“திருச்செந்தூரில் கடலோரத்தில்… செந்தில்நாதன் அரசாங்கம், தேடி தேடி வருவோர்கெல்லாம்…”, அப்படினு அலறிட்டிருந்துச்சு குழல் ஸ்பீக்கரு. சந்தனம், பூவு, விபூதி, வேர்வனு எல்லாந் சேர்ந்து கலவையா ஒரு வாசன அடிக்குது. வகை வகையா சனங்க, பச்ச வேட்டி கட்டிட்டு ஒரு கும்பல், புள்ளைகள இடுப்புல ஒண்ணு வைச்சுகிட்டு கையில ஒண்ண புடுச்சுகிட்டு தர தரனு இழுத்துட்டு போற அம்மா, மொட்ட தல, புது பொண்டாட்டிய உரசி நடக்கற மாப்பிள்ள அப்புறம் மஞ்ச பைய இருக்கிபுடுச்சு, தேஞ்ச செருப்ப இழுத்து நடக்கற சுப்பம்மா.
“எல்லாஞ் செரியா இருந்தா, இப்படி கோயில் கோயிலா அழைவனா” அப்படினு நெனசுக்கிட்டே, காலப் புடுச்சிகிட்டு மண்டபத்தில ஒக்காந்தா சுப்பம்மா.
“தேவிய கட்டியிருந்தா, தொர ராசா மாதிரி, தனியூடு, பைக்கு வண்டினு ஜம்முனு இருந்திருக்கலாம்”.
“எல்லான் வெனதான், சோறு தண்ணி சாப்புடாம அந்த ஒண்ணுமில்லாத சிறுக்கியதான் கட்டுவேனு அடம்புடுச்சு கட்டிக்கிட்டான். ஆச்சு ஒரு புள்ளையாச்சு”.
பேரன் நெனப்புவந்ததும், லட்டு வாங்கவேனுமுனு ஞாபகப்படுத்திகிட்டா சுப்பம்மா.
“தேவிவூடு சொந்தமுனாலும், நம்பலோட நல்ல செல்வாக்கு”.
சுப்பம்மா காசு கண்ணிக்கு கொற இருந்தாலும், நல்ல கொணமாதான் தொரைய வளத்தா, தொரையும் ஒரு தறி கம்பேனில சூப்பரவைசரா வேல கெடச்சு போனான்.
தேவியப்பாதான் வூடு தேடிவந்து பேசுனாரு, நீட்டி மொழக்கி கல்யாண பேச்ச ஆரம்பிக்க, சட்டுனு “இப்ப கல்யாணம் பண்ற மாதிரியில்ல”, அப்பிடினு அவர அனுப்பிட்டான் தொர. வேலைக்கு போவும் போது ஒருத்தியப் பாத்தானாம், அவளத் தான் கட்டிக்குவானாம்.
“கொழந்த குட்டி வந்தா, செலவ எப்பிடி சமாளிப்ப? தறி சம்பளம் ஆகுமா?” அப்படினு சண்டபுடுச்சாலும், கேக்கல. வைகாசி மாசம் ஒரு நாளப் பாத்து, மண்டபமெல்லாம் ஒண்ணுமில்ல, குப்பாயி கோயிலயே மால மாத்தியாச்சு.
மருமக நல்லவதான், ஆனா நல்லதனத்த வைச்சு சோறு வடிக்கதான் முடியுமா. செலவ சமாளிக்க, வீட்டுப்பக்கதில ஒரு மெஸ்ச ஆரம்பிச்சாச்சு. இப்ப தொர தறி வேல, மெஸ்சுனு ராப் பகலா அழையிறான். “ஏதோ இந்த ஆறுமுகந்தான் நல்ல வழி காட்டனும்”, கால் விருத்துக்கவும், நீட்டி ஒக்காந்தா.
“எப்படியிருக்கீங்ககா” அப்படினு கிட்ட ஒக்காந்தா தவமணி, பக்கத்து ஊர்க்காரி, இப்ப டவுணுலயிருக்கா. “தவம், நல்லாயிருக்கேன்.. பாத்து எவ்வளவு நாளாச்சு! மாமியாருக்கு ஒடம்பு பரவாலியா..” அப்படினு பேச்சு வளர்ந்தது. தவமணி அண்ண பையனுக்குதான் தேவிய கொடுத்திருக்கு.
தவமணி சொன்னா “அண்ணிக்கும், மருமகளுக்கும் முச்சூடும் சண்ட”
“பிரியமில்லாம ஒத்த புள்ளய தனி குடித்தனம் வச்சிருக்காங்க, தனியா போனாலும் அது சரியில்ல! இது சரியில்லனு! ரமேசுக்கு நிம்மதியே இல்ல”.
ஆறுதலா நாலு வார்த்த பேசிப்புட்டு, தவமணிய அனுப்பிச்சிட்டு, என்னென்னத்தையோ நெனச்சுக்கிறா, தேவி நெனைக்கரா, மருமகள நெனைக்கரா. “டொங்!! டொங்!! டொங்!!” , கோயில்ல யாரோ காண்டாமணிய அடிக்கராங்க, சாமி தரிசனம் நடக்கும்போல.