொல்லிக்கிட்டே இருக்கும். நீங்க போய் சோலி பாருங்க பிள்ளைகளா என்றாள் சின்னதாயி. கடைசியாக மீனாட்சியும் அவள் கணவர், ஆசிரியர் கந்த சாமியும், பத்து வயது மகன் ராகவ் வும்வருகை தந்தனர். அவர்களின் வருகையால் மகிழ்ச்சியடைந்த பாட்டி காரணம் எதுவும் கேட்கவில்லை. மீனாட்சி வெகுவாக மாறியிருந்தாள். தான் படிக்கவில்லையே என வருத்தப்படும் அளவுக்கு. மாலை விழாவிற்கு அனைவரும் தயாராயினர். பாப்பாத்திப் பாட்டியை புதுப் புடவை உடுத்தச் சொன்னாள் மீனாட்சி.

சட்டை போடாமல் வெறும் வெள்ளைப் புடவையை முதலில் சட்டை போல் மார்பில் சுற்றிகொண்டு பின் உடுத்துவாள் ஆச்சி. அவளின் காதுகள் பல காலம் பாம்படம் அணிந் திருந்ததால் தோள்வரை தொங்கும்.

இப்பம் எதுக்கு தாயி கோடிப் பொடவ எனக் கேட்டுக்கொண்டே பேத்தி சொல்லை மறுக்க முடியாமல் கட்டிக் கொண்டாள் ஆச்சி. அனைவரும் தயாராகி விழா மேடைக்குச் சென்றனர். அவ்விழாவின் முக்கிய விருந்தினரான மத்திய மந்திரி வருகை தந்தவுடன் விழா தொடங்கியது. மேடையில் மத்திய அமைச்சர், நல்லசாமி, தங்கதுரை, பாப்பாத்தி பாட்டி அனைவருக்கும் சிறப்பு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. என்னவென்று சொல்லாமலேயே கூட்டிப் போனதால் பாட்டிக்கு ஆச்சர்யம். அதுவும் அவளை தங்கதுரை மேடைமேல் ஏற்றியதால் ஒரே பயம். இது என்ன திருவிழா. இங்க எதுக்கு என்ன கூட்டியாந்த.

தங்கதுரை பொறுமையாக பதில் சொன்னார். ஒண்ணும் விசனப்படாத. இங்க உள்ள பிள்ளைங்களுக்கு திருநீறு பூசி விடு அம்புட்டுதான்.

விழாவைக் கவிஞர் துவக்கி வைத்தார்.

மேற்கு மலைத் தொடரடியில்

மேகங்கள் சிந்து பாட இரவுவேளையிலே

திருவேங்கடபுரத்தில் ஓர் பிரகாச வெளிச்சம்

திரும்பிப் பார்த்தோம் பரந்து விரிந்த

ஆகாய வீதியிலே தாரகையாய் எங்கள்

அய்யாவு அய்யா அன்பெனும் முறுவலுடன்

கற்பனையோ நித்திரையோ

கண்டுணருமுன்பே காணாமல் போனீரோ

எதற்கும் வருந்தாத தாங்கள்

எங்கு சென்றீர் தேடுகிறோம்.

நீர் கண்ட கனவெல்லாம்

நனவாகும் நேரம் இதோ

பாப்பாத்தி அம்மையாரின் ஆசியுடன்

பாரெல்லாம் பரப்புவோம் நம் ஊரின் புகழை.

என்ன சொல்லுதான் என ஒன்றும் புரியாத பாப்பாத்தி ஆச்சியிடம் கவிஞர் மாணி ஆசி பெற்றுச் சென்றவுடன், ஓவியர் சென் ஊரின் வனப்புகளை அழகாக வர்ணிக்கும் விதம் வரைந்த அற்புத ஓவியங்களை ஊர் மக்களின் பார்வைக்குத் திறந்துவைத்தார் மத்திய அமைச்சர். அதன் பின் ஒவ்வொருவராக ஊரைப் பற்றியும், மேலும் எப்படி முன்னேற்ற முடியும்என்பது பற்றியும்வரிசையாக எடுத்துக் கூறி பின் ஆச்சியிடம் ஆசி வாங்கிச் சென்றனர். கடைசியாக தங்கதுரையின் நன்றியுரை. தனது குடும்பத்தாரை மேடையேற்றி ஒவ்வொருவரையாக மந்திரிக்கு அறிமுகப் படுத்திக் கொண்டேவந்தார். மீனாட்சியின்மகன் ராகவ் தான் பேச விரும்பியதால் அவனிடம் மைக் கொடுக்கப் பட்டது.

எங்க அம்மாச்சி பெரியாச்சி பாப்பாத்தியம்மாள்தான் எனத் தொடங்கி ஆச்சிக்கு புரியரதுக்காக சாதாரணமா பேசுதேன் எனத் தொடர்ந்தான்.

நான் இந்த ஊரச் சுத்திப் பாக்க எங்கப்பாரு கூட போனேன். எங்க பாத்தாலும் பள்ளிக்கூடம், பஸ் ஸ்டாண்ட், ஆஸ்பத்திரி , மளிகைக் கடை, தையற்கடை, ஓவியக் கண்காட்சிக் கூடம், ரேஷன் கட, கோவில் சத்திரம், ஓட்டல் எல்லாத்துக்கும் பாப்பாத்தியம்மாள்னு ஏன் பேரு வச்சிருக்காங்க அதென்ன சாமி பேரா னு கேட்டேன்.

நல்லசாமி அய்யா தான் விளக்கம் சொன்னாரு. எல்லாத்துக்கும் உங்க பெரிய தாத்தா அய்யாவுப் பண்ணையார் அவுங்க பொஞ்சாதி உம் பெரியாச்சி பாப்பாத்தியம்மா பெயரதான் வைக்கணும் னு கட்டாயமா சொல்லிட்டாரு.

அதுக்கு அவரு சொன்ன காரணம். அவுங்க சீதேவி நாச்சியார். அந்தம்மா தொட்டதெல்லாம் வெளங்கும். அதனால தான் அவுங்க நக நட்டயெல்லாம் வித்து பள்ளிக் கூடம் ஆரம்பிச்சாங்களாம். அவுங்களோட பனங்காட்ட வித்துதான் இந்த ஊருக்கு முத நல்ல விசயத்த தொடங்கினாங்களாம். அதனால நன்றி சொல்லுததுக்காக இந்த ஊருல எது தொடங்கினாலும் எங்க பெரியாச்சி பேருலதான் இருக்கும். அப்டின்னாஇந்த ஊரு முளுக்க எங்க பெரியாச்சி பாப்பாத்தியம்மாளுக்குதான் சொந்தம்.

ராகவ் பேசி முடித்தவுடன் அனைவரும் கைதட்டினர். பாப்பாத்தியம்மாளின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய்.

இரவு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஆச்சியிடம் ராகவ்சொன்னான். என்ன ஆச்சி பெரிய தாத்தா நட்சத்திரமா மினுங்குதாங்களா.

ஆச்சி மனதிற்குள் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *